கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 2,578 
 
 

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஊனக்கண்கள் மட்டும் உள்ளவனுக்கு அது புரியாது. கடவுளை ஞானக் கண்களால் உணருதல் வேண்டும்’

அன்பே சிவம்” என்றான் சித்தன். 

‘சிவனே பித்தன்’ என்றான் பித்தன். 

இருவரும் எதிர்பாராத வசத்தால் பைத்தியக்காரர் விடுதி ஒன்றின் முன்னாற் சந்தித்தார்கள். 

‘நான் கடவுளை உணர்ந்தவன். புரிந்ததா?எனப் பித்தனை மடக்கினான் சித்தன். 

‘கடவுளை உணஉந்தவன் என்கிறாய். நீ அவரைக் கண்டிருக்கிறாயா?’ 

‘காணவில்லை’ 

‘காணாததை எப்படிக் கண்டாய்?’ 

‘ஊனக் கண்கள் மட்டும் உள்ளவனுக்கு அது புரியாது. கடவுளை ஞானக்கண்களால் உணருதல் வேண்டும்….’ 

‘இவ்வளவுதானா உன் சாமர்த்தியம், நான் கடவுளை இந்த இரண்டு கண்களாலும் பார்த்திருக்கிறேன்எனக் கூறிய பித்தன் பேய்ச் சிரிப்பில் மூழ்கினான். 

‘நான் நம்பமாட்டேன்என்றான் சித்தன். 

‘இது யோக்கியமா? நீ ஞானக்கண்களாற் கடவுளை உணர்ந்ததாகச் சொன்னதை மறுபேச்சின்றி நம்பினேன். நான் கடவுளை என் ஊனக் கண்களாற் கண்டேன் என்று சொல்வதை நீ ஏன் மறுக்கின்றாய்? இது நியாயமல்ல…’ 

பித்தன் பேசுவதில் ஏதோ நியாயமிருப்பதாகச் சித்தனுக்குத் தோன்றியது. எனவே “எங்கே கண்டாய்?” எனக் கேட்டான். 

இந்த விடுதியிலேதான்!’ 

‘அப்படியானால், நீ ஏன் வெளியே வந்துவிட்டாய்?’

‘உஸ்ஸ்…! நான் வெளியே வந்திருக்காவிட்டால், அவர் உள்ளே இருக்கும் சமாசாரம் உமக்குத் தெரிந்திருக்குமா? அத்துடன், அவர் உள்ளே வந்தபிறகு எனக்கு அங்கே என்ன வேலை?’ 

இப்பொழுது சித்தனைப் பைத்தியக்கார விடுதிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

எஸ்.பொன்னுத்துரை எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *