எதிர்பாராமல் தேடி வந்த மகிழ்ச்சி
கதையாசிரியர்: நுஸ்பா இம்தியாஸ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 133

ஹம்ஸா நாநாவின் வீடு ஒரே ஆரவாரமாய் காணப்பட்டது. வீடு முழுவதும் விளக்குகள் பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு அறைகளிலும் உறவினர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
சிலர் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். ஹம்ஸா நாநா ஒரே உற்சாகமாக இருந்தார். அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தாண்டவமாடியது.
வீட்டில் வேலைகள் உறவினர்களின் ஒத்தாசையால் கடைசிக்கட்டத்தை நெருங்கியிருந்தது. ஹம்ஸா நாநாவும், மனைவி ஹாஜராவும் உறவினர்களை உபசரித்துக்கொண்டிருந்தனர். மறுநாள் விடிந்தால் இளையமகள் ஹாலாவுக்கு மறுமணம் நடக்கவிருந்தது.
நல்ல இடம் என்று நினைத்து செய்து வைத்த மகளின் முதல் திருமணம் அந்த தம்பதியருக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. இரண்டு வருடங்கள்தான் வாழ்க்கையை நகர்த்தினாள். அழகான பெண்குழந்தைக்கு தாயுமானாள். ஆரம்பத்தில் தெரியவராத மருமகனின் சுயரூபம்! படிப்படியாக தெரிய வந்தது. தவறான நண்பர்களின் சகவாசமும், போதைப் பாவனையும் அவனை கண்டபடி செலவுகளை செய்ய வைத்தன. மகளுக்கு கொடுத்த சொத்தையெல்லாம் அழித்தான். எல்லாம் தெரிந்து பதறித் துடித்தாள் ஹாலா. இழந்த சொத்துக்களை நினைத்து அவள் வருந்தவில்லை. இப்படியான ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டுவிட்டோமே! என்ற ஆதங்கம் அவளுக்கு வருத்தத்தை அளித்தது. மென்மையான குணம், அழகு, மார்க்கம், அறிவு எல்லாம் நிறைந்திருந்த அவளுக்கு வாழ்க்கை இப்படியாகிவிட்டது.யாரையும் கலங்க வைக்காமல் வாழும்அவளின் நிலை இப்படி!
பாவம் அவளது பெற்றோர் மிகவும் உடைந்து போனார்கள். அவனிடம் இருந்து மகளுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார்கள் அவளது பெற்றோர். ஹாலாவின் மணவாழ்வு இரண்டு வருடத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அவள் ஆசையாய் பெற்றெடுத்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை வளர்பதில் மிகவும் மனநிறைவடைந்தாள். தனக்கு அல்லாஹ் கொடுத்த விலைமதிப்பில்லாத அமாஃனிதமாய் கருதினாள். கவலைமறந்து வாழத்தொடங்கினாள். அவள் தனது மகளுக்காகவே அதிகநேரத்தை ஒதுக்கினாள். தனது வாழ்க்கையில் கடைசி வரைக்கும் ஆண்துணை தேவையில்லை, பிள்ளையை தனியாளாக வளர்க்கலாம் என்று உறுதியாக இருந்தாள். அது மட்டுமா? அவளுக்கு அவளது பெற்றோரின் ஒத்துழைப்பும் பூரணமாகக் கிடைத்தது. அதனால் மகளை வளர்பதில் எந்தவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவளால் இப்படியெல்லாம் நினைத்து வாழ்ந்து விட முடியும்.
ஆனால் அவள் பெற்றோர்களால் சும்மா இருந்து விட முடியுமா? மகளுக்கு எப்படியாவது நல்லதொரு புதியவாழ்க்கையை அமைத்துக் கொடுக்க விரும்பினார்கள். மகள் ஹாலா மறுமணத்தை விரும்பாவிட்டாலும் அவளை அப்படியே விட்டுவிட அவர்கள் விரும்பவில்லை. மகளுக்காக மாப்பிள்ளை பார்ப்பதில் மும்முரமானார்கள் அவர்கள். தனக்கு இன்னொரு திருமணம் வேண்டாம் என்று பெற்றோர்களிடம் எவ்வளவுதான் எடுத்துரைத்தும் அவர்கள் கேட்பதாக இல்லை. அவர்களிடம் மேற்கொண்டு போராட வழியில்லாமல் அமைதியாகிவிட்டாள் ஹாலா. ஹம்ஸா நாநா மகளுக்கு வரன்தேடத் தொடங்கினார். தேடி வந்த எல்லா வரன்களையும் ஏதாவது ஒருசாக்குச் சொல்லி புறக்கணித்து வந்தாள் ஹாலா.
ஒரு தடவை ஹம்ஸா நாநாவுக்கு கோபம் தலை உச்சி மேல் ஏறியது. “ஹாலா என்னாச்சு உனக்கு. வாழ்க்கை வெலாட்டாப் போச்சா உனக்கு. ஒரு பொண்ணு எப்பவுமே தனியா வாழ முடியாது. ஆணின் துணை கட்டாயம் வேணும். உம்மா, வாப்பா கூட கடைசி வரைக்கும் இருந்திடலாம் என்று நெனைக்காத…. எங்களுக்கும் வயஸாச்சு நாம இல்லாத காலத்துல உனக்கொரு துணவேணாம்? உன் தாத்தா அவபசங்க, கணவனோட வெளிநாட்ல இருக்கா. உனக்கு வேற உடன்பிறப்புக்களுமில்லை யாரு உன்ன பார்ப்பது. இனி எந்த விஷயத்துக்கும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது.” உறுதியாகவே கூறி முடித்தார்.
“என்ன வாப்பா சொல்றீங்க? ஒரு பெண்ணால ஆண் இல்லாம வாழவே முடியாதா? ஏன் யாருமே வாழ்ந்ததில்லையா? என் குழந்தையை என்னால தனியாக வளர்க்க முடியும். ப்ளீஸ் வாப்பா புரிஞ்சுக்கோங்க.”
“இல்லம்மா அதைக்கிடமே இல்லை. நீ கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.” ஹம்ஸா நாநா காரசாரமாகக் கூறினார்.
“சரி வாப்பா உங்க விருப்பம். ஆனால் ஒன்று என் மகளையும் தன்மகளாய் ஏற்றுக் கொள்கிற மாப்பிள்ளையா பாருங்க. என் பிள்ளை என்னுடன் இருக்கிற மாதிரி இருக்கணும் நீங்க பேசிய விஷயம். அப்படி இருந்தா ஓகே.” ஹாலாவும் கண்டிஷன் ஒன்றை விதித்தாள்.
ஆனால் இதுவரை காலமும் தனது பெற்றோர்களிடம் இப்படியாக எதிர்த்துப் பேசியதில்லை அவள். அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததால் தான் இப்படியாகப் பேசினாள்.
ஹாலாவுக்கு நிறைய சம்பந்தங்கள் வந்தன. ஆனால் ஒன்றுமே அவள் விருப்பப்படி இருக்கவில்லை. ‘உங்க பேத்திய நீங்களே வச்சுக்கங்க. உங்க மகள் மட்டும் எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா போதும்.’ இந்த வார்த்தைகளைத் தான் நிறைய பேர்கள் கூறினார்கள். இதனால் ஹாலா எல்லாவற்றையும் தட்டிக் கழித்தாள்.
இப்படியே போனால் ஒன்றும் சரி வராது என்று நினைத்து அவளது பெற்றோர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். மகளது கண்டிஷனை பொருட்படுத்தாமல் வருகின்ற சம்மந்தம் நல்ல இடமாக இருந்தால் முடித்து வைப்பது என்று முடிவெடுத்தார்கள். இந்த முறை மகளிடம் விருப்பம் கேட்கவில்லை. ஹாலாவின் விருப்பத்திற்கு மாறாகவே சம்பந்தம் வந்தது. மாப்பிள்ளை வீட்டார்களிடம் சம்மதமும் சொல்லி விட்டார்கள். அவர்கள் பெண்ணை வந்து பார்த்து சம்மதமும் சொல்லிவிட்டு போனார்கள். பெரிய வசதியான இடம். படித்த கௌரவமான குடும்பம். இந்த விடயங்களை மட்டுமே அவளது பெற்றோர் பார்த்தார்கள். மகளின் உள்ளத்தில் உள்ளது அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் அவர்களது மகள் நல்லா இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைத்தார்கள். அவர்களுக்கு அவர்கள் மகள் முக்கியம் என்றால், தனக்கு தனது மகள் முக்கியம் என்று ஹாலா நினைத்தாள். அவள் நினைத்ததிலும் தவறு ஒன்றும் இல்லை. நியாயம் இருக்கத்தான் செய்தது.மாப்பிள்ளையும் ஏற்கனவே திருமணம் முடித்து மனைவியை இழந்தவர். மூன்று வயது மகனுக்கு தந்தை வேறு!
மாப்பிள்ளையின் உம்மா சொன்னது ஹாலாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது . “உங்க பொண்ணுக்கு மக இருப்பது என் பையனுக்கு தெரியாது. நாங்க சொல்லல்ல. அவன் திருமணம் வேணாம் என்றுதான் சொன்னான். நாங்க வற்புறுத்தினதால தனது மகனக் கவனித்துக் கொள்ள ஒரு நல்ல தாய் வேணும் என்பதற்காக சம்மதித்தான்”. இந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் கொதித்தாலும் தனது பெற்றோர்களுக்காய் பொறுமையாய் இருந்தாள்.
“நல்ல ஞாயம். அவர் பிள்ளைக்கு தாய் வேணுமாம். நான் பெற்ற பிள்ளைய பிரியனுமாம். என் மகள் என் உம்மா வாப்பா கிட்ட இருக்கனும். அவர் பிள்ளையை என் பிள்ளைமாய் பார்த்துக்கணும். என் பிள்ளைய நான் ஒரு நாள் கூட விட்டுப் பிரிந்ததில்லை. என்னால் எப்படி முடியும் என் மகளை விட்டு பிரிந்திருக்க சொல்லுங்க வாப்பா?” வாப்பாவிடம் கேட்டாள்.
“நீ சொல்றது சரிதான்மா..உன்னால உன் மகள பிரிந்திருப்பது கஷ்டம்தான். அதற்காக இப்படியே வாழ்ந்திடலாமா? உன் கொழந்த எங்க பேத்திய நாங்க நல்லபடியாக பார்த்துக்க மாட்டமா? பிள்ளையப் பத்திய கவலைய விடுமா? நீ வாழ வேண்டிய சின்ன வயசு.வந்திருக்கிற விஷயம் நல்ல விஷயம். நல்ல வசதியான கௌரவமான குடும்பம்.அவங்க உன்ன நல்லவிதமாகப் பார்த்துப்பாங்க.” என்று அவளது தந்தை கூறிமுடித்ததும், பதிலுக்கு தாய் ஹாஜராவும் “ஹாலா எல்லாம் நாம் நினைக்கிற மாதிரி செய்ய ஏலா… விட்டுத்தான் பிடிக்கணும்.பொண்ணுங்க நாமதான் பொறுமையா இருக்கணும்.மாப்பிளத் தம்பியப் பார்த்தால் நல்லவராக தெரிகிறார். கல்யாணம் முடிஞ்சதும் அமைதியாக எடுத்துச் சொல்லி உன் மகள நீயே உன்கிட்டே அழச்சிக்கோ.. அவரு அவர் பிள்ளையாய் உன் மகள ஏத்துப்பாரு. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நடக்கும்.”
“பொண்ணுங்க நாமதான் எல்லாத்திலையும் பொறுமையாய் போறோமே…. அதனாலதான் நம்மல யாரும் புரிஞ்சுக்குறதில்ல. ஆம்பளைங்க அவங்க சுயநலத்தை தான் பார்ப்பாங்க. ஆண் பெண் உடலமைப்புல வேறுபட்டு இருக்கலாம். உணர்வுகள் எல்லாம் ஒன்று தானே! அவர்களுக்குள்ள அதே பாசம், கவலை, சந்தோசம், ஆசைகள் தேவைகள் எல்லாம் எங்களுக்கும் உள்ளது தானே! விதவையான பெண்ணோ, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணோ மறுமணம் செய்யும்போது அவர்களுடைய பிள்ளைகளோடு அவர்கள் இருக்க முடியாதா? ஒரு பெண் தனக்கு மறுமணம் நடப்பது என்றால் தனக்காக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நினைக்கமாட்டாள். தனது குழந்தைகளுடைய எதிர்காலத்தை தான் நினைப்பாள். தனக்கு ஆண் துணை வேண்டும் என்பதை விட பிள்ளைக்கு நல்ல தகப்பன் வேண்டுமென்றுதான் நினைப்பாள். அதிக ஆண்கள் பிள்ளைகளைப் பற்றி மட்டுமன்றி தங்களைப் பற்றியும் யோசிப்பார்கள். ஒரு ஆண் தனது பிள்ளைக்காக மறுமணம் செய்தாலும், தான் மறுமணம் செய்கின்ற மனைவியின் பிள்ளைகளைப் பற்றியும் யோசிக்க வேண்டும். அப்படி யோசித்து மனைவியின் குழந்தைகளை தனது குழந்தைகளாக ஏற்றுக் கொள்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரே ஒரு இரண்டு வயது பச்சிளம் பாலகன்தான் உள்ளது. மனசாட்சியே இல்லாமல் என் குழந்தையை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கின்றார்கள். இது ஒரு கௌரவமான குடும்பம் செய்கின்ற வேலையா?” ஹாலா தனது பெற்றோரிடம் தனக்குள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தாள்.
“உன் மகள உன்னோடு வைத்துக் கொள்கின்ற மாதிரி விஷயங்கள் ஒன்றிரண்டு வந்ததானே!… நீங்கதான் அவங்க காசு, வீடு, வாகனம் கேக்குறாங்க என்று சொல்லி மறுத்துட்ட… அது மட்டுமா சொத்துக்காக வர்றவங்க கிட்ட உண்மையான பாசம் இருக்காது என்று சொன்ன… உன் மேலேயும் உன் குழந்தை மேலயும் அக்கறை காட்ட மாட்டாங்க .என்று சொன்ன… எல்லாம் பார்த்தால் ஒன்னும் செய்ய முடியாது. உன் முதல் கல்யாணத்திலே மாப்பிள்ளை பற்றி ஒன்றும் சரியாக விசாரிக்காமல் விட்டது எங்க தவறுதான். ஆனால் இம்முறை எல்லாவற்றையும் விசாரிச்சு பார்த்துட்டேன்… நல்ல குடும்பம்… வசதிக்கும் எந்தவித குறைவும் இல்லை. நீ ஒன்றுக்கும் யோசிக்காத…! உன் வாழ்க்கை நல்லா இருக்கும். உன் குழந்தையும் நல்லா இருப்பா” தாய் ஹாஜராவின் வார்த்தைகள் தான் இவைகள்.
தனது உம்மா, வாப்பாவிடம் இதற்கு மேலும் இதைப்பற்றி கதைப்பதில் பயனில்லை என நினைத்து அமைதியாகிவிட்டாள். இரண்டு மாதங்களில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது. நாட்கள் வாரங்களாக மாதங்களாக வெகு வேகமாக கடந்தது. இரண்டு மாதமும் பூர்த்தியாகியது. நாட்கள் ஆமை வேகத்தில் மெதுவாக சென்றிருக்கக் கூடாதா? என்று அவளின் உள் மனது நினைத்தது. காலம் யாருக்காக காத்திருக்கும்… இயற்கை அதன் கடமையை நிறுத்தி வைக்கவா முடியும்? இறைவன் இயக்கிய படி தான் அது இயங்குகின்றது. தனக்குள்ளே வினாக்களை எழுப்பி விடையும் கண்டுகொண்டாள்.
மறுநாள் விடிந்தால் கல்யாண நாள். வீடே விழா கோலம் பூண்டிருந்தது. அதற்காகத் தான் இவ்விரவு நேரத்தில் உறவினர்கள் அயலவர்கள் என்று உற்சாகமாக வேலை செய்து கொண்டு இருந்தார்கள். மணப்பெண்ணின் அறையில் மணப்பெண் கதிரையொன்றில் அமர்ந்திருக்க, தோழிகள் சிலர் அவளை சூழ்ந்து இருக்க உயிர்த்தோழி ஒருத்தி மணப்பெண்ணின் கரங்களில் மருதாணிக் கோலம் இட்டுக் கொண்டிருந்தாள். கைகளை சிவக்க வைத்து அழகு படுத்துவதில் என்ன பயன்…! மணப்பெண்ணின் இரண்டு கன்னங்களும் தான் அழுதழுது சிவந்திருந்தது. அவளின் கவனம் முழுக்க ஒன்றுமே அறியாது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தனது அன்பு மகள் மேல் பதிந்தது. கண்களில் கண்ணீர் அருவியாய் ஊற்றெடுத்தது. திருமணமாகியதும் கணவன் வீட்டில் வாழப்போகின்றோம் என்பதை நினைக்கும் போது பயமாக இருந்தது. அதுவும் தூர பிரதேசத்தில் அவர் வீடு இருந்தது. தான் பெற்றெடுத்த பிள்ளையை பிரிந்து வாழ போகிறோம். அடிக்கடி காண முடியாது. எப்பொழுதும் போல் பிள்ளையை அணைத்துக் கொண்டு உறங்க முடியாது…. தினமும் முத்தமிட முடியாது. என்றெல்லாம் நினைக்கும் போது கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது. யாரும் பார்க்கும் முன்னர் துடைத்துக்கொண்டாள். அவளின் நிலமையை புரிந்து கொண்ட தோழிகள் அவளின் கவனத்தை திசை திருப்பவும், அவளை சிரிக்க வைக்கவும் முயன்று தோற்றுப் போனார்கள். திடீரென்று அவளின் அலைபேசி சினுங்கியது.”ஹாலா இந்தாமா உன் அவர்தான் போல லைன்ல இருக்காரு எடுத்துப் பேசு”என்று கூறி போனை அவள் கையில் கொடுத்தாள் தோழியொருத்தி.போனில் வந்த பெயரை வைத்தே யார் என்பதை புரிந்து கொண்டாள் போலும்….!
போனில் கதைக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை. இருந்தாலும் என்ன செய்வது…. பேசித்தான் ஆகணும். வந்த நம்பரை அழுத்தி காதில் வைத்தாள். மறுமுனையில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற குரல் நாளை விடிந்தால் அவளின் வாழ்க்கைத் துணையாகப் போகும் அஹமதின் உடையது.
“வாலைக்கும் ஸலாம் “என்று பதில் கூறிவிட்டு அமைதியாகவிருந்தாள்.
“ஹாலா எப்படி இருக்கீங்க “அவர் கேட்டதும்,
‘இப்ப நலன் விசாரப்புதான் குறைச்சல் ‘ என்று மனதில் முணுமுணுத்துக் கொண்டாள். ஆனால் எதுவும் பேசாது மெளனம் சாதித்தாள்.
அவர் பேச்சை தொடந்தார்…”ஹாலா எனக்கு தெரியும் உங்க மனசு நல்லாவே இல்லை என்று! அதனாலதான் நீங்க பேசாமல் இருக்கீங்க. நீங்க கவலையோடு இருப்பதும் எனக்கு தெரியும். எல்லா விஷயமும் இன்னிக்கு தான் தெரிஞ்சது. உங்க வாப்பா எல்லாத்தையும் என்கிட்ட சொன்ன….!. முதல்ல என் வீட்டினர் சார்பாக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன். அவங்க அப்படி சொன்னது தவறுதான். என் பெற்றோர் அவங்க பேரன் மேல உசுரு மாதிரி. எங்க..வீட்டுக்கு வர மருமகளோடு சேர்த்து அவங்க குழந்தையும் வீட்டுக்கு வந்துட்டா….பேரன ஒழுங்காக கவனிக்க மாட்டீங்களோ! என்கிற பயம்தான் அவங்கள அப்படி பேச வச்சது. மத்தப்படி ஒன்றுமில்லை. இப்ப ஒன்றுக்கும் பயப்படவேணாம். நான் நல்லபடியாக எடுத்துச் சொல்லி புரியவச்சாச்சு. அவங்களுக்கும் விருப்பம். ஒரு தாய்க்கிட்ட இருந்து பிள்ளைய பிரிக்கிற பாவம் நமக்கு எதுக்கு. எனக்கு என் பிள்ளை எப்படியோ! அதே மாதிரி தானே உங்களுக்கு உங்க பிள்ளை. இனிமேல் உங்க பிள்ளை என் பிள்ளையும்தான். நீங்களும் என் பிள்ளையையும் உங்க மகனாய் பார்த்துப்பீங்க என நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ் நாளை உங்களோடு சேர்த்து என் குட்டிதேவதை அதாவது நம்ம மகளையும் சேர்த்துதான் அழைச்சிட்டுப் போறோம்….இனிமேல் எதற்கும் கவலைப்படாதீங்க. நான் எப்பவும் உங்க கூட பக்கபலமாய் இருப்பன். இனிமேல் எது வேணுமானாலும் தயங்காம கேளுங்க? நாம நல்லா இருக்கனும் என்றால், முதல்ல நம்மள நம்பி வந்தவங்கள சந்தோஷமாய் பாத்துக்கனும்… இல்லையா? நீங்க எனக்கு பெரிய அமாஃனிதம்!…சரி அப்ப நான் வச்சட்டுமா? நாளைய விடியலுக்காய் ஆர்வமோடு காத்திருக்குறன். இன்ஷா அல்லாஹ் நாளை பார்ப்பம்.அஸ்லாமு அலைக்கும்.”
அஹமத் நீண்ட நேரம் பேசினது ஹாலாவுக்கு இனிய கவிதை வரியாய் தோன்றியது. அவர் பேசுவதை இன்னும் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல் தோன்றியது. இனி அவளுடையவர்தானே! மனதில் நினைத்துக் கொண்டாள்.
“வாலைக்கும் ஸலாம் “என்று கூறி அலைபேசி யை தூண்டிக்கப் போனவள் சற்று நிறுத்தி “ஜஸாக்கல்லாஹ் ஹைர்” என்று கூறிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டாள். ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறி தனக்குள்ளே புன்னகைத்தாள்.
அவள் கற்பனையில் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்க தனது மகளை மார்போடு அணைத்துத் தூங்கினாள். அவளது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். திருமணவீடு மேலும் கலைகட்டியது.
(யாவும் கற்பனை)