கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2025
பார்வையிட்டோர்: 4,555 
 
 

“அப்பா, இந்த குதிரை எவ்ளோ அழகா இருக்கு பத்தியா?” பதினோரு வயது பவானி வியந்து நின்றாள். 

“ஆமாம், பவானி. கொஞ்சம் சிகப்பு கலந்த பழுப்பு நிற மேனியோட முகத்துல மட்டும் ‘குரோம்’ அப்படின்னு சொல்வாங்க – வெள்ளை நிற பட்டை…ரொம்ப அழகுதான்…” பவானியை குதிரைப் பண்ணைக்கு அழைத்து வந்திருந்த முரளி சொன்னான்.

“இதுக்கு ‘ராஜா’ ன்னு பேர் வச்சிருக்கோம்” சொன்னது, குதிரைகளை கவனித்துக் கொள்ளும் வேலு.

ராஜா என்ற சொல்லுக்கு பொருத்தமான அந்த கம்பீரமான குதிரை ஏன் பண்ணையில் இருக்கிறது என்பது ஒரு சோகக் கதைதான். 

இரண்டு வருஷத்துக்கு முன், தேசிய குதிரைப் பந்தயத்தில் ஓடியபோது, முன்பக்க இடது காலில் குளம்புக்கு மேல் சிறிய எலும்பு உடைந்துவிட்டது. அதுவரை ராஜா ஓடாத பந்தயங்கள் இல்லை. விபத்துக்குப் பிறகு, ராஜாவின் பந்தய நாட்கள் முடிந்தன. பண்ணைக்கு சொந்தக்காரர் ராஜாவை பராமரிக்க விலைக்கு வாங்கினார்;  வேலு ராஜாவை பரிவுடனும், அக்கறையுடனும் பார்த்துக் கொள்ளவே, ராஜா இன்று திடமான குதிரையாக இருக்கிறது. 

ராஜா ஓடாத ஓட்டமா? இருப்பினும், ராஜாவால் இனிமேல் ஓடவே முடியாது.      

பண்ணைக்கு வரும் சிறுவர்களை சுமந்து கொண்டு, வேலு காட்டும் வழியில் மெல்ல நடந்து போக மட்டுமே முடிந்தது.

ராஜாவைப் பற்றி கேட்ட பவானிக்கு அழுகை வந்தது.  எப்படி ஓடின ராஜாவுக்கு இப்படி ஒரு நிலையா? 

“என்ன பவானி, ராஜா மேல ஏறி சவாரி செய்ய தயாரா?” முரளி கேட்டான். 

“வேண்டாம்… “

“நீதானே குதிரை பண்ணைக்கு போகணும்னு சொன்னே?”

“ஆமா… ஆனா ராஜாவை பாக்கறபோது, இடுப்புல சர்ஜெரி பண்ணிகிட்டு படுக்கையிலேயே கிடக்கிற தாத்தா ஞாபகம் வருது… நீ ஏன் தாத்தாவை போய் பாக்கவே இல்லை?”

பவானியின் சாதரண சொற்கள் முரளியை வெகுவாக தாக்கின. 

தன்னுடைய அப்பா எப்போதோ சொன்ன கடுமையான வார்த்தைகளை மனதில் பதித்துக் கொண்டு, அவர்மேல் தணியாத கோபத்தில் ஆண்டுக் கணக்காக அவரை பார்க்கவில்லை.  சமீபத்தில் அவர் கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து படுக்கையில் விழுந்தபின்னும் அவரை போய் பார்ப்பதை சாக்கு போக்கு சொல்லி தவிர்த்தான் முரளி. 

‘அப்பா குடும்பத்துக்காக ஓடாத ஓட்டமா?  இப்போது அவருக்கு ஆதரவாக இல்லாமல் போனா வேறு எப்போ?’  

இவை பவானி கேட்காத கேள்விகள்…

ஆனால் அவள் முரளியின் உள்ளத்தில் உசுப்பி எழுப்பிய மனித நேயத்தின் கூக்குரல்கள்.

“வா, பவானி…நாம இங்கேருந்து நேரா தாத்தாவை பாக்க போகலாம்…”

ராஜா ஒரு முறை கனைத்து, தலையை பலமாக ஆட்டியது. பவானி ராஜாவை அன்போடு தடவி கொடுத்துவிட்டு, துள்ளலுடன் புறப்பட்டாள்.

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

1 thought on “ஓடாத ஓட்டமா?

  1. ஒரு குட்டி கதை:
    ஒரு வழிபோக்கன் நடந்துக் கொண்டிருக்கும் போது அரசமரத்தையும் பார்த்தான் அதில் காய்களையும் பார்த்தான், கடவுளுக்கு மூளையே இல்லை இவ்வெள்ளவு பெரிய மரத்துக்கு இத்துனுன்டு காய் இத்துனுன்டு பரங்கி கொடிக்கு இவ்வெள்ளவு பெரிய பரங்கிக்காய் என்று சிந்தித்து கொண்டே உறங்கி விட்டான். அப்போது அம்மரத்தின் காய் ஒன்று நெற்றியில் பட்டென்று விழுந்தது. எழுமிச்சை அளவு புடைத்து. வழி தாங்க முடியவில்லை.
    கதையின் நீதி:
    யாருக்கு எதை தரவேன்டுமென்று இறைவனுக்கு தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *