காத்தான் முதல் பத்மநாதன் வரை





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கொழும்பு தொழிற் திணைக்களம் – லேபர் டிபார்ட்மெண்டு.
மக்கள் சபை மண்டபம் விசாலமானதாக இருக்கிறது. அந்தச் சபை மண்டபத்துக்கு பிரபல்யமான பெயர் தான் கொன்பரன்ஸ் ஹோல். அந்த விசாலமான மண்டபத்தின் சுவர்களில் மூன்று படங்கள் வரிசைக் கிரமத்தில் மாட்டப் பட்டிருந்தன.

அவை ஓவியன் தீட்டிய சித்திரங்கள் அல்ல, புகைப்படக் கருவியால் பிடிக்கப்பட்ட படங்கள். முதலாவது படம்….. புற்களால் கூரை வேயப்பட்ட ஒரு மண் குடிசையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது படம்….. தகரக் கூரையுடன் செப்பனிடப்படாத கருங்கற்களால் எழுப்பப்பட்ட ஒரு கட்டிடம்.. மூன்றாவது…. கொஞ்சம் நளினத்தை காட்டும் கொட்டேஜ் லயன் வீடு.
இந்தப் படங்கள் என்ன நோக்கத்துக்காக அந்தக் கொன்பரன்ஸ் மண்டபத்தில் தொங்க விடப்பட்டிருக்கின்றன?….. ஒரு பிரச்சார பின்னணி… ஒரு விளம்பர நோக்கம் ஏதோ வளர்ச்சியைக் காட்டும் விளக்கம்………. என்று யூகித்துக் கொள்ளலாம்.
தோட்டத் தொழிலாளர்களின் வசிப்பிடங்களின் பரிணாம வளர்ச்சிகளையும், தோட்ட நிர்வாகத்தின் வீடமைப்புச் சீர்திருத்தங்களையும் அந்தப் படங்கள் காட்டிக் கொண்டிருந்தன.
மண் குடிசை….. கருங்கல் கட்டிடம்…… கொட்டேஜ் லயன் வீடு…. இந்த வளர்ச்சி மாற்றங்களினால் அங்கே வசிக்கின்ற மக்களின் வாழ்க்கையிலும் சிறிய முன்னேற்ற அடையாளங்களை காணக்கூடியதாகவிருந்தது.
பழைய கறுப்பனின் முதல் பரம்பரை……
பழைய கறுப்பனின் மகன் தான் காத்தான். அவன் தன் குடும்பத்துடன் ஒரு மண் குடிசையில் தான் வசித்து வந்தான். காத்தான் சுத்த கர்நாடகம்! பட்டிக்காட்டு மனுசன்! முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் முக்கால் உயரத்தில் வேட்டி கட்டியிருப்பான்! வேட்டி என்றால் பட்டு வேட்டியல்ல…….. காரிக்கன் துண்டு.
தோட்டத்துரைக்கும் கங்காணிக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த மனிதர்கள் தங்கள் உடைகளைக் கூட அரை குறையாக, அலங்கோலமாக உடுத்த வேண்டும் என்பது ஒரு ஏகாதிபத்தியக் கட்டளை! பிரிட்டிஷ் வெள்ளைக்காரன்களின் ஏவல் நாய்களாகவிருந்த கங்காணி சக்திகள் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு அழகான பெயர் வைப்பதற்குக் கூட விடுவதில்லை. அழகாக உடுத்த விடுவதில்லை. தொழிலாளி அழகாகவே இருக்கக்கூடாது! காத்தான் சட்டை உடுத்துவதில்லை. வெறும் மேலோடு தான் இருப்பான்! சிவப்புக் கரை போட்ட ஜரிகைத் துணியில் தலைப்பாகை கட்டியிருப்பான். அதற்கு கம்பிச் சால்வை என்றும் இன்னொரு பெயர். துரையிடமோ கங்காணியிடமோ கதைக்கும் போது…… காத்தானைப் பார்க்க வேண்டும்! தலைப்பாகையைக் கழற்றிச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொள்வான்!
காத்தான் தன் பாட்டன் காலத்துக் கதையை இப்போது கேட்டாலும் பயப்படுகின்றான். பாட்டன் பெயர் பழைய கறுப்பன். பழைய கருப்பன் ஒரு நாள் துரையிடம் சத்தம் போட்டுக் கதைத்தான் என்பதற்காக துரை அவனை முகத்தில் அறைந்து தூக்கிப் போட்டு மிதித்து பூட்சுக் காலால் உதை உதை என்று உதைத்த சம்பவத்தைப் பல முறை பழைய கருப்பன் காத்தானிடம் கூறியிருக்கிறான். துரையின் முன்னால் எப்படி நிற்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் ‘புத்திமதி’ கூறிய நாட்களைக் காத்தான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.
காத்தான் இன்னமும் கங்காணியின் உடைமையாகவே இருக்கின்றான்.வெள்ளைக்காரனின் துண்டுமுறை (Thundu System) எப்பவோ ஒழிக்கப் பட்டிருந்தாலும் அவன் சுதந்திர மனிதனாக இன்று வரை நிமிர முடியவில்லை. அவனின் சொந்த விவகாரங்களில் கூட, சுயமாக சிந்திக்கவோ, செயல்படவோ முடியவில்லை. அவன் மனதாலும் உடலாலும் சிறைப்பிடிக்கப் பட்ட கூலியாகவே உயிர் வாழ்ந்தான் (Kathan was still the property of the head Kangany…. Although the system was abolishd some time ago he had no mind of his own affairs. His head Kangany thought for him) காத்தானுக்காகக் கங்காணியே சகலமுமாகின்றான். கங்காணி அவனுக்காக உணர்கின்றான். அவனுக்காக சிந்திக்கின்றான். காத்தானுக்கு எது நல்லது எது கெட்டது என்பதைக் கங்காணியே தீர்மானிக்கின்றான். கங்காணியின் நிர்ணயமே காத்தானின் வாழ்க்கை.
கங்காணி தனது சிறிய கடையிலிருந்து ‘நல்ல சாமான்களை’ காத்தானுக்கு விற்கின்றான். பாஸ் புத்தகத்தில் கடன் எழுதப் படுகின்றது…. கங்காணி போட்டது தான் கணக்கு! வேதனையே வாழ்க்கையின் அனுபவமாகக் கொண்ட தொழிலாளியின் இதயத்திலிருந்து வெடித்து எழும்பிய ஒரு பழமொழியும் உண்டு. கங்காணி என்ற பூதத்தின் சக்தி தங்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதை அந்தப் பழமொழி பறைசாற்றுகின்றது. ‘கம்பளி ரெண்டு ரூபா கறுப்பு கம்பளி நாலு ரூபா’ கம்பளியே கறுப்பு நிறமானது அதற்கு இரண்டு விதத்தில் விலை எழுதினான், கங்காணி.
தோட்டத் துரைக்கு காத்தானின் மேல் ஒரு அலாதிப் பிரியம் இருந்தது. காத்தானை அவன் எப்போதும் பாராட்டியே பேசுவான் ‘காத்தான் ஒரு நல்ல கூலி’ என்று புகழுவான். ஒரு காளை மாட்டின் வலிமையும் ஜல்லிக் கட்டு மாட்டுடன் சண்டையிடும் நெஞ்சுரமும் கொண்டவன் காத்தான்.
கவ்வாத்து மலையில் காத்தான் ஒரு இயந்திர மனிதன். நாள் சம்பளத்துக்கு முந்நூற்றைம்பது தேயிலைச் செடிகளுக்கு குறைவில்லாமல் வெட்டிச் சாய்த்து விடுவான்.
வெள்ளைக்காரர்கள் மகாவலிக் காட்டில் வேட்டையாடுவது வழக்கம். கொலைக்கருவிகளோடு உயிர்களைக் கொல்லுவது அவர்களின் இன்பப் பொழுதுபோக்கு. துரை வேட்டையாடச் சென்றால் காத்தானும் கூடச் செல்வான்.தோட்டத் துரையின் குறியில் தப்பிய காட்டெருமையைச் காத்தான் விடுவானா? காட்டெருமையை விரட்டி வெறுங் கைகளினாலேயே மடக்கிப் பிடித்துவிடுவான்!
காலங்கள் கடந்தன. காத்தான் வீட்டை நினைத்தான்.
அவனுக்கு அக்கரைக்குப் போக ஆசை வந்தது. ஊருக்குப் போய் வருவதற்கு தீர்மானித்தான்.
பயண ஏற்பாடுகளைச் செய்து முடித்தவன், இங்குள்ளவர்களைப் பிரிந்து போக முடியாமல் மனம் கலங்கினான். அந்நிய மண்ணில் அவர்களோடு துணைக்குத் துணையாக நெருங்கி வாழ்ந்த உறவுகளை விட்டுப்பிரிய முடியாமல் மனம் தவித்தது. தோட்டத்து வாக்குப்படி “அக்கரைக்கு போனவன் திரும்பி வருவான்னு ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்!” போனவன் போனவன் தான்…. வந்தவன் வந்தவன் தான்……. ஒப்பந்தக் கூலிகளின் விதியை நிர்ணயிப்பது வெள்ளைக்காரனும் ஏவல் கங்காணிகளுமே ஆவர்.
காத்தான் அக்கரைக்குப் போக முடிவெடுத்த நாள் முதல் மனத் திடத்தை இழந்தான். கங்காணியிடம் போய் மண்டியிட்டான். “சாமி நான் இந்தியா போய் வர வரைக்கும் எங்கூடாரத்த சாமித்தான் பாதுகாத்து வச்சிருக்கணும்” என்றான். உடம்பு நரம்புகள் எல்லாம் சுருங்கி மடிந்தன.
காத்தான் அக்கரைக்குப் பயணமானான். காத்தான் ஊருக்குப் போனதும் அவனது தம்பி மகன் ராமசாமி அந்தக் கல் கூடாரத்துக்குள் குடி புகுந்தான். அந்தக் கல் கூடாரம் பத்தடி நீளம் பன்னிரெண்டு அடி அகலம் ஆகும். அவன் சுதந்திரமாக நடமாடி வாழ்வதற்கு மிக மிக விசாலமான வீட்டறை தான் அந்தப் பத்துக்கு பன்னிரெண்டு (10’×12′) அறை!
ராமசாமியோடு…. பொஞ்சாதி மீனாச்சியும் அந்த கல்வீட்டில் குடித்தனம் நடத்த வந்ததில் பெருமையடைந்தாள். இப்படி ஒரு வீடு கிடைத்தது அவளைப் பொறுத்தமட்டில் கடவுள் கொடுத்த வரமாகும்!
மீனாச்சி ராமசாமிக்கு ராத்திரிக்கு நெல்லு சோறு சமைத்தாள். காலையில் கட்டியான தேயிலைச் சாயம் தேநீராக கிடைத்தது.
பலசரக்கு சாமான்களைப் பாஸ் புத்தகம் போட்டு முதலாளி கடையில் வாங்கினாலும் பெரிய கங்காணியோடு ராமசாமி மிக நெருக்கமாக இருந்தான்.
வீட்டுத் தோட்டத்தில் உண்டாக்கும் எந்த மரக்கறியானாலும் காய்கனிகளானாலும் முதல் படையலாக ‘பெரியாணி’ என்ற பெரிய கங்காணிக்குத் தான் பூஜிக்கப்படும். அதன் பிறகுதான் வீட்டுத் தேவைக்கு உபயோகிப்பான். அவனது வாடி வழக்கத்தில் மகள் பெரிய மனுசியாகி விட்டாலும் சரி மகன் கலியாணம் முடித்தாலும் சரி பெரிய கங்காணியே முதன் முதற் கடவுளாக அவர் வீடு சென்று வணங்கி வரவேண்டும். இது ஒரு கட்டாய வழிபாடு!
என்ன…. இருந்தாலும் பெரியப்பன் காத்தான் மாதிரி இல்லாமல் ராமசாமி கொஞ்சம் வித்தியாசமாக வாழ விரும்பினான். அவனது நடை உடை பாவனைகளில் மாறுதல்கள் தெரிந்தன. ட்ரில் துணியில் சட்டை……காதுகளில் தங்க கடுக்கன் …. இடது கையில் ஒரு மெல்லிய வெள்ளி வளையல் சில சந்தர்ப்பங்களில் கறுப்பு கோட்டும், கக்கத்தில் பழைய குடையுமாக தோற்றமளிப்பான்..
ராமசாமியின் முக்கிய பொழுதுபோக்கு நாடகம் பார்ப்பதற்கு தூரப் பயணம் போவதாகும்! அந்தக் காலத்தில் ஊர் ஊராகச் ‘சபாக்காரர்கள’ நாடகம் போடுவார்கள். நடமாடும் அந்த நாடக சபையினர் மேடையேற்றும் நாடகங்களைப் பார்ப்பதில் ராமசாமி ஒன்றையும் விட்டு வைக்கமாட்டான் …….
நண்பர்களோடு பல மைல் தூரம் பயணம் செய்து நாடகத்தில் ‘நெசம் பொம்பளை’ நடிப்பதை பார்ப்பதில் அத்துணை ஆவல் அவனுக்கு! ஆம்பளைகள் பெண் வேசம் கட்டி நடிப்பதை பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு ‘ரஞ்சிப்பு’ கிடையாது!
திருநாள் பெருநாள் காலங்களில் தோட்டங்களில் கூத்து காட்டுவார்கள். ராமசாமி நிறைய நாடகங்களைத் திருவிழாக் காலங்களில் மேடையேற்றியிருக்கின்றான். மதுரைவீரன்.. அரிச்சந்திரா, கோவலன்…. ஒட்டநாடகம் போன்ற பாரம்பரிய கூத்துக்களையெல்லாம் மேடையேற்றியதில் ராமசாமி ‘பேர்’ வாங்கினான்.
இங்கே கூட நாடகத்துக்குத் தலைமை தாங்குவது ‘பெரியாணி’ என்ற பெரிய கங்காணி தான். சர்வமும் நிறைந்த இரட்சகரான பெரியகங்காணி சொந்தமாக ஒரு சங்கத்தை உண்டாக்கினார். ராமசாமியும் அந்தச் சங்கத்தின் ஒரு அங்கமாகவிருந்தான்.
இந்தச் சூழ்நிலையில் ‘மொக்குத்தனமாக’க் கண்டியிலிருக்கும் இந்தியன் ஏஜன்டுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டான் ராமசாமி.
தனது குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இந்தியன் ஏஜன்டுக்கு கடிதம் அனுப்பியதன் காரணத்தால் அவன் தோட்டத்திலிருந்து விரட்டப் பட்டான். அவனது குறைகளெல்லாம் அவனைத் தோட்டத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதோடு தீர்ந்து போயின. இந்தச் சந்தர்ப்பத்தில் அவனைப் போன்றவர்களை ரட்சிப்பதற்கு தேவதூதனாக நடேச ஐயர் என்னும் ‘சுவாமி’ வந்துதித்தார். அவர் தோட்ட நிர்வாகிக்கும் பெரியங் கங்காணிக்கும் சிம்ம சொப்பனமாகத் தோன்றினார். கங்காணியின், துரையின் நடவடிக்கைகளுக்கெதிரான மோதலில் அவர் சவால் விட்டு நின்றார். “ராமசாமி உங்களின் கூலிக்காரன் அல்ல! அவன் ஒரு தொழிலாளி -அவனுக்குத் தொழிற் சங்கம் வைத்துக் கொள்வதற்கு உரிமையுண்டு!” என்று முழக்கமிட்டார்.
அவர் பெரியங்கங்காணியை ஒரு பயங்கரமான புலி என்றும் கொடூரமான சுரண்டல்வாதி என்றும் வர்ணித்தார். கங்காணிக்கு வழங்கப்படும் பென்ஸ் காசைக் கொடுக்காமல் அவனுக்கெதிராகப் போர்க்கொடி தூக்கும்படி ராமசாமியைத் தூண்டினார். ராமசாமியை அவனது ‘கங்காணி எஜமான்’ மாதிரியே உடுத்தி ஒப்பனை செய்தார்! ராமசாமிக்கு தலைப்பாகையைக் கட்டிவிட்டு… ஒரு கறுப்புக் கோட்டையும் மாட்டி, கையில் கைக்கம்பையும் ஒரு குடையையும் கொடுத்தார். இப்பொழுது ராமசாமி சாட்சாத் ஒரு பெரியங்கங்காணியாகவே காட்சியளித்தான்! ‘சாமி’ நடேசஐயர் கங்காணியென்னும் அந்த ‘ஆண்டவனை’ சம்ஹாரம் செய்வதற்கு சூரனாக ராமசாமியை அனுப்பினார். ராமசாமியும் ஐயர் சொல்வது போலவே நடந்தான். அவனது ஆபத்பாந்தவனிடம் இன்று ஜென்ம விரோதியாக மாறினான். இன்னமும் கூட ராமசாமி ஒரு பாதி மனிதன் தான். பெரியங்கங்காணிக்கும் இவன் சேர்ந்திருக்கும் சங்கத்துக்கும் இடையில் கடிகாரப் பெண்டுலம் போல அங்கும் இங்கு ஆடிக் கொண்டிருந்தான்.
ராமசாமிக்கு இன்னொரு தம்பியும் இருந்தான். அந்த தம்பி மகனுக்கு இரண்டு பெயர்கள் வைத்திருந்தார்கள். செக்ரோல் பெயர் நாகமுத்து…. கூப்பிடுகிற பெயர் நாகலிங்கம்…. ஆனால் கணக்கப்பிள்ளை மட்டும் நாகமுத்து என்கின்ற நாகலிங்கத்தை நாகன் என்று தான் கூப்பிடுவார். இந்த அதிகாரிகளின் ஆணவத்தையும் மமதையையும் நாகலிங்கம் நன்றாகவே அறிந்திருந்தான். தொழிலாளிகள் சொல்வது போல கூலிக்காரனுக்கு பொண்டாட்டி எதுக்கு? அவமானத்துக்குள்ளேயே வாழ்க்கையை அமைத்துக் கொண்ட அவர்களின் விரக்தியில் வெடித்த இந்த வார்த்தையிலும் எவ்வளவு உண்மை இருக்கின்றது. அதைப் போலவே தான் கூலிக்காரனுக்கு அழகான பெயர் வைத்துக் கொள்வதற்கு கூட யோக்கியதை கிடையாது என்பதை நாகமுத்து உணர்ந்தான்.
அது ஆடை அணியும் காலம்.
நாகலிங்கம் நீண்ட கதர் ஜிப்பாவை அணியத் தொடங்கினான். பாதங்களை மறைக்கும் அளவுக்கு கதர் வேட்டியைக் கட்டிக் கொண்டான். கொண்டை கட்டும் பழக்கத்தை மாற்றினான். கொண்டையை அறுத்தான். அழகாக (சேக் வெட்டு) முடி வெட்டிக் கொண்டான். பாதங்கள் வரை வேட்டி கட்டிக் கொண்டான். சாதுரியமாக செருப்பையும் அணிந்து கொண்டான்! நாகலிங்கம் யானை மார்க் சிகரட் பாவிக்கத் தொடங்கினான். கடையில் கணக்குத் திறந்து டீ குடிக்கும் பழக்கத்தையும் உண்டு பண்ணிக் கொண்டான்.
சிரமப்பட்டு நகர பாபர் சலூனுக்குப் போய் நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்வதற்கு செய்தி பத்திரிகைகளை வாசிக்க ஆர்வம் கொண்டான்.
பாபர் சலூன்-
பாபர் சலூன் தான் அரசியல் சமாசாரங்களை பேசுவதற்கும் உலக விவகாரங்களை அறிந்து கொள்வதற்கும் ‘சொல்லி வைச்ச இடமாகும்!’
-நாகலிங்கம்…
தோட்டங்களுக்கு அப்பால் வெளியிலும் ஓர் உலகம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு ஒரு கைதித் தொழிலாளியான அவன் எவ்வளவு ஆவேசத்தோடு ஆசைப்படுகின்றான்! நாகலிங்கத்தின் மனவோட்டம் சமூகப் பார்வையை நோக்கி விசாலித்தது.
பத்தாம் திகதி-
இது ஒரு திருநாள்! நாகலிங்கத்துக்கு குஷியான நன்நாள்! பத்தாம் திகதியில் தான், தொழிலாளருக்கு தோட்ட முதலாளி சம்பளம் கொடுப்பான். அன்று ‘சம்பள வாசல்’ கலகலக்கும்… சம்பளம் போட்டதும் நாகலிங்கம் ‘பயிஸ்கோப்’ (சினிமாப்படம்) பார்க்க ஓடிடுவான்….
கிட்டப்பா, பாகவதரின் பாடல்களை அவரது குரலில் அப்படியே பாடுவான்! ரவிக்கை அணிந்து ‘டோரியா’ சாரிகட்டி கருவிழிகளை மேயவிடும் அவனது கொழுந்தியாமார்களின் முன்னால் பாகவதராய் பாடி நிற்பதில் ஓர் எல்லையற்ற மயக்கம் அவனுக்கு வரும்! இருபதைத்து வருஷங்களுக்கு முன்பு முதன் முதலாக தோட்டங்களுக்கு வந்த மிக மிருதுவான சாரிதான் ‘டோரியா’ சாரியாகும். இந்த டோரியா சாரிதான் கவர்ச்சியை தோட்டங்களில் அப்போது மிகப்பிரபல்யமான உண்டாக்கியது!
பசுமை நிறைந்த மலைக் காடுகளைத் தென்றல் தழுவிச் சென்றது…. இயற்கை அமைப்பில் மட்டும் தான் மலைநாடு ரம்பியமானது.
கற்குகை போன்ற லயன் கூடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மருவி நவீனம் கலந்த ‘கொட்டேஜ்’ வீடுகளாகத் தோன்றின.
இப்போதெல்லாம் நாகலிங்கம் கொஞ்சம் பெரிய மனுசனாக முதிர்ச்சியடைந்து விட்டான்.
அவனது மகன் பத்மநாதன் தகப்பனை விட ஒரு படி உயர்ந்து நின்றான். ஆமாம்…. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம்! அவனது பழக்கவழக்கங்கள் நடவடிக்கைகள் எல்லாமே நாகலிங்கத்தை விட வித்தியாசமானவை.
பத்மநாதன்
பத்மநாதன் வேலைக்காட்டுக்கு காக்கி காற்சட்டை உடுத்திச் செல்வான். முன்னைய தொழிலாளி மாதிரி தலையில் கம்பளி கொங்கானி போடுவதை வெறுத்தான். இது கம்பளி போடாத காலம்….. பல நிறங்களில் கொங்கானியாக பிளாஸ்டிக் ரெட்டு பாவிக்கின்றார்கள். பத்மநாதன் கம்பளிக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரெட்டை பாவிக்கின்றான். அவன் இன்று நாகரீகம் அடைந்த ஓர் அழகான இளைஞன்……. உடலுக்கேற்றபடி அளவு கொடுத்து டெயிலரிடம் சட்டை தைக்கக் கொடுத்து உடுத்துகிறான். பழைய ஜிப்பா உடைகள் எல்லாம் காலத்தால் கழிக்கப்பட்டு விட்டன. ‘சேர்ட்’….. மெல்லிய வேட்டி அல்லது சாரம் கட்டுகிறான். கையில் கைக்குட்டை சேப்பில் பவுன்டன் பேனா, கைக்கடிகாரம் புதிய மோஸ்தரில் செருப்பு இப்படியொரு வசீகரமான வளர்ச்சியில் பத்மநாதன் தோட்ட வாழ்க்கையில் ஒரு புதிய பார்வையைக் காட்டுகின்றான்.
தினசரி செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலித் தகவல்கள் போன்ற ஊடகங்களில் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு முழு மனிதனாக அவன் நிறைவு பெற்று வளர்ந்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் போட்டார்கள். பெரிய தலைவர் வருகிறாராம். அவரைப் பார்ப்பதற்கும், அவரின் பேச்சைக் கேட்பதற்கும், பத்மநாதன் ஆர்வத்தோடு கூட்டத்துக்குச் சென்றான்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தின் செய்திகள் புதன்கிழமை பத்திரிகையில் வெளிவந்திருந்தன. ‘கூட்டத்தில் பேசியது ஒன்று… வந்திருந்தது ஒன்று’ பத்திரிகைச் செய்திகள் ஏறுக்கு மாறாக வந்திருந்ததால், மனதுக்குள்ளே அவன் கோபமாக நகைத்துக் கொண்டான்.
பத்மநாதன் இன்னும் தோட்டத்தின் சுவர்களுக்கு அப்பால் வெளியில் வந்தது போதாது இன்னும் வெகு தூரம் அவன் வெளி உலகத்தை நோக்கி வர வேண்டும். இருந்தாலும்….
அந்தத் தொழிலாளியின் வளர்ச்சி பாராட்டுக்குரியது. வியப்புக்குரியது. பகுத்தறிவுப் பாதையில் அவன் அவனது வயதை விட கணிசமான தூரத்தைக் கடந்து வந்திருக்கின்றான்.
மூட நம்பிக்கைகளைப் பத்மநாதன் முறியடித்தான். சம்பிரதாயக் கலியாணங்கள், சடங்குகளை மிருகங்களை பலிகொடுக்கும் சமய நம்பிக்கைகளை அடியோடு வெறுத்தான். தனக்கென ஒரு தனி வழியை வகுத்துக் கொண்டான். தகப்பனின் கதர் உடை, தோட்டத்துரை, தோட்ட உத்தியொகத்தர்கள், சங்கத் தலைவர்கள், இவர்களுக்கெல்லாம் அப்பால் விலகி நின்றான். தன்னை எவரும் பழி சொல்லும் அளவுக்கு தனது பண்புகளை தாழ்த்திக் கொள்ளவில்லை. தோட்டத் துரைக்கோ அல்லது அங்கேயுள்ள அதிகாரம் படைத்த கும்பல்களுக்கோ சலாம் வைக்கும் பழக்கங்களையெல்லாம் பத்மநாதன் தவிடு பொடியாக்கினான்! அடுத்தவனுக்குச் சலாம் வைக்கும் புத்தியை அடியோடு அழித்தான். மாவட்ட யூனியன் காரியாலயத்து பிரதிநிதி, தலைவரைக் கூட, சந்திப்பதில் அவன் நாட்டம் கொண்டிருக்கவில்லை.
உலக இயக்கங்கள் எல்லாம் மாற்றம் கொண்டவை…கால ஓட்டங்களால் மனித சிந்தனைகளும் செயற்பாடுகளும் மாறுதல் அடைந்து வருகின்றன.
பத்மநாதனும் அவனது நண்பர்களும் தோட்டத்தில் ஒரு நாடகம் போட்டார்கள். அந்த நாடகத்தின் பெயர் ‘நாடற்றவர்’ தெருவெல்லாம் விளம்பரம் எழுதிப் பிரச்சாரம் செய்து கூட்டத்தைச் சேர்த்தார்கள். ‘நாடற்றவர்’ என்ற நாடகம் முதன் முதலாகத் தோட்டப் புறத்தில் மேடையேற்றப் பட்டிருக்கும் ஒரு அரசியல் நையாண்டி நாடகமாகும். இந்த நாடகம் தோட்டத்தின் சமூக அமைப்பு முறையை விமர்சனம் செய்து காட்டியது. ‘நாடற்றவர்’ நாடகம் குடியுரிமைச் சட்டத்தை இகழ்ந்து காட்டியது.
வறுமையிலும் நிர்வாக ஆதிக்கத்திலும் தங்கள் ஆன்மா நெரிக்கப்பட்ட மக்களின் இருண்ட உலகத்தில் ஒரு சிறிய ஒளிக்கீற்றுப் படர்ந்து பிரகாசித்தது. இந்தப் பாமர உலகத்தில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.
இந்தப் புதிய ஆரம்பம்….ஒரு மண்குடிசையிலிருந்து ஒரு வீடு என்ற மனித வாசஸ்தலத்தை அடையும் வரை….. ஒரு அரசியல் நையாண்டி நாடகத்தை அரங்கேற்றும் வரை அவர்களது சிந்தனை மலர்வதற்கு…. அவர்கள் கடந்து வந்த பாதை தான் எவ்வளவு தூரமானது….! (Indeed it has been a very long way from the mud hut to the cottage type line and a political satire)
– ஆங்கில தொகுதி: Habitation and a Name, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.