கண் கண்ட தெய்வம்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 49

தனது அறைக்குள் நுழைந்த சுந்தரேசன், மேசையின் மீது கம்பீரமாய் வீற்றிருந்த அந்த அலாரக் கடிகாரத்தையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். காலத்தால் பழமையானாலும், அதன் வெண்ணிறப் பளபளப்பு சற்றும் குறையாமல், ‘டிக்… டிக்…’ என சீரான இதயத்துடிப்பைப் போல அது இயங்கிக் கொண்டிருந்தது.
திடீரென நினைவுகள் சுழன்றடிக்க, தலை சற்று கனப்பது போல் தோன்றவே, சுந்தரேசன் மெல்லச் சாய்ந்து கட்டிலில் அமர்ந்தார். அந்த கடிகாரத்தின் முட்கள், கால இயந்திரத்தின் சக்கரங்களாக மாறி, சுந்தரேசனை இருபது ஆண்டுகளுக்கு முந்தைய செம்பட்டு விமான நிலையத்திற்கு, மெல்ல இழுத்துச் சென்றன.
அன்று ஒரு சனிக்கிழமை. பிற்பகல் இரண்டு மணி. சுந்தரேசனின் கடைசி நம்பிக்கையான அவனது மாமா கண்ணபிரானைச் சந்தித்து, அவசரத் தேவைக்காக ஒரு இரண்டாயிரம் ரூபாயைக் கடனாகப் பெற்றுவிடலாம் என்ற பெரும் எதிர்பார்ப்போடு அவன் செம்பட்டு விமான நிலையம் வந்திருந்தான். மாமாவின் வீடு பொன்மலைபட்டியில் உள்ளது. அவன், மாமா வீட்டிற்குச் சென்றால் அத்தையின் வசவு மொழிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், மாமா பணியாற்றும் இடத்திற்கே நேரில் வந்தால் மாமாவிடம் இருந்து எளிதில் பணத்தை வாங்கிச் சென்று விடலாம் என்பது அவன் திட்டம். ஆனால், விதி சதி செய்தது. மாமா அன்று விடுப்பில் இருந்தார் என்ற செய்தி, அவனது நம்பிக்கையின் வேரிலேயே வெந்நீர் ஊற்றியது போலிருந்தது. சுந்தரேசன் செய்வதறியாது திகைத்தான். அப்போது அவனுக்கு ஆறுதல் சொல்ல அவனுக்குத் தெரிந்தவர்கள் அங்கே எவரும் இல்லை. அங்கிருந்த பயணியர் இருக்கை ஒன்றில் சோர்ந்து போய் அமர்ந்தான்.
அன்று காலை வீட்டிலிருந்து புறப்படும்போது அவனிடம் எஞ்சியிருந்தது வெறும் இருநூறு ரூபாய் மட்டுமே. வரவிருக்கும் தேர்வுகளுக்காக விடியற்காலையில் எழுந்து படிக்க, ஒரு அலாரக் கடிகாரம் அவனுக்கு மிக அவசியமாகத் தேவைப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த அக்காவின் திருமணச் செலவுகளும், அதனால் ஏற்பட்ட கடன் சுமையும் வீட்டை அழுத்தி இருக்க, சுந்தரேசனின் கல்லூரித் தேர்வுக் கட்டணமான இரண்டாயிரம் ரூபாயைக் கட்டக்கூட வழியில்லாத நிலை. உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் கேட்டும், ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
‘அடுத்து என்ன செய்வது?’ என்ற தவிப்பில் அவன் மூழ்கியிருந்தபோது,
“வணக்கம் தம்பி! நீங்க, சுந்தரேசன் தானே?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.
அருகில் நின்றிருந்த நபர்,
“என் பெயர் கபிலன். நான் உங்க அப்பாவோட நண்பர். இங்கே பதினைந்து வருஷமா அலுவலக உதவியாளரா இருக்கேன். என்னப்பா விஷயம்? முகம் ஏன் வாடிப் போயிருக்கு?” என்று உரிமையோடு விசாரித்தார். அந்த ஆறுதலான வார்த்தைகள் சுந்தரேசன் மனதில் பாலை வார்த்தது. அவரிடம் தன் நிலையைச் சுருக்கமாக விவரித்தான். அவர்கள் உரையாடல் சிறிது நேரம் நீடித்தது.
மணியைப் பார்த்த கபிலன், “தம்பி, கவலைப்படாதே. வா, என்னோடு” என்று சொல்லி, சரியாக மூன்று மணிக்கு விமான நிலையத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அது சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பொருட்கள் ஏலம் விடப்படும் இடம்.
வரிசையாக வைக்கப்பட்டிருந்த பொருட்களில், கபிலனின் கண்கள் பொன்னிறத்தில் மின்னிய ஒரு கடிகாரத்தின் மீது பதிந்தன. ஆனால், சுந்தரேசனின் மனதோ, அங்கிருந்த ஒரு வெண்ணிற முகப்புடன் கூடிய, எவர்சில்வர் உறைக்குள் அடக்கமாக இருந்த அந்த அலாரக் கடிகாரத்தின் மீதே லயித்திருந்தது. அது பார்ப்பதற்கு எளிமையாகவும், அதே சமயம் வசீகரமாகவும் இருந்தது. கபிலனிடம் அதையே ஏலத்தில் எடுத்துத் தருமாறு சுந்தரேசன் பணிவுடன் கேட்டுக் கொண்டான்.
ஏலம் கேட்க வந்திருந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததனால், அங்கு ஏலம் மிகவும் மந்தமாகவே நடந்தது. சரியாக மூன்று இருபது மணிக்கு ஆரம்பித்த ஏலம் 5 மணி வரை நீடித்தது. பெரிய போட்டி இல்லாததால், சுந்தரேசன் நினைத்தபடியே வெறும் நூற்றுப்பத்து ரூபாய்க்கு அந்த கடிகாரம் அவனுக்குச் சொந்தமானது.
சுந்தரேசன் அவனது ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தபோது அவன் மனம் சற்று நிம்மதி அடைந்தது. ஒரு தரமான வெளிநாட்டு அலார கடிகாரத்தை அவன் எதிர்பார்த்ததை விட குறைந்த விலையில் ஏலத்தில் வாங்கியதில் அவன் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஊர் திரும்பும் பேருந்தில் ஏறியதிலிருந்து, வீட்டு வாசலை மிதிக்கும் வரை, சுந்தரேசனால் அந்த கடிகாரத்தை நிம்மதியாகப் பையில் வைத்திருக்க முடியவில்லை. பதினோரு முறைக்கும் மேலாக அதை உள்ளே வைப்பதும் பிறகு பையில் இருந்து வெளியே எடுத்து பார்ப்பதுமாக இருந்தான். அவனுக்கு பக்கத்து இருக்கையில் இருந்தவர்கள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபோதும் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
அந்தக் கடிகாரம் மற்றவற்றை விடச் சற்று அதிக கனமாக இருந்தது. அருகிலிருந்த பெரியவர் ஒருவர், “தம்பி, இது சிங்கப்பூர் ‘சிட்டிசன்’ நிறுவனத்தோட சரக்கு. நல்ல தரமான பொருள். நம்ம நாட்டுல இதுக்கு மவுசு அதிகம்,” என்று சிலாகித்துச் சொல்ல, சுந்தரேசனின் மனம் மல்லிகைப் பூவாய் மலர்ந்தது.
பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு வந்தவன், வீட்டிற்கு உள்ளே செல்லாமல், திண்ணையிலேயே அமர்ந்தான். ஆர்வத்துடன் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு அலாரம் வைப்பதற்காகத் கடிகாரத்தின் திருகுகளைச் சுழற்றினான்.
அவை வழக்கத்திற்கு மாறாக மிகவும் இறுக்கமாக இருந்தன. ‘சிரமப்பட்டு வாங்கிய பொருள் பழுதாகி இருக்குமோ?’ என்ற அச்சம் அவன் வயிற்றைக் கலக்கியது. அன்றிரவு அவனுக்குத் தூக்கம் பெயரளவிலேயே இருந்தது. அன்றிரவு கனவில் அந்த அலாரம் கடிகாரம் ராக்கெட்டாய் மாறி அவனை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அவனுக்கு வேடிக்கை காட்டியது. கனவும் நனவும் கலந்த ஒருவித மயக்க நிலையில் அன்றைய இரவு கழிந்தது.
மறுநாள் காலை, சுந்தரேசனும் அவன் நண்பன் ஆறுமுகமும் திண்ணையில் அமர்ந்து, அந்தக் கடிகாரத்தைப் பிரித்துப் பார்க்கும் முயற்சியில் இறங்கினர். ஆறுமுகம் கையில் ஒரு திருப்புளியுடன் (Screwdriver) வந்திருந்தான். “வழியில வரும்போது தெருவுல கிடந்துச்சுடா. யாரோ தவறவிட்டுப் போயிருக்காங்க,” என்று அவன் சொல்ல, சுந்தரேசன் வியப்புடன் ஆறுமுகத்தை பார்த்தான்.
அப்போது, “டேய் சுந்தரேசா! பட்டியில் நம்ம பசு மாட்டை ஏதோ வெறிபிடிச்ச காளை ஒன்னு முட்ட வருதுடா.. சீக்கிரம் வா!” என்று அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன சுந்தரேசன், கையில் கிடைத்த ஒரு குச்சியோடு தோட்டத்துப் பக்கம் ஓடினான்.
காளையை விரட்டிவிட்டுத் திரும்பியவனுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. திண்ணையில் ஆறுமுகம் மயங்கிக் கிடந்தான். கடிகாரம் பின்பக்கம் திறந்து கிடந்தது. அதன் மூடி தனியே உருண்டோடியிருக்க, கடிகாரத்தின் உள்ளே இருந்து வெளியேறிய ஒரு கருந்தேள், கொடுக்கை உயர்த்தி மிரட்டியபடி மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. தேள் என்றாலே அலறி அடித்து மயக்கமடையும் சுந்தரேசனின் நண்பன் ஆறுமுகம், அதைக் கண்ட அதிர்ச்சியில் மூர்ச்சையாகி இருந்தான்.
சுந்தரேசன் ஒரு இருப்புமுறத்தை எடுத்து வந்து அதைக் கொண்டு அந்த கருந்தேலை பிடித்து அதனை தூர எறிந்தான். பிறகு கடிகாரத்தின் பக்கம் திரும்பி, அதன் உட்புறம் மெல்ல எட்டிப் பார்த்தான். தேளை விடப் பெரிய அதிர்ச்சி அவனுக்குக் கடிகாரத்தின் உள்ளே காத்திருந்தது. கடிகாரத்தின் இயந்திரப் பகுதிகளுக்கு இடையே, மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினோரு விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும், தங்கச் சங்கிலிகளும் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன! அவனது கண்கள் கூசின. அந்தத் தருணத்தில் அவனுக்கும் லேசாகத் தலைசுற்றுவது போலவே இருந்தது.
திருச்சி பெரிய கடைவீதி. பிரபல கடிகாரக் கடையின் நிர்வாகி, அவர்கள் கொண்டு வந்த பொருட்களை ஒவ்வொன்றாகத் தராசிலும், உரைகல்லிலும் வைத்துச் சோதித்துக் கொண்டிருந்தார். “தம்பி, இது எல்லாமே சொக்கத்தங்கம். எப்படியும் சில லட்சங்களைத் தாண்டும்,” என்று அவர் சொன்னபோது, சுந்தரேசனின் காதுகளில் தேனைப் பாய்ச்சியது போல் இருந்தது. அதன் பின்னர் அவனது வறுமை என்ற இருள் விலகி, எதிர்காலம் பிரகாசமாக மின்ன ஆரம்பித்தது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் சுந்தரேசனை அழைத்துச் செல்ல, அரசு வாகனம் சுந்தரேசனது வீட்டு வாசலில் மெதுவாக வந்து நின்றது. அவரது அலுவலகத்தில் இருந்து வந்த ஊர்தியின் உன்னத ஓசை நிகழ்காலத்திற்குச் சுந்தரேசனை நிஜமாய் இழுத்து வந்தது.
அவர் படித்து, முன்னேறி, இன்று இந்த உயர்ந்த நிலையில் அமர்வதற்கு வித்திட்ட அந்த அலாரக் கடிகாரம், மேசையின் மீது இன்னும் அதே கம்பீரத்துடன் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.
வாகனத்தில் செல்லும்போது, ஓட்டுநர் காளையன் தயக்கத்துடன் கேட்டார். “ஐயா… தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு கேள்வி. நீங்க அடிக்கடி ‘காத்தவராயா, நீதான் என்னைக் காப்பாத்தணும்’னு வேண்டிக்கிறீங்களே… அது உங்க குலதெய்வமா?”
சுந்தரேசன் மெலிதாகச் சிரித்தார்.
“இல்லை காளையன்.”
“அப்புறம்?”
“நாம் வெளியூர் செல்லும்போது, பல லட்சம் மதிப்புள்ள வீட்டை, ஒரு சிறிய பூட்டை நம்பித்தானே விட்டுச் செல்கிறோம்? அதுபோல நான் ‘காத்தவராயன்’னு சொல்றது, வெறும் நூற்றுப்பத்து ரூபாய் மதிப்புள்ள ஒரு பழைய அலாரக் கடிகாரத்தைத்தான். அந்தப் பூட்டை போல இதுவும். உயிரற்ற பொருள்தான். என்றாலும், என் வாழ்க்கையின் மிகப்பெரிய இருட்டை விரட்டி, எனக்கு வெளிச்சம் என்கிற பிரகாசத்தை கொடுத்தது அந்த கடிகாரம்தான். இக்கட்டான நேரத்தில், என் சொந்தங்களே கைவிட்ட போது, தெய்வமாக வந்து என்னைக் கரை சேர்த்தது இந்தக் கடிகாரம்தான். அதனால், அதுவே என் கண் கண்ட தெய்வம்! அதுவே எனது காத்தவராயன்” என்றார் தீர்க்கமாக.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மரங்கள் அடர்ந்த சாலை ஓரத்தில் அவர்கள் வந்த வாகனம் நின்றது. சுந்தரேசன் மிடுக்காக இறங்கி தனது அலுவலகத்தை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினார்.
காளையனோ, அவர் சொன்னதன் ஆழத்தையும் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாமல், அருகில் இருந்த வேப்பமரத்தையே வெகு நேரம் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
| என்னைப் பற்றி சில வரிகள்: நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத ஆரம்பித்து கடந்த 22.02.2025 அன்று எனது இசையின் எதிரொலிகள் எனும் சிறுகதை தொகுப்பினை வெளியிட்டுள்ளேன். கடந்த 12.11.2025 அன்று எனது "மாமோய்"எனும் சிறுகதை ராயகிரி சங்கர் அவர்கள் நடத்தும் மின் இதழில் வெளிவந்துள்ளது. எனது"விலை போகும் உறவுகள்", "மாற்றத்தின் சீற்றங்கள்"மற்றும்"மயக்கத்தின் மறுபக்கம்"ஆகிய மூன்று சிறுகதைகளும் தங்களது"சிறுகதைகள்" மின் இதழில் கடந்த 18.11.25 இன்றும் அன்றும் 24.11.25 அன்றும்,30.11.25…மேலும் படிக்க... |