என் பெண்டாட்டி எதிர் வீட்டு வைப்பாட்டி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 5,231 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

அது நகரை ஒட்டிய இடம். காலை மணி 7.30. பேப்பர்காரன், பால்காரன், தயிர், காய்கறி விற்பவர்களெல்லாம் வந்து போய் விட்டார்கள். தெரு காலை புத்துணர்ச்சியில் வெறிச்சோடி இருந்தது. அங்கொருவரும் இங்கொருவருமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள்.

நித்யா வயது 30. நல்ல அழகு, அடக்கம். வழக்கம்போல் காலையிலேயே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போட்டு வீட்டு வேலையில் சுறுசுறுப்பாக இருந்தாள்.

கணவன் சம்பத் எப்போதும் போல் தாமதமாகத்தான் எழுந்தான். கொல்லைக்குப் போய் முகம் கழுவி, பல் விலக்கி காலைக்டன்களை முடித்து விட்டு மனைவி கொடுத்த காபியைக் குடித்து வாசலுக்கு வந்தவன் அங்கே கிடந்த தினசரியை எடுத்து அப்படியே அமர்ந்து விரித்துப் படிக்கத் தொடங்கினான்.

தம்பதிகளுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. தனிக்குடித்தனம். ஆறு வயதில் பையன் கிராமத்தில் தாத்தா வீட்டில் படிக்கிறான். அவர்களுக்குக் குழந்தை என்றால் உயிர். பேரனை விட மனசில்லாமல் தங்களோடேயே இருத்தி படிக்க வைக்கிறார்கள்.

இவர்கள் அடுத்த குழந்தை வேண்டவே வேண்டாமென்று அப்போதே முடிவெடுத்து விட்டார்கள். நித்யாவிற்குத்தான் பெண் குழந்தை மீது ஆசை. அதை தன் கணவனிடம் சொன்னாள்.

“என் சுமாரான வருமானத்துக்கு நாம ஒன்னு பெத்து வளர்த்து நல்லா ஆளாக்குறதுதான் உத்தமம், புத்திசாலித்தனம்ன்னு என் மனசுக்குப் படுது.” என்றான்.

புரியாமல் பார்த்தாள்.

“நித்யா! நான் மாசம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் சாதாரண அரசாங்க வேலைக்காரன். அப்பா அம்மா கொஞ்சம் நிலபுலனோட கிராமத்துல இருந்தாலும் நாம இனி கிராம பக்கம் திரும்பப் போறதில்லே. அதனால் நாம எங்கேயாவது ஒரு நல்ல இடமா பார்த்துப் பிளாட் வாங்கனும்! அடுத்து வீடு கட்டனும், வீடு கட்டனும். இது இல்லாம… தினம் ஏறிக்கிட்டிருக்கிற விலைவாசியில வாழ்க்கை நடத்தனும். அப்புறம் அம்மா அப்பாக்கிட்ட வளர்ற புள்ளையை நல்லா படிக்க வைச்சு டாக்டரோ இஞ்னியராவே ஆக்கி அவனுக்கு நல்ல வழி காட்டனும். அதுக்கு ஒன்னு இருந்தாத்தான் சரிபடும். எனக்குத் தெரிஞ்சு நம்மைவிட மேல் மட்டத்துல இருக்கிற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸெல்லாம் ஒன்னு பெத்துதான் புள்ளைங்களைப் பெரிய ஆளா ஆக்குறாங்க. வாழ்க்கை நடத்துறாங்க. நாமும் அப்படியே வாழலாம்ங்குறது என் அபிப்பிராயம்.” தன் மனதிலுள்ளதை எடுத்து வெளியிட்டான்.

நித்யாவும் விபரம் தெரிந்தவள். படித்தவள்.

“சரிங்க” தலையாட்டினாள்.

ஆனால் உடனிருந்த மாமன், மாமியாருக்கு இதில் உடன்பாடில்லை. ஆட்சேபம்.

“என்னடா! ஒன்னுக்கு ரெண்டு… ஒன்னுக்கு ஒன்னு துணையாய் இருக்கிறதை விட்டுட்டு ஒன்னு போதுங்குறே? அந்த ஒன்னுக்கும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்ன செய்வே?” தண்டபாணி பாய்ந்தார்.

சம்பத் அசரவில்லை.

“நீங்க ஏன் என்னை மட்டும் பெத்து வளர்த்தீங்க?” கேட்டான். சம்பத்… தண்டபாணி – தாமிரபரணிக்கு ஒரே மகன்.

“அ…அது….” இந்த திருப்பி அடிப்பில் அவர் திணறினார்.

“ஏன்ப்பா தடுமாறுறீங்க. உண்மையைச் சொல்லுங்க?” குரலை உயர்த்தினான்.

“அதுக்கு மேல அம்மாவால பெத்துக்க முடியலை. உனக்குப்பிறகு அவளுக்குக் கர்ப்பப்பையில கேன்சர். எடுக்க வேண்டிய நிலைமை.” மெல்ல மென்மையாய்ச் சொல்லும்போதே அவருக்குத் துக்கத்தில் குரல் புரண்டது. கண்களிலும் லேசாக கண்ணீர்த் துளிர்த்து குளம் கட்டியது,

சம்பத்திற்கு… ‘பெற்றவர்களுக்குப் பழசை கிளறி விட்டோம்!’ என்கிற வருத்தம் வந்தது.

“சரி. எனக்கு ஏதாவது ஆச்சா?” பேச்சை விடமுடியாமல் தொடர்ந்தான்.

“இல்லே!”

“எப்படி வளர்த்தீங்க?”

“கண்ணுக்குக் கண்ணா நல்லா வளர்த்தோம்.”

“அப்படியே நானும் வளர்க்கிறேன்”

தண்டபாணிக்கும் தாமிரபரணிக்கும் அடுத்து பேச வழி இல்லை. மௌனமாய் இருந்தார்கள்.

“அப்பா! உங்க நிலைமை பெத்துக்க முடியலை. இப்போ சூழ்நிலை சரி இல்லே. பெத்துக்க முடியாது, நேத்திக்கு மேல்மட்ட வர்க்கம் மட்டும் முழிச்சு இருந்துது. இன்னைக்கு நடுத்தர வர்க்கமும் முழிச்சுடுச்சு. அடிமட்ட வேலையில இருந்து ஐயாயிரம் சம்பளம் வாங்குறவன்கூட தன் பொண்ணு புள்ளைங்க பெரிய படிப்பு படிச்சு டாக்டர் எஞ்னியர் ஆக்கனும்ன்னு ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில ஈடுபட்டு கான்வென்டுல படிக்கி வைக்கிறாங்க. புள்ளை நல்லா படிச்சா பெரிய படிப்பு படிக்க வைக்கிறாங்க. இப்போ அந்த படிப்புகளும் இறங்கி வந்து இவுங்களுக்குச் சாதகமா இருக்கு. இன்னும் விபரம் புரிஞ்சவன் தெம்பு உள்ளவன் வங்கி கடன் வாங்கி புள்ளைங்களைப் படிக்க வைக்கிறாங்க. இந்த கனவுகளுக்கெல்லாம் ஒன்னுதான் சரியாய் இருக்கும். இப்போ நாடு இருக்கும் நிலை உலக மக்கள் தொகையைக் கண்டு எல்லாரும் ஒன்னு பெத்துக்கத்தான் ஆசைப்படுறாங்க. அன்னைக்கு எங்கே பார்த்தாலும் குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம். இன்னைக்கு தேவை இல்லாம போக.. மக்களே முன் வந்து ஒன்னு, ரெண்டு போதும்ன்னு ஆபரேசன் செய்துக்கிறாங்க. கிராம மக்கள்கிட்டேயும் இந்த விழிப்புணர்ச்சி இருக்கு. எனக்கு ஒன்னு போதும்ப்பா.” நிறுத்தினான்.

தாமிரபரணி விடவில்லை.

“நீ சொல்றது சரிப்பா. ஒன்னு பெத்துப் போறதுல ஒரு பெரிய குறை இருக்கு. குழந்தைக்கு அப்பா அம்மாவைத் தவிர அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, பெரியப்பன், சித்தப்பன் பாசமெல்லாம் தெரியாம போகுது” என்றாள்.

“நீங்க சொல்றதுலேயும் நியாயம் இருக்கும்மா. இந்த ஒரு குழந்தை அஸ்திவாரம் இப்போ ஆரம்பிச்சதுன்னாலும். இந்த தலைமுறை தலையெடுக்க நாளாகும். அதுவரை… இப்போ உள்ள குழந்தைங்களுக்குப் பெத்தவங்க அக்கா தங்கை, அண்ணன் தம்பி பாசத்தையெல்லாம் சித்தப்பா பெரியப்பா மக்கள்கிட்ட காட்டிவிட வேண்டியதுதான்.’

“செய்யலாம். ஆனா ஒன்னு பெத்துக்கிறதுனால உள்ள சங்கடம் இன்னைக்கே தலை தூக்கிடுச்சு. குழந்தை தனியா வளர்றதன் விளைவு. அம்மா அப்பா உறவைத் தவிர அவுங்களுக்கு வேற உறவு முறை சகோதர சகோதரி அன்பு, பாசம் ஆழம் புரியலை. அதனால அக்கம் பக்கம் அண்ணன் தங்கச்சி உறவுமுறை உள்ளவங்க காதல்ங்குற பேர்ல கலியாணம் முடிக்கிறாங்க. தினசரிகள்ல படிக்க வேதனையாய் இருக்கு” தண்டபாணி விசனப்பட்டார்.

சம்பத்தும் படித்து வேதனைப் பட்டிருக்கிறான். இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. அதேசமயம் தன் முடிவை முடிவை விட்டுக் கொடுக்கவும் தயாரில்லை.

“நீங்க ஆயிரம் சொல்லுங்கப்பா. என் முடிவுல மாத்தம் கெடையாது. ரெண்டு வைச்சுக்கோடான்னு நீங்க இன்னைக்குச் சொல்லிட்டு நாளைக்குக் கண்ணை மூடிடுவீங்க. பின்னால நான்தான் கஷ்டப்படனும். என்னால முடியாதுப்பா.” முரட்டு அடியாக அடித்தான்.

பெற்றவர்களால் என்ன பதில் சொல்லமுடியும் ?! ஆண்டவன் விட்ட வழி ! விலகினார்கள்.

“ஏன் நித்யா! உனக்கு இதுல ஏதாவது வருத்தமா?” மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

வாழ்க்கையில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு கூடாது. இரு துருவங்கள் சரிபடாது! உணர்ந்த அவள் “உங்க விருப்பம்!” அவன் போக்குக்கு விட்டாள். பலமாக தலையாட்டி தன் சம்மதத்தைத் தெரியப்படுத்தினாள்.

அந்த ஒரு குழந்தையையும் இவர்கள் வளர்க்கக் கொடுத்து வைக்க வில்லை.

“டவுன் நெரிசல்ல குழந்தையைப் படிக்க வைச்சு தினம் திரும்புமா திரும்பாதான்னு ஏன் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கனும். ? நம்ம ஊர்லேயும் நல்ல பள்ளிக்கூடம் இருக்கு. எங்களுக்கும் பாசம் காட்ட ஒரு ஆள், துணை வேணும். அங்கேயே நாங்க பத்ரமாய்ப் படிக்க வைக்கிறோம். யாருக்குப் பாசம் நேசம் தேவைப் பட்டாலும் வந்து பார்த்து சரி செய்துக்கலாம். சொல்லி தண்டபாணி, தாமிரபரணி அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதில் தம்பதிகளுக்குள் சின்ன ஏக்கம், ஏமாற்றம். அதற்காக கவலைப்படவில்லை.

சம்பத் குழந்தை விசயத்தில் மட்டும் சிக்கனத்தைக் கடை பிடிக்கவில்லை. வீட்டிலும் நெறி. டி.வி., பிரிட்ஜ், போன், மிக்ஸி, கிரைண்டர் என்று வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களுடன் வாழ்ந்தாலும் அநாவசிய செலவுகளுக்கு வேலை இல்லை. தேவைக்கு அதிகமாய் மளிகை சாமான்கள் வாங்கினால்கூட ஏன், எதற்கு என்று யோசித்துதான் வாங்குவான். தானும் சிக்கனமாய் இருந்து மனைவியையும் சிக்கனமாக இருக்க வற்புருத்துவான்.

நித்யாவிற்கு இதிலும் கொஞ்சம் கஷ்டம். பிறந்த வீட்டில் கேட்டதெல்லாம் கிடைக்க…ஒரே பெண்ணாகப் பிறந்து செல்லமாக வளர்ந்தவள். கணவன் எந்தவித எந்தவித கெட்டப்பழக்கமுமில்லாத நல்லவன். மாமனார் மாமியார் கொடுமை, வேறு சிக்கல் இல்லாதததினால் கணவன் மனம் கோணாமல் நடந்தாள். அதனால் குடும்பம் ஒரு கோயில் போல எந்த பிரச்சனையும் இல்லை.

கணவனுக்காக சமையல் வேலையில் மூழ்கி இருந்த நித்யா அவனைக் காணாததால் அடுப்படியை விட்டு வெளியே வந்தாள். அவன் வாசலில் அமர்ந்து படிப்பில் ஆழ்ந்திருந்ததைப் பார்த்து “என்னங்க ?” அங்கிருந்தபடியே குரல் கொடுத்தாள்.

சம்பத்திற்குப் படிப்பு மும்முரத்தில் மனைவி அழைத்தது காதில் விழ தலை நிமிராமல் “என்ன?” என்றான்.

‘இன்னைக்கு அலுவலகம் விடுப்பா?”

“இல்ல. ஏன்?“

“வாசல்ல இருக்கீங்க?!”

இது அவன் காதில் விழவில்லை. அடுத்து முக்கியமான செய்தி ஒன்று அவன் கவனத்தைக் கவர்ந்து விட்டபடியால் அதில் ஆழ்ந்தான்.

“என்ன நான் கூப்பிடுறது காதுல விழலையா?!” அதட்டினாள்.

இந்த அதிகார குரல்தான் அவனை உசுப்பியது. தன்னுணர்வைத் தட்டியது. துணுக்குற்றான்.

“இதோ வந்துட்டேன் !…” செய்தியை முழுதும் படிக்காமல் பாதியோடு நிறுத்தி தினசரியை அள்ளி எடுத்துக் கொண்டு அவசரமாக உள்ளே வந்தான்.

அவன் அப்படி வருவதற்குக் காரணம் எதிர் வீடு!

அத்தியாயம் – 2

ஒரு மாதத்திற்கு முன்தான் ‘வாடகைக்கு விடப்படும்’ என்று எழுதி தொங்கவிட்டிருக்கும் எதிர் வீட்டிற்கு முன் ஒரு மினி லாரி வந்து நின்றது. முதலில் அதிலிருந்து கிளீனர் பையன் குதித்தான். கறுப்பு, அழுக்கு சட்டை, உடைசலாய் நெடுநெடுவென்றிருந்தான். பேண்ட் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து காம்பௌன்ட் கேட்டையும் வாசல் கதவுகளையும் விரிய திறந்து முதல் வேலையாய் வெளியில் மாட்டி இருந்த வாடகைக்கு விடப்படும் போர்டை விடப்படும் போர்டை எடுத்து உள்ளே சென்று எங்கோ வைத்தான்.

இவன் இந்த வேலைகளைப் பார்த்ததும் லாரியிலிருந்து குதித்த இரண்டு ஆட்கள் அதன் பின் பக்கக்கதவைத் திறந்து முதலில் சோபா அடுத்து அலமாரி, கட்டில், மெத்தை என்று ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக இறக்கி உள்ளே சென்று வைத்தார்கள். அவர்கள் பாதி இறக்குவதற்குள் அதே வீட்டு முன் ஒரு புது டாடா இண்டிகா லாரிக்கு முன் வந்து நின்றது.

டிரைவர் இருக்கையிலிருந்து அந்த ஆள் இறங்கினார். வயது தலை மீசை கறுகறு. ஒல்லியுமில்லாமல் குண்டுமில்லாமல் நடுத்தரமான உருவம். அதற்கேற்றாற்போல் உயரம். வெள்ளை கதர் சட்டை, வேட்டி. நெற்றியில் குங்குமப் பொட்டு மற்றும் சந்தனப்பொட்டு, கோதுமைக்கும் சற்று சிவந்த நிறம். இடது கையில் தங்க கடிகாரம் மோதிரம். வலது கையில் தங்க குருமாத். பின் பக்க கதவைத் திறந்தார்.

அதிலிருந்து அவள் இறங்கினாள். வயது 30. பார்த்தாலே கண்களைக் கூச வைக்கும் தங்க நிறம். உடலில் வெளிர் மஞ்சள் பட்டுப்புடவை. கொஞ்சமாய் நகைகள் அணிந்திருந்தாள். இவள் நெற்றியிலும் கோயில் விபூ தி குங்குமம்.

இருவரும் உள்ளே சென்றார்கள்.

அதற்கடுத்து லாரியிலிருந்து சாமான்கள் இறக்குவதும் உள்ளே அடுக்குவதும் சுறுசுறுப்பாக நடந்தது. இதில் லாரி டிரைவர், கிளீனர்களும் சேர்ந்து கொண்டார்கள். சொந்த லாரி போல… சாமான்கள் காலியான பின்பும் ரொம்ப நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திலேயே இருந்தது அது. வெகு நேரத்திற்குப் பின் வேலையாட்களுடன் லாரி டிரைவர், கிளீனரும் வியர்வை வழியும் உடல் முகங்களோடு விட்டு உள்ளேயிருந்து வெளியே வந்தார்கள். எதிரிலுள்ள கார்ப்பரேசன் குழாயைத் திறந்து கை கால் உடல்களைக் கழுவி சுத்தம் செய்து துண்டால் துடைத்துக் கொண்டார்கள்.

இப்போது உள்ளே இருந்து முதலாளி வந்தார். சட்டைப் பாக்கெட்டிலிருந்து சலவை நோட்டுகளாக எடுத்து அவர்களிடம் நீட்டினார். நால்வரும் திருப்தியாக வாங்கிக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் லாரி சென்றது. திறந்திருந்த எதிர்வீட்டுக்கதவு சிறிது நேரத்தில் அடைக்கப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் சம்பத்தும் நித்யாவும் சன்னல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உள்ளே உட்கார்ந்து வெளியே நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்துவீட்டு பங்கஜம் மாமியும் பார்த்திருப்பாள் போல. இவர்கள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

வயது 38.சுமாரான உயரம். பளிச்சென்று நெருப்பு நிறம். பூனை கண்கள். உதடுகள் ரோஜா நிறம். எப்போதும் நறுவிசாக உடை உடுத்தி பளிச்சென்றிருப்பாள். ஆனால் அவள் அகத்துக்காரர் அம்பலவாணன் ஜாடிக்கேற்ற மூடி இல்லை. நாற்பது வயதென்றாலும் ஐம்பது வயது தோற்றம். தாடி, மீசை, தலையெல்லாம் வெள்ளை. மாமி வற்புருத்தலுக்காக எப்போதாவது முடிக்குக் கோத்ரெட்ஜ் டை பூ சுவார். முகச்சவரம் என்பது அகராதியில் இல்லை. நினைத்துக் கொண்டால் முடிவெட்டல். அதுவும் பங்கஜம் திட்ட வேண்டும்.

