எனக்கு மட்டும் தெரியும்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 7,880

திரு.அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 300வது சிறுகதை. வாழ்த்துகள் ஐயா.
இரவு பத்து மணிக்கு கட்டிலில் போய் படுத்த நிலையில் காலை சூரியன் உதயமான பின்னும் கண்களை மூடி தூங்க இயலவில்லை முகுந்தனுக்கு. பத்து வருடங்களாக பாசத்துடன் வேசமின்றி வாழ்ந்த வாழ்க்கை இப்படி மோசமாகப்போகுமென கற்பனையிலும் நினைக்கவில்லை.
மேட்ரிமோனி மூலமாக பார்த்த பெண் என்றாலும் விசாரித்த போது தூரத்து உறவாக இருந்தது தெரிந்ததும் பெற்றோரும் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டதால் பெண்ணைப்பார்த்ததும் பிடித்துப்போக யோசிக்காமல் ‘ஓகே’ என்றான். பெண் சரிகாவும் சரியென சொன்னதால் தாமதிக்காமல் பெண் வீட்டாரே அனைத்து செலவுகளையும் ஏற்று திருமணத்தை நடத்தி வைத்தனர்.
“எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு. நாங்க சம்பாதிச்சதெல்லாம் அவளுக்குத்தானே கொடுக்கப்போறோம். கல்யாணம்ங்கிறது வாழ்க்கைல ஒரு தடவ நடக்கிறது. பணம் வரும் போகும். உங்களுக்கும் நாலு மாசத்துக்கு முன்னாடி தானே பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. நெறைய செலவு பண்ணியிருப்பீங்க. அதனால உங்களுக்கு எதுக்கு சிரமம்னு நானே மண்டப செலவு முழுவதும் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என பெண்ணின் தந்தை குசேலன் சொன்ன போது முகுந்தனின் குடும்பத்தினர் தங்களைக்கிள்ளிப்பாய்த்துக்கொண்டனர். ‘முகுந்தன் பெரிய அதிர்ஷ்டசாலி’ என உறவினர்கள் பேசிக்கொண்டனர்.
திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின் வேலை நிமித்தமாக கோவையிலிருந்து சென்னைக்கு சென்று இரண்டு படுக்கையறை கொண்ட வாடகை வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் போனாலும் இது வரை இருவரும் தனியறையில் படுத்ததில்லை.
மனைவி வீட்டிற்கு மனைவியை மட்டும் தனியாக அனுப்பியதுமில்லை. முகுந்தன் விருப்பத்திற்கு மாறாக மனைவி சரிகா இதுவரை நடந்து கொட்டதும் இல்லை.
இரண்டு குழந்தைகளுடன் துன்பமென்பதே இல்லையென்று இன்ப வாழ்க்கை வாழ்ந்த நிலையில், அலுவலகத்திலிருந்து வருவதற்குள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு முகுந்தனிடம் சொல்லாமல் தாய் வீட்டிற்குச்சென்ற சரிகா, பல முறை அலைபேசியில் அழைத்தும் எடுக்காதது மட்டுமில்லை அவளது வீட்டினர் யாருமே எடுக்காதது அதிர்ச்சியைக்கொடுத்தது.
வார விடுமுறையில் நேராகப்போய் விசாரிக்கலாமென இருந்தவனுக்கு மனைவியிடமிருந்து வந்த விவாகரத்து நோட்டீஸ் இதயத்தையே சுக்கு நூறாக உடைத்தது.
ஈருடல் ஓருயிராக வாழ்ந்தவள், தனக்கு ஒரு பிரச்சினையென்றால் பதறியவள், விரதமிருந்து இறைவனை வேண்டியவள், அவளது பெற்றோரை விட தனது பெற்றோரை நேசித்து உபசரித்தவள், உறவுகளை உதாசீனப்படுத்தாமல் விருந்திட்டவள், முகஸ்துதியால் கூட வெறுப்பைக்காட்டாதவள் திடீரென மாறியதன் காரணம் என்னவாக இருக்குமென யோசிக்கும் போதே தலை சுற்றியது.
விடுமுறையில் மனைவி சரிகாவின் பெற்றோரின் வீட்டிற்கு சென்ற போது குடும்பத்துடன் ஊட்டி சென்று விட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் சொல்ல, அவர் தனது போனிலேயே அழைத்து முகுந்தனிடம் போனைக்கொடுக்க ‘ஹலோ’ என்ற மாமனார் முகுந்தன் பதிலுக்கு ‘ஹலோ’ என்ற போது, போனைக்கட் பண்ணியது மிகுந்த மன உளைச்சலைக்கொடுத்தது. குழந்தைகளை பார்க்க முடியாததும் வேதனையளித்தது.
கோவையிலேயே தனது உறவினரான மாமா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி விட்டு சரிகா குடும்பத்தினர் ஊட்டியிலிருந்து வந்து விட்டதை பக்கத்து வீட்டினரிடம் கேட்டு உறுதி செய்தவன் தனது மாமாவையும் உடன் அழைத்துக்கொண்டு சரிகாவைபார்க்கச்சென்றான்.
‘வா’ என ஒருவர் கூட அழைக்கவில்லை. இன்முகம் காட்டாமல் இறுக்கமான முகத்துடனேயே இருந்தனர். வந்திருப்பது கணவன் முகுந்தன் எனத்தெரிந்ததும் மாடியிலுள்ள அறைக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்று கதவை படீரென சாத்தி தாழிட்டது கீழே அமந்திருந்தவனுக்கு நன்றாகக்கேட்டது. மாமாவிடமும் யாரும் பேசவில்லை. குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை. சூழ்நிலையை புரிந்த மாமா பேச முயலாமல் எழ, முகுந்தனும் அவரை முந்திச்சென்று வெளியே நின்றான்.
கோர்ட்டில் விவாக ரத்து வழக்கு வந்தது. நீதிபதி முன் தலை குனிந்து கண்ணீர் வடித்த படி நின்றான் முகுந்தன். “பிரிய மனமில்லை. புரியும் படி என் மனைவியிடம் ஏதாவது சொல்லுங்கள்” கெஞ்சியபடி கேட்டான்.
இன்று காலை எழுந்தது முதல் கணவனின் நடவடிக்கையில் நேர்மாறான போக்கைக்கண்டு வியந்து போனாள் சரிகா. பேச வார்த்தைகள் வரவில்லை. மனதில் மகிழ்ச்சி குற்றாலச்சாரலாக ஆர்ப்பரித்தது.
அடுப்பைத்துடைத்து டீ போட்டதிலிருந்து, தனது ஆடைகளை தானே அயன் பண்ணியதிலிருந்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார் படுத்தியதிலிருந்து, பீரோ சாவியை தனது கையில் கொடுத்து பள்ளிக்கட்டணம் கட்டச்சொன்னதிலிருந்து, தன் பெற்றோரின் ஆரோக்யம் பற்றி அக்கரையாக விசாரித்ததிலிருந்து, வேலைக்கு போறியா? என கேட்டதிலிருந்து, வெளிநாடு டூர் பற்றிப்பேசியதிலிருந்து தன்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டாள்.
‘இவ்வாறு முகுந்தனின் செயல்பாடுகளுக்கு என்ன காரணம்? ஜாதகத்தில் திசை மாறி இருக்குமோ…? சனி பெயர்ச்சி நேற்று நடந்ததாக சொன்னார்களே அது காரணமோ…? பிரண்ட்ஸ் யாராவது வீட்டில் இப்படித்தான் மனைவிக்கு உதவ வேண்டும் என்று சொல்லியிருப்பார்களோ….? சரி. எதுப்படி நடந்தாலும் நடந்தது நல்லதாகவே நடந்தது நமக்கு சந்தோசம்’ என நினைத்தவன் ‘ஏனிந்த மாற்றம்?’ என கணவனிடம் கேட்க தயங்கியபடி எப்போதும் போல தனது வேலைகளை செய்தாள்.
அலுவலகம் சென்ற கணவனை அழைத்து கேட்டுவிடத்தோன்றியது. ‘கேட்டால் பழையபடி மாறி விடு வாரோ…?’என நினைத்து கேட்கும் எண்ணத்தையே விட்டு விட்டாள். மற்ற சிலரைப்போல் வேறு பெண்களிடம் பழக்கமோ, குடிப்பழக்கமோ இல்லாத நல்லவன் தான். ஆனால் தான் நினைப்பது போல் தான் மனைவி இருக்க வேண்டும் என நினைப்பவன். மற்ற விசயங்களின் சிறப்பை நினைத்து ஒத்துப்போகக்கற்றுக்கொண்டாள். சண்டை போடவில்லை. சங்கடங்களைச் சொல்லவுமில்லை.
இன்று அலுவலகத்திலிருந்து கணவன் நேரமே வந்ததும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அல்வாவும், மல்லிகைப்பூவும் முதலாக கணவனிடம் வாங்கிய அனுபவம் சிலிர்ப்பைக்கொடுத்தது. அவள் விரும்பிய ஐ போன் கொடுத்து ‘ஐ லவ் யூ’ சொன்னது கதைகளில் மட்டுமே இது போல தம்பதிகளுக்குள் நடப்பதாகப்படித்தவளுக்கு நிஜமாக நடந்தது பிடித்திருந்தது.
‘பாவம் இந்த ஆண்களுக்கு படிப்பு, பணம், வேலை சம்மந்தமாகவே நினைத்துக் கொண்டிருப்பதால் மற்ற விசயங்களில் அனுபவங்கள் கிடைப்பதில்லை. அலுவலகத்தில் தான் எதிர்பார்ப்பது நடக்காத போது வீட்டில் நிறைவேற்ற முயல்கின்றனர். தானாக அனுபவம் பெறாதவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடிவதில்லை’ என தன் அனுபவத்தை வைத்து சரிகாவால் முகுந்தனின் மனதைப்புரிந்து கொள்ள முடிந்தது.
இரவு ‘தலைவலி’ என்று சொன்ன ஒத்தை வார்த்தைக்கே ஒதுங்கிப்படுத்தவனை நினைத்து வியந்தாள். ‘தான் விரும்பியதை அடையாமல், விடாமல் திருமணமானதிலிருந்து இன்று வரை பிடிவாதம் பிடித்தவன் இன்று மாறியதற்கு பெரிய காரணம் ஏதாவது இருக்கும்? கடவுள் செயலாகவும் இருக்கலாம்’ என நினைத்து உள்ளம் பூரித்தாள்.
‘தங்கக்கூண்டுக்கிளியாக வாழ விரும்பவில்லை. பீரோ சாவியை கூட என்னிடம் கொடுப்பதில்லை. ஒரு நாள் கூட என்னைப்பெற்றவர்களின் நலனைப்பற்றி விசாரித்ததில்லை. சமையலறையில் உதவியதில்லை. வெளிநாடு டூர் அழைத்துச்சென்றதில்லை. என்னதான் வேண்டியதை வாங்கிக்கொடுத்து பார்த்துக்கொண்டாலும் வெளிநபர்கள் யாரிடமும் பேசி விடக்கூடாது என்பதால் வேலைக்கு அனுப்ப விரும்பவில்லை. பட்டன் போன் தான் இன்று வரை பயன் படுத்துகிறேன். அந்த விசயத்திலும் அவரது விருப்பமே முன்னிற்கும். இனிமேலும் இந்த வாழ்க்கையை என்னால் தொடர முடியாது’ எனும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முகுந்தன் மீது சரிகா சொன்னதாக அவளது வக்கீல் மூலம் நீதிபதி முன் குற்றப்பட்டியல் வைக்கப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுகளைப் படித்த பெண் நீதிபதி முகுந்தனை புழுவாகப் பார்ப்பதாகத் தோன்றியதும் பதறியவன், கனவு கலைந்து எழுந்தான்.
இன்று காலையிலிருந்து இரவுக்குள் தன்னை, தன் நடவடிக்கையை தலைகீழாக மாற்றியிருந்தது நேற்றிரவு தான் கண்ட கனவு தான் என்பது முகுந்தனுக்கு மட்டும் தெரிந்திருந்தது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |

நல்ல கதை… சில நேரங்களில் சில செய்திகள் தானாகவே தெரிந்து கொள்ள முடிகிறது கனவுகளின் வாயிலாக கூட…