ஆகி வந்த படம்
கதையாசிரியர்: சரோஜா ராமமூர்த்தி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2025
பார்வையிட்டோர்: 130
(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிருஷ்ண ஜயந்திக்கு இன்னும் ஒரு வாரமிருக்கும். சுகன்யா, வீட்டிலுள்ள புதிய கிருஷ்ணன் படம் ஒன்றைத் தேடி எடுத்து வைத்திருந்தாள். அந்த வருஷம் தான் அவளுக்குக் கலியாண மாயிற்று. வீட்டில் பெரியவர்கள் என்று யாருமில்லை. வீட்டின் எஜமானி என்ற பொறுப்புடன் பண்டிகைகள் ஒவ்வொன்றையும் விமரிசையாய்ச் செய்வதில், அவளுக்கு அபார ஆசை. கிருஷ்ணன் படம், புராதனமானது தான். பிரசித்தி பெற்ற ஓர் ஓவியன் வரைந்த படம். ஆனால், முகத்தில் தெய்விகக் களை, அழகு எதுவும் இல்லை. வெள்ளைக்காரக் குழந்தைக்கு நகை போட்ட மாதிரி என்று சொல்லி விடலாம். அந்தப் படம் கிடைத்ததில், அவளுக்கு ஒரு திருப்தி. என்றோ இறந்து போன தன் மாமியார் வைத்துப் பூஜித்த படம் என்ற பக்தியுடன், அதைப் பத்திரப் படுத்தி வைக்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அத்துடன், வீட்டு விவகாரங்ளை அதிகம் கவனிக்காமல் ஆபீஸுக்குப் போவதும், ஊர் சுற்றுவதுமாய் இருக்கும் தன் கணவன் முத்துக்கிருஷ்ணனிடம் படத்தைக் காண்பிக்க வேண்டு மென்று நினைத்துக் கொண்டாள்.
அண்டை அயலில் உள்ளவர்கள் எல்லோரும் மராத்தியர்கள். சுகன்யாவுக்கு ஹிந்தியோ, மராத்தியோ தெரியாது. ஜாடை மாடையாய் அவர்களுடன் ஒன் றிரண்டு வார்த்தை பேசுவாள்.
கணவன் வரும் நாழிகை ஆகிவிட்டதா என்று மணியைப் பார்த்தாள். அவன் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. தென்னிந்திய பட்சண வகைகளுடன், தான் அந்த ‘ஆகி வந்த பட’த்தை வைத்துக் கிருஷ்ண ஜயந்தி கொண்டாடப் போவதை, அண்டை அயலாரிடம் சொல்ல முடியாமல் இருந்தது, அவளுக்கு ஒரு வித வேதனையை அளித்தது. அது ஸ்திரீகளின் சுபாவம் போலும்!
மாலைக் காற்றுக் குறுகுறு என்று அடிக்க ஆரம்பித்தது. தாதரில் ஜன நெருக்கமற்ற ஒரு தெருவில், மாடியில் குடியிருந்தார்கள் அவர்கள். அழகிய ‘பால்கனி’. அதைச் சுற்றிப் படர்ந்திருக்கும் சம்பங்கிக் கொடியில் கொத்துக் கொத்தாய் மலர்கள். அவைகள் காற்றில் அசையும் போது, கம்மென்று மணம் வீசியது. பக்கத்து ‘பால்கனி’யில் மராத்தியப் பெண் பிரபா நின்று கொண்டிருந்தாள். அவள் காலேஜில் படிக்கிறவளாய் இருந்தாலும், சுமாராகத் தான் ஆங்கிலம் பேச வரும். வட இந்தியர்களே அவசியமான சமயங்களில் தவிர, ஆங்கிலம் அதிகம் பேச மாட்டார்கள். பிரபா, சுகன்யாவைப் பார்த்து, “இன்று எங்கேயும் வெளியே போக வில்லையா?” என்று கேட்டாள்.
“இல்லை, இன்னும் ஒரு வாரத்தில் கிருஷ்ண ஐயந்தி வரப் போகிறது. வீட்டில் ஒழிவே இல்லை. பூஜை செய்யப் படம் வேண்டுமே; பெட்டியைத் தேடினேன். ஒரு படம் அகப்பட்டது. மாமியார் பூஜை செய்த படம் போல் இருக்கிறது. என் கணவர் இருக்கிறாரே, ஊரிலிருந்து வந்த பெட்டியைக் கையால் கூடத் தொடவில்லை. நான் கேட்டதற்கு, ‘ஏதாவது ஓட்டைச் சாமான்கள் இருக்கும்’ என்றார். பார்த்தாயா? புருஷர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிகிறது?” என்றாள் சுகன்யா.
பிரபா, “ஆமாம்” என்று புன்னகையுடன் தலை அசைத்தாள். தெருக் கோடியில் முத்துக் கிருஷ்ணன் வருவதைப் பார்த்தாள் சுகன்யா. அவ்வளவுதான். பிரபாவின் புன்னகையைக் கூடக் கவனியாமல், உள்ளே போய் அவனை வரவேற்கத் தயாராய் நின்றாள்.
“பொழுது போகவில்லை, போகவில்லை என்று என்னையும், இந்த ஊரையும் பழித்தாயே; சிநேகித மெல்லாம் பலமாய் இருக்கிறதே” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் முத்துக்கிருஷ்ணன்.
“ஆமாம், நீங்களும்தான் ஊரிலிருந்து வந்த பெட்டிவில் ஓட்டைச் சாமான்கள் இருக்கு மென்று பழித்தீர்கள். இன்றைக்குத் தானே தெரிந்தது; திவ்யமான கிருஷ்ணன் படம், பெட்டியைத் தேடினதில் அகப்பட்டது” என்று சொல்லிக் கொண்டே, சுகன்யா படத்தை எடுத்து வந்து காண்பித்தாள்.
முத்துக்கிருஷ்ணன் நிதானமாகப் படத்தை வாங்கிப் பார்த்தான். பிறகு, ஒரு விதச் சிரிப்புடன், “இந்தப் படம் நன்றாக இருக்கிற தென்றா சொல்லுகிறாய்?” என்று கேட்டான்.
”நன்றாக இருக்கிறதோ இல்லையோ; அம்மா வைத்துப் பூஜை செய்து ‘ஆகி’ வந்த படம். அழகென்னவாம் அழகு! பகவான் எப்படியிருந்தால் என்ன ?” என்றாள் சுகன்யா.
முத்துக்கிருஷ்ணன், சுகன்யாவின் அருகில் சென்று உட்கார்ந்தான். ‘பிரைவேட்’ வாத்தியார் மாதிரி படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அதன் லட்சணங்களை விவரிக்க ஆரம்பித்தான்.
“இந்தா! அசடு மாதிரி பழங்கதை பேசுகிறாயே. புராதன சித்திரத்தில் இருக்கும் எந்த உயர்ந்த
அம்சமாவது இதில் இருக்கிறதா? பக்தர்கள், குழந்தைக் கண்ணனை அழகுத் தெய்வம் என்று புகழ்ந்திருக்கிறார்களே. அவனுடைய வாயைக் குமுதச் செவ்வாய் என்கிறார்கள். இந்தச் சித்திரம் சப்பை மூக்கும், வாயுமாய் இருக்கிறதே! வேறு படம் நல்லதாய் வாங்கினால் போச்சு” என்று முடித்தான்.
சுகன்யாவின் முகம் சுண்டிப் போயிற்று. முகத்தை ‘உர்’ என்று வைத்துக் கொண்டு ‘பால்கனி’யில் போய் நின்று விட்டாள். அடுத்த வீட்டு ‘பால்கனி’ யில் ஏதோ புஸ்தகம் படித்துக் கொண்டிருந்தான் பிரபா.
சுகன்யாவைப் பார்த்ததும், “வேலையெல்லாம் முடிந்ததா? உங்கள் மாமியாரின் படத்தைக் காண்பிக்கிறீர்களா?” என்று கேட்டான். அவன் கேட்டவுடன், சுகன்யாவுக்கு வஜ்ஜையாய்ப் போய்விட்டது. ‘சப்பை மூக்கும், வாயும். என்று தன் கணவன் பழித்தது உடனே நினைவுக்கு வரவே, “நாளைக்குக் காண்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, உள்ளே திரும்பி வந்தாள்.
2
அன்று ஞாயிற்றுக் கிழமை, பம்பாயிலிருக்கும் தென்னிந்தியர்களுக்கு, அது ஒரு பண்டிகை தினம் போலே, வீட்டில் பாயனத்தோடு, நண்பர்களுடன் சாப்பிடுவார்கள். இதெல்லாம் யுத்தத்துக்கு முன்பு.
சுகன்யா, சமையல் அறையில் ஏதோ வேலையாய் இருந்தாள். அன்று படத்தைப் பற்றி நடந்த விவாதம் மறுபடியும் துளிர் விட வில்லை. ஏனென்றால், முத்துக் கிருஷ்ணன் படத்தைப் பற்றி மறுபடி பேசவேயில்லை. சுகன்யாவும் ‘ஆகி வந்த படத்’தை வைத்துப் பூஜை செய்யும் எண்ணத்துடனேயே இருந்தாள்.
பக்கத்து அறையில் ‘லொட்டு லொட்’ டென்று சத்தம் கேட்டது.
“இந்தாருங்கள்! வீட்டுக்காரன் வந்தால், என்ன சொல்ல மாட்டான்? வீடு பூராவும் ஆணி அடிப்பதே வேலையாய்ப் போய் விட்டதே உங்களுக்கு” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அவள்.
முத்துக்கிருஷ்ணன், கையில் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு, அதன் ஆணிகளைக் கழற்றிக் கொண்டிருந்தான்! சுகன்யா திகைத்துப் போனாள். அவள் கண்களில் ஜலம் தளும்ப ஆரம்பித்தது. முகம் சிவக்க ஆத்திரத்துடன், “என்னா! இதென்ன வேலை? என்னைப் பார்த்தால் மனுஷியாகத் தோன்றவில்லையா உங்களுக்கு?” என்று இரைந்தாள்.
“என்ன நடந்துவிட்டது? என் இப்படிக் கத்துகிறாய்?” என்று கேட்டான் முத்துக் கிருஷ்ணன்.
“நாளைக்குப் பொழுது விடிந் தால் கிருஷ்ணஜயந்தி ஆயிற்றே; பூஜைக்கு என்ன பண்ணுவது?” அவளுடைய குரல் கம்மிப் போயிற்று. பக்கத்தி லிருந்த சோபாவில் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தாள்.
முத்துக்கிருஷ்ணன், வாய் பேசாமல், படத்தின் கண்ணாடி யையும் சட்டத்தையும் மட்டும் எடுத்துக் கொண்டு, காகிதத்தை ‘பால்கனி’ வழியாய்க் கீழே விட்டெறிந்தான்..சுகன்யா கோபத்தால் உள்ளும் புறமும் வெதும்ப, அவனை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.
மறுநாள் கிருஷ்ணஜயந்தி, காலையில் எழுந்தவுடன் பிரபாவைத் தேடிக்கொண்டு அவளது அறைக்குச் சென்றாள் சுகன்யா. பிரபா காலேஜுக்கு அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தவள், “வாருங்கள், இன்று பூராவும் வேலை சரியாய் இருக்கும் என்றீர்களே? ஏது, காலையிலேயே இந்தப் பக்கம் வந்து விட்டீர்கள்?” என்று கேட்டாள்.
அவன் அடிக்கடி கிருஷ்ண ஐயந்தியைப் பற்றியே நினைவூட்டிக் கொண்டிருந்தது, தான் அவளிடம் பெருமை அடித்துக் கொண்டதால், தான் எனபதை மறந்துவிட்டாள் சுகன்யா. அதற்குப் பதிலாக அவள் மீது இவளுக்கு அபாரமாகக் கோபம் வந்தது. அதை அடக்கிக் கொண்டு, “உங்களிடம் கிருஷ்ணன் ஏதாவது படமோ, பொம்மையோ இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“ஏன், உங்கள் பழய படம் என்னவாயிற்று?” என்று கேட்டான் பிரபா ஆச்சரியத்துடன்.
“அதுவா? அது அவருக்கு நன்றாய் இல்லையாம்; தூர எறிந்து விட்டார். அவரவர்களின் இஷ்டம். உங்களிடம் ஏதாவது இருந்தால்….”
“இந்தப் பொம்மைதான் என்னிடம் இருக்கிறது. டில்லிக்குப் போனபோது அடையாள மாக வாங்கினேன். சலவைக் கல்லால் செய்தது. முகம் எவ்வளவு லட்சணமாய் இருக்கிறது பாருங்கள். வேண்டுமானால் பூஜை செய்ய எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று அதை அவளிடம் கொடுத்தாள் பிரபா.
பொம்மையைக் கொண்டு வந்து ஹாலில் வைத்துவிட்டுத் திரும்பியபொழுது, முத்துக் கிருஷ்ணன் அவசரமாய் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தான்.
“நாளும் கிழமையுமாய் ராத்திரி பன்னிரண்டு மணிக்கு வராதீர்கள். தினம்தான் ஆபீஸ் தொல்லை இருக்கவே இருக்கிறது. சீக்கிரம் வருகிறீர்களா? படத்தைத்தான் தூர எறிந்தாயிற்று. வேறு படமாவது சுறுக்க வாங்கி விடுங்களேன்” என்று, கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள்.
“இன்று அவசரமாய்ப் புனாவுக்குப் போகிறேன். சீக்கிரம் வரமுடிந்தால் படம் வாங்கிக் கொண்டு வருகிறேன். அதுவும் உன் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது” என்று அவன் கன்னத்தில் அவன் லேசாகத் தட்டினான்.
குளித்து விட்டு மடியாய் இருக்கிறவளைத் தொட்டு என்ன விளையாட்டாம்!” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டாள் சுகன்யா.
முத்துக்கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே போனான்.
3
மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. பட்சணங்களை எல்லாம் ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் சுகன்யா. பிரபாவின் பொம்மை தான் அத்தனை பட்சணங்களையும் தின்பதற்கு அங்கே காத்துக் கொண்டிருந்தது. “இந்தமாதிரி இசை கேடான புருஷர்களை வைத்துக் கொண்டு என்ன பண்ணுகிறது?” என்று நினைத்துக் கொண்டே, பூஜையை ஆரம்பித்தாள்.
கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. முத்துக்கிருஷ்ணன் ஆயாசத்துடன் கோட்டைக் கழற்றி விட்டு, கையிலிருந்த ‘பாக்கிங் ‘கைப் பிரித்தான். சுகன்யா அதைக் கவனியாமல் அலட்சியத்துடன் பூஜையில் கவனம் செலுத்துக் கொண்டிருந்தாள். பூராவும் பிரித்து முடிந்தவுடன், “சுகன்யா!” என்று கூப்பிட்டான். சுகன்யா திரும்பிப் பார்த்தாள்.
“இந்தப் படம் எப்படியிருக்கிறது பார்” என்று அவளிடம் கொடுத்தான்.
சுகன்யா படத்தைப் பார்த்தாள். பார்த்ததும் அவள் முகத்திலே ஒருவித வியப்பும், உதட்டை விட்டு வெளிவர முடியாமல் தவித்த ஒரு புன்சிரிப்பும் தென்பட்டன. அது, முன்னொரு நாள் அவன் வீசியெறிந்த அந்த ‘ஆகி வந்த படம்’ தான்.
சுகன்யா, பின்பு அவனை விழித்துப் பார்த்து, “இதைத்தான் அன்று தூர எறிந்தீர்களே?” என்று கேட்டாள்.
முத்துக்கிருஷ்ணன் சிரித்தான்.
“ஆமாம், அன்று அதற்காக நீ ரொம்ப வருத்தப்பட்டாய். அதனால் ஆபீஸுக்குப் போகும் போது, தெருவில் கிடந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆபீஸில் வைத்திருந்தேன் பத்திரமாக” என்றான்.
குறைந்திருந்த சந்தோஷமெல்லாம் மறுபடி வந்துவிட்டது சுகன்யாவுக்கு. பூஜையை விரைவாக முடித்துக் கொண்டு ‘ஆகி வந்த பட’த்தைப் பிரபாவிடம் காண்பிப்பதற்காகப் பெருமையுடன் அதை எடுத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்றாள்.
– 1943, சக்தி இதழ்.
![]() |
சரோஜா ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூலை 27, 1921-ல் ராமச்சந்திரன், கிரிஜா இணையருக்குப் பிறந்தார். தந்தை திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். பதினொரு வயதில் தாயை இழந்தார். தந்தையுடன் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக 1940-ல் அத்தை, மாமாவுடன் பம்பாயில் குடியேறினார். எழுத்தாளர் து. ராமமூர்த்தியை ஜனவரி 28, 1943-ல் பம்பாயில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். மூன்று மகள்கள். நான்கு மகன்கள். மகள்கள் சரஸ்வதி, பாரதி, கிரிஜா. மகன்கள் ரவீந்திரன், ஜெயபாரதி,…மேலும் படிக்க... |
