கிழிசல் சேலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 2,108 
 
 

(இந்த கதை என்றோ படித்த ஒரு கதையின் கரு)

அந்த ஊரில் எல்லாருக்கும் பொதுவாய் இருந்த குளத்தின் நடுவுக்கும் முன்னால் குளித்துக் கொண்டிருந்த ராசப்பன் சற்று தள்ளி கரை ஓரத்தில் நின்று துணி துவைத்து கொண்டிருந்த மாசாணி, வெள்ளையம்மாள், இவர்களின் சேலையில் இருந்த கிழிசல் வழியாக தெரிந்த உடலழகை இரசித்து கொண்டிருந்தான்.

அவ்வப்பொழுது அவர்கள் நின்று கொண்டு துவைக்கும் பக்கம் ஒரு நீச்சல் அடித்து வந்து நின்று அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தள்ளி சென்று கை கால்களை தேய்ப்பது போல பாவனை செய்து நின்று கொள்வான்.

மாசாணியின் அருகில் துவைத்துக்கொண்டிருந்த வெள்ளையம்மாளுக்கு இவன் என்ன செய்கிறான் என்று தெரிந்துதான் இருந்தது. பாவி இவன் கண்ணுல கொள்ளி போடணும், மரத்துக்கு சேலையை சுத்தி வச்சாலும் உத்து உத்து பாப்பாணுங்க.

மாசாணி வெள்ளையம்மாளிடம் விடு வெள்ளையம்மா. அவனுங்க பெரிய இடத்து பையனுங்க, நாம அவனை தட்டி கேட்டா என்ன பேசுவானுங்க இந்த ஊர்க்காரனுங்க, அவங்க குளிக்கற இடத்துலயேதான் இவளுங்க போய் துவைக்கணுமா?

நம்மளை மாதிரி ஏழைகள் கட்டியிருக்கற கிழிசல் துணி, இவனுங்களுக்கு வசதியா போச்சு, இவனுக்கு பயந்து நாம இழுத்து மூடுனம்னா இவனுங்களுக்கு எச்சாத்தான் எகிறும். ரோட்டுல போற நாயை பார்த்து ஒதுங்கற மாதிரி நினைச்சு இவனுங்களை விட்டு தள்ளிட்டு விரசலா துவைச்சு முடி. நாளைக்கு மேக்கால தோட்டத்துக்காரங்க களை எடுக்க ஆள் கேட்டுருக்காங்கலாம், போய் கேட்டுட்டு வருவோம்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ‘விளுக்கென்று’ ஒரு சத்தம் திரும்பி பார்க்க, ராசப்பனின் தலை சாய்ந்து தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி எழுவது தெரிந்தது. எங்கோ கால் சேற்றுக்குள் மாட்டியிருக்கவேண்டும் என்பது பார்த்தவுடன் புரிந்தது இருவருக்கும். பக்கத்தில் கூப்பிடும் தூரத்தில் ஒருவரும் இல்லை. இன்னும் ஐந்து நிமிடம் விட்டால் அப்படியே மூழ்கி விடுவான் என்பது புரிந்தது இருவருக்கும்.

சட்டென இருவரும் தாங்கள் கட்டியிருந்த சேலையை உருவினர். அப்படியே முடிச்சை வேகமாய் போட்டு முதலில் மாசாணி அவனை நோக்கி நீந்தி சென்றவள்.சற்று தள்ளி நின்று கொண்டாள். அவள் பின்னாள் வெள்ளையம்மாளும் நீந்தி வந்தாள். அவர்கள் சேலையின் ஒரு முடியை அவனை நோக்கி வீசினர்.

தண்ணீருக்குள் இருந்த சேற்றில் கால் சிக்கிக்கொண்டு எடுக்க முடியாமல் தலை அமிழ்ந்து அமிழ்ந்து சென்று கொண்டிருந்தவன் அருகே சேலை முடிச்சு விழ சட்டென அதை பற்றிக்கொண்டான்.

மாசாணியும், வெள்ளைய்யம்மாளும் சேர்ந்து பிடித்திழுக்க கொஞ்சம் கொஞ்சமாய் சேற்றிலிருந்த கால் விடுபட்டு வெளியே வந்தான்.

அவன் வெளியே வந்து விட்டான் என்று தெரிந்ததும் அவனை அப்படியே இவர்கள் பக்கமாய் வர செய்து அவனின் இரு பக்கமும் உடன் வர அவனை கரையில் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

கரையில் கால் வைத்து மேலே வந்தவன், உயிர் பயத்தில் அப்படியே கரையில் படுத்து விட்டான்.

இவர்கள் தங்களது கிழிசல் சேலையை பிழிந்து உதறி போட்டு கொண்டு தாங்கள் துவைத்து வைத்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.

இவன் கண்ணுக்கு அவர்கள் இருவரும் கடவுள்களாய் தோன்றினர்.

dhamodharan பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *