கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 6,686 
 
 

அந்தக் கடிதத்தைத் தான் எழுதியிருக்கக் கூடாது என்று நினைத்தான். இந்த அளவுக்கு ஒரு விலகலை அது ஏற்படுத்தும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதைப் பார்க்கும் போது மனதில் மெல்லிய நடுக்கம் பரவியது. அது நாள் வரையிலான பழக்கத்தை ஒரு பதினைந்து பைசா கார்டில் கெடுத்துக் கொண்டாயிற்று. நான்கு வரிகளேதான்; ஆயினும் அதற்கு சூடு ஜாஸ்தி. நெருஞ்சிமுள்ளைக் கையில் பிடித்துக் கொண்டு நேரடியாய்க் குத்துகிற மாதிரி. சொந்தம் பந்தம் என்றால் இப்படி எழுதுவோமா? அதைவிட நட்புப் பெரிதல்லவா? ஏன் மூளைக்கு உரைக்காமல் போயிற்று? எது வந்து தன் எண்ணங்களை, எதிராளியை அத்தனை அலட்சியப்படுத்திற்று? எந்தச் சூழ்நிலை தன்னை அம்மாதிரி ஒரு நிலைக்கு இட்டுச் சென்றது? எழுதிய கடிதம் நாள் பூராவும் போஸ்ட் செய்யப்படாமல் கிடந்ததே? சிந்தனையை ஆறப் போட்ட அந்தக் கால இடைவெளியில் கூட கடிதத்தை நிறுத்துவது ஏன் சாத்தியமில்லாமல் போயிற்று?

“வர வர உங்களுக்கு அடிக்கடி ரொம்பக்கோபம் வருது. ஹெல்த் கண்டிஷனை நீங்க இம்ப்ரூவ் பண்ணிக்கணும்.” விமலாவிடம் காண்பித்திருந்தால் அல்லது அவள் பார்த்திருந்தால், நிச்சயம் அந்தக் கடிதம் போயிருக்காது.

தன்னிடம் சொல்லாமலேயோ அல்லது நேரிலேயோ அதைக் கிழித்துப் போட்டிருப்பாள். அதனால் ஏற்படும் தனது எதிர்ப்பையும் சமாளித்திருப்பாள். தன்னையும் சமனப்படுத்தியிருப்பாள். அந்தத் திறன் அவளுக்குண்டு. ஆனால் மூணாங்கிளாஸ் படிக்கும் பையன் சொன்னானே! எழுத்துக் கூட்டிப் படித்து விட்டு, ஏதோ அர்த்தம் புரிந்த மாதிரி வேண்டாம் என்றானே!

“மத்தவங்க மனசை சங்கடப்படுத்தற மாதிரி பேசக் கூடாதுன்னு நீதானே சொன்னே.. இப்போ அதே மாதிரி எழுதியிருக்க?”

அப்பொழுதாவது கேட்டிருக்கலாம். பையனின் கேள்விக்கு ஒரு அலட்சியமான சிரிப்பு மட்டுமே அன்று பதிலானது. எப்படிப் படிந்து போனது இது? என்ன திருப்தி கிடைக்கிறது இதில்?

இந்தக் கடிதம் போனால் அவர் வீட்டில் வருத்தப்பட மாட்டார்களா? மனது நினைக்கவில்லையே?

“நீ வெட்டிப்பய.. உனக்குப் பொழுது போகாம அவரை டிஸ்டர்ப் பண்ணினேன்னா? லீவு நாளில் அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? எத்தனையோ வேலையிருக்கும். அத்தனைக்கும் நடுவுல கொஞ்சம் படுத்து ஓய்வெடுப்போம்னு தான் நினைப்பாங்க… அந்த நேரத்துல நீ போய் நின்னா ? யாருக்குத் தான் எரிச்சல் வராது?”

“வீட்ல திட்டறாங்க சார். நானென்ன உங்களைத் தொந்தரவு பண்ணனும்னா வர்றேன்? உங்களைப் பார்த்து நாலு வார்த்தை பேசிட்டுப் போவோமேன்னு ஆசை. எனக்கிருக்கிற ஒரே ஃபிரண்டு நீங்க தான். நான் வேறெங்க போவேன். வரக்கூடாதுன்னா நீங்களே நேரடியாக சொல்லிடுங்க…. நிறுத்திக்கிறேன்… அதில் எனக்கு ஒண்ணும் வருத்தமில்லை சார்.”

“இல்ல சுந்தரம். நீங்க எப்பவும் போல வாங்க… சரி தானா?” இவன் வாய் தானாகவே முனகுகிறது. குற்றமுள்ள நெஞ்சு, எழுதுவதையும் எழுதி விட்டு ஏன் இப்படிக் கிடந்து தவிக்க வேண்டும்?

“பாவம் சுந்தரம், அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். மூன்று சகோதரிகள். இரண்டு தம்பிகள். குடும்ப பாரம் சுந்தரத்தின் தலையில். வயது முப்பத்தைந்து. இன்னும் மூத்த சகோதரிக்கே தாலிக்கயிறு ஏறவில்லை. சுந்தரத்திற்கும் நிரந்தர வேலையில்லை. ஏதோ ஒரு சீட்டுக் கம்பெனியில் எழுத்தர் பணி. அவன் தரும் எழுநூறோ, எண்ணூறோ, இழுபடும் மொத்தக் குடும்பம். வீட்டில் அப்பளமிட்டு, வடகம் விற்றுக் கொஞ்சம் வருவாய், மெல்ல மெல்ல நகரும் நாட்கள்…

“உங்க கிட்டே எனக்கு ஈர்த்த விஷயம் உங்க சோகம் தான் சார்…” என்று சொல்லிக் கொண்டு வந்து நின்ற அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு ஏறக்குறைய இரண்டாண்டுகள்.

“தொடர்ந்து உங்க கதைகளை நான் படிச்சிட்டு தான் வர்றேன்.. சிவாஜி சார் படங்களைப் பார்த்து தான் அழுதிருக்கேன். ஆனா கதைகளைப் படிச்சு அழுதது உங்க எழுத்துலேதான் சார்… நீங்க இந்த ஊர்ல தான் இருக்கிங்கன்னு தெரிஞ்ச போது உங்களைப் பார்க்கணும், பேசணும்னு ஆசை வந்திடுச்சி… ஸார்..”

வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டுக் கொண்டு வந்து நின்ற சுந்தரம். அவன் சொன்னதை போல் சோகம் தவழும் தன் நெஞ்சத்தில் குரூரம் எப்படிப் புகுந்து கொண்டது? ஏன் புகுந்து கொண்டது?

“உங்களுக்குக் கஷ்டமா இருந்தா சொல்லுங்க சார்… நான் எழுதித்தரேன், அதில் எனக்கு ஒண்ணும் சிரமமில்லை … என்று சொல்லி வலியப்பிடுங்கி எத்தனையோ கதைகளை நகலெடுத்துக் கொடுத்த சுந்தரம். ஏதோ தான் தான் எழுதியது போன்ற உற்சாகத்தில் அதனைத் தபாலில் சேர்த்து, அது எந்த இதழில் வருகிறது என்று காத்துக்கிடந்து “சார்… உங்க கதை வந்திருக்கு பாருங்க… மாருதி படம் போட்டிருக்காரு…” என்று உற்சாகம் பொங்க வந்து நின்ற சுந்தரம்.

அத்தனையையும் சில நொடிகளில் கெடுத்துக் கொண்டாயிற்று. இனி மீளுமா? நினைத்து நினைத்து மருகிப் போனான். வேதனை தாளாமல் அதை விமலாவிடம் சொல்லவும் செய்தான். வெகு நேரத்திற்கு அவள் எதுவுமே பேசவில்லை . அதுவே இவன் மனதை மிகவும் உறுத்திற்று.

“உங்களுக்கு யாராவது இப்படி எழுதியிருந்தா உங்க மனசு என்ன பாடுபடும். நீங்க எழுதினது தப்பு தான். ரொம்ப தூரத்திலிருந்து வேலைமெனக்கெட்டு உங்களைப் பார்க்கணும், பேசணும்னு சிட்டி பஸ்ஸுக்குக் காசு கொடுத்து, வந்து பார்க்கிற ஒருத்தரை, இப்படி முறிச்சு எழுதலாமா? பையனோட படிப்புக்கெடுது, ஓய்வெடுக்க முடியலைன்னு எழுதினா அது நாசுக்கா எழுதறதா அர்த்தமா? எந்த அகராதில அப்படி இருக்கு? வீட்டுக்கு வராதீங்கன்னு சொன்னதாத்தானே படும்?

உங்க குணம் தெரிஞ்ச நான் வேணும்னா அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாம். ஊர்ல இருக்கிறவங்களெல்லாம் அப்படிச் செய்யணும்னு என்ன அவசியம்?

“சாயங்காலம்போல வாங்கன்னு தானே எழுதினேன். வரவேண்டாம்னு எழுதலியே?”

“இது கிள்ளி விட்டிட்டு, தொட்டிலை ஆட்டினமாதிரி இருக்கு. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு – அவருக்கென்ன புரியாதா உங்க பாஷை..” சுளீரென்றது இவனுக்கு.

“உண்மைதான் நீ சொல்றது… இப்ப நான் என்ன செய்யணும்?” குழந்தையைப் போல் கேட்டான் இவன்.

“பேசாம இன்னொரு லெட்டர் எழுதிப்போடுங்க. பையனோட பெர்த் டேக்கு வரச் சொல்லி..”

உடனே எழுதினான். அதைப் போஸ்ட் செய்து விட்டு வந்த பின்பு தான் மனம் நிம்மதியாயிற்று. இனிமேல் எதை எழுதினாலும் விமலாவிடம் ஒரு முறை காண்பித்து விட வேண்டும் என்று நினைத்தான். இவனுக்கு இவன் மேலேயே பரிதாபம் ஏற்பட்டது. ரொம்பவும் பலவீனமாய் உணர்ந்தான். தன்னை மாதிரி ஆட்களெல்லாம் தவறு செய்யக் கூடாது . என்று தோன்றியது. அதற்குகூட ஒரு தகுதி வேண்டும் என்பது போல் இருந்தது. முதல் முறையாக தன் தவறு, நெருங்கிய நண்பரைச் சார்ந்து அமைந்து போனதை நினைத்த போது மனம் வெதும்பியது. நல்ல வேளை. உடனடிப் பரிகாரம் தேடியாயிற்று என்று நினைத்த போது மனம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

ஆனால் அந்த நிம்மதி சில தினங்கள் தான் நிலைத்தது. அந்த வெள்ளியன்று நடந்த பையனின் பிறந்த நாள் விசேடத்தின் போது சுந்தரம் வரவில்லை . பதிலாக ஒரு வாழ்த்து மட்டுமே வந்து விழுந்தது. அதே வெறும் போஸ்ட் கார்டில்.

“சரி தான். இனி ஒட்டாது…” என்றாள் விமலா. தலையில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது இவனுக்கு.

– இதயம் பேசுகிறது, 1996.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *