எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திருமகளே!






ஆசை வெட்கமறியாது என்பது சரி; அகவை கூடவா வெட்கமறியாது?!. ஆமாம்!. அப்படித்தான். அந்த இரண்டு வயதுக்குழந்தைக்கு எது அசிங்கம் எது அசிங்கமில்லை என்று எதுவும் தெரியவில்லை.
எப்பவும் குடுடுவென பிறந்த மேனிக்குத் திறந்த வெளியில் திரிவது பெற்றவளைப் பொறுத்தவரை அசிங்கம். அந்தப் பிள்ளையைப் பொறுத்தவரை அதெல்லாம் ஒன்றும் தப்பு இல்லை!.
‘ஜட்டி போடு! என்று அம்மா சப்தம் போடுவாள்!., அந்தக் குழந்தையோ மாட்டேன் போ! என்று கூப்பாடு போடும்!
‘எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே! இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே!’ என, சிவகமியின் செல்வன் பட எம். எஸ்.வி.யாக எக்கோவில் அவன் ஒலிப்பான். வேறு வழி?
அதை அறிவிக்க வேண்டிய அவசியம் வந்தது. ‘அன்பு இருக்கே அது ஒரு ஜீவ நதி!. கரைகளுக்குள் அடங்கி நடக்க அது காவிரி ஆறல்ல! காட்டாறு. ஆம்! அன்பு எனும் ஜீவ நதி ஒரு காட்டாறுதான்.
கடலோடு கலக்கும் ஜீவ சமாதிக் காலம் வரை ‘அன்பு’ ஜீவ நதியாகவே பெருக்கெடுக்கிறது. கோபம் அதன் குணங்களுள் ஒன்று!
ஜட்டி போடத் தாய் கோபிக்கும் கோபமும் அன்பின் வெளிப்பாடு! அதைப் போட மாட்டேன் என் குழந்தை மறுப்பதும் ஒரு அன்பின் வெளிப்பாடுதான்.
இதை எப்படிப் புரிய வைப்பது?
உறங்கும் தொட்டில் குழந்தை உறக்கத்தில் சிரிக்கக் காரணம் கடவுள் அதன் கனவில் ஒரு பூவைக் காட்டுவாராம். காட்டினால் சிரிக்குமாம். அவர் அதை மறைத்துவிட்டாரானால் , அழுமாம்!. இப்படி ஒரு நம்பிக்கை இங்கே!
கடவுள் காட்ட குழந்தை மட்டும்தான் சிரிக்கணுமா? அப்ப அந்தக் கடவுள் எப்பத்தான் சிரிப்பார்???!!
‘பிறந்த மேனியாய்த் திரிந்தால், கடவுள் பார்த்தும் கைகொட்டிச் சிரிப்பார்!’ என கடவுள் பற்றிய ஒரு கதை விட குழந்தை அன்று முதல் ஜட்டி போடத் தொடங்கியது.
கர்ஜனைக்கு அடங்காத அது, கடவுளுக்கு அடங்கியது.
நம்மில் பலரும் அப்படித்தானே?
நீதியாய் இருக்க முடியாமல் நினைத்தபடி இருந்துவிட்டு, கடவுள் தண்டிப்பார் பயத்துக்குத்தானே கட்டுப்படுகிறோம்ம்ம்ம்?
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |