கரையெல்லாம் செண்பகப்பூ

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 169 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 17-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் – 19

மருதமுத்து முன்னால் வந்தான். வெள்ளி அவனை நோக்கிச் செல்ல – “ஆம்ட்டுக்கிட்டியா? வாடி!” என்றான். வெள்ளி சடக்கென்று நின்று போனாள். 

“இன்ஸ்பெக்டர் அய்யா, இதாங்க பொண்ணு. ரெண்டு நாளா கண்ணாம்பூச்சி ஆடுதா. மறுபடி ஓடிப் போறதுக்குள்ற புடிச்சுப் போட்டுருங்க. ஏய் மூதேவி. போய் அய்யா காலில வுளு.” 

கல்யாணராமனை முறைத்து, “அய்யா! நீங்க இவ்வளவு பொய் சொல்லியிருக்க வேண்டாம். உங்களைப் போய் நம்பிக்கிட்டு…” 

இன்ஸ்பெக்டர், “மருதமுத்து! கொஞ்சம் இரு. கல்யாணராமன், வாங்க இப்படி கொலை பண்ணவங்களை மறைச்சு வெக்கறது குத்தம்முனு உங்களுக்குத் தெரியாதா? ஏ புள்ள! வா இப்படி” என்றார். 

வெள்ளி கல்யாணராமனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.

“பொம்பளையா இது?” 

“நீலி! பத்ரகாளி!” 

“இந்தக் காரியம் செஞ்சு போட்டு எப்படி ஜங்குனு நிமிர்ந்து நிக்குது பாருங்க! திமுசுக்கட்ட மாதிரி!”

“வெள்ளி, நீ போய் உள்ள இரு. இன்ஸ்பெக்டர், இவளுக்கு ஒண்ணும் தெரியாது. வெகுளி. இவ நிச்சயம் அந்தக் கொலையைச் செய்யலை. பூசாரி பேச்சைக் கேட்டுட்டு, ஏதோ ஒரு சின்னக் கூழாங்கல்லை எடுத்துப் போட்டுட்டு, தான் கொன்னுட்டதா பயந்து தலை மறைவா இருந்திருக்கா. அதான் விஷயம். விசாரிச்சா தீர்மானமாகத் தெரியும்!” 

“இந்தாளு இவளுக்கு ஒடந்தைங்க!” என்றான் மருதமுத்து.

“என்னய்யா சொல்லுத? போட்டன்னா தெரியுமா… ஒளுங்காப் பேசு! அய்யாவை உள்ற இளுக்காதே! உனக்காவத் தான் நான் இந்தப் பாடுபட்டு இந்த அலை அலைஞ்சு காடெல்லாம் கடந்து நடந்து வந்திருக்கன்… விசுவாசங்கெட்டுப் பேசாத!” 

“த! சும்மாரு! போட்டன்னா தெரியுமா. கொன்னு போட்டுட்டு ரண்டு பேரும் கதை வுடுதாங்க!” 

“இன்ஸ்பெக்டர்! மருதமுத்துவை முதல்ல விசாரிக்கணும். அன்னிக்கு ராத்திரி தாம்புக் கயித்தைப் பத்திக் கேளுங்க. அவன் எவ்வளவு உடந்தைன்னு நான் நிரூபிக்கிறேன். கேளுங்க! என்ன மருதமுத்து – தாம்புக்கயிறு ராத்திரி?” 

மருதமுத்து ஆத்திரத்துடன், “கொலைகாரப் பாவி! என்னய்யா சொல்லுதே?” என்று கல்யாணராமனின் கன்னத்தில் புறங்கையால் அடித்தான். திடுக்கிட்ட கல்யாணராமன், “இன்ஸ்பெக்டர்! நீங்க இதையெல்லாம் பார்த்துண்டு நிக்கிறீங்க!” என்றான். கண்கள் கலங்கின. 

“ஏய்! அடிக்காதிங்கடா! அடி உதவாது” என்று சன்னமாகச் சொல்லிவிட்டு வெள்ளியின் புஜத்தைத் தொட்டார். அவள் உதறினாள். “வா புள்ள உள்ள. உன்ன விசாரிக்கணும். பெரிய சாமி, இங்கேயே இரு. கலகம் வரக் கூடாது. அடிக்காதிங்கடா, வாயால பேசுங்க.” 

வெள்ளியை ஏறக்குறைய தள்ளிக் கொண்டு ஜமீன் வீட்டுப் பக்கம் கொண்டு செல்ல, அதைப் பார்த்ததில் கல்யாணராமனுக்கு வயிற்றில் குழம்பியது. ‘வெள்ளி! எதையாவது உளறி வெக்காதே. அவ செத்ததுக்கு நீ காரணமும் இல்லே. உனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை’. 

“போடுறா ஒண்ணு புடனில்.” 

பெரியசாமி பார்த்துக் கொண்டே நிற்க, ஒல்லியாசு ஒருத்தன் கூட்ட தைரியத்தில் கல்யாணராமனை அடிக்க, அடித்த கையைப் பற்றி வளுவாக முறுக்கி விட்டான். ஒல்லி வலியால் ‘அய்யோ’ என்றான். மருதமுத்து “எதுக்குய்யா அடிச்ச? பெரியசாமி, பார்த்துக்க… பாப்பாரப் பய அடிக்கங் காட்டியும் தான் நாங்க அடிக்கறோம்.” 

பெரியசாமி அநியாயமாக, “ஏய்யா! உம்மேல சந்தேவம் இருந்து பிராது இருக்கிற சமயத்தில கையெடுத்து அடிக்கலாமாய்யா? அப்புறம் நடக்கிறதுக்கு நான் எப்படி பொறுப்பாயிற முடியும்?” 

கல்யாணராமனுக்கு உடம்பு பூரா வியர்த்தது. அவர்கள் எட்டுப் பேர். அவனைச் சூழ்ந்து அவன் அருகில் வந்து அவன் மேல் பாய்ந்தார்கள். 

“வேண்டாம், வேண்டாம். அடிக்காதிங்க.” 

ஒரு கை இடுப்பில், ஒரு கை மார்பில், ஒரு உதை முதுகில், ஒரு அறை கன்னத்தில்… எத்தனைதான் சமாளித்துத் தவிர்ப்பது? கீழே விழுந்தால் மிதித்து விடுவார்கள். எதிர்த்தால் அடி பலமாகி விடும். இங்கே உனக்கு நியாயம் கிடைக்காது; ஓடு. மூர்க்கம் அவர்கள் ரத்தத்தில் கொதிக்கிறது. உனக்கு சரண் ஜமீன் வீட்டில்தான்! வயலை நோக்கி ஓடினால் பிடித்து அங்கேயே மிதித்துப் போட்டு விடுவார்கள். ஓடு. 

அடுத்த அடியில் இடறி விழுவதைச் சமாளித்து, தன் சட்டையில் ரத்தம், விண் என்று தாடையில் ஒரு இடி. 

தலையைக் குனிந்து இரண்டு பேரை, திடீர் என்று ஏற்பட்ட அமானுஷ்ய வேட்கையின் பலத்தில், பிரித்துக் கொண்டு ஜமீன் வீட்டை நோக்கி ஓடினான். 

“இன்ஸ்பெக்டர்… இன்ஸ்பெக்டர்… காப்பாத்துங்க!” தன் அறைக் கதவு மூடப்பட்டிருப்பதையும் அவன் வாசலில் இன்ஸ்பெக்டர் சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தான். சமயமில்லாமல் நேராக சினேகலதாவின் அறைக்குள் சென்று கதவை உட்பக்கம் தாளிட்டுக் கொண்டான். துரத்திக் கொண்டு வந்தவர்கள் இன்ஸ்பெக்டரைப் பார்த்து நின்றார்கள். 

“வாடா வெளியில, பொட்டைப் பயலே, கிளிச்சுர்றேன் வா.” 

“இன்ஸ்பெக்டர், உங்க கடமை என்னைக் காப்பாத்தறது. அவங்களை அடிக்க விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது நல்லதில்லை.” 

“யார்யா அடிச்சா உன்னைய?” என்றான் பெரியசாமி.

“வெளில விடுங்க, பாப்பாரப் பயல இங்கேயே தீத்துர்றம்.”

“சே! போங்கடா! போங்கடா! கலவரம் பண்ணாம போங்கடா! நான் பாத்துக்கறேன். மருதமுத்து, நீ போய் அய்யாத்துரையை நமூனா புஸ்தவத்தோட வரச் சொல்லு. பொண்ணு! தொட்டாப்புல அளுவுது… ஏம் புள்ள, ரண்டு நாளாத் தல மறவா இருந்தன்னா பயமாம்…” 

“கொலை செஞ்சாத்தானே பயப்படணும்?” 

“இன்ஸ்பெக்டர்! மருதமுத்துவை நீங்க விடக் கூடாது; கிணத்தில எறங்கி ரெண்டு பேரும் என்ன எடுத்தாங்கன்னு கேளுங்க. எடுத்தது எவ்வளவு பெறும்னு கேளுங்க! சினேகலதா அங்க எதுக்காக வந்தாள்னு எனக்குத் தெளிவாகத் தெரியும். கொஞ்சம் அவகாசம் கொடுங்க. தீர விசாரிச்சு உங்களுக்கு முழுமையா ஒரு விளக்கம் தரேன்.” 

இன்ஸ்பெக்டர் சற்றுத் தயங்கி, “மருதமுத்து, என்னய்யா?” என்றார். 

“உளர்றானுங்க, நான் விவரம் முச்சூடும் சொல்றேன். தனியா வாங்க!” 

‘ஹி இஸ் லையிங்! அவனை நம்பாதிங்க இன்ஸ்பெக்டர். அவனும் இதுக்கு உடந்தை.” 

மருதமுத்து ஒரு கல்லெடுத்து ஜன்னல் மேல் எறிந்து, “வுட்டன்னா பாரு” என்று நாக்கை நீட்டிக் கடித்துக் கொண்டு அவனை அதட்டி விட்டு, “நீங்க வாங்க” என்றான். 

இன்ஸ்பெக்டரும் மருதமுத்துவும் தாழ்வாரத்தில் இறங்கி சினேகிதமாகப் பேசிக் கொண்டு நடந்து செல்ல, எதிரே அறைக்குள் சிறைப்பட்ட வெள்ளி அவனைக் கலவரத்தோடு பார்க்க, “வெளியே வாடா” என்று ஒருவன் வேஷ்டியை அவிழ்த்துப் பட்டை டிராயருடன் அசிங்கமாக நாட்டியம் ஆடிக் காட்ட- கல்யாணராமனுக்கு மற்றொரு பயம் ஏற்பட்டது. இவர்கள் எல்லோருமே சூழ்ச்சி செய்கிறார்கள். நான் சொல்வதை நம்பப் போவதில்லை… 

தூரத்தில் இன்ஸ்பெக்டரும் மருதமுத்துவும் பேசுவதும் தலையாட்டுவதும் தெரிந்தது. பெரியாத்தாளும், வெள்ளியின் தகப்பனும் வருகிறார்கள். 

“வெள்ளிக் கண்ணே! இந்தக் காரியம் செஞ்சுப் போட்டியம்மா?” 

“எம்மாடி எம்மாடி! சீமையில சீரளிஞ்சு, சிறுமைகளாகப் பட்டு… என் பட்டுக் குஞ்சலத்தைப் போட்டு அடைச்சுட்டாகளே. கோட்டாரு வந்து தீர்ப்புச் சொல்லுவாகளா! கூண்டில அடைப்பாகளா?” 

“ஆத்தா, அது நானில்ல ஆத்தா! நானு இல்லிங்கப்பா! நவைங்களுக்காக யாரோ செஞ்சிருக்காங்கப்பா.” 

“ரண்டு பேரையும் தனித்தனி ரூம்புல அடைச்சு வெச்சுருக்காப்பல”. 

“ஆமா ஆத்தா.” 

“பொட்டி வண்டி எப்ப வரும்?” – பெரியாத்தா சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். 

“ராசா மவனே! அடிச்சுப் போட்டிருக்காகளே!” – சுருக்குப் பையிலிருந்து வெற்றிலை போட்டுக் கொண்டு கண்கள் அறை முழுவதும் அலைய ஆர்வத்துடன் “கவலைப்படாதிங்கய்யா! ஒண்ணும் ஆவாது ஒனக்கு. எனக்கு உங்க ரண்டு பேரையும் தெரியும். நீங்க ஒண்ணும் அந்தக் காரியம் செய்யறவங்க இல்ல. ஏதாவது சாட்சிகளா? ரூவா கொடுத்தா வாங்கியாரேன்.” என்றாள். 

“ஒண்ணும் வேண்டாம் பெரியாத்தா.” 

“பொணத்த எரிச்சாகளா?” 

“தெரியாது பெரியாத்தா?” 

“ஆ?” 

“தெரியாது! நீ போயிட்டு அப்புறம் வா.”

“அதுகூட சரித்தான்.” 

கல்யாணராமன் அறைக்குள் சுற்றிலும் பார்த்தான். சினேகலதாவின் அத்தனை சாமான்களும் பத்திரமாக இருந்தன. குறுக்கே கயிறு கட்டி ஹாங்கர்களில் ஜீன்ஸ், சட்டைகள் என்று விதவிதமாகத் தொங்கின. அலமாரியில் அவள் மேக்கப் சாதனங்கள் நிரம்பி வழிந்தன. முகப்பவுடர், க்ரீம்கள், லிப்ஸ்டிக், பல வண்ணப் பொட்டுக்கள், கலங்கல்கள் பச்சை சிவப்பு திரவங்கள். ஒரு சிறிய சாவி. 

சாவி. 

சினேகலதாவின் பெட்டி கட்டிலுக்குக் கீழே இருந்தது. கல்யாணராமனுக்கு சட்டென்று ரத்னாவதியின் டயரி ஞாபகம் வந்தது. அன்றைக்கு சினேகலதா அதை அந்தப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினாள். 

ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். அவர்கள் அங்கங்கே முடிச்சாக நின்றார்கள். பெரியசாமி கைக்குள் பீடி அடக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். பெரியாத்தாளும் அப்பனும் வெள்ளியும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

“பயப்படாதம்மா… டவுன்ல பெரிய வெக்கீல வெச்சுறலாம்.” 

கல்யாணராமன் பெட்டியைத் திறந்தான். புத்தகங்கள், ஒன்றிரண்டு ஸாரிகள். அட! ஒரு போட்டோ ஆல்பம், நிறைய துணிகள். ஃபைல் போல் ஒன்று. எல்லாவற்றுக்கும் அடியில் ரத்னாவதியின் நோட்டுப் புத்தகம். 

அவசரமாகப் புரட்டினான். செண்பகப்பூ அடையாளம் வைத்த அந்தப் பக்கம். “அடையாளம் வெச்சிருக்கன்”. புரட்டினான். “எங்க பாட்டிக்குப் பாட்டி பரம்பரையாகக் கொடுத்த நகைகள்… அழிச்சுப் புதுப்பிச்சு”, படித்தாகி விட்டது மேலும் புரட்டினான். 

“எல்லா நகைகளையும்…” ஆம்; அங்கேதான் விட்டேன். 

“சேர்த்துப் பொட்டியில் அடக்கி ஒரு இடத்தில போட்டுட்டன். அதுக்கான அடையாளம் வெச்சிருக்கன். இதான் அடையாளம். என் நகைகள் எல்லாம் அங்கேயே கிடக்கட்டும். சாமர்த்தியம் உள்ள சனங்கள் எடுக்கட்டும். இந்த மனுசனுக்குப் போகக் கூடாது. என்னை அடிச்சாலும் திட்டினாலும் கொன்னாலும் வெட்டினாலும் தடயந்தர மாட்டேன். எனக்கென்னவோ இன்னும் ரொம்ப நாள் இருக்கமாட்டன்னு தோணுது. என்னை இந்த மனுஷன் அணு அணுவா சாவடிக்கிறான். விசாலாட்சி… முத்தம்மா. என்னைக் கூட்டிக்கிட்டுப் போயிரேன். எதுக்காக இந்த அன்பில்லாத பிரதேசத்தில நான் வாழ்க்கை நடத்தணும்? 

“அய்யா… இந்த சமூகத்தில தங்கப் பிரஜைகளாக யாராவது… யாராவது என் நகைகளைக் கண்டெடுத்தவங்க உண்டு என்றால் அவுங்க அத்தனை நகைகளையும் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்வது ரத்னாவதி அத்தனை நகைகளையும் என்னுடைய பேரில, ரத்னாவதி-பேரில் தர்மகாரியங்களுக்கு செஞ்சு போடறது. 

“இந்தக் குடும்பத்துக்கு இந்த நகைகள் போகவே கூடாது; ஒரு நாளும் கூடாது. அதுக்காகவே நகைகளுக்கு அடையாளம் காட்டற இந்தப் புஸ்தகத்தை யாருக்கும் லேசில கிடைக்காத வகையில் மறைச்சு வெச்சிருக்கன். எங்கேயாவது ஒரு மூணா மனுசன்-வேத்து மனுசன் எப்பவோ இருந்து செத்த ரத்னாவதி- புருசன்கிட்ட ஒரு நா கூட சந்தோசப்படாது உயிரைவிட்ட ரத்னாவுக்காக ஒரு சொட்டுக் கண்ணில தண்ணி விட்டாப் போதுமய்யா! ரத்னாவதி… ரத்னாவதி… ரத்னா… ரத்தம்”. 

அருகில் செங்கல் சிவப்பில் ரத்தக்கறை. 

புத்தகத்தை மூடிவிட்டு யோசித்தான். செண்பகப்பூ அடையாளம். செண்பக மரத்தடியில் இருந்த கிணற்றுக்கு அடையாளம்… 

ரத்னாவதியின் நோட்டுப் புத்தகத்தின் மற்ற பக்கங்கள் காலியாக இருக்க, அவற்றைப் புரட்டுகையில் இதென்ன கடிதம்? 

சென்னை-16 
16-6-78 

டியர் சினேக், 

நம் திட்டத்தின் இரண்டாவது கட்டம் வந்து விட்டது. உடனே புறப்பட்டு வா. ஒரு மாசமாகத் தேடிவிட்டேன். கிடைக்கவில்லை. இப்போது வீட்டில் தங்க, நாட்டுப் பாடல் ரிஸர்ச்சுக்கு ஒரு ஆசாமி வரப் போகிறானாம். காரியம் கெட்டுவிடும். எனவே உடனே புறப்பட்டு வா. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். பெயர்கள்! பெயர்கள்! நீ சின்னவரின் புதல்வி. 

சினேக்! நாம இரண்டு பேரும் இதில் கூட்டு. நோ டபிள் கிராஸிங்… சரக்கு மதிப்பு மிகமிக அதிகம். எனவே… குட்லக்! – சாமி. 

மைகாட். 

கல்யாணராமனுக்கு ரூபாய் நோட்டுக்குள் சிங்கம் போல கொஞ்சம் கொஞ்சம் விளங்க ஆரம்பித்தது. யோசித்தான். “இன்ஸ்பெக்டர்!” என்று கூப்பிட்டான். இன்ஸ்பெக்டரைக் காணோம். எதிரே பெரியசாமி மட்டும் இருந்தான். வெள்ளியின் தகப்பன் பேசிக் கொண்டிருந்தான். அவசரம்! மிக அவசரமாகச் சில காரியங்கள் செய்ய வேண்டும். எனக்கு இப்போது திருநிலம் போக வேண்டும். எப்படி? அதற்கு முன் கிணற்றில் ஒரு தடவை இறங்க வேண்டும். 

சினேகலதாவின் அறையில் அந்தப் பக்கம் ஒரு கதவு இருந்தது. அதைத் திறந்தில் இடப் பக்கத்துத் தாழ்வாரத்தில் கொண்டு விட்டது. அங்கிருந்து கிணறு தெரிந்தது. 

மெதுவாக, சன்னமாக நடந்தான். அவர்கள் ஒருவரும் கவனித்திருக்க மாட்டார்கள். 

செண்பகமரம் ரத்னாவதியின் மௌன அடையாளம். கிணற்றில் பெட்டியுடன் நகைகளைப் போட்டுவிட்டு செண்பகப் பூவை அடையாளம் காட்டிய சின்ன சாமர்த்தியம். கல்யாணராமன் மெதுவாக கால் வைத்துக் கிணற்றின் படிகளில் இறங்கினான். 

திருநிலம் கலெக்டர் ஆபீஸ், பழங்கால சுல்தான் வம்ச கட்டடம் ஒன்றில் இருந்தது. வெயிலுக்குப் பச்சைத் தட்டிகள் அடித்து, ஜன்னல்களில் வெட்டிவேரில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்கள். 

பார்வையாளர்கள் காத்திருந்தார்கள். கதர் உடை, வில்லை சேவகன், வயல் வரப்புகளைத் தாண்டியடித்துக் கொண்டு வந்திருக்கும் களைத்த கல்யாணராமனைச் சற்று பயத்துடன் பார்த்து, “கலெக்டர் இல்லைங்க! பார்க்க முடியாது” என்றான். 

“எப்ப வருவாரு? 

“எனக்குத் தெரியாது.” 

“யாருக்குத் தெரியும்?” 

“பி.ஏ-க்கு.” 

“அவரைப் பார்க்க முடியுமா?” 

“இதென்னடாது ரோதனை. நீங்க போயிட்டு சாயங்… குட்மார்னிங் ஸார்” 

அப்போதுதான் வந்த கலெக்டர் அவன் கிழிந்த உடைகளைப் பார்த்து “யார்யா?” என்றார். 

“ஸார்… நான் மேம்பட்டியில உங்களை சந்திச்சிருக்கேன். பேர் கல்யாணராமன்.” 

“ஓ! கல்யாணராமன். நாட்டுப் பாடல்கள்! அந்தப் பிள்ளைகளை வெச்சுக்கிட்டு… கோரஸ்.” 

“நான்தான் ஸார்.” 

“ஹௌ இஸ் சினேகலதா?”

“ஷி இஸ் டெட்.” 

“ஓ மை காட்! எப்படி…?” 

“அது விஷயமாகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்.”

“உள்ளே வாங்க.” 

கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அத்தனையும் கேட்ட கலெக்டர். “வெரி இன்டரஸ்டிங்” என்றார். 

“இந்த நகையைப் பாருங்க. இந்த மாதிரி நூறு இருக்கு – விதம் விதமா…” என்றான் கல்யாணராமன். 

கலெக்டர் அந்த நகையை வாங்கித் திருப்பித் திருப்பி பார்த்தார். 

“அந்த லெட்டர்லே இருந்து தெரியுது… ரெண்டு பேர் கூட்டு. இதில அவன் முன்னால வந்து நகைகளைத் தேடி யிருக்கான்; கிடைக்கலை. அப்புறம் அவள் வந்திருக்கா – ஜமீன் பேத்தின்னு தன்னைச் சொல்லிண்டு. அவளுக்கு டயரி கிடைச்சு நகைகள் இருக்கிற அடையாளம் கிடைச்சிருக்கு. கண்டு பிடிச்சிருக்கா. மருதமுத்துவோட உதவியோட கிணத்தில இருந்து பெட்டியை ரெண்டு பேரும் எடுத்துப் போட்டிருக்காங்க. அதுக்குள்ளே சினேகலதாவின் கூட்டாளி – இந்தக் கடுதாசியை எழுதினவன் – அவனுக்கு விஷயம் தெரிஞ்சு அவன் ராத்திரி வந்து பங்கு கேட்டிருக்கான். அவ மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். அவளைத் தீர்த்திருக்கலாம்.” 

“ஆமா… கூட்டாளி யாரு?” 

“அது சுலபமா தெரிஞ்சுடும் ஸார். நான் நினைக்கிற மாதிரி நடந்திருந்ததுன்னா அந்தக் கூட்டாளிதான் அந்த நகைப் பெட்டியைத் தற்காலிகமா கிணத்தில் ஒளிச்சு வெச்சிருக்கணும். எனவே இன்னிக்கு அல்லது நாளைக்கு ராத்திரி அந்த நகைகளுக்காக அவன் மறுபடி வருவான்”. 

“ஓ எஸ்!” 

கலெக்டர் டெலிபோனை எடுத்தார். 

“கொஞ்சம் போலீஸ் சூப்ரண்ட்டுக்கு கால் போடுய்யா” 

அத்தியாயம் – 20

சாயங்காலம் நாலு மணிக்கு கிராமத்துக்கு வந்து நேராக ஜமீன் வீட்டுக்குச் சென்றார்கள். யாரையும் காணோம். அறை வாசல் பூட்டியிருந்தது. அறைக்குள் எட்டிப் பார்த்ததில் வெள்ளி தரையில் படுத்திருந்தது தெரிந்தது. தப்பிக்கலாம். ஆனால் தப்பித்து எங்கே போவாள்? கல்யாணராமனுடன் போலீஸ் சூப்பரிண்டெண்டெண்ட் வந்திருந்தார். இளைஞர். புதிதாக போஸ்டிங் ஆனவர் போலும். கல்யாணராமனுடன் அதிகம் பேசவில்லை. வரும் வழியில் ஜீப்பில் விறைப்பாகவே இருந்தார். 

“இதாங்க அந்த வெள்ளி.” 

ஜமீன் வீட்டின் பின்புறத்திலிருந்து “யார்யா அது?” என்று சப்தம் கேட்டது. நடந்தது வருவதின் ‘சரக் சரக்’ கேட்டது. பெரியசாமியும் பெரியாத்தாவும் தென்பட்டார்கள். 

“மர நெருங்கக் காயி” என்ற பெரியாத்தாவின் மடி நிறையப் பெயர் தெரியாத காய்கள் பிதுங்க, பெரியசாமி எதையோ மென்று கொண்டிருந்தவன் சூப்பரிண்டெண்டெண்ட் பார்த்ததும் வெலவெலத்துப் போய்த் திடீரென்று ஓடி வந்து “அய்யா” என்றான். 

“யார்யா நீ?”

“கான்ஸ்டபிளுங்க. 

“யூனிஃபார்ம் எங்கே?” 

“கஞ்சி போடக் குடுத்திருக்கங்க…! ஏ கெளவி! பெரிய தொரை வந்திருக்காரு. கும்பிடு சவமே!” 

“அய்யா கும்பிடறனுங்க. இரும்படிச்சா மாரி இருக்காரு ராசா மவனே! முதல்லே இந்த ரூமைத் திற. அந்தப் பொண்ணை யாரு இப்பிடி அடைச்சு வெச்சது? 

“இன்ஸ்பெட்டருங்க!” என்று பாய்ந்து கதவைத் திறந்தான். “ஓடிப் போய் இன்ஸ்பெக்டரைக் கூட்டியா” கதவைத் திறந்தார் போலீஸ் சூப்பரிண்டெண்டெண்ட். 

“வெள்ளி! என் செல்வமே? எளுந்திரு! என் பவள முத்து! யாரு வந்திருக்காக பாரு! உன்னைய விடுதலை செஞ்சுருவாரு மவன். அடி- நனஞ்ச புழுதியில நட்டுவச்ச தென்னம்புள்ள.” 

“கௌவி! சும்மாருக்கியா… இந்தாம்மா வெள்ளியா உம்பேரு? எழுந்து வா இப்படி!” 

தன் துணியைச் சுருட்டிக் கொண்டு மிரண்ட பார்வையுடன் வெள்ளி வெளியே வந்தாள். முதுகெல்லாம் புழுதி. ரவிக்கை கிழிந்திருந்தது. கன்னத்தில் சிவப்பில் கோடு. வளையல்கள் ஒன்றையும் காணோம். நெற்றிப் பொட்டின்றி, நிரம்பக் கலைந்திருந்தாள். 

“வெள்ளி, பயப்படாதே! நீ ஒண்ணும் செய்யலை. உனக்கு விடுதலை. ஏதாவது சாப்பிட்டியா?” 

“இல்லிங்க” என்று அழ ஆரம்பித்தாள். அவ்வப்போது விசும்பி மூக்கைச் சிந்திப் புடவையில் துடைத்துக் கொண்டு அவர்களை சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு அழுதாள். 

“இதைப் போயா அடைச்சு வெச்சாங்க! சட்! கண்ணைப் பார்த்தாலே குத்தமில்லைன்னு தெரியுதே.” 

“அய்யா, அவரு வந்தாக்க சொல்லிப் போடுங்க.”

“எவரு?” 

“மருதமுத்து, இவளை டிச் பண்ணவன்.”

“என்ன சொல்லணும்?” 

“அய்யா கேட்டாருங்களா?” என்றாள். 

“அய்யா பெரிய போலீஸ் உத்யோகஸ்தரு…” 

“அய்யா! ஒசந்தவங்க நீங்க அந்தாளு வந்தாச் சொல்லிப் போடுங்க. அவரு நெனச்சதெல்லாந் தப்புனு புத்தி சொல்லிப் போடுங்க. எவளையோ நினைச்சுக்கிட்டு மருகி எனக்குச் செஞ்ச பாதகத்துக்கும் துரோகத்துக்கும் அவரு நல்லர் வருத்தம்படும்படியா பல்லில போட்டுச் சொல்லிப் போடுங்க!…”

“சொல்லலாம் சொல்லலாம்… நீ வீட்டுக்குப் போய் ஏதாவது தின்னு.” 

“கிராமத்துக்குள்ளாற போனா கல்லெடுத்துப் போடுவாங்க. நான் இங்கேயே இருக்கனுங்க…” 

“உங்கப்பா எங்கே வெள்ளி?” 

“வெக்கீல அளைச்சார டவுனுக்குப் போயிருக்காரு.”

“இனிமே உனக்கு வக்கீல் வேண்டாம். நீ ஃப்ரீ.” 

வெள்ளி முகத்தைத் துடைத்துக்கொள்ள, “எல்லா சனங்களையும் பகைச்சுக்கிட்டு அந்தக் களுதையோட சாவுகாசம் பண்ணிச் சீரளிஞ்சவம் பேரில அடியம்மாடி உனக்கு இம்புட்டு விசுவாசம்! பொயலை தந்தவரே போதுமய்யா உம்முறவுன்னு விட்டுற வேண்டியது தானே?” என்றாள் பெரியாத்தா. 

“சொல்லு, பெரியாத்தா! புத்தி சொல்லு இவளுக்கு!” அவர்கள் இருவரும் தாழ்வாரத்தில் பேசிக் கொண்டிருக்க, கல்யாணராமனும் போலீஸ் உயர் அதிகாரியும் கிணற்றுக்குச் சென்று எட்டிப் பார்த்தார்கள். 

தண்ணீருக்குள் கல்யாணராமன், “பாருங்க எட்டாவது படி. அதுக்குப் பக்கத்திலே சுவத்திலே ஒரு ரீஸஸ் தெரியுது பாருங்க. பொட்டி அதிலதான் இருக்கு. அத்தனை நகையும் இருக்கு. மொத்த மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும்” என்றான். 

சூப்பரின்டெண்டெண்ட் தலைகீழாக, “அப்படியா?” என்றார். 

கல்லெடுத்துப் போட்டார். இரண்டு பிம்பங்களும் கலைந்து நடுங்கின. “ஒரு இன்வெண்டரி எடுத்து கலெக்டர் கிட்ட ஸ்டேட்மெண்ட் கொடுத்துருங்க. திருநிலம் ட்ரெஷரியில எல்லா நகைகளையும் டெபாஸிட் செய்துரணும்.” 

“நாளைக்குத்தாங்க அதைச் செய்ய முடியும். இன்னி ராத்திரி அந்த ஆளு நகைகளுக்கு வரானான்னு காத்திருக்க வேண்டாம்?” 

“ஆமாம்.” 

இருவரும் மறுபடி வீட்டு முன் பக்கத்திற்கு வர இன்ஸ் பெக்டர் வருவது தெரிந்தது. சற்று தூரத்தில் நின்று சுளீர் என்று சல்யூட் அடித்தார். பெரியசாமி சீருடை அணிந்திருந்தான். 

“எஸ்.எஸ்.கந்தையாதான நீங்க?”

“ஆமா ஸார். முன்னால…” 

“விளாத்திக்குளம், ஞாபகம் இருக்கு… இந்தப் பெண்ணை எதுக்கு டீடெய்ன் பண்ணி வெச்சிங்க?” 

“தலைமறைவா இருந்த கேஸ் ஸார். சந்தேகத்தின் பேரில நிறுத்தி வெச்சம். கிராம அதிகாரிக்குக் கூட பவர்ஸ் உண்டு”

“போலீஸ் இன்ஸ்பெக்டர் டேக் ஓவர் பண்ணப்புறம் கிராம அதிகாரிக்கு ஒண்ரைணாவுக்கு மேல பவர்ஸ் கிடையாது. இந்தப் பொண்ணை ஹாண்டில் பண்ணிங்களா?” 

“இல்லிங்க.” 

“பொய்! பெண்களை மானபங்கம் வராம மத்த பெண்களை வெச்சுக்கிட்டுத்தான் எதுவும் செய்யணும். தெரியாதா உங்களுக்கு? நடந்ததெல்லாம் கேள்விப்பட்டேன். கேஸ் வேற விதமா திரும்புது… பாடி எங்கே? பி.எம். ஆயிடுச்சா?” 

“ஆய்டுச்சுங்க. டவுன் ஆஸ்பத்திரில கெடக்குதுங்க பாடி!”

“புதைக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சிங்களா? மூணு நாளா பாய்ல சுருட்டி வெப்பிங்களா? பெரிய தனக்காரங்களை கூப்பிடுங்க. அவங்கதான் அரேஞ்ச் செய்யணும். யோவ், உம் பேரென்ன?” 

“பெரியசாமி ஸார்.” 

“த பார்! அங்…கே போய் நில்லு” 

அவன் சென்றதும், “இந்தப் பொண்ணு இந்தக் கிளவி ரெண்டையுமே டவுனுக்குக் கூட்டியாந்துருங்க. ஒரு நா, ரெண்டு நா ராத்திரி டவுனில இருக்கட்டும். ஊர்ல இவதான் செஞ்சான்னு கைது பண்ணிட்டுப் போயிருக்கிறதா செய்தி பரப்பிடுங்க. அப்புறம் போலீஸ்காரங்க கேஸை முடிச்சுட்டு ஜமீன் வீட்டைப் பூட்டிக்கிட்டுப் போய்ட்டாங்கன்னு கிராமத்தில் சொல்லிடுங்க, என்ன?” என்றார். 

“எஸ் ஸார்.” 

“கிராமத்தில ஒரு ஆள்தான் இந்தக் கொலையைச் செஞ்சிருக்கான். கொஞ்ச நா முன்னே டேரா போட்டவள். ஜமீன் நகைகளுக்காக வந்து அது கிடைச்சு ஏதோ தகராறு நடந்திருக்கு… கிணத்தில பெரையில ஒளிச்சு வெச்சிருக்கு நகைகள் எல்லாம். ராத்திரி வருவான்னு எதிர்பார்க்கிறேன். நாமளும் இப்ப போய்டறாப்பல போயி ராத்திரி வந்து மறைஞ்சிருந்து புடிச்சாகணும்…” 

“பெரியசாமி!” 

“பெரியசாமிகூட வேண்டாம். நீங்க மட்டும் வந்தாப் போதும். ஏன்னா பெரியசாமியைக்கூட நான் சந்தேகிக்கறேன்… பெரியசாமி, வாய்யா இங்கே! இவுங்க ரெண்டு பேரையும் கூட்டிப் போய் அதோ வரப்பாண்டை ஜீப்பு நிக்குது பாரு – அங்கே கொண்டு போயிடு. அரெஸ்ட் பண்ணப் போறம்”.


ராத்திரி ஒரு மணி. போலீஸ் அதிகாரிகள் இருவரும் அங்கே எங்கேயோ இருளில் இருக்கிறார்கள். கிணற்றுக்கு அருகில்தான். கல்யாணராமன் சற்றுத் தள்ளி அரசமரத்தடியில் பதுங்கியிருந்தான். நிலா புறப்படலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. ரோஷார்ன் சித்திரங்கள் போல அங்கே இங்கே இருள். ஆந்தை சிலேட்டில் ஆணி கீறியது. படபடத் துப் பறந்து போய் தைரியமாகக் கிணற்றின் சுவரில் உட்கார்ந்து காத்திருந்தார்கள். இன்று தெரிந்து விடும் யார் என்று. யார் அது? ‘சாமி!” என்று அந்தக் கடிதத்தில் கையெழுத்திட் டிருந்தவன் இப்போது இன்னும் சற்று நேரத்தில் வருவான். யார் சாமி? சாமி யார்? யார் வந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. தங்கராசு? பூசாரி? பெரியசாமி? பெரியதனக்காரர்? அட சட்! இவர்கள் யாரும் இல்லை. எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் இது சாத்தியம்; இப்போது வரப் போகிறவன் சினேகலதாவைக் கொன்றவன். இருவரும் நகைக்காக வந்திருக்கிறார்கள். முதலில் அவன் வந்து ஜமீன் வீடெல்லாம் தேடிக் கிடைக்காமல் சினேகலதாவுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து, அவளுக்குக் கிடைத்துவிட, கடைசி நிமிஷத்தில் அவள் கூட்டாளியை வெட்டிவிட நினைத்திருக்கலாம். 

யாரோ வருகிறார்கள். மெதுவான, அழுத்தமான நடை, உலர்ந்த இலைகளின் மேல் கால் பதியப் பதிய அவை பொடியாகும் சப்தம். தீர்மானமான, அவசரமில்லாத நடை. 

கல்யாணராமன் மூச்சைப் பிடித்து இழுத்துக் கொண்டான். சுவாச சப்தம் கூடக் கேட்கக் கூடாது. ஓடிப்போய் விடுவான். அவர்கள் இருவரும் எங்கே? இருட்டில் அவன் வடிவம் மென் கறுப்பில் சற்று அதிகக் கறுப்பாக நகர்ந்தது. 

‘சரக் சரக் சரக் சரக்.’ 

‘கிறீச்’ என்று நெருப்புக்குச்சி பற்றவைக்கும் சப்தம் கேட்டது. கல்யாணராமன் மரத்தின் அகலமான மறைப்பிலிருந்து நகர வில்லை. ஜாக்கிரதை… ஜாக்கிரதை! 

மெதுவாக அவ்வுருவம் கிணற்றை நோக்கிச் செல்ல “இன்ஸ்பெக்டர்! எஸ்.பி.ஸார்! நிதானம்! அவசரப்பட்டு விடாதீர்கள்.” 

இப்போது குழப்பமான வடிவமாகத்தான் தெரிந்தான். நெருப்புக்குச்சி மற்றொன்று பற்ற வைத்து, கிணற்றுக்குள் உற்று நோக்குவது தெரிந்தது. நெருப்புக் குச்சி அணைய மற்றொன்று ஏற்றி மெதுவாகக் கிணற்றின் கைப்பிடிச் சுவரின் மேல் ஏறி உள்ளே இறங்குவது தெரிந்தது. மெதுவாக இரண்டு போலீஸ் உருவங்கள் கிணற்றின் சுவரை அணுகுவதும் அவர்கள் காத்திருப்பதும் தெரிந்தது. ஜாக்கிரதை… அவசரம் வேண்டாம்… 

சற்று நேரம்… 

சற்று நேரம்… நிலா சுரத்துப் பெற்றது. மெதுவாக அவன் தலை கிணற்றின் மட்டத்திற்கு மேல வர அவர்கள் இருவரும் பதுங்க, அந்தப் பெட்டி சுவரில் படும் தகர சப்தம் கேட்க… 

அப்புறம் குழப்பமான சில விஷயங்கள் நடந்தன. “விடுங்க! விடுங்க! என்னை விட்டுருங்க! எனக்கு ஒண்ணுந் தெரியாது?” 

“மளுக்” என்று முட்டியில் அடிபடும் சப்தம்.

“அய்யோ!” 

பெட்டி உருளும் சப்தம்… 

அறை விளக்கைப் போட்டு அவனை மூலையில் தள்ளி அவன் தலை மயிரைக் கொத்தாகப் பிடித்து நிமிர்த்தி… “இவனைப் பார்த்திருக்கிங்களா கல்யாணராமன்..?” 

கல்யாணராமன் அவனை நேராகப் பார்த்தான். 

“இவனா? யார் இவன்?” 

“இவனை நான் எங்கோ பார்த்திருக்கேன் ஸார்!”

“எங்கே?” 

“கொஞ்சம் இருங்க… கொஞ்சம் இருங்க. திருவிழாவில… ஏன் ஏன் அதுக்கு முந்தி கூட… இந்த மீசை, கலைந்த தலை… கண்களில் லேசாக மை! ஓ எஸ்!” 

“ஏய்! நீ பயாஸ்கோப்பு பழனியாண்டியில்லே?” 

“ஆம். அவன்தான், ஃபெல்ட் ஹாட், காதில் பூ, கால் சலங்கை,போதும் போதுமான கோட். இவை இல்லாததால் அடையாளம் கண்டுபிடிக்க நேரமாயிற்று.” 

“ஸார், இவன் ஒரு டப்பாவ வெச்சுண்டு ஃபிலிம் போட்டு பயாஸ்கோப்பு காட்டிண்டிருப்பான். கிராமத்தில எல்லாருக்கும் இவனை நல்லாத் தெரியும். முக்கியமா குழந்தைகளுக்கு!” 

“ஏய் – யார்ரா நீ?”

“அதான் சொன்னாரே-பயாஸ்கோப் பழனியாண்டி.”

“அது உன் வேஷம். நிஜமா நீ யாரு?”

“எனக்கு ஒண்ணும் தெரியாது…” 

“தெரியலைன்னா நட்ட நடு ராத்திரியில் கிணத்துக்குள்ள எதுக்கு எறங்கினே? இந்தப் பொட்டி என்னது?” 

“தெரியாது.” 

“சினேகலதாவை என்ன செஞ்சே நீ?” 

“தெரியாது. தெரியாது! அய்யோ!” 

‘பளீர்’ என்று அவன் அடிபட்டது அருகில் இருந்த கல்யாண ராமனுக்கு வலித்தது. 

“எனக்கு ஏதும் தெரியாது. என்னை விட்டுருங்க.” 

“உன் கைரேகையை எடுத்து சுலபமா கண்டுபிடிச்சுறலாம். ரூம் வாசலில் சுவத்தில சும்மா ரத்தத்தில பட்டு அஞ்சு விரலும் கிடைச்சுருக்கு! சொல்லிடு!” 

“நான் ஒண்ணுமே செய்யலை.” 

“மிஸ்டர் கல்யாணராமன்! நீங்க கொஞ்சம் அந்தால போறீங்களா?” 

பழனியாண்டி கண்களில் பயத்துடன், “ஸார் போகாதீங்க! என்னைத் தீர்த்துக் கட்டிடுவாங்க! ப்ளீஸ்!” என்றான். 

“ஒண்ணும் செய்யமாட்டோம்… நீங்க போங்க!”

கல்யாணராமன், “ஏண்டா, அந்தப் பொண்ணைக் கொன்ன போது அது என்ன துடிதுடிச்சிருக்கும்?” என்றான். 

“நான் கொல்லலை! நான் கொல்லலை!” 

“இவனோட வெட்டிப் பேச்சி பேசிக்கிட்டு இருக்காதிங்க. நீஙக போய் கிராமத்தில் போய் எங்கயாவது படுத்திருங்க. விடியறதுக்குள்ள விஷயம் வந்துடும். வாய்யா பயாஸ்கோப்பு ழனியாண்டி! எந்த ஊர் உனக்கு?” 

“மேகலாபுரம்.” 

“மேகலாபுரத்தில எங்கே? எந்தத் தெரு?”

“மேட்டுத் தெரு.” 

“மேட்டுத் தெருன்னு மேகலாபுரத்தில் கிடையவே கிடையாது…” 

கல்யாணராமன் மெதுவாக ஜமீன் வீட்டை விட்டு விலகி நடக்க இப்போது பயம் தெளிந்திருந்தான். கிழக்கே மிக மெலிதாக வெளிச்சம் காட்டத் துவங்கிக் கொண்டிருந்தது. ‘பயாஸ்கோப்பு’ அவ்வப்போது அலறும் சப்தம் விலக, பிரமிப்பில் நடந்தான். பட்சிகள் தத்தம் குரல்களைத் தீட்டிக் கொள்ளத் துவங்கின. குளத்தின் நிழலில் ஜமீன் கட்டடம் லேசாக வடிவெடுக்க, இரண்டு கிணறுகள், காத்தவீரியன், காரைக் குதிரை, அய்யனாரின் ஸில்ஹவுட் தெரிந்தது.பலர் எழுந்து விட்டார்கள். தங்கராசுவின் வீட்டை நோக்கி நடந்தான். 

“தங்கராசு! எனக்குக் கொஞ்சம் தூங்கணும்!”

“வாங்க உள்ளே! விடியப் போறதே…” 

“விடியட்டும்!” 

சின்ன ஜன்னல் வைத்த அறையில் நெற்குதிருக்கு அருகில் கட்டிலில் படுத்திருந்தான். தங்கராசு மின் விசிறியை அமைத்து, “எல்லாம் சௌகரியமா இருக்கா?” என்பதைக் கேட்டு முடிப்பதற்குள் தூங்கிப் போனான். 

“கல்யாணராமன் எளுந்திருங்க! ஆளு ஒப்புக்கிட்டான். சமீந்தாரு வப்பட்டி மவன் அவன்!” 

அத்தியாயம் – 21

மின்விசிறி மெதுவாகச் சுழலச் சுழல கல்யாணராமன் கலெக்டர் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். அருகில் போலீஸ் சூப்பரிண்டெண்டெண்ட், இன்ஸ்பெக்டர், பெரிய தனக்காரர் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். பட்டும் படாததுமாக நாமம் அணிந்த ஒருவர் ஃபைலைக் கொண்டு வந்து சற்று சாய்ந்து கலெக்டருக்கு மட்டும் தெரியும்படி காட்டினார். 

“மொத்த மதிப்பு இன்னிக்கு தேதிக்கு நாலு லட்சத்து சில்லறை” என்றார் கலெக்டர். 

“அடேயப்பா!” என்றார் அய்யாத்துரை. 

“பெண்டன்ட் ஒண்ணே அரை லகரம் பெறும்” என்றார் இடுப்பில் பெல்ட் அணிந்த அந்த கிளார்க். “கலெக்டர் ஆபிசே என்னுடையது” என்றது அவர் பார்வை. 

“அதுல இவருக்குப் பங்கு கிடைக்குமா அய்யங்கார்?”

“ஸார் எழுத்து மூலமா நோட்டீஸ் கொடுத்து ட்ரஷரியில டிபாஸிட் பண்ணிட்டார் இல்லையா? இவருக்குப் பாத்தியதை உண்டு”. 

“எவ்வளவு பாத்தியதை?” 

“ரூல்ஸ் பார்த்துச் சொல்லணும் ஸார்.” 

“பார்த்துச் சொல்லும்.” 

இடுப்பு பெல்ட்டை உயர்த்திக் கொண்டு அலமாரிக்குச் சென்று அழுக்குப் பச்சை நிறத்தில் ஒரு புத்தகத்தைத் தேர்ந் தெடுத்து, பைஃபோகல் அணிந்து கொண்டு அதைப் பிரித்து, பரிசீலித்து, “கண்டெடுத்த பொக்கிஷத்தைக் குறித்த 1878-ம் வருஷத்து ஆக்ட்டுப்படி 1950-ம் வருஷம் மார்ச் மாதம் 24ம் தேதியுள்ள 358-ம் நம்பர் போர்டு நடவடிக்கைக் குறிப்பு களோட படிச்சா…” 

கல்யாணராமன் “ஹோல்ட் இட்! எனக்கு ஒரு பங்கும் வேண்டாம் ஸார். ரத்னாவதியினுடைய நகைகள் அது. அவ விரும்பின மாதிரி…” 

“அப்படிப் பார்த்தா எல்லாம் ஜமீன் குடும்பத்துக்குப் போயாகணும்” என்றார் அய்யங்கார், “இதைப் புதையல்னு எப்படிச் சொல்ல முடியும்?” 

“ரத்னாவதி டயரியில் தெளிவா ‘குடும்பத்தில உள்ளவங்க யாருக்கும் என் நகைகள் போகக்கூடாது. ஏதாவது நல்லதா பொதுக் காரியங்களுக்காகப் போகணும்’னு எழுதியிருக்கா?” 

“என்னய்யா?” என்றார் கெலெக்டர். 

“டயரி எப்படி ‘வில்’லாக முடியும்? ஜமீன் குடும்பத்தில உள்ளவங்க மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில பிராது போட்டுட்டா தகராறாய்டும்!” 

கல்யாணராமன் கலெக்டரைப் பார்த்தான். 

“நகைகள் ரத்னாவதியுடையதுன்னு சொன்னதே அந்த டயரிதானே? கல்யாணராமன், நீங்களே டயரியை வெச்சுக்கங்க. என்னைக் கேட்டா ‘டயரியா? எனக்குத் தெரியாதே! அப்படி ஒண்ணும் கிடையாது’ன்னுட்டா அது சர்க்கார் சொத்தாயிடறது. பணத்தை மேம்பட்டியில பெண்களுக்காக ஒரு ஹைஸ்கூல், ஒரு பொது நூலகம்னு செலவழிச்சுடலாம்.” 

“பஸ் ஸ்டாண்டைக் கூட கொஞ்சம் லாந்திடணும் ஸார்” என்றார் அய்யங்கார். 

“பஸ் ஸ்டாண்டா? முதல்ல மேம்பட்டிக்குப் பஸ் போகப் பாதையில்லே!” 

“நான் மேம்பாலத்து ஸ்டாண்டைச் சொல்றேன், அய்யாத்துரை. அங்க இறங்கித்தான் எங்க ஊருக்குப் போறிங்க?” என்று அதட்டினார் குமாஸ்தா. 

“பொதுவாக ரெண்டு மூணு ப்ராஜக்ட்ஸ் ஸாங்ஷன் வாங்கி ரத்னாவதி பேர்ல செய்துடறேன். என்ன மிஸ்டர் கல்யாணராமன்? 

“அதான் சரி! சம்மதம் ஸார்!” 

“இதில ஒரு கையெழுத்துப் போட்டுர்றேளா?” கல்யாணராமன் கையெழுத்திட, கலெக்டர் திருப்பி, “எப்படிப் புடிச்சிங்க ஹுசேன்!” என்றார். 

சூப்பரிண்டெண்டெண்ட், “இதோ கல்யாணராமன் தான் மூலகாரணம். நல்லா ஹெல்ப் பண்ணாரு. முதல்ல கொஞ்சம் கேஸ் தடம் புரண்டு நம்ம இன்ஸ்பெக்டர் குட்டையைக் குழப்பிட்டாரு…” என்று சிரித்தார்.

“அவன் பேர் என்ன சொன்னீங்க.” 

“சாமிநாதன் பெரிய ஜமீன் துரை ராஜ ராஜா. அவருக்கு ஊருக்கு ஊரு கீப்பு. அதுல ஒருத்திக்குப் பிறந்தவன். மெட்றாஸ்காரன். டிராமால ஸ்டேஜ் லைட்டிங், அப்புறம் பிலிம் ஆர்க்கெஸ்ட்ராவில பேஸ் வாசிக்கிறது. டூரிஸ்ட் பஸ் ஓட்டறதுன்னு பல காரியங்கள் செஞ்சு, ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு…” 

“இங்க வந்து சேர்ந்தானாக்கும்? எப்படி வந்தான்?” 

“அவுங்கம்மா வி.ஏ.செல்லப்பா, டி.பி.ராஜலட்சுமி காலத்தில் நாடக நடிகையாம் – மோகனரங்கம்னு, ப்ருச் வெச்சு போட்டோ காட்டினான். அவளுக்கு ரத்னாவதி யோட நகைகள் பற்றி முழு விவரம் தெரியுமாம். அவற்றைக் கொண்டு வந்து கொடுக்கிறதா சத்தியம் பண்ணிட்டுத்தான் மோகனரங்கத்தை வசப்படுத்தியிருக்கான் ஜமீன்தார். அவதான் சொல்லியிருக்கா. ‘நகைகள் எங்கேயும் போகலை. ஜமீன் வீட்டில்தான் எங்கேயோ இருக்கு. ரத்னாவதி வெறுப்பில எங்கேயோ பொதைச்சோ ஒளிச்சோ வெச்சுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா. நீ போய்த் தேடிப் பார்த்தா புதையல் கிடைக்கும்’னு மகன் கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கா.” 

“அவன் ஆறு மாசம் முந்திலேர்ந்து மேம்பட்டிக்குத் திருவிளாவில பயாஸ்கோப்பு காட்டறவன் மாதிரி வேசம் போட்டுக்கிட்டு வந்து தேடிக்கிட்டே இருந்திருக்கான். ஜமீன் வீட்டில, சுத்துப்புறத்தில…” 

“அந்தப் பொண்ணு? 

“இவனோட கூட்டாளி. கான்வெண்ட் படிப்பை நிறுத்திட்டு ஸினி ஃபீல்டில நுளைஞ்சு அடிபட்ட கேஸு எதுக்கும் துணிஞ்ச கட்டை. அவன் அதைக் கூட்டு சேர்த்துக் கிட்டிருக்கான். ரெண்டு பேரும் மெட்றாஸ்ல வெச்சுப் பேசிட்டு வந்திருக்காங்க. ‘நான் முந்திப் போய் தேடிப் பார்க்கறேன். கிடைக்கலைன்னா நீ வந்து சேரு. ஜமீன் பொண்ணு மாதிரி’ன்னு விவரம் முழுக்கச் சொல்லிக் கொடுத்திருக்கான். இவன் தேடிப்பார்த்து நகை கிடக்கலேன்னப்புறம் அவளைக் கடுதாசி போட்டு வரவளைச்சிருக்கான் ஸார்.’ 

“சரிதான்! கல்யாணராமன் என்ன யோசனை?” 

‘கடுதாசியிலே ‘சொன்னைன்னு போட்டிருந்தான். முதல்ல குழப்பம் ஆய்டுத்து…’ 

“மத்தவங்களுக்கு ஊர் பேரு தெரிய வேண்டாம்னுட்டு…”

“அன்னி ராத்திரி ஒரு அரை மணி முன்னால போயிருந்தா கொலை நடந்திருக்காது ஸார்! பாவம், அந்தப் பொண்ணு.” 

“அவளை அவன் கூடக் கொன்னிருக்க மாட்டான், கல்யாணராமன். ஒருவிதத்திலே அவளோட பேராசை தான் அவ இறந்ததுக்குக் காரணம்.” 

“கெட்டிகாரப் பொண்ணு ஸார். டயரியில இருந்த அடையாளத்தை வெச்சிண்டு நகைகளைக் கிணத்தில போட்டிருக்கணும்னு ஷ்ரூடா ஊகிச்சுட்டா” 

“மருதமுத்துப் பயலை ஒத்தாசைக்கு அளைச்சுக் கிட்டுப் போய் கயிறு பாதாளக்கரண்டி எல்லாம் போட்டு கிணத்துக் குள்ள பாதி இறங்கி, அளஞ்சு பெட்டியை எப்படியோ புரட்டி எடுத்துருச்சு! சூரிங்க அந்தம்மா!” என்றார் அய்யாத்துரை. 

“அந்த மருதமுத்து பெட்டியைப் பார்க்கலையா?” 

“அது ஏதோ குடும்பப் பொட்டின்னு சொல்லியிருக்கா. பெட்டியைத் திறந்து காட்டியிருந்தாக் கூட மருதமுத்து கவனிச்சிருக்க மாட்டான்.” 

“ஏன்?” 

“பொட்டியைக் கிணத்தில இருந்து எடுத்துக் கொடுத்தா, சினேகலதா அவனுக்குக் கொடுக்கப் போறேன்னு சொன்ன பரிசு மேலதான் அவன் நினைப்பெல்லாம் இருந்திருக்கு…” 

“ஓ! ஐஸீ!” என்றார் கலெக்டர். அவர் முகம் சற்றுச் சிவந்தது. “பரிசு தந்தாளா?” 

“தராம? மறு நா ராத்திரி! அதைப் பார்த்துட்டுத் தான் விசனப்பட்டு வெள்ளி… அது வேற கதை” என்று தலையாட்டினான் கல்யாணராமன். 

“மருதமுத்து பொட்டியை எடுத்துக் கொடுத்ததோட சரி?”

“ஆமாம்.” 

“எல்லாம் முதல நாள் ராத்திரி நடந்திருக்கு?” 

“ஆமாம். நடந்து எல்லாத்தையும் சாமிநாதன் அதான் பயாஸ்கோப் பழனியாண்டி, கவனிச்சிருக்கான். மருதமுத்து கிணத்தில் இறங்கறதும், இது நிக்கறதும் அவன் ஒரு பொட்டியை வெளியே எடுக்கறதும், அதை எடுத்துக்கிட்டு ரெண்டு பேரும் ஜமீன் வீட்டை நோக்கிப் போறதையும் பார்த்துட்டான். அவனே மறுநாள் அவனைக்கூப்பிட்டு, “இதபாருய்யா, புதையல் கிடைச்சுருச்சு”ன்னு தானாகவே சொல்லுவாள்னு காத்துக்கிட்டு இருந்திருக்கான். ம்ஹும், அவளா? அத்தனை நகைகளையும் பார்த்து உடனே பேராசை வந்திருச்சு. அவனுக்கு எதுக்குப் பங்கு தரணும்னுட்டு ஒண்ணுமே நடக்காதது போல கம்முனு இருந்துட்டா. மறு நா ராத்திரி இந்தக் கொடை அமர்க்களம் எல்லாம் ஓஞ்சு, அவ தன் ரூமுக்குத் திரும்பிப் போன பிற்பாடு… மருதமுத்து அவளோட இருந்துட்டு விலகின பிற்பாடு – சாமிநாதன் அங்கே போயிருக்கான். ‘என்னம்மா! நேத்து ராத்திரி ரண்டு பேரும் கிணத்தில் இருந்து பொட்டி எடுத்தீங்களே… எங்கே அந்தப் பொட்டி? அதில என்ன இருந்தது’ன்னு கேட்டா, அவ, ‘பொட்டியா? எனக்குத் தெரியாது.நீயே தேடிப் பார்த்துக்க’ங்கறாளாம். ரூம் பூராத் தேடியிருக்கான்; இல்லை. ‘எங்கேயோ ஒளிச்சு வெச்சுருக்கே. எங்கே சொல்லு சொல்லு’ன்னு அதட்டிக் கேட்டிருக்கான். அவ அசையலை. ‘தெரியாது, இல்லவே இல்லை’ன்னு சாதிச்சாளாம். அவன் கோபம் வந்து, ஆள் அம்பது வயசாயிருந் தாலும் நல்ல பலம். புடிச்சுக் கையை நெறிச்சு மடக்கி, மென்னியைப் புடிச்சு அடிச்சுத் திருகி சித்திரவதை பண்ணிக் கேட்டிருக்கான். வலி தாங்காம கடைசியில அதைச் சொல்லிட்டாளாம். ‘ஒரு பொந்துல நகைப்பொட்டி இருக்குது’ன்னு. அவளை உலுக்கித் தள்ளியிருக்கான். பின் மண்டையில, விழற போது எக்கச்சக்கமா மோதி அடிபட்டு பொசுக்குன்னு போயிட்டா. அவன் இதை எதிர்பார்க்கலை. திகைச்சுப் போய்ட்டான். பாடியை என்ன பண்றது? யோசிச்சு கிணத்திலேய போட்டுறலாம்னுட்டு அதைத் தரதரன்னு இளுத்துக்கிட்டுப் போயிருக்கான்… அப்பதான் கல்யாணராமன் அங்க வந்துட்டாரு. உடலை அப்படியே வுட்டுட்டு ஓடிட்டான்!” 

“அப்புறம் கேஸ் திரும்பி, வெள்ளி மேல சந்தேகம். அவளை அரெஸ்ட் பண்ணியிருக்காங்கன்னு செய்தி தெரியவும் தைரியம் வந்து மறு நா இல்லை மறு நா ராத்திரி பொட்டிக்கு வந்திருக்கான்… மாட்டிக் கிட்டான்!” 

“ரொம்ப ஸ்ட்ரேஞ்ச்” என்றார் கலெக்டர் 

“சாபக்கேடு மாதிரி நகைகள்! ரெண்டு மூணு தலை முறைக்குக் காவு வாங்கிடுச்சு, பாத்தீங்களா?” 

“அய்யாத்துரை, ரத்னாவதி குடும்பத்தில அவுங்க பாட்டனுக்குப் பாட்டன், வீடு நெலம் போக்யத்துக்கு வாங்கி ஏமாத்தி ஏமாத்தி பல பேர் வவுத்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு சேத்த சொத்தில பண்ணிப்போட்ட நகைங்கன்னு சொல்லிக்குவாங்க” என்றார். 

சேவகன் ஒரு சீட்டைக் கலெக்டரிடம் கொண்டு வந்து கொடுக்க, “பார்வையாளர் நேரம் வந்துருச்சு. கல்யாணராமன்! அப்ப நிச்சயமா உங்களுக்கு இதில் பங்கு வேண்டாம்” என்றார். 

“நிச்சயமா வேண்டாம் ஸார்!” 

“கொஞ்ச நாள் இருப்பிங்க இல்லே?” 

“ஒரு வாரத்தில திரும்பி மெட்றாஸ் போறேன் ஸார்!”

“ஏன்? நாட்டுப் பாடல் ரிஸர்ச் முடிஞ்சு போச்சா?” 

“அது எங்கே? இப்பதான் ஆரம்பம்னு சொல்லணும். எனக்கு மேம்பட்டியில் தேவையான நாட்டுப் பாட்டு கிடைச்சுது. இன்னும்கூட இருக்கலாம். ஆனா ஞாபகங்கள் என்னைத் துரத்துது. அந்த வீடு, சினேகலதா, வெள்ளி, அனுபவங்கள்… நான் போயிட்டு கொஞ்ச நாள் கழிச்சு மறுபடி வரலாம். அந்த வீட்டை மறக்க முடியாது!” 

இன்ஸ்பெக்டர், “எப்படியும் மிஸ்டர் கல்யாணராமன் கேஸ் நடக்கறப்ப சாட்சி சொல்ல வந்துதான் ஆகணும்!” என்றார். 

“தெரியும்! நான் வரட்டுமா ஸார்? ரொம்ப தாங்க்ஸ்.”

“பெஸ்ட் ஆஃப் லக்! அப்புறம் சந்திக்கலாம்!” 

கல்யாணராமன் கலெக்டருடன் கைகுலுக்கிவிட்டுக் கிளம்பினான். 


திருநிலம் ஸ்டேஷனில் ‘த்ரீ நாட் ஒன்’ இன்னும் வந்து சேரவில்லை. நீலநிற சூட்கேஸ் பிளாட் பாரத்தில் வைக்கப் பட்டிருந்தது. வெயில் கண்ணாடி அணிந்து கொண்டு கல்யாண ராமன் நின்று கொண்டிருந்தான். கழுத்தில் காமிரா மாலை. 

அய்யாத்துரைக்குப் பவுத்திர உபத்திரவம். அதனால் வரவில்லை. 

தங்கராசு வந்திருந்தான். “நீங்க வந்து இருந்ததில எவ்வளவோ சந்தோசம். நடுவிலதான் கொஞ்சம் எச கேடா நேர்ந்து போயி மனத்தாங்கலாயிடுச்சு. எல்லாம் பொம்பளிங்களால… என்ன பெரியாத்தா?” 

பெரியாத்தா வந்திருந்தாள் “ராசா மவனே! என்னையும் கூட்டிப் போயிரேன். நீ போயிட்டியானா எனக்காரு பொயலைக்கும் ஆளாக்கு அரிசிக்கும் மல்லிக் காப்பிக்கும் காசு தரப் போறாக! இந்தச் சிறுக்கி முளுவாம இருக்காளாம்னு பருத்திக் கொட்டை ஆட்டி அஞ்சுகாசும் பத்து காசும் சம்பாரிச் சுக்கிட்டு வந்து வெச்சுக்கன்னு கொடுத்தா, நாதேரி முண்ட பாண்டியன் குதுரை தாண்டுதாம் கடல’ன்னு…” 

“இத பார் கிளம்!… சும்மாரு! அய்யாவுக்கு உங்க வீட்டுக் கவலை எதுக்கு?” 

“அப்படியோ ரத்னாவதியை உரிச்சு வெச்சிருக்குதாம்.”

“பொட்டைக் கிளம்!” 

“இன்னாடா சொல்லுதே? மருதமுத்து?”

“ஓந் தலை!” என்றான். 

மருதமுத்து வந்திருந்தான். “அய்யா! சபையில கொஞ்சம் சின்னத்தனமா நடந்துகிட்டன். ஊர்க் கூட்டத்தில பெரியவங்களை மருவாதையில்லாம பேசிட்டன். என் புத்தி கெட்டுப் போயி மூதேவி சகவாசம் வந்து என் ரெத்தினத்த – என் வெள்ளிய – இளக்க இருந்தேன். கண்ணு திறந்திருச்சு! என்ன மாமா?” 

வெள்ளியின் அப்பா வந்திருந்தார். “அதெல்லாம் போனாப் போவுது மருதமுத்து. கெட்ட கெனா மாதிரி நினைச்சுற வேண்டியதுதான். நேத்து வந்தது ஆத்ல ஊறுனதைக் கலைச்சுற முடியுமா? எனக்கு அப்பவே தெரியும். எளம் ரத்தம். கொஞ்சம் ஆட்டம் ஆடிட்டு கடைசில பெரியவங்ககிட்ட வந்துதான் சேருமுன்னு. சொகுசான ஆளைக்கண்டா நாம போடாத கச்சமா? ஆம்புளன்னு பொறந்துட்டா இதெல்லாம் சாதாரண விசயமாய்டுதுல்ல…? அதுக்காவ போட்ட பரிசத்தைக் கலைச்சுருவாங்களா? இல்லை கலைக்க வுட்றுவாங்களா?” 

வெள்ளி வந்திருந்தாள்; மௌனமாக நிலத்தைப் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். கல்யாணராமனின் மனமெனும் திரைக்குள் சரியான அப்பெர்ச்சர் அமைத்து உன்னதமாகப் பிம்பத்தை தீட்டிச் சிறைப்படுத்திக் கொண்ட கரிய தேவதை. 

“என்ன வெள்ளி! உனக்கு இப்ப சந்தோஷம் தானே?” மௌனம். 

“நீ விரும்பின புருசன் உனக்குக் கிடைக்கப் போறதில் உனக்கு சந்தோஷம்தானே வெள்ளி?” 

மெளனம். 

“வெக்கப்படுதுங்க.” 

“வெள்ளரிக்கா விக்கமாட்டே இனிமே?” 

கீழே பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினாள். உத்ரோட்டத்தில் ஒரு மில்லி செகண்ட் சிரிப்பு. 

“போட்டோ எடுக்கட்டுமா?” 

“ஊஹூம்.” மறுபடி தலையாட்டல். 

“என்னை ஞாபகம் வெச்சுப்பியா?”

“உங்களை மறக்க முடியுங்களா?” 

“இருய்யா! அவ சொல்லட்டும்.” 

தலையை ‘ஆம்’ என்று குனிவு நிமிராமல் ஆட்டினாள்.

“பேச மாட்டியா?” 

மௌனம். 

“ஏ புள்ள! வாயைத் தொறந்து பதில் சொன்னா என்னவாம்? அய்யா கேக்குறாருல்ல…” 

“கைல என்னங்க காயம்?” என்றான். 

“ஒரு பொண்ணு நகத்தால கீறிடுச்சு” என்றான். 

வெள்ளி சட்டென்று நிமிர்ந்து அவன் கையைப் பார்த்தாள். முகத்தைப் பார்த்தாள். கல்யாணராமன் தன் வெயில் கண்ணாடியை நீக்கிவிட்டு அவளை நேராகப் பார்த்தான். அவள் கண்களில் ஈரத்திரை இருந்தது. மெதுவாக, கண்ணீராக மாற, சேமிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. வெள்ளியின் உதடுகள் மெலிதாகத் துடித்தன. ஏதோ சொல்ல விரும்புகிறாள். அவன் பார்வையில் புதுசாக – சரக்கொன்றை மரத்தில் தொங்கின தண்டவாளத்துண்டை நீலச்சட்டை பல தடவை தட்டிவிட்டுப் பின் குறிப்பாக மூன்று தடவை தட்டினான் – ஏதோ ஒரு செய்தி இருப்பதாகப் பட்டது கல்யாணராமனுக்கு. “என்ன சொல்ல விரும்புகிறாய் வெள்ளி?” 

‘அய்யா! நான் உங்களோட நேசத்தை இதுவரை முளுக்க முளுக்க புரிஞ்சுக்காமயே இருந்துட்டனுங்க! இப்ப நீங்க ‘வா’ன்னு ஒரு வார்த்தை கூப்பிடுங்க – எல்லாத்தையும் விட்டு விட்டு வந்துர்றேன்!’ 

‘வெள்ளி! எனக்கும் தைரியமில்லே; உனக்கும் தைரியமில்லே. இப்போதே உன்னை ப்ருதிவிராஜ் தனத்துடன் கவர்ந்து செல்ல எத்தனை ஆசையா இருக்கு தெரியுமா?’ 

தகடக் தகடக் தகடக் தகடக் தகடக் தகடக் 

மிக உயர்ந்த அரேபியக் குதிரையில் வெள்ளியை இடுப்போடு வளைத்துத் தூள் பறந்தான் கல்யாணராமன். 

பாஸஞ்சர் திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது.

“அடுத்த தடவ வர்றபோது வெள்ளி கைல புள்ளையோட பாப்பிக! இன்னாடி வெள்ளி! ராசாவேலு, அதென்னாடாது? கம்மர்கட்டா?” 

முதல் வகுப்புப் பெட்டியில் கல்யாணராமன் ஏறிக் கொண்டான். மருதமுத்து பெட்டியை உள்ளே வைத்து விட்டு, ஸீட்டை தட் தட் என்று தட்டி “மெத்தையெல்லாம் சவுகரியமா வெச்சிருக்காப்பல… லே வெள்ளி, இதப்பாரு புள்ள”. 

“வெள்ளி” 

திரும்பினாள்.

“க்ளிக்.” 

கடைசி ஞாபகத்துக்கு ஒரு போட்டோ. 

“யக்கா! என்னையும் எடுக்கச் சொல்லுக்கா!” 

கார்டு விசில் ஊத- “மருதமுத்து! இறங்கு, இறங்கு!” அவர்கள் பிளாட்பாரத்தில் நிற்க, ரயில் நீராவிக் கக்கலுடன் மெதுவாக நகர – 

‘இப்போது கூட அவளை அப்படியே பற்றியிழுத்துத் தன் பெட்டிக்குள் சேர்த்துக் கொண்டு விடலாம்.’ 

“போய்ட்டு வரேன் தங்கராசு, மருதமுத்து, பெரியாத்தா, ராசவேலு… வெள்ளி…” 

‘சங்கிலியை இழுக்கலாம்.’ 

ரயில் வேகம் பிடிக்க, வெள்ளி நின்று கொண்டே கொஞ்சம் கொஞ்சமாகப் பின் சென்றாள். 

கல்யாணராமனை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

என்ன சொல்ல விரும்பினாள்?

என்ன சொல்ல விரும்பினாள்? 

“முன்னோர்கள் உரைப்படியே 
முடித்து விட்டேன் இக்கதையை
நன்றாகப் படிப்போரும்
நவில்வோரும் வாழியவே.” 

(முற்றும்)

– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *