அவளுக்கு அவசரம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 564
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரவு மணி ஏழு இருக்கும்.
அவள் கழுத்தில் மட்டும் அந்த மஞ்சள் சரடு தெரிய வில்லையானால், அவளைத் திருமணமானவள் என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு வாளிப்பான உடற் கட்டில், குறுகுறுப்பான கண்கள் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்க ஒரு விதமான கம்பீரம் கலந்த அழகில் அவள் உருவெடுத்திருந்தாள். எடுப்பான மஞ்சள் புடவையில் செண்பக மலர் போன்ற மேனி . எழும்பூர் ரயில் நிலையத்தின் வெளிப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்த தோரணையில், டிரைவரே அசந்து போய் விட்டார். அவள் கையில், ஒரு சின்னஞ்சிறிய சூட்கேஸ் மட்டுமே இருந்தது.
“இந்திரா நகர்க்குப் போப்பா,” என்று அவள் சொன்ன தும், ஆட்டோ ரிக்ஷா உறுமிக் கொண்டு புறப்படத் தயாரானது. அந்தச் சமயத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண் மணி அவளிடம் வந்து, “என்ன ராஜம், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி திடுதிடுப்புனு வர்றே? எங்கே போயிருந்தே?” என்று கேட்டான்.
“ஒரு கல்யாணத்துக்காகத் திருச்சிக்குப் போயிருந்தேன். இன்னைக்குக் கல்யாணம், குழந்தைக்குச் சுகமில்லன்னு ‘அவர் ‘ டெலகிராம் அனுப்பியிருந்தார் . அடிச்சிப் புரண்டு புறப்பட்டுட்டேன். உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா அக்கா?”
“அடேடே! ஐ ஆம் ஸாரி. போன வாரங்கூட நல்லாத் தானே இருந்தான்?”
ஆட்டோ ரிக்ஷாவில் உட்கார்ந்தவளின் கண்கள் கலங்கின. புடவைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டே , “அவரிடம் படிச்சிப் படிச்சிச் சொன்னேன். மேரேஜுக்கு நீங்க போயிட்டு வாங்கன்னு . அவர் கேட்கல. ஆபீஸ்ல ஏதோ ஆடிட்டாம். இப்போ என் குழந்தைக்கு எப்படி இருக்கோ.”
“டோண்ட் ஒர்ரி. ஏதாவது விபரீதமா இருந்திருந்தால் எனக்குச் சொல்லியிருப்பாரே. மன்சை வீணா அலட்டிக் காதே. டிரைவர் , தயவு செய்து கொஞ்சம் குயிக்கா இவளைக் கொண்டு விட்டுடுங்க.”
ஆட்டோ ரிக்ஷா கிளம்பிற்று. பின்னால் குரல் கொடுத்த பல்லவனுக்கு வழிவிடாமலே பறந்தது.
***
திருவான்மியூரில், எல்லாப் ‘பல்லவன்களும்’ உறுமிக் கொண்டிருந்தபோது, எழும்பூர் செல்ல வேண்டிய அந்த பஸ் மட்டும், அலட்டிக் கொள்ளாமல் நின்றது இத்தனைக்கும் அந்த பஸ்தான் முதலில் செல்ல வேண்டும். பிரயாணிகள் பொங்கி வழிந்து புட்போர்டிலும் தங்கினார்கள். கண்டக்டர் எல்லோருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டார் . டைம் கீப்பர் விசிலில் கத்திக் கொண்டிருந்தார். ஆனால் டிரைவரைக் காணவில்லை. பிரயாணிகளின் கண்கள் டிரைவர் ஸீட்டை மொய்க்க, கண்டக்டரோ விடாமல் விசிலடித்துக் கொண்டி ருந்தார். அந்த விசில், நல்லதோர் நாதஸ்வரத்தை மோச மான ஆசாமி வாசிப்பது போல் ஒலித்தது. என்னதான் விசில் விம்மினாலும், டிரைவர் பத்து நிமிட நேரம் கழித்தே வந்தார். உறிஞ்சிக் கொண்டிருந்த பீடியை வீச மனமில்லாமல் வீசி விட்டு, டிரைவர் தமது ஆசனத்தில் உட்கார்ந்து என்ஜின் ஸ்விட்சைப் போடப் போனபோது, கண்டக்டர் ஊதிக் கொண்டிருந்த விசிலை எடுத்துவிட்டு, டிரைவரிடம் “யோவ் அம்மாம்பேட்டை! உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக் காய்யா? இந்நேரம் பஸ் பெஸண்ட் நகர்ல இருக்கணும். எங்கேய்யா போயிருந்தே?” என்று கத்தினார்.
டிரைவர், பதிலேதும் பேசாமல், எஞ்சினை ஆன் செய்து, கியரைப் போட்டார் மனைவியிடம் அரிசி வாங்கப் பணம் கொடுத்ததையோ, அவள் பணம் போதாது என்று வாதாடி யதையோ, அவர் அவளிடம் ஆத்திரமாகப் பேசியதையோ இந்த விவகாரம் பத்து நிமிடத்தை விழுங்கி விட்டதையோ, அவர் அந்தப் பிரம்மசாரியான கண்டக்டர் இளைஞனிடம் சொல்ல விரும்பவில்லை.
எழும்பூருக்கும், திருவான் யூருக்கும் இடையே இருந்த அந்த ரோட்டில், ‘டாணா’ வளைவுக்கு அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரைக்கும், சாலையின் பாதிப் பகுதி ரிப்பேரில் இருந்தது. இரு முனையிலும் கட்டப்பட்டிருந்த சிவப்புக் கொடிகள் அந்த இருட்டில் தெரியவில்லை. காரணம் கார்ப்பரேஷன் லைட்டுகள் ‘மஸ்டர் ரோல் ஸ்கேண்டலுக்கு” வெட்கப்பட்டது போல் ஆச்சரியப்படத்தகாத முறையில் எரியாமல் இருந்தன. இரண்டு சிவப்புக் கொடிகளுக்கு மத்தி யில் காண்டாமிருகம் போல் காட்சியளித்த ரோலர் மிஷின் ஒரு பகுதியை அடைத்திருந்தது. அதை ஒட்டினாற் போல் ஜல்லிக் கற்களையும், சிமெண்டையும் கலக்கும் மிக்ஸர் யந்திரம் யானைக் குட்டி மாதிரி , நான்கு மீட்டரை அடைத் திருந்தது. போதாக்குறைக்கு , தார் நிறைந்த டிரம்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. இவற்றைச் சுற்றிச் சம தளத்தில் இருந்து அரையடி வரிசையாகத் தணிந்திருந்த கிளறப்பட்ட அந்தச் சாலையில் பெரிய கற்கள் குவிந்து கிடந்தன. இடையிடையே , ஜல்லிக் கற்கள், குவியல் குவிய லாகக் கிடந்தன. இரண்டு பஸ்கள் தாராளமாகச் செல்லக் கூடிய அந்தச் சாலையில், இப்போது ஒரு பஸ் மட்டுந்தான் கூனிக் குறுகிச் செல்ல முடியும்.
சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டென்ட்டில் சிமெண்ட் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் மேல் துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்திருந்த மேஸ்திரி கன்னையன் வேலையாள் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந் தான். சாலையின் இரண்டு பகுதிகளிலும் லாந்தர் விளக்கு களை வைப்பதற்காக, அவன் மந்தவெளியில் இருந்து அங்கே வந்திருந்தான். வேலை ஆரம்பமாகி ஒருவாரம் ஆகி விட்டது. இன்றைக்குத்தான் வண்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விளக்குகளை அவனால் வைக்க முடியும். ‘மென் அட் ஒர்க்’ என்ற போர்ட், பகலில் கூடச் சரியாகத் தெரியாது.
வேலை துவங்கியவுடனே , விளக்குகளைப் பொருத்து வதற்காக, இரண்டு கம்பங்களை நடவேண்டும் என்று ‘ஒர்க் அஸிஸ்டெண்டிடம் ‘ அவன் சொல்லியிருந்தான். அவர், கண்டிராக்டருடன் ‘பிஸியாக’ இருந்ததால், அவன் சொல் வதைச் சரியாகக் கேட்கவில்லை மறுநாளும் விடாமல் கேட்டான் கன்னையன். அவர் ஆபீஸிலே போய் இரண்டு கம்புகளை எடுத்து வருமாறு சொன்னார். அவன் ஆபீஸிற் குப் போய் , கம்புகளை எடுக்கப் போன போது, விளக்கு களுக்கு மண்ணெண்ணெய் வாங்க சம்பந்தப்பட்ட சூபர்வை ஸரிடம் பணம் கேட்டான். அவர் , முறைப்படி விண்ணப்பிக் காமல் ஏடாகூடாமாய்க் கேட்பது முறையல்ல என்று முறைத் தார். மறுநாள், அதற்கான நோட்டை எழுதி, ஒர்க் அஸிஸ் டெண்ட்டிடம் கையெழுத்து வாங்கச் சென்றபோது, அவர் “பிரெஞ்சு லீவில்” போய்விட்டார்.
இன்றுதான், கன்னையனுக்கு இரண்டு கொம்புகளும், இரண்டு லாந்தர் விளக்குகளும், மண்ணெண்ணெய் வாங்குவ தற்குரிய கன்டின்ஜெண்ட் பணமும் கிடைத்தன.
வேலையாட்களை வைத்து, கொம்புகளை நட்டுவிட் டான். லாந்தர் விளக்குகளில் மண்ணெண்ணெயை ஊற்றி விட்டான். மீதியிருந்த எண்ணெயில் திரிகளைத் தேய்த்து, லாந்தர் விளக்குகளில், அவற்றை ஏற்றினான், விளக்கைப் பொருத்துவதற்காக வத்திப் பெட்டியை எடுத்தான்.
***
ஆட்டோ ரிக்ஷா ஸ்டர்லிங்ரோடிற்கு வந்துவிட்டது. இந்திரா நகரை நெருங்க நெருங்க , ராஜம் தாய்ப் பாசத்தின் நெருக்கம் தாங்க முடியாமல் தவித்தாள். குழந்தைக்கு இப்போ எப்படி இருக்கோ ? அவரே ஒரு குழந்தை . அவர் எப்படி கவனிச்சாரோ? “சீக்கிரமாப் போப்பா” என்றாள். டிரைவர் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நீங்க டபுள் சார்ஜ் கொடுக்கணும். இந்திரா நகரலே சவாரி கிடைக்காது. எம்டி யாத்தான் வரணும்…”
“என்னப்பா இது. அநியாயமா இருக்கே. முதல்லே நீ கேட்டிருந்தால் நான் பஸ்ல போயிருப்பேனே….”
“இந்திராநகர் போறதுன்னா டபுள் சார்ஜ் வாங்குறது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். உங்களுக்கும் தெரியு மோன்னு கம்முன்னு இருந்துட்டேன்.”
“அதெல்லாம் முடியாது. மீட்டர் சார்ஜுக்கு மேலே ஒரு நயா பைசாகூடக் கொடுக்க முடியாது.”
“இப்படிச் சொன்னா எப்படிம்மா? எல்லோரும் வாங் கறததான் நானும் கேட்கிறேன். ‘புச்சா’ ஒண்ணும் கேட்கல”.
“அந்தக் கதையே வேண்டாம். உங்களையெல்லாம் என்ன செய்யணும் தெரியுமா?” ராஜத்திற்கும் டிரைவருக்கும் விவாதம் சூடேறிக் கொண்டிருந்தது. என்றாலும் டிரை வரின் பழக்கப்பட்ட கைகள், இயல்பான முறையில் ஆக்ஸ்ல ரேட்டரை அழுத்த அந்த ஆட்டோ ரிக்ஷா கரடி மாதிரி கத்திக்கொண்டே எட்வர்ட் எலியர்ட்ஸ் ரோடில் தக்காரு மிக்காருமின்றி ஓடிக் கொண்டிருந்தது.
திருவான்மியூரில் புறப்பட்ட அந்த பஸ், இந்திரா நகரில் வந்து நின்றது. ஏற்கனவே லேட்டாகி விட்டது. எழும்பூர் டைம் கீப்பர் சரியான எமன். டிரைவரை மட்டு மில்லாமல், கண்டக்டரையும் சேர்த்துத் திட்டுவார். இந்தச் சமயத்தில் ‘ஃப்ரண்ட் டோர் ‘ வழியாக ஏறிய பிரயாணியை நோக்கி, ‘ஸார் படிச்ச நீங்களே இப்படிப் பண்ணினால் எப்படி ஸார்? இறங்கி வந்து இந்த வழியாய் ஏறுங்க” என்று கண்டிப்பு கலந்த வினயத்துடன் கூறினார். ஆனால் ஏறிய பிரயாணி ஒரு விடாக் கண்டன். கண்டக்டர் சொன்னதைக் காதில் வாங்காத கல்லுளி மங்கன் மாதிரி பேசாமல் நின்று கொண்டிருந்தார். கண்டக்டருக்கு இது ஆத்திரத்தைக் கொடுத்தது. புறப்படத் தயாரான வண் டியை விசிலடித்து நிறுத்தினார். பின்னர், “ஸார்…. நீங்க அங்கிருந்து இறங்கி இங்கே வந்து ஏறப் போறீங்களா இல்லியா?” என்றார்.
ப்ரண்ட் வழி பிரயாணி, அசருவதாகத் தெரியவில்லை .
“என்னப்பா பொல்லாத சட்ட திட்டமெல்லாம் பேசுறீங்க. நீங்க மட்டும் யோக்கியமா நடந்துக்கிறீங்களா?”
கண்டக்டர் கண்கள் சிவந்தன.
“யோவ் அனாவசியமா ஏய்யா பேசற? உன்னால அங்க இறங்கி இங்க வந்து ஏற முடியுமா முடியாதா?”
“இறங்கவும் முடியாது, ஏறவும் முடியாது. நீ என்ன வேணுமானாலும் பண்ணிக்கோ”
“நல்லதாப் போச்சு. நீ இறங்காட்டி வண்டி நகராது.”
தகராறு தீர்ந்து, ஃப்ரண்ட் ஆசாமி இறங்கி பின்வழியாக ஏறுவதற்குள் ஐந்து திமிடம் வீணாகிவிட்டது.
“குயிக்கா போண்ணே. டைம் கீப்பர் கத்துவான்” என்று கண்டக்டர் கத்தினார். திருவான்மியூரில் தாமதமான பத்து நிமிடத்தையும், இந்திரா நகரில் ஏற்பட்ட ஐந்து நிமிடத்தையும் ஈடுகட்டும் வகையில் டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். ஸ்பீடா மீட்டர் எழுபது கிலோ மீட்டரைக் காட்டியது. டபுள் விசில் ஒலிக்க, உள்ளே இருந்த பிரயாணிகள் களிக்க, பஸ் ஸ்டாண்ட்களில் நின்ற பிரயாணிகள் முகம் சுளிக்க, அந்தப் பல்லவ பஸ், ‘அப்பல்லோ’ வாகிக் கொண்டிருந்தது.
***
மேஸ்திரி கன்னையன், இரண்டு லாந்தர்களிலும் திரிகளைப் பற்ற வைத்து விட்டான். சிம்னிகளைப் பொருத்தி விட்டு, இரண்டு விளக்குகளையும் ஒவ்வொரு கைகளிலும் பிடித்துக் கொண்டு எழுந்தபோது, ஒர்க் – அஸிஸ்டெண்ட் வெங்கடசாமி, வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வந்து இறங்கினார்.
“கன்னையா, ஜே.இ (ஜூனியர் எஞ்சினீயர்) உன்னை மந்தவெளில் இருக்கிற லாண்டிரிக் கடையில் போயி துணியை வாங்கிக் கொடுக்கச் சொன்னார் …இந்தா பில்லு.”
“நாளைக் வாங்கிக்கு கொடுத்துடுறேனே -“
“நோ, நோ. இப்பவே கையோட வாங்கிக் கொண்டு வரச் சொன்னார் . அவரும் அவரு ஒய்பும் காலையில் அஞ்சு மணிக்கே கோயம்புத்தூர் போறாங்களாம்…… ஜல்தியா போ.”
மேஸ்திரி கன்னையன் யோசித்தான். ஜே.இ. மந்தவெளி யில் தான் இருக்கிறார். கொஞ்சம் நடந்தால், அவரே லாண்ட்ரி கடையில் போய் துணியை வாங்கியிருக்கலாம். அடையாறி லிருக்கும் இவன் , மெனக்கிட்டு போய் அலைய வேண்டிய தில்லை. அவ்வளவு ஏன்? லஸ்ஸில் இருக்கும் இந்த ஒர்க் அஸிஸ்டெண்டே துணிகளை வாங்கிக் கொடுத்திருக்கலாம். நோ… நோ…. அவர் , ஓர்க் – அஸிஸ்டெண்ட். அவருடைய ‘ஸ்டேடஸுக்கு’ ஜே.இ.க்கு டிக்கெட் புக் பண்ணிக் கொடுக்கலாம். லாண்டரி பில்லை வேண்டுமானால் வாங்கி வரலாம். துணிகளைக் கொண்டு போய் கொடுக்க முடியுமா? அது கன்னையன் வேலை.
கன்னையன், லாந்தர் விளக்குகளைக் கம்பங்களில் பொருத்திவிட்டுப் போகலாம் என்று நினைத்தவன் போல், லாண்டரி பில்லைச் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டு , ஓர்க் – அஸிஸ்டெண்ட் அதற்காக கொடுத்த பணத்தை நிஜார் பைக்குள் திணித்து விட்டு, கீழே வைத்த லாந்தர் விளக்குகளை மீண்டும் எடுக்கப் போனான். ஓர்க்… அஸிஸ் டெண்ட் கத்தினார்.
“யோவ், விளக்கைக் கீழ போடுய்யா, கடையை மூடிறப் போறான்”
“லைட்டைப் போட்டுட்டுப் போறேன் ஸார்”
“இதுக்குத் தாய்யா உன்னை முண்டங்கிறது. விளக்கை அப்புறமா வந்து போடய்யா…”
***
கன்னையன் லாந்தர் விளக்குகளை அணைத்துவிட்டு ஓர் ஓரமாக வைத்தான். பிறகு, மடமடவென்று மந்தவெளியை நோக்கிச் சைக்கிளை மிதித்தான்.
ஆட்டோ ரிக்ஷா ‘டானா’ வளைவை நெருங்கிக் கொண் டிருந்தது. ஆக்ஸிலேட்டர் எழுபதைத் துரத்திக் கொண் டிருந்தது. அதிகமாக எவ்வளவு கொடுப்பாள் என்று டிரைவர் மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். குழந்தையைப் பார்க்கப் போகிறோம் என்ற இனிய எதிர்பார்ப்பும், எப்படி இருக்கிறதோ என்ற அச்ச உணர்வும் பின்னலிட , ராஜம் இருக்கையின் நுனியில் உட்கார்ந்து, இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.
***
பல்லவ பஸ், வேளாங்கண்ணி ஆலயத்திற்கருகே வந்து விட்டது. “டயமாவுது, கட்டை, வண்டியை ஓட்டுகிற மாதிரி ஓட்டினா… எப்படி?” என்லு கண்டக்டர் கத்தினார். டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். என்ன, பொப்பு! எட்டு மணி நேரம் நாயா வேலை பார்த்தாலும் நல்லா சாப்பிட முடியுதா? பிள்ளிங்கள நல்ல ஸ்கூல்ல சேர்க்க முடியுதா? போவட்டும். வீட்டுக்காரிக்கு ஒரு சேலை வாங்க முடியல . ‘ஒன்னரை ரூபாய்ல எப்படி சமையல் பண்றது! உனக்கு மூளை இருக்கா?’ ன்னு கேட்டாளே ஒரு கேள்வி! கேட்கக் கூடிய கேள்வியா இது?’ கேட்டாளே – நாசமாப் போற பொழப்பு! இந்த டிரைவர் வேலைக்கு…என்றைக்கு கும்புடு போடுறோமோ அன்னிக்குத்தான் குடும்பம் உருப்படும்!
டிரைவரின் மன வேகத்திற்கும், அதன் குழப்பத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில், அந்த பஸ், வேகமாகவும் அங்கு மிங்கும் ஆடிக் கொண்டும் ஓடியது.
***
லாண்டரித் துணிகளைக் கொடுத்துவிட்டு, லாந்தர் விளக்குகளை போடுவதற்காக மேஸ்திரி கன்னையன் திரும்பி வந்தபோது, சிவப்புக் கொடி கட்டிய இடத்தில், ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்ததைக் கண்டான். அந்த மையிருட்டில், பஸ்ஸின் விளக்கு , மின்னல் போல் ஒளி விட்டது.
கன்னையன் விளக்குகளை, எடுக்காமல், அங்கே ஓடினான்.
ஆட்டோ ரிக்ஷா, ரோலர் எந்திரத்தில் மோதி நொறுங்கிக் கிடந்தது. ஆட்டோ ரிக்ஷா டிரைவர், வாயில் ரத்தம் கசிய, அரை மயக்க நிலையில் கிடந்தார்.
ராஜத்தின் தலை நசுங்கி, ஐந்து கஜ தூரத்திற்கு அப்பால் மூளை சிதறிக் கிடந்தது. பஸ்ஸின் முன் சக்கரம் அவள் அடி வயிற்றில் ஏறி செம்மண்ணும், செந்நீரும் கலக்க, இயக்கம் இல்லாத தயக்க நிலையில் நின்றது. பெரும்பாலான பஸ் பிரயாணிகள், அந்தக் கோரத்தைக் காணச் சகியாதவராய், வேறு புறமாகத் திரும்பி நின்றார்கள். ஆனால் ஆட்டோ ரிக்ஷா, அந்த ரோலரில் மோதிய வேகத்தில் பஸ்ஸிற்கு முன்னால் அவள் தூக்கி எறியப்பட்டதையும், அதற்குப் பின் நடந்ததையும், அவர்களால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. சுமந்து பெற்ற பிள்ளையைப் பார்க்க நினைத்தவளின் வயிறு, அந்த பஸ் சக்கரத்தைச் சுமந்து கொண்டிருந்தது.
– பூநாகம் (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1993, கங்கை புத்தக நிலையம், சென்னை.