கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 1,288 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தேமதுரத் தமிழோசை உலகெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும். 

அடுத்த வீட்டு வானொலியில் ஐ.பி.சி தமிழ் ஒலிபரப்பு ஆரம்பமாகிவிட்டது. சரியாக பழைய நேரம் ஐந்தரை மணி. அருமைநாயகமும் அன்னம்மாவும் பரக்கப் பரக்கத் தயாராகி சந்தியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்திற்குப் புறப்பட்டார்கள் 

அருமைநாயகத்துக்கோ நீரிழிவு நோய். உணவுக் கட்டுப்பாடோ எக்கச்சக்கம். உடலில் தஞ்சக் குறைவு. எதைத்தான் உண்டென்ன…. உடலோடு ஒட்டினால்தானே…. அன்னம்மாவுக்கு ஆஸ்துமாவின் தாக்கம். நெஞ்சுமுட்டும் களைப்பும் இழுப்பும்…… 

தெருவில் இறங்கும்போது ஆறுமணி. மின்விளக்குகள் பட்டென அணைந்துவிட வீதியை இருள் மூடிக்கொண்டது. வைகறை இருள் முற்றாக அகலவில்லை. 

அன்னம்மா வீழ்ந்துவிடுவாளோ என்ற கரிசினையில் அருமைநாயகமும், அவர் உறுதியாக நடக்கமாட்டாரே என்ற கவலையில் அன்னம்மாவும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரம் நல்கியவாறு தட்டுத்தடுமாறி நடக்கின்றனர். நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா? 

ஒருவாறு அதிக சிரமமின்றி தொலைத்தொடர்பு நிலையத்தைச் சென்றடைந்து விட்டனர். 

நல்லவேளையாக ஆட்கூட்டம் இன்னும் சேரவில்லை. 

முதன்முதலில் கனடாவில் உள்ள மூத்தமகன் இளங்கோவுடன் தொடர்பு கொள்வதற்கு தொலைபேசி இலக்கத்தைப் பதிவு செய்து கொண்டனர். அதிக தாமதமின்றி அவனிடமிருந்து அழைப்பு வந்தது. ஆசை தீர மகனுடனும் மருமகள் மாலதியுடனும், பொச்சம் தீர பேரப்பிள்ளைகளுடனும் ஆள் மாறி ஆள் மாறி உரையாடினர்.கடைசியில் இளங்கோ, தங்கை பவானிக்கு அறிவிப்பாகவும் சுவிஸ்ஸிலிருந்து அவளுடைய அழைப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் கூறி தொலைபேசியை வைத்தான் 

இப்போது மணி எட்டாகி விட்டது. பவானியின் அழைப்பு வந்த பாடில்லை. ஒருவாறு கற்பனை பாதி காணும் காட்சியை இரசிப்பது பாதியாய் நேரத்தை நெருடித் தள்ளிக்கொண்டிருந்தனர். அங்கே வேறொருவர் ஜேர்மனியில் இருக்கும் தன் உறவினருடன் உரையாடிக் கொண்டிருந்தார். சரியாக எட்டே முக்காலுக்குத்தான் தொலைபேசியைக் கீழே வைத்தான் மனுசன். 

தொலைத்தொடர்பு நடத்துனர் இடைவிடாமல் யாருடைய இலக்கத்தையாவது குத்திக் கொண்டிருந்தார். அப்படியெனில் புற அழைப்புகள் எப்படி வரும்? கிழவனுக்கும் கிழவிக்கும் சலிப்புக் கண்டுவிட்டது. எப்படியோ பவானியின் அழைப்பு வந்துவிட்டது. பவானி நிரம்பவும்தான் அழுதாள். அப்பாவையும் அம்மாவையும் கண்ணில் வைக்க வழியில்லையே என் தொலைபேசியில் உருகினாள், விம்மினாள், வெதும்பினாள். பெற்றோரும் ஒரு பாட்டம் கண்ணீர்மழை பொழிந்து தீர்த்தனர். இப்படிப் பெற்றவர் ஒரு மூலையிலும் பிள்ளைகள் ஒரு முடுக்கிலும் ஆகிவிட்ட தமிழரின் தலைவிதியை நொந்து கொண்டனர். ஈற்றில் தம்மில் ஆறுதல் வார்த்தைகளால் பூசி மெழுகிக் கொண்டனர். ஏறக்குறைய முக்கால் மணி நேரம் கண்ணீரில் கரைந்து போனது. 

பவானி தன் தங்கை மாலினிக்கு அறிவித்ததாகவும் அவள் டென்மார்க்கிலிருந்து அழைப்பாள் என்று சொல்லித் தொலைபேசியை வைத்துவிட்டாள். இவர்கள் தொலைபேசியை கீழே வைத்ததுதான் தாமதம் இயக்குனர் வேறொருவரின் அழைப்புக்கு வேண்டி இன்னொருவரின் இலக்கத்தைக் குத்தத் தொடங்கிவிட்டார். 

இவர்களுக்குத் தெரியும். இனி மாலினியின் அழைப்பு வரக் குறைந்தது ஒலு மணித்தியாலமாவது ஆகும். 

அருமைநாயகத்துக்கு ஒரே இருப்பாக இருக்க முடியவில்லை. காலை மடக்கியும் முடக்கியும் எதிரில் உள்ள வாங்கு ஒன்றில் காலை நீட்டியும் குறுக்கியும் அவஸ்தைப்பட்டார். 

அன்னம்மாவுக்கு அடிக்கடி இருமல் வந்து தொந்தரவு கொடுத்தது. மூச்சுமூட்டி சுவாசிப்பது கூட சிரமமாக இருந்தது. தாகம் மேலிட அடுத்தவீட்டுக் காரியிடம் ஒரு செம்பு நீர் வாங்கிப் பருகி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். 

இப்போது நேரம் பத்து மணி. அருமைநாயகமும் அன்னம்மாவும் தமக்குள் குசுகுசுத்தனர். ‘இனி இளையவள் காந்தனுக்கு அறிவிப்பாள். காந்தன் சின்னவனுக்கும் சின்னவன் குட்டியனுக்கும் இப்படியே போகப்போகுது.” 

“அதுக்கென்ன? இண்டைக்கு வந்துவிட்டம்… எல்லோரிடமும் கதைத்துவிட்டுப் போவம்” மாலினியயுடன் பேசி முடித்தபொழுது நேரம் ஒரு மணி. கடைசியில் தம்பதிகள் மகன்மார் இருவருடனும் மகள்மார் மூவருடனும் பேசி முடித்துவிட்டனர். 

இனி கடைக்குட்டியன்தான் கதைக்க வேண்டும். குட்டியனுக்கு அறிவிப்பதாகவும் அவனுடைய அழைப்புக்குக் காத்திருப்பதாகவும் மாலினி சொல்லியிருந்தாள். 

அன்னம்மாவுக்கு ஆயாசமாக இருந்தது. நேரமோ இரண்டுமணி கடந்து விட்டது. காலையில் ஒரு பால்கோப்பியுடன் புறப்பட்டது. களைப்பாக இருந்தது. 

அருமைநாயகத்துக்கு மட்டும் என்னவாம். இனி ஒரு கணம் கூடத் தரித்திருக்கு முடியாது என்ற நிலைமை. இருவரும் தாம் இனிப்போவதாகவும் அழைப்பு வந்தால் தாங்கள் போய்விட்டதாகக் குடடியன் என்ற குமரனுக்குச் சொல்லும்படியும் வேண்டிக்கொண்டு தெருவில் இறங்கினார்கள். 

அன்னம்மாவுக்கு அடி எடுத்து வைப்பதே பகீரதப்பிரயத்தனமாக இருந்தது. அருமைநாயகத்துக்கும் அதே நிலைமைதான், முடியவில்லை. 

ஒருவரை ஒருவர் கையினால் கட்டியணைத்தவாறு நத்தையாக ஊர்ந்தனர். “இண்டைக்குத்தான் என்ட மனசு குளிர்ந்தது. ஐஞ்சு பிள்ளைகளோடும் கதைச்சுப்போட்டம்.” 

“சும்மா சொல்லக்கூடாது. அவர்கள் எங்களை மறக்கவில்லை. எல்லாரும் எங்களை தங்களோடு வந்து இருக்கச் சொல்லி நச்சரிக்கினம். அவைக்கு விசர். நாங்களாவது தேசாந்திரம் வெளிக்கிடுவதாவது…” 

ஆறு பிள்ளைகளைப் பெத்தம். கண்ணுக்கை பொத்தி வைச்சு வளர்த்தம். ஆளாக்கி விட்டம் … 

கண்டதென்ன? எல்லாரையும் பரதேசம் திரியவிட்டு தனிமையிலை வருத்தப்படுறோம். கடைசி காலத்திலை கொள்ளி வைக்கக்கூட ஆளில்லாமல்… அருமைநாயகம் நீண்ட பெருமூச்சு எறிந்தார். 

அன்னம்மா இடைமறித்தாள் “இஞ்சாருங்கோ சும்மா பிள்ளைகளைக் கரிச்சுக் கொட்டாதையுங்கோ. நாங்கள் தானே முழு விருப்பத்தோட முயற்சி எடுத்து பிள்ளைகள் நல்லா இருக்க வேணும் எண்டு எல்லாரையும் பிற தேசத்துக்கு அனுப்பி வைச்சது. அதுகள் எங்கேயெண்டாலும் நல்லாய் இருக்கட்டும்” 

“அதுசரி அன்னம்மா நாங்கள் செத்த பிறகு எங்களின்ரை தாய்மண்ணிலை எங்களின்ரை அடையாளமே அற்றுப் போய்விடுமோ எண்டு நினைக்கத்தான். எங்கள் பிள்ளைகளுக்கெண்டு எவ்வளவு சொத்தைப்பத்தைக் கட்டிக்காத்து வைச்சம். ஏல்லாம் அவத்திலை…..” 

ஏன் அப்பிடி நினைக்கிறியள். பிள்ளைகள் காததூரம் இருந்தாலும் பிறந்தைமண்ணை மறக்காதுகள் எப்ப சமாதானம் வரும். எப்ப இந்த மண்ண்லை வந்து குதிக்கலாம் எண்டுதான் ஏங்கிக்கொண்டிருக்கினம். ஏன் நீங்கள் பேரப்பிள்ளைகளோட கதைச்சியள்தானே என்னமாதிரித் தமிழ் கதைக்குதுகள் கேட்டியளே……! 

“ஓ டொச்சிலும், ஆங்கிலத்திலும் சிந்திச்சு தமிழ் கதைக்கினம் தான் இதுக்கு காலம் தான் பதில் சொல்லவேணும். ஒரு காலத்தில் எண்டாலும் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் வந்து இந்த மண்ணிலை காலூன்ற வேணும் எண்டுதானே சொத்துப்பத்தெல்லாம் காப்பாத்தி வைச்சிருக்கிறம்…..” “எங்களின்ர சீவன் இல்லாவிட்டாலும் அது ஒரு காலத்திலை நடக்கும். சமாதானம் வரும் எங்களுக்கென்ன எங்கள் இனத்துக்கே ஒரு விடிவுகாலம் கிட்டும். அது இனி அதிக தூரத்தில இல்லை..” ஒரு தீர்க்கதரிசியின் உறுதியோடு மொழிந்தாள் அன்னம்மா. ஒரு பெருமூச்சு விட்டவள் தொடர்ந்தாள். ” ஆனால் அந்த நாளைப் பார்க்க நான் உயிரோடு இருப்பேனோ தெரியவில்லை. உடல் நல்லாத் தளர்ந்து கொண்டுபோகுது”. 

“என்ன அன்னம்மா நீ உளறுகிறாய். என்னை இப்படி விட்டுட்டு நீ பூவும் பொட்டுமாய் சுமங்கலியாய் இந்த உலகத்தைவிட்டு போகலாம் எண்டு எண்ணம் போல…….” அருமைநாயகத்தின் முகம் பார்க்கப் பரிதாபகரமாய் இருந்தது. 

அன்னம்மா பரபரத்தாள். * ஐயோ எனக்கு அந்த எண்ணமெல்லாம் கிடையாது. நான் சுகமாய் செத்துவிட ஆசைதான். ஆனால் போய்விட்டால் உங்களை ஆர் கவனிக்கிறது…… ஒரு தேத்தண்ணி போட்டு குடிக்கத்தெரியாத மனிதன் நீங்கள். பக்கத்திலை இருக்கிற பொல்லை எடுத்துத்தர நான் வேணும். பக்கத்திலை நான் இல்லாமல் ஒருகணம் அண்டலிக்க மாட்டியளெ..” 

அப்ப என்னை சாக்காட்டிப்போட்டு நீ சாகிற எண்ணம்போல..” என்றார் அருமைநாயகம் இடக்காக. “என்ன கதை இது அபசகுனம் மாதிரி. உங்களை தனிய விட்டு போகிறதென்டால் என்ர உயிர் கூட்டை விட்டுப் பிரியாமல் கிடந்தியங்கும். 

அன்னம்மாவின் நாக்கு தளதளத்தது. குரல் கரகரத்து கம்மிற்று. கண்ணீர் ஆறாகபெருகி……. “உன்னை விட்டுவிட்டு நான் சாக எனக்கும் மனமில்லை. நீ தனிய இருந்து காலம் கழிக்கமாட்டாய்…..” “நாங்கள் கைப்பிடிச்சு நாற்பத்தஞ்சு வருசம். உங்களோட ஏதோ வழியா குப்பபை கொட்டிப் போடடேன். என்னமாதிரி நாங்கள் பிரியப்போறமோ……” 

“ஆ.. இதென்ன அழுதுகொண்டு. என்ர உயிர் நீதானே அன்னம்மா. உன்ர கண்ணில் வழியாது கண்ணீர் இரத்தப்பெருக்காக நெஞ்ச அரிக்குதடி. உன்உயிர் பிரிஞ்சால் என்னுயிர் இந்த யாக்கையிலை நிலைக்கும் எண்டு நினைக்கிறியோ எல்லாம் விதிப்படி நடக்கும் அதுக்கென்ன இப்படிக் கலக்கம்..” 

அருமைநாயகத்தின் முழங்காலோடு அண்மிய தொடைப்பகுதியில் தன்கன்னத்தைச் சாய்த்தவாறே அன்னம்மா பாகாக உருகினாள். அருமைநாயகத்தின் இடப்பகத்தில் அன்னமம்மாவின் தலையை நீவிவிட்டவாறே வலக்கரம் கொண்டு தன் விழியோரத்தில் கருக்கட்டும் நீர்துளியைச் சுண்டிவிட்டார். 

“நாங்கள் இப்பவே. இக்கணமே செத்துப்போனாலும் பிரச்சயிைல்லைத்தான் ஆனால் அவன் குட்டியன் குமரன் அவன்தான் உன்ர செல்லமகன். அவனோடைதான கதைக்க முடியாமல் போட்டுது சிறிது வெறுப்பும் ஆத்திரமும் இழையோடிய உருக்காட்டமான தொனியில் அவர் சொல்ல.. 

“ஆர்.. ஆர்!! என்ரை மகனோ!!! உங்களுக்கென்ன மகனில்லையோ.. உதென்ன விசர்கதை. உந்த விண்ணாணக் கதையை மட்டும் விட்டு விடுங்கோ…..” 

“என்ரை மகன் எண்டால் இப்படிக் குதியன் கொள்ளுவானோ, இல்லை கேட்கிறன் யாரோ ஒரு குஜராத்திப் பெண்பிள்ளையோடை தொடுப்பு வைத்துக்கொண்டு அவளைத்தான் கட்டுவேன் எண்டு ஒற்றைக்காலில் நிற்கிறாரம்.. மூத்தவன் சொன்னான்.” 

“ஏன் இப்ப அவனைக் கரிச்சுக் கொட்டுறியள். வாலையிலை நீங்கள் மட்டும் சும்மாவே இருந்த நீங்கள் என்னைச் சுத்திச்சுத்தி வந்து சொக்குப்பொடிபோட்டு செய்த திருகுதாளங்கள் கொஞ்சம் நஞ்சமோ. எல்லாம் மறந்து போச்சாக்கும்.. ம்……” 

மலரும் நினைவுகளில் ஆழ்ந்துபோன அன்னம்மா கடந்த காலத்துக்கு பயணமாகிவிட்டாள். இளமைக்கால நினைவுகளில் அகமும் முகமும் மலர…. “ஒரு நாள் வீட்டிலை ஆச்சி அடுக்களையில் இருக்கிறா நீங்கள் வளவு மூலையில் முருங்கை மரத்தடியில் வேலிக்கருகில் வந்து வெளியில் நின்று இருமிக்கொண்டு இருக்கிறியள். எனக்கு கிட்டவர ஆசைதான். அப்பு ஆச்சி கண்டுவிடுவினமே என்ற பயம். நான் மெல்ல மெல்ல பூனைபோல பதுங்கிப்பதுங்கி முருக்கை மரத்தடிக்கு வருகிறன்” 

“அப்பு படலையில் நிண்டு ஆச்சியைக் கூப்பிட்டு முருங்கை மரத்தடியிலை கள்ள ஆடு ஒன்று மேயப்பாக்குது விளக்கைக் கொண்டுவா வெளியிலை..” அப்பு கத்துகிறார். “நீங்கள் மீயா..மீயா எண்டு ஆட்டைத் தேடுகிறபாவனையில் மெல்ல மெல்ல இடம் விட்டுப் போனீயளே..” 

அருமைநாயகத்திற்கு இந்த வயசிலும் ஒரு வெட்கப்பூரிப்பு.. அனுங்கினார். “இதென்ன அன்னம்மா இந்த பழைய வாகடங்கள் எல்லாம் இப்ப படிச்சுக்கொண்டு..” 

“அத்தோடை விட்டியளே? அடுத்த நாள் ஆடு விலைக்கு வாங்க துன்னாலையில் இருந்து வருவதாகச் சொல்லிக்கொண்டு இரண்டு பேர் வருகினம். நீங்கள் தலைப்பாகையையும் கட்டிக்கொண்டு சால்வையாலை முகத்தை பாதிமறைத்துக் கொண்டு நொண்டி நொண்டி வளவுக்குள் வந்து ஆரும் காணாமல் எனக்குக் கடிதத்துண்டு ஒண்டு கையில் திணித்துவிட்டுப்போனியளே.. நினைச்சால் இப்பவும் சிரிப்புச் சிரிப்பாக வருது.. ஹ..ஹ..” 

“சிரிக்காதே.. அன்னம்மா அதிகம் சிரிக்காதே. முட்டு இழுப்புக்காரி நீ..” 

“ஏன் பின்னே சிரிப்ப வராதே! வரக்குள்ள இடக்கால் நொண்டிக் கொண்டு வந்த நீங்கள் போகய்குள்ளே வலக்கால் நொண்டி நொண்டி..” ஹ..ஹ..” அன்னம்மாவிக் சிரிப்பு அடங்கின பாடில்லை. 

சிரிக்கிறாள் எக்காளமிட்டு, பெரிதாக தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து.. சங்கிலிப்பின்னலாக.. இதென்ன சிரிப்பு.. சிரித்துக்கொண்டே சொல்கிறாள். சொல்லிக் கொண்டே சிரிக்கிறாள். 

பின்னே.. பின்னே.. சிரிப்பு வராதே! உங்களின்ற கோபமும் குறிகளும் பத்தெழுதும் பாவனையும் உங்களின்ரை சாங்க பாங்க எல்லாம் அவன் குட்டியனிட்டைத்தானே கிடக்கு.. ‘…. கெக்கட்டச் சிரிப்பு, எக்காளத் தொனி. 

சிலகணநேரம் ஒருவித நிசப்தம். தீடிரெனச் சிரிப்பு நிற்கிறது. அன்னம்மாவை இருமல் பீடித்துக் கொண்டது. இருமியிருமிச் சிரிக்கிறாள். சிரித்துக்கொண்டே இருமுகிறாள். இருமிக்கொண்டே சிரிக்கிறாள். 

ஓயாத அலை ஓய்ந்தது போல் “பட்” டென்று சிரிப்பும் நின்று இருமலும் நின்று மூச்சு மிட்டு ஒரு முக்கல் முனகல் முறுகல். விழிகள் மேல்நோக்கிச் செருக நிலை தடுமாறிச் சாய்கிறாள். 

அருமைநாயகம் பதறினார். “இதுதான் சொன்னனான். சிரிக்காதே அதிகம் சிரிக்காதே எண்டு கேட்டால் தானே!” 

அன்னம்மாவின் உடலில் ஒரு அசுமாதமும் இல்லை. அருமைநாயகத்திற்கு ஒரே பராதியாக இருந்தது. தடுமாறித் தடுமாறி நடந்து போய் அடுத்த வீட்டுச் சேகரைக் கூப்பிட்டு ஒரு கார் கொண்டுவரும்படி வேண்டிக்கொண்டார். 

கார் வந்துவிட்டது. அன்னம்மாவையும் அருமைநாயகத்தையும் சேகரையும் சுமந்து கொண்டு கார் வைத்தியசாலையை நோக்கி பறந்தது. 

அன்னம்மாவின் தலையை தன் மடியில் தாங்கியவாறு கார் இருக்கையில் சாய்ந்து கொண்டு இருக்கும் அருமைநாயகத்திற்கு கற்பனை தறிகெட்டோடியது. அன்னம்மா இனி பிழைப்பாளோ அவருக்குச் சந்தேகம் வலுத்தது. “ஐயோ! அன்னம்மா! என்னைவிட்டுப் போய்விடேதேயடி.” 

“உன்னைவிட்டு ஒருகணமும் காலங்கழிக்க மாட்டேன்.”

“எடி நீ போகிறது என்றால் என்னையும் கூட அழைச்சுக்கொண்டு போடி…..” 

அருமைநாயகத்தின் நெஞ்சின் ஓலம் அன்னம்மாவிற்கு கேட்குமா? அருமைநாயகம் ஆலோசிக்க ஆலோசிக்க அவரின் நினைவு மங்கிக்கொண்டு வந்தது. மடியில் கிடக்கும் அன்னம்மா, கார்க்கண்ணாடி, கார் எல்லாமே சுழலுவதான பிரமை… 

கார் கண்ணாடிக்குள் பின்னிருக்கையை அவதானித்த சேகருக்கு “திக்” கென்றிருந்தது. அருமைநாயகம் மயங்கிச் சாய்கிறார்? 

திரும்பி நோக்கினான் அருமைநாயகம் உயிரற்றுக்கிடந்தார். காரை நிறுத்தும்படி ஓட்டுனரைப் பணித்தான் அருமைநாயகம் தாம்பத்திய ஓட்டப்பந்தயத்தில் மனைவியை முந்திவிட வேண்டும் என்ற அவாவில் உயிரை விட்டுவிட்டான். 

சேகர்பாடு தர்மசங்கடமாகி விட்டது. அரை உயிரில் அனுங்கும் அன்னம்மாவை எப்படியாவது வைத்தியசாலை சேர்க்வேண்டுமே. இந்த மனுசனின் சடலத்தை எப்படி வைத்தியசாலைக்குக் கொண்டு போவது. காரில் அப்படியே விட்டு விட்டு அறிவு மயங்கிக்கிடந்த அன்னம்மாவை கைத்தாங்கலாக காவிக்கொண்டு வைத்தியசாலைக்குள் நுழைந்தான். 

நுழைவாயிலில் அன்னம்மாவை பரிசோதித்த தாதி சேகரை ஒருவித ஏளனம் பொங்கப்பார்த்தாள். உதட்டைப் பிதுக்கினாள். “என்ன உங்களோடை நடப்பு? உயிர் பிரிந்த பிறகு உடலை ஏன் இங்கே கொண்டு வருகிறீர்கள்.” என்பது போல் அவள் பார்வை இருந்தது. 

“செத்தபிறகு ஆஸ்பத்திரியிலை ஏற்பிச்சு சடலத்தை மீளப்பெற அலைஞ்சு திரியப்போறியள். பேசாமல் கொள்ளாமல் சடலத்தோடை காரைத் திருப்புங்கோ.” தாதி கிசு கிசுத்தாள். 

அன்னம்மாவும் அருமைநாயகமும் ஆசைபோலவே ஒன்றாய்க் கடைசி யாத்திரையை தொடங்கி விட்டார்கள். 

– சங்கமம், 2004. 

– நோர்வே தமிழ் சங்க வெள்ளிவிழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசாக தங்கப்பதக்கமும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.

– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *