காதலைத் தேடி..
கதையாசிரியர்: சிவசங்கரி குருநாதன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 93

மதிய வெயில் சுள்ளென சுட்டெரித்துக்கொண்டிருக்க, அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள் யமுனா. சட்டென புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்து நின்ற பஸ்சில் ஏற முற்பட்டாள். கூட்ட நெரிசலில் எப்படியோ ஏறி , ஒரு ஜன்னலோர இருக்கை தேடி அமர்ந்து கொண்டாள் யமுனா. அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களை இறக்கி விட்டபின், ஏற வேண்டியவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்படத் தயாரானது.
யமுனா பார்ப்பதற்கு எலுமிச்சை நிறத்தில், மானைப் போன்ற மருண்ட விழிகள், அளவான நாசி, ஆரஞ்சுச் சுளை போன்ற உதடு என பார்ப்பவர்களைச் சுண்டி இழுக்கும் அழகுடன் இருந்தாள். தன் கலைந்த கேசத்தை சரி செய்து கொண்டவளின் பார்வை, கரகரத்த குரலில் “இஞ்சிமொரப்பே…..இஞ்சிமொரப்பே….” என்று கூவி விற்ற பெரியவரின் பக்கம் திரும்பியது. பஸ்சினுள் நுழைந்த அந்தப் பெரியவரை “யோவ் இறங்குய்யா! பஸ்ச எடுக்க வேணா”என நடத்துனர் எரிந்து விழ, ஒன்றும் சொல்லாமல் இறங்கிச்சென்ற பெரியவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது யமுனாவிற்கு, ஒரு வழியாகப் பஸ் புறப்பட யமுனா ஜன்னல் வழியாகப் பார்வையை ஓட விட்டாள். அங்கங்கே மக்கள் தலைகளைக் கடந்து பஸ் வேகமாக காற்றைக் கிழித்துக் கொண்டு சென்றது.
சாலையின் இருமருங்கிலும் உயரமான புளிய மரங்களும், வாகை மரங்களும், தூரத்தில் பனை மரங்களுமென மாறி மாறித் தோன்றி மறைந்தன. அதன் மீது பார்வையை ஓட விட்டபடி கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்தாள். முகம் ஏற்கனவே அழுதழுது வீங்கிப்போயிருக்க, மீண்டும் கண்களில் அரும்பிய கண்ணீரை அணைபோட முயன்றும் முடியாமல் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. கண்ணீரை துடைத்துக் கொண்டவளின் பார்வை மட்டுமே வெளியே நிலைத்திருக்க, நினைவலைகள் மெல்லப் பின்னோக்கி நகர்ந்தன.
யமுனா அப்போது காலேஜ் முதலாம் ஆண்டு மாணவி. தன் வகுப்பறையில் அமர்ந்து லெக்சரர் நடத்தும் பாடங்களை மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தாள். திடீரென வகுப்பறைக்குள் “எக்ஸ்க்யூஸ்மீ மேம்” என்று நுழைந்த சீனியர் மாணவர்கள் சிலர் காலேஜில் நடக்கும் எலக்சனுக்காக, கார்த்திக் என்ற மாணவனுக்காக ஓட்டுக்கேட்க வந்திருக்க அதில் ஒரு மாணவனாக வந்தவன்தான் கண்ணன். சுருட்டை முடி, நல்ல உயரம், சிவப்பும் இல்லாமல், கருப்பும் இல்லாமல் புது நிறம், வசீகரிக்கும் பார்வை, கூர்மையான நாசி, அழகாக ஒதுக்கிய மீசை, அளவான உதடு, என மிடுக்கான தோற்றத்துடன் இருந்தான்.
எத்தனை மாணவர்கள் இருப்பினும் முதல் பார்வையிலேயே கண்ணனை நோக்கியே யமுனாவின் பார்வை சென்றது. ‘சே….என் புத்தி ஏன்? இப்படி போகுது’ என தன்னைத்தானே மனதுக்குள் திட்டிக் கொண்டவள், வேறுபக்கம் பார்வையை ஓட விட மீ்ண்டும் தன்னையும் அறியாமல் பார்வை அவனிடமே வந்து நின்றது. அவனோ இவளைக் கண்டு கொள்ளவேயில்லை. ஓட்டுக் கேட்டுவிட்டு கடந்து செல்ல அவனுடன் சென்ற தன் மனதைப் பிடித்து நிறுத்தியவள், ம்ஹூம்…..படிக்கத்தான் வந்திருக்கோம், முதல்ல அதப்பார்ப்போம் என சமாதானம் செய்து கொண்டு படிக்கத் தொடங்கினாள். அடுத்தடுத்த நாட்களில் ஏதேச்சையாகவோ அல்லது அந்த கடவுளின் விளையாட்டோ அவன் மீ்ண்டும் மீ்ண்டும் இவள் பார்வையில் பட அவன்பின் சென்ற தன் மனதை நொந்து கொண்டாள்.
பின்னாளில் காலேஜ் கல்ச்சுரலுக்காக இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டுப் பின் காதலாக மலர்ந்தது. இறுதியாண்டு முடித்த கையோடு கண்ணனுக்கு நல்லதொரு கம்பெனியில் வேலை கிடைத்து விட, யமுனாவும் தன் படிப்பை முடித்தவுடன் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்தனர். மகிழ்ச்சியாகத் திருமண வாழ்வைத் தொடங்கிய யமுனாவிற்கும், கண்ணனுக்கும் ஓரிரு மாதங்களிலேயே காதல் கசக்க ஆரம்பித்து விட்டது. காதலிக்கும் தருணத்தில் நிறைகள் மட்டுமே தெரிந்தவர்களுக்கு, இப்பொழுது குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. யமுனாவோ கண்ணன் மேல் கொண்ட அளவுக்கதிகமான அன்பால் அவன் மேல் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொண்டாள். அவனுடன் வேலை பார்க்கும் பெண்களுடன் சாதாரணமாக பேசுவதைக்கூட தவறாக நினைத்து அவர்களுடன் சேர்த்து வைத்துப் பேசி தினமும் சண்டையிட, கண்ணன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் புரிந்து கொள்ளாதவள், ஒருநாள் கோபித்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள். கண்ணன் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், முடியாததால் என்ன செய்வதென தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, தன் பங்கிற்கு இருவரின் பெற்றோரும் எவ்வளவோ முயற்சி செய்தும் யமுனாவைச் சமாதானம் செய்ய முடியவில்லை.
இப்படியே ஆறு மாதங்கள் ஓடி விட, இந்நிலையில் ஒருநாள் யமுனா வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவள், அப்பாவின் பழைய டைரியிலிருந்து பெண்ணின் புகைப்படம் ஒன்று கீழே விழ, அதை எடுத்துப் பார்த்தவளுக்கு அது யாரென்று பிடிபடவில்லை, யாராக இருக்கும் என யோசித்தவாறே, நேராக அடுப்பங்கரைக்குச் சென்று தன் அம்மாவிடம், காண்பித்தவளுக்கு, அதைப் பார்த்தவுடன் அம்மாவின் முகம் மாறுவதைக் கவனித்தவள், ஆர்வம் மேலிட “யாரும்மா இது?” என வினவினாள். யமுனாவின் அம்மா பெருமூச்சு விட்டபடி,
“இந்த உலகத்துல குறையில்லாத மனுசனே கிடையாது யமுனா, நீ உங்கப்பா ரொம்ப நல்லவருன்னுதான நெனச்சுக்கிட்டு இருக்க, ஆனா அவரும் ஒரு காலத்துல தப்பு பண்ணியிருக்காரு, நீ பொறந்த கொஞ்ச நாளிலேயே உங்கப்பாவுக்கு இந்தப் பொண்ணோட தொடர்பு ஏற்பட்டுச்சு, இது தெரிஞ்சு, நா உங்கப்பாவோட சண்ட போட்டுட்டு எங்கம்மா வீட்டுக்குப் போயிட்டேன். கொஞ்ச நாளிலேயே தான் செஞ்சது தப்புன்னு புரிஞ்சு என் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டார். என்ன பண்ணச் சொல்ற, இப்பவும் அவரோட தான் என் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு”என்றாள்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த யமுனாவால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனெனில் இதுநாள் வரை தன் அப்பாவை ஒரு ஹீரோவாகப் பார்த்தவளுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது. அடுத்த நொடி தான் செய்த தவறுகள் மண்டையில் உறைக்க இதுநாள் வரை தன்னைத்தவிர வேறு யாரையும் ஏறிட்டுப் பார்த்திராத தன் கண்ணனின் மேல் வீணான சந்தேகம் கொண்டதை எண்ணி வருந்தியவள், காதல் பெருக்கெடுக்கக் கண்ணீருடன் அவனைக் காண புறப்பட்டாள். கண்ணனுடன் காதலித்த நாட்களை எண்ணித் திளைத்தவளை, டிரைவர் சட்டென போட்ட பிரேக் நிகழ்வுக்குக் கொண்டு வர கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். தன் நிறுத்தம் வரவே கீழே இறங்க இருந்தவளிடம், கிழவி ஒருத்தி தனது பாரத்தை இறக்கிக் கீழே வைக்குமாறு இவளிடம் உதவி கேட்க, இவளும் இறக்கி வைத்தாள் பாரத்தை.