ஆறுதல் பரிசு
கதையாசிரியர்: லங்காநாதர்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 74
எப்போதும் போல நண்பர்களாக கருத்துகள் பேசும் அப்பாவும் மகனும் இன்றும் பேசினார்கள்.
கணவனும் மகனும் நடத்திய இன்றைய விவாதம் மரியாவை மனம் நோகச் செய்தது.
முதலிடத்தில் வைக்கப்பட வேண்டியது யார்?
அம்மாவா? மனைவியா?
கணவன் அம்மா என்கிறார் மகன் மனைவி என்கிறான். மேலும் நொந்தாள் மரியா.
தங்கள் தங்கள் கருத்தை நிறுவி நிரூபிக்க ஆதாரங்கள் சேர்க்கிறார்கள்.
தங்களால் ஆனதையெல்லாம் பேசுகிறார்கள்.
மரியாவின் மனம் நோகத்தானே செய்யும்.
குறுக்கே புகுந்து வார்த்தையை விட்டாள்.
அவருக்கு அம்மா முதலிடம் உனக்கு மனைவி முதலிடம் என்றால், உங்களிடம் எனக்கு எந்த இடம்? கேள்வி கேட்டாள்.
முதலிடம்தான்!
இருவருமே ஏகமாய் சொன்னார்கள்.
முதலிடம்தான்!
எப்படி?…மரியா கேட்டாள்.
வார்த்தையால் அல்ல கண்களால் கேட்டாள்.
தாயை முதலிடத்தில் வைக்க மகனுக்கு அப்பாவும், மனைவியை முதலிடத்தில் வைக்க அப்பாவுக்கு மகனும்
பாடம் நடத்தியதுதான் அந்தப் பட்டிமன்றம் என்று புரியவைக்க, அவளை ஆளுக்கொரு கையால் அணைத்துக் கொண்டே விளக்கம் சொன்னார்கள்.
ஒருவரை ஒருவர் சரியாகப் புரியாமல் இருவரும் செய்த போர்தான் மரியாவின் தப்பானபுரிதலுக்கு காரணம் என்பது தெளிந்தபோது…
இருவருமே வென்றார்கள்.
மரியாவுக்கு கிடைத்தது ஆறுதல் பரிசு.
.