இடர்கள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 2,082

‘பசித்தவுடன் உண்பது, தூக்கம் வந்தவுடன் தூங்குவது, பிடித்த வேலைகளை மட்டும் பிறருடைய நிர்பந்தம் இல்லாமல் செய்வது, பிடித்தவர்களுடன் நேரம் பார்க்காமல் பேசுவது, உரிய காலத்தில் உரியதை பெற முற்படுவது என வாழ்வில் இயல்பாக நாம் செயல் பட சமுதாயக்கட்டமைப்பு முறை நமக்கு ஒத்துழைப்பதில்லை’ என நினைத்து கவலை கொண்டிருந்தான் மதன்.
‘ஒரு செயலும், செயலுக்கான பலனும், அதில் மனித நலனும் என அனைத்தும் சரியாக இயங்கும் நிலையில் இயற்கையின் படைப்பு இருந்த போதிலும், மனிதன் செயற்கையாக தன் விருப்பத்தை பிறர் மீது திணிக்க முற்படும்போது ஏற்படும் விளைவுகள் பாதகமாவதை யாரும் புரிந்து கொள்வதில்லை’ என வருந்தினான்.
படிப்பின் மேல் பிடிப்பு இல்லாமல் பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டாலும் ஓவியம் வரைவதில் வல்லவன். தந்தையின் மளிகைக்கடையில் வாடிக்கையாளர்கள் வராத நேரங்களில் ஓவியங்களை வரைவான். அதில் தான் பார்த்த அழகான பெண்களின் ஓவியங்களையே அதிகமாக வரைவான்.
எதிர் பால் ஈர்ப்பு இப்பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொது என்பதின் அர்த்தம் புரிந்திருந்தது அவனுக்கு. வாழ்வின் நகர்வுக்கு இவ்வகையான ஈர்ப்பு மிகவும் அவசியம் என்பதையும் தான் படித்த ஒரு நூல் வாயிலாகக்கற்றிருந்தான்.
ஓஷோவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவரது புத்தகங்களை விரும்பி படிப்பான். ‘அவர் மட்டும் தான் உண்மையை, மனித உணர்வுகளை, உள்ளபடியே வெளிப்படையாகச் சொன்னவர். மற்றவர்கள் போலியாக எழுதுகிறார்கள். போலியாக நடந்து கொள்கிறார்கள். போலியாகவே வாழ்கிறார்கள். பேசவும் செய்கிறார்கள். எழுத்துக்கும் நடை முறைக்கும் முரண்பாடுகள் நிறையவே உள்ளன’ என்பான்.
கஜுராஹோ சிற்பங்கள் அவனுக்கு மிகவும் பிடித்தவை.
வருடம் ஒரு முறை தனது சேமிப்பை செலவழித்து அங்கு சுற்றுலா சென்று ஆராய்ந்து வருவான்.
‘ஒருவர் தனக்குப்பிடிக்காத, தன்னால் இயலாத விசயத்தை துறக்கிறார் என்றால் அவ்விசயத்தை பிடித்த மற்றவர் எதற்காகத்துறக்க வேண்டும்? ஒருவர் மற்ற வேலைகளின் காரணமாக மதிய உணவு சாப்பிடமுடியாத நிலையில் இருக்கிறார் என்பதற்காக, வீட்டில் சமைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவை, வீட்டிலேயே இருப்பவர் ஏன் மற்றவரைப்போல சாப்பிடாமல் இருக்க வேண்டும்? மற்றவர்களது நிலையை வைத்து நமது நிலையை நிர்ணயம் செய்யும் போக்கை உலகம் மாற்றிக்கொள்ளாவிடில் முரண்பாடுகளால் குற்றச்செயல்கள் அதிகரிக்கும்’ என்பான்.
‘விலங்கினங்கள், பறவைகள், கடல்வாழ் இனங்கள் தங்களது நிலைப்படி இயல்பாக வாழ்கின்றன. ஏன் மனிதன் கூட அதிகம் படிக்காத முற்காலங்களில் சரியான வயதில் தேவைகளைப்பூர்த்தி செய்து இயற்கையை முழுவதும் சார்ந்தே இயல்பாக வாழ்ந்தான். அதனால் கூடுதல் வயதும் வாழ்ந்தான். நிறைவேற வாய்ப்புகள் இருந்தும் நிறைவேறாத நிலையில் ஏற்படும் எண்ணங்களின் பேரழுத்தம் உடலைச்சிதைத்து, வயதைக்குறைத்து விடுகிறது. எனவே சிறு வயதிலேயே பலர் மாண்டு போகிறார்கள்’ என அடிக்கடி நண்பர்களிடம் புலம்புவான்.
‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவு மட்டுமில்லை, படிப்பும் தான். பள்ளி, கல்லூரிகளில் தேர்வுக்காக மட்டுமே படித்தவர்கள் எதையும் முழுமையாக, இயல்பாக அனுபவிப்பதில்லை’ எனக்கூறுவான்.
இருபது வயதிலேயே திருமணம் செய்து கொள்ளத்தோன்றிய போது சட்டம் தடை போட்டது. சட்டப்படி வயதைக்கடந்த பின் பெற்றோர் தடை போட்டனர்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா…? உனக்கு மொதல்ல பொறந்த நாலு பொம்பளப்புள்ளைகளை ஊட்ல வெச்சுட்டு உனக்கு கண்ணாலம் பண்ண முடியுமா? உன்ற அப்பனே முப்பத்தஞ்சுல தான் என்னைக்கட்டிகிட்டாரு. உனக்கெதுக்கு சின்ன வயசுல இருபத்திமூன்லயே இத்தன அவசரம்?” என தாயார் ஆதங்கத்தில் கோபமாகக்கேட்டது மதனுக்கு அவமானமாகப்போய்விட்டது.
‘அவர்களுக்கும் எனக்கும் எதற்காக சம்மந்தப்படுத்துகிறார்கள்? ஒரு வயிற்றில் பிறந்திருந்தாலும், ஒரே வீட்டில் வசித்தாலும் உணர்வுகள் வேறு, வேறு. இந்த வயதில் தான் இது வரவேண்டும் என உடலைக்கட்டுப்படுத்த முடியுமா? நதிக்கு நதி நீரின் போக்கு வேறுபடுகிறது. ஒரு நதியில் ஆர்பரித்து வரும் வெள்ளத்தால் அணை உடையும் தருவாயில், பிற அணைகளோடு ஒப்பிட்டு அணையைத்திறக்காமல் விட்டால் அணை உடைந்து பல ஊர்கள் நாசமாவது போல் தான் நம் வாழ்வின் விருப்பங்களும், தேவைகளும்’ என்பான்.
‘தேங்கிக்கிடக்கும் நீர் குடிக்கப்பயன்படும் தன்மையை இழந்து விடும். இறைக்கும் கிணறு மீண்டும் சுரப்பதோடு, குடிக்கப்பயன்படும் சுத்தமான நீரையும் கொடுக்கும்’ என இலைமறைகாயாக அவன் பேசுவது பலருக்குப்புரியாது என்பதை அவன் தெரிந்திருக்கவில்லை.
ஒரு காரியத்தை முடியாது என்றால் ‘முடியும் என்பது உயிர் மூச்சு. முடியாதென்பது வெறும் பேச்சு’ என தத்துவமாகப்பேசுவான்.
‘ எனக்கு ஒரு பெண்ணைப்பிடித்திருக்கிறது. அவளுக்கும் என்னைப்பிடித்திருக்கிறது. உறவினரான அவளது பெற்றோரும் சம்மதிக்கின்றனர். திருமணம் செய்து கொள்வது தானே சரி? இவ்வுலகில் அனைத்தும் இருந்தும், எதுவும் இல்லாத நிலைக்கு தள்ளப்படும் வாழ்க்கை முறையை முன்னோர்கள் உருவாக்கியதின் குறைபாடு, முரண்களின் வெளிப்பாடு என்பதை ஏன் புரிந்து கொள்ளாமல், வாழாமல் உயிரோடு வெறுமனே பலரும் காலத்தைக்கடத்திக்கொண்டு இருக்கின்றனர்?’ என தனக்குத்தானே நினைத்து ஆதங்கம் கொள்வான்.
அனைத்து சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்து, சீர், சிறப்பு செய்து, அனைவருக்கும் குழந்தைகள் பிறந்த பின் எனக்குத்திருமணம் நடக்கும் போது வயது ஐம்பதைத்தொட நேரும். உடலும் மறுக்கும், உள்ளமும் வெறுக்கும். இரண்டும் ஏற்கும் காலமே இளமைப்பருவம். சொத்துக்கள் சோற்றைத்தரும், சுகத்தை பூரணமாகத்தருவதில்லை.சொத்துக்களால் பலனேதுமில்லை’ எனும் மனநிலையில் பண நிலையை வெறுத்தான்.
‘படிப்பு, பணம் இதெல்லாம் தேவையில்லை. பசிக்கிற போது சாப்பாடு தான் ஒரு மனுசனுக்கு வேணும்’ வெட்கப்படாமல் தந்தையிடமே பேசினான்.
“இத பாரு. பெத்தவங்க சொல்லற பேச்சக்கேக்கறதுன்னா கேளு. உன்ற சவுரியத்துக்கு மனசுல நெனைச்சதப்பண்ணோனும்னு நெனைச்சீன்னா நீ தனியா போய் வாழ்ந்துக்கோ. நாங்க உனக்கு இப்ப கண்ணாலம் பண்ணினோம்னு வெச்சுக்க ஊருலகம் காரித்துப்பிப்போடும். நாலு பொம்பளப்புள்ளைகள ஊட்ல வெச்சுட்டு ஆம்பளப்பையனுக்கு கண்ணாலத்தப்பண்ணலாமான்னு கேக்கறதோட, பொண்ணுகள ஆரும் பொண்ணு கேக்கவே வர மாட்டாங்க. தெரியுமா உனக்கு? ஊரோட, ஒறவுகளோட ஒத்துப்போனாத்தா வாழறதுல ஒரு அர்த்தமே இருக்கும். வாழவும் முடியும்” என தந்தை பேசியபோது மனம் உடைந்து போனான்.
அவரது நிலையில் அவர் பேசுவது சரி தான் என்றாலும் அது பிற்போக்குத்தனமாகவே, அறியாமையின் வெளிப்பாடாகவே மதனுக்கு தோன்றியது.
‘பள்ளிப்படிப்பு வேறு. ஞானம் வேறு. ஞானம் ஒரு மனிதனுக்குள் இயற்கையாகத்தோன்றுவது. படிப்பு எழுத்துக்களைப்படிக்கவும்,எழுதவும் பயன்படுவது’ என தமிழாசிரியர் ஒருமுறை பள்ளி வகுப்பில் சொன்னது ஞாபகம் வர, தனது பிரச்சினைக்கு தீர்வு அவரால் மட்டுமே சொல்ல முடியும் என்பதைப்புரிந்தவன் உடனே அவரது வீட்டிற்குச்சென்றான்.
“இத பாரு மதன். நீ சொல்லறதுலயும் நியாயம் இருக்கு. உன்னப்பெத்தவங்க பேசறதுலயும் நியாயம் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை இருந்தாலும் நாம தனித்து வாழ முடியாதுங்கிற காரணத்தால மத்தவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து, சமுதாய அமைப்புக்கேத்தமாதர வாழப்பழகித்தான் ஆகோணும். காலத்தை தியாகம் பண்ணித்தான் முரண்பாடுகளை வெல்ல முடியும். இடர்களைக்களைய முடியும். இதைத்தான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என நம்ம முன்னோர்கள் வகுத்து வாழ்ந்தாங்க. குடும்ப வாழ்க்கை முறைல ஏற்படற இடர்களை பாதகமா நினைக்காம சாணக்யமா அத சாதகமா மாத்திக்கனம். இல்லைன்னா மிருகங்களுக்கும், மனுசங்களுக்கும் வேறுபாடு தெரியாது.
ஒரு மிருகத்தால தனது பசிய, விருப்பத்த கட்டுப்படுத்த முடியாது. அதுக்கு மனிதர்களுக்கு போல சிந்திக்கிற அறிவு கிடையாது. உறவு முறை பார்க்காம, கால நேரம் பார்க்காம உணர்வுகளை தீர்க்கும் மிருகமா நாம வாழ முடியாது. வாழக்கூடாது” எனும் நீண்ட அறிவுரையைக்கேட்டதால் தெளிவான மனநிலைக்கு வந்தான் மதன்.
நமது எண்ணங்கள் சரியென்ற போதிலும், அதன் விளைவுகள் மற்றவர்களுக்கு பாதகமாகும் நிலையில் அவ்வெண்ணங்களை மறுபரிசீலனை செய்து, நாம் நன்மையடைவதோடு, பிறரும் தீமையடையாதவாறு பார்த்துக்கொள்வது மனிதனின் பரிணாம வளர்ச்சியால் பெற்ற பாடமாகக்கருதினான்.
குழப்பத்தில் இருந்தவனுக்கு சரியான பாதையைக்காட்டிய தமிழாசியர் மாதவனை கைகூப்பி வணங்கியவன், ‘முதலில் பெற்றோர் முன் இருக்கும் கடமைகளைச்செய்து முடிக்க உதவ வேண்டும், பின் தம் எண்ணத்தேவைகளைப்பூர்த்தி செய்ய முயல வேண்டும்’ எனும் யோசனையை மனதில் பதிவு செய்து கொண்டான்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
