இரண்டாம் அத்தியாயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 1,549 
 
 

“என்னடி தமயந்தி, முகமலர்ந்து உற்சாகமா வர்றியே, உன் வீட்டுக்காரர் வரேன்னு தகவல் அனுப்பிருக்காரா? இல்லை, நீ அவரைப் பார்க்க வெளிநாட்டுக்கு போகப்போறியா?” என்று கிண்டலடித்தாள் நித்யா. தமயந்தியும் நித்யாவும் ” வீ டீச்” என்ற மொழிகள் இணையதளம் வழியாக கற்றுத்தரும் நிறுவனத்தில் மென்பொருள் பணியாளர்களாக வேலை பார்க்கிறார்கள். தமயந்திக்கு அலுவலக நண்பர்கள் நிறைய இருந்தாலும் நித்யாவும், ரட்சிகாவும் நெருங்கிய நண்பர்கள். மெட்ரோ ரயிலில் அன்று காலை சுவாரசியமாக நடந்த செயல் பற்றி நினைத்து சிறிய புன்னகையுடன் அலுவலகம் உள்ளே வந்த தமயந்தியைப் பார்த்து நித்யா அவ்வாறு பேசி வரவேற்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைடி. மெட்ரோவில வரும்போது நடந்ததை நினைச்சு சிரிச்சுகிட்டே வந்தேன். வேற எதுவும் இல்லை. நீ ப்ரேக் ஃபாஸ்ட் சாப்டியா? எனக்கு இன்னிக்கு காலைல லேட் ஆயிடுச்சு. எதுவும் செய்யலை. நம்ம கேன்டீனில் போய் என்ன இருக்கோ சாப்பிட போறேன். நீ வர்றியா?” தமயந்தி கேட்டாள்.

“நீ போய்ட்டு வாடி. இதோ பாரு ரட்சிகா வந்துட்டா. அவளை அழைச்சிட்டு போ. எனக்கு ஒரு அர்ஜண்ட் வேலை பெண்டிங் இருக்கு. பாஸ் வந்தவுடனே கேப்பாரு.” என்றாள் நித்யா.

“என்னடி கண்ணுங்களா, காலையே இவ்வளவு சுவாரசியமா மீட்டிங் போடுறீங்க ” என்று கேட்டபடி ரட்சிகா அருகில் வந்தாள்.

“வா என்னோட கேன்டீனுக்கு, எனக்கு பசிக்குதுடி” என்று சொல்லி அவள் ரட்சிகா கையைப்பற்றி இழுத்துக் கொண்டு தமயந்தி நிறுவனத்தின் உணவகம் பக்கம் சென்றாள்.

ரட்சிகா கேட்டாள்.”இந்த வருஷம் எந்த ஊருக்கு இல்லை நாட்டுக்கு அழைச்சிட்டு போகப்போறாருடி உன் ஹஸ்பண்ட் ? வருஷா வருஷம் சடன்னா வந்து சீக்கிரம் ஒரு ட்ராவல் ப்ளான் புக் பண்ணி அசத்திட்டுப் போயிடறாருடி உங்காளு? அவரு வீட்டில ரெண்டு நாள் தொடர்ந்து இருக்கவே மாட்டாரா? எங்களுக்கு எல்லாம் அறிமுகப்படுத்தி ஒரு லஞ்ச் இல்லைன்னா டின்னர் ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்ணச் சொல்லி ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கம்பெல் பண்றாங்கன்னு சொல்லுடி இந்த தடவை வந்தாருன்னா!” என்றாள்

“சரிடி எல்லாம் சொல்றேன். சீக்கிரமாவே நடக்கும் நீ விரும்பியது. ஆளை விடு இப்போ. நான் சாப்பிடணும். உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டாள் தமயந்தி.

“ஒன்லி காஃபி ” என்றாள் ரட்சிகா.

அவர்கள் இருவரும் திரும்பத் தன் பணியிடத்திற்கு வந்து உட்கார்ந்து அன்றைய வேலைகளில் முழுகி விட்டனர்.

அன்று வாரக்கடைசி நாள். அந்த வாரம் முடிந்து திங்கள்கிழமையும் விடுமுறை வருவதால் மூன்று நாட்கள் விடுமுறை ஆகிவிடும்.அதனால் அவ்வாரத்திற்குள் முடிக்க வேண்டிய வேலைகள் அதிகம் இருந்ததால் மதியம் உணவு இடைவேளையை கூட அவர்கள் மூவரும் அரைமணி நேரத்திற்குள் முடித்து விட்டு வேலையைத் தொடர்ந்தனர்.

ஏறக்குறைய ஏழரை மணி அளவில் வேலைகளை முடித்து, விவரக்குறிப்புகளை மேலட்டையில் வைத்து மேலாளரிடம் தந்துவிட்டு மூவரும் கிளம்பினார்கள்.

அலுவலகக் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தபோது, இன்னும் இரண்டு நிறுவன ஊழியர்கள் இவர்களை நலம் விசாரித்தனர். தமயந்தியிடம் குறிப்பாக ” அப்புறம் தமயந்தி அக்கா, ஹஸ்பண்ட் எப்போ வராரு? இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் எண்ணம் உண்டா இல்லையா? பையன் அகிலேஷ் எப்படி இருக்கான்?” என்று வரிசையாக கேட்டனர். எல்லாவற்றிற்கும் தமயந்தி புன்னகையுடன் பதில் சொல்லி விட்டு நடந்தாள்.

ஆஃபீஸ் காம்பவுண்ட் விட்டு வெளியே வந்தவுடன் அங்கிருந்த காவல் அதிகாரி தமயந்தியை ” என்னம்மா எப்படி இருக்கே, இந்த வருஷமாவது நம்ம ஆஃபீஸ் டேக்கு உன் வீட்டுக்காரரை அழைச்சிட்டு வாம்மா! ” என்றார்.

“ஓகே ராஜ் அன்கிள் ” என்று சொன்னாள் தமயந்தி.

“நாங்க சொல்வதையே எல்லாரும் சொல்றாங்க பாருடி தமயா, இந்த முறையாவது தரூஷ் வரும்போது நிச்சயம் கூட்டிட்டு வா. ஒரு நாள் எங்களுக்காக ஒதுக்கச் சொல்லு. நீதாண்டி இதெல்லாம் சொல்லணும் ” என்று நித்யாவும் ரட்சிகாவும் ஒரே நேரத்தில் தமயந்திக்கு கட்டளை இடுவது போல் சொன்னார்கள்.

“நீங்களும் ஆரம்பிக்காதீங்கடி. வேற பேச்சு ஏதாவது பேசலாமா? இன்னிக்கு கார் கொண்டு வரலை. நித்தி என்னை மெட்ரோ ஸ்டேஷன்ல ட்ராப்

பண்ணுடி. என் ஸ்கூட்டரை அங்கே இறங்கற ஸ்டேஷன்ல பார்க் பண்ணியிருக்கேன்.” என்றாள் தமயந்தி.

ரட்சிகா சிரித்துக்கொண்டே” அதுக்காக இல்லேடி, தமயந்தின்னு பெயர் கொண்டவளுக்கு ஒரு நள மஹாராஜா மாதிரி உங்காளு இருந்துடக் கூடாதுங்கற ஆதங்கம் தான் ” என்றாள்.

“நளன் அவரு பெண்டாட்டி, குழந்தையை பயணம் செய்யும் வழியில் ராத்திரி தூங்கும்போது தனியே விட்டுட்டு ஓடிட்டாருன்னு சொல்லி கதை இருக்குடி. ஆனால் இவ வீட்டுக்காரர்தான் வருஷம் ஒரு தடவை வந்து இவளை பாத்துட்டு, சுற்றுப்பயணம் செஞ்சுட்டுப் போறார்டி. அப்புறம் எப்படி அதை சொல்றடீ நீ?” என்று நித்யா ரட்சிகாவைக் கேட்டாள்.

“யம்மா, ரெண்டு பேரும் டாபிக் மாத்தறீங்களா, இல்லை நான் பாட்டுக்கு போகட்டுமா?” என்று தமயந்தி உரத்த குரலில் கேட்டாள்.

” ஓகே சேஞ்ச் தி டாபிக்.” என்று சொல்லி ரட்சிகா, “இந்த வீக் எண்ட்ல, மூணு நாள் சேர்ந்து ஹாலிடே வர்றதுனால எங்கேயாவது ஒரு ஸ்மால் டூர் போகலாமா?” என்று கேட்டாள்.

“சரி, நாளைக்கு மார்னிங் டிசைட் பண்ணலாம் ” என்றாள் தமயந்தி.

பிறகு ரட்சிகா புறப்பட, தமயந்தி மை தன் காரில் ஏற்றிக் கொண்டு நித்யா வண்டியை ஓட்டினாள்.

தமயந்தியை மெட்ரோ ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு ” நாளைக்கு ஃபோன் பண்றேன். பை பை.” என்று கூறி நித்யா சென்றாள்.

தமயந்தி மெட்ரோ ரயிலில் பயணித்து தான் இறங்கும் நிலையம் வந்தவுடன் இறங்கி வெளியே வந்து, தன்னுடைய ஹோண்டா ஆக்டிவா வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஒண்ணரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் வீட்டிற்குச் செல்லும் வழியில் எப்போதும் பூ வாங்கும் கடையில் போய் நின்றாள்.

“வாம்மா, எப்பவும் தர்ற மல்லிகைப்பூவோட கொஞ்சம் ரோஜா வாங்கிக்க கண்ணு. புதுசா வந்திருக்கு. உதிரியா வேணும்னாலும் தர்றேன். சாமிக்கு போடு” என்று பூக்காரப்பெண்மணி மணியம்மாள் சொன்னாள்.

“சரி, கொஞ்சம் கொடு” என்றாள் தமயந்தி.

“எப்பவும் நீ மட்டும்தான் வர்றே. வூட்டுக்காரர் ஒரு தடவை கூட வந்ததில்லே.நான் பாத்ததே இல்லை. வெளிநாட்ல இருக்காரா? அடுத்த தபா கூட்ட்டிட்டு வாம்மா” என்று சிரித்தபடி சொன்னாள் மணியம்மாள்.

“என்ன செய்யறது மணியம்மா, அவரு திடீர்னு லீவு கிடைச்சதுன்னு வர்றாரு. வந்த மறுநாளே பல இடங்களுக்கும், கோவில்களுக்கும் போற ப்ளான் போட்டு என்னையும் இழுத்திட்டு கிளம்பிடறாரு. அதான் விஷயம். அடுத்த தடவை ட்ரை பண்றேன் உன் கடைக்கு அழைச்சுட்டு வர்றேன்.” என்று சொல்லியபடி தமயந்தி ரூபாயை கொடுத்துவிட்டு பூவை வாங்கிக்கொண்டாள்.

” இல்லேம்மா, நானும் பாக்கறேன், தமயந்தின்னு பேரு வச்சுட்டா கொஞ்ச வருஷங்களாவது தனியா இருக்கணும்னு தலையெழுத்து எழுதிடுவான் போல இருக்கு ஆண்டவன், இல்லையா கண்ணு? சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சங்கடப் படாதே” என்று மணியம்மாள் சொல்லி கல கல வென சிரித்தாள்.

“சேச்சே, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. பாக்கலாம். கூடிய சீக்கிரம் எல்லாம் நல்ல படியாக நடக்கும்னு நம்பிக்கை இருக்கு” என்று கூறி தமயந்தி நகர்ந்தாள்.

வீட்டுக்கு வரும்போது மணி கிட்டத்தட்ட ஒன்பது ஆகிவிட்டது. வீட்டுக்கு பக்கத்தில் சங்கரி மாமி மெஸ் இருக்கிறது. அகிலேஷ் பள்ளி முடிந்து வந்ததும் அந்த மெஸ்ஸில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை முடிந்தவரை செய்து முடிப்பான். சங்கரி மாமியிடம் பேசிக்கொண்டே அவருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வான். சங்கரி மாமிக்கு தமயந்தியை மிகவும் பிடிக்கும். தன் பெண் போல் பாவித்து பேசுவார். அதேபோல் அகிலேஷிடமும் மிகுந்த பிரியம் கொண்டவர். தமயந்திக்கு தன் மனக்கவலைகளை பகிர்ந்து கொள்ள உற்ற நண்பராக இருந்தார் சங்கரி மாமி.

சங்கரி மாமிக்கு வாரிசுகள் இல்லாததாலும், தமயந்திக்கு சொல்லிக்கொள்ளும்படி உறவுகள் எவரும் இல்லாமையாலும் கடந்த ஐந்து வருடங்களாக இருவருக்கும் மிகவும் நல்ல நட்பாகிப்போனது.

தமயந்தியின் உண்மையான நிலையை சங்கரி மாமி மட்டுமே அறிவாள்.

“பாட்டி, அம்மா வந்துட்டாங்க” என்று சந்தோஷத்தில் கத்தினான் அகிலேஷ்.

வெளியே வந்து கொண்டிருந்த தமயந்தியை பார்த்த சங்கரி மாமி, ” என்னம்மா இன்னிக்கு லேட் ஆயிடுத்து? அகிலேஷ்க்கு இட்லி கொடுத்துட்டேன். உனக்கும் தனியா டப்பாவில் போட்டு வச்சிருக்கேன்

பொண்ணே. நீ போய் ஆத்துல இவ்வளவு நேரத்துக்கப்புறம் ஏதும் பண்ணிண்டிருக்க வேண்டாம். என்ன நான் சொல்றது கேட்டுதாம்மா?” என்று கேட்டாள்.

“சரி மாமி” என்று சொல்லி” அகில் செல்லம், மாமியை தொல்லை செய்யாமல் இருந்தியா? ஏதாவது ஹெல்ப் பண்ணியா?” என்று அன்புடன் அகிலேஷிடம் கேட்டாள் தமயந்தி.

“ஓ, பாட்டிக்கு ஹெல்ப் பண்ணேனே! காய்கறி எல்லாத்தையும் பிரிச்சு வச்சேன். ஃபிரிட்ஜ் மேல் தூசியா இருந்தது. அதை தொடச்சு வச்சேன்” என்று ஒவ்வொன்றாக சொன்னான் அகிலேஷ்.

“அது சமத்துடி தமயந்தி, அவனுக்கு சொல்லவே வேண்டாம். ஏதாவது பொருட்கள் அழுக்கா இருக்கா, உடனே துணியை எடுத்து துடைச்சு தர்றான். அவனுக்காகவும் உனக்காகவும் தினம் நான் பிரார்த்தனை பண்றேன். இந்த மாதிரி சுட்டி குழந்தையை பக்கத்தில் இருந்து பாக்கறதுக்கு அகஸ்த்யாவுக்கு கொடுத்து வக்கலைடி. எங்கயோ போய் உக்காந்திருக்கான். கவலைப்படாதே. சீக்கிரமாவே நல்லது நடக்கும்.” என்றார் சங்கரி மாமி.

தமயந்தியின் கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்தது. அகிலேஷ் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்ற நினைப்பில் வேறுபக்கம் பார்த்தாள். சங்கரி மாமிக்கு புரிந்து விட்டது. ” சரி, சரி அகில் குட்டா, ஸ்கூல் பையை எடுத்துண்டு அம்மாவோட கிளம்பு. நாளைக்கு பார்க்கலாம் ” என்றார்.

தமயந்தி, சங்கரி மாமி கொடுத்த இட்லி பொட்டலத்தை வாங்கிக்கொண்டு விடை பெற்று அகிலேஷுடன் வீட்டுக்கு வந்தாள்.

இரவு படுக்கும் முன் அகிலேஷுக்கு ஏதோ கதைப் புத்தகத்தை படித்து விரித்துக் கொண்டிருந்தாள் தமயந்தி.

அகிலேஷ் முழு கவனமும் இல்லாமல் எங்கேயோ உற்று பார்த்துக் கொண்டிருந்தான். “என்னடா, அகில், தூக்கம் வருதா, ஏதாவது வேணுமா?” என்று தமயந்தி கேட்டாள்.

“அம்மா, உன்னை ஒண்ணு கேப்பேன். கோவிச்சுக்காம பதில் சொல்லுவயா?” என்று மெதுவாக கேட்டான் அகிலேஷ்.

“நான் கோபப்படமாட்டேன்டா கண்ணா, என்ன கேட்கப்போறே ” என்று தமயந்தி கேட்டாள்.

“நீ முன்னாடி ஒரு நாள் சொன்னியே, நான் அப்பாவை இனிமேல் பாக்கவே முடியாதான்னு கேட்டப்போ, நான் செகண்ட் ஸ்டாண்டர்ட் முடிச்சு தேர்ட் போகும்போது அப்பா இங்கே வந்துடுவாங்க அப்படீன்னு சொன்னே இல்லியா, இப்ப செகண்ட் முடிச்சுடுவேன். அப்பா வருவாரா அம்மா?” என்று திணறித்திணறி கேட்டான் அகிலேஷ்.

இரண்டு வருடங்கள் முன்பு ‘வீட்டிலிருந்து பணி’ செய்யும் முறையில் இந்நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அகிலேஷ் ‘அப்பா ஏன் நம்மோடு இல்லை, எப்போ வீட்டுக்கு வருவார்? எங்கே இருக்கார்?’ என்று கேட்டபோது தமயந்தி அவனிடம் அப்படி சொல்லி இருந்தார்.

தமயந்தி கண்ணீர் மல்க அவனை வாரி அணைத்துக்கொண்டாள். ” நிச்சயம் வருவார்டா கண்ணு. கவலையே படாதே. இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோ அதுக்குள்ள வந்துடுவாரு அப்பா. இப்போ நிம்மதியா தூங்கு செல்லம்!”. என்றாள்.

“சரிம்மா, குட் நைட் ” என்று சொல்லி அகிலேஷ் தூங்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் அகிலேஷ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

தமயந்திக்கு அகிலேஷின் கேள்வி மனதில் எதிரொலித்தவாறே இருந்தது. எல்லோரும் கேட்பது இருக்கட்டும், இப்போது அகிலேஷ் கேட்க ஆரம்பித்து விட்டான் ‘ அவர் எப்போ வருவார் ‘ என்று. ‘அவர் எப்போது வரப்போகிறார் என்பது எனக்கே தெரியாதே, நான் யாரிடம் என்ன சொல்வேன் ‘ என்று நினைத்து சத்தமில்லாமல் அழுதாள்.

தன் பீரோவைத்திறந்து ஒரு கவரில் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தாள். நிறைய முறை படித்து அலுத்து ஓரத்தில் வைத்ததை இன்று அகிலேஷ் அந்த கேள்வியை கேட்டபின் மீண்டும் எடுத்து படிக்கத்தூண்டியது.

“என் உயிருக்குயிரான அன்பு தமயந்திக்கு, உன் அகஸ்த்யா எழுதியது. இதை எழுதுவதற்கு காரணம், இவைகளை உன்னிடம் நேரே சொல்ல திராணியில்லை. கல்லூரி நாட்களில் நானும் நீயும் சந்தித்து, பிறகு புரிந்து கொண்டு மணம் செய்து கொண்டோம். சமையல் போட்டி உள்பட எல்லாவற்றிலும் நாம் ஒன்றாக கலந்து கொண்டு சமையல் கலையில் நிறைய முறை நான் வெற்றி பெரும்போது நீ பெருமிதம் அடைவதைக்கண்டு பூரித்திருக்கிறேன். ஆனால் கணினி தொடர்பான போட்டிகளில் என்றுமே உன்னை நான் வெல்ல முடியவில்லை. அதுவும் எனக்கு மகிழ்ச்சியே. நாம் இருவருமே சிறிய வயதில் பெற்றோர்களை இழந்து யாரோ எப்படியோ,

ஏதோ நல்லவர்கள் ஆதரவில் தட்டுத் தடுமாறி பட்டதாரிகள் ஆகிவிட்டோம். நல்ல வேளை படிப்பு நமக்கு நன்றாக ஏறியது.அதுவே நம்மை ஒன்றிணைத்தது.பெங்களூரில் செட்டில் ஆகத்தொடங்கினோம்.

தமயந்தி, நான் வேலைக்கு போகாமல் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற வைராக்கியத்தில், ஏதேதோ சிறு சிறு வணிகங்கள் செய்ய ஆரம்பித்து திருமணத்திற்கு முன்னரே கடனில் மாட்டிக்கொண்டேன். முதலில் உன்னிடம் இதை மறைத்தது தவறு. இரண்டாவதாக திருமணத்திற்கு பின் உனக்கு நல்ல வேலை கிடைத்தது. எனக்கும் கிடைத்தது.ஆனால் அதில் இருந்தவாறே கணினி தொடர்பான ‘ ஸ்டார்ட் அப் ‘ கம்பெனி ஒன்று என் நண்பன் சுரேந்தர் தொடங்கியதில் நானும் சேர்ந்து கொண்டேன். அதை மறைத்தது இரண்டாம் தவறு. அந்த கம்பெனி ஒரு வருடத்திற்கு பின்னர் சரியாக போகாததால் பெரிய நஷ்டம். உனக்கு தெரியாமல் பெரிய பணத்தை இழந்து விட்டேன். நீ ஓரிரு முறை சுரேந்தரை பார்த்திருக்கிறாய். ஆனால் அவனும் என் பேச்சைக் கேட்டு உன்னிடம் சொல்லவில்லை.

இதை சரி செய்ய வேண்டும் என்று எண்ணி நானும் அவனும், அவனுடைய நட்பு வட்டாரம், உறவினர்கள் மூலம் வேறு நிதியை ஏற்பாடு செய்து சில கடன்களை அடைத்து மீதியை அப்படியே வைத்துக் கொண்டு, கணினி ஹார்ட்வேர், மொபைல் ரிப்பேர் இவைகளை ஆரம்பித்து செய்தோம். எனக்கு குக்கிங் நன்றாகத் தெரியும் என்பதால் கூடவே ஒரு மெஸ் ஒன்றையும் ஆரம்பித்தோம்.இதை மறைத்தது மூன்றாம் மிகப்பெரிய தவறு.

எல்லாம் நன்றாகவே நடந்தது. இதற்கிடையில் நமக்கு அகிலேஷ் பிறந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. இனி மகிழ்ச்சியான நேரம்தான் என்று கூறி நீ பார்த்து வந்த வேலையை விட்டு விடச் சொன்னேன். உனக்கும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், பொறுப்பு இருந்ததால் நீயும் விட்டு விட்டாய்.

அந்த நாட்களில் நான் பல நேரங்களில் தாமதமாக வீடு வந்ததற்கு பலவிதமான காரணங்கள் உனக்கு சொல்லி இருப்பேன். பே ஸ்லிப் காட்டும் பணம் வீட்டுக்கு கொண்டு வரவில்லை என்று நீ கேட்ட போதெல்லாம் ‘ஸர்ப்ரைஸ் இன்வெஸ்ட்மென்ட்’ உனக்கு ஒரு நாள் சொல்வேன். என்னை நம்பு என்று சொல்லி வந்தேன். இன்று நினைக்கிறேன், அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றவில்லையோ என்று. மனதிற்குள் அழுகிறேன்.

சுரேந்தரை நான் நம்பினேன். ஆனால் அவன் குடும்பத்தினர் பார்ட்னர்ஷிப் வேண்டாம் என்று கறாராக முடிவெடுத்து என்னை வெட்டிவிட முடிவெடுத்தனர் அவசர கதியில். கணக்குகளையும் பார்த்து ‘ நீதான் முப்பது

லட்சம் ப்ளஸ் தரவேண்டியதாக உள்ளது. இருபத்தேழு கொடுத்து விடு. போதும்.’ என்று ஒரு அதிர்ச்சியை கொடுத்தனர். எனக்கு மயக்கமே வந்து விட்டது. ‘என்னடா, சுரேந்தர், நான் எங்கேடா போவேன்? கொஞ்சம் டைம் கொடுடா’ என்றதற்கு அவன் கைவிரித்து விட்டான். ‘என்னை மன்னித்து விடுடா. என் கையில் எதுவும் இல்லை.நீ ஏதாவது செய்து அவங்களை சமாதானப்படுத்துடா ‘ என்று சொல்லி விட்டான்.

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உனக்கு நன்றாகத் தெரியும் நான் ஒரு தீவிர சிவபக்தன் என்று. வேறு யாரிடம் போவேன் நான்? உடனேஅங்கே அருகில் உள்ள சிவன் ஆலயத்தில் உட்கார்ந்து என்னை அடக்க முடியாமல் குமுறி அழுது விட்டேன். அழுகை நிற்காமல் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.நான் ஒரு நாலைஞ்சு நாள் உடல்நலம் சரியில்லாமல், சாப்பிடாமல், சரியாகப் பேசாமல் இருந்து, உன் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லாமல் இருந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?

நீண்ட நாட்களாக அந்த சிவன் கோவிலில் தவமுனி போல் இருக்கும் ஒரு பெரிய செல்வந்தர் தோரணையில் இருந்த, நான் அடிக்கடி சந்திக்கும் ஒரு சிவனடியார் என்னைப் பார்த்து ‘ தம்பி, உன் மனக்கஷ்டம் என்ன? தனியே இப்படி கண்ணீருடன் புலம்பிக் கொண்டு இருந்தால், ஒன்று நீ அன்பானவரை பறிகொடுத்திருப்பாய், அல்லது பெரிய பொருள் நஷ்டம், கடன் இவைகள் நம்பிக்கை துரோகத்தால் ஏற்பட்டிருக்கும். இதில் எதப்பா உன் கஷ்டம்?’ என்று கேட்க, எனக்கு என்ன தோணியதோ தெரியல, அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். பிறந்த தேதி, ஊர், நேரம் எல்லாம் கேட்டார். ஒன்று விடாமல் சொன்னேன்.

‘கவலைப்படாதே. இனிமேல் உனக்கும் உன் குடும்பத்திற்கும் இது ஊர் இல்லை. நான் சென்னையில் ஒரு விலாசம் தரேன். உன் ஃபோனில் நான் பேசறதை ரெகார்ட் பண்ணிக்கோ. இங்கே இருக்கும் உன் நண்பனிடம் ஆறு மாதம் தவணை வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கோ. பிறகு தானாக எல்லாம் நடக்கும்’ என்றார். அவரை யார்னு கேட்டதுக்கு அங்கே போனால் தெரியும் என்றார். ‘இதெல்லாம் அங்கே போய் அப்புறமா செட்டில் ஆகும் போது உன் மனைவியிடம் சொல்லு என்றார்.இப்போதைக்கு உனக்கு சென்னையில் நல்ல ஆஃபர் வந்திருக்குன்னு மட்டும் சொல்லிட்டு போ.’ என்றார்.பிறகு ‘நீ ஐந்து வருடங்கள் தியாகம் செய்யும்படியாக இருக்கும். அங்கே போய் தெரிந்து கொள்வாய்’ என்றார். ‘உன் பிறப்பு விதியின்படி நீ மனைவியை பிரிந்து இருக்கும் நிலை இன்னும் சில நாட்களில். அதை நீ புத்திசாலித்தனமாக அணுக வேண்டும் ‘ என்றார்.

உனக்கு தெரியும். ஒரு நாள் ஐம்பதாயிரம் என் பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் வந்தது. திடுதிப்பென்று மறு நாள் இரவில் உனக்கு நான் சொல்லி, நாம் இருவரும் ஒரு வயது குழந்தையுடன் மூன்று நாட்கள்ல கிளம்பி குரோம்பேட்டை பக்கம் போனோம். நாம் இருக்கும் இப்போதைய வீடு அந்த சிவனடியார் கொடுத்தது. யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கட்டளை இட்டார்.

ரெண்டு நாளில் எனக்கு ஒரு ரெஸ்டாரன்ட் சீஃப் குக் வேலை கிடைச்சு, உனக்கும் ஒரு கணினி கம்பெனி வேலையும் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற ஒப்பந்தத்தில் கிடைச்சது. அந்த சிவனடியார் லோகேஷ்வரன் ஆரம்பித்த தொழில்கள்தான் இவை அனைத்தும். தீவிர சிவ பக்தர் ஆனதால் இவைகளை தன்னுடைய மகன், மகள் இவர்களிடம் ஒப்படைத்து விட்டு சிவன் கோவில்களை சுற்றி கொண்டிருக்கிறார்.

அவர் மகன் அபினவ், மகள் கிருத்திகா இருவரும் ஒரு நாள் ரெஸ்டாரன்ட் வந்து என்னை மீட் பண்ணி, ‘ புதுசா ஒரு ரெஸ்டாரன்ட் துபாயில் வாங்கி நம் ஊர் ஸ்டைலில் உணவு வகைகளுடன் நடத்த ஆரம்பித்து விட்டோம். நீங்கள் போய் ஐந்து வருடங்கள் அது நன்றாக டெவலப் ஆகும் வரை இருந்து விட்டு பின் இங்கே வரவேண்டும் என்று நாங்கள் விரும்பறோம். அதுக்கப்புறம் நீங்க ஃபேமிலியோட அங்கே போனாலும் சரி, திரும்ப வந்தாலும் சரி எங்களுக்கு சம்மதம் ‘அப்படின்னாங்க. என் மனதில் ஒரு வெறியாகி விட்டது. என்னை அவமானப்படுத்திய சுரேந்தர் ஃபேமிலி சொந்தக்காரங்களை விட அதிகமா பணம் சேர்த்து அவன் முன்னால் போய் என் குடும்பத்தோடு நிக்கணும்னு முடிவு செஞ்சு ஓகே சொல்லிட்டேன்.

உன் கிட்ட சொன்னால் நிச்சயம் தடுத்துடுவேன்னு தெரியும். அதனால் ரெஸ்டாரன்ட் வேறு ஊரில் புது ரெஸ்டாரன்ட் ஒர்க் சம்மந்தமான ஆறுமாதம் மும்பை போறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன். அதே சமயம் அவங்க உன் அக்கவுண்ட்டுக்கு மாசம் ஐம்பதாயிரம் அனுப்பறேன்னு உறுதி தந்தாங்க.

நீ என்னை நிச்சயம் வெறுப்பாய். ஆனாலும் உன்னிடம் நான் கூறிய நேரத்தில் வருவேன் பணக்காரனாக. என்னைவிட உனக்கு இழப்பு அதிகம், மனக்கஷ்டம் அதிகம், தனியே சமாளிக்க வேண்டிய சங்கடமான சூழல்கள் எல்லாம் பற்றி நான் அறிவேன். ஆனால் வாழ்க்கையில் இது எனக்கு இல்லை நமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம். நழுவவிட மனம் இல்லை. ஐந்து வருடங்கள் எதுவும் பேசமாட்டேன்.அதேபோல் உன்னையும்,அகிலேஷையும் பிரிந்து வாழ்வதே எனக்கு பயமாகவும், மனவலியாகவும் இருக்கு.

தமயந்தியான உனக்கு நான் இந்த ஐந்து வருடங்கள் நளனாகவே வாழ்வேன். நீ ஒவ்வொரு வருடமும் நான் திடீரென்று வந்தது போலவும், நான் உன்னை வெளியூர் சுற்றுலா அழைத்துக்கொண்டு போன மாதிரி செய்து வா. ஏனெனில் இந்த சொசைட்டி தன் விஷயங்களை விட மற்றவர்கள் செயல்களில்தான் இன்டரஸ்ட் அதிகம். அதுக்காக இதைச் செய் என்கிறேன். என்னை மன்னித்து விடு.மன்னித்து விடு. மனதில் ரணத்துடன் போகிறேன். இவை அனைத்திற்கும் மருந்தான பணத்துடன் நிச்சயம் வருவேன். என்னை நம்பு.

உறுதியாக சொல்கிறேன். அகிலேஷ் மூன்றாம் வகுப்பு சேரும் முன் வந்து விடுவேன். உறுதி.உறுதி. என்னை மன்னித்து விடு. என் விதி. உன் விதி உனக்கு நான் நளனாகி விட்டேன்.

உன் அன்பில் அடைக்கலம் ஆன ‘ அகஸ்த்யா ‘.

கடிதத்தை மடித்து வைத்தாள் தமயந்தி.கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.இன்று வரை இது சங்கரி மாமியைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. எத்தனை போராட்டங்கள் இந்த ஐந்து வருடங்களில். அகஸ்த்யாவை மன்னித்து விட்டாள் எப்போதோ. ஏனெனில் அவன் மிக நல்ல மனம் கொண்டவன், அக்கறை உள்ளவன் என்றும் நன்கு அறிவாள் தமயந்தி.


அடுத்த ஒரு மாதம் அமைதியாகச் சென்றது. ஒரு நாள் காலையில் கண்விழித்து காஃபி தயாரித்து அருந்திக் கொண்டிருந்த போது கை பேசியில் ஒரு நம்பரில் இருந்து செய்தி ஒன்று வந்தது.

‘நாளை மதியம் வருகிறேன். வேலைகள் முடிந்து லட்சியம் நிறைவேறியது. நேரடியாக எல்லாம் சொல்கிறேன். அன்புடன் அகஸ்த்யா’

தமயந்திக்கு சந்தோஷம் பீறிட்டது. தன் மகிழ்ச்சியை எப்படி வெளிக்காட்டிக் கொள்வது என்பது தெரியாமல் திக்கு முக்காடி போனாள். அரைகுறை தூக்கத்தில் இருந்த அகிலேஷை வாரி அணைத்து முத்தம் பொழிந்தாள். சங்கரி மாமியை வீட்டுக்கு அழைத்தாள். கடவுள் படங்களில் பூக்களை பலமுறை தூவினாள். ‘ ஓம் நமசிவாய ‘ என்று சொல்லி சிவன் படம் முன்பு பத்து தடவை நமஸ்கரித்தாள். அவளும் அகஸ்த்யாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். ” அந்த சிவன் தரும் ரெண்டாம் அத்தியாயம், ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய” என்றவள், அகிலேஷையும் சொல்லச் சொன்னாள்.

‘அம்மா இப்படி ஏன் இருக்கிறாள்’ என்று புரியாமல் விழித்தான் அகிலேஷ்.

“என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் செய்யறே?”என்றான் அகிலேஷ்,

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *