கற்றறி மோழை முதலான பொருள்களைச் சம்பாதித்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 113 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் இராயர் தமது மந்திரியாகிய அப்பாச்சியை அழைத்து, “கற்றறி மோழை, கைநட்புச் சேவகன், தாசியிற் சாதி, சாதியிற் றாசி, ஊர்திரிகின்ற நாய், மனிதரிற் கழுதை, சிம்மாசன மேறுகின்ற கடா இவ்வேழும் உன்னாலே சம்பாதிக்கக் கூடுமா?” என்று கேட்டார்.

அதற்கு அப்பாச்சி சம்மதித்து உத்தரவு ஏற்றுக்கொண்டு வேறொரு இராசாவின் பட்டணத்தில் ஒரு பண்டிதரிடத்திலே போய் நாலாயிரம் வராகன் கொடுத்து நான் கேட்கும் சமயத்தில் கொடுவென்று சொல்லிப் பின்பு ஒரு தாசியினிடத்திற்குப்போய், ஒரு இராத்திரிப் படுக்கைக்கு நீ என்ன கேட்பாயென்று கேட்கத் தாசி “ஒரு இராத்திரிக்கு ஆயிரம் வராகன் கொடுக்கவேணும்” என்றாள். 

அதற்கு அப்பாச்சி சம்மதித்துக் கொடுத்துப் படுக்க வீட்டுக்குப் போகும்போது அவளுடனே “நானுன்னைக் கூடினவுடனே இந்தக் கட்டாரியினாலே உன்னைக் குத்திக் கொன்னுபோடுவேன்” என்று சொன்னான். 

அதற்குத் தாசியும் ஆயிரம் வராகனை வாங்கிக் கொண்டு, “என்னுடைய தேகத்தை இந்த இராத்திரியிலே உம்முடைய இஷ்டப்படி செய்யலாம்” என்றாள். 

அப்பாச்சி “எனக்கு இஷ்டமான நாளில் வருவேன்” என்று சொல்லி, அவளிடத்திலேயிருக்கும் நாய்க்குத் தன் கையிலிருந்த பலகாரத்திலே கொஞ்சம் போட்டு, அப்புறம் இராசவீதியிலே போகும்பொழுது, அப்ப இராசாவின் குமாரத்தி அப்பாச்சியைக் கண்டு அவன் அதிரூபவானாக இருக்கையில் அப்பொழுதே தகப்பனிடத்தில்போய், “எனக்கு ஷ்டமான புருஷனை நான் கலியாணம் பண்ணிக்கொள்ள நீர் சம்மதித்தபடி இப்பொழுது நான்கண்ட புருஷனுக்கு என்னைக் கலியாணம் பண்ணிக்கொடும்” என்று சொல்லத் தகப்பன், அப்படியே அப்பாச்சிக்குத் தன் குமாரத்தியைக் கலியாணம் பண்ணிக்கொடுத்தான்.

இராத்திரி படுக்கைக்குப் போனபோது பெண்சாதியொடு, “உன்னோடு கூடினவுடனே இந்தக் கட்டாரியால் குத்திப்போடுவேன்” என்று சொல்ல, அவள் “கூகூ” என்று பயந்து கூவினாள்.

அவள் தகப்பனாகிய இராசா அந்தக் கூச்சலைக் கேட்டுத் தன் குமாரத்தியிடத்திற்கு விசாரிக்க அவள், தன் புருசனாகிய அப்பாச்சி சொன்னதைச் சொல்லினாள். அப்போது இராசா மந்திரியுடனே, “இதற்கென்ன செய்யலாம்?” என்றான். 

அரசன் அப்படியே கொலைசெய்ய அவனுக்கு உத்தரவு கொடுத்தான். அவன் கட்டியிழுத்துக்கொண்டு போகையில் அந்தச் சேவுகர்க்கு அனேக உபசாரம் சொல்லி, “இந்த ராசாவுடனே ஒரு பேச்சு ருசுவிலே பேசவேணும். அதற்குச் சாவகாசம் கொடுங்கள்” என்று கேட்டான். “கூடாது” என்று இழுத்துக்கொண்டு போனார்கள்.

பண்டிதன் வீடண்டையிலே போம்பொழுது அவனை அழைத்து, “என் நாலாயிரம் வராகனையும் கொடு” என்று கேட்க, இவனுக்குச் சிரசாக்கினை வந்ததை அறிந்து அவன், “உன்னைக் கண்டவனார்? உன் வராகனை கண்டவனார்? போ” என்றான்.

அப்பால் தாசி வீட்டண்டையிலே போகும்போது அங்கிருந்த நாய் அப்பாச்சியைப் பார்த்து வீட்டுக்குள்ளே நுழைந்து தாசி காலைச் சுற்றிக் கூவித் தெருவிலே அழைத்துக்கொண்டுவந்தது. அந்தத் தாசி அப்பாச்சியைப் பார்த்து நடந்த வர்த்தமானங்களை விசாரித்து அந்தச் சேவுகர்க்கு இரண்டு நாழிகை வரைக்கும் சொல்லாமல் வைத்திருக்கும்படியாகப் பேர்க்கு நூறு நூறு வராகன் கொடுத்து இராசாவிடத்திற்குப் போய்ச் சொல்லி, “நீங்கள் உத்தரவு கொடுத்தவனை அழைப்பித்து அவன் வாய்ப்பிறப்பு விசாரித்துச் செய்தால் நல்லது” என்றாள்.

அப்படியே இராசா அவனை அழைப்பித்து விசாரிக்குமளவில், “இராயர் அருமையான சில பதார்த்தங்களைச் சம்பாதிக்கும்படி அனுப்பினார். என் அதிர்ஷ்ட்ட வசத்தினாலே உமது பட்டணத்திலே தானே அவைகளெல்லாம் கிடைத்ததுகள். ஆகையால் அந்தச் சமாசாரத்தை இராயரவர்களுக்கு அறிவிக்க உத்தரவு கொடும்” என்று கேட்டான். 

அவ்வரசன், இராயரால் அனுப்பப்பட்டவ னென்றபடியால் அஞ்சி அப்பாச்சிக்கு வெகுமரியாதை செய்து அனுப்பினான். அப்பாச்சி இராயரிடத்துக்குப்போய் நடந்த சேதியெல்லாம் ஆதி அந்தமாகச் சொல்லி, அவ்வரசன் முதலாகிய ஏழுபேரையும் அழைப்பித்து, “இப்பட்டணத்தில் சகலமும் கற்றறிந்தும் என் கையில் வாங்கின பணத்தைச் சமயம் பார்த்து மோசம் செய்தபடியால் கற்றறி மோழையாகும். இந்தத் தாசி வீட்டு நாய் என் கையிலிருந்து ஒரு தரம் கொடுத்த பலகாரம் தின்ற நட்பு மறவாமல் உதவிசெய்தபடியால் கைநட்புச் சேவகனாகும். 

இந்தத் தாசி குலஸ்த்ரீஅல்லாதிருந்தும் ஆபத்திலே என் தலையைக் காத்தபடியினாலே தாசியிற் சாதியாகும். இவ்வரசன் மகள் குலஸ்த்ரீயாக இருந்தும் தலைக்கு ஆக்கினை நேரிடும்படியாகச் செய்தபடியால் சாதியிறாசியாகும். இச்சேவுகர் நான் என்ன சொல்லியும் கேளாமல் லஞ்சம் வாங்கிக்கொண்டு கேட்டபடியால் ஊர் திரிகின்ற நாயாவார். இம்மந்திரி மனுசனாய் இருந்தும் என் வாய்ப்பிறப்பைக் கேளாமல் கொல்லச் சொன்னபடியால் மனிதரிற் கழுதையாகும். இவ்வரசன் பகுத்தறிவில்லாமல் சிம்மாசனத்தின் பேரிலே ஏறியிருக்கிற படியால் சிம்மாசனமேறுகிற கடாவாகும்” என்று சொன்னான். இதுகளைக்கேட்டு இராயர் அதிக சந்தோஷத்தை அடைந்தார். 

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *