எமனை முட்டிய எருமைக் கிடா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 4, 2024
பார்வையிட்டோர்: 1,168 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹரிவம்சன் போக்கிரி என்ற பேரை ஊரில் எடுத்திருந்தான். அவனுக்கு ஒரு வேலையும் இல்லை. அதனால் ஏதாவது கோல்மால் செய்து கொண்டிருந் தான். இந்தக் கோல்மாலைக்கூட அவன் காரியமில் லாமல் செய்யமாட்டான். இந்தத் திறமையைக் கொண்டுதான் அவன் பிழைத்து வந்தான். 

ஆனால், எவ்வளவு திறமை இருந்தாலும் ஒரு நாள் செத்துத்தானே ஆகவேண்டும். அவனுக்கு வயதாகி, கிழவனாகிவிட்டான். ஒரு நாள் இரவில் படுத்தவன் எழுந்திருக்கவே இல்லை; செத்துப் போய்விட்டான். ‘இன் செய்திருக்கும் அக்கிரமங்களுக்கெல்லாம் கணக் கில்லை. இவனுக்கு இப்பொழுது நரகம்தான் கிடைக் கும் என்று ஊரார்கள் பேசிக்கொண்டார்கள். 

ஆனால், அவனுக்கென்ன கிடைத்ததென்று நினைக்கிறீர்கள்? 

ஹரிவம்சன் வானுலகத்தை அடைந்தான். 

மேல் உலகத்துக்குச் சென்றதும் எமதர்மனுடைய கணக்குப்பிள்ளை சித்ரகுப்தன் அவனைத் தடுத்து நிறுத்தினான் ‘ஹரிவம்சா! உன்னுடைய வாழ்வைப் பற்றி பதிவு புஸ்தகத்தைப் பார்த்துவிட்டேன். நீ பாவத்தைத் தவிர ஒன்றுமே செய்யவில்லை. ஆகையால் நகரத்துக்குத் தான் போக வேண்டும் வா’ என்றார். 

ஹரிவம்சன் ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு சித்திர குப்தனை நோக்கிக் கேட்டான். 

‘ஐயா! நல்லதைவிட்டு தவறுதலாக நீங்கள் கணக் கில் பதிவு செய்திருக்கிறீர்கள்’ என்றான். 

சித்திரகுப்தன் இல்லை என்று சாதித்தான். ‘இந்தக் கணக்குப் புஸ்தகத்தைப் பார். பார்த்துவிட்டு விட்டுப் போன தென்னவென்று சொல் பார்ப்போம்’ என்று பதிவு கணக்குப் புத்தகத்தைப் பிரித்துப் போட்டான். இதற்குள் எமதர்மராஜாவும் அங்கே வந்துவிட்டார். 

ஹரிவம்சன் கணக்கை எல்லாம் சோதித்துவிட்டு கோபத்துடன் சித்திரகுப்தனை பார்த்துச் சொன்னான். 

‘என்னய்யா! கோதானம் கொடுத்தால் புண்யம் என்று சொல்வார்கள். நான் கொடுத்த கோதானத்தை பாபம் என்ற கணக்கில் எழுதி இருக்கிறாயே அடுக்குமா?’ என்று கேட்டான். ‘ நீ நல்ல மாடாக தானம் செய்திருந்தால் நீ சொல்வது நியாயம். ஆனால் நீ சாகப் போகிற மாட்டைத் தானே தானம் கொடுத் தாய். நீ தானம் கொடுத்த மாடு தெருக் கோடிக்குப் போவதற்குள் செத்து விழுந்து விட்டதே, அதெப்படி புண்யமாகும்?’ என்றான் சித்திரகுப்தன். ‘உயிரோடு தான் நான் கொடுத்தேன். அதற்குக் காலம் முடிந்து விட்டால் நீங்கள் தானே ஜவாப். நான் செய்த புண்யத்தை நீங்கள் எப்படிப் பாபமாக்கலாம்?’ என்று சண்டை இட்டான் ஹரிவம்சன். 

இந்த வாக்குவாதத்தை கவனித்து வந்த எமதர்ம ராஜன் ஹரிவம்சன் சொல்லுகிற கட்சியில் உண்மை இருப்பதை ஒப்புக் கொண்டான். ‘நீ சொல்வது ஓரளவு சரிதான். அதற்காக என்ன செய்ய வேண்டு மென்கிறாய்?” என்று சேட்டான் எமதர்மன். ‘அந்தப் புண்யத்திற்கு எனக்கென்ன கிடைக்கும் என்று தெரிவித்தால்நான் சொல்லுகிறேன்’ என்றான் ஹரிவம்சன். 

‘நீ ஒரு வரம் கேட்கலாம். அந்த உரிமை உனக் குண்டு என்றான் எமன். 

‘அப்படியானால் சரி. உன்னுடைய எருமைக் கிடாவை எனக்குக் கொடுத்து விடு.’

‘இவ்வளவு சிறிய புண்யத்துக்கு அவ்வளவு பெரிய வரம் கிடைக்காது. வேண்டுமானால் அரை மணி நேரத்துக்கு எருமைக் கிடாவை நீ வைத்து கொள்ளலாம்.’ 

‘அப்படியே ஆகட்டும். என் பேச்சைக் கேட்க வேண்டும் என்று மட்டும் எருமை மாட்டுக்கு உத்தரவு போட்டு விடு’ என்றான் ஹரிவம்சன். 

உடனே எமன் தன் எருமைக் கிடாவை வர வழைத்து அதற்கு உத்தரவு போட்டு ஹரிவம்சனிடம் ஒப்படைத்தான். 

எருமைக் கிடாவைப் பெற்றுக் கொண்ட ஹரிவம் சன் அதன் மேல் ஏறி உட்காரந்து கொண்டு ‘எமனைப் போய் முட்டு’ என்றான். எருமைக் கிடா எமன் மேல் பாய்ந்தது. எமன் பயந்து ஓடினான். எருமையும் விடாமல் அவனை விரட்டிற்று. 

எமன் பிரும்மாவிடம் போய் நடந்த விவரத்தை எல்லாம் சொல்லி தஞ்சமடைந்தான். ஹரிவம்சன் பின் தொடர்ந்து வந்து ‘எமனையும் பிரும்மாவையும் சேர்த்து முட்டு’ என்றான். கிடா பாய்ந்தது. 

எமனும் பிரும்மாவும் பயந்து கொண்டு விஷ்ணு விடம் ஓடினார்கள். 

அங்கும் சென்று எமனையும் பிரும்மாவையும் விஷ்ணுவையும் சேர்த்து முட்டு’ என்று ஹரிவம்சன் உத்தர விட்டான். 

எல்லோரும் சிவனிடம் போய்த் தங்களைக் காப் பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்குள் ஹரிவம்சன் அங்கும் வந்து ‘எமனையும் பிரும்மாவையும் விஷ்ணுவையும் சிவனையும் சேர்த்து முட்டு என்று உத்தரவிட்டான். 

எல்லோரும் நடுக்கமடைந்து இந்திரனிடம் சென் றார்கள். எருமைக்கிடா எல்லோரையும் முட்டத் தொடங்கிவிட்டது. இதைப் போல முப்பத்தி முக்கோடி தேவர்களையும் மும்மூர்த்திகளையும் சேர்த்து முட்டு என்று ஹரிவம்சன் சொன்னான். அவ்வளவு பேரும் நடுங்கிக் கொண்டிருந்த சமயத்தில் எமன் சொன்னான்: ‘ஹரிவம்சா! எருமைக் கிடாவை விட்டு இறங்கு. அரை மணி தீர்ந்துவிட்டது. 

ஹரிவம்சன் எருமைக் கிடாவை விட்டுக் கீழே இறங்கினான். கிடாவும் அசைவற்று நின்றது. 

இனி நரகத்திற்குப் போக வேண்டியதுதான். மணி ஆகிவிட்டது. ஆட்சேபம் இல்லையே என்றான் எமன்.

‘இனி எனக்கு நரகமில்லை’ என்றான் ஹரிவம்சன்.

‘ஏனய்யா இன்னும் வம்பு பண்ணிக் கொண்டிருக் கிறாய்?” என்றான் எமன். 

‘நான் வம்பா பண்ணுகிறேன்? மும்மூர்த்திகளையும் ஒரே காலத்தில் தரிசனம் செய்தால் மோட்சம் என்று வேத புராணங்கள் கூறுகின்றன. நானோ மும்மூர்த்தி களையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் சேர்த்து இதோ தரிசனம் செய்து கொண்டிருக்கிறேன். வேத புராணத்தைப் பொய்யாக்குவது நீயா நானா? வம்பு செய்வது நீயா நானா?’ என்று கைகூப்பி எல்லோரையும் வணங்கினான். 

எமதர்மன் திகைப்படைந்தான். வேத புரா ணத்தை எமனே பொய்யாக்கலாமா? 

‘ஹரிவம்சா! உலகத்திலிருந்த பொழுதே வாயைக் கொண்டு பிழைத்து வந்தாய். இங்கும் வாயைக் கொண்டே ஜெயித்து விட்டாய். நீ சொல்வது நியாயம் தான். வா சொர்க்கலோகத்துக்கு’ என்று ஹரிவம்சனை எமன் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றான். 

(நாட்டுக் கதை) 

– 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.

– காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *