ஒரு பிச்சைக்காரியின் அக்கறை
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 75

(சின்னஞ்சிறு உண்மைக் கதை)
நான் சென்னையில் இருந்து, ஒரு திருமணத்திற்காக காரைக்குடி சென்றேன். அப்போது காரைக்குடி பேருந்து நிலையத்தில் டீ குடிக்க பத்து நிமிடம் காத்திருந்தேன். அங்கு சில பிச்சை எடுக்கும் தாய்மார்களை பார்த்தேன் . ஒரு பிச்சைக்காரி , கை நீட்டியதால் நானும் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தேன்.
அவள் சோர்ந்து இருந்ததால், டீ சாப்பிடுகிறாயா என்று கேட்டேன். தலையாட்டியதும், ஒரு டீ வாங்கி கொடுத்தேன். டீ குடித்துக் கொண்டிருந்த அவள் கையில், இரண்டு பொட்டலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது இன்னொரு பிச்சைக்காரி, இவள் பக்கத்தில் வந்து, அந்த இரு பொட்டலங்களையும் பறிக்க, இவள் மறுத்தாள்.
“இந்தா பாரு… இது நேத்து ராத்திரி உனக்கு ஒரு அம்மா கொடுத்தது. இது எல்லாம் இப்போ கெட்டுப் போயிருக்கும். இதை நீ சாப்பிடாத. குப்பையில் போடு” என்றாள்.
“எனக்கு பசிச்சா என்ன பண்றது.”
“பசிச்சா பட்டினி கிட. ஒரு நேரம் பட்டினி கிடந்தால் நல்லது தான். அதுக்காக பழையதை சாப்பிடாதே. உனக்கு உடம்பு சரியில்லாமல் போனால், உன்னை யார் பார்க்கிறது. உடம்பு நல்லா இருந்தாதான் பிச்சையாவது எடுத்து சாப்பிட முடியும்” என அதை வலுக்கட்டாயமாக பறித்து குப்பையில் போட்டாள். அச்செயலை அனைவரும் வியந்து பார்த்தனர்.
அங்கு பேருந்திற்கு காத்திருந்த ஒரு பெண், நேற்று மிஞ்சிப் போன பொரியலை தான் சுட வைத்து, இன்று நான் ஆபீஸ்க்கு கொண்டு வந்தேன் என தன் சக தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
