கல்யாண சுந்தரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 2,951 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எத்தனை கோடி மனிதர்கள் இந்த உலகத்திலே!

அத்தனை கோடி மனிதர்களில், ஒரு மனிதரின் முகம் போல் மற்றொருவரின் முகம் இருப்பதில்லை. ஒவ்வொரு மனி தருக்கும் ஒவ்வொரு விதமான முகம். ஒரு மனிதரின் குணம் போல் மற்றொருவரின் குணம் இருப்பதுமில்லை. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையான குணம்.

வாழ்க்கையும் அதே போன்றதுதான். இன்பமயமான வாழ்க்கையானாலும் துன்பம் சூழ்ந்த வாழ்க்கையானாலும் இரண்டும் கலந்த வாழ்க்கையானாலும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மாதிரியான வாழ்க்கை அமைகிறது. அதற்குக் காரணம் விதியா வினைப்பயனா அல்லது வேறு எதுவுமா?

கல்யாணசுந்தரத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் மனத்தில் இதுபோன்ற கேள்விகள் தாம் எழுகின்றன.

கல்யாணசுந்தரம் என்று அவனுக்குப் பெயர் சூட்டும் போது அவனைப் பெற்றவர்கள் என்னென்ன எண்ணியிருப் பார்கள்? அவன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள்?

பெயருக்குப் பொருத்தமாக, உன்னத அழகும் உத்தம குணமும் உள்ளவனாக உயர்ந்த வாழ்க்கை வாழ்வான் என்று கனவு கண்டிருப்பார்கள். பாவம்

இது பெற்றோர்களின் இயல்பு.

கல்யாணசுந்தரத்தின் பெற்றோர் எப்போதோ இந்த உலகத்தை விட்டு போய் விட்டார்கள். போகாதிருந்தால் அவர்கள் தங்கள் மகனுடைய பரிதாப நிலையைப் பார்த்துத் துன்பக் கண்ணீர் வடித்திருப்பார்கள். போய்ச் சேர்ந்தது, அவர் கள் செய்த புண்ணியத்தின் பலன் என்று தான் சொல்ல வேண்டும்.

தங்கள் குழந்தை சீர்கெட்ட வாழ்க்கை வாழ்வதை உலகத்தில் எந்தத் தாய் தந்தையரும் விரும்ப மாட்டார்கள்.

பதினைந்து ஆண்டுகளாக நானும் கல்யாணசுந்தரமும் ஒரே தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். வேலைக்கு வருவதிலும் போவதிலும் அவன் நேரம் தவறுவதே கிடையாது. வேலையிலும் ஒழுங்குமுறை தவற மாட்டான். இது எனக்கு வியப்பாக இருக்கும். ஏனென்றால் அவனைப்போல் தவறான பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள் பெரும்பாலும் வேலைக்குச் சரியாக வராமல், வேலை செய்யுமிடத் திலும் கெட்ட பேர் எடுத்து, வெளியேற்றப்படுவதையே பாரத்திருக்கிறேன்.

அவனுக்குக் கெட்டபேர் வெளியில் மட்டுமே!

எங்கள் அடுக்குமாடி வீட்டுக்குக் கீழே பஸ் நிற்கும் இடத்தில் கல்யாணசுந்தரத்தை எப்போதும் காணலாம்,

அங்குள்ள இருக்கையில் ஊமை போல் அமர்ந்திருப்பான். கண்கள் திறந்திருக்கும் ஆனால், எதிரில் வரும் எதையும் எவரை யும் கவனிக்காமல் கண்களையே இமைக்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பான். அந்த நிலையில் அவனைக் காண்பவர்கள் அவன் ஏதோ பெரிய சிந்தனையில் ஆழ்ந்து போயிருக்கிறான் என்று தான் நினைப்பார்கள், ஆனால்—

கையில் காசில்லாததால் கவலையில் மூழ்கியிருக்கிறான் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அது போன்ற சமயங் களில் நான் கீழே சென்றால் அவனிடம் ஒரு வெள்ளியோ இரண்டு வெள்ளியோ கொடுத்து விட்டு வருவேன்.

வெள்ளி கிடைத்ததும் எழுந்து, பஸ் நிற்குமிடத்துக்கு எதிர்ப்பக்கம் சென்று விடுவான். அங்கே அந்தக் காலத்தில் கட்டிய கடைகளும் வீடுகளும் உள்ளன. இன்னும் இடிக்கப்படாத அந்தப் பகுதியில் இன்னும் ஒழிக்கப்படாத சில சங்கதிகளும் இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

கல்யாணசுந்தரம் போன்றவர்கள் அங்கே தான் சொர்க்கத் தைக் காண்பார்களாம்?

அங்குச் சென்று, கையில் இருந்த காசை இழந்துவிட்டுத் திரும்பி வரும்போது அவன் தோற்றமே மாறிப் போயிருக்கும் கண்களில் ரத்தம் கசிவது போல் சிவப்பேறிப் பிதுங்கிக் கொண் டிருக்கும். கால்கள் தள்ளாடும். முறிந்து தொங்கும் மரக்கிளைகள் காற்றில் ஆடுவது போல் இங்குமங்குமாக வீசிக் கொண்டு விழுந்தும் எழுந்தும் தடுமாறுவான். அதே பஸ் நிற்குமிடத்தில் நின்று தனக்குள் என்னென்னவோ புலம்பிக் கொண்டிருப்பான்.

சம்சு என்னும் கள்ளச்சாராயம் செய்யும் அலங்கோலம் அது!

மாதம் முடிந்து சம்பளம் வாங்கியதும் என்னிடம் வாங்கிய வெள்ளியைக் கணக்குப் பார்த்துக் கொடுத்து விடுவான் என்னைத்தவிர வேறு எவரிடமும் அவன் கடன் வாங்கவும் மாட்டான். சம்பளப் பணத்தில் குடிப்பான். பணம் இல்லாத போது என்னிடம் மட்டுமே கடன் வாங்குவான், நானும் அவன் கண்ணில் நென்படாவிட்டால் பஸ் நிற்குமிடத்தில் ‘சிவனே ‘ என்று உட்கார்ந்திருப்பான்.

இது, குடிப்பழக்கம் உள்ள உள்ள மற்றவர்களிலிருந்து அவன் மாறுபட்டவன் என்று ‘எனக்குத் தோன்றியது, எப்படியாவது குடிக்க வேண்டும் என்று தான் மற்றவர்கள் துடிப்பார்கள். வெட்கத்தைவிட்டு யாரிடத்திலும் கடன் கேட்பார்கள். மானத்தை இழந்து கை நீட்டுகிறவர்களும் உள்ளனர். ஆனால் கல்யாண சுந்தரம் அப்படிப்பட்டவன் அல்லன். கையில் காசு இல்லாத போது, காசுக்கு வழியில்லாத போது அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சும்மாயிருக்க முடிகிறது.

அவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்கிறவன் தனது குடிப் பழக்கத்தை ஏன் உதறித் தள்ளிவிடக் கூடாது என்று நான் அடிக்கடி நினைப்பேன். அதை ஒருநாள் அவனிடமும் கேட் டேன், அதற்கு அவன்—

அண்ணே. உலகத்திலே வாழ்க்கைங்கிறது பலவகைகளிலே இருக்கு, அதிலே என்னோட வாழ்க்கை ஒரு விசித்திரமான வாழ்க்கை என்று சிரிந்தான்.

அவனே விசித்திரமான மனிதனாகத் தானே இருக்கிறான்?

ஒருநாள் இரவு ஒரு மணியிருக்கும்.

எங்கள் அடுக்குமாடிக் கட்டடத்துக்குக் கீழே அந்தப் பஸ நிற்கும் இடத்தில் கல்யாணசுந்தரம் புலம்பிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

அன்று எங்களுக்கு சம்பளம் கிடைத்த நாள் அவன் கையில் சம்பளப் பணம் இருக்கும். குடிபோதையில் நிதானமிழந் திருக்கும் அவனிடமிருந்து அதை யாராவது பறித்துச் சென்று விடக்கூடும் என்ற பதற்றம் எனக்கு. எனவே நான் மின் தூக்கு…..அதாவது லிப்டைக்கூட எதிர் பார்க்காமல் படிக்கட் டில் வேகமாக இறங்கி வந்தேன். அதற்குள்—

நான் நினைத்தது நடந்து விட்டது. அவனை யாரோ அடித்துத் தள்ளிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள்.

அவனைத் தூக்கி உட்கார வைத்தேன். அடையாளக் கார்டும் தொழிற்சாலைப் பாஸும் மற்றும் சில காகிதங்களும் அங்குச் சிதறிக்கிடந்தன. அவற்றைப் பொறுக்கிச் சேர்த்து அவன் சட்டைப் பைக்குள் திணித்தேன். நான் பொறுக்கும் போது எடுக்காமல் விட்டுவிட்ட ஒன்றை அந்த நிலையிலும் அவன் எனக்குச் சுட்டிக்காட்டினான், அதை எடுத்த போது நான் திகைத்துப் போய் விட்டேன். அது ஒரு பெண்ணின் புகைப்படம்!

சாலையின் ஓரத்தில் உள்ள விளக்கின் வெளிச்சத்தில் அந்த படத்தை உற்றுக் கவனித்தேன். வெட்டிவிட்ட தலைமுடியும் பருவ அழகைக்காட்டும் மேலாடையும் குட்டைப் பாவாடையுமாக தோற்றமளித்தாள் அப்பெண் யார் இது? என்று கேட்பது போல் அவன் பக்கம் திரும்பினேன். அதற்குள், அவனே என் பக்கத்தில் வந்து தள்ளாடியபடி நின்றான்.

இத்தனை ஆண்டுகளாக எனக்குத் தெரியாமலிருந்த அவனுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை இன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் அவனைப் பார்த்தேன் அவனோ –

வெடுக் கென்று அந்தப் படத்தை என் கையிலிருந்து தட்டிப் பறித்துத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண் டான். அது படம் என்பது தெரியாமல் தான் என்னை எடுக்கச் சொல்லி விட்டான். அது என் கண்ணில் பட்டதை அவன் கொஞ்சமும் விரும்பவில்லை.

பிறகு என்னை நிமிர்ந்து நோக்கி, இதைப்பத்தி நீ எதுவும் தெரிஞ்சுக்க வேணாம். இது போன பிறவியிலோ இந்த பிறவி யிலோ நான் செய்த பாவமெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து இந்த உருவத்திலே வந்து என்கிட்டே சேர்ந்திருக்கு அவ்வளவு தான் இது நான் மட்டுமே சுமக்க வேண்டிய சுமை இதை இன்னொருத்தர் தெரிஞ்சுக்கிறதினாலே என்னோட சுமை குறையப்போறதில்லை. தயவு செய்து எதையும் கேட்காதே. விட்டுடு என்று சொல்லி விட்டு மெதுவாக நடந்து சென்று அங்குள்ள இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

எனக்கு அவனைப் பார்க்க வேதனையாகவும் இருந்தது. இவ்வளவு காலமாக என்னிடம் தனது வாழ்க்கையின் ஒரு சங்கடமான பகுதியை மறைத்திருக்கிறானே? அவன்? குடி காரர்களிலும் மிகமலிவான தண்ணியைக் குடிக்கும் மிக மலிவான குடிகாரன் ஆன தற்கு இந்த வாழ்க்கைப் பகுதி தான் காரணமா?

நான் அவன் அருகில் சென்று நின்றேன். அவன் எப் போதும் போல எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்,

நான் அவன் அருகில் சென்று நின்றேன். அவன் கண் களில் கண்ணீர் பெருகி வழிந்தது. அது துன்பச்சுமை அவனு டைய நெஞ்சத்தை அழுத்திப் பிழிவதால் கசியும் இரத்தக் கண்ணீராக எனக்குத் தோன்றியது.

என் மனத்தில் சற்று நேரத்துக்கு முன் அவன் மேல் உண்டான வெறுப்பு மறைந்து வேதனை இரட்டிப்பாகியது. அவன் தோள்மீது பரிவோடு கை வைத்து எழுந்திரு கல்யாண சுந்தரம். சம்பளப்பணம் பறிபோயிடுச்சுன்னு போலீசிலே புகார் கொடுத்துட்டு வருவோம் வா. என்று அழைத்தேன் அதற்கு அவன்…

வேணாம் வேணாம். அதை எந்த மனுசனும் என்கிட்டே யிருந்து பறிச்சுக்கிட்டுப் போகலே. போன பிறவியிலோ இந்தப் பிறவியிலோ நான் பட்டகடனுக்காக அது போலீசிலே சொல்லக் கூடிய புகார் இல்லே” என்றான் அமைதியாக.

செய்யக்கூடாத தவறு ஒன்றை செய்துவிட்டு, அது தன்னு டைய போன பிறவியிலோ இந்தப் பிறவியிலோ செய்த பாவத் தின் பலன் என்று எண்ணி எண்ணி வருந்துகிறான் என்பது மட்டும் எனக்கு புரிந்தது. அது என்ன தவறாக இருக்கும்? தன்னையே நொந்து கொள்கிறானே? அந்தத் தவறுக்கும் அவன் சட்டப்பையில் உள்ள பெண்ணின் படத்துக்கும் தொடர்பு இருக்குமா?

அவனைச் சீர்குலைத்துச் சின்னா பின்னப்படுத்திக் கொண்டி ருக்கும் அந்த மர்மத்தைத் தெரிந்து கொண்டால்… அவன் வாழ்க்கையைச் செப்பணிடுவதற்கு முயற்சி செய்யலாமே என்று எனக்குள் சித்தித்தேன்.

மறுநாள் நான் அந்தப் பஸ் நிற்குமிடத்துக்கு எதிர்பக்கம் சம்சு என்னும் கள்ளச்சாராயம் விற்கும் பகுதிக்குச் சென்றேன். அதற்கு முன் அந்த பக்கமே செல்லாத நான் கல்யாணசுந்தரத் தின் மர்ம வாழ்க்கையை ஆராய்வதற்காக முதன் முறையாகச் சென்றேன், சென்று அங்குள்ள ஒரு கோப்பிக் கடையில் அமர்ந்து கொண்டு சுற்றுப்புறங்களை நோட்டம் விட்டேன்.

கல்யாண சுந்தரம் வைத்திருக்கும் புகை படத்தில் உள்ள பெண் ஒருவேளை அந்தப் பகுதியில் இருக்கலாம் என்பது என்எண்ணம்.

அப்போது என்ன வேணும்? என்று கேட்டுக் கொண்டே என் பக்கத்தில் வந்து நின்றாள் ஒருத்தி! அவளை நிமிர்ந்து பார்த்த நான் என் கண்களையே நம்ப முடியாமல் வியப்பில் ஆழ்ந்தேன். நேற்று அந்த படத்தில் கண்ட அவளே அங்கு நின்றாள்!

நடுத்தரவயது! வயதுக்குப் பொருந்தாத அலங்கோல ஆடை கண்களுக்கு கருநீல மையும். உதடுகளுக்குச் சிவப்புச்சாயமும் முகத்துக்கு வெண்ணிறப் பவுடரும் பூசிய விகார அழகு! கழுத் தளவோடு கத்தரித்து விடப்பட்ட குட்டைமுடி எண்ணெய் தடவமால் காற்றிய ஆடிய ஊசலாட்டம் அவளுடைய குணங் களின் ஊசலாட்டமாக இருந்தது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் “என்ன ஒரு மா திரியாப் பார்க்கிறீங்க? என்று பழகியவள் போல் கேட்டு ஒரு மாதிரியாக சிரித்தாள். சிரித்தபோது அவள் கண்களும் ஒரு மாதிரியாகவே மூடி மூடித் திறந்தன. அது ஏதோ ஓர் அர்த்தத்தைக் காட்டும் சைகை போலவே இருந்தது.

கோப்பி வேணும் என்று நான் சொன்னதும் அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

என் மனத்தில் ஒன்றின் பின் ஒன்றாகக் கேள்விக் குறிகள் எழுந்தன. இவளுடைய உருவப்படத்தை எதற்காகக்

கல்யாணசுந்தரம் வைத்துக் கொண்டிருக்கிறான்!

இவளுக்கும் அவனுக்கும் என்ன மாதிரியான தொடர்பு இருக்க முடியும்? அதைப் பற்றி ஏன் ஏதுவும் சொல்ல மறுக் கிறான்? போன பிறவியிலோ இந்த பிறவியிலோ பாவம் செய் தேன் என்கிறான்! கடன் பட்டேன் என்கிறான் அது என்ன பாவம்? என்ன கடன்? வெளியிலே அவன் கெட்டழிவது அந்த பாவத்துக்குத் தண்டனையா? தொழிற்சாலையில் ஒழுங்காக வேலை, செய்வது அந்தக்கடனைத் தீர்ப்பதற்காகவா?

அவள் எனக்குக் கோப்பி கொண்டு வந்து வைத்தபோது கல்யாணசுந்தரத்துக்கும் அவளுக்கும் உள்ள உறவைப்பற்றி மட்டுமாவது விசாரிப்போம் என்று நினைத்தேன் ஆனால், அவள் தோற்றம் அவளுடன் பேசுவதற்கு எனக்கு தைரியம் தரவில்லை.

சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் சாயங்கால நேரம்.

அந்தப் பஸ் நிற்குமிடத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருந்த கூட்டம் கல்யாணசுந்தரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு சிறுவனைத் தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு, குடிபோதையில் ஆடிக் கொண்டிருந்தான்!

சிறுவனுக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். யார் வீட்டுக் குழந்தையோ? சுய நினைவிழந்து தடுமாறும் அவன் அந்த குழந்தையை எதிலாவது மோதிவிட்டால் அல்லது தொப்பென்று கீழே போட்டால் அல்லது அடித்து உதைத்தால் அல்லது கைகால் கழுத்தைப் பிடித்துத் திருகினால் குடி வெறியில் ஏதாவது செய்து விட்டால் விபரீதமாகி விடுமே?

நெஞ்சம் பதறியது.

எங்கள் வீட்டிலிருந்து அந்த நிகழ்ச்சியைப் பார்த்த என் உடனே கீழே இறங்கினேன். அவன் அருகில் நெருங்கி கல்யாணசுந்தரம் என்று அதட்டினேன். தள்ளாட்டத்தை நிறுத்திக் கொண்டு என்ன? என்று கேட்பது போல் என் பக்கம் திரும்பினான்.

அந்தப் பையனைக் கீழே இறக்கிவிடு. அவனை ஒன்னும் செய்துடாதே. ஏதாவது ஆபத்து ஏற்பட்டுட்டா பெத்தவங்க, துடிச்சுப் போயிடுவாங்க. உன்னையும் சும்மா விட மரட்டாங்க, அவனை என் கிட்டே கொடுத்துடு… என்று பதற்றத்தோடு கெஞ்சிக் கேட்டேன் அதற்கு அவன்

ஹெஹ் ஹெஹ் ஹே! என்று பெரிதாகச் சிரித்துவிட்டு ஏதாவதுஆபத்துஏற்பட்டாபெத்தவங்க துடிச்சு போயிடுவாங்களா பெத்தங்க.. யாரு அந்தப் பெத்தவங்க? என்று கேலிக் குரலில் கேட்டுக் கொண்டே சாலையின் நடுப் பகுதிக்குப் போக முயன்றான்.

எங்கிருந்தோ எதற்காகவோ அவ்வழியாக வந்த சிறுவன் இந்த குடிகாரனிடம் சிக்கிக் கொண்டானே: என்ன ஆகப் போகிறானே என்று தவியாய்த் தவித்தேன். சிறுவனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது. ஏதாவது நேர்ந்தால் கல்யாண சுந்தரத்துக்கும் அல்லவா ஆபத்து?

கல்யாணசுத்தரம், இங்கே வந்துடு அங்கே போகாதே, அங்கே போகாதே… அங்கே போகாதே என்று பயத்துடன் கத்தினேன். நான் பயந்ததைப் பார்த்து அவன் கடகட வென்று சிரித்தான். சிரித்துக் கொண்டே அப்போது அவன் சொன்ன வார்த்தைகள் என்னைப் பெரும் திகைப்புக்குள்ளாக்கி விட்டன! அதிர்ச்சியால் சில வினாடிகள் அசந்து போய் நின்றேன் என் மனத்தில் இருந்த கேள்விகளுக்கு அந்த வார்த்தைகள் பதிலாக வந்தன.

பயப்படாதே இந்தக்குழந்தைக்கு எதுவும்நேராது. சொந்ததக் குழந்தைக்குஎந்ததகப்பனாவது ஆபத்து உண்டாக்குவானா?இவன் என்னோட குழந்தைப்பா!இவன் என்னோட குழந்தை! என்னஒரு மாதிரியாப் பார்க்கிறே? இவன் என் மகன் தான் இல்லேன்னா இதோ பாரு… இவனுக்கு. இவ்வளவு விளையாட்டு சாமான்கள், இந்தச் சொக்லேட்டு, ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கிக்கொடுப்பேனோ இன்னும் நம்பிக்கை வரலியா? இந்த மகனுக்காகத்தான் நான் உயிர் வாழ்ந்து கிட்டிருக்கேன்! இவனுக்காகதான் ஒழுங்கா வேலை செய்தால் தானே சேமநிதியிலே நிறையப் பணம் சேரும்?

அவன் குடிமயக்கத்தில் உளறுகிறானா. உண்மையைச் சொல்கிறானா என்று என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை,

அந்தச் சிறுவனைப் பெற்றவர்கள் யாராவது அந்த கூட்டத் தில் நிற்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தேன். நான் தவிப்பதையும், என் உடல் நடுங்குவதையும் அங்குச் சிலர் அனுதாபத்தோடு நோக்கினார்கள். அவர்களையும் என்னையும் பார்த்து மறுபடியும் சிரித்துவிட்டு-

நான் குடிச்சுட்டு .. உளறலே, உண்மையைத் தா ன் சொல்றேன். இவனுக்கு நான் தான் அப்பா! நான் தான் அப்பான்னா… அம்மா யாருன்னு கேட்கிறியா? நான் அடிக்கடி சொல்லுவேனே… போன பிறவியிலோ இந்தப் பிறவிபிலோ பாவம் செய்தேன்னு .. அந்தப் பாவம் செய்தேன்னு …. அந்தப் பாவம்தான் இவனோட அம்மா! அதோ அவளே வர்றாள்! என்று பஸ் நிற்குமிடத்துக்கு எதிர்ப்பக்கம் சுட்டிக்காட்டினான் கல்யாணசுந்தரம். அங்கே-

அவன் சட்டைப் பைக்குள் வைத்திருக்கும் புகைப்படத்தில் உள்ளவள் கோப்பிக்கடையில் நான் கண்ட அவள் பரபரப்போடு ஓடி வந்து கொண்டிருந்தாள்! அது தன் குழந்தை ஆபத்துக்குள் ளாகி விடக்கூடாதே என்ற பரபரப்பு பாசத்துடிப்பு!

அவன் வருவதைப் பார்த்துவிட்டு அவன் பக்கம் திரும்பு வதற்குள் கிரீச் … என்ற பயங்கரச் சத்தம், எது நடக்கக் கூடாது என்று பயந்தேனோ அது கண்மூடித் திறப்பதற்குள் நடந்து விட்டது. ஆம், ஒரு மோட்டார் சைக்கிள் அவனை தோளில் இருந்த சிறுவனோடு தூக்கி எறிந்து விட்டது.

அங்கு நின்றிகுந்த அனைவருமே ஒரு கணம் இதயத் துடிப்பு நின்று விட்டது போல் சிலையாகி விட்டார்கள்.

சில வினாடிகள் மௌனம்.

விபத்து நடந்த இடத்திலேயே கல்யாணசுந்தரத்தின் உயிர் பிரிந்து விட்டது, ஆனால் அவன் கைகளுக்குள் ஆச்சரியப் படும் வகையில் அந்தச் சிறுவன் பத்திரமாக இருந்தான்.

உயிர் தப்பிய அந்தச் சிறுவன் அவனுடைய மகன்தான் என்பதும், மகன் பெயருக்கே தன் சேமநிதியை எழுதி வைத்திருக்கிறான். என்பதும் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பதிவுத் திருமணம் நடந்திருக்கிறது என்பதும் பிறகு எனக்கு ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்தது.

ஆற்றுக்குக் கரைகள் கட்டுகிறார்கள். வாழ்க்கைக்கு வரம்புகள் அமைக்கிறார்கள். உள்ளத்துக்கு ஒழுக்கங்களைப் போதித்கிறார் கள், ஒழுங்கு தவறக் கூடாது என்பதற்காகத்தான் எல்லாம்.

கல்யாணசுந்தரம் ஒழுங்கு தவறியதற்குக் காரணம். அவன் போன பிறவியிலோ இந்தப் பிறவியிலோ செய்த பாவம்தானோ?

எப்படியோ உலகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மாதிரியான வாழ்க்கை அமைகிறது!

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம், சிங்கப்பூர்.

சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம் சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *