காதலில்லா காதல்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 24, 2025
பார்வையிட்டோர்: 95 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11

அத்தியாயம் – 9

அடுத்த வினாடி சியாமளா கைபேசி எடுத்து எண்கள் அழுத்தி காதில் வைத்தாள்.

“நந்தினி எங்கிருக்கே?”

“என்னடி இப்போதான் போன் பண்ணினே அதுக்குள் எங்கே இருக்கே கேட்குறே?”

“எங்கிருக்கே சொல்?”

“அலுவலகத்தில்.”

“உடன் வரனும். வந்தே ஆகனும்!”

“ஏன்….?”

“ஒரு முக்கியமான விசயம்.”

“என்ன?”

“பாரதி பூங்கா சீக்கிரம்வா. எனக்குத் தாங்காது, தலை வெடிச்சிடும். செத்துடுவேன்.”

அதற்கு மேல் பேச முடியாமல் அவளை பேச விடாமல் அணைத்தவள் உடன் ஒரு விடுப்பெழுதி தன் அதிகாரியிடம் நீட்டிவிட்டு தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பறந்தாள்.


11.00 மணி வேளையில் பூங்கா பரபரப்பாகத்தானிருந்தது. சுண்டல், பட்டாணி, பதனீர் எல்லாம் விற்றுக்கொண்டிருந்தார்கள்.

நந்தினியை இன்னும் காணோம். சியாமளா சிமெண்ட் பெஞ்சில் படபடப்பாக இருந்தாள். அவள் வரும் வழியைப் பார்த்து கையைப் பிசைந்தாள்.

‘பொறு! மெதுவாக விசாரிக்க வேண்டும்!’ தனக்குள்ளே சொல்லி துடிக்கும் மனதை அடக்கினாள்.

‘எப்படியெல்லாம் பேச்சுக் கொடுத்து நந்தினியிடம் விசயத்தை கறப்பது?’ என்று மனசுக்குள் ஒத்திகை பார்த்தாள்.

நந்தினியும் ஸ்கூட்டியில் வந்து இவள் வண்டிக்குப் பக்கத்தில் நிறுத்தி…”எதுக்கடி அவ்வளவு சீக்கிரம் தலைப்போற காரியம் வரச்சொன்னே?” கேட்டு அமர்ந்தாள்.

“நட்ராஜ் சா…வு?”

“அதான் தொலையட்டும் சொன்னேனே. அவனுக்கும் உனக்கும் சம்பந்தமில்லே. மனசை இளைப்பாறிக்கோ. பெண்களைக் காதலிக்கிறாப்போல நடிச்சு கழுத்தறுக்கறவனுக்கெல்லாம் சாவு இப்படித்தான் வரும்.”

“நந்தினி! அந்த ஆள் மேல் உனக்கு ரொம்ப ஆத்திரமா?”

“கொலை வெறி!”

“சத்தம் போட்டு சொல்லாதே. போலீஸ் சந்தேகப்பட்டு விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. என்னையும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் விசாரிச்சார். உன்னையும் விசாரிக்கலாம்ன்னுதான் எச்சரிக்க வந்தேன்.”

“தாராளமா விசாரிக்கட்டும். எனக்கும் அதுக்கும் துளி சம்பந்தமில்லேன்னு உண்மையைச் சொல்வேன்.”

“இல்லேன்னா… எனக்குச் சந்தோசம் நந்தினி.” சியாமளாவிற்குக் கண்கள் கலங்கியது. பாசமாய்ப் பார்த்தாள்.

“ஏய்…! இவள் அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தாள். மெல்ல ஆதரவாய் அணைத்தாள்.


சப்-இன்ஸ்பெக்டர் சங்கருக்கு விசாரணையில் சின்ன துரும்பு கிடைக்காதது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது.

முதன்முதல் என்பதால் இந்த ஏமாற்றம் வழி தெரியவில்லை, தட்டுத்தடுமாறும் நிலையோ?! நினைத்தான்.

அடுத்து என்ன என்று யோசிக்க…. மீண்டும் மீண்டும் நட்ராஜ் மாமனார் ராசகோபாலனின் வீட்டின் மேலேயே மனம் மையம் கொண்டது.

சீருடை துறந்து ஹோண்டாவில் ஏறி…. கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறந்து… ராசகோபாலன் மாளிகை முன் உள்ள பெட்டிக்கடையில் நிறுத்தி… ஒரு சிகரெட் வாங்கி ஊஊஊஊதி…, தினசரி வாங்கி மேமேமேய்ந்து… கடுப்படிக்க… பதினோறு மணியளவில் ஒருத்தி, சுமார் முப்பது வயசு. வேலை முடித்த வியர்வை, களைப்பில் கையில் ஒயர் கூடையுடன் கேட்டைத் திறந்து வெளி வந்தாள்.

இருபது அடி தூரம் போக விட்டு, அவள் தலைமறையும் சமயம் வண்டியை எடுத்து, ஆளைத் தொடர்ந்து முன் நிறுத்தி…

“உங்களுக்குப் படிக்கத் தெரியலைன்னாலும் இதைப் பாருங்க.” என்று ஏதோ வழி போக்கன் விசாரிப்பு போல் தன் அடையாள அட்டையை அவளிடம் நீட்டி முகத்தைப் பார்த்தான்.

சப்-இன்ஸ்பெக்டர்! பார்த்தவளுக்குச் சின்ன அதிர்ச்சி, மிரட்சி.

“நீங்க ராசகோபாலன் வீட்டு வேலைக்காரிதானே?”

“அ…ஆமாம் சார். வேலாயி!”

“ஒரு சின்ன விசாரணை. இந்த விசாரணை அந்த வீட்டுக்குத் தெரியக்கூடாது. மூச்சு விடக்கூடாது. விட்டால்… குற்றவாளிக்குத் துணை, எச்சரிக்கை செய்திருக்கீங்கன்னு சிறைக்குப் போவீங்க. சரியா?”

“ச…சரி சார்.”

“நீங்க எனக்குத் தப்பான தகவல் கொடுக்க வேணாம். பயந்து பொய் சொல்ல வேணாம். தெரிஞ்ச உண்மையை மட்டும் சொன்னால் போதும். தப்பா சொன்னா தப்பா ஆகும். புரியுதா?”

“பு….புரியுது சார்.”

“சரி. நாம சாதாரண ஆட்கள் போல் கொஞ்சம் மறைவா பேசலாமா?”

“பே… பேசலாம்ய்யா.”

“பயப்படாம வாங்க. கொஞ்சம் ஆளில்லா இடத்துல பேசலாம்.” நடந்தான்.

தொலைவில் கடற்கரை ஓரம் குப்பம் தெரிய… சாலை ஓரம் ஹோண்டாவை நிறுத்தி, “அங்கேதான் உங்க வீடா?” – மணலில் அமர்ந்தான்

“ஆமாம் சார்.”

“உட்காருங்க. நீங்க அந்த வீட்டு வேலைக்காரியா, சமையல்காரியா?”

“ரெண்டும்!” அமர்ந்தாள்.

“உங்களைத் தவிர்த்து இன்னும் எத்தனை வேலைக்காரர்கள் இருக்கீங்க?”

“தோட்டக்காரர் ஒருத்தர். உள் தகவல் சொல்ல எடுபிடிக்கு வாசல்ல ஒருத்தர். அப்புறம் கூர்க்கா, நான், இன்னொருத்தி.”

“எல்லாருக்கும் எத்தனை எத்தனைப் புள்ளைக் குட்டிகள், வயசு என்ன?”

“எனக்கு ரெண்டு பசங்க சார். ஒருத்தன் ரெண்டாவது. தலைச்சன் மூணாவது. வாசல் காவல்காரருக்கு ரெண்டு புள்ளைங்களும் வெளிநாட்டுல இருக்கு. காவலாளிங்க வாரத்துக்கு ஒருத்தர் வந்து போவாங்க. அவங்க தனி கம்பெனி ஆட்களாம். அவ… இப்பதான் கலியாணம் முடிச்சா சிறுசு. வீடு வாசல் பெருக்கல் கொஞ்சம் பாத்திரம் துலக்கலோட அவள் வேலை முடிஞ்சுது. அவ்வளவுதான்.”

“தோட்டக்காரரை விட்டுட்டீயேம்மா.”

“ஆமாம்ல்லே?!… ஒருத்தன் படிப்பு முடிச்சு கருங்குழி, கேளம்பாக்கம், எங்கேயோ கார் கம்பெனியில வேலையாய் இருக்கான். இன்னொருத்தன் பெரியவன் கொஞ்சம் படிச்சு தங்கக்கடற்கரையாண்ட மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை வைச்சிருக்கான்.”

“ரெண்டு பேருக்கும் திருமணம் முடிச்சாச்சா?”

“இன்னும் இல்லே. பெரியவனுக்கே இருபத்தி மூணு வயசுதான் ஆகும். வாலிபப்பசங்க.”

“பையன் கார் ரிப்பேரெல்லாம் வந்து பார்ப்பானா?”

“ம்ம்… தேவைப்பட்டா வருவான். பொண்ணு எங்கேயாவது ஒட்டிச் செல்லும் ஸ்கூட்டியோ, காட்டியோ அது ரிப்பேர்ன்னாலும் பெரிய பையன் எடுத்துப் போய் செய்ஞ்சு வருவான். யோக்கியமான புள்ளைங்க. வர்றதும் தெரியாது போறதும் தெரியாது.”

“அந்தம்மா… அதான் மொதலாளி அம்மாவுக்கு ஆண் பழக்கம் உண்டா?”

“ஐயே…!”

“உண்டா, இல்லையா?”

“அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் சார். கார்ல ஏறி, போய் வருவாங்க. உள்ளே, வெளியே என்ன ஏது நடக்குதுன்னு யாருக்குத் தெரியும்?!”

“ஐயாவுக்குப் பெண் சகவாசம்?”

“அவருக்கு சர்க்கரை வியாதி. சர்க்கரை வியாதிக்காரங்களுக்குத்தான் சரியா இருக்காதாம்ல்லே. யாருக்குத் தெரியும்? வெளிப்பேச்சு. வேளைக்கு நாலு மாத்திரை போட்டுப்பார். நான்தான் தண்ணியை கொதிக்க வைச்சு, ஆற வைச்சு, பிளாஸ்க்ல ரொப்பி அனுப்புவேன்.”

“அந்தம்மா வேலைக்காரங்ககிட்ட நல்லா பழகுவாங்களா?”

“டிரைவர்கிட்ட ஒட்டுதல்.”

“அவருக்கு வயசு?”

“அவரா?!.. உங்களைப்போல சின்னப்யைன்.! வயசு முப்பது. அனாதைப் பையனாம். பத்து வருசமா இந்த வீட்டிலேயே வளர்றான். அவுட்ஹவுஸ்லதான் படுக்கை. அஞ்சு வருசமாய் அவனுக்குக் கலியாணம் முடிக்கனும், கலியாணம் முடிக்கனும்ன்னு…இந்தம்மாள் அவனுக்கு ஓயாமல் பொண்ணு பார்க்கிறதுதான் வேலை. ஒன்னும் முடியலை. இவனுக்கு ஏதோ தோசமாம். நிசமா, பொய்யா, ஆள் கோளாறா, சாதக தோசமாத் தெரியலை.”

“அந்தப் பையனுக்கும் அந்த அம்மாவுக்கும் தப்பா ஏதாவது…?”

“ஐயோ சாமி! நான் அப்படி நெனைக்கலை. சில புள்ளைங்களுக்குப் பொண்ணின்னாலே வெறுப்பு. வெளியில் சொன்னாலும் மத்தவங்க ஏத்துக்காததினால் பார்க்கிறதையெல்லாம் வேணாம் சொல்லும்.”

“பெண் சகாசினிக்கு செவ்வாய் தோசமா?”

“அப்படியெல்லாம் கெடையாதே..! தெரியலை.”

“கிடையாதா, தெரியாதா?”

“ரெண்டும்!”

“குழப்பாதே.”

“சாமி! நான் ஜாதகம் பார்க்கலை. இது சம்பந்தமா உள்ளே பேச்சு கிடையாது, தெரியாது.”

“இவுங்க எங்கே சோசியம் பார்ப்பாங்க?”

“அடையாறாண்ட ஆமாம் சாமின்னு ஒரு சாமியார் இருக்கானே, பேமானி! அவன்தான் குரு. சொன்னா வேதவாக்கு.”

“சரி வேலாயி. சமீபமா வேலைக்காரங்க யாராவது மாறி இருக்காங்களா?”

“ம்ம்… போன வருசம் ஒரு பையன் மாறினான். நல்லாத்தான் வேலை செய்துக்கிட்டிருந்தான். திடீர்ன்னு அம்மா, அப்பாவைப் பார்க்கப்போறேன்னு சொன்னதால நிறுத்திட்டாங்க.”

“பேர்?”

“சாத்தையன். ராமநாதபுரம். ஆடு மேய்க்கிற கோணார் குடும்பம். வயசு 25. இருபது வயசுக்கு இங்கே வேலைக்கு வந்தாப்போல. நெருப்பைக் குளிப்பாட்டின கலர். கரிகட்டை. எப்பவும் வெள்ளை வேட்டி. வெள்ளை சட்டைதான். சரி உடம்பு. வேட்டியை மடிச்சுக்கட்டி சட்டையைக் கழட்டி மாடி, ஐயா அறையெல்லாம் டெட்டால் போட்டு தொடைச்சு வேர்த்துப் போய் நின்னா….உடல் கட்டு பார்க்கிற பொம்பளைக்கெல்லாம் ஆசை வரும். எனக்கே ஒரு கிறக்கம். நல்ல கருப்பாய் இருந்தாலும் களையாய் இருப்பான். வீட்டுக்கு அவன்தான் செல்லப்பிள்ளை. காசு பணம் பொருள் தொடமாட்டான். அம்மா அறை, ஐயா அறை, பாப்பா அறையெல்லாம் ஆளில்லேனாலும் அவன்தான் தொறப்பான், சுத்தம் செய்வான். எல்லா வேலையையும் முகம் சுளிக்காம செய்வான். ஐயா செருப்பைக்கூட அவன்தான் கழட்டுவான், சுத்தம் செய்வான். ஐயா மேல அவனுக்குஅவ்வளவு பயம், பக்தி.

மொதலாளி அம்மாவுக்கு அவன்மேல ரொம்ப பிரியம். பாப்பா பள்ளி, கல்லூரிக்குப் போகும். ஐயா கம்பெனிக்குப் போவார். வீட்ல அம்மாவும் சாத்தையாவும்தான். சமயங்கள்ல சாத்திய அறைக்குள்ளிருந்து ரெண்டு பேரும் சர்வ சாதாரணமா வருவாங்க. ஐயா கூடத்துல உட்கார்ந்திருந்தால் இவுங்க பக்கத்து தனி அறையிலோ சமையல் அறையிலோ இருப்பாங்க. எனக்குக்குக்கூட சமயத்துல அவுங்க ரெண்டு பேருக்குள்ள தொடுப்பு இருக்குமோ சந்தேகம். ஐயாவுக்குத் துளி சந்தேகம் கிடையாது. சர்க்கரை வியாதி. தன்னால முடியாது. பிரச்சனை தொல்லை இல்லாம இருந்தா சரிதான் கண்டுக்காம இருக்காரோன்னு கூட நெனைப்பேன். ஐயா தங்கம் நினைக்க மாட்டார். அந்த அளவுக்கு அவருக்கு மனைவி மேல் நம்பிக்கை. நம்பிக்கைதானேய்யா வாழ்க்கை?”

“சாத்தையன் விலாசம் தெரியுமா?”

“ஊர் வண்டான்குளம். முதுகுளத்தூர் பக்கம். பரமக்குடி. கைபேசி வைச்சிருந்தான் எண் தெரியாது. அவ்வளவுதான் விசயம். எனக்கு வேறொன்னும் தெரியாது. விட்டுடுங்க.”

அவளை அனுப்பி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

விசாரணையில் புள்ளியாய் சின்ன வெளிச்சம் தெரிந்தது. சட்டைப் பையிலிருந்து பேனாவும், சின்ன நோட்டும் எடுத்தான்.

அத்தியாயம் – 10

விசாரணை…

1. காவலாளி – கூர்க்கா, 2. வாசல் காவலாளி, 3. தோட்டக்காரர், 4. தோட்டக்காரர் மகன்கள், 5. அடையாறு ஆமாம் சாமி – செவ்வாய் தோஷம் 6. கார் ஓட்டி 7. வேலையை விட்டு விலகிய சாத்தையன் 8. வீட்டு வேலைக்காரி. எழுதினான். உற்றுப் பார்த்தான்

  1. காவலாளி – கூர்க்கா. குறை சம்பளம். ராசகோபாலன் பணம் காசு, சொத்தை அடைய ஆசைப்பட்டிருந்தாலும் மாப்பிள்ளையைக் கொலை செய்து அடையும் அளவிற்கு துணிச்சல் இருக்க வழி இல்லை. பூஜ்யம் என்று சைபர் போட்டு அடித்தான்.
  2. வாசல் காவலாளி. வயசு அறுபதுக்கு மேல் வத்தல், தொத்தல், ஒல்லியான உடல், ஒடிந்து விழும் திரேகம். பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள். தன் பொழுது போக்கிற்காக வேலை செய்யலாம். அவருக்குக் கொள்ளையடிக்க வேண்டிய ஆசை இருக்காது. அவ்வளவு ஏன் அந்த எண்ணங்கள் எழ வாய்ப்பே இல்லை. – அடித்தான்.
  3. தோட்டக்காரர். பெரிய இடத்துப் பெண்ணை மகன்களுக்கு முடிச்சுப் போட்டு பணம், சொத்துக்களை அடைய ஆசை இருக்கலாம். மகன்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம். எதிர்பாராதவிதமாக மணம் முடிய…..இவர்கள் ஆத்திரப்பட்டு கொலைக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். மறுமணத்திற்கு ஆள் கிடைக்காமல் பிள்ளைகளைப் புகுத்தி நினைத்ததை முடிக்கலாம் என்றும் திட்டமிட்டு இருக்கலாம். விசாரிக்க வேண்டும். ! பெருக்கல் குறி போட்டு டிக் அடித்தான்.
  4. மகன்கள். தந்தையை பிடித்து நெருக்கினாலே அவர்கள் விசயம் தெரியும். தெரியாவிட்டாலும்.. அவர்களுக்கு சுகாசினியோடு பேச்சு வார்த்தை பழக்கம் இருந்தால் பெண்ணைக் காதலித்து தொட்டு இந்த வீட்டுக்கு வாரிசு ஆகலாம் என்று யோசனை இருக்கும். வேலை சம்பந்தமாய் வருவார்கள் போவார்கள் வந்து போவதே தெரியாது. என்றாள். அப்படியென்றால் அவர்களுக்கு அந்த எண்ணம் இருக்க வாய்ப்பில்லை, இருக்காது.! – அடிக்கவா, விசாரிக்கவா…. தடுமாற்றத்தில் எதுவும் செய்யாமல் அப்படியே விட்டான்.
  5. சாமியார் விசயம் – தொட்டால்…. சத்தியமாய் அது தனிக்கதையாய்ப் போகும். வந்த வேலையை விட்டு அதைத் தோண்டி….. அது அம்பட்டன் குப்பை ! பெண்ணுக்குச் செவ்வாய் தோசம் உண்டா, இல்லையா மட்டும் தெரிந்து கொள்வதோடு வேலையை முடித்துக் கொள்ள வேண்டும்.
  6. கார் ஓட்டி கவனிக்கப்பட வேண்டியவன். வீட்டு முதலாளி அம்மாமேல் தொடுப்பு வைத்துக் கொண்டு திருமண ஏற்பாடு என்று பெண் பார்ப்பது, மறுப்பது போல் நாடகமாய் இருக்கலாம். அவனுக்கு பசுவை வளைத்து கன்றுக்குட்டியை பிடிக்கலாம் என்கிற எண்ணமாய் இருக்கலாம். இல்லை இவளே அப்படி ஓர் ஏற்பாட்டில் இருவருமே நாடகமாடலாம். இடையில் ராசகோபாலன் மாப்பிள்ளைப் பார்த்து முடிக்க….இருவருமே கூட்டு சதி செய்திருக்கலாம். குறியிட்டான்.
  7. சாத்தையன். விசுவாசி, யோக்கியமான வீட்டு வேலைக்காரன். வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சுதந்திரம். தனிமை, இளமை… ராசாத்தி அம்மாள் இவனையும் வளைத்துப் போட்டு ஒரு உறைக்கு இரு கத்திகள் இருக்க வாய்ப்புண்டு. அனுபவிக்க அளவில்லை! ஏன் வீட்டை விட்டு வெளியே சென்றான், வேலையை விட்டு நின்றான்?! மனைவியும் அவனும் கையும் மெய்யுமாய் பிடிபட… ஓடு நாயே ! துரத்தி விடப்பட்டானா?! அந்த ஆத்திரத்தில் அவன் பழி தீர்த்தானா?! அதி முக்கியம் என்பது போல் பெருக்கல் குறி போட்டு அவைகளில் நான்கு புள்ளிகள் இட்டான்.
  8. வேலைக்காரி ? – சப்பை. அடித்தான்.

இப்போது இவர்களில் யாரை முதலில் விசாரிப்பது? – குறிப்பைப் பார்த்தான். கார் ஓட்டி, சாத்தையன்… கவனத்திற்கு வந்தார்கள்.

இவர்களில் யாரை முதலில் தொட… போட்டி யோசனை வந்தது.

கார் ஓட்டி இங்கேயே இருக்கிறான். வீட்டிலேயே வேலை செய்கிறான். பிடிப்பது விசாரிப்பது சுலபம்.

சாத்தையன்?… தொலைவில் இருப்பவன் வேலையை முடித்து அடித்து விட்டால் அடுத்து இங்குள்ளவர்களை நோண்டி நொங்கெடுத்து விடலாம். சாத்தையன் பொய் சொல்லி இருந்தாலும் விசாரணை வளையத்திற்குள் வந்து விட்டதால் அடுத்து பிடிப்பது சுலபம். ஆக… சாத்தையன்! முடிச்சை இறுக்கினான். அவன் விலாசம் முகவரி? யோசனை ஓட… எழுந்து வண்டியை எடுத்தான்.

கருங்குழியில் சுகாசினி பைப்ஸ் கம்பெனி · பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டம். அலுவலகம் முகம் பார்க்கும் அளவிற்கு அழகு, நவீனம். ராசகோபாலன் அறை. முதலாளி என்றே எழுதப்பட்டிருந்தது.

உள்ளே அந்தரங்க காரியதரிசி லட்சனா தொடை தெரியும் அளவிற்கு மிடி. மார்பு தெரிய பனியன் அதன் மேல் கையில்லாத சிகப்பு நீலத்தில் கட்டம் போட்ட சட்டை. உதட்டில் சாயம். மெல்லீசான முகப் பூச்சு. அள்ளி முடியாத ஷாம்பு முடி. கையில் பென்சில் குறிப்பேடு.

ராசகோபாலன் சொல்ல சொல்ல அவள் நின்று எழுதிக்கொண்டிருந்தாள்.

இன்டர்காம் ஒலித்தது.

ராசகோபாலன் எடுத்து, “சொல்லு சித்ரா?”

“உங்களைப் பார்க்க சப்-இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்.”

“ஒரு அஞ்சு நிமிசம் இருக்கச் சொல்லும்மா”. சொல்லி… மீதி குறிப்புகள் சொல்லி அவளை அனுப்பி விட்டு மணி அடித்தார்.

“நீங்க போங்க சார்.”

சங்கர் எழுந்து உள்ளே சென்றான்.

“உட்காருங்க சார்.”

அமர்ந்தான்.

“காபி, டீ, குளிர்பானம்?”

“வேணாம் சார். சின்ன விசாரணை.”

“நடத்துங்க.”

“உங்க வீட்ல வேலை செய்து நின்ன சாத்தையனைப் பத்தி குறிப்பு வேணும்.”

“அவன் எதுக்கு?”

“அவனை வேலையை விட்டு எதுக்கு நிறுத்தினீங்க?”

“அவன் அம்மா அப்பாவைப் பார்க்கப்போறேன்னு தானாய் நின்னான்.”

“பரவாயில்லே. அவனைப் பத்தி விபரம் கொடுங்க விசாரிக்கனும்.”

“அவனுக்கும் விபத்துக்கும் சம்பந்தமில்லே. அவன் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி. இருந்தான் போனான். நீங்க அவனை வீணா சந்தேகப்படுறீங்க.”

“இருக்கட்டும் சார். அவன் உங்க வீட்ல ஒரு நம்பிக்கையான ஆளாய் பல வருசம் வேலை பார்த்து நின்னிருக்கான். உண்மையாய் வேலையை விட்டு நின்னானா உள் நோக்கத்தோட நின்னானா தெரியனும்.”

“சார். அவன் ஏழை. ஒரு நாள் வாடிய முகத்தோட என் வீட்டு வாசல்ல நின்னான். நான் முதுகுளத்தூர் பரமக்குடி கோனார் குடும்பம். ஏழ்மை. ஆடு மேய்க்கிறது தொழில். பத்தாம் வகுப்பு படிப்பு. தொழில் பிடிக்கலை, வீட்டை முன்னேத்தனும், நடிக்கனும், பெரிய பணக்காரனாகனும் வந்தேன். இங்கே வந்த பிறகுதான் சினிமா அவ்வளவு சுலபமில்லே தெரிஞ்சுது. தலைமுழுகிட்டேன்.

ரெண்டு நாள் பசி. சோறு போடுங்க, வேலை கொடுங்க, விசுவாசமாய் உழைக்கிறேன் சொன்னான். அன்னைக்கு நுழைஞ்சவன்…. அஞ்சு வருசமா எனக்கு விசுவாசமான வேலைக்காரன், என் மனைவிக்கு யோக்கியமான மகன், சுகாசினிக்கு அண்ணன். அவ்வளவுதான் சார் அவன் கதை. அவனைச் சந்தேகப்பட்டால் அவன் மனசே தாங்காது. வீண் சந்தேகம் விடுங்க. வெட்டியாய்த் தேடி அவனையும் வருத்தப்பட வைக்காதீங்க.”

“நீங்க சொல்றது சரி சார். இப்படி குடும்பத்தில் ஒருத்தனாய் இருந்தவன் திடீர்ன்னு அம்மா அப்பா பாசம் போறேன்னு நின்னது நெருடலாய் இருக்கு.”

“நீங்க போலீஸ் புத்தியாய் எல்லாரையும் சந்தேகிக்கிறீங்க. என்னதான் தேன் பால்ல குளிச்சாலும் இங்கே அஞ்சு வருசம்தான் இருப்பு. இருபது வருசமா மொத்தமாய் இருக்கு சார் பெத்த பாசம். அஞ்சு பெரிசா பத்து பெரிசா, வளர்ந்தது பெரிசா பெத்த பாசம் பெரிசான்னு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்க.”

‘வார்த்தைகள் தெளிவு. சொல்பவை எல்லாம் சரி. வீண் சந்தேகம் முயற்சியா?! ‘ சங்கருக்குள் மனசு சமாதானமாகவில்லை.

“தேவைப்பட்டா விசாரிச்சுக்கிறேன் சார். அவன் விலாசம் கைபேசி எண் கொடுங்க.”

“ஓ.கே. வண்டான்குளம், முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்.”

“கைபேசி?”

“அவன் என் மனைவிக்குச் செல்லப்பிள்ளை. அவளுக்குச் சேதி சொல்றேன். அவள்கிட்ட போய் வாங்கிக்கோங்க.”

‘ஆள் இப்பவே தொலைபேசியில் கேட்டு சொல்லலாம் எதற்கு மனைவியிடம் அனுப்புகிறார்? இடையில் ஏதாவது சேதி சொல்லவா?’

“சரி சார். ஊர்ல போய் ஆள் முகம் தெரியனும் அவன் புகைப்படமும் வேணும்.”

“புகைப்படம் இருக்க வாய்ப்பில்லே.”

“நன்றி சார் வர்றேன்.” விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தான்.

விபத்து சமயத்திலேயே ராசகோபாலன் தொலைபேசி எண் தெரிந்து வைத்திருந்ததால் சடனாய் வந்து ஒரு பங்க் கடையில் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டான். உபயோகத்திலிருந்தது!

அவர் வீட்டு எண்ணுக்குத் தொடர்பு கொண்டான். அதுவும் உபயோகத்திலிருந்தது! ஆக… கணவன் மனைவி பேசுகிறார்கள். புரிந்தது.

ஹோண்டா கிழக்கு கடற்கரைச் சாலைக்குப் பறந்தது.

ஆளைப் பார்த்ததுமே காவலாளி கதவைத் திறந்து விட்டான்.

போர்டிகோவில் வண்டியை நிறுத்தி அழைப்பு மணி அழுத்தி… “வாங்க…” ராசாத்தி வரவேற்றாள்.

பின் தொடர்ந்தான்.

“சார் பேசினார். யார் கண்டுபிடிச்சீங்களா?”

“இன்னும் இல்லை மேடம். விசாரணை நடந்துக்கிட்டிருக்கு.”

“உட்காருங்க சார். சாத்தையன் தங்கமான புள்ளை. சந்தேகப்படுறதே கஷ்டமா இருக்கு.”

“பெத்த தாயாய் இருந்தாலும் நான் நாங்க சந்தேகப்படுற தொழில்ல இருக்கோம் மேடம்.” கண்களைச் சுழல விட்டான்.

“என்ன பார்க்குறீங்க?”

“சாத்தையன் புகைப்படம்….?”

“இல்லே.”

சுவரில் கணவன் மனைவி மாலையும் கழுத்துமாக தொங்கினார்கள்.

“இது எப்போ எடுத்தது?”

“ரெண்டு வருசத்துக்கு முந்தி. எங்கள் 25வது திருமணநாள் கொண்டாட்டம். கோலாகலமா கொண்டாடினோம்.”

“அந்த வீடியோவுல சாத்தையன் இருக்கனுமே…?”

“….”

“காட்றீங்களா?”

“தேடனும்.”

“நீங்க எந்த அளவுக்கு எங்களுக்கு ஒத்துழைக்கிறீங்களோ…அந்த அளவுக்கு சீக்கிரம் குற்றவாளியைப் பிடிக்க வாய்ப்புண்டு. சாத்தையன் கைபேசி எண்?”

“சொல்றேன்!” – சொன்னாள். குறித்துக்கொண்டான்.

“சாத்தையன் போனதுக்குப்பிறகு தொடர்பு கொண்டீங்களா, அவன் தொடர்பு கொண்டானா?”

“இல்லே. புள்ளைபோல வளர்ந்தவன் மறந்து தொடர்பு கொள்ளலையேன்னு நாங்களும் தொடர்பு கொள்ளலை.”

“சுகாசினி எப்படி இருக்காங்க?”

“அப்படியேத்தான் இருக்காள். மாறலை. மாறுவாள். மாத்தனும்!”

“பார்க்கலாமா?” கேட்டு ராசாத்தி பதிலை எதிர்பார்க்காது மாடி ஏறினான்.

அறைவாசலைத் தொட…….அவள் முதுகாட்டிக்கொண்டு… எல்.சி.டியில் ராசகோபாலன் ராசாத்தி 25ஆம் திருமண விழாவை ஓடவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சாத்தையன் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் ராசகோபாலனுக்கும் ராசாத்திக்கும் மலர் மலை போட்டு ராசாத்திக்கு அருகில் வந்து நின்று வீடியோவிற்குப் போஸ் கொடுத்தான். அடுத்த விநாடி வீடியோ நகராமல் புகைப்படமாய் நின்றது.

சங்கர் உள்ளே நுழையாமல் ஒரு நிமிடம் நின்று உற்றுப்பார்த்துவிட்டு திரும்பினான்.

தொடர்ந்து வந்து பின்னால் நின்ற ராசாத்தி கையைப் பிசைந்தாள்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *