ஆத்ம திருப்தி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 340 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பூண்டுலோயாவை விட்டுப் போய் விடவேண்டும்…’ 

இப்படியொரு எண்ணம் அடிக்கடி என்று கூறு வதைவிட, நிரந்தரமாகவே எனது மனதில் பதிந்து போயிருந்தது உண்மை தான். பூண்டுலோயாவை விட்டுப் போய்விட வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் இருந்தாலும், பூண்டுலோ யாவை விட்டுப் போகத்தான் போகிறேன் என்று திட்ட வட்டமாகவும் என்னால் கூற முடியாதிருக்கின்றது. ஏனெனில், இங்கிருக்க வேண்டும் என்ற ஆசைகளும் சிலந்தி வலையில் விழுந்த பூச்சிகள் போல இடையிடையே அரித் துக் கொண்டுதான் இருக்கின்றன …… 

சண்டித்தன மனிதனாக இருந்த எனக்கு இப்படியொரு ஆசிரிய வேலை கிடைத்தது ஆச்சரியந்தான். எப்படிக்கிடைத்தது..? முயற்சியால் கிடைத்தது என்று சொல்லிக் கொள்வோமே…….! உத்தியோகம் வேண்டும் என்ற ஆவலில் நான் இதை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டு விட்டேன். தலையால் நடந்தாலும் உத்தியோகம் எடுக்கேலாது. இப்படி நமது கிராமப்புற மக்கள் பேசிக்கொள்வார்கள். அதை உணருமளவுக்கு நான் பக்குவப்பட்டிருந்தேன். 

‘பூண்டுலோயா’ இப்படியொரு பெயரை பேச்சு வாக்கில் கூடக் கேட்டதாக எனக்கு ஞாபகமில்லை. பூண்டுலோயாவிலுள்ள ஒரு மகாவித்தியாலயத்தில் நான் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் கடிதம் கிடைத்த அன்றுதான் பூண்டு லோயா என்ற பெயரை நான் உச்சரித்தேன். இவைகள் ஒன்றரை வருடங்கள் கடந்த நிகழ்ச்சியாகையால் எனக்குச் சரியான ஞாபகமுண்டு. 

மலை நாட்டு வாழ்க்கை என்ற தலைப்பில் இளமையைத் தளமாக வைத்துக் கட்டிய கற்கோட்டை நான் ஊரிலிருந்து பூண்டுலோயாவுக்குப் புறப்படும் போதே மானசீகமாகச் சுவைக்க ஆரம்பித்துவிட்டது. எல்லாம் மனந்தானே. இளமையும், அதி லுள்ள சுக துக்கங்களும் எனக்கில்லையா…. ? யாழ்ப்பாணத்தில் றெயின் ஏறி பொல்காவலச் சந்தியில் இறங்கி அனுபவசாலிபோல் வேசம் போட்டு நீளக்களிசானேடு தெரிந்த ஆங்கிலத்தைப் பேசி…. எப்படியோ பதுளை மெயிலில் ஏறி. வட்டக்கொட ஸ்ரேசனில் இறங்கி பஸ்ஸில் ஏறி பூண்டுலோயாவுக்கு வந்துவிட்டேன். 

இவ்வித்தியாலயத்தில் ஆசிரியனாக இருக்கின்ற எனது நண்பன் ஒருவன் எனது வருகையைக் கேள்விப்பட்டு எனக்குச் சில ஆயத்தங்களைச் செய்து வைத்திருந்தான். பிற சகல உதவி களையும் இவ்வித்தியாலய அதிபர் மனிதத் தன்மையோடு செய்து தந்ததையும் நான் நன்றியோடு இன்றும் நினைவு கூறுகின்றேன். 

நான் எனது வித்தியாலய அதிபரைச் சந்தித்ததும். அவர் தான் என்னை முதல் முறையாக மாஸ்ரர் என்று அழைத்ததும், நான் எனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டதும் எனது மனத்தோடு ஒன்றிப் போய்க் கிடக்கின்றது. 

வரண்ட பிரதேசமான யாழ்ப்பாணத்தில் பிறந்து… இருபத் தைந்து ஆண்டுகள் வாழ்ந்து முதல் முறையாக மலை நாட்டுக்கு வந்த எனக்கு இங்குள்ள இயற்கைக் காட்சிகள் எனது மனதுக்கு ரம்மியமானதாக இருந்தன. உருவான கரு, கருவிலேயே அழிந்து போவதைப் போல….. ஒரு மாதத்துக்குள் குளிர் பிரதேசத் திற்கு அருகதையற்றவனாகி நோயாளியாகிக் கஷ்டப்பட்டேன். 

நெஞ்சு வருத்தம் எனக்கு ஏற்கனவே இருந்திருக்கின்றது… இப்போது குளிருக்கு அது வெளிப்படத் தொடங்கியுள்ளதென டாக்டர் கூறினர். 

பிறகு என்ன…. இடமாற்றம் பெறுவதற்கான முயற்சி காண வேண்டியவர்கள் எல்லோரையும் கண்டேன்….. ஏற வேண்டிய படிகள் எல்லாம் ஏறினேன்… முடிவு..? நான் எடுத்த அத்தனை முயற்சி களும் மலட்டு முயற்சிகளாகிப் போய்விட… வெற்றி கரமாகப் பின்வாங்கி….. வருவது வரட்டும் என்று வீறாப்போடு துணிந்து விட்டேன்….. அடிக்கடி நோய், அடிக்கடி வீடு….. 

சில வேளைகளில் சுகதேகியாக இருப்பேன்….. அப்போது பூண்டுலோயா வீதியில் நண்பர்களோடு பவனிவருவேன். அப்போது இப்பகுதியிலேயே தொடர்ந்தும் வாழ்தாலென்ன என்ற சிந்தனை தோன்றும்… இத்தனை நோய்க்கு மத்தியிலும். எனது ஆத்மபலம் என்றுதான் கூறவேண்டும். ஏறாத மலைகளெல்லாம் ஏறி… பிடிக்க வேண்டிய சிநேகிதமெல்லாம் பிடித்துவிட்டேன்…! நோத் பூண்டு லோயா… சீன் எஸ்ரேற், டன்சினேன் எஸ்ரேற், கறே எஸ்ரேற், சுகும் பருவ எஸ்ரேற்… எனக்கு அறிமுகமில்லாத இடமே இல்லை யெனலாம்… அதேயளவு செல்வாக்கு மாணவர் மத்தியிலும் எனக் கிருந்தது… செல்வாக்கென்று கூறி ஆசிரிய மாணவ உறவுக்குக் களங்கம் ஏற்படுத்துவதை விட, மாணவர்களுக்கும் எனக்கு மிடை யில் தூய்மையானதும், அதேவேளை வலுவானதுமான தொரு உறவு இருந்தது என்று கூறிக் கொள்வதில் மனத்திருப்தியடைகிறேன். 

அதிபருக்குரிய “குவாட்டஸ்” பாடசாலையோடு இணைந்த தாகவே இருந்தது. நான் நோய்வாய்ப்படும் போதெல்லாம் அதிபர் தனது குவாட்டசில் என்னைத் தங்கவைப்பார்… எத்தனை நாட் கள்….. இரவிரவாக எனக்காகக் கண்விழித்திருக்கிறார்….. 

இவைகள் அனைத்தும் ஒன்றரை வருடங்களுக்குள்த்தான் நடந்தன. நான் ஆசிரிய கலாசாலைக்குத் தெரிவானேன்… எனது பூண்டுலோயா வாழ்க்கையின் இறுதி நாளின்று…. நான் மனதைக் திறந்து கூறுகிறேன். நான் நோயாளியாகவிருந்து வேதனைப்பட்டதை விட இன்று அதிகமாக வேதனைப்படுகிறேன். என்னையறியாமல் நான் மாணவர்களோடு ஏற்படுத்திக் கொண்ட உறவின் வலிமையை இன்றுதான் உணகிறேன். 

இப்படியும் ஒரு உறவா….? அதற்கு இப்படியும் ஒரு வலி மையா….? எனக்குள் நானாகி… வேதனைப்படுகின்றேன். 

அதிபரின் அலுவலக வாசல் நிலையோடு சாய்ந்தபடி நான் நிற்கிறேன்… “என்ன சேர் யோசிக்கிறியள்… கவலைப்படாதை யுங்கோ, இதெல்லாம் ஒரு றயில் பயணம் போல… எத்தனையோ பேரைச் சந்திக்கிறம் பேசிறம் பழகிறம் இறங்க வேண்டிய இடம் வந்தால் இறங்க வேண்டியதுதான்… அதுக்குப் பிறகும் அப்பிடி யொரு பயணம் வரும்…. இது தான் வாழ்க்கை தனது வாழ்க்கை அனுபவத்தத்துவத்தை சிம்பிளாய் கூறுகிறர் அதிபர். 

“இல்லைச் சேர்….. போக வேணுமென்டு அடிமனம் கூறினாலும்… இவ்வளவு நாளும் பழகிப் போட்டு இவ்வளவு மாணவரையும் பிரிஞ்சு…. அதை நினைக்க ஒரு மாதிரியாய் இருக்குச்சேர்……” 

“இன்னும் எத்தனையோ மாணவ உள்ளங்களைச் சந்திக்கப் போறியள்…. விட்டுத் தள்ளுங்கோ…. கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாய்த்தான் இருக்கும். புதிய உறவுகள் வந்து சேர எல்லாம் சரியாய்ப் போயிடும். என்னைப் பாருங்கோ நான் இஞ்சை வந்து ஐந்து வருசமாகுது. இதற்கிடையிலை எத்தினை ஆசிரியர்கள் வந்து போயிருக்கினம்…. போகயுக்கை அழுது குளறிக்கொண்டு தான் போவினம்…… பிறகு பிறகென்ன…. நான் யாரோ, நீயாரோ எண்ட மாதிரி…..” அதிபர் கூறுகிறார். 

“இப்பத்தையில் உலகம் அப்படித்தான் சேர்… இருந்தாலும் ஆழ்ந்த ஒரு உறவில் ஏற்படுகிற பிரிவும்…. அந்தப் பிரிவிலுள்ள வேதனையும் தவிர்க்க முடியாததுதானே சேர்…..” 

“அது சரி….. ஆனால் நாங்கள் நினைக்கிற போல எல்லா மாணவர்களும் இருக்க மாட்டினம்…. ஆசிரியனுக்கு கடைசியிலை மிஞ்சுவது ஆத்மதிருப்திதான் அதைக் கூட ஆயிரத்தில் ஒரு மாணவன் தான் ஈடேற்றி வைப்பான்….” அதிபர் அமைதியாகவே பேசுகின்றார். 

“எத்தனையோ ஆண்டுகள் ஆசிரியத் தொழிலிலை இருந்து வருகிற நீங்களே இப்படி அலுத்துக் கொண்டால்….” ஒன்றரை வருடங்கள் ஆசிரியராக இருந்த நான் ஆத்மதிருப்தியை எதிர் பார்க்க முடியுமா……?’. எனது பேச்சை கேட்டுச் சிரித்துக் கொண்ட அதிபர், மேசை மீதிருந்த றோசப் பூவைப் கையிலெடுத்துக் கொண்டு பாடசாலை வாசலை மருவியிருக்கும் சித்திவிநாயகர் ஆலயத்தை நோக்கி நடக்கிறார். 

அவரது தினசரிக் கடமைகளில் இதுவும் ஒன்று. நான் அங்கிருந்த புறப்பட்டு, ஆறாம் வகுப்பறையில் வந்தமர்கிறேன். 

”சேர்…… எப்பசேர் போறியள்…?” 

”நாளைக்குக் காலையிலை போறன்….” 

“பிறகு வரமாட்டீங்களா சேர்…..?”

“வரமாட்டன்…” 

“உங்கடை விலாசத்தைத் தாருங்கோ சேர்…” ஆறம் வகுப்பு மாணவர்கள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றனர். நான் சகலருக்கும் எனது வீட்டு முகவரியை எழுதிக் கொடுக்கிறேன். சில மாணவர்கள் ‘ஓட்டோகிறப்’ கொண்டு வந்திருந்தனர். அவைகளிலும் கையொப்ப மிட்டுக் கொடுக்கிறேன். நான் வீட்டுக்குக் கூட கடிதம் எழுதுவ தில்லை…. எழுதுவதில் எனக்கொரு சோம்பேறித் தனம்… அப்பிடி ருந்தும் இப்போது சகலருக்கும் எழுதிக் கொடுத்து விட்டேன். ஆறாம் வகுப்பிலுள்ள பெரும்பாலான மாணவர்கள் வெளியேறிவிட்டனர். 

வழக்கம் போல தனது அகன்ற விழிகளில் நாணந் தவள அடிமேல் அடிவைத்து வருகிறாள்…. ஐந்தாம் வகுப்பு மாணவி கிறேஸ். இந்த மாணவி மீது எனக்கு அலாதிப் பிரியம்…. வகுப்பில் முதலாம் பிள்ளை…… மணிமணியான அவளது எழுத்துகள்… விளையாட்டிலும் கெட்டிக்காரி… 

“என்ன கிறேஸ்…” 

“இந்தாருங்கோ சேர்” கடதாசியால் சுற்றிக் கட்டப்பட்ட ஒரு பிஸ்கற் பைக்கற்றை மேசைமீது வைக்கின்றாள். 

“இதெங்காலை..” 

“நான் வாங்கினனான் சேர்…” 

“நீங்கள் இனியும் இஞ்சைதான் படிக்கப் போறியளா…. இல்லாட்டி அப்பாவோடை கொழும்புக்குப் போகப் போறியளா….?” நான் கேட்கிறேன். 

“…. அப்பா வந்தாப் பிறகுதான் சேர் தெரியும்…..” 

“கவனமாகப் படிச்சு பெரிய ஆளாய் வரவேணும்….. சரியா..”

“சரி சேர்…..” அவள் போகிறள். 

“சேர்….” எட்டாம் வகுப்பு மாணவி ஜெனா வருகிறாள்

“எப்ப சேர் போறியள்…?. அவள் கேட்கிறாள். 

“நாளைக்குக் காலையிலை போறன்…” 

“கடைசியாய் போறியள்…. நிண்டு போங்கோவன் சேர்…..” 

“நிண்டு போகலாம்…..” அவள் எனது பதிலை எதிர் பார்க்காமல், குழந்தைகள் மண்ணில் அடுப்புச் செய்வதுபோல், அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூப்போடப்பட்டதொரு லேஞ்சியைக் கொடுக்கிறாள். 

“இது உங்களுக்கு எங்காலை ஜெனா….” 

“நான் உங்களுக்காகத் தைச்சனான் சேர்…” 

“தாங்ஸ்” 

“எங்கடை வகுப்பு இராசலட்சுமியும் ஒரு லேஞ்சி வைச் சிருக்கிறா…. உங்களுக்குத்தான்…. எங்களுக்கெல்லாம் சரியான கவலை சேர்.. 

“நான் போனலென்ன… இன்னுமொரு சேர் வருவார் தானே…. கவனமாகப் படிக்க வேணும்… நல்ல பிள்ளையாய் இருக்க வேணும்…” 

“சேர்… எங்களை மறந்து போயிடுவீங்களா சேர்…” அந்தப் பச்சை மண்… என்னிடம் கேட்கின்றாள். அவள் குழந்தைப் பிள்ளைத் தனமாகத்தான் கேட்கின்றாள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இருந்தும் எனது மனம் வேதனைப்படுகின்றது. 

நான் எனது வகுப்புக்கு ‘றிப்போட்காட்’ கொடுத்து எனது பிரியாவிடையையும் முடித்து விட்டேன். எல்லா வகுப்புகளிலும் றிப்போட்காட்’ கொடுக்கப்பட்டு மாணவர்கள் எல்லோரும் வழக்க மாகக் கூடுகின்ற இடத்தில் கூடுகின்றனர். கடந்த தவணை போல் அதிபர் குறிப்புரை கூறுகிறார். பிரிந்து போகின்ற ஆசிரியன் என்ற வகையில் நானும் சில சில குறிப்புரைகளைக் கூறுகிறேன். 

எனது உள்ளத்தில் உள்ளவைகள் எல்லாவற்றையும் கூறிப் பெரும் சொற்பெருக்காற்றிவிட்டேன் என்று அப்பட்டமான தொரு பொய்யைக் கூறும் நெஞ்சழுத்தக்காரனல்ல நான். தட்டுத் தடங்கி ஏதோ கூறி முடித்துவிட்டேன். தொடர்ந்து அதிபரும் சிலவற்றைக் கூறுகின்றார் கிட்டத்தட்ட பாடசாலை பன்னிரண்டு மணியளவில் நிறைவடைகின்றது. வழமைபோல் தவணை லீவின் ஆரம்ப நாள்… ஒரு மாதம் பிரிந்திருக்கப் போகின்ற மாணவர்களிடையேயுள்ள சிநேக பூர்வமான கலந்துரையாடல்கள்… ஊருக்குப் போகப் புறப்பட்டு பெட்டியும் கையுமாக நிற்கும் ஆசிரியர்களின் ஆரவாரம். 

இடமாற்றத்துக்கு முயற்சி செய்து…. குதிரைப் பந்தயத்தில் தான் காசு கட்டிய குதிரையை ஏக்கத்தோடு நோக்குவது போல்… இன்றாவது இடமாற்றக் கடிதம் வராதா?, என்ற ஏக்கத்தில் தபால் காரனின் வருகையை எதிர்பார்தது கால் கடுக்க காரியலய வாசலில் காத்து நிற்கும் ஆசிரியர்களின் பெருமூச்சுக்கள்….! 

ஆனால்…. நான் வெறுமையாக இருந்த ஆறம் வகுப்பு, மண்டபத்தில் வந்தமர்கிறேன். நாளைக்குக் காலையில் புறப்பட வேண்டும்…. எனது மனம் அரித்துக் கொண்டிருக்கின்றது…. 

“சேர்…” குரல் வந்த திசையைப் பார்க்கிறேன்…. நாலாம் வகுப்பு மாணவி அருந்ததி… நிற்கிறள். 

“அருந்ததி வாருங்கோ…. நீங்கள் வீட்டுக்குப் போக யில்லையா….” 

“…வீட்டை போட்டுத்தான் வாறன் சேர்…” அவள் கூறுகிறள்.

“பிறகேன் வந்தனீங்கள்…… நீங்கள் வந்தது உங்கடை வீட்டிலை தெரியுமா….?” 

“உங்களிட்டைத்தான் சேர் வந்தனன்….” மூக்கால் வழிகின்ற சளியை அடிக்கடி உள்ளிருத்து அடக்கிய வண்ணம், சிரித்துச் சிரித்துக் கதைக்கிறாள் அருந்ததி. 

“என்னிடமே…” 

“ஓம் உங்களிட்டைத்தான் சேர் வந்தனான்…. உங்களுக் கொரு பரிசு கொண்டு வந்திருக்கிறன் என்னண்டு சொல்லுங்கோ பாப்பம்…..” தனது இரண்டு கைகளையும் பின்னுக்கு வைத்துக் கொண்டு நிற்கிறாள். 

அவளின் கைகளுக்குள் ஏதோவொன்று இருக்கின்றது……

“பிஸ்கற்…..” 

“இல்லை….”

“லேஞ்சி” 

“இல்லை”….. நான் தோல்வி அடைவதில் அவளுக்கொரு மகிழ்ச்சி…… ஒன்பது வயது மாணவி… பச்சைமண்… 

“தேயிலை…” 

“இல்லைச் சேர்…. நீங்கள் தோத்துப் போனியள் சேர்…”

“அப்ப நீங்களே சொல்லுங்கோ..” 

“இந்தாங்கோ சேர்… ” ஏறத்தாழ இரண்டு றாத்தல் நிறை யுள்ள பச்சைக் கோப்பிக் கொட்டைகள் நிறைந்ததொரு கண்ணாடிப் பையை மேசை மீது வைக்கிறாள். 

“எங்கடை வீட்டிலை சின்னக் கோப்பி மரமொண்டு நிக்கிது…. ஒவ்வொரு நாளும் பொறுக்கிச் சேத்தனான் சேர்… நீங்கள் இடம்மாறிப் போறனெண்டு எங்களுக்குச் சொன்னனீங்கள். தானே….. நான் அம்மாவிட்டை எங்கடை சேர் மாறிப் போறராம் அவருக்கொரு பிஸ்கற் பைக்கற் வாங்கிக் குடுக்கப் போறன் காசு தாருங்கோவெண்டு அம்மாவிட்டைக் கேட்டன் சேர்… வீட்டிலை சாப்பாட்டுக்கே கஷ்ட மாயிருக்கு…. உதுக்கெல்லாம் காசுதர என்னட்டை இல்லை யம்மா…. சேர் நல்ல சேர்… நீங்கள் பிஸ்கற் பைக்கற் குடுக்காட்டியும் அவர் கோபப்படமாட்டார் எண்டு சொல்லி அம்மா அழுதவ சேர்… அம்மா பாவம் சேர்… காசு இருந்தால் எனக்குத் தந்திருப்பா….. அதுக்குப் பிறகுதான் சேர்… நான் ஒவ்வொரு நாளும் விடிய ஒழும்பி கோப்பிக் கொட்டை பொறுக்கிச் சேத்தனான் சேர்….” அவள் கூறுகின்றாள் தேனீ, தேனைச் சேர்ப் பது போல…. அருந்ததி….. எனது உடல் நரம்புகள் அத்தனையும் வெடித்து விடுவது போல் புடைத்து நிற்கின்றன…. 

“அம்மா என்னைக் காணயில்லையெண்டு தேடுவ சேர்… நான் போறன்… “அருந்ததி எனது பதிலைக்கூட எதிர்பார்க்காமல் ஓடுகிறாள். 

“ஆசிரியனுக்கு மிஞ்சுவது ஆத்மதிருப்திதான்… அதையும் ஆயிரத்தில் ஒரு மாணவன் தான் நிறைவேற்றுவான்…” என்று அதிபர் கூறிய வார்த்தைகள் முரல் மீன்களாய் எனது உள்ளத்தைக் குத்துகின்றன…. 

நான் ஆசிரியன்…. 

…ஆத்ம திருப்தி அப்டியென்றல்….

அருந்ததி…. ஆயிரத்தில் ஒருத்தியா…?

– ஈழநாடு, 24.06.1973.

– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *