காதலில்லா காதல்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 115 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம் – 7

காவல்நிலையத்திற்குள் இருந்த சங்கருக்கு விசாரணையில் கொஞ்சமும் சந்தேகிக்க வழி இல்லாத ஒரே பதில்!

ச்சே! அவனுக்கே வெறுப்பாய் இருந்தது.

“என்ன சப்-இன்ஸ்பெக்டர்! முகம் சரி இல்லே. தொங்கி இருக்கு. விசாரணையில் முன்னேற்றம் இல்லையா?” – இன்ஸ்பெக்டர் இளையராஜா வெளியிலிருந்து வந்து இவன் முன் அமர்ந்தார்.

சங்கர் இதுவரை விசாரித்தவைகளை விலாவாரியாய்ச் சொன்னான்.

“எந்த இடத்திலும் சின்ன கீறல் இல்லே சார். விபத்துன்னு சொன்ன உங்க வாய்ல எனக்கு சர்க்கரைப் போடுனும் போலிருக்கு.” அப்படியே தன் ஆதங்கத்தையும் வெளியிட்டான்.

“அவசரப்படாதீங்க சங்கர். ஆரம்பமே துவளாதீங்க. நீங்க தொட்டது பத்து சதவீதம். இன்னும் நீங்க விசாரிக்க வேண்டியது பாக்கி இருக்கு.”

குழப்பமாகப் பார்த்தான்.

“இன்னும் நீங்க நட்ராஜ் அலுவலகம், அவன் நண்பர்கள், மற்றவர்கள் தொடலை. அவ்வளவு ஏன் இந்த ராசகோபாலனிடமே இன்னும் விசாரிக்க வேண்டியது சந்தேகப்படவேண்டியதும் நிறைய இருக்கு.”

“அவர்கிட்ட என்ன சார்?” புரியாமல் பார்த்தான்.

“நீங்க புதுசு. யோசிங்க.”

“சார்ர்….” பார்வையும் குரலும் கெஞ்சியது.

“ஏன்… அவர் மாப்பிள்ளையை நரபலி கொடுத்திருக்கலாம்!” வெடிகுண்டு வெடித்தார்.

“சார்!” அதிர்ந்தான்.

“ராசகோபாலன் ஒரு கம்பெனி முதலாளி. அவருக்கும் கீழ் ஆயிரம் தொழிலாளிகள். ஒரு மல்டி மில்லியனர். பெரிய பணக்காரர். சுமாரான சம்பளத்தில் இருக்கிற ஒரு சாதாரண ஆளை மாப்பிள்ளையாய்த் தேர்ந்தெடுக்க…

செவ்வாய் தோசம் மட்டும் காரணமாய் இருக்கும் என்பது நம்ப முடியாத உண்மை. ஏன்…. அது பொய்யாய்க்கூட இருக்கலாம். உண்மை….?” நிறுத்தி மேசை மேலிருந்த கண்ணாடி உருண்டையை உருட்டினார்.

சங்கருக்கு நெஞ்சு படபடத்தது. திகிலடிக்க அவரை உற்று நோக்கினான்.

“பொதுவாய் பணக்காரர்கள் குணம். தன் பணக்கார முகம் கலையக்கூடாது, மேன்மேலும் வளரனும், செல்வாக்கு, செழிப்பாய் இருக்கனும் என்பது. இதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.

இதைப் பத்திரப்படுத்த அவர்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்கள் சில நம்பமுடியாதவை, முட்டாள்தனமானவை, விசித்திரமானவை, ஏன்… அதிர்ச்சி அளிக்கக் கூடியவை. கோயில் கோயிலாய் ஏறுவாங்க. குளம் குளமாய் குளிப்பாங்க. காவி கட்டினலெல்லாம் சாமியார்ன்னு நெனைச்சு தராதரம் தெரியாம அழுக்கன், அயோக்கியன் கால்களிலெல்லாம் விழுந்து கும்பிடுவாங்க. சோசியனை அழைச்சி பரிகாரம் கேட்பாங்க. அவன் சொல்ற அனைத்தையும் வேதவாக்காய் நிறைவேத்துவாங்க. மாய – மந்திரம், பூசை – புனஸ்காரம் அவுங்க அடிக்கிற கூத்து, லூட்டிக்கு அளவே கிடையாது. இதன் உட்சபட்ச எல்லைதான் நரபலி!”

கேட்டவனுக்கு அப்படியே காதுகள் குப்பென்று அடைத்தது. கிணற்றுக்குள் இறங்குவது போல் உணர்வு வந்தது. தேகம் நடுங்கியது.

“சங்கர்! பெண் குறை. என்னதான் அவளுக்கு செல்வம் செல்வாக்கு இருந்தாலும் உடல் குறை போல் வாழ்க்கையும் குறையாகிடக் கூடாது, இவளால தன் செல்வாக்கு, பணம், பலத்துக்கெல்லாம் பங்கம் வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்துல அவுங்களுக்குன்னு சில மாய மந்திரவாதிகள், சாமியார், சோசியக்காரனிடம் போய் பரிகாரம் கேட்டிருப்பார்.

அவன் சோழியை உருட்டியோ, கட்டம் கட்டி கிரங்களைச் சேர்த்தோ….பெண் குறை, வாழ்க்கை ரெண்டு. மனைவி செத்து ரெண்டாந்தாரமாய் திருமணம் முடிப்பவனுக்கு வாழைமரத்தில் தாலிகட்டி உடனே வெட்டி தோஷம் கழிப்பது போல் பெண்ணுக்கு சுமாரான மாப்பிள்ளையை முடிச்சு கதையை முடிங்க. மறுமணத்துல உங்க பெண் வாழ்க்கை நல்லா இருக்கும், நீங்களும் இதைவிட செல்வம், செல்வாக்காய் இருக்கலாம்ன்னு ஏத்தி விட்டிருப்பான். இவர் மனைவி, மகளுக்கு விசயத்தைச் சொல்லி சம்மதிக்க வைத்து காரியம் முடிச்சிருக்கலாம்.”

சங்கர் அப்படியே உறைந்தான்.

“என்ன இறுகிட்டே.? இது கதை கற்பனை இல்லே. நிஜமாய் இருக்க வாய்ப்பு நிறைய!”

இன்னும் அசையாமலிருந்தான்.

“உனக்கு இன்னொன்னு தெரியுமா? சி.பி.ஐ, போலீஸ் விசாரணை ரெண்டும் ஒன்னு. குற்றவாளியைத் தொடுறதுக்கு முன்… அவனைச் சுத்தி உள்ள மொத்த ஆட்களையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விசாரிச்சு, போதிய ஆதாரங்கள் சேர்த்தபிறகுதான் அவனை ஒரே அமுக்கு! சுத்தி சுழன்று பாரு. உனக்கு எப்படியெல்லாம் தோணுதோ அப்படி விசாரி. கிளம்பு.” என்று மேசை மேலிருந்த பைல் பிரித்தார்.

இன்ஸ்பெக்டரின் அனுபவ பட்டறிவு இவனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது.

ஒரு அதிகாரி ஒரு பொறுப்பான தகப்பனாய் இருந்து இப்படியெல்லாம் புத்தி சொல்லி வழி காட்டி வேலை கற்றுக் கொடுக்கிறார்?! சங்கர் அவரை மனசுக்குள் பாராட்டி எழுந்தான்.


நட்ராஜ் அலுவலகத்தில் ஊழியர்களின் ஓய்வறை.

சங்கர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க…. எதிர் வரிசையில்… ராமாசாமி, விநாயகம், குணா, பன்னீர்செல்வம், கலியாணராமன்… மற்றவர்கள்.

எல்லார் முகத்திலும் விசாரணையின் பயம், பீதி!

“ஆளைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க சார்!” சங்கர் பொதுவாக சொல்லி எல்லாரையும் பார்த்தான்.

“நல்ல பையன்!” – ராமசாமி.

“கலகலப்பாய் பழகுவான்” – விநாயகம்.

“கொஞ்சம் கஞ்சத்தனம். மத்தப்படி யோக்கியம்.” எல்லாம் கேட்டுக் கேட்டு புளித்துப் போனவைகள்.

“எத்தினி வருசமாய் இங்கே வேலைப் பார்க்கிறார்?” – இவன் தொடங்கினான்.

“அஞ்சு வருசமா சார்.”

“எதிரிங்க?”

“எல்லாரும் நண்பர்கள்.”

“உயிர் நண்பர்கள்?”

“குணா சார்.”

“குணா! கெட்ட பழக்க வழக்கங்கள் உண்டா?”

“கெடையாது சார்.”

“பெண்கள் விசயம்?”

“பலான இடத்துக்கு ரெண்டு தடவை வந்திருக்கான் சார். அதுக்கப்புறம் தொடரலை. நிறுத்திட்டான்.”

“ஏன்?”

“பிடிக்கலை சொன்னான்.”

“வேற விசயம் இருந்தால் சொல்லிடுங்க. பின் விசாரணையில் முரண் இருந்தால் தப்பாகிடும் குற்றவாளியாகிடுவீங்க.”

எல்லாரும் கம்மென்று இருந்தார்கள்.

“இல்லே சார்” – கலியாணராமன் மட்டும் துணிந்து சொன்னான்.

அதை ஆமோதிப்பது போல் மற்றவர்கள் மௌனமாய் இருந்தார்கள்.

ஐந்து நிமிடங்கள் கரைய…. சங்கர், “நீங்க போங்க. பெண்களை அனுப்புங்க.” கலைந்தார்கள்.

மாலா, மஞ்சு, ராகினி, தமிழ்ச்செல்வி வந்தார்கள். ஆண்களைப் போலவே அச்சடித்த பீதி முகங்கள்.

“நட்ராஜ் உங்களிடம் பேச்சுப் பழக்கம் எப்படிம்மா?”

“ந…நல்லத்தனம் சார்.”

“கலாய்ப்பு, கடலை?”

“கெடையாது சார்.”

“காதல், நூல்?”

“இல்லே சார்.”

“ஏம்மா… நீங்க அவரை…?” – மாலாவைப் பார்த்தான்.

“எனக்குத் தாய்மாமன் இருக்கார் சார்!”

“எனக்கு வரன் தேடிக்கிட்டிருக்காங்க.” – மஞ்சு.

“அதிகாரிகளிடம் நட்ராஜ் பழக்க வழக்கம்?”

“சுமூகம் சார். ஆனா…. ஒரே ஒரு அதிகாரியிடம் மட்டும் சண்டை.”

“பெரிய சண்டையா?”

“போடா வாடா அளவுக்குப் போயிடுச்சு. வேலையை விட்டுத் தூக்கறாப்போல நிர்வாகம் நடவடிக்கை எடுத்துது. சங்கத் தலைவர் வந்து சரி செய்துட்டார். சமரசம் ஆகியாச்சு.”

“அந்த அதிகாரி இப்போ இங்கே இருக்காரா?”

“அவர் அப்பவே சேலம் கிளைக்குப் போயாச்சு.”

” கோபமாகி மனசுவெறுத்து, தானாய் மாற்றலா, நிர்வாக நடவடிக்கையா?”

“தெரியலை.”

“அவர் குணாதிசயம் எப்படி? மோசமா, பழிவாங்குபவரா?

“தெரியலை?” – மஞ்சு கையைப் பிசைந்தாள்.

“பயப்படாதீங்க மேடம். உண்மையைச் சொல்லுங்க?”

“சத்தியமா தெரியாது சார்.”

“சங்கத் தலைவர் யார்?”

“சங்கரலிங்கம்.”

“அவர் இருக்காரா?”

“இருக்கார் சார். பார்க்கலாம்.”

“உங்க ஒத்துழைப்புக்கு நன்றிம்மா.”

அவர்கள் அகல…. சங்கரலிங்கம்! நாப்பதின் தோற்றம். நல்ல உயரம். அதற்கேற்ற பருமன். கஞ்சி முடமுடப்பில் கதர்சட்டை.

“நீங்கதான் தலைவரா?”

“ஆமாம் சார். இந்த சங்கத்துக்கு மட்டுமல்லாம வெளிக் கம்பெனிகள் மூன்றுக்குத் தலைவன்.”

“சந்தோசம் சங்கரலிங்கம். நட்ராஜ் பத்தி முழுசா விசாரிச்சாச்சு. அந்த அதிகாரி மோதல்தான் குறையாய் இருக்கு. நீங்க சொல்லுங்களேன்.”

“அது ரொம்ப சாதாரணம் சார். அப்பவே முடிச்சாச்சு.”

“அதிகாரி மனசுல வஞ்சம்?”

” தங்கம் சார். அன்னைக்கு என்னமோ ரெண்டு பேருக்கும் நேரம் சரி இல்லே போல. மோதிக்கிட்டாங்க. நான் புகுந்து சரியாக்கி சமரசமாக்கிட்டேன். குப்பை சார்.”

“பிசிறு இருக்குமா சங்கரலிங்கம். ஆள் அநியாயமாய் போய்ட்டான்!”

“இருக்க வாய்ப்பே இல்லே சார்.”

“உங்களுக்கு வேற ஏதாவது தெரியுமா?”

“அவன் ஒரு பெண்ணைக் காதலிச்சான்…!”

“அப்படியா?!…” புது செய்தி. சங்கர் நிமிர்ந்து அமர்ந்தான்.

“ஆமாம் சார். வெளியில் ரெண்டு பேரும் அடிக்கடி என் கண்ணுல படுவாங்க. ஒரு நாள் என்ன விசயம் கேட்டேன். ஒத்துக்கிட்டான். அவளைத்தான் திருமணம் முடிப்பான்னு நெனைச்சேன்… திடீர்ன்னு வேறொருத்தியை முடிச்சான். எனக்கே அதிர்ச்சி.”

“அவள் வேலை விலாசம் கைபேசி எண் வேணும் சங்கரலிங்கம்.”

“கம்பெனி சொல்றேன் சார்.”

சொன்னான்.

‘இவனையும் கவனிக்க வேண்டும்! தலைவர்கள் அதிகாரிகளிடம் விசுவாசமாய் இருந்து பொய் சொல்வார்கள்!’ – சங்கர் அவன் மேல் புள்ளி வைத்துக்கொண்டு எழுந்தான்.

அத்தியாயம் – 8

‘சியாமளாவை அலுவலகத்தில் சந்திப்பது சரியா, வீட்டில் சந்திக்கலாமா? இது இரண்டையும் தவிர்த்து தனி இடத்தில் சந்திப்பது முறையா?!’ – சங்கருக்குள் மின்வெட்டு போல் சந்தேகம் தோன்றியது.

அலுவலகம், வீட்டில் மனம் விட்டுப் பேச முடியாது. உண்மை வராது. மேலும் போலீஸ் விசாரணை என்றாலே மனசுக்குள் பதற்றம், படபடப்பு, இயல்பின்மை இருக்கும். உண்மை வெளிவருவது கஷ்டம். மேலும் காதல் விசயம் என்பதால் இரண்டு இடங்களிலும் விசயம் மூடி மறைக்கப்பட்டிருக்கலாம். நாம் போய் அதை வெளிக்காட்டுவது போல் விசாரிப்பது அவளுக்குப் பின்னால் சங்கடம்.

கள்ளி! இரண்டு இடங்களிலுமே குற்றவாளியாகப் பார்ப்பார்கள். ஆள் உசுரோட இருந்தாலாவது கட்டி வைக்கலாம். இல்லே! விசயம் வெளியில தெரிஞ்சா எடுபடுவீயா? பெற்றவர்கள் சியாமளாவை உண்டு இல்லை என்று ஆக்குவதோடு நின்று விடாமல் மகள் வாழ்க்கைக்காக வருத்தப்படுவார்கள், கவலைப்படுவார்கள்.

தனி இடம் உத்தமம்! முடிவிற்கு வந்தான். சீருடை இல்லாமல் புறப்பட்டான்.

கம்பெனிக்குச் சென்று வாசலில் நின்ற கடைநிலை ஊழியனை விட்டு அவளை அழைத்து வரச் செய்து வரவேற்பறையில் அமர்ந்தான்.

‘தன்னைத் தேடி வந்திருக்கும் ஆள் யார்?’ என்ற யோசனை, குழப்பத்தில் உள்ளே நுழைந்த சியாமளாவிற்கு தெரியாத முகத்தைப் பார்த்ததும் சின்ன திடுக்.

“நான் சியாமளா. நீங்கதான் என்னைத் தேடி வந்த ஆளா?” சங்கரை நேரடியாகவே கேட்டாள்.

“ஆமாம்.” என்று எழுந்த அவன் தன் அடையாள அட்டையை அவளிடம் நீட்டி, “நான் சீருடையில் வந்தால் எல்லார் மனசிலேயும் வீண் கலவரம் வரும்ன்னுதான் சாதாரண உடையில் வந்தேன். உங்களிடம் தனியே ஒரு சின்ன விசாரணை.” என்றான்.

வாங்கிப் பார்த்த சியாமளாவிற்கு சப்-இன்ஸ்பெக்டர் புரிந்தது.

‘எதற்கு, என்ன விசாரணை?’ – குழப்பமாகப் பார்த்தாள்.

“நீங்க பயப்படாம ஒரு மணி நேரம் அனுமதி வாங்கிட்டு வெளியே வாங்க. பக்கத்துல உட்கார்ந்து பேசலாம். எல்லா விபரமும் சொல்றேன். முக்கிய உறவினர் வந்திருக்கிறார் சொல்லி புறப்படுங்க.” அவளுக்கு வழியும் சொல்லிக் கொடுத்தான்.

”ஒரு நிமிசம்!” – சியாமளா சொல்லி உள்ளே சென்றாள். ஐந்து நிமிடத்தில் தன் கைப்பையுடன் திரும்பினாள்.

இருவரும் அருகில் இருக்கும் பூங்காவிற்குள் நுழைந்தார்கள்.

பல ஏக்கர் பரப்பளவில் அந்த பூங்கா பச்சைப் பசேலென்று பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. மொத்தப் பரப்பளவும் நான்கு பகுதிகளாகப் போக்குவரத்திற்குப் பிரிக்கப்பட்டு நடுவில் ஒரு ரவுண்டானாவில் சேர்ந்தது. ரவுண்டானா நடுவில் இந்திய கேட் போன்ற ஒரு கட்டிடம். எல்லா இடங்களிலும் தரையில் சூரிய வெளிச்சத்தை விடாத நிழல்தரும் மரங்கள். மக்கள் உட்காரும்

உபயோகத்திற்காக சிமெண்ட் பெஞ்சுகள். ஆனால் சிலர் அதை படுப்பதற்காகப் பயன்படுத்தி தூங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் பல வண்ணங்களில் பூக்கள், செடிகள். அவைகளுக்கு நீர், ஈரப்பதம் என்று இருந்ததால் குளுமையான காற்று.

இருவரும் மரத்தடி நிழலில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள்.

“உங்களை என்ன விசாரணைக்கு வந்திருக்கேன் தெரியுமா?” – ஆரம்பித்தான்.

“தெரியலை சார்.”

“நட்ராஜைப் பத்தி எனக்குத் தகவல் வேணும்.”

‘ஏன்?’ பார்த்தாள்.

“ஆள் இறந்தாச்சு!”

சியாமளாவிற்குள் இடி இறங்கிய அதிர்ச்சி.

“பத்து நாட்களுக்கு முன் லாரி மோதி விபத்து. ஆள் இடத்திலேயே காலி. சக்கரங்கள் ஏறி… ஆளைச் சுரண்டி எடுக்கும்படி ஆயிடுச்சு. அது விபத்தாய்த் தெரியலை. கொலைக்கான சந்தேகத்தை ஏற்படுத்துது. போலீஸ் பல கோணங்களில் விசாரிச்சு வருது. அந்த வகையில் உங்களையும் விசாரிக்க வேண்டிய என் கடமை.” நிறுத்தினான்.

சியாமளா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

நட்ராஜ் இறந்துவிட்டான்! என்பதையே அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. செய்தி சொல்வது சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. இறுக்கமாக இருந்தாள்.

“உங்களுக்கும் அவருக்கும் எத்தினி வருசக் காதல்?” சங்கர் விசாரணையைத் தொடங்கினான்.

“ரெண்டு.”

“உங்களுக்குள்ளே மன முறிவு, தகராறு?”

“இல்லே.”

“பின் ஏன்…. காதலிச்ச உங்களை விட்டு வேறொருத்தியோட திருமணம்..?”

“மாற்றுத் திறனாளியான ஊனப் பெண்ணைத் திருமணம் செய்றேன் சொன்னார். எனக்கு சந்தோசம். நண்பர்களாய்ப் பிரிஞ்சோம்.”

“நீங்க சொல்லும் இந்தக் காரணம் உங்களுக்கேப் பொய், பலகீனமாய்ப் படலை!?”

“நிஜமான நிஜம்!”

“குற்றவாளிங்க யாரும் உடனே குற்றங்களை ஏத்துக்கிறதில்லே மேடம். காதலனும் காதலியும் அழுத்தமான காரண காரியம், மோதலில்லாம ஒருத்தருக்கொருத்தர் பிரிய வாய்ப்பே இல்லை. சந்தோசமாய்ப் பிரியறது, விட்டுக்கொடுப்பு என்பதெல்லாம் பம்மாத்து, வேசம்!” – நிறுத்திப் பார்த்தான்.

“நான் சொன்னது நிஜம்!” – சியாமளா அழுத்தமாக சொன்னாள்.

“நட்ராஜ் பணத்துக்கு ஆசைப்பட்டு உங்களை உதறி பாதை மாறிட்டார். நீங்க ஆத்திரம் தாங்காம அவர் காரியத்தைக் கச்சிதமா முடிச்சிட்டீங்க. சரியா?”

“உங்க கற்பனை, யோசனை, போலீஸ் புத்தி அருமை.”

“எனக்குப் பாராட்டு தேவை இல்லே. உண்மை வேணும்!”

“நான் சொல்லியாச்சு!”

“சரி. உங்களுக்குப் பகைவர்கள்?”

“இல்லே.”

“நட்ராஜ்க்கு?”

“கெடையாது.”

“உங்களுக்கு வேறு காதல்…?” இழுத்து நிறுத்தினான்.

“புரியுது. ஏற்கனவே எங்களுக்குக் காதல் தோல்வி என்பது கண்டிப்பாய் இல்லே. எங்க காதலுக்குப் பிறகும் என்னையோ அவரையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ யாரும் காதலிக்கலை. அதனால் எங்களை யாரும் பழி வாங்க வேண்டிய அவசியமில்லை. அசம்பாவிதங்கள் நடக்க வழி இல்லே.” சியாமளா தெளிவாக சொன்னாள்.

சங்கர் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். அவள் பதில் மொத்தத்தையும் உள் வாங்கினான்.

“என்னுடைய பல கேள்வி, சந்தேகங்களுக்கு மொத்தமா பதில் சொல்லிட்டீங்க. அதனால் எனக்கு கேள்வி கேட்க வழியே இல்லே. உங்களுக்குத் தெரிஞ்சு அவரைக் கொலை செய்யும் அளவுக்கு யாரையாவது சந்தேகப்படுறீங்களா?”

“இல்லே.”

“உங்களுக்கு நட்ராஜ் மேல கோபம், வருத்தம் கொஞ்சமும் கிடையாதா?”

“கிடையாது!”

“காதல் உங்க வீட்டுக்குத் தெரியுமா?”

“ரெண்டு வீட்டுக்குமேத் தெரியாது.”

”ஏன்?”

“சொல்லலை?”

“ஏன் சொல்லலை?”

“நாங்க திருமணம் செய்ய நினைக்கும்போது சொல்லாம்ன்னு இருந்தோம்.”

பதில் திருப்தி இல்லே.

“அது என் தப்பில்லே. “

“உங்க முடிவு?”

“நட்ராஜ் சேதியைச் சொன்னதும் இருவரும் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசி நண்பர்களாய்ப் பிரிஞ்சோம். திருமணத்திற்கு அவர் பத்திரிக்கை வைச்சார். நான் சந்தோசமாய்ப் போய்க் கலந்து மொய் வைச்சு, வாழ்த்தி, விருந்து சாப்பிட்டு வந்தேன். இந்த உண்மைகளைத் தவிர வேறு ஒளிமறைவுகள் என்னிடம் கிடையாது. இதை நான் எங்கே எத்தினி தடவை வேணுமின்னாலும் சொல்வேன். அவர் இறப்பே நீங்க சொல்லித்தான் தெரியும்.” முடித்தாள்.

சங்கருக்கு மீண்டும் மௌனம் இருந்தான். அடுத்து என்ன கேள்விகள் கேட்க? என்று யோசனை. எதுவும் தோன்றவில்லை.

“நன்றி மேடம். நீங்க போகலாம்!” விடை கொடுத்து அகன்றான்.

விசாரணை முடித்து இருக்கையில் வந்து அமர்ந்ததும் நட்ராஜின் இழப்பு சியாமளாவிற்குள் பாரமாக இருந்தது.

‘அவனுக்கு இப்படி ஒரு முடிவா?’ – மனம் கனத்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.

‘ஒரு பெண்ணை காதலிப்பது போல் நடித்து, காதலிக்க வைத்து, பணத்துக்காக மாறி, நம்பிக்கைத் துரோகம் இழைத்த ஒரு ஆணுக்கு கூலி இறப்பா? கடவுள் தண்டிப்பாரா?! ‘ – அவளுக்குள் கேள்வி பெரிதாக எழுந்தது.

அதே சமயம், பாவம் சின்னப்பெண் ஊனம் வேறு! சுகாசினிக்காகவும் வருத்தப்பட்டாள்.

பார்த்து ஆறுதல் சொல்லலாமா? என்ன சொல்ல, எப்படிச் சொல்ல? தான் யாரென்று எப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள?

விபத்து எப்படி, கொலை எப்படி சாத்தியம்? எதிரியே இல்லாதவனுக்கு எதிரி எப்படி முளைப்பான், விபத்து எப்படி கொலையாய் மாறும், சந்தேகிக்க இடம் வைக்கும்? வேலையில் மனசு பதியாமல் அடுக்கடுக்காய்க் கேள்விகள் முளைத்துக் கொண்டே இருந்தது.

கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள் நந்தினி. எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“சொல்லும்மா?”

“தரகர்கிட்ட உனக்கும் எனக்கும் சொல்லி வைச்சிருந்தேன். ஒரு வரன் வந்திருக்கு. முடிக்கலாமா?”

“ந….ந்..தினி…!” உடைந்தாள்.

“ஏய்..! என்ன அழறீயா….?. இன்னும் நீ அவனை மறக்கலையா?”

“அ…அதில்லே. வந்து வந்து…”

“சொல்லு?”

“பத்து நாட்களுக்கு முன் நட்ராஜ் விபத்துல….மரணம்.”

“உண்மைன்னா சந்தோசப்படு.”

“நந்தினி!”

“அதிர்ச்சி வேணாம். அவன் ஆஸ்த்திக்கு ஒருத்தியைக் கட்டி ஆசைக்கு உன்னைத் தொல்லைப் படுத்துவானோன்னு நான் பயந்து இருந்தேன். அதனாலதான் அதிலேர்ந்து காப்பாத்த உனக்கு சீக்கிரம் முடிக்கனும்ன்னு வரனுக்கும் சொன்னேன். உன் நல்ல காலம் சங்கடங்கள் சரியாப் போச்சு, வரனும் கூடி வந்திருக்கு. மொத்தமா விட்டது சனின்னு இப்போ நிம்மதியாய் ஏத்துக்கோ. இனியும் அவன் அழுக்கு நெனைப்பிருந்தா அடியோடு துடைச்சிடு!”

“நந்தினி…! எனக்கு இப்போ மனசு சரி இல்லே.”

“ஏய்! அதை ஒரு செய்தியாய் நினை. துக்கமாய் நினைச்சு பாரம் ஏத்தாதே. மறுத்து என்னைக் கோபக்காரி, கொலைக்காரி ஆக்காதே. பொறுக்கி!” – காறி உமிழாத குறையாய் அணைத்தாள்.

‘பொறுக்கி!’ நந்தினியின் கோபம் தாபம். சியாமளாவிற்குள் சுரீரென்று பொரி தட்டியது.

‘ஒருவேளை தன் மேல் உள்ள அதீத பாசம், நேசம். உயிரைக் கொடுப்பான் தோழன். என்பதைப் போல் தோழிக்குத் துரோகம் செய்தவனைத் தொலைத்துக் கட்ட வேண்டும் என்கிற எண்ணம், நோக்கில் இவளால் திட்டமிட்டு செய்யப்பட்டதா அந்த விபத்து?! ‘ – சியாமளாவிற்குள் திகில் பந்து உருண்டது!

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *