என் கனா
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 48
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சட்டென்று கண்ணை மூடிக் கொண்ட சாயங்கால வெயில். வெள்ளி நிற மேகமெல்லாம் கூடிக் குழைந்து கர்ப்ப வேதனையில் முகம் கறுத்தன. அதன் கோபத்தில் சூரியன் மறைந்து கொண்டது. தரையில் மேக நிழல்களாகக் கனத்த இருட்டு!
எனக்கு ஒரே புழுக்கம். நசநசப்பு. மூச்சே போகவில்லை. மயக்கப் படபடப்பில் மனத் திணறல். ஆனாலும், மனசின் ஒரு மூலையில் முகம் தெரியாத மகிழ்ச்சி ! ‘எனக்குப் பிரியமான மழைக் காதலன் வரப் போறானோ…?’
ஒரு மாயத் தோழி பிசாசாக வந்து என்னாவான்..? மரங்கள் மோதினாள். “அடியே, ஒன்னோட ஆள் ஆசையோட வாராண்டி” என்று கேலியும் கிண்டலுமாக உடம்பெல்லாம் கிச்சலம் காட்டினாள்! வெட்கத்திணறலோடு தவித்த என் திரேகத்துக்குள் அவளது விளையாட்டுச் சேட்டைகள்!
என் பச்சையாடைக்குள் புகுந்துகொண்டு செய்த அலைக் கழிப்புகள். அவளது மூர்க்க விளையாட்டில் எனது மஞ்சள் மேலாடைகள் நழுவி உதிர்ந்தன! பரவசம் தாளாமல் தோழியின் குதூகலத்தில் கூத்தாடினேன் !
“ச்சீ… போடி” என்ற என் போலிச் சிணுங்கல், “ஊய்ய்… ஊய்ய்…”யென்று பேரோசைகளாகச் சீறியது.
“வந்துட்டாண்டி” என்ற கூச்சலோடு விட்டு விலகிப்போன தோழி. அவளது சட்டென்ற விலகலில் திகைத்துப்போன நான். ‘எங்க போய்ட்டா இந்தச் சிறுக்கி ?’ என்ற திகைப்பில் ஸ்தம்பித்துப் போனேன். என்னைப் பிடித்துக்கொண்ட தனிமை… பரவசத் தனிமை… காதலன் முன்னால் தனித்து விடப் பட்டோமே என்கிற இன்பத்திணறல்!
ஒரு சுகச்சூன்யத்தில் திகைத்துக்கிடந்த என் மேல் பொட்டென்று விழுந்த முதற் துளி. என் மழை நாயகனின் ஈர ஸ்பரிசம்! என்னுள் புல்லரிப்பு. என் நரம்பெல்லாம் பாய்ந்து பரவிய இன்பச் சிலிர்ப்பு! என் திரேகமே குழைந்து… விறைத்து… தடுமாறித் தத்தளித்து…
என் காதலனின் மழைத்துளி முத்தங்கள், முத்தங்கள். கிறு கிறுத்துப் போய்க் கண்ணை மூடிய என் உடம்பெல்லாம் ஈரமாக்கும் மேக முத்தங்கள்.
என் காதலனின் மோகக் கொஞ்சல்கள்! ஆசை மிழற்றல்கள்! காதுக்குள் இறங்கிய முழக்கங்கள் ! குமுறிக் குமுறி முழக்கங்கள்! மூடிய கண்ணுக்குள்ளும் என் நாயகனின் மின்னல் புன்னகைக் குறும்புகள், ஒளிக்கோலமாக ஊடுருவிப் பாய்ந்தன. எனக்குள்ளும் மோக வெறி !
வெக்கரித்த வெயிலிலும்… அழுக்கான தூசியிலும் திணறிப் போய் விரகதாபப்பட்டுக் கிடந்த என் நெருப்பு முழுவதையும் அணைத்து, சாம்பல் தண்ணீராகக் கரைத்துக் கழுவிய என் நாயகனின் மூர்க்கத் தழுவல்கள் ! தரையெல்லாம் தண்ணீர்க் காடு. என் உடம்பெல்லாம் என் நாயகனின் நீர்க்கோடுகள் ! மழையின் முரட்டுக் காதல் !
இன்பச் சுமையின் ஈரத் ததும்பல். மூழ்கிக்களைத்த ஆசை மயக்கம். துவண்டு, கிறங்கிக் கிடந்த என்னை விட்டு விலகிய என் காதலன். கண்ணைத் திறக்க முடியாமல் பரவசத்தில் கிடந்த என்னுடன் இன்னும் சரச விளையாட்டுப் பேச்சில் சிணு சிணுக்கிற சிறு தூறல்கள். பிரிய மனமில்லாமல், விட்டுவிட்டு ஓடிவந்து தழுவிக் கொள்கிற தூவானம் !
காதலன் போய்விட்டான். அவனது ஈரச்சுவடுகளை இழக்க விரும்பாமல் இன்னும் என் இலைகளில் ஏந்திக்கிடக்கிறேன். அவன் முத்து முத்தான முத்தங்கள், என் இலைகளில் ஈரஒளித்துளிகளாக இன்னும் தொங்கி நிற்கின்றன ! அசையக்கூட விரும்பாமல்… அப்படியே அடித்துப்போட்ட மாதிரி சலன மற்று மயங்கிக் கிடந்தேன்!
வந்து நின்ற தென்றல் தோழியின் குறும்புச் சீண்டல். அந்தக் குளிர்ச் சீண்டலின் மென்மையான கேலியில் அதிர்ந்து போனேன் ! அந்தத் திடுக்கிடலில் ஆடைகளைச் சுருட்டிக் கொண்டு பதறிப் பதைத்து எழ முயன்றபோது-
பொலபொலவென்று உதிர்ந்த என் நாயக ஈரச் சுமைகள்… ஒளித் துளிகள்!
என் காதலனின் வெறியாட்டத்தில் அரண்டு போய் வீடுகளுக்குள்ளும், தாழ்வாரங்களிலும் ஒதுங்கி நின்ற மனிதர்கள் வெளியே வந்தார்கள் !
பெய்த மழையில் திரண்டோடிய தெருத்தண்ணீர். ஊர்ப் புழுதியின் எல்லாச் சுவடுகளையும் கழுவித் துடைத்திருந்தது. ஈர நெகிழ்வில் குழைந்திருந்தது !
அழுக்கு உடைகளும் சவரம் செய்யாத முகமுமாகத் தலையில் துண்டைப் போட்டு மூடிக்கொண்டு வந்த கிராமத் தாட்கள் ! தெருவில் புதுத் தடங்கள். அவர்கள் பாதம் பதிய, விரலிடுக்குகளில் பிதுங்கி வழியும் சகதி !
உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அவர்கள் குரல், புதுமுகம் காட்டியது.
“கோடை மழைங்கற கொணத்தைக் காட்டிருச்சே. திடுதிப்புனு வந்து பெரும் போடாப் போட்டுருச்சே…!
“ஆமா.. சமயத்துக்கு கை குடுத்த மழை. தவிச்ச வாய்க்குத் தண்ணி ஊத்துன புண்ணிய மழை!”
“கோடை வெள்ளாமை குதிபோட்டு வரும் இனிமே. கெணத்துக் காட்டுகள்லேயும் நீர்க்கண் தெறக்கும்.”
“ஆமா…வறட்டிழுப்பா இழுத்த கெணறுகள்லே இனிமே தண்ணி ‘கெத்து, கெத்து’னு கெடக்கும்.”
“அதைவிட முக்கியம்… வாயில்லாச் சீவனுக மாடு – கன்னுகளுக்குக் குடி தண்ணிப் பஞ்சம் இருக்காதே…”
“ஆமா, நமக்கும்தான்…”
-அந்தக் குரல்களின் புதிய உணர்வு முகம். அவர்கள் மனசுகளில் மகிழ்ச்சித் ததும்பல். எனக்குச் சந்தோஷமாக இருந்தது ! என்னைப் பார்க்க என் காதலன் வந்தால்… அந்த வருகை, எத்தனை உயிர்களுக்கு உற்சாகம் ! பூமிக்கே புதுமிருது! பயிர் பச்சைகளுக்குப் புதிய வெளிச்சம் !
எனக்குள் பெருமிதம்… பூரிப்பு…! அதிலும் மனுஷங்களுக்கு நன்மைன்னா… எனக்கு ரொம்பப் பெருமை. பிறந்த வீட்டுக்கு ஒரு நன்மை என்றால்… மகளுக்கு ரொம்பச் சந்தோஷமாகத் தானே இருக்கும்?
இன்னும் நாலைந்து பேர் என்னைக் கடந்தனர். அவர்களை எதிர்ப்பட்ட ஒருவன், வேகமும் பதைப்புமாக வந்தவன்…
“ஒங்களுக்கு வெஷயம் தெரியாதா?”
“என்ன வெசயம்?”
“நம்ம சின்னக்கனி நாடாரு மண்டையைப் போட்டுட்டாரு !” “அடப் பாவமே… அதுவும் அப்புடியா? பத்து நாளா சட்டடியா படுத்துக் கெடந்தாரு, போய்ச் சேர்ந்துட்டாரா?”
“ஆமா…”
எனக்குள் அதிர்வு ! என் நாடிநரம்பு எல்லாம் அதிர்ந்து நடுங்கியது. அந்த நடுக்கத்தில் என் பச்சையாடைகளில் மிச்சம் மீதியாக ஒட்டியிருந்த நீர்த்துளிகள், கண்ணீர்ச் சிதறலாய் சோக மௌனமாய் உதிர்ந்தன !
அடப்பாதரவே… அவரு செத்துப் போய்ட்டாரா? – எனக்குள் நம்ப முடியாமல் ஓடிய ஒரு நினைவு. நம்பித்தான் ஆக வேண்டும்.
அவர்தான் என்னை இந்த இடத்தில் ஊன்றியவர். குழி தோண்டி… கரிசல் மண் போட்டு… சாணமும் போட்டு… என்னை நட்டார். என் பாதுகாப்புக்காக வட்டமாக முள் வேலி போட்டார். தினம் தினம் வந்து பார்ப்பார், பாசத்தோடு. என் வளர்ச்சியின் ஒவ்வொரு அணுவிலும் மகிழ்வார் ! ஒரு ஆடு குட்டியை நெருங்க விட மாட்டார் !
என்னைக் கண்ணுக்குள் வைத்து, பிள்ளை மாதிரிக் காப்பாற்றினார். அவர் போய்ட்டாரா…? செத்துப் போய்ட்டாரா? இனி என்னைக் காப்பாத்தறது யாரு? எனக்கு யாரு நாதி? நா நாதியத்துப் போய்ட்டேனா…?
எனக்கு அழுகை அழுகையாக வந்தது. தலைவிரி கோலமாக நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறணும் போலிருந்தது. துக்கம் துக்கமாக வந்தது.
ரூல் தடியளவுதான் அப்ப என் கால். ஒரு குடையளவுக்குத் தான் என் உடம்பு… அப்ப நான் பூக்கக்கூட செய்யவில்லை.
அப்ப வந்து ஒருவன் என் பிஞ்சு விரல்களை ஒடிக்க நினைத்து… என்னை வளைத்தான்.
“அது எவண்டா… மரத்தை வளைக்குறது?” – அதட்டலாக சின்னக்கனி நாடார். அவர் முகமெல்லாம் கோபக் கடுப்பு.
“சும்மாதான்… பல்குச்சி ஒடிக்கணும்…”
“பல்குச்சியா? மடையா… இந்தச் சின்னக்கன்னுலே போயா ஒடிக்கிறது? பச்சைப் புள்ளே விரலை ஒடிக்கிறதுக்கு ஒனக்கு எப்படிடா மனசு வர்றது?”
“என்ன மாமா… பல்குச்சி ஒடிக்கிற சின்ன விஷயத்துக்குப் பெரிய பெரிய வார்த்தைப் பேசுறீரு!’
“பெரிய வேப்ப மரத்துலே போய் ஒடி, யாரு வேண்டாம்னு சொன்னாக…? இதுலே ஒடிக்கக்கூடாது. சின்னக் கன்னு…”
சின்னக்கனி நாடார் எனக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றுவார். அவ்வப்போது வந்து என்னைத் தடவிப் பார்ப்பார் ! என் சொற சொறப்பான திரேகத்தில் அவரது மென்மையான ஸ்பரிசம். எனக்கு ஒரே குதூகலம்… சந்தோஷம் ! தினம் தினம் வருடமாட்டாரா என்று ஏங்குகிற அளவுக்கு சுகமான தடவல்!
அவரது பார்வை பிடிக்கும்… பாசம் பிடிக்கும்… அன்பு பிடிக்கும்… அவரை மாதிரியான மனிதர்கள் எல்லோருமே எனக்குப் பிடிக்கும். மனிதர்கள்தான் என்னைப் பயன்படுத்தி, என் பிறவிப் பயனையே எனக்கு உணர்த்துகிறார்கள் !
அப்ப நான் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன். மார்கழி, தை மாசம் எனக்குக் குதூகலமான மாசங்கள். நிறையக் கொழுந்துகள் கண் விழிக்கும். பங்குனி பிறந்துவிட்டால், கொத்துக் கொத்தாகப் பூப்பேன்; என் பூ வாசம் கம்மென்று பரவும். பூப்பூத்துவிட்டால் போதும்… எங்கிருந்துதான் வருமோ… சிற்றெறும்பு, கூட்டம் கூட்டமாக வரும். அதுகளுக்கு என் பூ மேல் ஒரு மயக்கம் ! என் காயைத்தான் யாரும் சீந்தமாட்டார்கள் ! கசப்புக்கே என் காய் தான் உதாரணம். என் காயையும் சில சிறுமிகள் பறிப்பார்கள் ! காயின் தோலை விரல் நகத்தால் கிழிப்பார்கள். உள்ளிருக்கும் திரவத்தில் ஊசி மாதிரியான குச்சியால் தொட்டுத் தொட்டு அவர்களது சின்னக் கைகளில் பெயர் எழுதுவார்கள்.
“அய்ய்… பச்சை குத்திக்கிட்டேன்” என்று சிறுமிகளின் குதூகலம் என்னையும் பற்றிக்கொள்ளும் !
இப்ப எனக்கு இருபது வயதாயிற்று. என் பிரமாண்டமே எனது அழகு. எல்லாமே அண்ணாந்து பார்ப்பார்கள் !
“பெரிய மரமாயிருக்கே… ஒரு கொழையோ குச்சியோ ஒடிக்கலே போலிருக்கு. படு லட்சணமா இருக்கே…
“சின்னக்கனி நாடாரு கவனிப்பு. யாரும் கை வெச்சிர முடியாது.”
“தூர் ரொம்ப அகலமாயிருக்கே. ஓர் ஆள் சேர்ந்து கட்டினாலும், கட்ட முடியாது போலிருக்கு.”
“ஆமா… அவரு ஆள் முறுக்காயிருந்து வெவசாயம் பண்ணுன காலத்துலே வெச்ச மரம். இப்ப ஆள் தளர்ந்துட்டாரு. காடு கரை, மாடு-கன்னு எல்லாத்தையும் மகன்கிட்டே ஒப்படைச்சுட்டு ஓய்ஞ்சி உக்காந்துட்டாரு. அந்தா, இந்தானு இருவது வருஷம் இருக்கும்லே?”
“ஒரு கோணல்மாணல் இல்லாம, நேரா நிமிர்ந்து நிக்குது… தூரு வெட்டி ஆறப்போட்டு… பலகையா அறுக்கறதுக்குத் தோதான மரம்…”
என் அழகே எனக்கு எமன். பார்க்கிறவர்களுக்கெல்லாம் வாயில் எச்சில் ஊறியது. “வெட்டணும், வெட்டிரணும்” என்று அலைபாய்ந்தார்கள். எனக்குள் நடுக்கம். மரண நிழலின் பயங்கரம்.
ரெண்டு தடவை எனக்கு விலை பேசிவிட்டார்கள். கோடாரி, கடப்பாரைகளோடு எமன், காலன், தூதன்களாக வந்து விட்டார்கள். நல்லவேளை! சின்னக்கனி நாடார் வந்து என்னைச் சேர்த்துக் கட்டிக்கொண்டார்.
“என்னை வெட்டிட்டு இந்த மரத்தை வெட்டுங்க…” என்று வைராக்கியமாகப் போராடினார். அவர் மகனுக்கு, அய்யாமேல் எரிச்சல் என்றால்.. மகா எரிச்சல்.
“பாடுபட்டுச் சம்பாரிச்ச சொத்து பத்தெல்லாம் வுட்டுக் குடுத்தீரே… இந்த வேப்பமரத்தை மட்டும் தரமாட்டேங்கிறீரே… ஏன்ய்யா…?”
“ஏலேய்.. நாங்குடுத்த மாடு – கன்னு, காடு – கரை நல்லா இருக்கணும்னா… மழைத் தண்ணி வேணும்டா… மழைத் தண்ணி வேணும்னா… மரம், கன்னுக இருக்கணும். மாரித் தாய்க்குப் பிடிச்ச மரம்டா இது.. மாரித்தாய்ன்னா யாரு…? மழைதாண்டா…”
சோகமும் கொதிப்புமாக மல்லுக்கு நின்று ஜெயித்துவிட்டார். நான் உயிர் தப்பிவிட்டேன்.
மைனாக்கள், கிளிகள், காகங்களுக்கு நான்தான் புகலிடம். நானே அதன் உலகம். நிழலும் உணவும் தருகிற உலகம். மைனாக்களின் பொய்ச் சண்டைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்ல கூத்து மாதிரியிருக்கும். அதன் கீச்சுமூச்சு என்ற கத்தல்… நல்ல சங்கீதம். கேட்கச் சுகமாக இருக்கும்.
என் காலடியில் குழந்தைகள் விளையாடும். கிழடுகட்டைகள் காலை நீட்டி உட்கார்ந்து, ஊர்ப் புரணிகள் பேசும். உழைத்துக் களைத்தவர்கள் துண்டை விரித்துக் குறட்டை போடுவார்கள்.
ஊரில் யாருக்காச்சும் ஜன்னிக் கோளாறு என்றால், என் பட்டைகளை உரித்துப் புகைபோடுவார்கள். குடல் புண் என்றால்… என் கொழுந்துகளை அரைத்துக் குடிப்பார்கள். படையே நடுங்கும் பாம்பைக் கண்டு… அந்தப் பாம்பின் விஷம் என்னைக் கண்டால் பயந்தோடும். வைசூரி, அம்மைக்கட்டு, பல்வலி என்றால்… நான்தான் மருந்து.
இதில் எனக்கு ஏகப்பெருமை. மாரியாத்தா கோயில் திருவிழா என்றால்… எனக்கு ஏகப்பட்ட மரியாதை. மஞ்சள், குங்குமம் வைத்து என்னைக் கும்பிடுவார்கள். ஆடு மேய்ப்பவர்களுக்கு நான்தான் குலதெய்வம் மாதிரி.
என் காலடி நிழலில் பொங்கல் வைத்து எனக்கு மரியாதை செய்வார்கள்.
எல்லாம் போய்விடும். இனி எனக்கு நாதியில்லை. என்னைப் பிள்ளை மாதிரி அணைத்துக்கொண்டு… “வெட்டாதீங்கடா” என்று மல்லுக்கட்ட சின்னக்கனி நாடார் இல்லை. என்னை உயிரென நினைத்துத் துடிக்கிற இதயம் நின்று போயிற்று. என்னைக் காப்பாற்ற ஆளில்லை.
என்னை விற்றுவிடுவார்கள். வெட்டி ஆறப்போட்டுப் பலகை பலகையாக அறுத்துப் போட ஆள் தயார். எமன் ரெடி. நான் என்ன செய்ய..?
நான் இல்லாவிட்டால், என் நாயகன் வரமாட்டானே… மழையில்லாவிட்டால் மண் என்னாகும்…? மனிதன் என்னாவான்..? மரங்கள் இல்லாத உலகத்தில் சுத்தமான காற்றே இருக்காதே… காற்று இல்லாமல் மனிதன் எதைச் சுவாசிக்க…? எப்படி உயிர் வாழ…?
எனக்குள் பயம். வேரின் நுனிவரை அச்சநடுக்கம். பயத்தின் படபடப்பில் என் பூக்களெல்லாம் உதிர்ந்தன. என் கண்ணீராக… துருத்தி நின்ற பிசின்.
…என்னைச் சுற்றி வட்டமாகக் குழி தோண்டுகிறார்கள். முழங்கால் உயரத்துக்கும் மேலான ஆழக்குழி குழிக்குள் நின்று… எனது கணுக்காலைப் பார்க்கிறார்கள். ஆணிவேர் முடிச்சு. அதுதான் என் உயிர் முடிச்சு.
அங்கே கோடாரியால் போடுகிறார்கள், டங்… டங்.. டங்… கென்று. அலறித் துடிக்கிற உயிர். என் ரத்தச் சதைகளாகத் தெறிக்கிற சந்தன நிறச் சிறாய். ஈர ரத்தம் மின்னுகிற சிராய்த் துண்டுகள். உயிர்த்துளிகள். சதைச் சிதறல்கள். கூடார வீடு போன்ற என் திரேகமே நடுங்கிக் குலுங்குகிறது. என் மனம் மரண வேதனையில் தவிக்கிறது.
எனக்காக அல்ல… என்னைப் படைத்த மனிதர்களுக்காக. என் பிறவிப் பயனை எனக்கே உணர்த்திய என் ஞானத் தந்தைகளுக்காக, நீரும் பாதுகாப்பும் தந்து உயிர் வளர்த்த ஆத்மாவுக்காக. ஆசையும் பாசமுமாக என்னைப் பார்த்து, தொட்டு வருடிய இதயங்களுக்காக.
“மழையில்லாம நீங்க தவிக்கக் கூடாதே… என்னைப் பெத்த அய்யாமார்களே… நல்ல காத்து இல்லாம நீங்க நாசமாயிடக் கூடாதே… மரங்களை வெட்டி நாசமாக்கிட்டா, மரங்களுக்கு நட்டமில்லே… உங்களுக்குத்தான் நட்டம். உங்க உசுருக்கு நட்டம். உடம்புக்கு நட்டம். எதிர்கால வாழ்வுக்கு நட்டம். அய்யாமாரே… என்னைக் காப்பாத்துங்க. என் மூலமா உங்களையும் காப்பாத்திக்கோங்க… அய்யாமாரே… அப்பன்மாரே… என்னைப் பெத்த தங்கப் பெட்டிகளா…”
என் அலறல் யாருக்கும் கேட்கவில்லையே… ஐயோ… என் ஆத்ம துடிப்பு, காலத்தின் குரல் என்று புரியவில்லையே… ஐயையோ… கோடாரி வெட்டு மாறி மாறி விழுதே…
ஒரு சங்கு ஊதுகிற சத்தம்… திடுக்கிட்டு விழித்து விட்டேன். என்னைச் சுற்றிக் குழி வெட்டவில்லை. கோடாரி வெட்டும் விழவில்லை. ‘சின்னக்கனி நாடார் செத்துப் போனாரே…’ என்ற பயத்தில் வந்த கெட்ட கனா…
சங்குச்சத்தம் தொடர்ந்து, இளவட்டங்களின் ஆரவாரக் கூச்சல். அலங்கரிக்கப்பட்ட தேரில் சின்னக்கனி நாடாரை வைத்துத் தூக்கி வருகிறார்கள். அவரது கடைசிப் பயணம்.
என்னைக் கடக்கிற ஊர்வலம். நாடிக் கட்டோடு உட்கார்ந் திருக்கிற நாடார் – அழுது கதறுகிற என்னை ஏக்கமாகத் திரும்பிப் பார்ப்பதைப் போல ஒரு பிரமை.
என்னால் தாங்க முடியவில்லை. என் கிளைக்கைகளும் இலையாடைகளும் வாடைக் காற்றுக்குக் கூத்தாட… மாரடித்துக் கதறினேன். ‘ஐயோ… என் ராசாவே… என் அய்யாவே…’
ஒருவாரம் ஆயிற்று. மண்வெட்டி, கடப்பாரை, கோடாரியோடு நாலு பேர் வந்தனர் என்னிடம். என்னுள் பட படப்பு… பயப் படபடப்பு. என் கடைசி நேரம் நெருங்கி விட்டது. மரணதேவனின் சுவாச உஷ்ணம், என்னைத் தகித்தது.
என்னைக் காப்பாற்ற நாடார் இல்லை. கட்டிச் சேர்த்துப் போராட ஆத்மா இல்லாத சூன்யச் சூடு. வெறுமைப் பகீர்…
அப்போது –
மொட்டையடித்த தலையோடு அவரது மகன். அண்ணாந்து என்னைச் சோகம் ததும்பப் பார்த்தான். கண்ணில் ஒரு நீர்க் கசிவு. அய்யாவையே என்னில் பார்த்தானோ…
“மரத்தை வெட்ட வேணாம்…”
“எதுக்கு…?”
“காடுகரை குடுத்த எங்க அய்யாவைக் கடைசிக் காலத்துல நானும் புள்ளைகளும் நல்லபடியா நடத்தலே… புத்தியைக் கடன் குடுத்துட்டேன். அவரைத்தான் கௌரவமா காப்பாத்த முடியலே… அவரு உயிரா நெனைச்ச இந்த மரத்தையாச்சும் காப்பாத்தணும். ஏன்னா, இது அவரோட உயிர். இது, அவரேதான்…”
“நாங்க குடுத்த அட்வான்ஸ்..?”
“பத்து நாள்ல திருப்பித் தர்றேன்…”
எனக்குள் பரவசம். மழை நாயகன் வந்து தழுவிய மாதிரி இன்பப் பரவசம். சின்னக்கனி சாகவில்லை; சாக மாட்டார்.
– 20.04.97, ஆனந்த விகடன்.
– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
