கண்ணான கண்ணே..!





அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம் – 3

மனிதன் எதை மறைக்க, மறக்க நினைக்கிறானோ அதுதான் முந்திரிக்கொட்டையாய் எப்போதும் முன்னே வந்து நிற்கும். இது மனிதனின் இயல்பு.
கணேசனுக்குள்ளும் இந்த நினைவும், வடுவும் இருக்கத்தான் செய்தது. அதைக் கலைத்துக் கலைத்துப் பார்த்தான். அது கலையவில்லை. மாறாய் மனதின் ஆழத்தில் பூமிக்கடியில் இருக்கும் நெருப்பாய் இருந்தது.
எப்படிக் கரையும்., மாறும், மறையும்..? சாதாரண வடுவா அது..?
வாழ்க்கையில் கரும்புள்ளி. கஷ்டமான காலத்தில் ஏற்பட்ட காயம். இதற்கு இவன் மட்டும் காரணமில்லை.
அவளும்தான்! சுந்தரி!!
அவள் மட்டும் அந்த நேரம் அப்படி நடக்காமலிருந்தால் இவன் இப்படிப்பட்ட வலி, வேதனையைத் தொட்டிருக்கத் தேவை இல்லை.
ஊர் சிரித்து, உறவுமுறை சிரித்து…. அந்த அவமானத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
ஏன் அப்படி அவள் நடந்தாள் …? எதற்கு இப்படிப்பட்ட மனநிலைக்கு வந்தாள்..? இதெல்லாம் அந்த நேரத்தில் இவனுக்குத் தெரியவில்லை. தெரிய வேண்டிய மனம், பக்குவமில்லை.
கஷ்டப்பட்டு களைத்து ஓய்ந்து படுத்தவனிடம்…
”இந்த நன்றிக் கடனை இப்படித் தீர்க்கிறதுதான் சரியாய்ப் படுது. இதைவிட்டால் என்னிடம் வேற வழியும் இல்லை. ” சொல்லி மார்பில் புதைந்து கேவியது மட்டுமே இவனுக்குத் தெரிந்தது.
ஒருவேளை… ‘சுவரில்லாத சித்திரங்கள்!’ படம் பார்த்த தாக்கமோ..?! என்று அப்புறம் நினைத்தான்.
இப்போது அது நடந்திருந்தால்..?
‘ஏனிப்படி நடந்து கொள்கிறாள்..? தன் மீது காதலா..? கட்டுடல் மீது கவர்ச்சியா..? இளமையா..? கணவன் கவனிக்காத காரணமா..? இல்லை உழைத்துப் போடுபவனை வளைத்துப் போடும் செயலா…? நோக்கமா..? எது எப்படி இருந்தாலும் இது துரோகம், பாவம்!’ – என்று தள்ளி இருப்பான்.
அப்போது இப்படி நினைக்காத தோன்றவில்லை.
‘ச்சீ! என்ன இது..?’ என்று பதறி துடித்து எழுந்திரிக்க முடியவில்லை. சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியாத சிறு மன அசைவைத் தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
வயது, உணர்ச்சியின் உரசல், உசுப்பேற்றல், உந்துதல், பெண் ஸ்பரிசம் படாத உடல், பட்டதும் சிலிர்த்துப் போன நிலை என அப்போது இவனுக்குள் எல்லாமாகிப் போன கலவை.
காமமென்பது கணநேர சுகமல்ல. அது வாழ்வை இணைக்கும் பாலம். ஆணையும் பெண்ணையும் பிரிக்க முடியாமல் இருக்க வைக்கும் சங்கிலி. அது உடலில் மட்டும் சிற்றின்பம். ஆனால் உணர்வில் மாபெரும் சக்தி.
அப்போது அது ஒரு கஷ்டமான காலம். அண்ணன், தம்பிகள் அத்தனை பேர்களையும் ஏன் ஊர் ஒட்டு மொத்தத்தையும் வறுமை ஆட்டுவித்த நேரம். கடையில் அரிசி வாங்கி உலையில் போடும் காலம்.
கணேசன் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து தாயை அண்டி இருந்தான். அப்பா இவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பரலோகம் சென்றுவிட்டார். பாவம் அவர்! நான்கு குழந்தைகளைப் பெற்று வளர்க்க, ஆளாக்க வயலில் கஷ்டப்பட்டவர். கால் குழி நிலம் இல்லாமல் கூலிக்கு வேலை செய்து, இரண்டொரு ஆடு மாடுகள் வைத்துக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றியவர்.
உழைத்து உழைத்து ஓடாகிப் போய் அவர் மண்டையைப் போட்டதில் ஆச்சரியமில்லை.
அப்போது அண்ணன்கள் மூவரும் திருமணமாகி தனித்தனியே தனிக்குடித்தனம் சென்றுவிட இவன் மட்டுமே தாய்க்குத் துணை ஆனான். உள்ளூர குக்கிராமம் குடும்பத்தில் எல்லோரையும் போல இவனும் வயலில் கூலி வேலை செய்து தன்னையும் தாயையும் காப்பாற்றிக் கொண்டான்.
கிராமம் விவசாயத் தொழிலைத் தவிர உயர் தொழில் ஏதுமில்லை. அதனால் அதைத் தவிர இவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
வறுமைப் பிடியில் வயிற்றுக்கு வழி இல்லாததால் கிடைத்த வருமானமே சொர்க்கமாக இருந்தது இந்த மாதிரி கஷ்டமான காலத்தில்தான் இருந்த அம்மாவும் மண்டையைப் போட்டாள்.
கஷ்ட ஜீவனம் ஒடுக்கியதோ, கணவனின் மறைவு ஒடுக்கியதோ, படித்த படிப்பிற்கு கடைக்குட்டிப் பிள்ளை வயலில் கிடந்தது கஷ்டப்படுகின்றானே என்கிற கவலைதான் வாட்டியதோ… நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் ஒடுங்கி, ஒடுங்கி, அடங்கி ஓடாகிப் போய் மண்ணோடு மண்ணாகி விட்டாள்.
”கிடைத்ததைக் கொடுத்து பொங்கிப் போட்டு வயிறு குளிர வைத்த ஒரே ஜீவனும் போய்விட்டதே..!” என்று கலங்கித் தவிக்கும் நேரத்தில்தான் கடைசி அண்ணன் கை கொடுத்தான். தன் குடும்பத்தில் ஒருவனாக அவனை சேர்த்துக் கொண்டான். இவனை விட நாலைந்து வயது பெரியவனான அந்த அண்ணன் கண்ணுசாமிக்கு இவன் வயதுக்கும் இரு வயது குறைவான அழகான மனைவி. நண்டும், சிண்டுமாய் அடுத்தடுத்து இரு பெண், ஆண் குழந்தைகள். குச்சு வீடு.
அண்ணனுக்கும் பெரிய வருமானமில்லை.எல்லோரையும் போல அதே கூலி வேலை. கஷ்ட ஜீவன வாழ்க்கை.
கணேசன் போய் எப்படி பாரமாய் இருக்க முடியும்…?
உழைத்தான். உழைத்த மொத்த கூலியையும் அண்ணி கையில் அப்படியேக் கொடுத்தான்.
இந்த நேரத்தில்தான்…’குடி குடியைக் கெடுக்கும்!’ என்று பாட்டிலில் அச்சடித்து மக்களைக் காப்பாற்றும் அரசாங்க சாராயக் கடை கிராம மக்களையும் விட்டு வைக்க மனமில்லாமல் அருகிலுள்ள கிராமத்திற்கு குடி வந்தது.
கண்ணுசாமி குடிப் பக்கம் திரும்பினான். ஒரே மாதத்தில் அதற்கு அடிமையாகிப் போனான்.
“என்னய்யா உழைச்ச காசெல்லாம் வீட்டுக்குக் கொடுக்காம இப்படி குடிச்சி அழிக்கிறே..?” கேட்டாள்.
“அதான் தம்பி கொண்டு வந்து கொட்டுறானே. நான் வேற கொட்டணுமா..?” கேட்டான்.
அடிக்கடி கேட்க அடித்தான்.
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. எத்தனை நாட்களுக்கு இந்த கொடுமையைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்…?
“என்னண்ணே! இப்படி அநியாயம் பண்றே….?” கேட்டான்.
“ஏன் குடிக்கிறது தப்பா..?” கேட்டான் கண்ணுசாமி.
“அது… தப்போ… தப்பில்லையா தெரியலைண்ணே. ஆனா.. தினம் அண்ணியைப் போட்டு அடிக்கிறது, உதைக்கிறது அநியாயம்ண்ணே..!”
“ஓஒ…. அவளுக்கு வாக்காளத்தா…?”
“பாவம் அண்ணி அழுவறதும்மில்லாம புள்ளைங்களும் அழுவறது பாவமா இருக்குண்ணே..!”
“ரொம்ப வக்காளத்து வாங்கறே. என் பொண்டாட்டிய வைச்சிருக்கியா..?”
‘என்ன பேச்சுக்கு என்ன வார்த்தைகள்..!!?’ – இவன் மேட் மட்டுமில்லாமல் சுந்தரியும் ஆடிப்போனாள்.
அத்தியாயம் – 4
அந்த இரவில் தனி இடம் சென்று அமர்ந்தும் வேதனை தீரவில்லை கணேசனுக்கு.
யாரைப் பார்த்து என்ன சொன்னார்….?! – இதேதான் அவனுக்குள் மீண்டும் மீண்டும் உதைத்தது, தைத்தது.
அண்ணனை அண்ணனாகவும், அண்ணியை அண்ணியாகவும் மதித்து நடக்கும் தனக்கா இப்படியொரு இழி சொல்..?! அம்மா! அம்மா!… என்னை அனாதையாக்கி இப்படி தவிக்க விட்டுட்டு போய்ட்டியேம்மா. அண்ணன்களுக்கெல்லாம் திருமணம் முடித்ததைப் போல் எனக்கும் ஒரு ஓர் துணையைத் தேடி வச்சுப் போயிருந்தால் நான் ஏன்ம்மா இப்படி அல்லல் படுறேன், அவச்சொல் வாங்குறேன்.?!
அண்ணா! குடிச்சுட்டு நிதானமில்லாம வயல்காட்டுலேயும், களத்து மேட்டிலும் சேறு, சகதியில் எப்படியெல்லாம் விழுந்து கிடந்திருக்கே. நான் உன்னைக் கஷ்டப்பட்டுத் தூக்கி வந்து வீட்டில போட்டிருக்கேன். அண்ணி கழுவி சுத்தம் செய்து விட்டிருக்காங்க. எங்களைப் பார்த்த… இந்த கேள்வி..? அபாண்டம்!
குடிப்பழக்கம் மட்டுமா உனக்கு இருந்துச்சி..?
கருப்பங்காட்டுல நீயும் செல்லம்மாளும் கட்டிப் பிடிச்சி கிடந்தீங்களே…? என்னை பார்த்து அரண்டு போனீங்களே…! மூச்சு விட்டிருப்பேனா..?!
அந்தப் பழக்கம் மட்டும்தானா..?
சாமுண்டி, குப்பன், சுப்பனெல்லாம் களத்து மேட்டில் சீட்டாடினீங்களே…! வெளியில சொல்லி இருப்பேனா..?
எங்க ரெண்டு பேரையும் இணைச்சுப் பேச உனக்கு எப்படி மனசு வந்துது..?
நானும் அண்ணியும் கள்ளத்தனமாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்திருக்கோமா..?! கூலியைக் கொண்டு வந்து அண்ணி கையில் கொடுத்துவிட்டு குனிஞ்ச தலை நிமிராமல் சாப்பிட்டு வந்து திண்ணையில் படுத்து தூங்குறேனே..! இது உனக்குத் தெரியாதா..?
தப்பு செய்தா… தம்பி, அண்ணனைத் தட்டிக் கேட்கக்கூடாதா..? தம்பின்னா வாய் மூடி தான் இருக்கணுமா..?
அம்மா செத்து அனாதையாய் நின்ன எனக்கு நீதான் கை கொடுத்தே. பாக்கி மூணு அண்ணன்களும் தம்பி தான் மேல விடிஞ்சிடுவானோன்னு வாய் பேசாம போனாங்க. அதுக்காகவா இந்த இழி சொல்?
சாலையில் இருவர் நடந்து வந்தார்கள். பேச்சுக் குரல் கேட்டது.
“நான் அப்பவே நினைச்சேன். இந்த கண்ணுசாமிப் பயல் நல்லவனாச்சே. ஏன் இப்படி குடிக்கிறான்னு..”
“ஏன் என்ன??”
“அண்ணிக்காரி கொழுந்தனை வைச்சிருக்காள். எப்படி குடிக்காம இருக்க முடியும்…?”
“அவன் பொண்டாட்டி சுந்தரி நல்லவண்ணே..!”
“நல்ல பொண்ணுதான்! யார் இல்லே சொன்னது..? இவன் தினைக்கும் சாராயத்தைக் குடிச்சுட்டுப் போய் கவுந்தடிச்சி படுத்துக்கிட்டான்னா ரெண்டு பெத்தாலும் சின்னஞ்சசிறு வயசு எத்தினி நாளைக்குத்தான் பொத்திக்கிட்டுப் படுத்திருக்கும்?”
“அசிங்கமா பேசாதீங்கண்ணே..!”
“அசிங்கமில்லேடா உண்மை. வாலிப கொழுந்தன் வாசல்ல படுத்திருக்கான். வசதியாய்ப் போச்சு அவளுக்கு . இழுத்துப் போட்டுக்கிட்டா..”
“ஏய்ய்..!” குரல் வெளிவராமல் அடிவற்றிலிருந்து ஏழும்பி நாடி நரம்பெல்லாம் புடைத்தது கணேசனுக்கு.
ஊர் எல்லோரையும் கவனிக்கிறது! – புரிந்தது இவனுக்கு.
நடப்பதைப்பார்த்து, நாலு காது கண் வைத்து பரப்புவதும் தெரிந்தது.
இதுதான் அண்ணன் சொன்னானா..? இவன் சொல்லி ஊர் சொல்கிறதா..? அண்ணி முகத்தில் எப்படி விழிக்க….? இனி சரிப்படாது. நமக்கு நம் வீடுதான் சரி. தன் கையே தனக்கு உதவி!
வந்து தாய் வீட்டுக் குடிசையில் சுருண்டு படுத்தான்.
கணேசன் எழுந்து சென்ற அரை மணி நேரத்திற்கெல்லாம்…சுந்தரி….வாசலில் நின்று… சாலையைக் கிழக்காலும் மேற்காலும் பார்த்து தவித்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் தாங்க முடியவில்லை.
“என்னங்க! நீங்க என்னமோ சொல்லிட்டீங்க. தம்பியைக் காணோம்ங்க…” கணவனை எழுப்பினாள்.
“வழுவாண்டி… !” குழறிக் குப்புறப்படுத்தான் கண்ணுசாமி.
இவன் எழுந்திரிக்க மாட்டான். எழுப்பியும் பிரயோஜனமில்லை. சுந்தரிக்குத் தெரிந்தது.
இருட்டில் எங்கே போய் தேடுவது..? மற்ற அண்ணன்கள் வீட்டிற்குச் சென்றுவிடாதா..?
அதே ஊரிலிருக்கும் பெரிய கொழுந்தன் சின்னக் கொழுந்தன் வீடுகளுக்கும் தேடி சென்றாள்.
“ஏன்..என்ன…?”
“உங்க சின்ன தம்பி வந்தாரா..? “
“யாரு..?”
“கடைக்குட்டி!”
“வர்லேயே. ஏன்..?”
“அண்ணன் திட்டினார். கோவம் ஆளைக் காணோம்..!”
“கோயில் குளம் எங்கேயாவது படுத்துக்க கிடப்பான். கோவம் தணிஞ்சி காலையில வருவான்..!” – ரொம்ப பொறுப்பாய்ச் சொன்னார்கள்.
இருட்டில் பெண் எங்கே சென்று தேடுவாள்? வீட்டில் வந்து படுத்தாள்.
ஆனாலும் இந்த ஆள் ரொம்ப மோசம். இப்படியா தம்பியைக் கேட்பது..?’ நினைத்து தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள்.
காலையில்தான் அவளுக்கு மாமியார் வீடு நினைவு வந்தது.
வீட்டு வாசலில் சாணி தெளித்து விட்டு அடுத்தத் தெருவிலுக்கும் அந்த வீட்டிற்குச் சென்றாள்.
‘இனி என்ன செய்ய?…எங்கு செல்ல..?’ என்று யோசித்து அமர்ந்திருந்த கணேசன் முன்போய் நின்றாள்.
“வாங்க வீட்டுக்கு…”
“இல்லே அண்ணி. நான் இங்கேயே இருக்கேன்!”
“அதுதான் குடிச்சிட்டு என்னவோ உளறிச்சுன்னா… நீங்களும் கோபப்பட்டு…”
“அட!… போப்பா. அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி. அண்ணன்காரன்தானே சொன்னான். சொன்னா சொல்லிட்டுப் போறான். எதையும் மனசுல வச்சுக்காம சுந்தரியோட போறீயா…?”
அந்த சமயம் அங்கு வந்து வேடிக்கைப் பார்த்த அண்ணன் வீட்டிற்கும் அடுத்த வீட்டிலிருக்கும் கிழவி வக்காலத்து வாங்கினாள்.
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |