கரிப்பு மணிகள்





(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
அத்தியாயம்-16
அம்மன் கொடை என்று குடித்துவிட்டு ஆடும் ஆட்டக் காரர்களிடம் அருணாசலத்துக்கு வெறுப்பு உண்டு. ஆனால், ஆடி அமாவாசைக்கு ஓடையில் மூழ்கிச் சங்கமுகேசுவரரை வழிபடாமலிருக்கமாட்டார். கோயிலுக்குச் செல்ல நல்ல பாதை கிடையாது. முட்செடிகளும் புதருமாக நிறைந்த காட்டில் ஒற்றையடிப் பாதையில்தான் கோயிலுக்கு நடந்து வரவேண்டும். அவரைப் போன்ற பக்தர்களும், பரதேசிப் பண்டாரங்களும் அக்கம் பக்கங்களிலிருந்து அந்நாளில் அங்கு வருவார்கள்.

கோயங்காடு கதிரேசம்பிள்ளை; சண்முகபுரம் வீராசாமி நாடார் ஆகியோர் அந்தப்பக்கம் நிலச் சொந்தக்காரர்கள். பாலம் வந்து சாலையுடன் தொடர்பு ஏற்பட்டால் அவர் களுடைய நிலத்துக்குக் கிராக்கி ஏறும். அந்தக் குடும்பத் தினரும் சங்கமும் ஓடையில் முழுகி ஈசுவரரை தரிசிக்க வருவார்கள். முன்பெல்லாம் குடும்பத்துடன் அதிகாலையில் அங்கு வந்துவிடுவார்கள் சிவந்திப் பெண் சுருசுருவென்று அங்கே பெட்டி நிறைய இட்டிலியுடன் இலைக்கட்டுமாகக் கடை போட்டுவிடுவாள். அவளைப் போன்ற சுறுசுறுப்பு யாருக்கும் கிடையாது. வழிபாட்டுக்கு வந்தவர் அனைவரும் இட்டிலி வாங்கித் தின்று வயிறு குளிரத்தான் திரும்புவார்கள்.
கைலாசக்குருக்கள் அதிகாலையில் வந்து, சிவனாருக்கு அபிடேகம் செய்து வில்வமும் அரளியும் கொய்து பூசை செய்திருக்கிறார். கூட்டமே இல்லை. பத்துப்பேர் கூட நீராடுவதற்கும் சுவாமி தரிசனத்துக்கும் வரவில்லை. காரும் பஸ்ஸும் எங்கெங்கோ கடற்கரைகளுக்கு மக்களைக் கூட்டிச் செல்கையில் இந்த மூலைக்கு நடந்து யார் வருவார்கள்!
அவர் நீராடி. ஈசனை வழிபடுகிறார். ஒவ்வொரு ஆண்டிலும் “கூட்டுறவு உப்புத் தொழிலாளிகள் உற்பத்தி, விற்பனைச் சங்கம் நல்லபடியாகச் செயல்பட, அடுத்த ஆண்டுக்குள் பாலம் வந்து விடவேண்டும் எம்பெருமானே!” என்று நினைத்து வேண்டிக் கொள்வார்.
பையன் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். எல்லா நம்பிக்கைகளுமே நிறைவேறும் என்ற தைரியம் ஆட்டம் கண்டுவிட்டாற் போலிருக்கிறது. ஆனால், மனிதன் நம்பிக்கை இழக்கக் கூடாது.
இப்போது நீராடிக் கும்பிட்டுத் திருநீற்றுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு அருணாசலம் திரும்புகிறார். பசி எரிச்சல் கிளர்ந்து வருகிறது. வீட்டில் அவள் ஒரு வேலை ஒழுங்காகச் செய்வதில்லை. வாயைத் திறந்தால் குதர்க்கமும் சண்டையும் மிஞ்சுகின்றன. பொன்னாச்சியும் அந்தப் பையனும் சென்ற பின்னர் இங்கே இன்னமும் தரித்திரம்தான் கூடியிருக்கின்றன. இரண்டு பேர் குறைந்ததால் வளமை மிஞ்சிவிடவில்லை. துண்டை உடுத்துக் கொண்டு ஈரவேட்டியை விரித்துப் பிடித்தவராய் அவர் அளத்துக்கு நடக்கிறார். வானம் பளிச் சென்று நீலமாக இல்லை. ஆடி அமாவாசைக்குச் சிறிது மூட்டம் போட்டாற்போல் தானிருக்கும்.
பாத்தியில் மேல் தண்ணி திறந்துவிட வேண்டுமென்ற நினைப்புடன் அவர் ஓடைக்காலில் இறங்கிக் கடந்து மேலேறு கிறார். வெள்ளைத் துணிகளைக் காயப் போட்டாற்போன்று அவரது அளம்தான் முழுதுமாக உப்பளமாக இருக்கிறது. வரப்பிலேறிப் பாத்திகளைப் பார்த்துக் கொண்டு வருபவர் ஒரு பாத்தியில் வந்ததும் திகைக்கிறார். உப்பு குருணைச் சோறாகப் பூக்கவில்லை. பருமனாக இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கோடைக்கால மழை மணிகள்போல் இறங்கி இருக்கின்றன. இவ்வாறு உப்புப் பூத்தால் மழை வருவதற்குக் கட்டியம்’ என்பார்கள். மழை ஆடியிலேயே விழுந்துவிடுமோ? மழை மணி கண்டால் உப்பு விலை ஏறும். ஆனால் மழை பிறந்து விட்டால் உப்புக் காலம் போய் விடுமே?
அப்போது சடையாண்டி, கிணறு செப்பம் செய்பவன் மண்வெட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு வருகிறான்.
“கும்பிடறே மொதலாளி…”
“ஆடிமாசம், மழை மணி எறங்கியிருக்குப் பாரு சடையா”
“இது ஒண்ணில்ல மொதலாளி. காத்து சூள்ச்சி. கர்போட்டந்தா; மளைவராது… தூத்தூடி முத்தாலம்மன் கொடைக்கிப் போயிருந்தே மொதலாளி, பிள்ளயப் பாத்தே, போலீசில இட்டுப் போயிட்டாவ…?”
திடுக்கிட்டாற்போல் அருணாசலம் அவனைக் கூர்ந்து நோக்குகிறார். பிள்ளை… ஆரு…. வேலுவா ? அவ எங்கே தூத்துக்குடிக்குப் போனான்?
“…”
“ஆரு? வேலுவா?”
“நம்ம புள்ள இல்ல மொதலாளி, செவந்தியாச்சி மவெ, பச்சை, சாராயம் கொண்டிட்டுப் போனான்னு வளச்சிட்டுப் போனாவ. ராவுல திருவிழாக் கும்பல்ல, ஆட்டக்கார, மேளக் காரனெல்லாம் வந்து ஜேன்னு இருக்கையில இவனமட்டும் தலையில் செமந்திட்டு வாரயில கண்டிட்டா. இவெக்கு ஓடி ஒளியத் தெரியல. தகரத்தில ‘சரக்கு’ இருக்கு. போலீசின்னு தெரியாம கும்பலோடு கும்பலா வந்திருக்கா. முதுகில் குத்தித் தள்ளிட்டுப் போயிட்டாவ…”
மலையில செமந்திட்டு வாரயில கண்டிட்டா.
“அட..பாவி? எத்தினி நாளாச்சி? அவப்பன் சித்தாத்தா எல்லாம் கொடக்கி வந்திருந்தாவளா?”
“நா கண்டுக்கல மொதலாளி. பையனிங்க தண்ணி இறைக்குமில்ல? பாத்த மொகமாயிருக்கேன்னு கவனிச்சே. நம்ம புள்ள பச்சை; போன வெள்ளிக் கிளமதா…”
மாமன் மழை மணியை மறந்து போகிறார். மேல் அண்ணீர் பாய்ச்சலையும் மறக்கிறார். விருவிரென்று வீட்டைப் பார்க்க நடக்கிறார்.
நீராடியவுடன் கிளர்ந்த பசி எரிச்சலுடன் பல்வேறு உணர்வுகளும் குலுங்குகின்றன. இப்படி எத்தனையோ பசி எரிச்சல்கள் கிளர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அவை அனைத்தும் ஒன்று திரண்டுவிட்டால் பத்து நூறு அணு. குண்டுகளுக்குச் சமமாகும் என்று அவருக்குத் தோன்றுகிறது. ஆனால் ஒன்று திரளும் நிலையில் இல்லாததால் மத்தாப்புப் புகையாக மட்டுமே ஆங்காங்கு கரிந்து போகிறது. பசி எரிச்சலுக்குப் பீடி, புகையிலை, டீத்தண்ணி என்று மாற்றுத் தேடிக் கொள்கின்றனர். பசியை ஆரோக்கிய ரீதியில் போக்கத் தேவையான உணவு, இரத்தத்தில் கலந்து உயிரூட் டும் தெம்புக்கான அன்னசாரம் போதிய அளவு கிடைப்பதே. யில்லை.
வீட்டில் ஆச்சி இல்லை. முன்சீஃப் வீட்டுக்குப் போயிருக்கிறாளாம். அவளிடம் பணம் இருக்கும். அவர் ஈர வேட்டியைக் கொடியில் போட்டு விட்டு வேறு வேட்டி உடுக்கிறார். அமாவாசை, ஆச்சியை ஏதேனும் சில்லறைக் காரியங்களுக்குக் கூப்பிட்டனுப்பி இருப்பார்கள். அவள் குளத்தில் குளித்து விட்டுதான், இனி வீட்டுக்கு வந்து பொங்குவாள். ஒரு மணியாகும். குழந்தைகளுக்கு ஏதேனும் பத்து பைசா துட்டுக் கொடுத்திருப்பாள்.
அவர் சட்டையைப் போட்டுக் கொண்டு முன்சீஃப் வீட்டுக்குச் செல்கிறார். ஆச்சி உள் திண்ணை மெழுகிக் கொண்டிருக்கிறாள். இவரைப் பார்த்ததும் அருகில் வருகிறாள்.
“சர்ட்டு மாட்டிட்டு எங்க கிளம்பிட்டிய? அமாசி, கோயிலுக்குப் போய் வாரன்னு போனிய?…”
“ஆமா. ஒரு அஞ்சுரூவா குடு வடிவு. அவசரம். காலேஜில என்னமோ அடிதடியாம். ஒம் மவன் செலம்பம் ஆடுறானாம்…” அவள் மருண்டு திகைக்கிறாள்.
“ஆரு சொன்னது? ஆளு வந்ததா?'”
“ஆமா… அங்கக் கோனார் பய… ஒனக்குத் தெரியாது. அவஞ் சொன்னா. சங்கமுகேசுவரக் கோயிலுக்கு வந்திருந்தா?” இதுதான் மந்திரம்.
‘பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின்’ என்று மனசோடு சமாதானம் சொல்லிக் கொள்கிறார். அவள் உள்ளே செல்கிறாள்.அவரி வீட்டை விட்டு வெளியே தெருவுக்கு வந்து நிற்கிறார்.
சற்றைக்கெல்லாம் ஐந்து ஒற்றை ரூபாய்த் தாளாகக் கொண்டு வருகிறாள்… “புள்ளயக் கூட்டிட்டு வந்திடுங்க…” என்று கவலை கனக்கக் கூறிவிட்டுச் செல்கிறாள்.
மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தாய்ப்பாசம் குருட்டுப் பாசம். ஆனானப்பட்ட நாடாளும் அரசிகளே தாய்ப் பாசத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். முன்பே முன்சீஃப் வீட்டு ஆச்சி, “உதவாக்கரைப் பையனை படிக்கப் போட்டு ஏண்டி செலவு செய்யிறே…” என்று கேட்டாளாம். வளுக்கு ரோசமாகிவிட்டது. அதனால் பிள்ளையைப்பற்றி ஆச்சியிடம் எதையும் கூறியிருக்கமாட்டாள்.
அவர் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு சென்று இறங்கு கையில் மணி ஒன்று. ஓட்டலில் ஒரு தட்டு புளிச்சோற்றை வாங்கி உண்டு நீரைக் குடிக்கிறார். அவர்கள் வீட்டைத்தேடி நடக்கிறார்.
பகல் நேரத்தில் அப்பன் குந்தியிருப்பான். அவன் கெட்டது போதாதென்று பையனைத் திருட்டுச் சாராயத் தொழிலுக்கு விட்ட கயவாளி! அவன் முகத்தில் அறைந்து பையனுக்கு வழி கேட்க வேண்டும்.
அவர் வீட்டு வாயிலில் நுழைகையில் அந்த வளைவே அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறது. அக்கம் பக்கக் கதவுகள் சாத்தியிருக்கின்றன. இவர்கள் வீட்டில் யாருமே இல்லை. பூட்டு ஒன்று தொங்குகிறது.
ஒருகால் இங்கிருந்து வாடகை கொடுக்கவில்லை என்று காலி செய்யச் சொல்லி விட்டார்களா?
அவர் அந்தப் பெரிய வீட்டின் முன் வாயிலில் வந்து நிற்கிறார்.
“வீட்ட ஆருமில்லியா?” என்று குரல் கொடுக்கிறார்.
செங்கமலம் உள்ளிருந்து தலை நீட்டுகிறாள்.
“ஆரு?”
“கண்ணுசாமி வீட்டில ஆருமில்ல?”
“அல்லாம் வேலைக்கிப் போயிருக்காவ, சாயங்காலம் வந்தியன்னா பார்க்கலாம். ஏட்டி சரசி? ஆருன்னு சாரிச்சிக்க, போ”
சாசி. பத்து வயசிருக்கும் ஒரு பெண், பித்தானில்லாத கவுனுடன் வாசலுக்கு வருகிறது.
“ஆரு… பொன்னாச்சி, அவங்கப்பச்சி கூடவா வேலைக்குப் போயிருக்கா?”
“ஆமா. அல்லாம் போயிருக்காவ.”
“பையன்? பச்சை?”
“அவனும் போயிருக்கா!”
“எந்தப் பக்கம்?”
அப்போது செங்கமலம், “யாருடீ அது…” என்று கேட்டவளாக வெளியே வருகிறாள்.
“ஆரு…? வாங்க, பொன்னாச்சி மாமனா? உள்ளாற வாங்க வந்து இருங்க…” என்று வரவேற்று பெஞ்சியைக் காட்டுகிறாள்.
“ஆமா… இந்தப் பக்கம் வந்தேன் பாத்துட்டுப் போவ லாமின்னு. காலமே மோடமாயிருந்திச்சி, இப்ப என்ன வெயில்!” என்று வழுக்கை விழுந்த தலையைத் துண்டினால் ஒத்திக் கொள்கிறார். ஆச்சி அவிழ்ந்த கூந்தலை அள்ளிச் செருகிக் கொண்டு அவளுடைய சிம்மாசனமாகிய நார்க் கட்டிலில் அமருகிறாள்.
“எல்லாரும் சவுரியந்தானா? கண்ணுசாமி ஒடம்பு முடிய லான்னா, எந்தப் பக்கம் வேலைக்குப் போறா?”
“அடி சரசி? செம்பில் தாவத்துக்கு நல்ல தண்ணி பானையிலேந்து எடுத்திட்டுவா….ட்டீ!” என்று ஏவிவிட்டு ஆச்சி நிதானமாக அவரது விசாரணைக்குப் பதிலளிக்கிறாள்.
“ஒடம்பு முடியலன்னுதா ஊருக்குப் போய் அந்தப் பிள்ளகளைக் கூட்டி வந்தா. கடன் தலைக்கி மேல் ஏறிடிச்சி. அந்தப்பயல போலீஸ் புடிச்சிப் போயிட்டாவ. இந்த ஊரு உலவத்துல இல்லாததா? போலீசுத் தடியனுவளுக்கு இதொரு பணம் பறிக்கிற சோலி. பொறவு வாக்கரிசி போட்டுக் கூட்டிட்டு வந்தாவ. நேத்துத்தா காலையில் கூட்டிட்டு வந்தா. சோலிக்குப் போவல. இன்னிக்குப் போயிருக்கா. கண்ணு தெரியலன்னா எதானும் சுமடு எடுக்கலாமில்லையான்னு அவனும் போயிருக்கா. ஏங்கிட்ட ஒரு புள்ள, இவளுக்குப் பெரியவ இருந்தா. அவளையும் பொன்னாச்சிக்கூடக் கூட்டி அனுப்பியிருக்கே, பொற வென்ன? எட்டு பேர் கும்பி நனையணுமில்ல? முன்னமே இல்லாத காலத்துல வாங்கித் தின்ன கடன். சீக்கு இப்ப இந்த புள்ளய மூட்டுவார கடன், எல்லா அஞ்சு நூறுக்கு மேல போயிட்டுது, அந்தப் பொம்பிள என்னேயுவா.”
அந்தப்பயல போலீசு புடிச்சின் தலைக்கிமேல
“மூட்டுட்டு வந்திட்டாவளா?…நா விசயம் கேள்விப் பட்டுதா சாரிச்சிப் போவலான்னுவந்தே. அவன் குடிக்கிறானா?”
“ஆரு, உங்க தங்கச்சி மாப்பிளயவா கேக்குறிய? உமக்குத் தெரியாதா? தொட்டிப் பழக்கம் சுடுகாடு மட்டுமில்ல?”
அவருக்கு நெஞ்சு காய்கிறது. சரசி கொண்டு வரும் செம்பு நீரை அருந்துகிறார். எதிரே, மாலை சாத்திய, பால் வடியும் முகம் அவர் கண்களையும் கருத்தையும் இழுக்கிறது. த ண்ணீரருந்தியதில் ஆசுவாசமாக இருக்கிறது. அப்பாடா அவர்களே மீட்டுவிட்டார்கள். நல்லவேளை – மனச்சான்றின் ஒரு நரநரப்பில் புறப்பட்டு வந்து விட்டாரே ஒழிய, பணத் துக்கு என்ன செய்வதென்ற பதை பதைப்பு இல்லாமலில்லை. சின்னம்மா உண்மையில் மிக நல்லவளாகவே இருக்க வேண்டும்.
“பொன்னாச்சி வேலைக்குப் போயிட்டிருக்காளா?”
“போறா….நீ வந்திருக்கிய.உம்மகிட்ட ஒரு சேதி சொல்லிப் போடணும். அந்த வுள்ளக்கி ஒரு கலியாணம் கூட்டி வச்சிடுங்க…. ஏன்னா, திருட்டுக் கையிங்க காவலிரு தாலே நீளும்… ஒரு பையனிருக்கா. நெல்ல மாதிரி குடிகிடி ஒண்ணுங் கெடையாது. அவெ இட்டமாவும் இருக்கா. ஏதோ ரெண்டொரு ஏனம், சீல தாலின்னு வாங்கி சுவம் முடிச்சி வச்சயன்னா எக்குதப்பா எதும் நடந்து. போயிராது…”
பகிரங்கமா புருசனை விட்டு ஓடிவந்து முறையில்லாத வாழ்வு நடத்திய அந்தப் பெண் பிள்ளையின் வீட்டுப்படி, ஏறவே அவருக்கு முதலில் கூச்சமாக இருந்தது. தண்ணீரும் குடித்தார். அவள் தட்டில் வெற்றிலை பாக்கு எடுத்து வைத்திருக்கிறாள். வெற்றிலையும் போடலாமோ?…
அவளைப் பற்றி அவர் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறார். நேராக இன்றுதான் பார்க்கிறார். உண்மையில் அவளுக்கு இராணிக்குரிய கம்பீரம் இருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. நீர் அதிகமாகிவிட்டதனால் தளர்ந்து போன பணியாரமாவுபோல் கழுத்துச் சதை தொய்ந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் கீறிட்டாலும், அவளிடம் களையும் கம்பீரமும் குறையவில்லை.
“பையன் ஆரு?”
“முன்ன தொழிற்சங்கம் வச்சி, ஸ்ட்ரைக் பண்ணச் சொல்லி தடியும், கம்புமா அளத்துக் கூலிகளைப் பயமுறுத்தி நிக்க வச்சாரே. சாத்தப்ப – அந்த வருசங்கூடப் பெரிய புயலடிச்சி ராமேஸ்வரம் கரையே முழுகிப் போச்சே?”
“ஏந் தெரியாது? சாத்தப்பனத் தெரியாத ஆருண்டு? சொதந்தரத்துக்கு முன்ன நாங்க ஒரு கச்சியிலிருந்த வங்களாச்சே? ஸால்ட் இன்ஸ்பெக்டர் லோன் கொலை கேசில் சிக்கினவங்கூட தலமறவாயிருக்கயில, இவ வீட்டதா ஒளிச்சி வச்சிருந்தா. பொறவு…” ஏதோ நினைவுக்கு வந்தாற் போல் தூக்கி வாரிப்போட்டாற் போல் மெளனமாகிறார்.
அவளுடைய பார்வை உயரே எங்கோ நிலைக்கின்றன.
“அவிய மவந்தா – ராமசாமின்னு பேரு. பனஞ்சோல அளத்துல மாசச் சம்பளமாயிருந்தா. இப்ப வேற பக்கம் சோலிக்குப் போறதாச் சொன்னா…”
“படிச்சிருக்கிறானா?”
“அத விசாரிக்கல. ஆனா படிச்சவங்களுக்கு மேல படிச்ச பயலாத்தாந் தெரியிறா. நாஞ் சொன்னன்னு காட்டிக்காதீய அவனாத்தா என்ன சொல்லுவான்னு தெரியாது. ஆனா பயனுக்கு இந்த புள்ளகிட்ட இட்டமாயிருக்கு. இவளுக்கும் இட்டந்தா. ஏதோ முன்ன பின்ன பாத்து ஏற்பாடு செஞ்சி கெட்டிப் போடணும்…”
முன்ன பின்ன… முன்ன பின்ன என்ன இருக்கிறது?
ராட்டினம் போட்டு இரைக்கும் உப்பு நீர்க் கிணறும் கூட மூடிப்போகிறது. அவ்வப்போது தோண்ட வேண்டியிருக்கிறது. ஆனால் உப்பை நம்பிக் கஞ்சி குடிக்கும் தொழிலாளியின் வறுமைக் குழி மூடப்படுவதே இல்லை!
அருணாசலம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு. இறங்கி நடக்கிறார்.
அத்தியாயம்-17
தட்டு வண்டியில், தகரப் பெட்டி, கரியேறிய சருவம் சுளகு, நார்ப்பெட்டி. சில பழுப்பு தாள் புத்தகங்கள், தட்டு முட்டுச் சாமான்கள், பாய், சாக்கு ஒரு பன நார்க் கட்டில் எல்லாச் சாமான்களுடனும் ராமசாமியின் தாய் பாக்கியத் தாச்சி அமர்ந்திருக்கிறாள். ராமசாமியே வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான். வண்டி மூன்றாந் தெருவினூடே செல்கிறது. ஞாயிற்றுக் கிழமை காலை நேரம்; சிறுமியர் லையில் எண்ணெய் வழிய மண்ணில் குந்திப் புளிய விதை யாடுகின்றனர். கிழவிகள் நீர் வடியும் கண்களைச் சரித்துக் கொண்டு புகையிலையின் சுகத்தில் ஆழ்ந்தவராகக் குந்திக் கிடக்கின்றனர். பூவரசமரம் ஒன்று நிழல் தரும் கிளைகளால் அவர்களுக்கு ஆதரவு காட்டுகிறது. அதனடியில் இளந் தாயர் சிலர் மடியில் குழந்தைகளுடன் சாவகாசமாக வம்பளந்து கொண்டிருக்கின்றனர். ஒரு வீட்டில் ஒருத்தி குழந்தை குளிப்பாட்டுகிறாள்; புருசன் நீரூற்றுகிறான். இன் னொரு வீட்டில் அவள் அம்மியில் அரைக்க, அவன் கூரை செப்பம் செய்கிறான். இன்னோர் வேப்பமரம். அதன் அடி முண்டு அமர்ந்து சில ஆண்கள் ஏதோ பேசுகின்றனர். ஒரு பெண் பன ஓலை சீவிக் கொண்டு யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறாள்.
“பனஞ்சோலை அளத்துல மாசச்சம்பளம் பார்த்த பைய. போன்னிட்டாவ; ஆத்தாளும் மவனும் இங்க வாரா…!”
“மின்ன சங்கக்காசு பிரிச்சிட்டுப் போவ வருவானே, நோட்டீசு கொண்டு குடுக்கல? தொழிலாளியல்லாம் ஒண்ணு சேரணுமின்னு சேப்பு நோட்டிசு குடுத்தான். அளத்துல சீட்டக் கிளிச்சிட்டாவ!”
“பனஞ்சோல அளத்துல அதெல்லாம் பேசப்படாது. ஊரே கெடந்து வேலக்கிப் போவாம நின்னாக்கூட, பனஞ் சோல அளத்துள மூச்சுப்பரியக்கூடாது. அங்கதா போனசு கண்ணாடி செருப்பு, அல்லாம் குடுக்கறாவளே?… மானோம்புன்னா புள்ளயளுக்குப் பத்து ரூவா காசு குடுப்பா?”
நாலைந்து பெண்கள் இவ்வாறு பேசுவது அவன் செவி களில் விழுகிறது. வண்டியிலிருந்து கீழே குதித்து நடந்து வருகிறான்.
மரத்தடியில் குந்தியிருந்தவர்களிலிருந்து ஒருவன் எழுந்து அந்தப் பெண்களிடம் சென்று ராமசாமியின் காது கேட்கப் பேசுகிறான்.
“ஏ, பொண்டுவளா? இளவட்டம் வாரான்னு பல்ல இளிச்சிட்டுப் போயி நிக்காதிய! அவன் நோட்டீசு குடுத் தாலும் வாங்காதிய! பனஞ்சோல அளத்துல சின்ன முதலா ளிய எதித்துப் பேசி மூக்கு உடபட்டு இங்க வந்திருக்கா. ஒங்க சோலியுண்டு, நீங்க உண்டுன்னிரிம்! பொறவு நாம் குடிக்கிற கஞ்சில மண்வுழும்…” என்று எச்சரிக்கிறான். ராமசாமிக்கு இது புதிய அநுபவமல்ல. இருட்டுக்குள் இருப்பவன் இருட்டே பாதுகாப்பு என்று வெளிச்சத்துக்கு அஞ்சுகிறான்.
உப்பின் வெண்மையைப் பார்த்துக் கூசி வெளிச்சமே இல்லாத உலகுக்குள் அழுந்திவிட்டார்கள்.
‘வித்து மூடை’க் கங்காணி ஆறுமுகத்துக்குச் சொந்த மான வீடு அது. மண் பரிந்து, கூரை பந்தலாக நிற்கும் அந்த வீட்டுக்கு அவன் பத்து ரூபாய் ‘அட்வான்சு’ கொடுத் திருக்கிறான். தனது சைக்கிளை அடகாக வைத்துவிட்டு அவன் இந்தச் சரிவைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஆறுமுகத்தின் கூலியாட்களில் ஒருவனாகவே அவனும் வேலைக்குச் சேர்ந்து இருக்கிறான். உப்பளத்தில் லாரி வந்து நிற்கும்போது, பெண்கள் சாக்கை விரித்து உப்பை நிரப்ப இவர்கள் மூட்டைகளைத் தைத்து, லாரியில் அடுக்க வேண்டும்.
வீட்டின் முன் சாமான்களை இறக்கிவிட்டு, மாட்டை அவிழ்த்துக் கட்டுகிறான். வண்டிச் சொந்தக்காரன் வந்ததும் அவனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கவேண்டும்.
இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரு பக்கம் இருந்த வீட்டைத் துறந்து அவனுடைய தாய் இங்கே புதிய இடத் துக்கு வந்திருக்கிறாள். அன்னக்கிளி, அழகம்மை, பேரி யாச்சி என்ற தொடர்புகளையெல்லாம் விட்டுவிட்டு வேறு புதிய பழக்கங்களைக் காண இந்தக் குடியிருப்புக்கு நகர்ம் புறத்துக்கு வந்திருக்கின்றனர் அவர்கள்.
தாய் கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு தட்டிப் பெருக்குகையில் அவன் கயிற்றையும் வாளியையும் எடுத்துக் கொண்டு தெருக் கோடியில் இருக்கும் உறைக்கிணற்றுக்கு வருகிறான்.
கிணற்றில் வனப்பும் வாளிப்புமாக ஒருத்தி நீரிறைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றுத் தள்ளி ஒரு ஆண் குளித்துக் கொண்டிருக்கிறான்.
“தண்ணி நல்லாயிருக்குமா?” என்று ராமசாமி கேட்கிறான். அவள் ஒரு மயக்குச் சிரிப்பை நெளிய விடுகிறாள். “வாரும் மாப்பிள? புதிசா வந்திருக்கியளா?… தண்ணி ரெண்டு டிகிரிதா…”
“சருவத்தை இப்படி வையும்…” என்று இழுத்து நீரை ஊற்றுகிறாள். ராமசாமி வாயில் விட்டுப் பார்த்துக் கரிப்பை உடனே துப்புகிறான்.
“எப்பிடி இருக்கு?…” அவள் சிரிக்கிறாள்.
“அண்ணாச்சி இதுல குளிக்கிறாரேன்னு பார்த்தே!”
“பின்னென்ன சேய? வண்டித் தண்ணி அடிப்பா. அம்பது கொடம் இருக்கும். இந்தத் தாவுல எம்பது வூடு இருக்கு. அடிபிடின்னு மோதிக்கிவா. அதும் இப்ப சுத்தமா பத்து நாளாச்சி! முனிசிபாலிடிக்காரனயே காணும்!” என்று குளித்துக் கொண்டிருப்பவன் தெரிவிக்கிறான்.
“ஆமா, இந்த ஆம்புளிய ஆரு போயிப் பாக்கா, கேக்கா? பொம்பிளயளுக்கு என்ன தெரியுது ….?
“குடிக்க நீரு?”
“இதா போவாங்க இன்னிக்கு. மேக்கே போனா கோயில் கேணி. தண்ணி பஷ்டாயிருக்கும். நாலுகல் போனா வண்ணாந்துறை இருக்கு, துணி தப்பி அலசிட்டு வரலாம்…”
“வோட்டு வாங்கிட்டுப் போவ அல்லாம் வருவா, பொறவு ஒருத்தரும் கண்டுக்கறதில்ல. தலைவர் வூடு கட்டுறாருன்னு கச்சிக்காரங்ககிட்ட ஆளுக்கு ஒரு ரூவா பிரிச்சானுவ…” என்று அந்தப் பெண் வயிற்றெரிச்சலை எடுத்துரைக்கிறாள்.
“நீ சும்மாருவுள்ள. இப்ப இவெ வந்திருக்கா. நாம் போயித் தண்ணி வேணுன்னு அந்த ஆள ‘கேரோ’ செய் யிவம்!” என்று அவன் உடலைத் துடைத்துக் கொண்டு கூறுகிறான்.
“கிளிச்சிய. நீரு அந்தத் ‘தண்ணி’யப் போட்டுட்டு ஆடுவிய!” என்று கூறிவிட்டு அவள் ஆத்திரமாகச் செல்கிறாள்.
அந்தக் கூட்டு வீட்டை விட்டு இங்கே விடுதலை பெற்று பொன்னாச்சியை வந்தாற் போல் ராமசாமி உணருகிறான். விரைவில் மணந்து கொண்டு இங்கே கூட்டி வந்துவிட வேண்டும் என்று நினைக்கையில் ஆனந்தமாக இருக்கிறது
தாய் புதிய வீட்டில் கல்லைக் கூட்டிச் சோறு பொங்கு கிறாள். மாலையில் அவன் சீவிச் சிங்காரித்துக்கொண்டு சண்முகக் கங்காணியைப் பார்க்கக் கிளம்புகிறான்.
தொழிலாளர் குடியிருப்புகளைத் தாண்டித் தேரியில் நடக்கிறான். ஞாயிறன்றும் வேலைக்குச் சென்ற சில தொழி லாளர் திரும்பி வருகின்றனர். பல பல உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர் அனைவரும் சாலையிலிருந்து மணலில் கால் புதைய அந்தக்காட்டில் திரும்பித்தான் நடந்து செல்லவேண்டும்.
பொன்னாச்சியும் இப்படித்தான் வரவேண்டும்… ஆனால் முன் போல் குறித்த நேரத்தில் வேலைக்குச் சென்று வந்து குறித்த இடத்தில் அவனால் அவளைச் சந்திக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு வேலைக்குப்போக வேண்டியிருக்கும்.
லாரி எப்போது வரும் என்பதைச் சொல்ல முடியாது. எழுபத்தைந்து கிலோ மூட்டைகளைச் சுமந்து லாரியில் அடுக்க வேண்டும்… மாசம் இருநூறு ரூபாய் தருவதாக அவர்கள் அவனை வளைக்கப் பார்த்தார்கள். அவனுடைய எதிர்ப்பாற்றலில் அவர்களுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது. அதுவே அவனுக்கு வெற்றி.
பனஞ்சோலை அளத்திலிருந்து அவனுக்குத் தெரிந்த முகங்கள் வருவதைப் பார்க்கிறான்.
கைக்குழந்தையுடன் நஞ்சாயி… பண்டாரம்பிள்ளை…
“என்ன அண்ணாச்சி? இங்க நிக்கிறிய?” என்று அவள் விசாரிக்கிறாள்.
“ஆமாம், இந்த வளவுக்கு வந்திட்டே. ஞாயித்துக்கிழம வேலையா?”
“ஆமா, கொடயின்னு ஆறு நா நின்னிட்டம். இப்ப சோலியிருக்குன்னா கங்காணி, பொறவு என்னேய?…”
“என்னவோ கேளுவிப் பட்டம்? நெசமா அளத்துல இப்ப சோலியெடுக்கல…?”
“இல்ல அண்ணாச்சி. மீனுக்கு எரை வைக்கிறாப்பல கூட்டு இருநூறு ரூவா சம்பளமின்னா. எனக்குச் சம்சயம் தட்டிச்சி, என்ன வெலக்கி வாங்க முடியாது… இல்ல?” என்று ராமசாமி சிரிக்கிறான்.
அவர்கள் பிரமித்துப்போய் நிற்கின்றனர்.
“பொன்னாச்சி சோலிக்கு வருதா?…” என்று கேட்டு அவர்களைச் சுய உணர்வுக்குக் கொண்டு வருகிறான்.
“வருது, அதுந்தங்கச்சியும்கூட அறவை மில்லுக்கு இன்னிக்கி வந்திருக்கு. பாவம், அந்தப் பயலப் போலீசு வளச்சிட்டாப்பல. எரநூறு ரூவா அவுராதம் கட்டி, தலவருதா மூட்டுக் கொண்டார ஒத்தாச பண்ணினாராம். வட்டுக் கடன் வாங்கிக் குடுத்திட்டு, இப்ப அக்கா தங்கச்சி, தம்பி அல்லாம் ஞாயித்துக் கிளமயும் வேலக்கி வந்திட்டுப் போறா!”
அவர்கள் சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.. பொன்னாச்சி வேலை முடிந்து போய் விட்டாளா? அவனுக்கு ஏமாற்றமாக இருக்கிறது.
அவளை அந்த வழியில் செல்லும் போது மறுநாள் அவனால் காண முடியுமோ என்னவோ?
அவளுக்காக அவன். தன் வேலை, வீடு போன்ற வசதி களைத் துறக்கவில்லை என்று கொண்டாலும், அவளுக்காக, அவளை முன்னிட்டுத்தான் மொத்தப் பேருடைய துன்பங் களையும் பகிர்ந்து கொள்வதாக நினைத்து மகிழ்ச்சி கொள் கிறான். அந்த மகிழ்ச்சியில் அப்போதே மணமேடை கூட்டி யாகி விட்டாற் போலிருக்கிறது.
சண்முகக் கங்காணியிடம் கூறித் தூது போகச் சொல்ல லாம். ஆனால் அவனுடைய ஆத்தா அளத்தில் சோலிக்குப் போகும் பெண் என்றால் நிச்சயமாக ஒப்பமாட்டாள். வட்டுக் கடன்களைத் தீர்க்கப் பொன்னாச்சி சோலிக்குப் போகிறாள். மேலும், அந்தப் பெண்பிள்ளை… அவளைப் பற்றி ஆத்தா அறிந்தால்…
அவளுடைய நேயமும் அன்புமான அந்த உரையாடல் அவனுக்கு எப்போது நினைத்தாலும் உள்ளத்தைப் பரவச மாக்குகிறது. அவனுடைய ஏதேதோ இலட்சியங்களுக்கெல் லாம் அவள் உருக்கொடுக்க வந்து வாழ்வில் குறுக்கிட்டதாக நினைக்கிறான். அதற்காக ஆத்தாவை விரோதித்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது.
மணலில் கால்கள் புதைய அவன் சாலையை நோக்கி நடக்கிறான். தொலைவில், பொட்டலில் அழகிய சில வீடுகள் எழும்பியிருக்கின்றன. தூத்துக்குடி நகரிய எல்லைகள் அகன்று அகன்று போகின்றன.
மாலை குறுகி மஞ்சளில்லாமலே கருமை அவசரமாக வருகிறது அவன் உள்ளம் துடிக்க மறந்து போகிறது.
அங்கே வருபவர்கள்… பொன்னாச்சி, இன்னும் சில கிறு பெண்கள், பையன் பச்சை, ஒரு கிழவி..
பொன்னாச்சி, அவள்தான்! அதே நடை…!
அவன் வழி மறிக்கச் சித்தமாகிறான். முகம் புரியாமல் படரும் இருள் திரையில் அவன் அவர்களை முன்னே செல்ல விட்டுப் பின்னே சேர்ந்து கொள்கிறான். தம்பி, தங்கச்சிகள், கிழவி….
சரிதான்! ஒரு கற்கோட்டை அரண் எழுப்பியிருக்கிறாள்!’ அவன் உள்ளூரச் சிரித்துக் கொள்கிறான். உல்லாசமாக ஒரு பாட்டை எடுத்துவிடுகிறான்.
வேலை செய்யும் பாத்திக்காடு
விளையாடும் தட்டு மேடு !
கூலிவாங்கும் கிட்டங்கி
கூட்டம் போடும் சாயாக்கடை… கூட்டம்
போடும் சாயாக்கடை…
பச்சைப்பயல் குபீரென்று சிரிக்கிறான்.
“ஏலே, என்ன சிரிப்பு” என்று பொன்னாச்சி அதட்டு கிறாள். அவள் முகம் தெரியாத போனால் என்ன? அந்தக் குரலில் அமுதமல்லவோ பொங்குகிறது?
மீண்டும் பாட்டு தொடருகிறது.
“போன நல்ல வருசத்தில ஏக்கம் புடிச்சிப் போனனடி.”
“சீச்சீ! இந்தாளு ரொம்ப மோசம்” என்று பொன்னாச்சி மனசுக்குள் சொற்களைக் கோத்து விசிறிக் கொண்டு நடையில் வேகம் கூட்டுவதுபோல் பாசாங்கு செய்கிறாள். அதற்குள் பச்சை அவனை யாரென்று கண்டுகொண்டு விட்டான்.
“அக்கா? ராமசாமி அண்ணெ!”
“தொணக்கி வாரியளா?” என்று பொன்னாச்சி கேட்கையில் உல்லாசம் களிநடம் புரிகிறது.”
“இதெல்லாம் ஆரு?”
“இது என் தங்கச்சி பாஞ்சாலி, இவ தங்கம், அவ டெயிசி…”
“எல்லா நாச்சப்ப வகையா?”
“இன்னிக்கு எல்லாம் அறவை மில்லுல தா..”
“சவாசு. ஓராள எடுத்துட்டு ரெண்டாளுக்கு வேலை குடுக்கா! வட்டிக்கடன் எந்தப்பக்கம் வாங்கினிய?”
“ஆரிட்டயோ வாங்குறம். தலைவர் வாங்கிட்டாரு. போலீசுக்குப் பாதி, அவியளுக்குப் பாதின்னு செவந்தனி மாமன் சொல்லுறா.’
“மன்னாப்பு; அவிய தலவரில்ல.”
“பின்ன ஆரு தலவரு?”
“தலயா எல்லா இருந்தாலும் புண்ணியமில்லை. வெறுங்கையுமாயிருந்தாலும் புண்ணியமில்ல…வட்டுக் கடன் செவத்தாச்சி குடுத்திச்சாக்கும்!”
“செவத்தாச்சியிட்டவும் அம்புட்டுக்குப் பணமில்ல. அடவுல கெடந்த சோடுதவலயக் கடயில போட்டுப் பொரட் டிக் குடுத்திச்சி பாஞ்சாலிக்கு அடுவான்ஸ் குடுத்தா. எல்லாந்தா…”
“…”
“அப்பச்சி என்ன பண்ணுறா?”
“அவியளும் பொட்டி செமக்கப் போறா. கங்காணி நூறு பொட்டி செமந்தா நாலு ரூவா தருவா…”
பொருளாதார நிலையை.இவ்வாறு கண்டறிந்தபின் அவன்’ மனம். சீலை, தாலி. ரெண்டேனம் வாங்கிக் கல்யாணம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்கிறது.
“அடுத்த நாயித்துக்கிழமை நா அங்க வாரேன். மாமா வந்திருந்தாரா?”
பொன்னாச்சி புரிந்து கொண்டு மறுமொழி கூறுகிறாள்.
“மாமா வந்து செவத்தாச்சியப் பார்த்தாராம். நாங்க ஆரும் அவிய வந்தப்ப வீட்டில இல்ல. ஆச்சியே எல்லாம் சொல்லிவிட்டாவளாம்.”
“ஆகா…” என்ற ஒலி அவனையுமறியாமல் அவன் கண்டத்திலிருந்தும் பிரிகிறது. பிறகு பேச்சுத் தொடர வில்லை. அவன் அவர்கள் பின்னே கந்தசாமியின் சாயாக் கடை வரையிலும் செல்கிறான்.
பிறகு அவர்கள் திரும்பி நெடுந்தொலை சென்று மறையும் வரையிலும் அங்கேயே நிற்கிறான். ஒரு ‘சாயா’ கேட்டுக் கொண்டு பெஞ்சியில் அமருகிறான். அப்போது ஆறுமுகமும் அங்கு வந்து சேருகிறான்.
“நீ இங்கத்தா இருக்கியா? லாரி ஏழரைக்கு வரும். நீ பாலத்தடியில வந்திரு!” என்று கூறிவிட்டுப் போகிறான்.
அன்றுமுதல் முதன்முதலாக ஆறுமுகக் கங்காணியுடன் மூட்டைத் தொழில் செய்ய வந்து நிற்கிறான் ராமசாமி. பாலத்தின் பக்கம் ‘செந்திலாண்டவன்” என்ற பெயரைக் காட்டிக் கொண்டு லாரி உறுமிக் கொண்டு வந்து நிற்கிறது. ஆண்களும் பெண்களும் அந்தத் தொட்டியில் ஏறிக் கொள் கின்றனர்.. மண்வெட்டி, கூடை, சாக்கு, கோணி தைக்கும் ஊசிகள், சணல்கண்டு எல்லாம் இடம் பெறுகின்றன.
நிலவு மூளியாகக் கிழக்கே உதித்து ஏறுகிறது ஓட்டு பவனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் தரகனார் கையைக் காட்ட அளத்துக்குள் வண்டி செல்கிறது. “சுனா மானா அளம்” என்று யாரோ செய்தி அறிவிக்கின்றனர்.
அளத்துக்குள் நல்ல பாதை இல்லை. பள்ளத்திலும் மேட்டிலும் சக்கரங்கள் மாறி உருளுகையில் குடல் வாய்க்கு வந்து பாதாளத்தில் குதிப்பது போலிருக்கிறது. ராமசாமி இத்தகைய லாரி சவாரிக்குப் பழக்கப்பட்டவனல்ல. அவனருகில் ஒரு பெண்பிள்ளை அவன்மீது வேண்டுமென்று விழுவதுபோல் விலகிப் தோன்றுகிறது.
போகிறான்.. அம்பாரம் பத்தெட்டில் இருக்கிறது. நிலவு ஏறியிருப்பதால் வெளிச்சத்துக்கு விளக்கொன்றும் தேவையாக இல்லை. தொலைவில் அறவைக் கொட்டடியில் விளக்கொளி தெரி கிறது.
கங்காணி நிறுவைக் கொக்கியைத் தொங்கவிடுகிறான். திமுதிமுவென்று ஆண்களும் பெண்களுமாக மலையைப் புன்னி எடுத்து வாய் பிளக்கும் சாக்குகளில் கொட்டுகின்றனர். தரகனும் அளத்துக் கணக்கப்பிள்ளையும் பேசிக்கொண்டு, நிற்கின்றனர்.
சரேலென்று கங்காணியிடம் வந்து மூட்டைகளை முக்காலாக்கி மடித்துத் தூக்கச் சொல்கிறான் தர்கன் நெருப்புக் குச்சியைக் கிழித்து ஆறுமுகம் பார்க்கிறான்.
50 கிலோ…
சின்னமுத்து இன்னும் ஒரு பெட்டி உப்பை மூட்டையை விரித்துக் கொட்டுகிறான். சரசரவென்று கைகளைக் குத்தும் பருமணிகள்.
”வாணாம்,கொட்டாதிய!” என்று தரகன் குரல் கொடுக்கிறான்.
“ஏன்?…” எல்லோருடைய குரலும் ஒன்றாக உயருகிறது,
“அம்பது கிலோ மூடைதா!”
“அப்ப கூலி அதேதான?”
“அதெப்படி அம்பதும் எழுபத்தஞ்சும் ஒண்ணாவும்?. அம்பதுன்னா தூக்கிப் போடுறதுக்கு அடுக்கறதுக்கு சல்லி சாவும்…விரிசா வேல முடியும்…” என்று வித்தாரம் பேசுகிறான் தரகன்.
“மூடை எல்லாம் ஒண்ணுதான்? கூலி அதே பத்தொம்பது பைசாதான?” என்று சின்னமுத்து கேட்கிறான்.
“அதெப்படியாவும்? அம்பது கிலோ மூட்டைக்கு ஒம்பது பைசா கூலி, மூடை நிறையக் காணுமில்ல?”
இரவின் அமைதியில் கடல் நீரில் தோய்ந்து வரும் குளிர் காற்று உடலுக்குச் சுகமாக இல்லை. அது குளிர் திரியாகப் பாய்ந்து உடலைக் குலுக்கிக் கொள்ளச் செய்கிறது. ராமசாமி குரலெழுப்புகிறான்.
“ஏன்வே, பச்சைப்புள் ளியளா நாங்க, விளையாடுறீம்? நூத்தம்பது கிலோ ரெண்டு மூடை முப்பத்தெட்டுப் பைசா. அம்பது கிலோ மூடை மூணுக்கு இருவத்தேழு பைசா ! ஒங்க திரியாவரமெல்லாம் இங்க செல்லாது. கொரச்ச துட்டுக்கு அதிக மூடை…! இந்தாங்க? ஆரும் உப்பத் தொடாதிய? போட்டா இத்தினி நாளும் வழக்கத்துல இருக்கிறாப்பல எழுவத்தஞ்சி கிலோ, பத்தொம்பது பைசா இல்லேண்ணா…”
“இல்லேன்னா தொடாதிய, போங்க! இப்ப நேத்து முந்தாநா இதோ அம்பது கிலோ மூடை பத்து லாரி அடிச்ச. ஆளா இல்ல?” என்று தரகன் வீராப்புப் பேசுகிறான்.
ஆறுமுகமோ சங்கடத்துடன், “ராமசாமி, தவறாறு பண்ணாதப்பா, இப்ப இப்பிடித்தா அம்பது கிலோன்னு மூடை போடுறா. இதா வழக்கமாப் போச்சு!” என்று அவனைச் சமாதானம் செய்கிறான்.
கங்காணிக்கும் கூலி குறையுமே!
“அண்ணாச்சி, வந்தது வரட்டும். இன்னிக்குப் போராடத்தாம் போறம். இது ரொம்ப ஏமாத்து. அப்ப மூடைக்குப் பதிமூணு காசு குடுக்கட்டும்?”
“அட்வான்ஸ் வாங்கிட்டு உப்பத் தொட மாட்டமுன்னா எவுள்ளியளா? சாக்கப் புடிச்சி உப்பைக் கொட்டுங்க! நேத்து முந்தாநா அம்பதுக்கு நீங்க துட்டு வாங்கல? இந்தப்பய பனஞ்சோல அளத்துல தவராறு பண்ணிட்டு இங்க வந்திருக்கா. இவனைச் சேத்ததே தப்பும். ஆவட்டும்!”
தரகன் குரல் ஓங்குகிறது. கங்காணியும் சேர்ந்து கொள்கிறான்.
“அளத்துல லாரி வந்து நிக்கிது; இப்ப என்ன தவராறு? அம்பதுன்னா அம்பதுதான்…”
“இது அநியாயம். ஏமாத்தல்…”
“ராமசாமி மொத நாளே நீ மொறச்சா போச்சு, ஒனக்குதா நட்டம்.”
“அண்ணாச்சி,ஒங்கக்கே இது நாயமாத் தோணுதா?. நாம். ஒத்துமையா இருந்துதா இவனுவ அக்கிரமத்த முறிக்கணும். எழுபத்தஞ்சு கிலோ மூடைதானே வழக்கம் முறை? இது அநியாயக்கூலிக் குறைப்பு இல்லையா?” என்று ராமசாமி பொங்குகிறான்.
“இப்ப இதுதா நடைமுறை. இப்ப வேலை தொடங்கல தான் வேற நடவடிக்கை எடுப்பேன்…” கணக்கப்பிள்ளையின் காதைக் கடிக்கிறான் தரகன்.
கங்காணி ராமசாமியிடம் வந்து சங்கடத்தை எடுத்துரைக்கிறான்.
“வளஞ்சுதாங் குடுக்கணும், என்னேய பின்ன? வீணா தவறாறு பண்றது தா மிஞ்சும். அவ இப்ப போன் பேசுவா போலீசக் கூப்பிடுவா, தரகன் கணக்கப்பிள்ள எல்லாம் பெரியவிய பக்கம். மொதலாளிய கூட்டாயிடுவா. நமக்குத்தா கஷ்டம். ஒன்னக் கெஞ்சுத….”
வேறு வழியில்லை. எழுபத்தைந்து கிலோ மூட்டையைத் தைக்க இடுப்பொடியாது
ஐம்பது கிலோ மூட்டை தைக்க இடுபொடிகிறது.
“உலகத் தொழிலாளரே, ஒன்று படுங்கள்… ஒன்று – ஒன்று படுங்கள்…”
அது நடக்குமோ!
ராமசாமி குத்துப்பட்ட மென்மையான உணர்வுகளைக் கடித்துக் குதறித் தொண்டைக் குழிக்கக் கீழ் தள்ளுவது போல் விழுங்கிக் கொள்கிறான்.
மேலே வெண்துகில் வீசி மூளிச் சந்திரிகையை மறைக்கிறது வானம்.
வெண்மைக் குவியல்களை மனிதக் கூறுகள் தமது மூச்சுக் காற்றைப் பிழிந்து சாக்குப் பைகளில் நிரப்பி வண்டியில் ஏற்றுகின்றன.
அத்தியாயம்-18
நீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதோதே. பெயர் தெரியாத பறவை யினங்கள்…ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில் கீதமிசைக்கிளற்ன. அவற்றுக்குச் சோற்றுக் கவலை, தொழிற் கவலை கல்யாணக் கவலை, பிள்ளை குட்டிக் கவலை எதுவுமே இல்லை. அந்தந்த நேரத்து இயற்கை உந்துதலுக்கேற்ப வாழ்கின்றன. ஒரு பறவை பட்டினி கிடந்து செத்ததாகத் தெரியவில்லை. மனிதன் அறிவு பெற்றிருக்கிறான். ஒருவன் மற்றவனை அமுக்கி வாழ்வதே அறிவு பெற்றதன் பயனாக இருக்கிறது. இந்த இடைவிடாத போராட்டம்தான் எல்லா நிலைகளிலும் என்று நினைத்துக் கொண்டு அருணாசலம் நடக்கிறார்.
அவர் சற்று முன்தான் தூத்துக்குடியிலிருந்து வரும் முதல் காலை பஸ்ஸில் வந்து இறங்கினார். நேராக வீட்டுக்குள் செல்லாமல் அளத்துக்கு நடக்கிறார். முதல்நாள் மாலையில் சென்றிருந்தவர், இரவே திரும்பியிருக்கலாம். ஆனால், கூட்டத்தில் உட்கார்ந்து விட்டார். பொழுது சென்றது தெரியவில்லை. பொன்னாச்சிக்காக அந்தப் பையனைக் கண்டு வரத்தான் அவர் சென்றிருந்தார். அவன் வீட்டுப் பக்கமே மண் திடலில் எல்லோரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கங்காணிமார். பெண்கள், கூலிக்காரர்கள் எல்லோருமே இருந்தார்கள். தொழிற்சங்கத்துத் தனபாண்டியனும் இருந்தான்.
“தொழிலாளிகளை ஒண்ணு சேக்கறதுன்னா மம்முட்டி, கடப்பாரை, தடி இதுங்களை வச்சிட்டு வேலைக்கிப் போனா கை வேறு கால் வேறாக்கிடுவம்’னு பயமுறுத்தித்தான் ஆகணும்னா, அந்த அடிப்படையே சரியில்லை” என்று பேசிக் கொண்டிருந்த இளைஞன்தான் ராமசாமி என்று தெரிந்து கொண்டபோது மனதுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டார்.
“தொழிலாளிகள் தங்கள் நிலைமைகளை உணர்ந்து ஒண்ணு சேரணும்!” என்று அவன் கூறிய போது ஒருவன் நையாண்டி செய்தான்.
“கொக்கு தலையில் வெண்ணெய வச்சுப் பிடிக்கிற கதை தா அது. இப்ப தொழிலாளியெல்லாம் உணராமயா இருக்காவ? உணந்துதா அணு அணுவாச் செத்திட்டிருக்கம்!”
“அது சரி, இங்கே ஒரு பேச்சுக்குச் சொல்லுற குடி தண்ணி இங்கே இல்ல. எத்தினி காலமாவோ எல்லாப் பொண்டுவளும் பாத்திக் காட்டுல உழ்ச்சிட்டு வந்து மைல் கணக்கா தவ தண்ணிக்கும் நடக்கா. இது ஒரு மனு எழுதிச் சம்பந்தப்பட்டவங்ககிட்டக் குடுக்கணுமின்னோ எல்லோரும் சேந்து கூட்டாக் கூச்சல் போட்டுக் கேட்கணுமின்னோ ஆரு வழி செஞ்சிருக்கா? நமக்குப் பிரச்சினை ஒண்ணா, ரெண்டா? வெளி உலகமெல்லாம் திட்டம் அது இதுன்னு எத்தினியோ வருது. எது வந்தாலும் நம்ம வாய்க்கும் எட்டுறதில்ல. இந்தப் பிள்ளங்களுக்குப் படிக்கணுமின்னாலும் வசதியில்ல. தானும் ஒண்ணேகா ரூவாக் கூலிக்கு உப்புக் கொட்டடிக்குத் தாம் போன.அதே படிக்க வசதி இருந்தா வேற விதமா முன்னுக்கு வந்திருக்கலாம். நம்ம உலகம் உப்பு உப்புன்னு முடிஞ்சி போவு. கரிப்பிலியே இந்தத் தொழிலாளி அழுந்திப் போறா. இதுக்கு ஒரு நல்ல காலம் வரணுமின்னா நாம முன்னேறணும்னு நினைச்சு ஒண்ணு சேந்துதா ஆகணும்…”
அந்தச் சொற்கள் அவரது உள்ளத்தில்’இன்னமும் எதிரொலிக்கின்றன. பொன்னாச்சியை அவனுக்குத்தான் கட்டவேண்டுமென்று. அவர் முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தாயை அவரால் முதல் நா பார்த்துப் பேச முடியவில்லை. பையனை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் பேசினார்.
தங்கபாண்டி ஓடை தடந்து வண்டி ஒட்டிக்கொண்டு வருகிறான். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு அவர் நிற்கிறார்.
“நேத்து “நீரு எங்க போயிருந்தீரு மாமா?” என்று கேட்ட வண்ணம் அவன் வண்டியை விட்டிறங்கி வருகிறான்.
“நேத்து நீ உப்பெடுக்க வந்தியா?”
“நா வரல மாமா. தீர்வ கட்டலன்னு முனுசீப்பு ஆளுவ உப்பள்ள வாராவன்னாவ ஆச்சி புருவருத்திட்டிருந்தா…”
அவர் திடுக்கிட்டுப் போகிறார். அவர் வீட்டி ஆச்சி யைப் பார்க்கவில்லை. சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அறைச்சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.
அவர் உடனே பரபரப்பாக அளத்தை நோக்கி விரைகிறார்.
முனிசீப்பு அவ்வளவுக்குக் கடுமை காட்டிவிடுவாரோ?
யாரும் வந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார். அவர் வரப்பில் வாரி ஒதுக்கிய உப்பு அப்படியே தானிருக் கிறது. தீர்வை கட்டவில்லை. இரண்டாண்டுத் தீர்வை பாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லை. வரும் ஆண்டுடன் குத்தகையும் புதுப்பிக்க வேண்டும். இருநூறு ஏக்கர் கூட்டுறவு உற்பத்தி நிலம் என்று பேர் வைத்துக் கொண்டு பத்து ஏக்கர் கூட உற்பத்தி செய்யவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்து விடுவதற்கு அவர்களுக்கு. அதிகாரம் உண்டு என்று அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்த அச்சம் வேறு ஒரு புறம் அவருள் கருமையைத் தோற்று விக்காமல் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேல், அப்படி. யெல்லாம் நடக்காது என்ற ஓர் தைரியம் அவருக்கு, எப்போதும் இருக்கிறது.
தங்கபாண்டியிடம் கோபம் வருகிறது.
“ஏன்ல பொய் சொன்ன?”
“நா ஆச்சி சொன்னதைக் கேட்டுச் சொன்ன, அப்ப இன்னிக்கு வாராவளா இருக்கும்…”
“அவெ உப்ப அள்ளி ஒனக்குக் கொள்ளா வெலக்கிக் குடுப்பான்னுதான் சிரிக்கே?”
முன் மண்டையில் முத்தாக வேர்வை அரும்புகிறது அவருக்கு.
“கோவிச்சுக்காதிய மாமா வண்டி கொண்டாராட்டுமா உப்பள்ளிப் போகட்டுமா?”
“எலே…. இங்கி வாலே… ஒங்கிட்ட ஒரு ஒதவி வேணும்.”
அருணாசலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முன் மண்டையைத் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.
“சொல்லு மாமா!”
“ஒரு அந்நூறு ரூவா வேணும்ல. வட்டுக் கடனாக் குடுத்தாலும் சரி…”
அவனுடைய கண்களில் ஒளிக்கதிர்கள் மின்னுகின்றன.
“இப்ப மொடயா மாமா? வட்டுக் கடன் வாங்கித் தீர்வை கட்டவா போறிய?”
“வேற மொடயும் இருக்குலே. ஒங்கிட்ட இருக்குமா?”
“அண்ணாச்சிட்டத்தா கேக்கணும் எப்படியும் இந்தப் புரட்டாசிக்குள்ள மழக் காலம் வருமுன்ன கலியாணம் கெட்டி வய்க்கணும்னு மயினியும் சொல்லிட்டிருக்கா. பொண்ணு ரெண்டு மூனு பாத்து வச்சிருக்கா, ஆனா எனக்குப் பிடித்த மில்ல…”
“புடிச்ச பொண்ணாப் பாத்துக் கெட்டு, ஒனக்குப் பொன்னா இல்ல?”
“ஒங்கிட்டச் சொல்றதுக்கென்ன மாமா? பொன்னாச்சிப் புள்ளயத்தா மனசில இட்டமாயிருக்கு…”
“ஒங்கிட்டப் பணம் இருந்தாக் குடு. இல்லேன்னா வேற தாவுலன்னாலும் ஏற்பாடு பண்ணித்தாலே. ஊரூரு பஸ் சார்ச்சி குடுத்திட்டுப் போயி அவனவங்கிட்டத் தீர்வை பிரிக்க வேண்டியிருக்கு. ஒரு பய கண்ணுல அம்புடறதில்ல. வேலை செய்யிறா, நல்ல துணி போடுறா, பொஞ்சாதிப் புள்ளய கூட்டிட்டுச் சினிமாவுக்குப் போறா. இதுக்குத் தீர்வை ரெண்டு ரூபா குடுக்கணும்னா இப்ப கையில பைசா இல்லைன்றா, இது கூட்டுறவா? கமிட்டிக்கார, பேர் போட்டுக்கதா கமிட்டிக்காரன்னு நினய்க்கா…” என்று வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார் அருணாசலம்.
“பாக்கேன் மாமா, எங்கிட்ட இருந்தா அட்டியில்ல. ஒங்கக்குக் குடுக்க என்ன மாமா? ஆனா வட்டிதா முக்கா வட்டி ஆவுமேன்னு பாக்கேன். தவற தாவுல தா வாங்கணும்…”
வட்டிக்குச் சோம்பினா முடியுமா? தொழிலாளி நிலைமை வட்டிக்கு வாங்கறாப்பலதான இருக்கு? வங்கில கடன் கொடுக்காங்க. தொழிலாளிய நம்பி எவன் ஷுர்ட்டி போடுறா?”
அருணாசலம் அவனுடைய ஆசையையும் எதிர்பார்ப்பை யும் புரிந்து கொண்டுதான் அவனுக்கு நம்பிக்கை கொடுப்பது போல் நடிக்கிறார். அவனை ஏமாற்றுவதற்குக் கஷ்டமாகத் தானிருக்கிறது.
ஆனால் பொன்னாச்சி ராமசாமிக்கே உரியவள் என்று அவர் தீர்மானித்து விட்டார். தங்கபாண்டியைப்போல் பலரைக் காண முடியும். அவன் துட்டுச் சேர்ப்பான். பெண்ணைக் கட்டுவான். நகை நட்டுப் போட்டு இரண்டு நாள் கொஞ்சி விட்டு மூன்றாம் நாள் அடித்து அதிகாரம் செய்வான். குடிப்பான்; நகையை வாங்கி அடகு வைப்பான், இங்கே பாலம் இவன் தொழில் படுத்துவிடும். (‘பாலமாவது வருவதாவது’ என்று அவரைப் போன்றவர்கள் அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்கலாகாது!)
ஆனால் ராமசாமியோ, ஆயிரத்தில் ஒரு பையன். மாசச் சம்பளம், அவனுக்கென்று அவர்கள் காட்டிய ‘தயாளம்’ எல்லாவற்றையும் பொது இலட்சியத்துக்காக உதறி விட்டு வந்திருக்கிறான். தலைவன் என்று சொல்லிக் கொண்டு வரும் ஆட்களிடம் இல்லாத நேர்மை இவனுக்கு இருக்கிறது. அவன் தலைவனாக வருவான். அவனுக்குப் பெண்ணைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்வது அவருக்குப் பலம்; பொன்னாச்சி அவனிடம் இட்டமாக இருக்கிறாள். அவன் தான் சிறந்தவன். அதற்காக இவனை ஏமாற்றலாம்…”
“ஏல…ஆச்சியிட்ட மூச்சி விட்டிராத…பத்திரம்!” என்று எச்சரித்து வைக்கிறார்.
அவன் சிரித்துக் கொள்கிறான். “பொன்னாச்சிய எப்ப மாமா கூட்டிட்டு வாரிய? மானோம்புக்குக்கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கல அந்த வுள்ள?”
“கூட்டிட்டு வாரணுந்தா. ஒனக்குத் தெரியாதா தங்க பாண்டி வந்தா ஒரு சீவை எடுத்து நல்லது பொல்லாது செய்யணும். இங்க என்ன இருக்கு? இந்தப் பய்யன் படிச்சு முடிச்சு வாரங் காட்டியும் குறுக்கு முறிஞ்சிடும், போல இருக்கு. ஏதோ அப்பன், சின்னத்தா என்னிக்கிருந்தாலும் தாயோடு பிள்ளையோடு போக வேண்டியது தான?…”
“அது சரி. பொன்னாச்சி எங்கிட்டச் சொல்லிட்டுத்தா பஸ் ஏறிப்போச்சு…”
அவன் மீசையைத் திருகிக்கொண்டு சிரித்துக்கொள்கிறான்.
“அப்பிடியா?” என்று அவர் வியந்தாற்போல் கேட்கிறார்.
“ஆமா… பணம் எப்பவேணும் மாமா?”
“நாளைய கொண்டாந்தாலும் சரி, நா நோட்டு எழுதிக் குடுக்கே.”
“அதுக்கென்ன மாமா, ஒங்க பணம் எங்க போவு?”
அவன் ஆசை நம்பிக்கையுடன் வண்டிக்குச் சென்று ஏறிக் கொண்டு போகிறான்.
ஐநூறுரூபாய் கைக்கு வந்ததும், அந்தத் தாலியை மூட்டு விடவேண்டும். ஒரு சேலை, இரண்டொரு பண்டங்கள் வேட்டி எல்லாம் வாங்கி, திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கல்யாணம்… கல்யாணம்… அவர் தொழியைத் திறந்து விட்டு கிணற்றில் நீரிறைக்கத் தொடங்குகிறார்.
ஆச்சி குளிக்க அவ்வளவு காலையில் சென்றிருக்க மாட்டாள். முன்சீஃப் வீட்டுக்குச் சென்றிருப்பாளோ?
பசி கிண்டுகிறது.
குழந்தைகள் அவர் வந்துவிட்டதைச் சொல்லியிருப் பார்கள். உப்பை வாரிப்போட வேண்டும். அவள் வரு வாளோ? சற்றே ஆசுவாசமாகச் சார்ப்பு நிழலில் அமர்ந்து கொள்கிறார். அவள் தலையில் வட்டி, இடுப்பில் மண்குடம் சகிதமாக வருவது தெரிகிறது. சோறு கொண்டு வந்திருப்பாள்…
அவள் அருகே வந்ததும் நல்ல நீர்க் குடத்தை வாங்கி வைக்கிறார். தலைச்சுமையையும் இறக்கியதும் அவள் சேலை மடிப்பிலிருந்து ஒரு பழுப்பு நிறக் கடித உறையை எடுத்து அவரிடம் கொடுக்கிறாள். ‘துணைச் செயலாளர்’ கூட்டுறவு உப்புத் தொழிலாளர் உற்பத்தி விற்பனைச் சங்கம் என்று போட்டு மேலிடத்திலிருந்து வந்திருக்கும் கடிதம்.
“தீர்வை கட்டச் சொல்லி வந்திருக்கிற நோட்டீசுதான? இந்த மூட்டகட்டிக்கிட்டு வந்தியாக்கும்!”
“எனக்கு என்னனெளவு தெரியும்? வள்ளிப் பொண்ண வுட்டுப் படிக்கச் சொன்ன. நேத்து முன்சீஃப் வீட்டு ஆச்சி சொன்னால். லீசைக் கான்சல் பண்ணிடுவாகன்னு. என் னவோ பாட்டரி வர போவுதா? அவிய பாலங்கீலம் போட் டுக்குவாகளாம்! என்ன எழுதியிருக்குன்னு எனக்கென்ன எளவு தெரியும்?””
அவருக்குக் கை நடுங்குகிறது. கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது. “கண்ணாடி கொண்டாந்தியா?”
“கொண்டாந்திருக்கே!” என்று பனநார்ப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்கிறாள்.
அவர் கைகளைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியை மாட்டிக் கொண்டு கடிதத்தைப் பிரிக்கிறார். அருணாசலத்துக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் இப் போதெல்லாம் கூட்டுறவுச் சங்கக் கடிதங்கள் தமிழில் வருகின்றன. அவர்களுடைய நிலக் குத்தகை இருபது ஆண்டு கள் முடிந்து விடுவதாலும், மூன்று தீர்வைகள் கட்டியிரா ததாலும், நில்க் குத்தகை இனி புதுப்பிக்கப்படுவதற்கில்லை என்றும் கடிதம் தெரிவிக்கிறது.
முன்பே அந்த அதிகாரி “இருநூறு ஏகராவில் பத்தே ஏகராக்கூட நீங்கள் உப்பு விளைவிக்கவில்லை. இது எப்படிக் கூட்டுறவுச் சங்கம் நன்றாக நடப்பதாகக் கொள்ளமுடியும்?” என்று கேட்டார்.
நிலம் பட்டா செய்யும் போது எல்லோரும் வந்தார்கள். இப்போது…
அவருடைய கண்களிலிருந்து கரிப்பு மணிகள் உதிருகின்றன.
– தொடரும்…
– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.
![]() |
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது. 1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க... |