கண் சிமிட்டும் வானவில்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 244 
 
 

அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16

அத்தியாயம் 13 – பிரபுவின் கோபம்?

பிரபுவின் முகம் சிவந்து போயிருந்தது. யாரிடம் போய் முட்டிக்கொள்வது என்று புரியவில்லை.

கண்ணன் இவ்வளவு சின்னபிள்ளைத்தனமாக நடந்து கொள்வான் என்று எதிர் பார்க்கவில்லை. நரேனுக்கும் வசந்த்திற்கும் தன் மேல் சந்தேகம் வந்து விட்டது புரிந்தது.

அவர்கள் சித்தரின் கல்லறையிலிருந்து அந்த ஆல காலச் செடியை பிடுங்கிக் கொண்டு போய் விட்டால், பின்னர் மந்திரியின் முகத்தில் விழிக்க முடியாது. ஏற்கனெவே இரண்டு மூன்று முறை பணம் தந்ததைச் சொல்லிக்காட்டி கத்திவிட்டார். இதிலே, நாளைக்கே, களக்காட்டுக்கு வரப்போகிறாராம். வந்தால் அவ்வளவு தான்..

என்ன செய்யலாம்?

ஒன்றுமே புரியவில்லை.ஒழுங்காக, மந்திரியிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாமா? ச்சே! பெரிய பணம். அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுத்து விட முடியாது.

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாமென்று சொல்வார்கள். ஆனால் அதன் பிறகு, நரேனுக்கும் வசந்த்திற்கும் நம்மேலிருந்த மதிப்பு அதலப்பாதாளத்திற்குப் போய் விடும்.

இவ்வளவும் செய்து விட்டு, முன்னறையில் நாற்காலியை இழுத்துப்போட்டு சாவகாசமாக மொபைலில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனை நினைத்து அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை.

“கண்ணன் இங்கே வாப்பா?” என்றார்.

அவனும் மொபைலை மூடிவிட்டு “எஸ் சார்” என்றான்.

“நீ காட்டுக்குள்ளேயிருந்து வெளியே வரும்போது, உண்மையிலே வசந்த், அங்கேயிருந்து போய்விட்டானா?”

“ஆமா சார். நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தேன்.அவனைக் காணாததினாலே, அவன் போய்விட்டான் என்று நினைச்சிட்டு நானும் திரும்ப வந்து விட்டேன். ஆங்.. சார்.. ஆட்டோகாரனுக்கு அறு நூறு ரூபாய் என் பாக்கெட்டிலிருந்து கொடுத்தேன் சார்” என்றான்.

கோபம் தலைக்கேற, “இந்தா.. எவ்வளவு? எடுத்துக்கோ” என்று கத்தினார்.

“ஏன் சார் கத்தறீங்க.. அவ்வளவு முக்கிய செடியா அது?…” மெதுவாகக் கேட்டான்

“முட்டாள், முட்டாள்… கோட்டை விட்டுட்டு வந்துட்டு எங்கிட்டே கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கே.. அந்த வசந்த் அந்தச் செடியை சித்தர் புதைத்த இடத்திலிருந்து பிடுங்கிட்டுப் போயிருந்தா… அப்புறம்… குடி முழுகிப்போய் விடுமடா… இப்ப என்னச் செய்றது?” தலையைப் பிடித்துக்கொண்டார் பிரபு.

“சார்.பேசாமல் இன்னொரு முறை நாம் அவங்களை ஆஸ்பத்திரியிலே போய் பாத்தா…” என்று சொல்லி முடிப்பதற்குள், “பிரமாதம். கண்ணா என் வயிற்றிலே பாலை வார்த்தாய். அவன் திரும்பி வருவதற்குள் நாம் ஆஸ்பத்திரி வாசலிலேயே அவனைப் பிடித்து விடலாம். சரி உடனே காரை எடு” வேகமாக கீழே இறங்கினார் பிரபு.

கண்ணன் வேகமாக காரை ஓட்ட, பிரபுவின் அலை பேசி ஒலிக்க அவர் எடுத்துப் பேசினார்.

“என்ன பிரபு… நாளைக்குள்ளே அந்த ஆல காலச் செடி நம்ம கையிலே கெடச்சிருமில்ல..” என்றார் எதிர் முனையில் அமைச்சர்.

முதலில் மவுனமாக இருந்த பிரபு, திரும்பவும் அமைச்சர் கத்த ஆரம்பிக்க, “ சார். உங்களை விட நான் அதிக டென்சனிலே இருக்கேன். நீங்க வர்றதுக்குள்ளே எப்படியாவது வானத்தை வளைச்சாவது கொடிய கொண்டு வந்துருவேன் சார்” என்றார்.

“என்ன செய்வியோ பிரபு.. நான் என் ப்ரோகிராம் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு நாளைக்கு களக்காட்டுக்கு வர்றேன். வந்ததும் என் கைக்கு அந்தச் செடி வந்தாகணும். அந்தக் கம்பெனிக்காரன் சும்மா கெடந்து கூவிக்கிட்டே கெடக்காம்பா… என்ன செய்யிறது… கைய நீட்டி பணத்தை வாங்கியாச்சி.. நீயும்… என்னவோ கடையிலே வாங்கி வச்சிருக்கிறத மாதிரி வந்த உடனே எடுத்து தர்றேன்னு பணத்தை வாங்கிட்டு வநதாய்… ம்… என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது… நான் நாளைக்கு களக்காட்டுக்கு வந்ததும் என் கைக்கு அந்தச் செடி வந்தாகணும். ஞாபகம் வச்சிக்க…” என்றார் கோபமாக

“சரி சார்” என்று ஈனஸ்வரத்தில் பதிலளித்து விட்டு, கண்ணனை முறைத்துப் பார்த்தார் பிரபு.

அத்தியாயம் 14 – நெய்லியும் இலண்டன் குழுவும்…

மும்பை அகில உகில சத்திரபதி சிவாஜி மஹாராஜ் விமான நிலையத்தில் இறங்கிய விமான நிலையத்தில் நெய்லியும் அவளோடு லண்டனிலிருந்து வந்த குழுவினரும் இறங்கி அங்கிருந்து உள்ளேயிருந்த பேருந்தில் ஏறி வேறு விமானத்தில் (டிரான்ஸ்பர் டெஸ்க்) ஏறுவதற்காக விமான நிலையத்திற்குள் வந்த போது, கவிதா (வசந்தின் காதலி)வின் அலை பேசி எண் அலற, நெய்லி எடுத்துப் பேசினாள்.

”என்ன கவிதா சொல்லு? என்ன செய்தி?” என்றாள் நெய்லி

“எங்கே இருக்கிறாய் நெய்லி?”

“மும்பை ஏர்ப்போர்ட்டில் இருக்கிறேன். என்னப்பா … ரொம்ப பதட்டமாக இருக்கிறாய்? ஏய்… என்ன செய்தி”

“ நேற்று சாயங்காலத்திலிருந்து வசந்த் அலை பேசி வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் நரேனுக்கு வேறு அலைபேசியில் முயன்று பார்த்தேன். அவரும் மருத்துவ மனையிலிருக்கிறார் என்று நீனைக்கிறேன்.

அவரும் போனை எடுக்க மாட்டேன் என்கிறார்.. நாம் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகி விட்டதோ என்று பயமாக இருக்கிறது.” கொஞ்சம் பதட்டத்தோடு பேசினாள் கவிதா.

“ஏய்.. ஒன்றும் கவலைப்படாதே. அலைபேசியில் என்ன பிரச்சினையோ?”

“ஆமாம். நீங்கள் எங்கே… மும்பை பக்கம்?”

“ஓ… உனக்கு செய்தி தெரியாதா?. நாம் கை நீட்டி அட்வான்ஸ் வாங்கினதால அந்த லண்டன் மெடிக்கல் கம்பெனி க்ரூப் நம்மள வெரட்ட ஆர்ம்பிச்சிருச்சு. சொல்லி சொல்லிப் பார்த்தேன். கேட்கல… என்னையும் கூட்டிகிட்டு நேரே களக்காட்டிற்கு கிளம்பிட்டாங்க…”

“ஆமா.. மும்பைங்கிறீங்க…..”

“இங்கேயிருந்து அடுத்த பிளைட் தூத்துக்குடி.. அங்கேயிருந்து நேரே காரிலே களக்காடு” பெருமூச்சு விட்டாள் நெய்லி.

“சரி. அங்கே போய் என்ன செய்யப் போறீங்க?”

“அது தான் எனக்கும் புரியவில்லை. நரேன் வேறு ஆஸ்பத்திரியிலே இருக்கார். வசந்தோட போன் வரலங்கிரே… அங்கே போய் என்ன செய்யப் போறோம்கிறத நெனச்சா தான் மலைப்பாக இருக்கிறது.. அவங்க வேற தொண தொணண்ணு என்னாச்சு… ஆல காலச் செடி கிடைச்சிதாண்ணு தொளச்சித் தள்ளுறாங்க.. ம்ம்ம்ம்ம்….அங்கே போய் பார்க்கலாம்… நீ ஒண்ணு பண்ணு. ஆபீஸிலே லீவு போட்டுட்டு உடனே கெடைக்கிற சென்னை பஸ்ஸிலே புறப்பட்டு களக்காட்டுக்கு வா.. நாளைக்கு காலையிலே அங்கே சந்திக்கலாம்”

“ம்ம்ம்… பார்க்கிறேன். நெய்லி. இங்கே லீவுண்ணாலே ஒரு மாதிரி பார்க்கிறானுக.. சரி ஏதாவது சொல்லி சமாளிச்சிட்டு வர்றேன்”

“சரி. நரேன் கிட்ட சொல்லி உனக்கும் ஹோட்டல் ரீமாவில் ரூம் போடச் சொல்றேன். வந்து எறங்கினதும் போன் பண்ணிட்டு நேரே ஹோட்டலுக்கு வந்துடுடி. அப்புறம் என்ன செய்யலாம்ணு யோசிக்கலாம்”

“சரி ”என்று போனை வைத்தாள் கவிதா.

உடனே அலைபேசியில் நரேனை அழைத்தாள் நெய்லி.

“என்ன நெய்லி. எங்கே இருக்கீங்க… என்ன அந்தப் பசங்க ரொம்ப வெரட்டறாங்களோ?’ என்றான் எதிர் முனையில் நரேன்

“ ஏய்.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அது சரி வசந்த்… காட்டுக்குள்ளே போய் ஆலகாலச் செடியைப் பிடுங்கிட்டு வரப்போறானாரே… என்னாச்சு?”

“அது தான் எனக்கு கொஞ்சம் கவலையாக இருக்கிறது… இந்தா செடியப் பாத்துட்டேன்னு போன் பண்ணிணான்.. அப்புறம் அவன் போன் அடித்துக் கொண்டிருந்தது. அவன் பேசவே இல்லை. இப்போ என்னண்ணா போன் ஸ்விச் ஆஃப்ணு வர்து. அதில வேற என்ன ஆச்சரியம்ணா.., அவனைக் கூட்டிடுப் போன ரமணிங்கிற ஆட்டோ காரன் போனும் ஸ்விச் ஆஃப்ணு வருது. நான் வேற ஆஸ்பத்திரியிலே எழும்ப முடியாமற் கிடக்கிறேன்”

“சரி.. நாளைக்கு நாங்கள் அங்கே வந்து விட்டு என்ன செய்யட்டும்?”

“ ஒண்ணு பண்ணுங்க.. நேரா ஹோட்டலுக்குப் போய் ஃப்ரஸ் அப் ஆகிட்டு ஆஸ்பத்திரிக்கு வாங்க. என்ன செய்யணும்ணு முடிவு பண்ணுவோம். என்னால எழும்ப முடிஞ்சா” என்று அவன் முடிப்பதற்குள்…

“உனக்கு அவ்வளவு பலமான அடியா?”

“அப்படின்னா நீ நம்பலியா?. யானை தூக்கி வீசியிருக்கிறது… வா… நேரிலே வந்து பாத்தியண்ணா எல்லாம் புரியும்”

“எலும்புலே ஏதாவத்…”

“ நல்ல வேளை. விழுந்த எடத்துல செடியும் செத்தையும் கெடந்ததினால எலும்பு முறிவு ஒண்ணுமில்ல”

“எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பாத்தாச்சா?”

“எல்லா செக்கப்பும் முடிஞ்சாச்சு. அடிபட்டதில எழும்பி நடக்க முடியல. வா… எல்லாம் நாளைக்குப் பாக்கத்தான போற…”

“ஆங்… சொல்ல மறந்துட்டேன். நாளைக்கு கவிதாவும் அங்கே களக்காட்டுக்கு வாறா… அவளுக்கும் நாங்க தங்கிற ஹோட்டல் ரீமாவில ஒரு ரூம் போட்டுடு”

“அவ எதுக்கு இந்த நேரத்தில…?”

“ஏற்கனவே வசந்த் போன இடத்தில என்ன ஆச்சோண்ணு பயப்படுறா… அவன் போன் வேற ஸ்விச் ஆஃப்ணு வர்து. அவளும் வந்து என்ன நடக்குண்ணு பார்த்துட்டு போகட்டுமே”

“ஆமா. இங்க திரு நாள் நடக்குது. வந்து எல்லாரும் பார்த்துட்டுப் போங்க..”

“ஏய். வீணாக் கோபப்படாத… அவளுக்கும் போன் பண்ணி ஒரு ரூம் போட்டுரு…”

“சரி. ஆங்… எங்க ஆபீஸர் பிரபு கிட்டயிருந்து ஏதாவது போன் வந்ததா?

“இல்லேப்பா… என்ன செய்தி? திடீர்னு கேக்கிற”

“ஒண்ணுமில்லே… அவர் எங்கள கண்காணிக்கிற மாதிரி தோணுது. அதான் கேட்டேன். சரி. நாளைக்கு வந்து சேரு. மற்றதெல்லாம் அப்ப பேசிக்கலாம்”

“சரி”

“அவ்வளவு தானா?”

நரேன் குரலில் வழிந்த காதலைப் புரிந்து கொண்ட நெய்லி, “சீ… ஏர்ப்போர்ட்டிலே இருக்கேன். அப்புறம் பார்க்கிறேன்”

“சரி… நாளைக்காவது உண்டா?”

“ஆமா… எப்பவும் அந்த ஞாபகத்திலே இரு…” போனை வைத்தாள் நெய்லி….

– தொடரும்…

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *