கண்ணாடி உறவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 2,637 
 
 

“வாப்பா தம்பி, வா வா!” வாசலிலேயே காத்திருந்த அப்பாவும் அம்மாவும், மகனை கன்னம் வருடி முத்தமிட்டு வரவேற்றார்கள்.

“ஏன்பா பனியில் நின்னுக்கிட்டு?. நான் வந்தவுடனே குரல் கொடுக்க மாட்டேனா? ஃப்ளைட் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அதான் நேரமாயிடுச்சு.”

“உனக்காக காத்திருப்பதில் எங்களுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லப்பா. சந்தோஷமே” என்று வாஞ்சையாக சிரித்த அப்பா அவனது கைகளை பற்றிக்கொண்டார். தான் வந்த டாக்ஸியை அனுப்பி விட்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான் மணி.

“வாப்பா, சூடாக தோசை ஊற்றுகிறேன். சாப்பிடு”. என்ற அம்மாவை “இப்ப என்ன நேரம் தெரியுமா? காலையில பார்த்துக்கலாம் விடுங்க” என்றான்.

“அம்மா உனக்காக காத்திருந்தாள். ஒரு தோசையாவது சாப்பிட்டு தூங்கு. நாளை நிதானமா பேசலாம்,” என்றார் அப்பா மென்மையாக

சரிப்பா என்றபடி சாப்பிட்டு முடித்த மணி “அண்ணன் – அண்ணி பசங்க எங்கப்பா? யாரும் இல்ல?” என்று கேட்டான். “அவர்களெல்லாம் அண்ணியின் வீட்டுக்குப் போயிருக்காங்க. காலையில் வந்து விடுவார்கள்” என்றாள் அம்மா.

அடுத்த நாள் காலையில், ஹாலில் கேட்ட பேச்சுக்குரல்களின் சத்தத்தில் விழித்துக்கொண்ட மணி அறையிலிருந்து வெளியே வந்தான்.

“வாடா. நானே காலையில கிளம்பி இங்கே வந்துட்டேன். நீ இப்போதான் எழுந்து வரலாமானு யோசிக்கிற” என்றாள் அக்கா.

“ஏம்மா.. அவன் ராத்திரி வரும்போதே லேட்டாயிடுச்சு. என்னதான் ப்ளைட்ல வந்தாலும் அசதியா இருக்காதா ?” அதட்டினாள் அம்மா.

“என்னக்கா ? நீ மட்டும் தனியாக வந்திருக்கே? மாமா எங்கே?”என்றான்.

“என் கல்யாணம் முடிந்த கையோடு நீ கிளம்பி வெளிநாடு போனவன் இப்பத்தான வந்திருக்க. நீதான் அவரைப்பார்க்க வரணும். அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை. உன்னை தேடி வருவாரா?” என்று முறுக்கிக்கொண்டாள் அக்கா.

“இந்த வருஷம் உனக்கும் கல்யாணம் பண்ணணும். பெண் பார்த்து முடிக்கணும்,” என்று அப்பா வலியுறுத்த, அம்மா காபியுடன் வந்தார்.

எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே மணி, பெட்டிகளைத் திறந்து அப்பா, அண்ணன், மாமாவுக்கு கைக் கடிகாரங்கள்; அண்ணி, அக்காவுக்கு அழகான கைப்பைகள், சென்ட்; அழகு சாதனப்பொருட்கள், தங்கைக்கு புதிய மாடல் போன்; குழந்தைகளுக்கு சாக்லெட்டும், விளையாட்டு சாதனங்களும் என்று அவரவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களை எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தான்.

அவன் கையில் எடுத்த நகைப்பெட்டியை பார்த்து “ஹே. தங்க வளையலா. எனக்குதானே; ஏன் தம்பி ? முன்னாடியே சொல்லி இருந்தா நல்ல டிசைன், சைஸ் எல்லாம் சொல்லி இருப்பேனே” என்று அக்காஅவசரப்பட

“வளையல்கள் உனக்கில்லை. அது எனக்கு ரொம்ப முக்கியமான ஒருத்தருக்கு வாங்கி வந்தேன். நான் என்ன டிசைன்ல வாங்கி வந்தாலும் அவங்களுக்கு பிடிக்கும்” என்று சிரித்தான்.

அக்காவின் முகம் சற்றே மாறியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டாள்

“உன் கல்யாணத்தின்போது போட்ட நகையெல்லாமே அவன் வாங்கியதுதானே” அம்மா கூற, அக்காவுக்கு வாங்கி தந்தது போல எனக்கும் எல்லாம் வேண்டும் என்றாள் தங்கை.

“பார்த்தீங்களா ? இந்த வருஷம் கல்யாணம் பண்ணணும் என்று உங்கம்மா பேச்சு எடுக்கும் முன்னே தம்பி வளையலோட வந்து நிக்கிறார். ஒருவேளை உங்கப்பாம்மா பெண் பார்த்து முன்னாடியே செல்லப் பிள்ளைக்கிட்ட சொல்லிட்டாங்களோ? நமக்கு இப்போதான் தெரிய வருது” என்று நொடித்தாள் அண்ணி.

“அண்ணி ரொம்ப கற்பனை பண்ணாதீங்க? நான் வளையல் வாங்கிட்டு வந்தது என் அம்மாவுக்காகத்தான்” என்றபடியே வளையல்களை அப்பாவிடம் கொடுத்து “அப்பா அம்மாவுக்கு நீங்களே போட்டு விடுங்க” என்றான் புன்னகை முகமாக. “நான் போன முறை வந்த போதே அம்மாவின் பழைய கண்ணாடி வளையல் ஒன்றை அளவுக்காக எடுத்துட்டு போனேன்” என்றபடி அதையும் எடுத்து கொடுத்தான்.

அம்மாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது. முகம் மலர்ந்தது. “இப்போ எனக்கு எதுக்கு பா? உன் அண்ணி சொல்ற மாதிரி உனக்காக வரப்போடும் பெண்ணுக்கு நிச்சயத்தின் போது போடலாம்” என்றாள் அம்மா.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ நீங்க தான் போட்டுக்கணும். இதை நீங்க கழற்றவும் கூடாது; யாருக்கும் இரவல் கொடுக்கவும் கூடாது” என்றான் மென்மையாக.

பின் அங்கிருந்த நாட்களில் அம்மா அவனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு, கேட்டு செய்ய அதைப்பார்த்த அண்ணி “என்ன இருந்தாலும் உங்கம்மாவுக்கு சின்னப்பிள்ளை உசத்திதான் ; ராஜ உபசாரம்தான்” என்று கிண்டலடித்தாள். இவன் அங்கு ஓய்வில்லாமல் உழைக்கும் வாழ்க்கையை, நிழலில்லா தனிமையைக் கடந்து, இங்குள்ள அனைவருக்காகவே பாடுபடும் வாழ்க்கையை அவள் வசதியாக மறந்து விட்டாள்.

ஒரு நாள்…

“எனக்கு பதவி உயர்வு வரும் போல இருக்கு. வேலைபளு கூடும். பசங்களை டவுன் பக்கம் நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும். அங்கேயே வீடு பார்த்து தனியாக போய் விடலாம் என்று நினைக்கிறேன். அப்பா அம்மா இங்கேயே இருந்துக்கட்டும்,” என்றான் அண்ணன்.

“அரசு உத்தியோகம் என்றாலும் அரைக்காசு உத்யோகம்தானே ; செலவு கட்டுப்படியாக வேண்டாமா ? நீங்க என்ன உங்க தம்பி மாதிரி வெளி நாட்டிலா வேலை பார்க்கறீங்க?” என்று குறைப்பட்டாள் அண்ணி. பழமொழியை தனக்கேற்றாற்போல மாற்றிக்கொண்ட அண்ணியின் சாமர்த்தியத்தை கண்டு வியந்து போனான் இவன்.

எனக்கு இங்கே நல்ல அரசு வேலை உள்ளது. நான் அப்பா அம்மாவை, குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன். நீ உனக்கு கிடைத்த வாய்ப்பை விடாதே. வெளிநாடு சென்று படி; வேலை பாரு என்று தட்டி கொடுத்த அண்ணன் எங்கே?

உங்க தம்பி எனக்கும் தம்பி மாதிரிதானே என்ற அண்ணி எங்கே?

என் தம்பி பார்த்து ஓகே சொன்ன மாப்பிள்ளையைத்தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற அக்கா எங்கே?

சின்ன அண்ணன் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற தங்கை எங்கே?

எல்லா உறவுகளின் அன்பும், அவரவர் தேவையின் அடிப்படையில்தான் இருக்குமோ? அவனை யாரும் “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்கவில்லை. ஒருவருக்காவது “உனக்கு வேலை பிடித்திருக்கா? ரொம்ப கஷ்டமா இருக்கா? சாப்பாடு ஒத்து வருதா? கிளைமேட் ஒத்துப்போச்சா? நாங்க உன்னை ரொம்ப மிஸ் பனண்றோம்” என்று ஒரு வார்த்தைக்காவது சொல்லத்தோன்றியதா என்று நினைத்து இவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அன்பை ஆதரித்து, பாசத்தைப் பகிர்ந்து
புன்னகை பூத்து, கனிவோடு கை கொடுத்து.
எண்ணங்களில் இசைந்து
கண்ணாடியாகப் பிரதிபலித்த உறவுகள்,
இப்போது வெறும் கண்ணாடிசுவராக மாறிவிட்டன.
காலப்போக்கில் (பாச) ரசப் பூச்சு
கரைந்து போனதுதான் காரணமோ?
அன்று தொடர்கதையாய் இருந்த உறவுகள்
இன்று விடை தெரியா விடுகதையாய்
மாறிப்போனதேன்?

தொட்டுவிடும் மாயையில்
தோற்றமளிக்கும் தொடுவானம்.
தொலைந்து போன உறவுகள்
இன்று தொடுவான தூரத்தில்
பார்வைக்குப் பக்கத்தில்
பாசத்தில் வெகு தொலைவில் …
வந்து போன வசந்தங்கள்
வானவில்லின் வடிவத்தில்
காலத்தின் மாற்றத்தை
கணிக்கத்தான் முடியவில்லை .

“நான் அங்கே என்னவெல்லாம் கடந்து வர்றேன் என்பதை இவர்கள் உணர்வார்களா?” மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்

அவனைத் தேடி மாடிக்கு வந்தனர் அப்பாவும் அம்மாவும். அவனருகில் அமர்ந்த அம்மா அவனை தன் மடியில் ஏந்திக்கொண்டு தலையை வருடிக்கொடுத்தாள். “உனக்கு நாங்க ரொம்ப கஷ்டத்தை கொடுத்து விட்டோமோ ? கண்ணுக்கெட்டாத தொலைவில் நீ கஷ்டப்பட்டு இந்த குடும்பம் முன்னேறப் பாடுபடுகிறாய். நாங்க இங்க சுகமாய் இருக்கோம்” என்று வருந்தினாள்.

“அதெல்லாம் இல்லம்மா. நான் இன்னிக்கு நல்லா சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளமிட்டது அப்பாதானே; அப்பாவின் உழைப்புதானே. நான் கஷ்டப்படவில்லை. அப்பாவின் உழைப்புக்கான பலனை அறுவடை செய்கிறேன்” என்று சிரித்தான் மணி.

“நீங்க என்னப்பா மௌனமா இருக்கீங்க?”

“தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார்கள்,” என்று அமைதியாக ஆரம்பித்தார் அப்பா. “நான் வாழ்நாளெல்லாம் சுமந்த சுமைகளை, எந்தக் குறையும் இல்லாமல் நீ உன் தோளில் ஏற்று நிற்கின்றாய். உன்னைப்போல் மகனைப் பெற்றது என் வாழ்வின் பெருமிதம்.”

மணி மெதுவாக கேட்டான்; “அண்ணன் தனி வீடு போயிடுவாராம். அப்பா, அம்மா – நீங்க இங்கே, உங்களால் சமாளிக்க முடியுமா. நான் வேண்டுமானால் இங்கேயே ஏதும் வேலை பார்த்துக் கொள்ளட்டுமா?”

அப்பா மெல்ல சிரித்தபடியே கூறினார் “வேண்டாம் பா… இது பேராசை அல்ல. நீ இப்போது வரை எங்களுக்காக வாழ்ந்தாய். இனிமேல் உனக்காக சற்று செல்வம் சேர்த்து, சுதந்திரமாக உன் கனவுகளை விரிவுபடுத்து.

இன்று உன்னிடம் எதிர்பார்க்கும் உறவுகள், நாளை எதுவும் தரமாட்டார்கள். உன்னிடம் இல்லையென்று ஏளனமாக பேசத்தான் செய்வார்கள். அதற்கு நீ வாய்ப்பே கொடுக்கக்கூடாது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் மறக்காதே…. உன் நலனுக்காகவும், வளத்துக்காகவும் – நானும், உன் அம்மாவும் – இங்கேயே இருந்து, என்றும் உனக்காக கடவுளை வேண்டிக் கொண்டு இருப்போம்.”

அப்பாவின் வார்த்தைகள் நெஞ்சில் ஆழமாக பதிந்தன. அந்த நிசப்தத்தின் நடுவே, :

“தந்தையின் மௌனம் – கம்பீரம்; தாயின் மௌனம் – பாசம்.” என்ற உண்மையை… அவன் நன்கு உணர்ந்து கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *