காதலில்லா காதல்…!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 129
(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் – 5

பத்தே நாட்களில் மகளின் வாழ்க்கை இப்படி அநியாயமாய்ப் பறிக்கப்படும் என்று ராசகோபாலன் – ராசாத்தி தம்பதிகள் கனவிலும் நினைக்கவில்லை.
பெரிய சோகத்தை உள் இறுத்திக்கொண்டு அந்த மாளிகை எப்போதும் போல் வெளிப்பார்வைக்கு எதையும் காட்டிக் கொள்ளாமல் அழகாகவே இருந்தது.
மாடி அறையில் மகள் இடிந்து உட்கார்ந்திருப்பதைப் பார்க்க கணவன் மனைவிக்குப் பொறுக்க முடியவில்லை.
”நாம யாருக்கு என்ன பாவம் செய்தோம் இப்படி நடக்குது?” புடவைத் தலைப்பில் வாய்ப் பொத்தி ராசாத்தி கணவனிடம் கமறினாள்.
ராசகோபாலனுக்குப் பேசத் தோன்றவில்லை.
“நமக்கு ஏன் பெண்ணைக் குறையாய்க் கொடுத்து, அவள் வாழ்க்கையையும் குறையாய்ப் படைச்சான்?!. அந்த கடவுளுக்குக் கண்ணில்லே! இனி நான் சாகும்வரை கும்பிட மாட்டேன்.” படைத்தவனைச் சபித்தாள்.
“அழாதேம்மா. அவளை நாம தேத்திடலாம். மறுமணம் முடிச்சு அவளை மறுபடியும் சந்தோசமாய் வாழ வைக்கலாம்”. கணவர் அவளை ஆறுதல் படுத்தினார்.
“அழிச்சு அழிச்சு எழுத அவள் வாழ்க்கை என்ன சிலேட்டா?”
“ஏன் சிலேட்டாய் இருக்கக்கூடாது? இப்போ எல்லாம் மாறிப்போச்சு, மாத்தி யோசிக்கனும். அதுதான் காலம்.”
“என்னால முடியலை.”
“கலங்காதே, கவலைப்படாதே. நீயே கலங்கினால் அவளைச் சரி பண்றது கொஞ்சம் கஷ்டம். இந்த காயத்தின் வீரியம் அடங்க கொஞ்ச நாள் ஆகும். அப்புறம் நல்லது கெட்டது சொல்லி சுகாசினி மனசை மாத்துவோம். அவ நம்ம பொண்ணு, நம்ம சொல் கேட்டு நடப்பாள். அப்படித்தானே நடக்கிறாள்!”
ராசாத்தி புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்தாள்.
“போலீஸ் அந்த லாரியைக் கண்டுபிடிச்சாச்சா?” கேட்டாள்.
“அதைக் கண்டு பிடிச்சா என்ன… பிடிக்கலைன்னா என்ன! அது போலீஸ் வேலை. புடிக்கிறதுனால மருமகன் உயிராய் வந்து மகளுக்கு வாழ்க்கையாக் கொடுக்கப் போறான். ஆல்ப ஆயசு. சோசியம், ஜாதகமெல்லாம் பொய்!” மனைவியை ஆதரவாய் அணைத்தார்.
பின் சக்கரங்கள் இரண்டும் முழுவதுமாய் ஏறி… அந்த சடலம் சப்பையாகிக் கிடக்கும் காட்சி கண்களுக்குள் மறையாமல் இம்சைப்படுத்த……தூக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்து எவ்வளவு யோசித்தும் அது விபத்தில்லை என்று சப்-இன்ஸ்பெக்டர் சங்கரின் மனசு ஒரே அடியாய் சத்தியம் செய்தது.
வேலைக்குப் புதுசு. வயசு 25. இளமைத் துடிப்பு. ஆள் நல்ல வாட்டசாட்டம். வேலையில் பழக இன்ஸ்பெக்டர் இளையராஜாவிற்குக் கீழ் வேலை என்பதால் எந்த ஒரு வேலையையும் தன்னிச்சையாய் செய்ய முடியாத தவிப்பு. ஒரு முடிவுடன் தன் காவல் நிலையத்திற்க்கு வந்தான்.
மேசையில் எழுதிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் இளையராஜா, “சங்கர்! அந்த கேசை விபத்துன்னு எழுதி முடிச்சிடுங்க.” தன் முன் அமர்ந்தவனிடம் சொன்னார்.
இளையராஜாவிற்குத் தேவாரம் மீசை. பரந்த முகம். வயசு நாற்பந்தைந்து. முடிகளுக்கு மை.
“லாரி ஆள் பின் பக்கம் வந்து நேரடியாய் மோதி இருக்கு சார். கொலையாய் இருக்குமோன்னு எனக்குச் சந்தேகம்.”
“இல்லே. புது மாப்பிள்ளை ஜோர். மல்லிப் பூ மயக்கத்திலேயே ஆள் பின்னால வந்த லாரியைக் கவனிக்கலை. கைகாட்டியோ, இன்டிகேட்டர் விளக்கு எரியவிட்டோ திரும்பலை. இவன் திரும்பறான்னும் லாரிக்குத் தெரியாது. விளைவு விபத்து. இதை கொலை வழக்காய் பதிவு செய்தால் நமக்கும் கஷ்டம். துப்புத் துலங்க நாயாய்ப் போயாய் அலையனும். நேராய் விபத்துன்னு முடிச்சா நமக்கு வேலை மிச்சம்.”
“முடிக்கலாம் சார். ஆனா… நீங்கள் சொன்ன அத்தனைக் காரணங்களும் உண்மையான்னு இன்னும் விசாரிச்சு முடிக்கலை. விசாரணையில் இது தவறாய் இருந்தால் ஒரு கொலைக்குற்றவாளி தப்புறான்.” சொன்னான்.
“தப்பட்டுமே.! அவன் தப்புறதுல நமக்கென்ன பாதிப்பு?”
“சார்! நாம சட்டம் ஒழுங்கை சரிபடுத்துவர்கள், காவலர்கள்!”
“பொல்லாத சட்டம் ஒழுங்கு. சங்கர்! நான் அனுபவப்பட்டவன். இந்த வழக்கைப் பொறுத்தவரை மேலிட தலையீடு இல்லே. செத்தவனும் அரசாங்கம், அரசியலில் முக்கிய புள்ளி கிடையாது. பாதிக்கப்பட்டவர்களும் வந்து எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கலை. அப்படி இருக்கும்போது விபத்தைக் கொலைன்னு எழுதி ஏன் வீண் வேலையை விலைக்கு வாங்கனும்?!
இப்படி எழுதி நாளைக்கு உண்மையிலேயே விபத்தாய் இருந்து… நாம கண்டுபிடிக்க முழிக்கும்போது மேலிடம் விரட்டும். இல்லேன்னா… வழக்கில் அழுத்தம் இல்லை என்கிற போது அன்னைக்கே விபத்துன்னு முடித்து கோப்புகளை மூடினால் என்னன்னு கோபிக்கும்.”
“அடிச்ச லாரி நிக்காம போய்ட்டான் சார்.” சங்கருக்கு குரல் உள்வாங்கியது.
“பயந்து போயிருக்கலாம்.”
“பயந்தவனாய் இருந்தால் எங்காவது சரணடைஞ்சு இருப்பான் சார். அப்படி இதுவரை யாரும், எங்கேயும் இல்லே.”
“அவன் தன் பொழைப்புக்கும், சிறைக்கும் பயந்து இருக்கலாமில்லையா?”
“இதை விபத்துன்னு முடிச்சா கண்டிப்பா எனக்கு மனசாட்சி உறுத்தும் சார்.”
“சரி. நான் உன் வழிக்கு வர்றேன். இப்போ என்ன செய்யப் போறே?”
“என் மனசாட்சியைச் சரியாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.”
“அதாவது… விசாரிக்கனும், துப்பு துலக்கனும். திறமையைப் பரிசோதித்துப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் வேணும். சரியா?” மனதைப் படம் பிடிப்பவர் போல் பார்த்தார்.
சங்கர் பேசாமல் இருந்தான்.
“தப்பில்லே. இதுக்கு மேல் மறுத்தால் அது நான் உங்க திறமைக்குப் போடுற தடுப்பாய் பழி என் மேல் வரும். இது விபத்தா, கொலையான்னு முடிக்க வேண்டியது உங்க பொறுப்பு.” முடித்தார்.
இந்த வார்த்தை, அனுமதி சங்கருக்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி முகம் பிரகாசித்தது.
“நன்றி சார்.” மகிழ்ச்சியாய் எழுந்து அவருக்குக் கை கொடுத்தான்.
“சங்கர்! ஒரு சந்தேகம்? இறந்த நட்ராஜ் உனக்கு உறவா?”
“இல்லே.”
“அவன் மனைவி?”
“இல்லே.”
“அப்புறம் ஏன் அக்கறை..? ஆனாலும் உன்னுடைய உண்மையான ஆர்வத்தைப் பாராட்டுறேன். அதே சமயம் என் புத்திக்குப்பட்ட சின்ன யோசனையையும் சொல்றேன். தோல்வி வந்தால் துவள வேணாம். உனக்கு எந்த சந்தேகம் வந்தாலும் என்னைக் கேட்கலாம். நான் எந்த நேரமும் உனக்கு உதவத் தயார். நான் உனக்குத் தகப்பன் போல. சரியா?” கை கொடுத்தார்.
எத்தனை இணக்கமான அதிகாரி! சங்கருக்குள் புல்லரித்தது. விடைபெற்று திரும்ப விபத்து நடந்த இடத்திற்கு வந்தான்.
நட்ராஜ் தரையோடு தரையாய் சப்பையாய் இருந்த அந்த இடத்தை ஆராய்ந்தான்.
ஒரு நாள் மழை பெய்து அந்த இடம் கழுவி விடப்பட்டிருந்தாலும்… ரத்தம் இருந்த இடம் தார் சாலையில் இன்னும் கருப்பாக இருந்தது. இருந்த இடத்திலிருந்தே கண்களைச் சுழல விட்டான். இருபக்கமும் வீடுகள் உள்ள நல்ல குடியிருப்புப் பகுதி. அதே சமயம் அதிக நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாத இடம். இங்கு இருப்பவர்களைத் தவிர பிற ஆட்களுக்கு வேலையே இல்லை. அப்படி இருக்கும் போது இங்கு லாரி வரக்காரணம்? வந்தது சாதாரண லாரியா, டிப்பரா? ஆறு சக்கரம், பத்து சக்கர வண்டியா, சுமை ஏற்றி வந்ததா, வெறுமையாக வந்ததா? எங்கு சென்றது, எங்கு இருக்கிறது? உள்ளுக்குள் அலை அலையாய்க் கேள்விகள்.
சங்கருக்குப் பின்னால் ஒரு முதியவர் வந்தார்.
நெருங்கியதும், “நீங்க இந்த தெருவா சார்?” விசாரித்தான்.
“ஆமாம் சார். அதுதான் வீடு.” அருகில் கை காட்டினார்.
“விபத்து…. டிப்பரா, லாரியா ?”
“தெரியாதுங்களே…!”
“விபத்து நடந்த பக்கத்தில்தானே வீடு. பார்க்கலையா…?”
“பார்க்கலையே! வாசல்ல ஒருத்தி, “ஐயோ விபத்து! ஓடிவாங்க ஒடி வாங்க” கூவினாள். பதறி ஓடி வந்து அடிபட்டுக்கிடந்த ஆளைத்தான் பார்த்தோம். லாரியைக் காணோம், போயிடுச்சு.”
“யார் கூவினா?”
“கோமளம்.”
“எந்த வீடு…?”
“நாப்பது.”
சென்றான்.
விபத்து நடந்த இடத்திற்கும் அந்த வீட்டிற்கும் பதினைந்து அடி தூரம்.
கதவு சாத்தி இருந்தது. அழைப்பு மணி அழுத்த… கதவைத் திறந்தார் ஐம்பது.
“சார்! கோமளம்?”
“என் மனைவிதான்.”
“விபத்தைப் பத்தி விசாரிக்கனும்.”
பின்னால் திரும்பி பெயரைச் சொல்லி ஏலம் போட்டார்.
“இதோ வந்துட்டேன்!” என்று வெளியே வந்தவளுக்குப் போலீசைப் பார்த்ததில் மிரட்சி.
“பயப்படாதே. நீ பார்த்ததைச் சொல்லு.” – கணவர்.
“அன்னைக்கு அந்த ஆளை அடிச்சுப் போட்டது லாரியாம்மா?”
“ஆமாம் சார்.”
“கண்ணாலப் பார்த்தீங்களா?”
“அடிபட்டதைப் பார்க்கலை. ஆனா அடிச்சுப் போட்டுப் போன லாரியைப் பார்த்தேன்.”
“சரியாய்ச் சொல்லுங்கம்மா?!”
“நான் வீட்டுக்குள்ளே இருந்தேன். வெளியே டமார்ன்னு ஒரு வித்தியாசமான சத்தம். கதவைத் திறந்து வந்து பார்த்தேன். அங்கே அவர் சத்தம், துடிப்பு ஏதுமில்லே தரையோட தரையாய் ரத்தமாய்க் கிடந்தார். அவர் மோட்டார் வண்டி சாக்கடை ஓரம் கிடந்தது. லாரி தூரக்கப் போய்ச்சு வேற ஆள் நடமாட்டம் வாகன நடமாட்டம் எதுவும் கிடையாது. கத்தி கூச்சல் போட்டதும் அக்கம் பக்கம் எல்லாரும் வந்துட்டாங்க. லாரி அங்கன திரும்பி மறைஞ்சிடுச்சு.”
“டிப்பரா?”
“சாதாரண லாரி.”
“நம்பரைக் கவனிச்சீங்களா?”
“ஒரு செகண்ட்ல இதையும் அதையும் பார்த்ததினால நம்பரைப் பார்க்கலை. ரத்தம் பார்த்த பதற்றம் வேற கவனிக்கலை. “
“யார் மேல தப்பு….? “
“தெரியலை. ஆனா அந்தப் பையன் அதோ அந்த திருப்பத்துல திரும்பனும். தினம் அங்கேதான் திரும்பும். கைகாட்டி வந்திருக்கும். இல்லே பின்னால் வந்த லாரியைக் கவனிக்காம திரும்பி இருக்கும். உசுர் போயிடுச்சே சார். அதுவும் புது மாப்பிள்ளையாம்!” சொல்லும்போதே அவளுக்குத் தொண்டையை அடைத்தது.
போலீஸ் இவர்களை விசாரிப்பது பார்த்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆட்கள் வந்து பத்து பதினைந்து தலைகள் சேர்ந்தது.
“எங்களுக்கு யார் தகவல் தெரிவிச்சது?”
”நான் சார்!” முப்பது வயது இளைஞன் முன்னால் வந்து முன்மொழிந்தான்.
“இங்கே வாகன போக்குவரத்து எப்படி?”
“இங்கே சைக்கிள், டூ வீலர், ஆட்டோ, வாடகைக்கார்களைத் தவிர… லாரிக்கு வேலையே இல்லே.”
“அக்கம் பக்கம் ஏதாவது கட்டுமானப்பணி நடக்குதா?”
“எங்களுக்குத் தெரிஞ்சு இல்லே.”
“யாராவது வீட்டைக் காலி பண்ணிப் போனாங்களா?”
“தெரியலை?!…”
“புதுசா குடி வந்தவர்கள் சாமான்கள் இறக்கிப் போய் இருக்குமா?”
“அப்படி இங்கே யாரும் குடி வந்ததாவும் தெரியலை. காலி செய்தும் போகலை.”
“இந்தத் தெருவைத் தாண்டி… சுத்துவட்டாரம்?”
“நீங்கதான் விசாரிக்கனும்” ஒருத்தர் சொல்ல… ஒவ்வொருவராக கலைந்தார்கள்.
சங்கர் தன் வண்டியை உயிர்ப்பித்தான்.
அத்தியாயம் – 6
ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எங்கும் செங்கல், ஒன்றரை, முக்கால் கருங்கல் ஜல்லிகள், மணல் ஏதும் கொட்டிக்கிடக்கவில்லை. புது கட்டுமானப்பணி இடித்து புதுப்பிக்கும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை.
தெருத் தெருவாக விசாரித்தும் யாரும் புதிதாக வாடகைக்கு வரவும் இல்லை. காலி செய்து போகவும் இல்லை. லாரி யாருக்காகவும் எதற்காகவும் வரவில்லை. வரவேண்டிய அவசியமில்லை. என்பதே சங்கரன் சந்தேகத்திற்குப் போதுமான ஆதாரமாக இருந்தாலும்….
வாகனங்கள் எங்கும் எப்படியும் வரக்கூடாது என்கிற சட்டம் இல்லை. வண்டி எதற்கோ வந்து சென்றிருக்கலாம். எதையாவது ஏற்றி இந்த வழியாக வேறு இடத்திற்குப் போயிருக்கலாம். பலகீனமாகவும் இருந்தது.
அடுத்த விசாரணை? மனசுக்குள் நட்ராஜ் வீட்டு அழைப்பு மணி அழுத்தினான்.
கேள்வி எழும்ப…
அவன் அப்பா அன்புநாதன் பத்துநாள் தாடி பிள்ளை இழந்த சோகத்தில் வெளியே வந்தார்.
காக்கி உடுப்பைப் பார்த்ததும், “வாங்க சார்!” உள்ளே திரும்பினார்.
சின்ன வீடு. ஒரு ஹால், இரண்டு படுக்கை அறைகள். நட்ராஜ் அம்மா கட்டிலில் சுருண்டிருந்தவள் எழுந்தாள்.
“வேணாம்மா உட்காருங்க.” அவள் எதிரில் அமர்ந்தான். மனைவிக்கு அருகில் கணவன் அமர்ந்தார்.
இருவர் கண்களிலும் கருவளையங்கள். துக்கம், சரியான சாப்பாடு கவனிப்பாரில்லாததால் உடல் இளைத்து வற்றி… சங்கரனுக்கு விசாரிக்கவே மனசு இல்லை.
“சார்! நட்ராஜ்க்கு எதிரிங்க யாராவது…?”
“இல்லே சார்.” அன்புநாதன் குரல் விரக்தியாக வந்தது.
“உங்களுக்கு?”
“இந்த வயசிலேயா?! அதெல்லாம் முடிஞ்சுப் போச்சு.”
“அதில்லேய்யா. கொடுக்கல் வாங்கல்…. அப்படி….”
“நீங்க வேற. அஞ்சுப் பொண்ணைப் பெத்து அரசனும் ஆண்டியாய்… நாங்க கடமையெல்லாம் முடிச்சுட்டு பையன் சம்பாத்தியத்துல வாழ்றோம். ஐயா! இது வாடகை வீடு. பொண்ணும் பொறந்தகம் போயிடுச்சு. இனி அதுக்கு அங்கே தான் இருப்பிடம். அதுதான் அதுக்கு சரியான இடம். நாங்க பையன் காரியத்தை முடிச்சிட்டு…. பழையபடி நாங்க கிராமத்துக்குப் போய்தானாகனும். எங்ககிட்ட காசாவது, பணமாவது. கொடுக்கல் வாங்கலாவது?” – அன்புநாதன் குரலில் வாழ்க்கையே சூன்யமாகி சோகம்.
அவர் மனைவி பேசாமலேயே கண்ணீர் வடித்தாள்.
“அலுவலகத்துல நண்பர்கள், எதிரிகள்?”
“நண்பர்கள்தான் சொல்லுவான். எதிரிகள் இருக்க வாய்ப்பில்லே.”
“காதல்?”
“அவன் தங்கமானப் பையன்ய்யா.”
“கெட்ட சவகாசம்?”
“எங்களுக்குத் தெரிஞ்சு இல்லே.”
“உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”
“இல்லே.”
“பையனுக்குப் பெரிய இடத்துல திருமணம் முடிச்ச பொறாமை. யாராவது இப்படி செய்திருப்பாங்கன்னு உங்களுக்குத் தோணுதா?”
“இல்லே!”
“ஆக…பையனுக்கு நடந்தது விபத்தாய் இருக்கும்ன்னு நீங்க நம்புறீங்களா?”
“பையனுக்கு விதி முடிஞ்சுடிச்சு. இதைத்தவிர எங்களுக்கு வேற எதுவும் தெரியாது.”
சங்கருக்கு அடுத்து என்ன கேள்வி கேட்பதென்று தெரியவில்லை.
சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு, “வர்றேம்மா, வர்றேன் சார்.” எழுந்து வெளியே வந்தான்.
அடுத்த விசாரணை?…
கிழக்குக் கடற்கரைச் சாலையில் வண்டி பிரயாணித்தது. தங்க கடற்கரையைத் தாண்டி வரிசையாக வளைத்துப் போட்ட இடங்கள், வீடுகள்.
கோவளம் நெருக்கத்தில் பத்து ஏக்கர் இடத்தில் நடுவில் பிரமாண்டமாக இருந்தது அந்த மாளிகை. எதிரே கொரியன் புற்கள். வகை வகையான குரோட்டன்ஸ்கள், செம்பருத்திகள், மஞ்சள்பட்டி பூவகைகள்.
வேட்டியை மடித்துக் கட்டி தலையில் முண்டாசு, கையில் மண்வெட்டியுடன் தோட்டக்காரன் எதையோக் கொத்தி குழாய் வழியே செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான்.
போர்டிகோவில் ஒரு வெளிநாட்டு பி.எம்.டபிள்யு அடுத்து இரண்டு இந்திய தயாரிப்பு கார்கள் நின்றன.
காவலாளி கூண்டில் காவலாளி.
‘இவ்வளவு பெரிய பணக்காரன் ஒரு சாதாரண ஆளை எப்படி மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தான்? சிக்கல் எங்கே?’ – சங்கருக்குள் ஓடியது.
வண்டி நிற்கும் சத்தம் கேட்டு கூண்டுக்குள்ளிலிருந்து காவலாளி எட்டிப் பார்த்தான்.
“சார் இருக்காரா ?
சப்-இன்ஸ்பெக்டர் உடையைப் பார்த்ததும், “இருக்கார் சார்!” உண்மையைச் சொல்லி கதவைத் திறந்து விட்டான்.
ஹீரோ ஹோண்டாவை போர்டிகோவில் நிறுத்தி வாசல் ஏற…. அங்கொரு வேட்டிக்கட்டிய வேலை ஆள்.
“ஐயா இருக்காங்க போங்க.” அவனாகவே விலகி வழிவிட்டான். செல்லும் பாதை காட்டினான்.
பெரிய ஹாலில் சோபா ஒன்றில் இருந்த ராசகோபாலன் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து அதிர்ச்சி அடையவில்லை. காவலாளி இன்னார் வருகிறார் என்று போனில் சொல்லி இருப்பான் போல.
“உட்காருங்க….” எதிர் சோபாவைக் காட்டினார்.
அமர்ந்தான். உள்ளே ஆள் நடமாட்டமில்லாத அமைதி.
“வீட்ல யாரும் இல்லையா?”
“மனைவி, சுகாசினி உள்ளே இருக்காங்க.”
“சா…ர் ! நடந்தது பத்தி விசாரிக்க வேண்டியது எங்க பொறுப்பு.”
“கேளுங்க?”
“உங்களுக்கு யாராவது எதிரிங்க?”
“இல்லே.”
“தொழில் வழியே போட்டி, பொறாமை?”
“கெடையாது.”
“வேற…. நீங்க யாரையாவது சந்தேகப்படுறீங்களா?”
“இல்லே.”
“மா…ப்பிள்ளை?”
“பெண்ணுக்குச் செவ்வாய் தோசம். தேடித் தேடிப் பார்த்தோம். கடைசியாய் இவர்தான் கிடைச்சார். என் பெண்ணுக்கு வாழக் கொடுத்து வைக்கலை. செவ்வாய்த் தோசம்ன்னு ஜாதகம் சொன்ன சோசியருக்கு மாப்பிள்ளைக்கு அல்ப ஆயுசுன்னு சொல்லத் தெரியலை. விதி கண்ணை மறைச்சிடுச்சிப் போலிருக்கு” கரகரத்தார்.
சங்கரனுக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.
“ஒன்னே ஒன்னுன்னு அருமை பெருமையாய் வளர்த்தோம். கறிவேப்பிள்ளைக் கொத்தைப் போல் காலங்கடந்து ஒன்னைக் கொடுத்தாலும் குறையாய்க் கொடுத்திருக்கானேன்னு எனக்கும் என் மனைவிக்கும் ஏகப்பட்ட வருத்தம். அதிலும் செவ்வாய் தோஷம் என்கிற குறை. இருந்தாலென்ன ஏழையாய் இருந்தாலும் என் பணத்தால பணக்காரனாய் ஆக்கிடலாம், பெண்ணை வாழ வைச்சிடலாம் என்கிற தைரியம். அப்படித்தான் நடத்தினேன். நாமொன்னு நினைக்க தெய்வம் ஒன்னு நெனைச்சிருக்கு.”
“சுகாசினி என்ன படிச்சிருக்காங்க?”
“எம்.பி.ஏ. எனக்கு உதவியாய் பின்னால கம்பெனியைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு இவளுக்குத்தானே அதனால அந்தப் படிப்பு படிக்க வைச்சேன்.”
“எங்கே படிச்சாங்க?”
கல்லூரியைச் சொன்னார்.
“வருசம்?”
“போன வருசம் முடிச்சா.”
“காதல்?.. படிப்பு சம்பந்தமா போட்டி பொறாமை?”
“ஏதுவும் கெடையாது. இவள் வைரம் சார். கார்ல போவாள், வருவாள். மாடியில் அறை. அடைவாள். அதுல எல்லா வசதியும் இருக்கு. மகாராணிக்கு சாப்பாடுகூட அங்கேதான் எடுத்துப் போகனும். என் வீட்ல இப்படி ஒரு பெண்ணிருக்காள்ன்னே வெளியில தெரியாது. அப்படியொரு அடக்கம். அநாவசிய வெளிப்பழக்கம், அரட்டை எதுவும் கிடையாது.”
“தான் மாற்றுத் திறனாளி என்கிற தாழ்வு மனப்பான்மை அவுங்க மனசுல இருக்கா…?”
“இருக்க வாய்ப்பில்லே. ஆரம்பத்திலேயே தைரியம் சொல்லி சொல்லி துடைச்சாச்சு.”
“நீங்க மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிச்சீங்களா?” நட்ராஜைப் பற்றி இங்கிருந்து ஏதாவது விசயம் கிடைக்குமா என்று நப்பாசையில் கேட்டான்.
“துப்புரவா விசாரிச்சாச்சு. அவர் வந்து சுகாசினியைப் பார்த்து மனப்பூர்வமாய் சம்மதம் சொன்ன பிறகுதான் நாங்க அவுங்க வீட்டுக்குப் போய் முறையாய் நிச்சயம் முடிச்சோம்.”
“அப்படியா?”
“என் பெண் கால் ஊனம் நொண்டி முடம்னு ஒதுக்கின கம்மனாட்டிகள் முகத்துல கரிபூசவே திருமணத்தை ரொம்ப தடபுடலாய் முடிச்சேன். எல்லாம் வீண்.”
”நான் சுகாசினியையும் கொஞ்சம் விசாரிக்கனும்.”
“தாராளமாய்.” எழுந்தார்.
ஒரு வேலையாள் சங்கருக்கு மட்டும் ஒரு கப் அண்ட் சாசரில் காபி கொண்டு வந்து நீட்டினான். பின்னாலேயே ராசகோபாலனின் மனைவி வந்தாள். மறுப்பு சொல்லாமல் வாங்கி குடித்து விட்டு அவளும் சேர்ந்து மூவரும் படியேறினார்கள்.
மாடி ரொம்ப விசாலம். அதில் அவள் அறை ரொம்ப பெரிசு. அறைக்குள் அறை. கட்டில் மெத்தை லெட்ரீன் பாத்ரூம். எல்.சி.டி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், சாய்வு நாற்காலி… இத்யாதிகள்.
தொலைக்காட்சியில் ஏதோ சினிமாப் பாடல் பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் சோகம், இறுக்கம்.
அம்மா, அப்பா, சங்கர் வந்தும் அவள் இறுக்கம் மாறவில்லை. யாரோடும் பேசவில்லை.
“சார்! நான் கொஞ்சம் தனியா பேசனும்.” சங்கர் பெற்றவர்களைத் தயவாய்ப் பார்த்தான்.
ராசகோபாலன், ராசாத்தி அறையைவிட்டு வெளியேறி வாசலுக்குச் சென்றார்கள்.
இவர்கள் இருவர் கண்படவே மிச்சமாய் இருந்த அந்த விசாலமான இடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தார்கள்
”சுகாசினி! உங்க ஒரு வாரத்து தேனிலவு, பத்து நாள் வாழ்க்கையில மனசு விட்டு ஏதும் பேசி இருக்க முடியாது. அப்படி பேசி இருந்தா என்கிட்ட மறைக்காம சொல்லும்மா.”
“ஒன்னும் இல்லே சார்.”
“நட்ராஜ் தன்னைப் பத்தி ஏதாவது குறை, நிறை சொன்னாரா?”
“இல்லே சார்.”
“நண்பன், காதலி….?”
“யாரைப் பத்தியும் பேசலை சார்.”
“என்ன பேசுனீங்க?”
“யாரைப் பத்தியும் பேசாம, எதைப் பத்தியும் விலாவாரியாய்ச் சிந்திக்காம, பொதுப்படையாய்ப் பேசி சந்தோசமா இருந்தோம்.”
“நட்ராஜ் மரணம் இயற்கையாய் இருக்கும்னு செயற்கையாய் இருக்கும்ன்னு நெனைக்கிறீங்களா?”
“தெரியலையே….!”
“வேற…?”
“நீங்க கண்டுபிடிச்சா சொல்லுங்க? “
“சுகாசினி! எனக்கு உங்க மேல அக்கறை. மரணம் பாதிக்கலாம். அதே சமயம் மறுமணத்தைப் பத்தியும் யோசிக்கலாம்!” சொல்லி எழுந்து வெளியே வந்தான்.
சுகாசினி அவன் முதுகை வெறித்தாள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