“ஏங்க ! தாடியும் மீசையுமாய் இப்படி கரடி மாதிரி நிக்கிறீங்களே.. சவரம் கூடாதா?” கத்த வேண்டும்.

“முள்ளம்பன்றி முள் கணக்கா தாடியும் மீசையும் குத்திக்கிட்டு நிக்குது. நீங்க கிட்டே வந்தா ஊசியாய்க் குத்திடுமோன்னு பார்க்கவே பயமா இருக்கு. முதல்ல சவரம் பண்ணிக்கிட்டு வீட்டுல நுழைங்க. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை விரட்ட வேண்டும். அதற்கு அப்புறம்தான் போனால் போகிறதென்று அதற்கு விடிவு காலம் வரும். ஒரு தடவை முகத்தில் கத்தி பட்டால் அடுத்து பட ஒரு மாதத்தைத் தாண்ட வேண்டும். முடி வெட்ட நான்கைந்து மாதங்கள் ஆகும்.

அதேபோல் உடை விசயத்திலும் அவருக்கு நாகரீகம் கிடையாது. மாமி துவைத்துப் போட்டால்தான் உண்டு. மற்றப்படி அது அழுக்காய் இருந்தாலும், கசங்கி இருந்தாலும் ஆளுக்குக் கவலை கிடையாது. எடுத்துப் போட்டுக்கொண்டு புறப்பட்டு விடுவார். மாமிதான் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு துவைக்க வேண்டும். அயர்ன் பாக்ஸ் சலவை என்பதை அவர் சட்டை, வேட்டி, பேண்ட் அகராதியில் பார்த்தது கிடையாது. வீட்டிற்கு வந்தால் அழுக்குப் பனியன், அழுக்குக் கைலி. மனுசன் பஞ்சப் பரதேசியாக நிற்பார்.

இவ்வளவிற்கும் படிப்பறிவு உலக அனுபவம் தெரியாதவரல்ல. உயர்ந்த படிப்பு. உசந்த உத்தியோகம். பெரிய கம்பெனியில் மானேஜர் வேலை. எழுபதினாயிரம் சம்பளம். பெண்ணொருத்தி அமெரிக்காவில் இருக்கிறாள். பையன் டில்லியில் டாக்டராக இருக்கிறான். பணம் காசுக்குப் பஞ்சம் கிடையாது. மனுசருக்கு வாழ்வில் அக்கரை கிடையாது,

மாமியும் எத்தனைக் காலத்திற்கு இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டு புருசனைத் திருத்துவாள்…?! அலுத்துப் போய் விட்டுவிட்டாள். தவிர்க்க முடியாத விசேசங்களைத் தவிர புருசன் பொண்டாட்டியைச் சேர்த்து பார்க்க முடியாது. மாமிக்கு அவரைக் கணவன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கம், அவமானம். தவிர்த்துவிட்டுதான் செல்வாள். இவரும் அதைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது. ‘நீ போ ‘ஒதுங்கிக் கொள்வார். அதே போல் அம்பலவாணன் வீட்டிலிருக்கிறாரா, வெளியூ ரிலிருக்கிறாரா, அலுவலகம் போயிருக்காரா தெரியாது. அடக்கம். சத்தம் கிடையாது. மனுசர் காலை எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு ஓட்டைச் சைக்கிளில் ஓட்டைச் சைக்கிளில் செல்வார். அது சத்தியமாய்க் கயலான் கடைக்குப் போக வேண்டிய சைக்கிள். ஹேண்டில்பாரில் ஜவுளிக்கடை மஞ்சள் பையில் தண்ணீர் பாட்டிலும் ஒரு கேரியரும் தொங்கும். இரவு எத்தனை மணிக்குத் திரும்புவார் என்பது அவருக்கும் ஆண்டவனுக்கும்தான் வெளிச்சம். அது வரை மாமி எப்படி அவ்வளவு பெரிய வீட்டில் கொட்ட கொட்ட அமர்ந்திருப்பாள். தெருவே அவளுக்குப் பழக்கம். நித்யாவோடு நெருக்கம்.

பங்கஜம் மாமிக்கு புருசன் அம்பலவாணனைப் போல் யாருடனும் பேசாமல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உலகத்தை ஒதுக்கி இருப்பவள் கிடையாது. நாகரீகம் நறுவிசாக இருந்து எல்லாரிடமும் கலகலவென்று பழகி வாழ்க்கையை அனுபவித்துப் போகும் ரகம். மாமி யாருக்கும் உதவி செய்வாள். எவர் வந்து கேட்டாலும் எடுத்துக் கொடுத்து விடுவாள்.

அவள்தான் உள்ளே வந்து. “எதிர்ல குடி வந்திருக்கிறது யாரு?” இவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

“தெரியலை மாமி!” நித்யா பதில் சொன்னாள்.

“மாமின்னு சொல்லி என்னை வயசானவளாய் ஆக்காதேன்னு எத்தனையோ தரம் சொல்லியாச்சு. உன் புத்தியில உரைக்க மாட்டேங்குது” என்று கோபப்பட்டவள் படீரென்று குரலைத் தாழ்த்தி, “இனிமேலாவது நான் சொல்லிக் கொடுத்தாப்போல அக்கான்னு கூப்பிடு.” சொன்னாள்.

“சரி மாமி!” நித்யாவிற்குப் பழக்கத் தோசம் கடனாய் வந்துவிட்டது,

“அடி செருப்பால!” அடித் தொண்டையில் அதட்டினாள்.

“மன்னிச்சுக்கோக்கா சத்தியமா தெரியாது.” நித்யா நடுங்கிப் போய் உதிர்த்தாள்.

“இதுதான் சரி!” என்று சந்தோசப்பட்ட அவள், “கவலை வேணாம். சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்..!” சொல்லிப் போனாள்.

இவள் கண்டுபிடித்துச் சொல்வதற்குள் ஐந்தாம் நாள் அலுவலகத்தில் போட்டு உடைத்துவிட்டான் விக்னு.

விக்னு, சம்பத் சக ஊழியன். அவன் எல்லா இடங்களிலும் புகுந்து புறப்பட்டு வந்துவிடுவான். மனதிலுள்ளது வாயில் வரும் என்பதற்குதாரணமாய் ஆள் வாயைத் திறந்தால் செக்ஸ் ஜோக்தான்.

“அம்பி! உனக்கொரு சூப்பர் பொண் பார்த்திருக்கேன்டா !” ஒரு நாள் மணி ஐயர் வந்து அவனிடம் ரொம்ப அக்கரையாய்ச் சொன்னார். ‘புருசன் எந்த நாட்டுல வேலையில இருக்கான் ?.” இவன் திருப்பிக் கேட்டான்.

“என் புத்தியை….” அவர் தலையிலடித்து நொந்து கொண்டு நகர… இருந்த ஆண் பெண் ஊழியர்கள் அத்தனை பேர்களும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள்.

அடுத்து சம்பத் போய்தான் அவரைச் சமாதானப்படுத்தினான்.

விக்னு பேச்சுக்குத் தகுந்தபடி பலான விசயத்திலும் கில்லாடி. ஒருத்தியுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து பேசினானென்றால் மூன்றாம் நாள் எங்காவது ஒரு லாட்ஜில் அறை ஒதுக்கி விடுவான்.

“எப்புடிடா இவ்வளவு சீக்கிரம் ?” நண்பர்கள் வாயைப்பிளப்பார்கள்.

“பொண்ணு விசயத்தையெல்லாம் வீணா வளர்த்தக் கூடாது, பொம்பளையை அநாவசியமா சுத்தி அவளுக்கும் நமக்கும் கெட்ட பேர் ஏற்படுத்திக்கக்கூடாது. ரெண்டு நாள் பேச்சுக் கொடுக்கனும். மூணாவது நாள் சம்மதமான்னு கேட்கனும். சரியாய் இருந்தால் முடிக்கனும். இல்லேன்னா விடனும்.” அவன் நடப்பைச் சொல்வான்.

“உன்கிட்ட மாட்டுறது எல்லாமே பழமா?” அன்றைக்குச் சுந்தரம் கேட்டான்.

“செருப்பாலடிப்பேன்னு காட்டாமாய்ச் சொல்லிப் போற பொண்ணுங்களும் உண்டு. நான் அப்படிப்பட்டவளெல்லாம் இல்லேன்னு மென்மையாய் நகர்றவளும் உண்டு. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படக்கூடாது. விரும்பினா பிடிச்சுக்கனும். விரும்பலைன்னா விலகிடனும். எவள்கிட்ட எப்படி நடந்துக்கிட்டாலும் நண்பர்கள் விசயத்துலமட்டும் யோக்கியமா நடந்துக்கனும். மீறி நடக்கிறவன் சுத்தமான யோக்கியன் கெடையாது. கடைஞ்செடுத்த அயோக்கியன்.”

“இன்னைக்கு என்ன விசேசம்?” அன்றைக்குச் சுந்தரம் கேட்டான்.

“சம்பத் அதிர்ஷ்டக்காரன்!” அவன் இவனைப் பார்த்துப் பெருமையாய்ச் சொன்னான்.

“என்னடா சொல்றே?!” இவன் திகைத்தான், திடுக்கிட்டான்.

“நிசமா நீ அதிர்ஷ்டக்காரன்!” அவன் மறுபடியும் அதையேச் சொன்னான்.

“எப்படி?“ மணி ஐயர்.

“இவன் வீட்டுக்கு முன்னால ஒரு கிளி குடி வந்திருக்கு.” ‘பயலுக்கு மூக்கில் வேர்த்துவிட்டது !‘ சம்பத்திற்குப் புரிந்து விட்டது.

“அப்படியா?!” எதிரிலமர்ந்திருக்கும் பாலுவிற்கு ஆச்சரியம்.

“ஆமாம். பேர் சொர்ணமுகி. ஆள் நல்ல அழகு அம்சம். கூத்தாநல்லுாருக்குப் பக்கத்துல கும்பிடுபேட்டை சொந்த ஊர். இருபது வயசுல திருமணம். அடுத்த வருசமே விவாவகரத்து. காரணம்…. இவள் எவனோ ஒரு மாஜி காதலனோட பேசிக்கிட்டிருந்தாளாம். புருசன் பார்த்து தன் வாழ்க்கையிலேர்ந்தே விவாவகரத்து கொடுத்துட்டான். அப்புறம் புகுந்த ஊர்ல இருக்கப் பிடிக்காம சொந்த ஊருக்கு வந்தாள். அம்மா அப்பாவுக்கு இவள் முகத்துல முழிக்க அவமானம். நிமிர்ந்து பார்க்கலை.”

“அப்புறம்?” சுந்தரம் ஆவலை அடக்க முடியாமல் கேட்டான். “அப்புறமென்ன அப்புறம்… விழுப்புரம் ? அவள் அந்த ஊரை விட்டு திருவண்ணாமலைக்கு வந்தாள். ஒண்டிக்கட்டையாய் இருந்தவள் அடுத்த ஊர் பஸ் ஓனர் கண்ணுல பட்டிருக்காள். ரெண்டு பேருக்கும் தொடர்பு. ஆள் நிரந்தர வைப்பாட்டியாய் ஆகிட்டாள்.”

“அவன் எப்படி?”

“ஆள் நல்ல வாட்ட சாட்டம். வயசு 45. கலியாணம் கட்டி பொண்டாட்டி புள்ளையெல்லாம் இருக்கு. அவர் இவள் அழகுல மயங்கி கௌரவத்துக்காக வைச்சிருக்கார். அவ இப்போ சம்பத் எதிர் வீட்டுல குடி. இவன் அதிர்ஷ்டக்காரன் இல்லாம எப்படி?”

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியம்?” கிரண்.

“திருவண்ணாமலையிலேர்ந்து அவளைப் பத்தி முழுசா தெரிஞ்ச என் மச்சான் நேத்திக்கு விருந்தாளியாய் என் வீட்டுக்கு வந்தான். நம்ம ஊர் கிளி இந்த ஊருக்குக் குடி வந்திருக்குன்னு எடுத்துவிட்டான். அந்த நேரம் அவள் எதிர் வீட்டிலேர்ந்து வெளியே வர இதுதான் அது சொன்னான்”.

“உன் மச்சானும் உன்னைப் போல மோப்ப நாயா?” மணி ஐயர் சமயம் பார்த்து குத்தினார்.

“அப்படித்தான்!” விக்னு சளைக்கவில்லை. உடைத்தான். ‘அப்போ ரெண்டு பேரும் ஒன்னா ஒரு இடத்துக்குப் போவீங்களா?”

“போவோம். உறவுமுறை சிக்கல் காரணமா ரெண்டு பேருக்கும் தனித்தனி ஆள்.”

“யாரு கண்டா. மானம் கெட்ட பசங்க.” ஐயர் தலையிலடித்துக் கொண்டார்.

“நம்பலைன்னா அடுத்த முறை நாங்க போகும்போது உங்களைக் கூட்டிப் போறோம்!” சொல்ல…

“வேண்டாம்ப்பா!” கையெடுத்துக் கும்பிட்டு ஐயர் காதுகளை மூடிக்கொண்டார்.

”சம்பத் ! நீ அச்சாரம் போட்டுடு!” விக்னு இவனைச் சீண்டினான்.

“ஏன் நீங்க போட மாட்டீங்களோ?!” கிரண் அவனை உசுப்பினான்.

“நாலு நாளைக்குச் சம்பத் வீட்டுக்குப் படை எடுத்தால் போச்சு!” விக்னு சளைக்கவில்லை. எதையும் தள்ளாத குணம்.

“வேண்டாம்டா. என் வீட்டுக்கு எவனும் வரக்கூடாது, குறிப்பா இவன் தலை தெரியக்கூடாது !” சம்பத் விக்னுவைக் காட்டி கறாரடித்தான். ‘பயம் வேணாம் மாப்பிளே! வர்றேன்”

“ஆமாடா. ஆத்துல போற தண்ணியை அள்ளி ஆயாக் குடி அண்ணி குடி. உனக்குப் பாதகம் வராது.” கிரண் அவனுக்கு ஒத்து ஊதினான்.

”நான் தெருவுல கண்ணியமான ஆள். சாமிங்களா கையெடுத்துக் கும்பிடுறேன். கெடுத்துடாதீங்க.” கும்பிட்டான் சம்பத்.

“நாங்க வராம இருக்கனும்ன்னா நீ கூடிய சீக்கிரம் எங்களுக்குப் பதில் நல்ல சேதி சொல்லனும்!”

“வம்பா?” சம்பத் அரண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.


மாலை. வீட்டிற்கு வந்த அடுத்த நொடியே நித்யா இவன் கையில் காபியைக் கொடுத்து “இனி வீட்டு வாசல்ல வந்து அநாவசியமா நிக்காதீங்க நெளியாதீங்க ?” உத்தரவு போட்டாள்.

“ஏன்?“ சம்பத் மனைவியை ஏறிட்டான்.

“எதிர்வீட்டுல குடி வந்திருக்கிறவள் ஒரு மாதிரியாம் !” “மாதிரின்னா ?!“

“ஒருத்தருக்கு வைப்பாட்டியாம்!“

“அப்படியா ஆள் யார்?”

“அன்னைக்குப் பார்த்தோமே அவர்தான். அவன் காலை மாலை வர்றார்”.

“அடப்பாவி ! அன்னைக்கு அப்புறம் என் கண்ணுல படலையே!”

“பட்டு என்ன செய்யப் போறீங்க ? விபரம் சொல்லிட்டேன் புரிஞ்சு நடந்துக்கோங்க.”

“அவன் வந்து போறதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?”

“ம்ம்…அந்த சிறுக்கி உங்களையும் மயக்கிடுவாள்..!”

“விசயம் உபயம் யாரு ?”

“பங்கஜம் அக்கா!“

“அவளுக்கு உபயம்?”

“யாரோ? ரிஷி மூலம் நதி மூலம் கேட்கக்கூடாது!”

“நீ ஒன்னும் தப்பா சொல்லலையே !?” சம்பத் சந்தேகமாக நித்யாவைப் பார்த்தான்.

“நான் எதுக்குத் தப்பா சொல்லனும்?”

“ம்ம்… பயம்.!“

“எனக்கு அந்த பயமெல்லாம் கெடையாது முடிஞ்சா அவளை வளைச்சுப்பாருங்க தெரியும் சேதி”

சம்பத்திற்கு இது முடியாது. அவனுக்கு மனைவியைத் தவிர மற்றவளைத் தெரியாது. அந்த அளவிற்குச் சுத்தம். அன்றிலிருந்து தங்களுக்குள் வீண் வம்பு வழக்கு வந்துவிடக்கூடாதென்பதற்காக.. இவனும் மறந்து நின்றதில்லை. அப்படியே மறந்து நின்றாலும் நித்யா அழைத்தால் வந்துவிடுவான்

நின்றால் என்ன நடக்கும் என்பது அறிய… ஒரு நாள் இவள் அழைக்க காதில் விழாது போல இருந்தான். நித்யா வாசலுக்கே வந்து “உங்களுக்குப் பொண்டாட்டி புள்ள இருக்கு மறந்துடாதீங்க !” சம்பத் காதுக்கு மட்டும் கேட்கும்படி கண்டித்தாள்.

“மறக்கலை மறக்கலை.“ தலையாட்டினானேயொழிய நகரவில்லை.

“சொல்லிக்கிட்டே ஏன் நிக்கனும் ?” நித்யா குரலில் கடுமை ஏறியது.

“வந்துட்டேன் ஆஜர் !” அதற்கு மேல் சோதனை செய்தால் குடும்பத்தில் குழப்பம் வந்துவிடுமென்று பயந்து பாய்ந்து உள்ளே வந்து விட்டான்.

அன்றிலிருந்து இவன் நிற்காவிட்டாலும் நித்யா அவளைப் பற்றி நிதம் ஏதாவது ஒரு கதை சொல்லாமல் துாங்க விட மாட்டாள்.

‘இன்றைக்கு என்ன சொல்வாள்?’ சம்பத் நினைத்துக் கொண்டே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.

அத்தியாயம் – 3

சம்பத் வந்து நெடு நேரமாகியும் நித்யா எதிர்வீட்டுக்காரியைப் பற்றி குறை சொல்லாதது ஆச்சரியத்தை அளித்தது.

‘என்ன..! இன்றைக்குக் குறை இல்லையா. அவளைப் பற்றிப் பேசக்கூடாது என்று ஏதாவது சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறாளா?!’ இவனுக்குச் சந்தேகம் துளிர்த்தது.

ஆனால் சாப்பிட்டுவிட்டு விளக்கை அணைத்து படுக்கைக்கு வந்த பிறகு ஆரம்பித்துவிட்டாள்.

“இன்னைக்கு அந்த சிறுக்கிக்கு அவன் பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்திருக்கான் போல. கட்டி மினுக்கிக்கிட்டு என்னவோ கட்டினவன்கூட உரிமையாப் போறாப் போல உரசிக்கிட்டுப் போனாள்.” சொன்னாள்.

“எங்கே ?”

“கோயிலுக்கு”

“புட வை மட்டுமா ?! அட்டிகை வேற. அஞ்சு பவுன் தேறும். அட்டிகையில வெள்ளைக் கல். பதக்கத்துல சுத்தி சிகப்பு. நடுவால பச்சைக்கல் டாலடிக்குது,”

“…”

“பதக்கம் பார்க்க எடுப்பா அழகா இருந்துது, அவன் மானாவாரியா கொட்றாங்க. சம்பாதிக்கிறானா? எங்காவது கொட்டி அள்றானா, கொள்ளையடிக்கிறானா தெரியலைங்க.”

“நித்யா ! பணத்தை ஒரு அளவுக்குச் சம்பாதிச்சா போதும். அடுத்து அது தானா சம்பாதிச்சுக்கும். பணம் பணத்தைச் சம்பாதிக்கும் போது மழையாய்க் கொட்டும்.”

“நிசம்தான்ங்க. வைப்பாட்டிக்கே இவ்வளவு அழிக்கிறானே. பொண்டாட்டிக்கு எவ்வளவு அழிச்சிருப்பான்…?! தங்கம் வைரத்தால இழைச்சிருப்பான் !” ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

சம்பத் பேசவில்லை.

“நாளன்னைக்கு என்ன விசேசம் சொல்லுங்க ?”

“எங்கே?”

“நம்ப வீட்டுல.”

“என்ன விசேசம்?”

“எனக்குப் பொறந்த நாள்!”

சம்பத்திற்கு இன்றைக்கு இவள் வெட்டியாய் பேச்சு ஆரம்பிக்கவில்லை புரிந்து விட்டது.

“அப்படியா?!”ஆச்சரியப்பட்டவன் போல் நடித்தான்.

“ஏன் மறந்துட்டீங்களா?”

“ஆமாம்.“

“பொண்டாட்டி மேல ஆசை இல்லேயா?”

“ஆசை இல்லேன்னு யார் சொன்னது ? திருமண நாள், பொறந்த நாளெல்லாம் நினைவு வைச்சிக்கிறதில்லே.”

“ரொம்ப நல்லது. பொறந்த நாளுக்கு எனக்கு என்ன பரிசு வாங்கித் தரப்போறீங்க?”

“ராமக்கட்டி!”

“அதுதான் வாங்கித் தர முடியும்! பங்கஜம் அக்காவுக்கு முந்தா நேத்து கலியாண நாள். வீட்டுக்காரர் பட்டுப் புடவை எடுத்துக் கொடுத்திருக்கார். பணம் கொடுத்துட்டார். மாமியே வாங்கிட்டாள். நானும் கூட போனேன். ஐயாயிரம் ரூபாய்க்கெல்லாம் பட்டுப்புடவை இருக்குங்க”.

“எத்தனை ரூபாய்க்கு இருந்தாலென்ன. நான் எடுக்கப் போறதில்லே. அநாவசியம்.”

“என்ன அநாவசியம்?”

“உன்கிட்ட எத்தினி பட்டுப் புடவை இருக்கு?”

“பத்து.”

“அதை வாரத்துல எத்தினி தடவை கட்டிக்கிறே?”

“வாரத்துல கட்டிக்கிறதா ?! ஏதாவது விருந்து விசேசம்ன்னாதான் கட்டிக்கனும்?“

“ஒரு வருசத்துல எத்தினி விருந்து, விசேசம் வரும்?”

“கலியாணம் காட்சியெல்லாம் சேர்த்து பத்து பதினைஞ்சு.”

“இந்த பதினைஞ்சு, இருவது விசேசங்களுக்கும் பத்துப் புடவைகளையும் மாத்தி மாத்தி கட்டிப்போனாப் போதுமே!”

“எனக்கு வருசத்துக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கக் கூடாதா?”

“அப்படி எடுத்துக் கொடுத்துதான் இன்னைக்குப் பத்து. இது வாழ்நாள் முழுக்க போதும். மேலும் ஏன் பட்டுப்புடவை?”

“ஒரு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கிறதுக்கு ஏன் ஓராயிரம் கேள்வி?”

“நித்யா! உன் கலியாணப் பட்டுப் புடவை அப்போ பதினைஞ்சாயிரம். இப்போ முப்பதாயிரம். பொண்ணு வீட்டிலேர்ந்து புடவை செலக்சன் செய்ய வந்த உன் அக்கா இந்த பட்டுப் புடவை கட்டினாத்தான் என் தங்கை எடுப்பாய் இருப்பாள்ன்னு ஒத்தைக் கால்ல நின்னாங்க. எனக்கு அவ்வளவு விலையில எடுக்க விருப்பமில்லே. மாப்பிள்ளை சீர் செனத்தின்னு வாங்கிக் கொட்றான். இப்படியாவது செலவு செய்யட்டும்ன்னு பிடிவாதம் பிடிச்சாங்க. நானும் அவுங்க மனம் கோணக்கூடாதுன்னு எடுத்தேன். அந்த பதினைஞ்சாயிரம் புடவையை இந்த பத்து வருசத்துல மிஞ்சிப் போனால் நம்ம திருமணத்துக்குப் பிறகு இருபது இருபத்தைஞ்சு தடவை கட்டி இருப்பே. அடுத்து வாங்கிக் கொடுத்த புடவைகளெல்லாம் ரெண்டாயிரம் மூவாயிரம் அஞ்சாயிரம். அதுகளை இத்தனைத் தரம்தான் கட்டிருப்பே. உன் பெட்டியில கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் புடவைகளாய் முடங்கி இருக்கு.

அந்த முப்பதாயிரத்துக்கு நகைகளாய் எடுத்துப் போட்டிருந்தாலாவது சமயத்துல அடகு வைச்சு பணத்தேவைகளைச் சரி செய்துக்கலாம். மதிப்பும் கூடுமேத் தவிர குறையாது. நாளைக்கு இந்த புடவைகளின் மதிப்பு பித்தளைப் பாத்திரங்கள்கூட கிடையாது. சில்வர் பாத்திரம்.” நிறுத்தினான்.

நித்யாவிற்கு ஏன் கேட்டோமென்று வெறுத்துப் போனது. “இப்படியெல்லாம் அட்டைக்கணக்குப் பொட்டைக் கணக்குப் பார்த்தால் வாழ்க்கையில எப்படி சந்தோசம் கிட்டும்?” கேட்டாள்.

“பட்டு பீதாம்பரத்துல சந்தோசத்தை விதைச்சு பணத்தை வீண் விரயமாக்கிறதை விட வாழ்க்கையில சின்னச் சின்ன செலவுகள்ல நிறைய சந்தோசங்கள் இருக்கு நித்யா.”

“சரி. நான் பட்டுக் கேட்டது தப்பு. ஏதாவது நகை எடுத்துக் கொடுங்க.” என்றவள் “உன்கிட்ட தாய்வீட்டுல போட்டு வந்தது பதினைஞ்சுப் பவுன் இருக்கு. அது இல்லாமல் இந்த பத்து வருசத்துல நான் வாங்கிக் கொடுத்தது எட்டு பவுன் இருக்கு. ஆக… மொத்தம் இருபத்தி மூணு பவுன் இருக்கு. காதுல கழுத்துல போட்டிருக்கிறது உபரி. இந்த இருபத்து மூணு பவுன் நகைகளை எத்தனைத் தடவை போட்டிருக்கே. அவசியமாங்குற இந்த பட்டுப்புடவை கேள்வியெல்லாம் வேணாம்.” முயக்கினாள்.

“கையில் பணமில்லை!” சம்பத் ஒரு வாய் மொழியில்சொன்னான்.

‘ஏன் என்னாச்சு?”

“ரெண்டு லட்ச ரூபாய் பிளாட்ல முடங்கி இருக்கு.”

ஆறு மாதத்திற்கு முன்தான் கொஞ்சம் கையிருப்பு பிராவிடெண்ட் பண்டில் கடன், வங்கி லோன் என்று சேமித்து பிளாட் வாங்கினார்கள். வங்கி லோன் பிடிபட சம்பளம் குறைச்சல்தான். என்றாலும் சம்பத் என்றைக்கும் தாராளம் கிடையாது. கடிசல்தான் ! பிள்ளையையேக் கணக்குப் பார்த்துப் பெற்றவன். எந்த ஒரு பொருளையும் யோசிக்காமல் வாங்க மாட்டான். நித்யா வெறுத்துப் போகும் அளவிற்குக் கேள்வி கேட்டுதான் வாங்குவான். அவன் நிலமை அப்படி. அப்படி. சின்ன வயதில் வறுமையில் அடிபட்டவன். கால் காசு மதிப்பு தெரிந்தவன். இவனுக்கு விபரம் தெரியும் வயதில்தான் குடும்பம் நிமிரல்.

நித்யா அப்படிக் கிடையாது. அம்மா அப்பா பணக்காரர்கள். ஒரு பெண் செல்லம் என்பதால் வளர்ப்பில் படிப்பில் தாராளம். பிறந்த நாள் திருமண நாள் கொண்டாடவில்லையென்றால் தூக்கம் வராது,

“சின்னதா ஒரு நகை வாங்கித் தரப்படாதா?” கெஞ்சலாகக் கேட்டாள்.

“நோ!” சொல்லிக் குப்புறப்படுத்துக் கொண்டான்.

நித்யாவிற்கு ஏமாற்றமில்லை. பழக்கப்பட்டுப் போனது. கண்களை மூடினாள்.


மறுநாள் காலை. சம்பத் எதிர்பார்க்கவே இல்லை. சாமி தரிசனம் போல் சொர்ணமுகி தென்பட்டாள். இவன் எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வர… அவள் வாசல் தெளித்து உள்ளே சென்றாள். அவள் முன்னழகும் பின்னழகும் அந்த காலை வேளையிலேயே இவனுக்குள் கிறுகிறுப்பை ஏற்படுத்தியது.

நல்ல வேளையாக நித்யா இதைக் கவனிக்க வில்லை.

‘ஏன் வேலைக்காரி வைத்துக் கொள்ளவில்லை. இடைஞ்சல் தொந்தரவு என்று விட்டுவிட்டார்கள் போல..!’ – புரிந்தது.

அலுவலகம் சென்றபின்பும் அவள் மயக்கம் தெளியவில்லை. வேலையில் மனம் பதியவில்லை.

‘என்ன! பய இன்னைக்கு ஒரு மாதிரியா மருந்துக் குடிச்சாப்போல இருக்கான்?!” கவனித்த கிரண் கேட்டான்.

“எதிர் வீட்டுக் கிளி மனசுல பதிஞ்சுடுச்சா, மடங்கிடுச்சா?” விக்னு அவனுக்கு ஒத்தாசையாய் வந்தான்.

“அதெல்லாம் ஒன்னுமில்லே.” இவன் சமாளித்தும் அவர்கள் விடவில்லை.

“ஏன்டா பயமா?”

“அவள் இவனுக்கெல்லாம் மடங்க மாட்டாள்டா. கஞ்சப்பயல்.” விக்னு கிர்ரேத்தினான்.

“மச்சி! கிளி மடங்கனும்ன்னா காசு செலவு செய்யனும். காசுக்கு மயங்காதவள் யாரும் கலியுகத்துல இல்லே.”

“நண்பன் வீட்டுல வந்து கலாட்டா பண்ணக்கூடாது உனக்குக் கெட்டபேர்ன்றதாலதான் நாங்களெல்லாம் அந்தப்பக்கம் திரும்பாம இருக்கோம். இல்லேன்னா விக்னு வந்து ரெண்டே நாள்ல புடிச்சுப்பான். வாய்ப்பு புடிச்சுக்கோ.”

“வேலையைப் பாருங்கப்பா. எப்போ பார்த்தாலும் இதே பேச்சு.” சூப்பிரண்டெண்ட் வந்து கடுப்படித்த பிறகே அவர்கள் அவரவர்கள் இடத்திற்குத் தாவினார்கள்.

‘அப்பாடி ஒழிந்தார்கள்!‘ சம்பத்திற்குள் நிம்மதி பட்டாலும்…. சொர்ணமுகி சம்பத் கண்களில் நின்றாள்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *