இதயங்கள் கரைகின்றன

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2025
பார்வையிட்டோர்: 1,175 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“விலைவாசி சீறுவாணம் போல் ஏறிவிட்டது…” 

பஞ்சம்… 

எச்சில்லைப் போராட்டம்…? 

“எங்கை பார்த்தாலும் கியூ… சனங்கள் உயிர்ப் பூச்சியைப் புடித்துக் கொள்ளப்படும்பாடு” இப்படியெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். 

உண்மையைத்தான் பேசிக் கொள்கிறார்கள். 

நானும் இவைகளைப் பற்றி… இந்த எச்சிலிலைப் போராட்டம் பற்றிப் பேசிக் கொள்வதுண்டு… ஆனால், என்னைப் பொறுத்துக் கவலைப்பட்டதில்லை. 

நான் ஒரு வேலைக்காரன். சந்தண மரத்தோடு சாய்ந்த மரமும் மணம் தரும் என்பார்களே… இதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது தான் உணர்கிறேன். நான் வேலைக்காரன்தான். படிப்பறிவு இல்லாதவன் தான்… இருந்தாலும் இவைகளைப் புரிந்து கொள்ளம் சக்தி எனக்குண்டு. 

நான் வேலை செய்யும் வீட்டிலிருந்து புறப்பட்ட நான் கடையை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன். 

எனக்குச் சொந்தமில்லை. உறவில்லை. சொந்த இடமில்லை… “அனாதை” என்று நிதானமாகக் கூறி விடலாம். பிறந்த மண். வளர்ந்த மண்ணென்று எதையும் என்னால் நிதானப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் “யேசுவைப் போல… நீயும் மாட்டுக் கொட்டில்லைதான் பிறந்தனி…” இப்படி எனது தாயார் உயிருடன் இருந்த காலத்தில் ஒரு நாள் கூறியது எனக்கு ஞாபகமிருக்கிறது. 

‘வேலைக்காரன்’ என்ற பதவி என் பிறப்போடு ஒட்டியது என்று கூறலாம். ஏனென்றால் எனது தாயும் தகப்பனும் வேலைக்காரர்கள். தகப்பனார் நான் அறியாத காலத்திலேயே இறந்து விட்டார். தாயார் நான் என்னையறிந்த காலத்திலேயே இறந்தான். பிறப்போடு ஒட்டிப் பிறந்த அந்த வேலைக்காரன் பதவி இன்னமும் என்னோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது. 

வேறு வழியற்ற நிலையில் ‘தலைவிதி’ என்று கூறிக் கொள்வது போல் நானும் எனது நிலையை ‘தலைவிதி’ என்று கூறிக் கொள்கிறேன். அப்படிக் கூறிக்கொள்வதில் ஏதோரு ஒரு வித மனத்திருப்தி இருக்கத்தான் செய்கின்றது. 

நான் இந்த வீட்டுக்கு வேலைக்காரனாக வந்து ஏழு வருடங்களாகின்றன. மாதம் நாற்பது ரூபா சம்பளம் கிடைக்கின்றது. எனக்கென்ன வெளிச் செலவு. என்னுடைய தனிப்பட்ட கொள்கைக்கோ ‘ஆசாபாசங்களுக்கோ’ இடமற்ற வாழ்க்கை தானே…! வீட்டில் மிஞ்சுகின்ற எச்சிலிகைளால் எனது வயிற்றை நிரப்பிக் கொள்வேன். வருஷத்தில் ஒரு முறையோ இரு முறையோ உடுப்பெடுத்துக் கொடுப்பார்கள். 

படுத்துறங்க எனக்கென்று அந்த வீட்டிலுள்ள ஒரு மூலையும்… சாக்குத் துண்டும்… 

இவைகளுக்கு மத்தியில் பணக்கார வீட்டு வேலைக்காரன் என்றொரு மதிப்பு. 

இது தான் எனது வாழ்க்கைச் சிறப்பு! 

நான் வேலை பார்க்கும் வீட்டுக்காரர் ஒரு டாக்டர். பெரும் பணக்காரர். ‘சந்தண மரம்… அதில் சாய்ந்த மரம் நான்! 

நான் நடந்து கொண்டிருக்கிறேன். 

விடிந்தால் பிறந்த தின விழா. 

இந்த டாக்டருக்கு ஒரே ஒரு மகன். இவன் பிறந்த வருடந்தான் நான் இங்கு வேலைக்கு வந்தேன். 

அவன் – புவிராஜ். 

நாளைக் காலை இவனது ஏழாவது பிறந்ததினம். அந்தவிழாவுக்குரிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

ஒரு டாக்டர் லட்சக்கணக்கான பணம்: பல ஏக்கர் நிலம்: செல்வாக்கானவர்… தவமிருந்து பெத்தபிள்ளை. சும்மா விடுவாரா? 

புவிராஜின் உடலில் போடப்பட்டிருக்கும் நகையின் பெறுமதி, உடையின் பெறுமதி, விளையாட்டுச் சாமான்களின் பெறுமதி… இவைகளைப் பார்த்து ஊர்ச் சனங்கள். 

“உதுகளை எல்லாம் சேர்த்தால் ஒரு குமரைக் கரைசேர்க்கப் போதும்…” என்று கூடப் பேசியிருக்கிறார்கள். என் காதிலும் விழுந்திருக்கின்றது. 

இதில் உண்மை இல்லாமல் இல்லை… அதை நான் உணராமலும் இல்லை. நான் எப்படி அந்த உண்மையை வாய்விட்டுக் கூற முடியும்… ‘மனம் பொறுக்காதவன்…’ என்று வேலையை விட்டு நீக்கி விட்டால்? 

…அரிசி ஆறு ரூபா… மா இரண்டு ரூபா… பாண் இல்லை… இருக்க இடம் இல்லை. தேத்தண்ணீக்கே வழியில்லாதவன் நான்… எச்சிலைப் போராட்டக்களத்தில் போராளியாகி… எங்களைப் போன்றவர்கள் வெல்ல முடியுமா?… தோல்வி தான்! 

…வயிற்றுப் பிரச்சினையோடு கொழுக்கி போட்டிருக்கும் ‘பெரிய இடத்துச் சமாச்சாரம்’… இப்படியான நேரங்களில் நான் மெளனியாகி விடுவேன். எனக்கேன் வீண் வம்பு என்ற எண்ணம். 

நடந்து கொண்டிருந்த நான் தலையைத் திருப்பி சூரியனைப் பார்க்கின்றேன். நாலு மணியிருக்கும். 

“விடியக்கு முன்னம் எல்லா வேலையையும் முடிச்சுப் போட வேணும்…” எனது வாய் முணுமுணுக்கின்றது. 

“டேய்… வாறவை எல்லாம் பெரிய மனிசர்… வாறவைக்கு ஒரு குறையும் வைக்கக்குடாது… எல்லாம் சரியாய் இருக்க வேணும்… உன்ரை பொறப்புத்தான்…” இப்படி டாக்டர் ஐயாவே கூறி விட்டார். எனக்கு உள்ளுரப் பயந்தான். புவிராஜின் பிறந்த தினத்தை ஆறு முறை மிக விமரிசையாகக் கொண்டாடிய அனுபவமும் உண்டு… இருந்தாலும் பெரிய இடத்து விஷயம்!… பயந்தான்! 

”நாளைக்காலை வேளையோடு எழும்பினால்தான் சமாளிக்கலாம்… ஒன்பது மணிக்கெல்லாம் சொந்தக்காறர் வந்திடுவினம்…” 

நான் எனக்குள் பேசிக் கொள்கிறேன். 

நான் நடந்து கொண்டிருக்கிறேன். 

“ஆர்…சரசுவா வருகிறாள்…” தூரத்தே வருகின்ற அந்தச் சிறுமியை இனங்கண்டு கொள்ள முனைகிறது என்மனம் எனது மனதில் படிந்திருக்கும் அவளது உருவ அமைப்போடு இப்போது தெரிகின்ற அமைப்புக்களை ஒப்பிட்டு நிதர்சனப்படுத்தி விட உள்ளுக்குள் முயற்சிக்கின்றேன். 

 “…சரசு… அவள் தான்…” எனது சிந்தனை நிதர்சனமாகின்றது. 

கையில் ஒரு பெட்டியை ஏந்தியபடி நடந்து வருகின்றாள். 

இவள் சரசு இருக்கிறாளே, இவளது பிறப்புக்கும் புவி ராஜாவின் பிறப்புக்கும் ஒரு தொடர்புண்டு. அதனால் சரசுவை எனக்கு நல்ல ஞாபகமுண்டு. 

புவிராஜா பிறந்த அன்று இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகி சரசு பிறந்தாள். இருவருக்கும் வயதில் மணிக்கணக்கில் தான் வித்தியாசம். 

வாழ்க்கை முறையில் புவிராஜா பஞ்சணையில் பால் குடிக்கின்றான். சரசு தேத்தண்ணிக்கும் வழியற்ற நிலை… இருவருக்கும் நாளை பிறந்த தினம்… ஏன்… இவன். சரசு கூட ஆறு பிறந்த தினங்களைத் தாண்டி விட்டாள்… அது அவளுக்கே தெரியுமோ…? என்னவோ…” 

“…ஏன் பிறந்தேன் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது… பிறந்த தினத்தையும்… அதற்கென்று ஒரு தனி விழாவையும் கொண்டாட முடியுமா?” பிறப்பில் ஏதோவொரு அர்த்தத்தைக் காண்பவன் தான் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறான்… எங்கடை பிறப்பு… அர்த்தமே இல்லாதது… தினசரி எச்சிலிலைப் போராட்டம் நடத்துகின்ற நமக்கு என்ன பிறந்த தின விழா வேண்டிக் கிடக்கு…” என்று இதே ஊரைச் சேர்ந்த அருணாசலம் கூறியது எனக்கு ஞாபகம் வருகின்றது. 

டாக்டர் ஐயாவின் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட இரு நூறு யார் தள்ளி சிவஞானத்தின் வீடு. சிவஞானத்தின் ஒரே மகன் தான் இந்தச் சரசு. இவன் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவன். இங்கு வந்து திருமணம் செய்த கொண்டு, இந்த ஊரிலேயே தங்கி விட்டான். திருமணபந்தத்தின் பின் ‘அருமையாக’ ஒரு வருடம் மலட்டு வாழ்க்கை நடாத்தி சரசுவுக்குத் தகப்பனானான். இன்னும் பிச்சைக்காரன்தான். ஆனால் தினசரி கையேந்தும் பிச்சைக்காரனல்ல. ஏதோ அன்றாடு உழைத்து அன்றாடு சீவியம் நடத்திக் கொள்பவன். 

“டேய்… உன்ரை டாக்டர் ஐயாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். இரண்டு மணித்தியாலங்கள் பிந்தி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு… காகத்துக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு… டாக்டர் ஐயாவைப் போலை சாக்கு நிறையக் கற்கண்டு வாங்கி ஊரையே இனிக்க வைக்க என்னாலை முடியாது… ஏதோ முடிஞ்சசு… இரண்டு றாத்தல் சர்க்கரை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன்…’ என்று சிவஞானம் அன்று கூறிக் கொண்டான். 

என்னதான் இந்தப்பங்களாவிலை நான் இருந்தாலும் என் ஏழை மனதைத் திறந்து கதைக்க இங்கு யார் இருக்கிறார்கள். லீவுள்ளபோதெல்லாம் நான் சிவஞானம் வீட்டுக்குப் போவேன். சில நிமிட நேரமாவது மனம் விட்டுக் கதைத்து ஆளையாள் தேற்றிக் கொள்வோம். அப்போதெல்லாம் ஏதோ அரைகுறை வயிறாவது சிவஞானத்துக்கு நிரம்பியிருக்கும்… இப்போது பஞ்சம், வறுமை… எப்படி பேச முடியும்… இரண்டோ மூன்று நாள் தான் ஆண் என்பதையும் மறந்து அழுது விட்டான். 

…தேறுதல் கூற முடியும்… தேற்றி விட என்னட்டை என்னகிடக்கு… நான் சாய்ந்திருக்கும் மரம்… நான் அங்கு போவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டேன். 

…நானும் தேத்தண்ணிக்கு வழியில்லாத பிச்சைக்காரன் தான்… இது அப்பட்டமான உண்மை. பலர் அதைச் சுட்டிக்காட்டிப் பேசியதுமுண்டு. ஏதோ உண்டு, உடுத்து வாழ்கிறேன்… ஆனால் விலைவாசி பற்றிக் கவலைப்படுவதில்லை…! ஒரு ரகமான பிச்சைக்காரன்! 

சிவஞானத்தை நினைக்கும் போது எனக்குக்கவலைதான் நீறு பூத்த நெருப்பாக என் உள்ளத்துக்குள்யே குமைந்து கொள்கிறேன். 

நாளை புவிராஜவுக்குப் பிறந்த தின விழா… இந்தச் சரசு… எப்படிக் கொண்டாட முடியும்… கேள்வியையும் கேட்டு அதற்குரிய பதிலையும் நானே கூறிக் கொள்கிறேன். உள்ளதைச் சொன்னால் வேதனை வேதனைதான்…ஏதோ சிறு சாந்தி! 

“சரசு…” 

“என்னம்மா…” அவன் என்னை மாமா என்று தான் அழைப்பாள். 

“ஐயா எங்கை…” 

“ஐயா வேலைக்குப் போனவர் என்னும் வெரயில்லை.” 

“நீ இண்டைக்கு என்ன சாப்பிட்டனி…” 

“கஞ்சி குடிச்சனான் மாமா…” பிஞ்சு மனம் வெக்க துக்கமின்றி அப்பழுக்கற்ற உண்மையைக் கூறுகின்றது. 

“எங்கை போட்டு வாறாய்…”

“அங்கை… அந்தக் கல்வீடு… அங்கை போய் தேங்காய்ப்பூ வாங்கிக கொண்டு வாறன்”. ஆவள் கையில் வைத்திருந்த பெட்டிக்குள் புளிஞ்சு பால் எடுக்கப்பட்ட பச்சையான தேங்காய்ப் பூ கிடக்கின்றது! 

“இது புளிஞ்ச களிவு தேங்காய்ப்பூ… இல்லையா சரசு…” 

“ஓம் மாமா…” 

“இது ஏன் சரசு” 

“அம்மா புட்டவிச்சவ… புட்டுக்குக் கறியில்லை… இந்தத் தேங்காய்ப் பூவைக் கொண்டு போய் சம்பல் போட்டு புட்டோடை தின்னலாம்…. நான் நெடுகலும் போய் வாங்கிறனான் மாமா…” 

“இது உன்ரை ஐயாவுக்குத் தெரியுமே” 

“ஐயாவும் வந்து இதைக் தான் தின்னுவர்… அவருக்குத் தெரியும்…” 

ஏன் இதயம் மட்டுமா கரைகிறது 

நான் திரும்பிப் பார்க்கிறேன். டாக்டர் ஐயாவின் மேல்மாடி வீடு தெளிவாகத் தெரிகின்றது…?… 

ஏன் இதயம் மட்டுமா கரைகின்றது. எத்தனை இதயங்கள் கரைகின்றன! 

விடிந்தால் புவிராஜ்வின் பிறந்ததின விழா. 

நான் நடக்கின்றேன். 

– ஈழநாடு, 27.04.1975. 

– மண்ணின் முனகல் (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சகம், கொழும்பு.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *