கணவரின் குறை




வருடம் 1990 கலாதனம் பெண்கள் கல்லூரி.
புதிதாய் தன்னுடைய அறைக்குள் வந்த பெண்ணை பார்த்த ராஜி உன் பெயர்? கேட்டவுடன் ஒரு பக்கமாய் தலையை சாய்த்து பிரவீணா என்றாள். அவள் தலை சாய்த்து பேசியது பழக்கமா வியாதியா என்று புரியாமல் பார்த்த ராஜி தன் பெயரை சொன்னவள் முதலாம் ஆண்டு வரலாற்று துறை என்றாள்.

பிரவீணா சட்டென்று முகத்தை சுருக்கி ஹிஸ்டரியா? அவளின் கேள்வியை கண்ட இவளுக்கு சுர்ரென்று கோபம் வர ஏன் ஹிஸ்டரின்னா ஆகாதா? நீ என்ன சப்ஜெக்ட் எடுத்திருக்கே? நான் பிசிக்ஸ் எடுத்திருக்கேன். குரலில் பெருமை.
சயின்ஸ்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா? பிடிக்கும், அதுலயும் கெமிஸ்ட்ரி பிடிக்கும், ஆனா சீட் இல்லையின்னுட்டாங்க, என்ன பண்னறது, ம்..அலுத்து கொண்டவளிடம் ஹிஸ்டரின்னா ஏன் பிடிக்காதுங்கறே?
ஐயோ பழைய கதைகளை கிளறுறது எனக்கு சுத்தமா பிடிக்காது, அதை விட அந்த வருசங்களை ஞாபகம் வச்சுக்கறது அப்பப்பா..சலித்து கொண்டவளிடம் கெமிஸ்ட்ரியில் வர்ற குறியீடை விடவா என்று கேட்க நினைத்தவள் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.
இனி இவளுடன் மூன்று வருடம் ஓட்ட வேண்டும், எடுத்த உடன் ஏன் இருவருக்கும் பிரச்சினைகள். சரி வா ‘டைனிங்’ போலாம், மணி எட்டாச்சு, இல்லையின்னா டிபன் தீர்ந்துடும்.
ஐயோ இராத்திரி டிபனா? முகத்தை சுருக்கினாள் பிரவீணா. பெருமூச்சு விட்டாள் ராஜீ இவளுடன் எப்படி மூன்று வருடங்கள் ஓட்டப்போகிறோம்.
அவளோடு மூன்று வருடங்கள் ஓட்டினாள், ஆனால் இருவருக்கும் ஒத்த கருத்துக்களோ, ரசனையோ. ஒத்து வராமலேயே ஓட்டினார்கள்.
2020 டிசம்பர்
ஏதேச்சையாக இருவரும் பெங்களூரில் சந்தித்தார்கள். நீ என்ன பண்ணிகிட்டிருக்கே? முதலில் கேட்டது பிரவீணா. நான் புரொபசரா இருக்கேன் ஒரு ஆர்ட்ஸ் காலேஜுல, ஐயோ வாத்தியார் வேலையா முகத்தை சுழித்தாள் பிரவீணா.
இவள் இன்னும் மாறவில்லையா? மனதிற்குள் நினைத்தாலும் ராஜீ பிரவீணாவை பார்த்து நீ என்ன பண்ணறே? நான் ஏர் போர்ட்ல கஸ்டம்ஸ் ஆபிசரா இருக்கேன், குரலில் கொஞ்சம் பெருமை.
பிசிக்ஸ் படிச்சிட்டு, அப்புறம் எதுக்கு இந்த வேலைக்கு வந்தே? என்று கேட்க நினைத்த ராஜி வேண்டாம் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் சந்திப்பும் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ, அதற்குள் ஏன் கருத்து வேறுபாடுகள்.
உனக்கு எத்தனை குழந்தைகள் பிரவீணாவின் கேள்விக்கு ஒரு பையன் இஞ்சீனியரிங்க் முடிச்சுட்டு கனடாவுல இருக்கான்.. ஐயோ ‘இஞ்சீனியரிங்கா’ முகத்தை சுருக்கிய பிரவீணாவை பார்த்த ராஜீ போச்சுடா மறுபடியுமா? மனதுக்குள் நினைத்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் உனக்கு?
எனக்கு ஒரு பையன், பொண்ணு ஒண்ணு, அவ்ங்க? இரண்டு பேரும் டாக்டருக்கு படிக்கிறாங்க, பிரவீணா பெருமையுடன் சொன்னாள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசியிருப்பார்கள். ஒருவருக்கொருவரின் கருத்துக்கள் ஒத்தே போகாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று..
என் வீட்டுக்காரர் ரொம்ப மோசம், ஆரம்பித்தாள் பிரவீணா, ஏன் என்ன பண்ணறாரு ஆர்வமுடன் ராஜீ. அதையேன் கேட்கறே, அவரின் குறைகளை சொல்ல ஆரம்பிக்க, ராஜீயும் எங்க வீட்டுக்காரர் மட்டும் என்னவாம் அதே மாதிரிதான் பதிலுக்கு ஆரம்பித்தாள்.
இருவரும் அவரவரின் கணவரின் குறைகளை பற்றி மூன்று மணி நேரத்துக்கு மேல் ஒற்றுமையாய் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் படித்த போதும், முப்பது வருடங்கள் கழித்து சந்தித்து பேசிக்கொண்டிருந்த போதும் வராத கருத்து ஒற்றுமை இந்த மூன்று மணி நேரத்தில் வந்திருந்தது.
![]() |
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க... |