கைநாட்டு
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 74
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது நடந்தது, வெள்ளிக் கிழமையில்,
மகிழ்ச்சியாக இருந்தது. மனசே கிடந்து பெருமிதத்தில் ததும்பி வழிந்தது. பூந்தோட்டவாசம். ரொம்பப்பேர் பாராட்டினர். ஏகப்பட்ட பரிசுப் பொருள்கள்.
பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. வாழ்ந்த வாழ்வும், செய்த தொழிலும் வீணாகிப்போய் விடவில்லை என்கிற திருப்தி. பெருமை. பூரிப்பு.
இந்தச் சந்தோஷமெல்லாம் ஞாபகத்தில் இருக்க முடியாத அளவுக்கு… சனியும், ஞாயிறும் வேலைகள். மனிதரை ஆட்டி அலைக்கழித்த சூறாவளி வேலைகள், ரெக்கைகட்டிக் கொண்டு பறந்தாக வேண்டிய வேலைகள். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடித்திரிய வேண்டிய பரபரப்பு… ஒன்றைத்தொட்டு ஒன்றாக… வாட்டியெடுத்த பிரச்சனை…
பேரனுக்கு திடீரென்று ஜன்னிக்கோளாறு. வீடே பற்றிக் கொண்ட பதற்றத்தீ. ஓட்டமும் நடையுமாக துரித நிமிசங்கள். ஆஸ்பத்திரிக்கும், மெடிக்கல் ஷாப்புக்கும் ஓடித்திரிந்த பதைப்பு. ஆளும் பேருமாக அழுகை. வீடுநிறைய சோகம். எல்லாருக் குள்ளம் வருத்தப்பிசைவு. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றறியாத குழப்பம். வீடு நிறைய ஆட்களிருந்தும் நாதியற்ற வெறுமை.
இதிலிருந்து மீண்டு, பெருமூச்சுவிடுவதற்குள் – தெருவில் கலவரம். குழாயடியில் வழக்கமான சத்தக்களேபரம். கூச்சல். தண்ணீர் பிடிக்கிற சண்டை, சற்று கூடுதலாகி… தலைமுடி இழுப்புக்குக் கலவரமாகிவிட… தெருவே கூடி கம்பும், கத்தியுமாகக் கொந்தளித்த கலகம். கொதிநிலைப் பதற்றம். பயங்கரநிலவரம்
அதில் தலையிட்டு, ஒவ்வொருத்தர் தாடையைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி… காலில் விழாத குறையாக ஒவ்வொருத் தரிடமும் மருகி மன்றாடி விவகாரம், காவல்நிலையம் போகாமல் தவிர்ப்பதற்குள்
‘ஆத்தாடி அம்மாடி’ என்றாகிப் போயிற்று, அவருக்கு.
வருஷக்கணக்காக வராமலிருந்து நெருக்கமான விருந்தாளிக் குடும்பம்…முன்னறிவிப்பில்லாமல் ‘திடுதிப்’பென்று வந்து இறங்கிவிட அவர்களுக்கு சிரித்த முகம் காட்டி, பணியாரம் சுட்டுக்கொடுத்தனுப்பி… குளிர் முகம்காட்டி, புன்னகை வெளிச்சம் பரப்பி… ராத்திரி ஒம்பதரைப் பஸ்ஸுக்கு அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்புகிற போது…
உயிரேபோன மாதிரி களைத்துப்போனார்.
அப்படியே கட்டிலில் சாய்ந்தவர்…. ராத்திரி மாத்திரைகூட சாப்பிடாமல்…அடித்துப்போட்ட மாதிரி அயர்ந்து உறங்கிப் போனார், கற்குவேல். அயற்சிக்கு முதுமையும் ஒரு காரணம்தான்.
விடிந்தால்… திங்கள். திங்கள் என்றாலே அவருக்குள் தீப்பிடித்த மாதிரியாகிவிடும். உடம்பும், மனசும் கிடந்து பரபரத்துத் துடிக்கும். பள்ளிக் கூட நினைப்புத்தான், மனம் முழுக்க. ரத்த அணுக்கள் பூராவும் வகுப்புச் சிந்தனைதான்.
வகுப்பில் போய் ‘என்ன, என்ன செய்யணும்’ என்கிற யோசனை. நாலரைக்கெல்லாம் விழிப்பு தட்டிவிடும், கற்குவேலுக்கு. கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார். வாய்க்குள் ஒரு கெட்ட ருசி. நாக்கெல்லாம் அதன் மோசமான ருசிப்பரவல். சுற்றிலும் இருட்டு. காலடியில் கனியம்மாளின் குறட்டை. மகன் வழிப் பேரன், பேத்தி. மருகளும், மகனும் வேறு ஓர் அறையில் உறங்குவார்கள்.
சத்தமில்லாமல் எழுந்தார். பாத அரவமில்லாமல் பூனைபோல மெல்ல மெல்ல வந்தார். வாயை கொப்பளித்து, முகம் கழுவிக் கொண்டார். முகம் துடைத்தார். சுவரில் தொங்கிய சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார். சட்டை பையில் சில்லறை.
துரும்பு நகர்கிற சத்தம் கூட இல்லாமல் ஜாக்கிரதையாக கதவைத் திறந்தார். வெளியே வந்து, கதவைச் சாத்தினார். தெருவின் இருட்டை பாதம் மிதித்தது.
இரவின் முதுமையாக வைகறை பிறக்கப்போகும் பகலின் கர்ப்பம் வயிற்றுக்குள் பிள்ளையின் உதையைப் போல… வைகறைப் பொழுதில் வாழ்க்கையின் சலனம்.
பசுமாடுகளின் கனைப்பு. வீடு வீடாகப் போய் பால்பீச்சுகிற டி.வி.எஸ் ஐம்பதின் சத்தம். பால்கேன்களின் வெறுங்குடக் கூத்தாட்டம்.
கற்குவேல் தெருவில் நடந்தார். சில வீடுகளின் மின் வெளிச்சம், வெளிச்சதுரமாய் ஜன்னல்கள். டீக்கடையில் ஆளேயில்லை. மின் வெளிச்சம். அடுப்பெரிகிற விஸ்ஸ் இரைச்சல். தண்ணீல் சூடேறுகிற ‘ங்ங்ஙீய்ய்ய்ங்’
டீக்கடைக்காரர் பத்தியைப் பொருத்தி, சுவரின் இடுக்குகளில் சொருகினார். வளைவு வளைவாக நகர்ந்து, வாசமாக மறைகிற புகை.
“வாங்க சார்…”
“ம். பால் வரல்லியா?”
“பால் வர்ற நேரம் தான்”
“சீக்கிரம் ரெடி பண்ணுப்பா…”
கற்குவேலை வியப்பும் மரியாதையுமாகப் பார்த்த டீக்கடைக் காரர் பார்வையில் ஒரு வினோதம்.
“என்னப்பா….ஒரு மாதிரியா பாக்கே?”
“ஒண்ணுமில்லே சார்…”
“எப்பவும் போலவே… இன்னிக்கும் டீக்கு அவசரப் படுத்துறீகளே…. நீங்க மாறவேயில்லியா?”
“என்னத்துக்கு மாறணும்? போப்பா… போய் பாலை வாங்கிட்டு வா. டீயை முடிச்சுட்டு ஓடணும். ஏகப்பட்ட வேலைக கெடக்குது. சீக்கிரமா டீப்போடு.”
மறுபடியும் வினோதமாகப் பார்க்கிற கடைக்காரர். புதிராகச் சிரிக்கிறார். புதிருக்கள் புதைந்திருக்கிற கேலியின் முகம். திரைக்குள் மறைந்த மங்கலாய்… அந்தக் கேலி.
மரியாதை காரணமாய் அந்தக் கேலிப் புன்னகை, முகம் மறைத்துக்கொள்கிறது. புதிர்ப் பார்வையும் கூட திசை நழுவிக் கொள்கிறது.
“ஒரு நிமிஷம் பொறுங்க சார்… டீ போட்டுடுறேன்.”
“ம்”
நேற்றைய பேப்பரின் கசங்கல் மடிப்புகளை நீவினார். வாசிக்க முடியவில்லை. எல்லா எழுத்துகளும் இழுவிவைத்த கறுப்புக்கோடுகளாக, அப்பிப்போய் தெரிகின்றன.
கண்ணாடியில்லாமல் வாசிக்க முடிவதில்லை. நாலாபுறமும் சிதறிக்கிடந்த பழைய நாளிதழ்களை எடுத்து… நீவிவிட்டு.. சுருக்கங்கள் களைந்து… முறையாக மடித்துவைத்தார்.
டீக்கான ஒண்ணரை ரூபாயை எடுத்து மேஜையில் வைத்தார். முதல் டீ இவருக்கு வந்தது. அடர்த்தியான திரவம். உதட்டில் பிசுபிசுப்பாக ஒட்டியது. நாவில் டீயின் ருசி. துவர்ப்பும் இனிப்பும் சரிவிகிதக் கலவையாக கலந்ததால் வந்த ருசி. மனசுக்கு திருப்தியாக இருந்தது.
டீ வரும் வரை காத்திருந்த இந்த நிமிசங்கள் தான், அமைதி யானவை. goofl…. முழுவதும் பரபரப்புதான். முடுக்கிவிடப்பட்ட யந்திரகதி, விரித்த ரெக்கையின் தொடர்ச் சலனம். ஆகாயம் முழுவதையும் ஆக்கிரமிக்கிற சிறகின் அடிப்புகள். வேகவேகமான முன்னேற்றம். விரைவான ரெக்கையடிப்புகள்.
கற்குவேல் வேகமாக வெளியேறினார். ஓடைக்குப் போனார். இருட்டு வேலிமுள் விளார்கள், பாம்பு போன்ற எந்தப் பயமும் அவரது கால்களுக்கில்லை. தீயில் வெந்து கனிந்த தகரம்போல மேகங்கள். நீறுபூத்த நெருப்புத் தகரங்களின் ஒளிக்கண கணப்பு.
பனைமரத்து உச்சியில் அடைந்திருக்கும் மயில்களின் பீதியான கதறல். அழகில்லாத குரல். கிலியலறல். பனங்காடையின் கரைசல். வீச் வீச் சென்று பறக்கிற கரிச்சான் பறவை.
இருட்டுக்குள் கரைந்த இருட்டாக கற்குவேல். கரையாத இருட்டாக செருப்புச் சத்தம், “டடக், டடக்… டடக்”
அவருக்குள் வகுப்புச்சிந்தனை. எட்டாம் வகுப்பில் இன்றைக்கு மூன்றாம் பாடத்தை நடத்தணும். அண்ணல் அம்பேத்கார் பாடம். எப்படி நடத்தலாம்? என்ன… என்ன கதைகள் சொல்லலாம்? எப்படி வகுப்பறையை கலகலப் பாக்கலாம்? அம்பேத்கார் பாடத்தில், ஒரு சிறிய பாரா.
“அம்பேத்கார் கல்வியில் ஆர்வம் காட்டினார். நன்கு கற்று, உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றார். வயதாக ஆக, தம்மையொத்த தாழ்த்தப்பட்டவருக்கு இழைக்கப்படும் இன்னலை நேரில் கண்டார். பலமுறை தாமும் அத்தகைய இன்னலுக்கு ஆளானார்.”
இந்த ஒரு பாராவுக்குள் கற்குவேல் எத்தனையோ விஷயங்களை உணர்ந்தார். ஒன்றுக்குள் ஒன்றாக உள் பொதிந்திருக்கிற விஷயங்கள். பூவிதழ்களைப் போல… பூவுக்குள் மகரந்தம் போல… அடுக்கடுக்கான விஷயங்கள்.
ஓடைக்குப் போனவர் வீட்டுக்கு வந்தார். கனியம்மாள் அப்போதுதான் முற்றம் தெளித்துக் கொண்டிருந்தாள்.. “சளப், சளப்” பென்று தெறித்து விழுகிற சாணிப்பால்.
மின்விளக்கு எரிந்தது, வீட்டுக்குள் போய் எட்டாம் வகுப்பு புத்தகத்தை எடுத்தார். பரீட்சைக்குப் படிக்கிற மாணவனைப் போல மூன்றாம் பாடத்தை அக்கறையோடு வாசித்தார். அண்ணல் அம்பேத்கார், ஒவ்வொரு வரிக்குள்ளும் உட்புகுந்து யோசிக்கிற மனத்தீவிரம். வரிக்குள் புகுந்து புகுந்து… உள் நீச்ச லடித்து துளாவி….
இதுதான் கற்குவேல். கற்குவேலின் அன்றாடமே இப்படித் தான். அவருக்கு ஆசிரிய உத்யோகத்தில் சலிப்பே வந்ததில்லை. ‘இந்தச் சனியனைக் கட்டிக்கொண்டு இன்னும் எத்தனை காலம் தான் மாரடிக்கணுமோ…’ என்று அலுத்துக் கொண்டதேயில்லை.
இவரைப் பொறுத்த அளவில் இந்த உத்யோகத்தை உயிரை விட கூடுதலாக நேசித்தார். முன்னோர்பட்ட துன்பங்களை தனது பின்னோர் பட்டுவிடக் கூடாதே என்றகவலை. தான் பட்ட அவ மானங்களை, வரும் தலைமுறையினர் படக்கூடாதே என்கிற அக்கறை.
இந்த உத்யோகம், இவருக்கு ஒரு தொழில் இல்லை. மாதா மாதம் கனத்த தொகையை தருகிற வெறும் வாத்தியார் உத்யோகம் மட்டுமில்லை. நடத்தின பாடத்தையே திரும்பத் திரும்ப நடத்தி… குரங்குச்சேட்டைகள் பண்ணுகிற மக்கு மண்ணாங்கட்டிகளோடு மாரடிக்கிற ஒப்பாரியில்லை.
இவருக்கு இது ஒரு லட்சியம். லட்சியப்போர். தனது முன்னோர்களும், தானும் பட்ட இழிவுகளை மண்ணில் இல்லாமல் செய்தாக வேண்டுமே என்கிற வெறி. மண்ணாகிப் போகிற விதியோடு பிறந்துவிட்ட “மக்கு மண்ணாங் கட்டி”களின் தலையெழுத்தையெல்லாம், ஒளியெழுத்தாக்கி விடவேண்டும் என்கிற தன் மானப்போர். மண்ணாங்கட்டிகளை யெல்லாம் பொன்கட்டியாக்கிவிட வேண்டும் என்கிற வைராக்கியம். கற்குவேலின் தாத்தா தலாபோட்டு விவசாயம் செய்தவர். நாற்பது பாத்திகளில் கீரை, சீனியவரைக்காய் பயிர் செய்வார். அதை அவரே விற்க போவார்.
அக்கரைப்பட்டிக்குத்தான் கொண்டுபோவார். அய்யமார் தெரு. தெருவுக்குள் போய்விட முடியாது. நுழையக்கூடாது. தெருவிலிருந்து முப்பதடி தூரம் விலகி நின்று தான், சத்தம் கொடுக்க வேண்டும்.
“யம்…மோவ்…! கீடை நாடா…ர், வந்துருக்கேன்”
சொளகில் தான்யம் கொண்டு வருவார்கள். பதினைந்து அடி தூரம் வந்து சொளகை வைத்துவிட்டு, பின்பக்கமாகத் திரும்பிப் போன பின்பு தான்… தாத்தா கீரையோடு முன் நகர வேண்டுமாம்.
முப்பதடித் தீண்டாமை கடைப்பிடித்துக் கொண்டேதான், கீரை ஏவாரம் நடக்குமாம்.
தண்ணீர் தாகமெடுத்தால்… கேட்பாராம்.
”யம்மோ…வ்! நாக்கு ஒலந்துபோச்சு, தண்ணி குடுங்கம்மா…”
“ஒழக்கை எடுத்து நடுவுலே வை”
இரும்பால் செய்த உழக்கு. துருப்பிடித்த உழக்கு. தான்யம் அளவைக்கான கருவி. அதில் தான் தண்ணீர் ஊற்றுவார்களாம்.
பதினைந்து அடி இடைவெளியில் அதை வைத்துவிட்டு பின்னால் வந்துவிடவேண்டுமாம். அதில் தண்ணீர் ஊற்றிய பின் இவர் போய் எடுத்து… நாக்கை நனைக்க வேண்டுமாம்.
தாத்தா கதைகதையாகச் சொல்வார். சொல்வதைக் கேட்கக் கேட்க மனசுக்குள் நெருப்புதீண்டும். தீண்டாமைக் கொடுமையில் அவமானப்பட்ட தாத்தாவின் கதை… இவன் நெஞ்சுக்குள் ஊசியாகத் தீண்டும், குத்தும். குத்திக் கிழிக்கும்.
“ஒழக்குலே தண்ணி வாங்கிக் குடிச்சவுகடா, நாம, செம்புலே தண்ணி தரமாட்டாக. கிட்டத்துலே அண்டவிடமாட்டாக. தள்ளி நிக்க வைச்சு… கத்திப்பேசுவாக. அப்படி சீப்பட்டு….சீரழிஞ்சு இழிவுபட்டு கேவலமாகி…. ம்ஹீம்… அப்படித்தான் எங்க தலைமுறை கழிஞ்சதுடா. படிப்புலேயும், தொழில்லேயும் மனசுவைத்து… ஒசர ஒசரத் தான்… நம்மளையும் மனுச மக்களா நாட்லே மதிக்க ஆரம்பிச்சாக”
கற்றையான சோக வரலாற்றை சிரித்துக்கொண்டே சொல்வார். கற்குவேலுக்குள் தகிக்கும். தானே செருப்படிபட்ட மாதிரி, அவமானத்தில் உயிர்துடிக்கும்.
கற்குவேலின் அய்யா சொல்வார்.
“ஒன்னோட படிப்புச் செலவுக்கு எறநூறு ரூவா கடன் கேட்டேன். ஒரு பத்தரத்துலே கையெழுத்து கேட்டாக. கைநாட்டு வைச்சிட்டேன். அதுலே என்ன எழுதியிருந்துச்சோ… யாருகண்டது? நாலெழுத்து படிக்காத குருட்டு ஜென்மம் நா.”
“பெறகு?”
“ம்ஹீம்… பெறகென்ன…! நம்ம புளியமரத்துப் புஞ்சை மூணு குறுக்கம். நல்ல இறவைப்புஞ்சை. கெணறும் உண்டு. அதைத் தான் எழுதிவாங்கிட்டாகன்னு… நாலைஞ்சு வருசம் கழிச்சுத் தெரியும். என்ன செய்ய…! அந்தப் புஞ்சை, அப்படித்தான் பறி போச்சு.”
கதை சொல்கிற மாதிரி அய்யா சகஜமாகச் சொன்ன விஷயம். மலைமலையான சுரண்டலைக் கூட லகுவாக ஏற்றுக் கொண்டு பழகிப்போன வாழ்வின் கசப்பில்… புஞ்சையை பறிகொடுத்த சோகத்தைக் கூட சிரித்துக்கொண்டே கதையாகக் கதைத்த அய்யா.
அந்தப் புஞ்சையைப் பார்க்கிறபோதெல்லாம்… மை அப்பிய அய்யாவின் கட்டைவிரல் மனசுக்குள் குத்தும். நெஞ்சுச் சதைக்குள் கட்டை விரலின் நகம் பதியும். ரணமாகும்.
கற்குவேலுக்கு வாத்தியார் உத்யோகம், தன்மானப் போராகிப் போனது இப்படித்தான். லட்சியப் பயணமானது இப்படித்தான். இதனால்தான்
வகுப்பறையை கலகலப்பாகவே வைத்திருப்பார். பாடத்தை ஒட்டிய கதைகள் சொல்வார். சில சமயம் நாட்டுப்புறப் பாடல்களைக் கூட மெட்டோடு பாடுவார். மக்கு மாணவனைக் கூட அவரது வகுப்பறை, கல்வி வேட்கை உள்ளவனாக மாற்றிவிடும். முள்ச்சுமையாக அல்லாமல், கல்வியை… அவர் பூச்சுமையாக்கிவிடுவார்.
கதைகள்…பாடல்கள்… கலகலப்பு… சிரிப்பு… மிரட்டலாகத் தோன்றாத ஆசிரியர்… தோழமையை உணரவைக்கிற ஆசிரியர். வகுப்பறைக்குள் வந்து நிற்கிற மாணவ, மாணவியர் எல்லோருமே பழைய கற்குவேல்கள் தான். ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகள்தான்.
பழைய கற்குவேல்கள் தான், என்ற உணர்வு, அவரது ரத்த அணுக்களின் உயிர்த்துடிப்பாக… ஒவ்வொரு கணத்திலும். அந்த உணர்வே, அவரை இயக்கும். வகுப்பறையை ஒளிமயமாக்கும். உயிர்ப்புள்ளதாக்கும்.
ஒவ்வொரு நாளும் முழுப்பரீட்சைக்குப் படிக்கிற மாணவனுக் குரிய சிரத்தையோடு, நடத்த வேண்டிய பாடத்தை வாசிப்பார். நிறைய யோசிப்பார். இன்றைக்கும் அப்படித்தான்-
அண்ணல் அம்பேத்கார், கல்வியின் வேட்கையை எடுத்துச் சொல்லணும். அம்பேத்காரை அண்ணலாக்கிய அறிவின் பெருமையைச் சொல்லணும். ஆடு மேய்த்தே வாலிபத்தை அடைந்தவன், படித்தவன் போன்ற பாவனையோடு புதுமாப் பிள்ளையாகி… கடிதத்தை வாசிக்கத் தெரியாமல் அழுது, வீட்டையே அழவைத்த நாட்டுப்புற வேடிக்கை கதையைச் சொல்லலாம். வெள்ளைப் பஸ், கலர்ப் பஸ் என்ற அடையாளத்தில், சொந்த ஊர் பஸ்ஸை தவறவிட்டு தவித்த பெரியவர் கூத்தைச் சொல்லலாம். கல்வியின்மையின் பயங்கரத்தை கதைகள் மூலமாகவே உணர்த்தலாம்.
கீரைவிற்ற தாத்தா கதையைச் சொல்லலாம். கைநாட்டு கதையைச் சொல்லலாம். படித்து ஆசிரியராகி பெருமைப்பட்ட தனது தலைமுறை உயர்வைச் சொல்லணும்.
கற்குவேலுக்குள் கிளைகிளையாக பிரிகிற யோசனைகள். நீண்டு விரிந்து படர்ந்து கற்பனைகள்.
ஏறக்குறைய விடிந்துவிட்டது. பிரஸ்ஸில் பேஸ்ட்டை கழுவிக்கொண்டே…
“கனி”
“என்னங்க?”
“வெண்ணி வைச்சுட்டீயா?”
“என்னத்துக்கு?’
“என்ன இப்புடி கேக்கே? வெண்ணியை என்ன செய்வாக? குளிக்கத்தான்”
“அதுக்குள்ளேயா?”
“ஆமா…!!!”
“இன்னைக்குமா?”
கற்றுவேலுக்குள் எரிச்சலாக இருந்தது. கடுப்பும், சிடுசிடுப் புமாக மனைவியைப் பார்த்தார். அவளது வியப்பு இவரை ரொம் பக் கோபமூட்டியது.
“என்ன… ஒனக்கு ? கிறுக்கு பிடிச்சிருச்சா? குளிக்கணும்னா… அதிசயமா பாக்கே. சீக்கிரம் வெண்ணியை வை.”
சீற்றத்தில் உத்தரவிடுகிற கற்குவேல். அவரோடு குப்பை கொட்டிய பலவருஷ அனுபவத்தில், பயமில்லாமல் நின்றாள் கனியம்மா. எதிர்த்து சீற்றமாய் பார்த்தாள்.
“என்ன இது கொடுமை? வெண்ணி வெண்ணின்னு… கால்லே வெண்ணியை ஊத்திக்கிட்டு நிக்கீக….?”
“வளவள, தொளதொளன்னு வாயை விரிக்காதே. சொன்னதைச் செய்….”
எரிந்து விழுந்த கற்குவேலை ஒருமாதிரியாகப் பார்த்தாள். கோபமாகப் பார்த்தவள், இப்போது பரிதாபமாகப் பார்த்தாள். “ஐயோ பாவம்” என்பதைப் போலப் பார்த்தாள். அந்தப் பார்வையின் கருணை, இவருக்குள் சண்டாளமாய் ஆத்திரத்தை உண்டு பண்ணியது.
விரிகிற கண்ணில் எரிகிற தணல். மட்டியை கடித்த ஆத்திரம். மட்டுப்படுத்திக் கொண்டார். தன்னைத் தானே அடக்கிக் கொண்டார். வாயில் வைத்த பிரஸ்ஸூடன் சைக்கிளை எடுத்து வெளியே வைத்தார். சீட்டுக்கடியில் சொருகி வைத்திருந்த துணியை உருவினார்.
சைக்கிளின் பிரேம், ஹாண்டில் பார், மக்காடு எல்லாம் பரபர வென்று துடைத்தார். எல்லாம் நிமிஷ நேரம்.
நுரையைத் துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்தார். கழுவிய முகத்தை துடைத்தார்.
எட்டுமணிக்கு சைக்கிளை எடுத்துவிடவேண்டும். ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளிக்கூடம். மேல்நிலைப் பள்ளி. எட்டரைக்குள் போய்விடலாம். ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிடலாம்.
அவருக்குள் ரெக்கையடிக்கிற நினைவுகள். அவரையும் முந்திக் கொண்டு பரபரத்து ஓடுகிற மனசு.
கனியம்மா கொண்டு வைத்த வெந்நீரை, அவரேதூக்கி வாளியில் ஊற்றிய அவசரம். குடத்துத் தண்ணீரை அதில் கவிழ்த்து விளாவிய வேகம். “அவக் தொவக்” கென்று குளித்த மின்னல் துடிப்பு.
தலையை துவட்டிய பரபரப்பில் கதர்வேட்டியை உடுத்தினார். பனியனுக்குள் நுழைந்தார். மடித்திருந்த சட்டையை எடுத்து தயார் நிலையில் வைத்தார். ஈரத்தலை சட்டென்று உலர்ந்திருந்தது. வழுக்கையைச் சுற்றி ஐந்தாறு வெள்ளை ரோமங்கள், எண்ணெய் தேய்த்தார்.
“கனி…”
துரித கதியின் உற்சாகத்தில் துள்ளுகிற குரல்.
“என்னங்க…?”
“டிபன் ரெடியா? சாப்புடலாமா?”
“இப்பவே சாப்புடணுமா?”
“ம்”
அவரை எப்படியோ பார்த்த கனியம்மா மனநிலை சரியில்லாத கணவனைப் பார்க்கிற பரிதாபம். பாவம்… கிறுக்கு பிடிச்சிருச்சோ என்று பார்க்கிற கண்ணின் மிருது. பரிவின் வருடல்.
“என்ன இப்படிப் பாக்கே?”
“ஒண்ணுமில்லே”
“டிபன் எடுத்துவை”
வழக்கமான பரபரப்பு. அதே துரிதகதி. யந்திரத் துரிதம். முப்பத்தைந்து வருஷத்துப் பழக்கம் அதே வேகம். விறுவிறுப்பு. மின்னல் வேகம், அலுப்போ, சலிப்போ காணாத வைராக்கியப்போர். அவருக்காகக் காத்திருக்கிற கடமை. அவரையே நம்பிக் காத்துக்கிடக்கிற வகுப்பறை. அவரால் மட்டுமே இட்டு நிரப்பக்கூடிய வகுப்பறை. விழுந்தடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்தார். கைகழுவுவதற்கு முன்பு பிரஷர் மாத்திரைகளைப் போட்டு விழுங்கிக் கொண்டார்.
முகத்தை அழுந்தத் துடைத்தார். பவுடரை அள்ளி அப்பினார். பரப்பினார். செவிமடலின் ரோமங்களுக்குள் சிக்கிய பவடரைத் துடைத்தார்.
அவருக்குள்ளிருந்து திருப்தியான பெருமூச்சு.
-துண்டை மடித்து மஞ்சள் பைக்குள் வைத்தார். பேனாவை எடுத்தார். சட்டையை விரித்து கையை நுழைத்தார்.
“டிபன் பாக்ஸ் ரெடி பண்ணிட்டீயா? கனி, கொண்டா”
அவருக்குள் துரிதம். அவரையே அவர் துரிதப்படுத்திக் கொள்கிறார். “என்ன இப்படி.. மசமசன்னு நிக்கே? கெளம்பு. ஒன்னை நம்பி எத்தனை புள்ளைக காத்துக் கெடக்கு? அதுக தலையெழுத்தை ஒளியெழுத்தாக்க வேண்டாமா?”
“என்ன கனி…”
“என்னங்க…?”
கைக்கடிகாரத்தை மணிக்கட்டில் கட்டினார்.
“மணி எட்டாகுதுல்லே? டிபன் பாக்ஸைக்கொண்டா. பெறப் படுணும்லே?”
“எங்கே?”
“ஸ்கூலுக்கு”
“என்னத்துக்கு?”
“இது என்ன கேள்வி? கூறுகெட்ட கேள்வி. படிக்கதுக்கா… போவாக, இந்த வயசுலே? சொல்லிக்கொடுக்கத்தான்.”
கனியின் முகத்தில் சோக நிழலிருட்டு. கண்ணில் நீர் மின்னல். உடைந்த மனசின் துளிகள். கலங்கிப் போன உணர்வின் கனிவோடு, பரிவோடும் கேட்டாள். குரலில் அழுகைக் குழைவு.
“ஒங்களுக்கு அயத்து(மறந்து)ப் போச்சோ? நீங்க முந்தா நாளே ரிட்டையர்டாகிட்டீகளே…யாவுகமில்லியா? வெள்ளிக் கிழமை தான் பிரிவுபச்சாரம் நடந்துனாகளே…. இனிமே எதுக்குப் பள்ளிக்கூடம்?”
அவருக்குள் அரிவாள் வெட்டு விழுந்த மாதிரி இருந்தது. அவரை நம்பி எதுவும் காத்திருக்கவில்லை. அவருக்காக எதுவும் காத்திருக்கவில்லை. அவரால் தான் முடியும் என்று எந்தப் பணியும் உலகில் இல்லை.
இந்த உண்மை அரிவாள் வெட்டாக விழுந்து, ஆணி வேரையே பிளக்கிற உண்மை. அவரது உலகத்தையே தட்டிப் பறித்துக் கொண்டு, தன் போக்கில் சுழன்றோடுகிற உலக உண்மை.
அவரது இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிற மிகக் கொடிய கேள்வி: “இனிமே எதுக்குப் பள்ளிக்கூடம்?”
வெலவலத்துப் போனார். உற்சாக நதியாக தத்தளித்துக் கொண்டிருந்த அவரது முகம், சட்டென்று நிறம் மாறியது. வெட்டுண்ட பூங்கொடியாக வாடிப்போன முகம்.
குழம்பித் திகைத்த மாதிரி பறவையாடிய விழிகள்.
“ஆமா… நெசந்தான்…! நாந்தான் ரிட்டையர்டாகிட்டேன்லே? மறந்தே போச்சு…, கேணப்பய மாதிரி ஸ்கூலுக்குக் கௌம்பிக் கிட்டிருக்கேன்… நல்லகூத்து.”
சுயபரிகாசமாக அவர் பேசிய விதம், குரலின் உடைவு, சிரித்துக் கொண்ட சிரிப்பிலிருந்து தெறித்த கற்றைச் சோகம். கசந்த சிரிப்பு.
ஆணிவேரறுந்தவரைப் போல அப்படியே ஈஸிச் சேரில் சாய்ந்தார். துவண்டு சரிகிற புருஷனின் கோலத்தைக் கண்டு, குலைநடுங்கி கதறியழுதாள், கனியம்மா.
“என்னத்துக்கு அழுகுதே? அழாதே.. போனாப் போகட்டும். ஏழைபாழை வீட்டுப் புள்ளைகளுக்காக ஓசியா ட்யூசன் நடத்துவம்… நடத்தணும்… இனிமே…. கீரைத்தாத்தா, கைநாட்டு எல்லாம் பழங்கதையாகணும்.”
மனைவிக்கு ஆறுதல் சொல்கிறாரா? அவருக்கே அவர் ஆறுதல் சொல்லிக்கொள்கிறாரா? முடிவற்ற லட்சியப் போருக்கான பயணத்தைத் திட்டமிடுகிறாரா?
தெரியவில்லை.
– 1999, இதயம் பேசுகிறது முத்திரைச் சிறுகதை.
– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
