இலவச இன்சுலின்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 6,141 
 
 

தனது உடலின் எடை கூடிக்கொண்டே போவதை நினைத்து மன வருத்தத்தில் இருந்தாள் மகிளா.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் கட்டிலிலிருந்து இறங்கி பாதங்களைத்தரையில் வைக்கும் போது கடுமையான வலி ஏற்பட கண்களில் கண்ணீர் பெருகத்துடித்தாள். 

முன்பு போல் ஓடியாடி வேலை செய்ய வாய்ப்புகள் இல்லாததும் தற்போதைய உடல் எடைக்குக்காரணம் என்பது தான் சரியான விடை என்பதும் அவளுக்குத்தெரியாமல் இல்லை.

“வயசான காலத்துல ஒதவிக்கு ஆளு இல்லாட்டியும் காலு நல்லாருந்தா அது போதும். சொத்திருந்தா சொகமா இருக்கலாம்னு நெனைச்சு பணம், பணம்னு ஒடம்பப்பத்தி யோசிக்காம கண்டத நேரங்கெட்ட நேரத்துக்கு நல்லதா? கெட்டதா? ன்னு பாக்காமத்தின்னு போட்டு இப்ப கவலப்பட்டு என்ன பண்ணறது?” கிராமத்திலிருந்து வந்திருந்த வயதான தாய் சிவகாமி கூறக்கேட்டு கண்ணீர் சிந்தினாள்.

உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து உடற்பயிற்ச்சி செய்தாள். நடைப்பயிற்சியும் செய்தாள். மருத்துவரைச்சந்தித்து மாத்திரைகளையும் சாப்பிட்டாள்.

“ஆனையப்பூனையாக்க முயற்சி பண்ணறது எப்படியோ அப்படித்தா உன்ற ஒடம்பக்கொறைக்க முயற்ச்சி பண்ணறது. பசி, பட்டினின்னு கெடந்து செத்துக்கித்துத் தொலைஞ்சராதே…. புள்ளைங்களுக்கு அம்மா இல்லாமப் போயிடப் போகுது…‌” கணவன் குகன் பேசியதைக்கேட்டு கண்ணீர் சிந்தியபடி வருந்தினாள்.

‘தற்கால வாழ்க்கை முறையில் வாழும் முறையை மாற்றியமைப்பதே ஆரோக்யத்துக்கான வழி’ என யோசித்தாள்.

‘என்னதான் தினமும் ஒரு மணி நேரம் நடந்தாலும் சில சமயம் சோம்பல் காலையில் எழ முடியாமல் செய்து விடுகிறது. மாதத்தில் பத்து நாட்கள் நடப்பதும், இருபது நாட்கள் காலை எட்டு மணி வரை படுத்தே கிடப்பதுமான நிலையை மாற்றியே ஆக வேண்டும். உடம்பில் வியர்வை வர வேண்டும்’ என உறுதியாக முடிவெடுத்தவள் நகரத்திலிருந்து கிராமத்தில் தனது தந்தையின் தோட்டத்திலுள்ள வீட்டிற்கு பத்து நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துச்சென்றாள்.

கிராமத்திலும் தோட்டத்து முதலாளி குடும்பத்தினர் மற்றவர்களுடைய தோட்டத்து வேலைக்குச்செல்லமாட்டார்கள். தங்களது தோட்டத்து வேலைக்கு ஆட்களை வரவைத்து அவர்களுடன் தாங்களும் சேர்ந்து வேலை செய்வார்கள்.

ஒரு நாள் வெயிலில் வயலில் ஆட்களுடன் களையெடுக்கப்போன மகிளா, இரவு தூக்கம் பிடிக்காமல் “அள்ளநரம்பு புடிச்சிருச்சு… ஐயோ வலி தாங்க முடியல…” என துடித்தவளுக்கு தாய் இடுப்புக்கு விளக்கெண்ணை தடவி நீவி விட்ட பின்பே உறங்கினாள்.

“இந்த வேளை எனக்கு ஒத்து வராது . இருந்தாலும் நாளைக்கு சோளம் சாலுடற வேளைய நாம் பார்க்குறேன்…” எனக்கூறி மாடுகளை ஏரில் பூட்டி ஓட்டுபவருக்குப் பின்னால் காலையிலிருந்து மாலை வரை நடந்தே சோளம் சாலிட்டாள். 

தலைக்கு சிம்மாடு போல் சேலைத் தலைப்பைக் கட்டியதால் வெயில் உடலைத் தாக்கவில்லை. ஆனால் உடம்புக்கு குளித்தது போல் வியர்வை சேலையை ஈரமாக்கியிருந்தது. காலையில் மோருடன் இஞ்சி போட்ட கம்மஞ்சோறு, மதியம் கீரைச்சட்னியுடன் ராகி களி, மதியம் தூங்காமல் நகப்பழம், கொய்யா பழம், சீத்தாப்பழம், பப்பாளி என மரத்திலிருந்தே கொக்கிக்கத்தி பயன்படுத்தி தானாக பறித்து சாப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

இரவு மரவள்ளிக்கிழங்கு வேக வைத்து கஞ்சியுடன் சேர்த்து சூடாக தாய் கொடுக்க, சாப்பிட்ட பின் சூடான நீரில் குளித்து விட்டு வீட்டிற்கு வெளியே போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் தலை சாய்த்தவள் காலையில் சூரிய ஒளிக்கதிர்கள் உடல் மீது சுள்ளென்று பட்ட பின்பே எழுந்தாள்.

நாய், பூனை, கோழி, ஆடு, மாடு என தன்னைச்சுற்றி இவற்றோடு மயில், குயில், சிட்டுக்குருவி, காகம் என பறவைகளின் செயல்களும் மனதை சாந்தமாகியதை உணர்ந்தவள் பணத்தேவை முற்றிலும் இல்லாமல் போனதை நினைத்து ஆச்சர்யப்பட்டாள்.

தோட்டத்தில் விளைவதையே உண்பதால் ஆடைகளுக்கான செலவைத்தவிர வேறு ஏதுமில்லாத நிலை மனதைச்சாந்தமாக்கியிருந்தது. ‘நகரக்கட்டுப்பாடுகள் ஏதுமின்றி ஒரு குழந்தையைப்போன்ற மனநிலையில் வாழ்வதுதான் ஆரோக்யத்துக்கான அடித்தளம்’ என்பதைப்புரிந்து கொண்டாள்.

“அந்தக்காலத்துல கிராமத்துல சாப்பிட்டு முடிச்சவங்களுக்கு பொஞ்சாதிக வெத்தல பாக்கு சுண்ணாம்பு புருசனுக்கு எடுத்துக் குடுத்தாங்க. இந்தக்காலத்துல சாப்பிட்ட பின்னால பொஞ்சாதிக புருசனுக்கு மாத்தரை மருந்த எடுத்துக்கொடுக்கறாங்க. நாம பொறந்ததே காக்கா குருவி ஒரே எடத்துல உக்காந்து கெடக்காம எப்படி அங்கீமு இங்கீமு பறந்துட்டே இருக்குதோ அந்த மாதர நாமளும் ஏதோரு வேலைய செஞ்சுட்டே இருக்கத்தான். அத உட்டுப்போட்டு எல்லாத்தையும் மிசினே பண்ணுச்சுன்னா உன்னையாட்டா ஒடம்பப்பெருக்க வெச்சுட்டு கடைசி காலத்துல நடக்க முடியாம அவதிப்பட வேண்டியது தான்” எழுபது வயதிலும் ஓய்வின்றி காட்டில் வேலை செய்து உடலை நோயின்றி வைத்திருக்கும் தாயின் அனுபவப் பேச்சில் மனம் மாறினாள்.

‘படிப்பு, வேலை என்பது ஆரோக்யத்தைக்காப்பதில்லை, தன்னைக்கவனிக்க நேரமே கிடைப்பதில்லை, ஆடம்பரத்தேவைகளுக்காக அவசியத் தேவைகளைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று நண்பிகளுடன் அலைபேசியில் பேசினாள்.

‘குனிந்து, நிமிர்ந்து, அடிக்கடி எழுந்து நடந்து செய்யும் வேலைகளை பார்க்காதவர்கள் பணத்தை மட்டும் சேர்க்கும் அளவிற்கே நோயையும் சேர்த்துக்கொள்கின்றனர்’ என தனது அலுவலகத்திலிருப்போரிடம் பேசியதைக்கேட்டு அனைவரும் கை தட்டினர்.

பத்து நாட்கள் விடுமுறையில் தோட்டத்து வேலையைச் செய்தவளுக்கு ஐந்து கிலோ எடை குறைந்திருந்தது. தொடர்ந்து தோட்டத்து வேலையைச் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தாலும் வார விடுமுறை நாட்களில் தோட்டத்தில் தங்கி வேலை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாள்.

அலுவலகத்திலிருந்த நண்பர்களும் வார விடுமுறை நாட்களில் மகிளாவுடன் வந்து கிராமத்து தோட்டத்தில் வேலை செய்து கழித்தனர்.

‘கூலி வாங்காத வேலைக்காரங்க தோட்டத்து வேலைக்கு கெடைச்சுட்டாங்க’, என நினைத்து மகிளாவின் தாய் சிவகாமி ஆனந்தப்பட்டது முகத்தின் சிரிப்பே காட்டிக்கொடுத்தது.

‘சாப்பாடும் போட்டு பணம் கேட்காத உடற்பயிற்சிக்கூடம் நமக்குக் கிடைத்து விட்டது’ என நினைத்து மகிளாவின் அலுவலக ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 

இரத்தப்பரிசோதனை செய்த போது சர்க்கரையின் அளவு குறைந்திருந்ததைப்பார்த்து மருத்துவரே ஆச்சர்யப்பட்டுப் போனார். ‘சர்க்கரை நோயின் அளவைக் குறைக்கும் இலவச இன்சுலின் உழைப்பு’ என தத்துவமாக தனது அனுபவத்தை எழுதி நண்பர்களின் வாட்சப்குழுவில் பதிவிட்டாள் மகிளா!

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *