அவரால் முடிந்தது – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 6,178 
 
 

மண்டை பிளக்கும் வெய்யில் .

ரேஷன் கடையில் விலையில்லா அரிசி வாங்க 80 வயது நாராயணசாமி வரிசையின் கடைசியில் நின்றார்.

தும்பையாய் வெளுத்த தலை. பஞ்சடைந்த கண்கள். பழுப்பேறிய வேட்டி. கசங்கிய சட்டை. ஒரு கை ஊன்றுகோலை தாங்கியிருக்க மறு கையில் ரெக்ஸின் பை. வறுமையான வயோதிகத்தின் நடுக்கம் கைகளில் தெரிந்தது. முன்னாள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்களால் அளந்தார்.

தனக்கு பின்னால் திடீரென்று முனகல் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தார். இலவச அரிசிக்காக வந்து நின்ற நிறைமாத கர்ப்பிணி.

பேருந்தில் வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இடம் கொடுத்து உதவிய தன் பால்ய காலத்தை நாராயணசாமியின் மனது அசை போட்டது.

‘ஏன் இப்படி பொது ஜனங்கள் சுயநலக்காரர்கள் ஆகி விட்டார்கள்’ என்ற கேள்வி எழுந்தது அவருக்கு.

‘வீட்டில் உள்ளவர்களே முதியவர்களையும் கற்பிணிகளையும் இரக்கமின்றி பொதுவெளிக்கு அனுப்பும் போது பொது ஜனங்களை எப்படி குறை சொல்ல முடியும்?…’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டார்.

‘மாறணும் எல்லாம் மாறணும்’ என்று தனக்குள் ஆக்ரோஷமாக சொல்லிக்கொண்டார்.

“நீ என் இடத்துக்கு வாம்மா…”என்று சொல்லி நாராயணசாமி அந்த கர்ப்பிணியின் பின்னால் கியூவில் நின்றார்.

ஏதோ அவரால் முடிந்தது.

– கதிர்ஸ் – மார்ச் (16-31-2021)

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *