ஈசி சேர்…!





அந்த தாத்தா வியட்நாம்வீடு சிவாஜி அல்ல..! வீட்டில் ராமன் வெளியில் வெளியில் கிருஷ்ணராய் வாழ்ந்த பிரகஸ்பதி. அவர் இளமை காலத்தில் அவர் செய்த லீலைகளை நிறுத்த,, திருத்த அவர் மனைவி சொல்லி மாய்ந்தாளோ? சொல்லாமல் ஓய்ந்தாளோ தெரியவில்லை. அவள் போய்ச் சேர்ந்துவிட்டாள்.
தாத்தா இப்போது தனிமரமாய். மரக்கட்டைச் சேரில்.

தனிக்கட்டையான அவருக்கு இப்போது மரக்கட்டை ஈஸி சேர்தான் மனைவி, மருத்துவர் எல்லாம். அப்போதெல்லாம் கைத் தாங்கலாக படுத்திருப்பார். கண்ணெதிரே சுவரில் மாட்டியிருக்கும் மனைவி படத்தை வெறித்திருப்பார்.
வாழ்ந்த காலத்தில் அவள் கண்ணாடி கழற்றாமல் வடித்த கண்ணீர் கண்ணாடி பிரேமுக்கும், கன்னத்து ஓரத்துக்கும்தான் தெரியும். அவள் இருந்த காலத்தும் இருந்தது இந்த ஈசிசேர். அது, அவரை அப்போது தாங்கியது அவள் போனபிறகு அது அவளாகவே இப்போது நின்று சுமக்கிறது!
அவள் இருந்த போது அவர் வடிக்காத கண்ணீரை இறந்தபிறகு நினைவில் வடிக்கும் கண்ணீரைக் கரைசேர்க்கிறது ஈசிசேர்.
ஒருநாள்.. எதற்காகவோ ஈசிசேரிலிருந்து விசுக்கென எழுந்தவர் அதில் விழுந்தார்! விழுந்தவர்ர்தான் எழுந்திருக்கவே இல்லை சேரை விட்டு!.
இப்போது ஈசிசேர் அவர் மேனி சுமக்கும் மனைவியாய் மாறிக் கண்ணீர் வடிக்கிறது. அன்று அவள் சுமந்தாள். இன்று அது சுமக்கிறது. திருத்த முடியாமற் போன அவரை மரக்கட்டையாய் அன்று அவள் சுமந்தாள். இன்று மரக்கட்டை சேர் அவளாகி சுமக்கிறது.
வீட்டில் ராமனாய் வாழ்ந்ததற்காகவே அவருக்கு படமாயும் பாடையாயும் மனைவி உதவிவருகிறாள் சேர் வடிவில்
ஈசிசேரில் இனி படுக்கக் கூடாது என்றார் டாக்டர். கட்டிலில் கிடத்தினார்கள். அவர் விழுந்த வேகத்தில் கால்கள் உடைந்த ஈசிசேர் தன்னையும் இப்போது அவர் பக்கத்திலேயே கிடத்திக் கொண்டது.
சீதைக்கு ராமனிருக்கும் இடம்தானே அயோத்தி!!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |