கருவாச்சி என் இருவாச்சி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 118 
 
 

“புருசம்பொட்டாட்டின்னா என்ற தாத்தா, பாட்டி மாதரி இருக்கோணுமாக்கும். சும்மா தொட்டதுக்கெல்லாம் கோபப்பட்டுட்டு அம்மா வீட்டுக்கு போறதா குடும்ப வாழ்க்கை…? ஆ… ஊ… ன்னா டைவர்ஸ் பண்ணறேன்னு சொல்லறதா புத்திசாலித்தனம்…?” கணவன் வீட்டினரிடம் கோபித்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்திருந்த மகள் சரண்யாவிடம் கவலையுடன் கண்களில் கண்ணீர் பொங்க பேசினார் ராமசாமி.

“உங்க தாத்தா பாட்டியப்பத்தி எப்பப்பாத்தாலும் பெருமையா பேசறீங்களே தவுத்து, எப்படி வாழ்ந்தாங்கன்னு ஒரு நாளாவது சொல்லியிருக்கீங்களா….? இப்ப சொல்லுங்க” என்றாள்.

“காட்டுக்குள்ள இருவாச்சின்னு ஒரு பறவை இனம் இருக்குது. அதுக்கு கூடு கட்டத்தெரியாது. மரத்துல இருக்கிற பொந்துல தான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். பெண் இருவாச்சி மரப்பொந்துல முட்டைகளை வெச்சதுக்கப்புறம் அதனோட இறக்கைகளையெல்லாம் கொத்தி புடுங்கி எடுத்து படுக்கையாக்கிக்கும். முட்டைகள் மேல குஞ்சு பொறிக்கிற வரைக்கும் ரெண்டு மாசத்துக்கும் மேல உடம்பவெச்சு படுத்து அடை காக்கும். பாம்பு தொல்லை வராம இருக்க ஆண் இருவாச்சி பெண் பறவைக்கு தீனி கொடுக்க மட்டும் சின்னதா ஒரு துவாரம் விட்டுட்டு பாக்கி இடமெல்லாம் களிமண்ணுல அடைச்சிடுமாம். ஆண் பறவை பழங்கள், கொட்டைகள், பூச்சி, புழு, பூரான் னு பெண் பறவைக்கு குஞ்சு பொறிக்கிற வரைக்கும் பாசமா கொண்டு போய் சாப்பிடக்கொடுக்குமாம். முட்டைல இருந்து குஞ்சு வெளில வந்ததுக்கப்புறம் அடைப்பை உடைச்சிட்டு குஞ்சுகளோட பெண் பறவை வெளில வருமாம்”

“கேட்கவே ரொம்ப இன்டர்ஸ்டிங்கா இருக்கு….”

“ஆண் பறவைய வேட்டைக்காரர்கள் வேட்டையாட மாட்டாங்களாம். ஆண் பறவை செத்துட்டா பெண் பறவையும், குஞ்சுகளும் செத்துப்போயிரும்னு விட்டிடுவாங்களாம்…” 

“கருவோட இருக்கிற மானை ஒரு சிங்கம் வேட்டையாடாம விட்டிட்டு போன வீடியோவ டிஸ்கவரி சேனல்ல நம்ம வீட்ல சின்ன வயசுல டி.வில பார்த்திருக்கேன். அது மாதிரி இருக்கு… சரி அந்தப்பறவைக்கும் உங்க தாத்தாவுக்கும் என்ன சம்மந்தம்…?”

“என்னோட தாத்தா ஒரு வேட்டைக்காரர். ஆரம்பத்துல சாதாரண, குருவி, முயல்னு வேட்டையாட ஆரம்பிச்சவரு, ஒரு ராத்திரி ஊருக்குள்ள மனுசங்கள வேட்டையாட வந்த சிறுத்தைய முதலா வேட்டையாடியிருக்காரு. அதுக்கப்புறம் அவருக்கு வேட்டைக்கார விருமாண்டி ன்னு பேரு வந்திருச்சு. இதைக்கேள்விப்பட்ட ஜமீன்தாரர் ஒருத்தர் தன்னோட அரண்மனைய மிருகங்கள் கிட்டிருந்து பாதுகாக்க தாத்தாவுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வெச்சிருக்காரு. ராத்திரி காவலுக்கு அரண்மனைக்கு போன தாத்தா, பகல்ல பாங்காட்டுக்குள்ள வேட்டையாட போக ஆரம்பிச்சிட்டாரு. அப்படியே கேரளா எல்லைக்குள்ள போனப்ப அங்கிருந்த இருவாச்சிய அடிக்க அம்பு விடப்போறப்ப அங்கிருந்த மத்த வேட்டைக்காரங்க இந்தப்பறவைய மட்டும் வேட்டையாடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. இவரு ஏன்னு கேட்டிருக்காரு. அப்ப பறவையோட கதைய அவங்க சொல்லியிருக்காங்க. அதுதான் அவரு என்கிட்ட சொன்னத உன் கிட்ட நான் அப்பலயா சொன்னது. அதுக்கப்புறம்….”

“அதுக்கப்புறம்….?”

“அத அப்புறம் சொல்லறேன். அதுக்கு முன்ன ஒன்ன சொல்லீட்டு சொன்னாத்தான் புரியும்…”

“ம்… சொல்லுங்க….”

“அவரோட மாமம் பொண்ணத்தான் கட்டோணும்னு அவரோட அம்மா புடிவாதத்தால பாட்டி வீராயிய கல்யாணம் பண்ணிகிட்டாரு. தன் மனைவி கருப்பா இருக்கிறது இவருக்கு பிடிக்கல. கணவன் மனைவியா வாழ விரும்பாம ஒரே வீட்ல பிரிஞ்சே இருந்துட்டாரு.”

“ஐயையோ…உங்க பாட்டி பாவம்…”

“பாட்டிய வீராயின்னு கூப்பிடாம கருவாச்சின்னு தான் கூப்பிடுவாரு. நாலு வருசம் முகத்த முழுசா பாக்காம அம்மா கிட்டயே சோறு வாங்கி தின்னுட்டு காவலுக்கு போனவரு, காட்டுக்குள்ள வேட்டைக்காரங்க இருவாச்சி பறவைய மட்டும் வேட்டையாடக்கூடாதுன்னு சொன்னப்ப, அதோட கதைய முழுசா கேட்டவரு அம்பையும் வில்லையும் அப்பவே கீழே ஒடைச்சுப்போட்டுட்டாரு. அப்புறம் சாகற வரைக்கும் அம்பு, வில்லத்தொடவே இல்லை….” 

“அரண்மனைல வேலை போயிருக்குமே..‌.?”

“அதப்பத்தி அவரு கவலைப்படலே. வேலை போயிருச்சு. அப்புறம் அவருக்கு முழு நேர வேலையே மனைவிய இருவாச்சி ஆண் பறவை மாதிரி பாசமா பாதுகாத்து, சந்தோசப்படுத்தறது தான்….”

“அப்படியா….? பாட்டன் கதை சூப்பரா போகுது. சீக்கிரமா சொல்லி முடிங்க….” என்றாள் குதூகலமாக சரண்யா.

“காட்டுல விவசாயம் பண்ணி ராயி, சோளம்னு சாப்பாட்டுக்கு தானியம் விளைவிக்கிறது, ஆடு, மாடு மேய்க்கிறதுன்னு பாட்டி கூட பிரியாம வீட்லயே இருந்து காலத்த கடத்தினதால பத்துக்குழந்தைங்கள பாட்டி பெத்தெடுத்தாங்க. ஊரே அவர பொண்டாட்டி தாசன்னு சொல்லுச்சு. இவரோட அம்மாவுக்கு இவரு மனைவி மேல எக்கச்சக்கமான பாசத்தக்கொட்டறது புடிக்காம ‘தலகாணி மந்திரம் போட்டுட்டாள்’னு மருமகளை வெறுத்து ஒதுக்கீட்டு, மகளோட வீட்டுக்குப்போயிட்டாங்களாம். மொதல்ல மருமகள பொறந்த வீட்டுக்கு அனுப்பப்பாத்திருக்காங்க. அதை என்னோட தாத்தா கேட்கலை…”

“பெண்ணுக்கு பெண்ணே எதிரி…. இப்ப என்னோட பிரச்சினையும் இதேதான். உங்க பாட்டிய அவங்க மாமியார் கொடுமைப்படுத்தி வெறுத்ததால உருவான கர்மா என்னை மாமியார் வெறுக்கிற மாதிரி ஆயிடுச்சோ என்னவோ….?”

அப்பொழுது கதவைத்திறந்து வீட்டிற்குள் வந்த சரண்யாவின் மாமியாரும், ராமசாமியின் சகோதரியுமான வசந்தி “இன்னைக்கு உன்ற பொண்ணுக்கு சொன்ன நம்ம தாத்தா, பாட்டி கதைய மொதல்லியே எனக்குச்சொல்லியிருந்தீன்னா நானும் என்ற மருமகள நல்லா வெச்சுப்பாத்திருப்பனில்ல….? நீங்க பேசீட்டிருந்தத கதவுக்கு பின்னால நின்னு கேட்டங்காட்டிக்கு எனக்கும் புத்தி மாறுச்சு..‌.”

“எல்லாமே கடவுள் சித்தம் அக்கா…” என்றார் ராமசாமி. சரண்யாவும் சமையலறைக்கு சென்று மாமியாருக்கு மகிழ்ச்சியுடன் காஃபி போட்டுக்கொடுத்தாள்.

“என்னதான் அறிவாளியா இருந்தாலும், கோடி கோடியா சம்பாதிச்சாலும், சூரியனுக்கே ராக்கெட் அனுப்புனாலும் ஒரு ஆம்பளையால பத்து மாசம் வயித்துல குழந்தைய சுமந்து பெத்துக்குடுக்க முடியுமா…? அப்படிப்பெத்துக்கொடுக்கிறவங்கள நாம பொக்கிஷம் மாதிரி பதனமா பாதுகாக்கறத உட்டுப்போட்டு பணம், நகைன்னு கேட்டு வேதனைப்படுத்தறோம். 

ஓரறிவு இருக்கிற அந்தப்பறவைக்கு தன்னோட இணைய தான் தான் பாத்துக்கனம்னு தெரிஞ்சது கூட ஆறறிவு இருக்கிற மனுசங்களுக்கு நம்ம வாரிச பெத்துக் கொடுக்கப் போற மனைவிய பாதுகாப்பா, அன்பா, அனுசரணையா வெச்சுக்கனம்னு தெரியலை. ஏன், எனக்கே புரியல. சரண்யா நீ வாம்மா. நாம நம்ம வீட்டுக்குப்போகலாம். ரெண்டு பேரம் பேத்திகள எனக்கு பெத்துக்கொடுத்த உன்னை, என்ற தம்பி பொண்ணை பூ மாதர வெச்சு ஒன்னி மேல் நாம் பாத்துக்கறேன். என்ற பையன் ரகுவையும் உன் கூட சந்தோசமா இருக்கனம்னு சொல்லறேன்…” சொன்ன வசந்தி சகோதரன் பக்கம் திரும்பி பேசினாள்.

 “நீ இனிமேலு கவலப்படாத தம்பி. உன்ற பொண்ணு ரம்யாவ நெகக்கண்ணுல கூட மண்ணு படாத மாதர நாம்பாத்துக்கறேன்…” என சகோதரி மனம் மாறி சொன்னதைக் கேட்டு கண்களில் கண்ணீர் வருவது மாறி, உதட்டில் சிரிப்பு தென்பட்டது ராமசாமிக்கு.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *