அவனும் சில வருடங்களும்
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 67
(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21
அத்தியாயம் – 16

ஏப்ரல் 1987.
இந்த வருடம் ராகவனின் வகுப்பு மாணவர்கள் ஜேர்மனி யில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது என்று கல்லூரி அதிபர் அறிவித்தார்.
உலக நாடுகளிலிருந்து வரும் கலைப்படைப்புக்களைப் பார்க்கலாம்; வித்தியாசமான தயாரிப்பாளர்களைச் சந்திக்கலாம்; அவர்களின் கருத்துக்களை கேட்கலாம் என்ற ஆவலில் மாணவர்கள் உற்சாகமாகத் திரிந்தார்கள்.
ஒரு பின்னேரம் டெவீனாவின் வீட்டுக்குத் தற்செயலாகப் போக வேண்டி ராகவனுக்குச் சந்தர்ப்பம் வந்தது.
டெவீனாவின் பல ஆசைகளில் ஒன்று ஹாம்ஸ்ரெட் ஹீத் என்ற பிரபலமான பார்க்கில் மணிக்கணக்காக நடந்து திரிவது.
சித்திரை மாதத்தில் இளம் தளிர்கள் சிலிர்த்தது வளர்ந்த மரங்கள் மெல்லிய சூட்டில் தலை நிமிர்ந்து நின்றன. பனியிலும் குளிரும் படாத பாடுபட்ட பூமித்தாயைச் சூரியன் தன் இளம் சூட்டினால் மெல்ல அரவணைத்தான்.
பறவைகள் மெல்லிசை பாடின. மனிதர்கள் ஓவர்கோட் டுக்களிலிருந்து தங்கள் முகத்தை நிமிர்த்திருந்தார்கள்.
டெவீனாவுடன் பார்க்கில் நடந்து பல விடயங்களையும் பேசிவருவது. சந்தோசமான விடயம்.
“கார்ல் மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்தபோது இந்த பார்க்கில் காலையில் நடப்பது பழக்கமாக இருந்தாம்” இவள் இப்படிச் சொல்லிக் கொண்ருக்கும்போது லேபர் பார்ட்டியின் முன்னாள் தலைவர் மைக்கல் புட் ஒரு பக்கமும் பிரபல ஆசிய டி.வி. தயாரிப்பாளர் ராறிக் அலி இன்னொருபக்கமும் மெல்லிய ஓட்டத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
“அப்பா என்னை ஏதாவது உடற்பயிற்சி செய்யச் சொல்லி நச்சரிப்பார்” டெவீனா சொன்னாள்.
தாயைப் பற்றிச் சொல்லுமளவுக்குத் தகப்பனைப் பற்றி இவள் பேசுவதில்லை என்று தெரியும். தகப்பனைப் பற்றிப் பேசினால் தகப்பனின் கேர்ள் பிரண்டையும் பற்றிப் பேச வேண்டி வரலாம் என்று அவரைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான்.
“சரியான களைப்பு. வீட்டுக்குப் போய்க் காப்பி சாப்பிட லாம்” அவனையிழுக்காத குறையில் இழுத்துக் கொண்டு போனாள்.
உயர்ந்த மேல்வர்க்க ஆங்கிலேயரின் வீட்டுக்கு அவன் போனது அதுதான் முதற்தடவை, ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டான்.
ஆறடிக்கு மேல் வளர்ந்த அந்த உயர்ந்த மனிதன்தான் அவள் தகப்பனென்று சொல்லத் தேவையில்லை. அவளுடைய பொன்னிறத் தலை அவருக்குமிருந்தது.
அவனை ஏறிட்டுப் பார்த்தார். ‘ஹலோ கம் இன்’ என்றார்.
வீடு நிறைந்த, உயர்ந்தவிலையுள்ள தளபாடங்கள், சித்திரங்கள், சிலைகள் அவன் கருத்தைக் கவர்ந்தன. சில சிலைகள் இந்தியச் சிலைகள். ஒரு ஆறடி உயரத்தில் கண்ணன் சிலை வெண்கலத்தில்; பளிங்கில் வடித்த பெரிய நடராஜ சிலை இன்னொரு பக்கம்.
“எனது பாட்டனார் மட்ராசில் வேலை செய்தவர்”
ராகவன் உம் கொட்டினான். ‘எத்தனை இந்தியரை அழித்தீர்கள்’ என்று கேட்க வேண்டும்போல் இருந்தது.
“என்ன, பீர் வேணுமா விஸ்கி வேண்டுமா”
அவர் தனக்கு விஸ்கியூற்றிக் கொண்டு பிரிட்சைத் திறந்து பீர்க் கானையும் எடுத்தார்.
‘பீர் பிளீஸ்’ அவன் வாங்கிக் கொண்டான்.
“அவள் அதிகமாக தன்னுடைய சகமாணவர்களை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரமாட்டாள். பிலிப் மட்டும்தான் வருவான்.” மேலே போயிருந்த டெவீனா வந்தாள்.
“என்ன பிலிப் என்ன செய்தான்” டெவீனா தனக்கொரு ஆரன்ஸ் பழரசரத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“பிலிப்பைத் தவிர நீ யாரையும் இந்த வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்” தகப்பனின் குரலில் கிண்டலா அல்லது எதிர்மறையான எச்சரிக்கையா என்று அவனுக்குத் தெரியவில்லை. கௌரவமாகத் தன்னுடன் பேசினாலும் மகளின் நெருங்கிய சினேகிதனாகத் தன்னை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
மகளையணைத்தபடி “இவள் ஒரு புகைப்படக் கலைஞை என்று உனக்குத் தெரியுமா” என்று கேட்டார், மிஸ்டர் ஸேர்லிங் குரலில் பெருமை.
“இவளுடைய பதினெட்டாவது வயதில் கென்யாவில் ஒரு புகைப்படக் கண்காட்சி வைத்தாள், சொன்னாளா”
ராகவனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. டெவீனா அதைப்பற்றித் தன்னிடம் சொல்லவில்லை என்பது ஏனோ மனதில் தைத்தது.
“அப்பா சும்மா இருங்கள். கொலிச்சுக்குப் போனால் என்னைப் பற்றிப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்”
மகள் செல்லத்துடன் தகப்பனைக் கடிந்து கொண்டாள்.
“படித்து முடிய நைரோப்பியில் ஒரு ஸ்ரூடியோ போடச் சொல்லியிருக்கிறேன். திரைப்படம் எடுப்பதனால் இந்தக் காலத்தில் பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஏன் என் மகளுக்கு அந்தத் தொல்லை”
மிஸ்டர் ஸேர்லிங் பேசிக் கொண்டேயிருந்தார். படிப்பு முடிந்ததும் டெவீனா நைரோபிக்குப் போவதை ராகவனால் நம்ப முடியாமலிருந்தது.
நேரம் செல்லச் செல்ல அவன் எப்போது அந்த வீட்டை விட்டு ஓடலாம் என்றிருந்தது.
டெவீனாவைத் தன் சகமாணவியாக அறிமுகமாக்கிப் பின்னர் காதலியாய் அனுபவித்ததற்கும் இப்போது மிஸ்டர் ஸேர்லிங் மகளாகப் பார்ப்பதற்கும் நம்ப முடியாத வித்தியாசமாக இருந்தது. அதல பாதாள உலகத்தில் திணறுவது போன்ற உணர்ச்சி வந்தது அவனுக்கு. ஏன் இந்த நிலையிற் தன்னைத் தானே மாட்டிக் கொண்டேன் என்று சட்டென்று நினைத்துக் கொண்டான். அந்த நினைவு நெருப்பாய்ச் சுட்டது.
தன்னைத் தானே ஒரு அன்னியராகப் பார்த்துக் கொண்டான். படிக்கப் போன இடத்தில் படிப்பைப் பார்த்துக் கொண்டும் இளம் மனதின் உணர்ச்சிகளையடக்கிக் கொண்டிருந்திருக்கலாமே என்று மனம் திட்டியது.
அவனை அனுப்ப வெளியே வந்தவள் அவனின் கார் வரைக்கும் நடந்து வந்தாள்.
“என்ன ஏதோ பெரிதாயெல்லாம் யோசிக்கிறாய்” அவனையிழுத்து வைத்து முத்தமிட்டாள்.
பெருமூச்சு விட்டான்.
“அப்பாவின பேச்சு மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்” அவள் அன்பு குரலில் கனிந்தது.
“இதோ பார் இந்த வீடு எனது தாயின் பெயரில் உள்ள வீடு. எனக்கு நிறைய உரிமையிருக்கிறது. நீ எப்போதும் வரலாம், போகலாம்”
அவன் வேதனைவுடன் சிரித்தான்.
“நாங்கள் இரு வேறு உலகங்கள்”
“தத்துவம் போதும்” அவள் அவன் வாயைப் பொத்தினாள்.
அடுத்த நாள் தங்கள் வீட்டுச் சாவிக்குப் பிரதி எடுத்துக் கொண்டு வந்து ராகவனிடம் கொடுத்தாள் டெவீனா.
“எனது வீட்டுக்கு எந்த நிமிடமும் நீ வரலாம். உனக்கு ஆங்கிலேயச் சட்டம் தெரியும் என்று நினைக்கிறேன். இருபத்தி ஒரு வயதுக்குமேல் தாய் தகப்பன் தங்கள் குழந்தைகளின் விடயத்தில் தலையிட முடியாது.”
அவன் அவள் கொடுத்த சாவியைப் பார்த்தான். கல்லூரியின் ஆரம்ப நாளன்று மூடிக் கொண்டிருந்த லிப்டில் ஓடிவந்து மாலையாக அவன் மார்பில் விழுந்தவள் இன்று தன் வீட்டுச் சாவியைக் கொடுக்குமளவுக்கு நெருங்கிய புதுமை அவனால் நம்ப முடியாதிருந்தது.
அடுத்த நாள் காலை லிவர்பூல் ஸ்ரீட் ரெயில்வே ஸ்ரேச னுக்கு ஜேர்மனிக்குப் போவதற்காகச் சென்றார்கள். போலிஸா ரின் சோதனைக்குச் சில மாணவர்கள் ஆளாகிறார்கள்.
மைக்கல் கஞ்சாவுடன் அகப்பட்டுவிட்டான். இவர்களுடன் வந்த வேர்ஜினிய பார் மஸ்ரோனின் தலையீட்டால் மைக்கல் விடுபட்டாலும் பிலிப்பின் திட்டலுக்கு ஆளானான்.
மைக்கலை பிலிப்புக்குப் பிடிக்காது என்பது பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரியும். “நீ சரியான இனவாதி” ஜேன் பட்லர் பிலிப்பை நேரே திட்டினாள்.
ஸ்ரீவன் கடுமையாக இருமிக் கொண்டிருந்தான். “இந்த இருமலுடன் நீ வரத்தான் வேணுமா” அன்புடன் கடிந்து கொண்டான் ராகவன்.
ரெயின் முழுக்க மாணவர்களின் கும்மாளம். ஆடலும் பாடலும் மற்றப் பிரயாணிகளின் நிம்மதியைக் கெடுக்குமளவுக்கு ஆர்ப்பாட்டம்.
ஹார்வித்துறைமுகத்தைப் புகையிரதம் காலை பதினொரு மணிக்கு அடைந்தது. கடலிற் சில மணித்தியாலங்கள் மெல் லத் தவழ்ந்த கப்பல் பெல்ஜிய நாட்டின் ஓஸ்ரெண்ட் துறைமுகத்தையடையப் பின்னேரம் மூன்று மணியாகி விட்டது.
கப்பலில் டெவீனாவுடன் பாரிசுக்குப் போன இனிய ஞாபகம் ராகவனின் நினைவை வருடியது.
ரெயினில் டெவீனாவும் ஜேன் டார்வினும் மற்றப் பெண் கள் கூட்டத்துடன் கும்மாளம் போட்டதால் அவனுடன் பேச அதிக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஓஸ்ரெண்டிலிருந்து புகையிரதம் ஜேர்மனி நோக்கிப் புறப்பட்டது. ஆறு பேர் இருக்கக் கூடிய பெட்டியில் ராகவன், ஸ்ரீவன், ஜேன், டெவீனா, அலான் பார்டோ என்ற பிரன்ஸ் மாணவன் ஐவரும் படுக்கைகளைக் குவித்தார்கள். ஆறாவது நபராக பிலிப் வரக்கூடாது என்று மனம் சொன்னது. ஆனால் பிலிப் வந்து சேர்ந்ததும் ராகவன் தர்ம சங்கடத்துடன் தலையைத் திருப்பிக் கொண்டான்.
பிரயாணக் களைப்பில் டெவீனா ராகவனின் தோளிற் சரிந்து உறங்கி விட்டாள். ஜேன் அலான் பார்டோவின் மடியில் நல்ல உறக்கம். ஸ்ரீவன் இந்தக் காதற் கூட்டத்தை ரசிப்பது முகத்திற் தெரிந்தது.
கஞ்சா பிடிக்க முடியாத எரிச்சலில் மைக்கல் முகத்தை நீட்டிக் கொண்டிருந்தான்.
ஏதோ ஸ்ரேசனில் ரெயின் நின்றபோது மற்றவர்கள் காப்பி வாங்கப் போனதும் ஸ்ரீவன் ராகவனிடம் சொன்னான்:
“நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி”
“ஏன்?”
“டெவீனா உன்னில் உயிரையே வைத்திருக்கிறாள்”
“நானும் தான்” ராகவன் முணு முணுத்தான்.
“ம், உணர்வுகளின் சங்கமத்தின் வலிமைடையக் கலாச்சாரப் பிரச்சனைகள் மோதும் போதுதான் சோதனை தெரியும்” ஸ்ரீவன் ஒரு அமெரிக்கன், ஆனாலும் இங்கிலிஸ்காரரின் மன உணர்ச்சிகளைப் புரிந்தவன்.
ரெயின் பெல்ஜிய நாட்டினூடாகப் போய்க் கொண்டிருந்தது. யூகலிப்டஸ் மரங்கள் ஒய்யாரமாகச் சாய்ந்தாடின. சித்திரை மாத இளம்வெயில் மாலை மயக்கத்தில் டெவீனாவின் முகத்தில் முத்தமிட்டடது. தன்னில் சரிந்துறங்கும் டெவீனாவின் அழகை ரசித்தான்.
அன்ரோனியோவின் வீட்டில் முதற்தரம் காதல் புரிந்த அந்தக் கவிதைக் கொத்து அவன் கரங்களின் பாதுகாப்பில் நித்திரை செய்வதை பிலிப் பொறாமையுடன் பார்ப்பதை ஸ்ரீவன் கவனித்தான்.
“பாவம் அன்ரோனியோ” ஸ்ரீவன் சொன்னான்.
“ஆமாம் எவ்வளவு ஆசையாகக் கல்லூரிக்கு வந்தான்” என்றான் ராகவன்.
“எல்லாம் காதல் படுத்தும் பாடு” ஸ்ரீவன் குறும்பாகச் சிரித்தான்.
டிக்கட் பரிசோதகர்கள் வந்தார்கள். மாணவர்கள் எல்லாரும் நித்திரையால் எழுப்பப் பட்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் கறுப்பு, ஆசிய மக்கள் அகதிகளாக வருவதால் இனவெறுப்பு வளர்ந்து கொண்டிருந்தது. ஒரு இந்தியனின் தோளில் ஒரு வெள்ளைக்காரப் பெண் தூங்குவதைக் கண்ட பெல்ஜிய டிக்கட் பரிசோதகர் பொறாமையுடன் ராகவனைப் பார்த்தான்.
“இனவாதம் பிடித்த பாஸ்ரட்” ஜேன் ஆங்கிலத்தில் திட்ட டிக்கட் பரிசோதகர் அவளை எரித்து விடுவதுபோல் பார்த்தான்.
“உங்களிடம் பரிசோதனைக்குரிய பொருள் ஏதும் இருக்கிறதா?” (“Do you have anything to declare”)
டிக்கட் பரிசோதகர் அதட்டினான். அங்கிருக்கும் கறுப்பு மாணவன் மைக்கலையும், ஆசிய மாணவன் ராகவனையும் அதட்டும் குரல்.
“எங்களிடம் ஏதும் பரிசோதனைக்கு இருக்கிறதா என்று கேட்கவில்லையே” ஜேன் ஆத்திரத்துடன் கேட்டாள். பரிசோதகன் எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.
“இரண்டு சோடி இங்கிலிஸ் முலைகள் இருக்கிறது பரிசோதிக்க உனக்குத் தைரியமிருக்கிறதா”
மாணவர் கூட்டம் ரெயின் வெடிக்குமளவுக்குச் சிரிக்கத் தொடங்கிவிட்டது.
பரிசோதகர் ஆத்திரத்துடன் அந்தப் பெட்டியை விட்டு நகர்ந்தான்.
“ஜேர்மனியில் என்னத்தை எதிர்பார்க்க வேண்டுமோ” மைக்கல் எரிச்சலுடன் முணு முணுத்தான்.
மாணவர்களுக்கென்று ஆயத்தம் செய்த ஹாஸ்டலில் இவர்கள் மூட்டை மூடிச்சுகளுடன் போய்ச் சேர்ந்தார்கள். ஓபர் ஹவுசன் என்ற இடம் ஒரு சிறிய நகரம். ஒரு அறையில் மூன்று மாணவர்கள் என்று சேர்ந்தார்கள்.
ஸ்ரீவனும், மைக்கலும், ராகவனும் ஒரு அறையிற் தங்கிறார்கள். பிரயாணக் களைப்பில் ராகவன் தூங்கி விட்டான்.
நடுச்சாமத்தில் வெளியில் பெரிய சத்தம். ஜன்னலால் எட்டிப் பார்த்தான். சில மாணவர்கள் கிளப்புக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கடைசியாகப் போன சோடியை உற்றுப் பார்த்தான். டெவீனாவும் பிலிப்பும்!
மௌனமாக, இருட்டில் நின்று அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்ச்சி.
அடுத்த நாள் முதல் நாளையப் பட விழா ஆடம்பரமாகத் தொடங்கியது.ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த படங்கள் காட்டப் பட்டன.
யதார்த்தமான, கலையுணர்வான படங்கள். மாணவர்கள் படத்தயாரிப்பாளர்களைச் சந்திப்பதிலும் கருத்துக்கள் பரிமா றிக் கொள்வதிலும் பிஸியாக இருந்தார்கள்.
ஸ்ரீவனின உடல் நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. விரிவுரையாளர் வேர்ஜினியா பார்மஸ்ரோன் ஸ்ரீவனின் நிலை கண்டு மிகவும் துக்கப்பட்டார்.
“நான் வந்திருக்கக் கூடாது” ஸ்ரீவன் முணு முணுத்தான்.
“வந்தது வந்தாயிற்று நான் முடிந்த வரையில் உதவி செய்கிறேன்” மிஸ் பாமஸ்ரோன் ஒரு ஜேர்மன் டொக்டர் ஸ்ரீவனைப் பார்க்க உதவி செய்தாள்.
மூன்றாம் நாள் இந்தியத் தயாரிப்பாளர்களின் படங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிலொரு படம் ஜேன் டார்வினை மிகவும் நோகப் பண்ணிவிட்டது.
ஒரு வயதுபோன, வருத்தம் சொல்லிக் கொண்டு வாழ்க்கை நடத்தும் தாய். மிகப் படித்தும் வேலைக்குப் போக அவசியமில்லை என்று தாயால் வீட்டில் அடைபட்டுக் கிடக் கும் அழகிய இளம் பெண். இவர்களின் போராட்டத்தையுண ராது, எப்போதும் வெளியிற் சுற்றித் திரியும் தகப்பன்; இவர்க ளைச் சுற்றிய கதை.
இளம் பெண்ணில் விருப்பமுள்ள ஒரு இளைஞன் அவ ளைக் கேட்க வீட்டுக்கு வருகிறான். தாய் அவனைக் கேட்காத கேள்விகள் எல்லாம் கேட்டுத் துரத்தி விடுகிறாள்.
உறவினர் சிலர் மாப்பிள்ளை பேசி வருகிறார்கள். தாய் ஏதோ காரணங்கள் சொல்லி அந்தக் கல்யாணங்களைத் தடுக்கி றாள். நீ வசதியானவள், நல்ல மாப்பிள்ளை ஒரு நாளைக்கு கு வருவான் என்று மகனுக்கு அடிக்கடி சொல்கிறாள்.
ஒரு நாள் அந்தத் தாய் தற்செயலாக, தன் மகள் நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நிர்வாணமாய் நின்று அவளின் இளமுலைகளையும் பெண் குறியையும் வருடி அழுவதைக் காண்கிறாள்.
மகளை நிர்வாணமாய் – அதுவும் அந்த நிலையிற் கண்ட தாய் மூர்ச்சையுற்றுக் கீழே விழுக்கிறாள், ஒரு சில நாட்களின் பின் உணர்வு வராமலே இறக்கிறாள்.
சில மாதங்களுக்குப் பின் இவளை விரும்பிய அதே பையன் பெண் கேட்டு வருகிறான்.
தகப்பன் அந்த இளம் பெண்ணின் தாய் இவ்வளவு நாளும் சொன்ன அதே மறுமொழியைச் சொல்கிறார் “நீ வசதியான பெண், கண்ட கழுதைகளுக்கெல்லாம் உன்னைக் கொடுக்கத் தயாரில்லை”!
இந்த இடத்தில் அந்தப் பெண்ணின் இரு துளிர் கண்ணீர்த் துளிகளில் கமராவின் பார்வை படுவதுடன் படம் முடிகிறது. நிலைக் கண்ணாடி வெறுமையாகத் தெரிகிறது. படம் முடிந்ததும் ஜேன் அழுதுவிட்டாள்.
“மனிதர் சுய நலமானவர்கள்; பாசம், கலாச்சாரம் என்ற வார்த்தைகளைச் சொல்லி மனிதர்களின் வாழ்க்கையை அழிக்கிறார்கள்” ஜேன் சொன்னாள்.
“எல்லாரும் அப்படியில்லை சூழ்நிலையும் சில மனிதர்க ளைச் சுயநலமாக்குகின்றன, அத்தோடு மனித மனம் குழம்பியி ருக்கும் போது தான் செய்வது தவறு, அது மற்றவரைத் துன்புறுத்தும் என்று தெரியாமல் செய்கிறார்கள்” டெவீனாவின் விளக்கம் இது.
அடுத்த நாள் நடந்த படவிழாவில் மனதையுருக்கும் ஒரு ஆப்பிரிக்க நாட்டுப் படம் காட்டப்பட்டது.
ஒரு கிழவிக்குப் பல குழந்தைகள் வயதுபோன காலத்தில் அவளின் கடைசி மகனுடன் வாழ ஆசைப்பட்டு மருமகளுடன் பிரச்சினை வருகிறது. “கையாலாகாத உன் மகனைக் கட்டி எனக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தது தவிர வேறென்ன கிடைத்தது? நீயும் ஒரு பாரமாய் இருக்கிறாயே” என்று பட்டினியால் வாடும் மருமகள் மாமியைத் திட்டுகிறாள்.
சரியாகவும் நடக்க முடியாத வயதுபோன, வருத்தத்தால் தொய்ந்த கிழவி அடுத்த மகனிடம் போக ஒரு காட்டுப் பாதையால் போகிறாள். நடக்க முடியாத நிலையில் பசியால் வாடி ஒரு மர நிழலில் அமர்ந்திருக்கும் போது ஆடுகள் மேய்க்கும் ஒரு பையனின் காலில் பெரிய விஷ முள் பாய்ந்து அலறுகிறான்.
கிழவி அந்தப் பையனைத் தன் பாடல்களாலும் கதை சொல்வதாலும் ஆறுதல் படுத்தி அவனது காலிற் பாய்ந்த முள்ளை எடுத்து விடுகிறாள்.
பையன் நன்றியுடன் கிழவி ஏன் அந்த மர நிழலில் இருக்கிறாள் என்று கேட்கிறான். கிழவி தன் கதையைச் சொல்கிறாள். பசியின் கொடுமையால் தன்னால் மேற் கொண்டு நடக்க முடியாத நிலை சொல்லியழுகிறாள்.
“அழாதே வீட்டில் கஞ்சியிருக்கும் எடுத்து வருகிறேன்” என்று பையன் சொல்கிறான். வீட்டுக்குப் போன பையனின் கால் விஷ முள்ளின் தாக்கத்தால் வீங்கி அவனால் நடக்க முடியாமலிருக்கிறான்.
இரவில் தன் தாயிடம் கிழவியின் நிலை பற்றிச் சொல்லியழுகிறான். “யாரோ வழிப்போக்கர்கள் உதவி செய்திருப்பார்கள். கடவுள் எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்வார்” என்று தாய் தேற்றுகிறாள்.
ஒரு சில தினங்களுக்குப் பின் பையன் நொண்டி நடந்த படி கஞ்சி எடுத்துக் கொண்டு கிழவியைத் தேடிப் போகிறான். அதிகாலைப் பனியில் கிழவியின் சுருண்ட உடல் மரத்தடியிற் தெரிகிறது.
அடிவானத்திலிருந்து பிழந்து கொண்டு வரும் ஆதவனின் சிவப்புக் கதிர்கள் கிழவியின் கறுத்தத் தோலில் மாயா ஜாலம் காட்டுகிறது.
பையன் கிழவியை எழுப்புகிறான். கிழவி எழும்ப வில்லை. “என்ன கடவுள் உனக்கு அனுப்பிய கஞ்சியைக் குடித்து விட்டு வெயில் தெரிவது கூடத் தெரியாமல் நித்திரை கொள்கிறாயா” பையன் பொய்க் கோபத்துடன் கேட்கிறான்.
கிழவியிடமிருந்து பதில் இல்லை. “நான் வரவில்லை என்று கோபிக்காதே. எனக்கு நடக்க முடியாமல் இருந்தது. இப்போது நல்ல சூடான உப்புப் போட்ட சோழக் கஞ்சி கொண்டு வந்திருக்கிறேன்” பையன் சொல்லிக் கொண்டு கிழவியின் முகத்தைத் திருப்புகிறான்.
சில்லிட்டு விறைத்த பிணத்தின் திறந்த விழிகள் இவனை வெறித்துப் பார்க்கிறது. “கடவுள் உனக்குக் கஞ்சி தராததால் செத்துப் போனாயா” என்று பையன் கதறுகிறான்.
அந்தப் படத்தின் கதை, ஆபிரிக்க நாட்டின் வறுமையை யதார்த்தமாகப் படம் பிடித்த கோணங்கள், சுருங்கிய கிழவி யின் சிரிப்பும் துடிப்பான பையனின் கதறலும் படத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்த பதிவுகள் ஆகும்.
செல்வமான லண்டனிலிருந்து வந்து செல்வமுள்ள ஜேர் மன் நாட்டில் வறுமையில் வாடும் ஆபிரிக்க முகங்கள் திரைப் படங்களின் பிரமையாக மனச்சாட்சியை வதைத்தது.
டெவீனா கென்யா நாட்டில் பெரும்பாலான விடுமுறை களை கழிப்பவள். மஸாய் இன மக்களைப் பற்றிய புகைப்பட எக்ஸ்பிஸனை நைரோபியில் வைத்தவள்.
அலான் பார்டோ, ஜோன் டார்வின் என்போர் வழக்கம் போல சர்ச்சையில் ஈடுபட்டார்கள். அந்தப் படம் எடுத்த தயாரிப்பாளர் ஒரு இளைஞர். எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் படத்தை எடுத்தார் என்பதைச் சொன்னார்.
திரைப்பட உலகத்தில் கலையுணர்வு, சமுதாயச் சிந்தனை, புது தொழிற் திறமையுள்ளவர்கள் என்போர் பட உலகில் காலடி எடுத்து வைக்கும்போது உண்டாகும் கஷ்டம் அந்தத் தயாரிப்பாளர் வாயிலாகத் தெரிந்தது.
இன்னும் இரண்டொரு நாளில் படவிழா முடிவதாக இருந்தது. அதற்கிடையில் ஸ்ரீவனின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. படவிழா முடிய இரண்டொரு நாட்கள் ஜேர்மனியில் நிற்க விரும்புவதாகப் பல மாணவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் – 17
அன்றிரவு ஸ்ரீவன் மூச்சு எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டான்.
“உனக்கென்ன வருத்தம். ஆஸ்த்மாவா, கான்ஸரா” மைக் கல் அப்பாவித் தனமாகக் கேட்டான்.
“மைக்கல் எனக்கு வந்திருப்பது எயிட்ஸ்’ மூச்சுத் திணறி யபடி சொன்னான்.
“வாட்” மைக்கல் கட்டிலால் துள்ளி அலறினான்.
“எயிட்ஸ் காரனுடா இத்தனை நாளும் இந்த அறையில் இருந்தேன்” மைக்கல் சத்தம் போட்டான்.
“சட் அப் மைக்கல், ஒரு அறையில் இருந்தால் எயிட்ஸ் ஒன்றும் ஒட்டிக் கொள்ளாது” ராகவன் மைக்கலை அதட்டினான்.
அடுத்த நாள் ஸ்ரீவனை லண்டன் அழைத்துச் செல்வதற்காக ராகவன் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் போது டெவீனா வந்தாள்.
”ஐயாம் சாரி ஸ்ரீவன்” டெவீனா ஸ்ரீவனுக்குத் தன் துக்கத்தைச் சொல்லிக் கொண்டாள்.
”ஒரு கிழமையாக உன்னைக் காண்பதே அபூர்வமாக இருந்தது” ராகவன் எடுத்தெறிந்து பேசினான்.
”ஆமாம் எத்தனையோ படங்கள், விமர்சனங்கள் கருத்தரங்கள்…” டெவீனா சொல்லி முடிப்பதற்கிடையில் “இரவில் களியாட்டங்கள்” என்று முடித்தான். ராகவன் வந்த அன்றே பிலிப்புடன் கிளப்புக்குப் போன காட்சி மனதில் வந்து தைத்தது.
அவள் குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள். “அடிக்கடி வெளியில் போய்ச் சந்தோசமாக இருக்கிறாய் என்று சொன்னேன்”
“ஆமாம் அன்றிரவு உங்கள் அறைக்கு வந்தேன். நீங்கள் சரியான நித்திரை. உங்களை குழப்ப வேண்டாம் என்று ஸ்ரீவன் சொன்னான், அது சரியென்று பட்டது. உங்களைக் குழப்பாமல் பிலிப்பைத் துணைக்குக் கூப்பிட்டேன்”
களங்கமற்ற தொனியில் டெவீனா சொன்னாள். ராகவனின் மனம் ஒரு விதத்தில் நிம்மதியானாலும் ஏதோ மனதைச் சுரண்டிக் கொண்டிருந்தது.
அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
”மிகுதியான நாட்களையும் சந்தோசமாகக் கழிக்கப் பார்” ஏனோ தானோவென்று சொன்னான்.
ரெயின் ஜேர்மன் நகரான ஓபர் ஹவுசனைவிட்டு ஓடத் தொடங்கியது. ஜேர்மனிக்கு வரும்போது தோளில் துவண்ட வள் இப்போது இன்னொருத்தனுடன் இரவில் கிளப்புக்குப் போவதைச் சகிக்க முடியாமலிருந்தது.
ராகவன் பெருமூச்சு விட்டான்.
“டெவீனாவிலுள்ள கோபத்தில் ஜேர்மனியை விட்டு ஓடுகிறாயா” ஸ்ரீவன் இருமியபடி கேட்டான்.
“அப்படியில்லை. உன்னை யாராவது கூட்டிக் கொண்டு போகத்தானே வேணும்” அவன் சமாளித்தான். வாழ்க்கை மிகக் குழப்பமாகத் தெரிந்தது. சோர்வுடன் தூங்கி விட்டான் ராகவன்.
இவன் இரண்டு நாட்கள் முந்தி வந்தது அம்மாவுக்குச் சந்தோசமாக இருந்திருக்க வேண்டும். வெள்ளைக் காரப் பெட்டையில் பிடியிலில்லாமல் வந்தது இன்னும் சந்தோசமாக இருந்திருக்க வேண்டும்.
அம்மாவின் உலகத்தில் ‘அன்னிய’ கலாச்சாரம் பற்றிய விளக்கம் தெரியாது. அவளின் உலகத்தில் கர்மம்,விதி என்ற நம்பிக்கைகளில் நன்மை தீமை, சரி பிழை என்பவற்றை எடை போடுகிறாள். அன்பைத் தவிர எதையும் கொடுக்கத் தெரியாத இளகிய மனம் கொண்டவள் அம்மா.
ஜேர்மனியிலிருந்து வரும்போது “நீ இளகிய மனமுள்ளவன்” என்று சொன்னான் ஸ்ரீவன்.
ராகவன் சிரித்துக் கொண்டான். அம்மாவிடமிருந்து குழந்தைகளுக்குக் கிடைக்கும் கொடையது.
“டெவீனாவும்தான் அன்ரோனியோவை அன்புடன் பார்த்துக் கொண்டாள்” ராகவன் சொன்னான்.
”உனது சேவைக்கு எனது நன்றி’ உணர்ச்சியுடன் சொன் னான் ஸ்ரீவன்.
“ஸ்ரீவன் நான் உனது சகமாணவன், நீ ஹோமோ செக்சுவல் என்றால் அது பற்றி எனக்கு ஒரு எதிர்ப்பும் கிடையாது. செக்சுவாலிட்டி ஒவ்வொருத்தர் விருப்பத்தையும் பொறுத்தது; அகங்காரம், அறியாமை, ஆணவம் என்பன மனிதனைப் பிரிக்க எத்தனையோ சூட்சிகளைப் பாவிக்கின் றன. என்றால் முடிந்தவரை ஒரு சாதாரண மனிதனாக வாழ யோசிக்கிறேன். மனிதர்களை நேசிப்பது இயற்கை. மனிதனை மனிதன் வெறுப்பது பொறாமையின் பிரதிபலிப்பு. எனக்கு அது வேண்டாம்” ராகவன் மிகவும் தெளிவாகச் சொன்னான்.
ஏப்ரல் மாதக் கடைசியில் திரைப்படக் கல்லூரி மிகவும் பிஸியாய் இருக்கும். புவனா தனது படப்பிடிப்பு வேலைக ளைத் தொடங்கியிருந்தாள்.
ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு ஜேன் உதவி செய்தாள். நியுபரிக் குப் பக்கத்தில் கிறின்ஹாம் என்ற ஊரில் அமெரிக்க ராணுவத்தி னர் 1983ம் ஆண்டு குறுஸ் மிசாயில் என்ற அணுசக்திக் குண்டுகளை கொண்டு வந்திருந்து சேர்த்திருந்தார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஹிரோஷிமா, நாக ஸாகி என்ற இரு ஜப்பானிய நகரத்தில் அமெரிக்கர் போட்ட அணுகுண்டால் லட்சக்கணக்கான மக்கள் கோரமாகக் கொலை யுண்டார்கள்.
தங்கள் நியுபரி என்ற நகரின் அருகில் அணு குண்டை அமெரிக்கர் இறக்கியபோது அரசியலே என்னவென்று தெரி யாத ஒரு தாய் இந்த அணுகுண்டுகளுக்கு எதிராக ஆர்ப்பாட் டம் செய்கிறார். அவரின் ஆவேசம் சில வாரங்களில் கிறின் ஹாம் கொமன் என்ற இடத்திற்கு 30.000 ஆண்களையும் பெண்களையும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்க வைக்கிறது.
பல்கலைக் கழக மாணவிகளும் மாணவர்களும் போராட் டத்திற் குதிக்கிறார்கள். நேர்ஸரி ஆசிரியைகளும் குழந்தைகளும் ஆயிரக் கணக்கிற் பங்கு பற்றுகிறார்கள்.
சாதாரண வீட்டுப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அமெரிக்காவின் அணு குண்டு எதிர்ப்பு செய்கிறார்கள். இது பற்றி புவனா 30 நிமிட டொக்கு மென்ரறி எடுக்கத் திட்டமிருந்தாள்.
கிறின்ஹாம் கொமன் நேரடிப் போட்டத்தில் கூடாரம் அடித்துக் குளிரில் வாடிய எத்தனையோ ஆயிரம் பெண்ணில் ஜேன் டார்வினும் ஒருத்தி. புவனாவும் ஜேனும் சேர்ந்து ஸ்கிரிப்ட் எழுதி முடித்தார்கள்.
கமரா வேலைக்குப் பிலிப்பையும் டெவீனாவையும் கேட் டிருப்பதாகப் புவனா சொன்னபோது ராகவனுக்கு ஒரு மாதிரி யாயிருந்தது.
“நடிகர் தேர்வுக்கு உதவி செய்வாயா-எடிட்டிங்கு உதவி செய்வாயா?” என்று ராகவனைக் கேட்டாள்.
டெவீனாவுடன் கமரா வேலை செய்ய முடியாமல் போனது மனதிற்குத் துக்கமாக இருந்தது.
மைக்கல் இன்னொருதரம் போலிஸாருடன் அகப்பட்டு பெரிய விவகாரமாகி விட்டது. அவன்தான் சவுண்ட் சிஸ்டத்தைப் பொறுப்பெடுத்தான். அன்ரோனியோ கல்லூரிக்கு வருவதே அருமையாகி விட்டது.
ஓர்ப ஹவுசனில் நடந்த திரைப்பட விழாவிற்கே அவன் வரவில்லை. ராகவன் அவனைத் தேடிப் போனபோது பிளாட் டில் வெறுமையான விஸ்கிப் போத்தல்களும் பீர்க் கான்களும் கிடந்தன. அன்ரோனியோ கொக் கேய்ன் பவுடரை மூக்கில் உறிஞ்சிக் கொண்டான். ஹெரோயின் ஊசி போட்ட தழும்பு கையிற் தெரிந்தது. பைத்தியக்காரன் போல் தோற்றமளித்தான் அன்ரோனியோ. “ஜூலியட் இல்லாமல் என்ன வாழ்வு” என்று முணு முணுத்தான்.
ஸ்ரீவன் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப் பட்டிருந்தான்.அவன் புவனாவின் படப்பிடிப்பின் செட் அமைப்புகள் பற்றி உதவி செய்வதாக இருந்தான்.
“மைக்கல் கஞ்சாவுடன் அகப்பட்டான், அன்ரோனியோ அரைப் பைத்தியமாகி விட்டான், ஸ்ரீவன் எப்போது வெளி யில் வருவானோ தெரியாது” புவானவின் முகத்தில் என்றும் கொள்ளும் வெடித்தது.
படப்பிடிப்பின் வேலை முடிய தனது இறுதி வருட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் விடயமாக இந்தியா போவதாகச் சொல்லியிருந்தாள்.
இளமைக்காலத்தில் இந்தியாவிற் தங்கி பரத நாட்டியம் பயின்றவள்.
“ஆராய்ச்சிக் கட்டுரை எது பற்றியிருக்கும்” ராகவன் கேட்டான்.
“இந்தியப் படங்களில் பெண்கள்’ பற்றி எழுதப் போகிறேன்” புவனா தனக்கு வந்திருந்த நடிக நடிகையரின் படங்களில் பார்வையைப் பதித்த படி சொல்லிக் கொண்டிருந்தாள். “என்ன பெரிதாக எழுத இருக்கிறது. கதாநாயகிகளுக்கு கழுத்துக் கீழே இருக்கும் இரு மேடுகளையும் கால்களுக்கிடை யிலிருக்கும் ஒரு பள்ளத்தையும் குலுக்கி, மினுக்கி, அசைத்து ஆசையூட்டுவதைப் பற்றி எழுதப் போகிறாயா” ராகவன் கிண்டலாகக் கேட்டான்.
”சும்மா கிட, இந்திய சினிமாவில், ஆரம்பத்தில் வந்த தமிழ்ப் பெண்களின் பங்களிப்பும் இப்போது வந்திருக்கும் இறக்குமதி உடம்புகளின் பங்கும் என்ன என ஆராயப் போகிறேன்.”
”உனக்குத்தான் இந்தியச் சினிமாவைப் பிடிக்காதே”
“நான் வெறுக்கவில்லையே, திருத்தங்கள் வந்தால், சமுதாய முன்னேற்றத்திற்குச் சினிமா உதவி செய்தால், மூட நம்பிக்கையை ஒழிக்க முயன்றால், பெண்களுக்குக் கௌரவம் குடும்பத்திலும், சமுதாயத்திலும் அரசியலிலும் இருக்க வேண்டும் என்று சீர்திருத்தங்கள் செய்தால் இந்தியாவுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று ஆசைப்படுகிறேன்”
புவனா தெளிவாகச் சொன்னாள்.
“புவனா, 1896ம் ஆண்டு யூலை 7ம் திகதி பம்பாய் வாட்சன் ஹோட்டலில் பிரன்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் (Lumiere Brotheres) சினிமா காட்டத் தொடங்கிய காலத்தில் இந்தச் சினிமா இந்தியாவின் ஒரு சமயமாக மாறும் என்று நினைத்திருப்பார்களா” ராகவன் வியப்புடன் கேட்டான்.
“தெரியாது, ஆனால் இந்திய சினிமா அந்தக் காலத்தில் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த நாடகத்துறையை ஒட்டியே வளர்ந்திருக்கிறது. பாடத் தெரிந்த ஆண்கள் மட்டும் பெண் வேடத்தையும் எடுத்து நடித்தார்கள். அதே பாணிதான் சினிமாவிலும் பின் பற்றப் பட்டது. ஆரம்ப காலத்தில் பெண்கள் கிடைக்கவில்லை. மெளனப் படம் எடுத்த காலத் தில் தேவதாசிக் குலத்தைச் சேர்ந்த, அதாவது சமுதாயத்தால் ஒழுக்கமற்றவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்க ளைத் தான் சினிமாவில் அறிமுகம் செய்ய முடிந்தது”
புவனா எழுந்துபோய்ச் சில புத்தகங்களைக் கொண்டு வந்து மேசையிற் போட்டாள்.
”இந்திய சினிமாவை ஆழ்ந்து ஆராய்ந்து எழுதிய புத்தகங் கள் குறைவு. அதுதான் சினிமாவில் அனுபவமுள்ள அறிஞர்க ளைச் சந்தித்து விடயங்களை அறியப் போகிறேன்”
புவனா எழுத்தாள்: ராகவனுக்கு ஸ்ரீவனைப் பார்க்கப் போக நேரம் வந்ததால் அவசரமாக வெளியேறினான்.
ஒரு இந்திய டொக்டர் ஸ்ரீவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ராகவனைக் கண்டதும் “நீயோ இவனது போய் பிரண்ட்?” என்று அருவருப்புடன் கேட்டார்.
உயிரைக் காப்பாற்ற வேண்டிய டொக்டரின் முகத்தி லேயே அருவருப்பு. ராகவனால் நம்ப முடியவில்லை. அம்மா மைதிலியைத் தீண்டாதவள் மாதிரி நடத்துகிறாய், ராகவனை யும் கிட்டத்தட்ட அப்படித்தான் நடந்துகிறாள். அம்மா உலகம் தெரியாதவள். இந்த டொக்டரும் அப்படியா?
வீட்டுக்கு வந்தபோது வேல்ஸ் நாட்டிலிருந்து கணேஸ், கமலா, தியாகராஜா மாமா வந்திருந்தனர். அதே நேரம் மகாலிங்கம் தங்கள் மகன் கண்ணனுடன் வந்தான்.
“எங்கே கீதா” ராகவன் தமக்கையைப் பற்றி விசாரித்தான்.
“கோயிலுக்குப் போய் விட்டாள்…. அர்ச்சனைக்கு உங்கள் வீட்டிற்தான் புதிய பெயர்கள் முளைக்கின்றனவே.”
“அவனுக்கு ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுக்க வேண்டும்” மகாலிங்கத்தின் கிண்டல் ராகவனுக்கு எரிச்சலைத் தந்தது.
“எங்கள் குடும்பதிலுள்ளோர் சிலருக்குப் புத்தியும் குழம்பி விட்டது” ராகவன் முணு முணுத்தான்.
வீட்டுக்கு வருவதே சிலவேளை எரிச்சலாக இருக்கிறது. அன்பும் ஆதரவும் உள்ள வீடு என்று ஓடோடி வந்த காலம் போய் இப்போது மறைமுகமாக வசவுகளும் திட்டலும் கிடைப்பது சிலவேளை சகிக்க முடியாதிருந்தது.
டெவீனாவைக் கண்டு சில நாட்களாகி விட்டன. ஜேர்ம னிக்குப் போய் வந்த நாளிலிருந்து இன்னும் நெருக்கமாகப் பழகவில்லை என்பது மனத்தை நெருடிக் கொண்டிருந்தது.
கல்லூரியின் எடிட்டிங் ரூமில் புவனா தன் செலுலோயிட் படத்துண்டுகளை ஸ்லை ஸரில் வெட்டி ஒட்டிப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”ஏன் ஜேர்மனியிலிருந்து திடீரென்று ஓடிவந்தாய்” சட்டென்று புவனா ராகவனைக் கேட்டாள்.
அவன் மறுமொழி சொல்லாமல் அவளைப் பார்த்தான்.
“ஸ்ரீவனுக்காக மட்டும்தான் நீ ஓடிவந்தாய் என்பதை என்னால் நம்ப முடியாது” அவளின் தீர்க்கமான கண்களில் இவனில் படர்ந்தது.
அவன் முகத்தைத் தாழ்த்தி ஸ்ரீம் பெக்கில் படம் பார்த் தான்.
“ராகவன், காதல் என்பது என்னவென்று தெரியுமா” அவன் மறுமொழி சொல்லவில்லை.
“காதல் என்றால் ஒருத்தரில் ஒருத்தர் வைக்கும் ஆசை மட்டுமல்ல, மரியாதையும்தான். அவளின் அன்பை மதிக்கப் பழகு, அறிவை உணர்ந்து கொள், அபிப்பிராயத்தைச் செவி கொடு, சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடு. சிறையிலடைத்துச் சுதந்திரத்தைப் பறிக்காதே”
“என்ன பிரசங்கம் நடக்கிறது? டெவீனா ஏதும் சொன்னாளா?”
“நீங்கள் இருவரும் ஒன்றும் சொல்லத் தேவையில்லை. பார்க்கத் தெரிகிறது”
அவன் மெளனமாக அவளின் படத்துண்டுகளை நம்பரின் படி ஒட்டி வைத்தான்.
“ராகவன் மற்றவர்கள் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங் களையும் உணர்ந்து கொள்ள அனுபவமும் மனப் பக்குவமும் தேவை. எங்கள் கலாச்சாரத்தை விட வித்தியாசமான கலாச்சா ரங்களைப் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது என்பதற் காக அந்தக் கலாச்சாரத்தை மட்டமாக நினைக்கக் கூடாது”
“புத்திமதிக்கு நன்றி” ராகவன் ‘நன்றி’ என்ற வார்த் தையை அழுத்திச் சொன்னான்.
“டெவீனா உன்னில் மிகவும் அன்பாக இருக்கிறாள் நீ அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக் கொள்” அவள் குரலில் பாசம், கனிவு, அத்துடன் கண்டிப்பு “உனக்குக் களைப்பாயிருந்தால் போ, நான் இயலுமான வரையில் நின்று எடிட்டிங் செய்கிறேன்”
“ஆமா, ரொம்பக் களைச்சிட்டன்.” புவனா வெளியேறினாள்.
கொஞ்ச நேரத்தில் டெவீனாவும் ஜேனும் வந்தார்கள். ஜேன் ஸ்ரீவனைப் பற்றி விசாரித்து விட்டுப் போய் விட்டாள்.
டெவீனா மிகவும் களைத்துக் காணப்பட்டாள். அவளை முத்தமிட்டு ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது. ஆனால் அது எத்தனையோ வருடப் பிரிவு போல் இருந்தது ராகவனுக்கு.
“ஒரு சிலர் இரவிரவாக எடிட்டிங் செய்ய திட்டம் போடுகிறார்கள்” டெவீனா சொன்னாள்.
வருட நடுப்பகுதியில் பெரும்பாலும் நடக்கும் வேலை யது. எடிட்டிங் செய்ய ஒரு குறிப்பிட்ட நேரம் தான் கொடுப டும். அதற்கிடையில் அவசர அவசரமாக எடிட்டிங் செய்வார் கள்.
வசதி படைத்த மாணவர்களென்றால் பிரைவேட்டாக எடிட்டிங் செய்ய ஏற்பாடு செய்வார்கள். புவனாவின் டாக்யுமென்ரரி பெரும்பாலும் சிக்கலில்லாத எடிட்டிங். அவர் ஸ்கிரிப்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ பின்னேரம் நின்று எடிட்டிங் செய்வதானால் நானும் உதவி செய்யட்டுமா” டெவீனா கேட்டாள்.
சந்தோசத்தில் மனம் துள்ளியது.
ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.
புவனா நிறையச் சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தாள். சாவியைக் கொடுத்தாள்.
“இரவு எட்டு மணிக்குப் பின் இருக்க வேண்டாம். செக்கியுரிட்டிக் காரர் கரைச்சல் தருவார்கள்”
புவனா எச்சரித்தாள். ஆனாலும் அவளுக்குத் தெரியும் பெரும்பாலான மாணவர்கள் சாவியை ஒப்படைப்பது போல் கொடுத்து விட்டு வந்து உள்ளுக்குள் பூட்டுப்போட்டுக் கொண்டு எடிட்டிங் செய்வார்கள் என்று.
ராகவன் எடிட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டான். டெவீனா தனது தாயின் சுகவீனம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்.
பின்னர் அன்ரோனியோவின் நிலை, மைக்கல் பொலிசாரி டம் சிக்கியிருக்கும் விடயம், ஸ்ரீவன் ஹாஸ்பிட்டலில் அட் மிட் ஆகியிருக்கும் விடயங்கள் பற்றிப் பேசினாள்.
கடைசியாகச் சாப்பிடும்போது, “ஏன் ஜேர்மனிக்குப் போய் வந்த நாளிலிருந்து என்னுடன் பழகுவதில்லை” டெவீனா அவனைப்பார்த்துக் கேட்டாள்.
“அப்படி ஒன்றுமில்லை”
“ராகவன் தயவு செய்து பொய் சொல்ல வேண்டாம்”. அவள் குரல் கரகரத்தது.
இந்த நேரத்தில் தேவையற்ற விடயங்களைப் பற்றி அவன் பேசி பிரச்சினையையுண்டாக்க விரும்பவில்லை. மௌனமாக விருந்தான்.
வெளியில் செக்கியூரிட்டிக் கார்ட் வரும் ஓசை கேட்டது. லைட்டை அணைத்து விட்டு மூச்சு விடாமல் இருந்தார்கள்.
இருளின் தனிமையில் அவள் மூச்சு அவன் கழுத்தை வருடியது. வெளியிலிருந்து வரும் லைட்டின் வெளிச்சம் ஜன்னலால் வந்து எடிட்டிங் ரூமில் குவிந்து தொங்கும் படச் சுருள்களைப் பாம்புகள் போலக் காட்டின. மங்கிய வெளிச்சத் தில் அவள் முகம் தேவதையாய் தோன்றியது.
“செக்கியூரிட்டி போய் விட்டானா” அவள் மெல்லக் கிசு கிசுத்தாள்.
”ம் போய் விட்டான்” அவளை அப்படியே எடுத்து முத்தமிட்டான்.
“இந்த நிமிடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்” அவள் முணு முணுத்தாள்.
பொன்னிறத்தியில் மெல்லிய மேசை விளக்கொளி ஜாலம் காட்டியது. பொங்கியெழுந்த இளமையின் பூரிப்பு அவனை போதையிற் தள்ளியது.
“மேக் லவ் ரு மி ராகவன்” அவள் அவனில் துவண்டாள். இரவு சொர்க்கமானது. நினைவு சரித்திரமானது.
அத்தியாயம் – 18
இந்தக் காதலர்கள் என்ன கோலத்திலிருப்பார்கள் என்று புவனா ஊகித்திருக்க வேண்டும்.
“பூனை பரதேசம் போனால் எலிகளுக்குக் கொண்டாட் டம் என்பதுபோல் செக்யூரிட்டியிடம் தப்பி விட்டீர்கள். அதிபர் வரப் போகிறார் ஓடுங்கள்” புவனா அவசரப்படுத்தினாள்.
அன்று பின்னேரம் வீட்டுக்குப் போனபோது அடித்து விட்ட பாம்புபோல் மிகவும் சோர்ந்து போயிருந்தான்.
ஆனந்தன் வந்திருந்தான். இலங்கையரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அம்மா சுடச் சுடத் தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். மைதிலி அப்போதுதான் வந்தவள் மௌனமாக மேலே போய் விட்டாள்.
“என்ன உங்கள் வீட்டில் உள்நாட்டுப் பிரச்சனையா”
“கண்டபாட்டுக்கு மனதையலைய விட்டால் எங்கே தான் பிரச்சனை வராது” அம்மாவின் குரலில் சோகம்.
ஆனந்தனுடன் இவன் வெளிக்கிட்டுக் கொண்டிருந்த போது “இந்த வார விடுமுறைக்கு எங்கேயாவது போகிறாயா” அம்மா கையில் முந்தானையைத் துடைத்துக் கொண்டு சொன் னாள். ஏதோ திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு சொன்ன தாகப் பட்டது.
இல்லை என்று தலையாட்டிவிட்டுப் போனான்.
வைகாசி மாத இளம்வெயில் லண்டனைத் தழுவியது. புவனாவின் எடிட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. புவனா இந்தியா போய்விட்டாள்.
ராகவன் டெவீனாவுடன் றொனி ஸ்காட் ஜாஸ் கிளப்புக் குப் போனான்.யூன், யூலை மாதங்களில் ஹாம்ஸ்ரட் ஹீத்தில் பகிரங்க வெளியில் நடக்கும் இசைக் கச்சேரி பற்றிச் சொன் னாள். அவனையும் இழுத்துக் கொண்டு போகத்திட்டம் வைத்திருப்பது அவள் தொனியிற் தெரிந்தது. அவனுக்கு ஜாஸ், பியானோ என்ற இசைகள் பிடிக்கும் என்று அவளுக்குத் தெரியும்.
அவனுக்குப் பிடித்தது வீணையும் புல்லாங்குழலும்; லண் டனுக்கு வந்த நாட்களில் அப்பா தேடித்தேடிப் போய் வீணை, புல்லாங்குழல் றெக்கோர்ட்ஸ் வாங்குவார்.
“என்ன யோசிக்கிறாய்?” டெவீனா கேட்டாள்.
“அப்பாவின் ஞாபகம் வந்தது”
அப்பாவுடன் அனுராதபுர வெயிலில் ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிட்டது ஞாபகம் வந்தது. அவர் தோளில் ஏறியிருந்து நல்லூர்த் திருவிழா பார்த்தது ஞாபகமிருக்கிறது. வன்னிக் குளக்கட்டில் இந்திரா குடும்பத்துடன் நடந்த ஞாபகம் வந்தது.
ஜாஸ் முடிய சென்ட்ரல் லண்டன் தெருவில் நடந்து வந்தார்கள். பளிச்சென்ற நிலவு வைகாசி இரவு மனத்திற்கு இதமளித்தது.
“நியு ஹேவன் பீச்சுக்கு போவோமா” அவள் திடீரென்று கேட்டாள்.
இவளைச் சந்தித்த நாட்களில் இவனையிழுத்துக் கொண்டு போன இடங்களில் ஒன்று.
“வெண்குன்றைத் தொட்டலையும் கடல் அலையில் தெறித்து விழும் நிலாத் துண்டுகள் ரசிக்க அழகாக இருக்குமில்லையா”
அவள் கனவுலகத்திலிருப்பதுபோலக் கேட்டாள்.
அவள் மனத்தை ஏதோ குடைகிறது என்று தெரியும்.
தாயின் நினைவு என்று அவனுக்குத் தெரியும். டெவீனா வின் தாய் இனிப்பிழைக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறாள் என்றும் தெரியும்.
ஜாஸ் கிளப்புக்குப் போனபின் ஸ்ரீவனைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தான். ஸ்ரீவன் இப்போது வீட்டுக்குப் போய் விட்டான்.
டெவீனாவுடன் பழகுவதும், அவளோடு திரிவதும் கனவு போலிருக்கிறது. நியு ஹேவன் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்த நேரம் இரவு பதினொரு மணியாய் விட்டது. முன்னொருதரம் வந்திருந்தபடியால் சுற்றும் முற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டான்.
அவள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தாயைப் பற்றிக் கேட்டு அவள் துயரை அதிகரிக்க அவன் விரும்பவில்லை. “ராகவன் என்னால் தாங்கமுடியாத துக்கம் வரும்போது நீ என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” அவள் குரலில் கெஞ்சல். அந்த இருட்டில் அந்தத் தனிமையில் காதல் புரிவது அபாயத்திற்குச் சவாலாயிருந்தது. நடுச்சாமத்தில் வீடு வந்த போது பாரிசிலிருந்து பொன்னம்பல மாமா குடும்பத்தி னர் வந்திருந்தது தெரிந்தது.
இந்திரா வித்தியாசமாக இருந்தாள். இவனை நேரே பார்த்துப் பேசினாள். முகத்தில் துணிச்சலும் அதேநேரம் கவர்ச்சியும் தெரிந்தது.
வார விடுமுறையில் எங்கும் போகாதே என்று மறைமுகமாகச் சொன்னது இதற்குத்தான் என்று இப்போது புரிந்தது.
பொன்னம்பலம் மாமாவின் மைத்துனரின் தாய் சுகவீனமாக இருப்பதால் அவர்களைப் பார்க்க இவர்கள் வந்திருப்பதாக அம்மா சொன்னாள்.
இலங்கையில் இந்திய அமைதிப்படை வந்திருப்பதால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.
கீதாவும் குடும்பத்துடன் போய் மகாலிங்கத்தின் தாய் தகப்பனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந் தாள்.
மைதிலி விடயம் பொன்னம்பல மாமாவுக்குத் தெரி யுமோ என்று ராகவன் ஒரு கணம் யோசித்தான். இந்திரா புத்திசாலி, ஒரு சில மணித்தியாலங்களில் கண்டு பிடித்துவிடு வாள் என்று ராகவன் யோசித்தான். மைதிலி வழக்கம்போல் மௌனமாகத் தானும் தன் வேலையுமாக இருந்தாள்.
அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை.
இந்திரா குடும்பத்தினரை லண்டன் நகரைச் சுற்றிக் காட்டக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லி அம்மா ராகவனுக்குச் சொன்னாள்.
அன்று அவன் புவனா வீட்டுக்குப் போய் எடிட்டிங் விடயமாகப் பேச யோசித்திருந்தான்.
பொன்னம்பல மாமா தான் களைத்துப் போய் இருப்பதாகச் சொன்னார்.
மாமியும் தான் வரவில்லை என்றாள். கலாவும் இந்திரா வும் மைதிலியைத் தங்களுடன் வரச்சொல்லிக் கேட்டார்கள்.
மைதிலி தமயனைப் பார்த்தாள்.
ராகவன் தர்ம சங்கடத்துடன் தங்கையைப் பார்த்தான். தான் புவனா வீட்டுக்குப் போவதைப் பற்றித் தயங்கிச் சொன்னான்.
அம்மாவுக்கு ஆத்திரம் வந்து விட்டது.
“என்ன அப்படிக் கண்டறியாத படிப்பு, ஞாயிற்றுக் கிழமையும் படிப்பு என்று சும்மா ஓடுறாய்” அம்மாவின் குரலில் மிகவும் ஆத்திரம். இந்திராவுக்கு நிலைமை புரிந்தது.
“இன்னொரு நாளைக்குப பார்க்கலாம்” என்று நிலைமை யைச் சமாளித்தாள்.
அவன் தனிமையாக நின்றபோது அவள் வந்தாள். “நாங்கள் என்ன தீண்டாச் சாதியா, எங்களுடன் வரப் பயப்படுகிறாய்” அவள் குரலில் கிண்டலா அல்லது சோகமா தெரியவில்லை.
“இந்திரா……” அவன் விளக்கம் கொடுக்க முதல் அவள் தன் இதழ்களில் விரலை வைத்து ‘உஸ்’ என்று அடக்கினாள்.
“ராகவன், நாங்கள் ஒன்றும் இலங்கையில் வன்னிக் குளக்கரைகளில் ஓடிப் பிடித்து விளையாடிய குழந்தைகளல்ல… நீ எனது பாரதி பாட்டுகளைக் கேட்டு ரசித்த காலத்தின் இனிமையும் இனிவராது…”
அவள் குரல் அடைத்தது. கண்கள் கலங்கின. அவன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். யாரோ வரும் சத்தம் கேட்டது. அவள் போய் விட்டாள்.
மாமா குடும்பத்தினர் பாரிசுக்குத் திரும்பிப் போன பின் இந்திராவைக் கொஞ்சக் காலம் தங்களுடன் நிற்கச் சொல்லி அம்மா கேட்டதாக கீதா சொல்லியிருந்தாள்.
அம்மா ஏன் இந்திராவை லண்டனிற் தங்கச் சொல்கிறார் என்று தெரியும். மைதிலிக்குப் புத்தி சொல்வதற்கு இந்திரா வைப் பாவிக்கப் போகிறாள் என்று திட்டவட்டமாகத் தெரியும்.
அடுத்தது!
அவன் நெஞ்சை அரிக்கும் கேள்வி. அம்மா மறைமுகமாக அவனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் விடயம், அதாவது வெள்ளளைக்காரப் பெண்களை வீட்டு மருமகளாக நான் ஏற்க மாட்டேன் என்பதாகும்.
அம்மாவின் ஆத்திரம் மைதிலியிலும் தன்னிலும் எவ்வ ளவு தூரம் பதிந்திருக்கிறது என்று அவனுக்குத் தெரியும் மைதிலியின் சோகம் தாங்க முடியாதிருக்கிறது. மகாலிங்கத் தின் கிண்டல் எரிச்சல் வருகிறது. இந்திராவின் வசனங்கள் இரட்டைக் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.
அம்மா இவனை ஏனோ நம்பியிருக்கிறாள்.
கல்லூரிப் பொறுப்புக்கள் தலையில் ஏறின. இந்த வருட இறுதிக்குள் அவர்கள் அடுத்த இறுதிவருடத்திற்கான திட்டங்களை அதிபருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
இவ்வருட இறுதி மாணவர்களை புவனா குழுவினரின் தயாரிப்புகளில் உதவி செய்யத் தன்னையிணைத்துக் கொண்ட போதுதான் தான் மூன்றாவது வருட மாணவனாக வந்தால் என்னென்ன பிரச்சினைகளைத் தரும் என்று புரிந்தது. கல்லூரி தரப் போகும் தயாரிப்பு உதவிப் பணம் (Production Fund) மாணவர்களின் தயாரிப்பில் பத்து வீதத்தையும் முடிக்காது. பெரும்பாலான மாணவர்கள் குடும்பத்தினரின் உதவியுடன் தான் தயாரிப்புக்களை முடிப்பார்கள்.
அல்லது வெளியிலுள்ள தொடர்புகளால் பிலிம் ஸ்ரொக், எடிட்டிங் உதவி என்பவற்றைப் பெற்றுக் கொள்வார்கள்.
டெவீனா, பிலிப் போன்றவர்கள் அதைப் பற்றிக் கவ லைப் படப்போவதில்லை. வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
‘நான் என்ன செய்ய? மகாலிங்கத்திடம் உதவி கேட்பதா?’ எரிச்சலுடன் கல்லூரியைக் கடந்து வந்தவனுக்கு முன்னால் டெவீனாவின் கார் நின்றது.
“என்ன உலகம் மறந்த யோசனை” அவன் பதில் சொல் லாமற் சிரித்துக் கொண்டான்.
அவள் கார் கதவைத் திறந்து விட்டாள்.
“இலங்கைப் பிரச்சினைகள் பற்றி நிறையச் செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. அது பற்றியா யோசிக்கிறாய்”
அதற்கும் அவன் மறுமொழி சொல்லவில்லை. வெளியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
“வீட்டில் தகராறு” அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“என்னைப் பற்றியும் பேச்சு வந்ததா”
அவன் ஆச்சரியத்துடன் டெவீனாவைப் பார்த்தான். அம்மா டெவீனா பெயர் சொல்லித் திட்டாவிட்டாலும் அம்மா வின் வேதனைகளுக்கு டெவீனாவும் ஒரு காரணம் என்று தெரியும்.
“வெள்ளைக் காரப் பெண்கள் கட்டிலுக்குத்தான் சரி. கல்யாணம் நடத்திக் குடும்பம் நடத்தச் சரியில்லை என்று அம்மா சொன்னாளா” டெவீனாவின் குரலில் கிண்டலா அல்லது உண்மையாகவே அவனிற் சிரத்தையா என்று கண்டு பிடிக்க முடியாமலிருந்தது.
“எப்படித்தான் இருந்தாலும் எங்கள் கலாச்சாரத்தின் பிடிப் புக்கள் எங்களை விட்டுப் போகாதுதானே”
டெவீனாவே பேசிக் கொண்டிருந்தாள்.
“அப்படி என்றால் என்ன” அவன் தன் கேள்வியைச் சுருக்கமாகக் கேட்டான்.
“உங்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு கல்யாணம், குழந்தை கள், வீடு, குடும்பப் பொறுப்பு என்று விரிந்திருக்கும் என்று நினைத்திருக்கிறேன்”
கார் அவளின் வீட்டு முன் நின்றது.
இது அவளின் வீட்டுக்கு வரும் இரண்டாவது தடவை. அவள் அவனுக்குக் கொடுத்த சாவி அவனிடம் இருக்கிறது. அந்தச் சாவியைப் பாவித்து அவளின் வீட்டின் கதவைத் திறக்க அவனுக்கு இதுவரை தேவையிருக்கவில்லை.
திறந்தவுடன் ரேப் ஒன்றைப் போட்டாள். அவனுக்குப் பிடித்த ஜாஸ் இசை அறையை நிறைத்தது. ஜோன் கோட்ரன் டின் ஜாஸ் இசையும் கதையும் கருத்தையும் கவர்ந்தது.
“அம்மாவின் ஆசைகள் சாதாரண மனிதர்களின் ஆசைகள்” அவள் காரில் வரும்போது சொல்லிக் கொண்டு வந்த விடயங்களை அவன் மறக்கவில்லை என்பது அவனின் மறுமொழியில் தெரிந்தது.
“சம்பிரதாயத்தின் நிர்ப்பந்தங்கள்” அவள் அவனுக்கு ஒரு பீர்க் கானைக் கொடுத்து விட்டுத் தனக்கு ஆரஞ்சு ஜுசை எடுத்துக் கொண்டாள்.
“பிறந்து விட்ட குழந்தைகளை உருப்படியாக வளர்க்கத் தெரியாத மனிதர்கள் எத்தனைபேர் தெரியுமா? சமுதாயம் பழிக்கும் என்பதற்காக கல்யாணப் போர்வைக்குள் புகுந்து கொண்டு சுதந்திரத்தை இழக்கும் பெண்களின் கண்ணீரைக் கண்டிருக்கிறாயா”
“உனக்கு புவனாவும் ஜேனும் நல்ல புத்திகள் தான் சொல்கிறார்கள்”
அவன் சிரித்தான். மெல்லிய பட்டுக்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த அவள் அறை கலைஞனின் தியேட்டர் போலிருந்தது. காதல் புரிந்தார்கள். “நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை….குழந்தையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. உலகத்தில் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் இறக்கிறார்கள். அந்தப் பட்டினியைப் போக்க என்னால் முடியுமென்றால் எதுவும் செய்யப் பார்க்கிறேன். எனக்கென்று ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளாமல் உலகத்தில் அன்புக்கு ஏங்கும் குழந்தைகளுக்கு எனது வாழ்க்கையின் கொஞ்சத்தையாவது கொடுக்க நினைக்கிறேன்” அவளின் நேர்மை அவனை அவளில் மேலும் ஆசையைத் தூண்டியது.
ராகவன் பதில் பேசவில்லை. வீட்டில் இந்திரா கல்யாணத்துக்குள் இவனுடன் இணைக்கும் கற்பனையுடன் வாழ்கிறாள்.
இவள் என்றாலோ….?
அவன் பெருமூச்சு விட்டான்.
அடுத்த சில மாதங்கள் மிகவும் கொடுமையானவை என்று ராகவனின் வாழ்வில் பதிந்து விட்டது.
யூலை மாதத்தில் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வந்து இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுடன் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் தலைவர் பிரபாக ரனை டெல்லியில் வைத்துவிட்டு ரஜீவ் வந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது குறித்து இலங்கைத் தமிழ் அரசியலை கவனித்தவர்கள் கவலை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்தியர்களின் அமைதிப்படை யாருக்காக இலங்கைக்கு வந்தது என்ற கேள்வி பலரிடை எழுந்தது. இலங்கையில் நிச்சயமாக அமைதி வருமா என்று ஏங்கிக் கொண்டிருந்த தமிழர் அமைதிப் படைக்கு மலர் மாலை போட்டு வரவேற்றார்கள் மக்கள்.
லண்டனின் புவனாவின் வகுப்பு மாணவர்களின் படத் தயாரிப்புக்கள் முடிந்து படக் காட்சி நடந்தது.
புவனா முதலாம் வகுப்பிற் பாஸ் பண்ணியிருந்தாள்.
இந்திய சினிமா பற்றி அவள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தாள். அவளின் கடுமையாக உழைப்புக்கு அவளின் சினேகிதன் றிச்சார்ட் மிகவும் உதவியாயிருந்தான்.
இந்திய சினிமா பற்றிய அவள் கருத்துக்கள் அவனைச் சிந்திக்கப் பண்ணின.
“ராகவன், கல்கத்தா, பம்பாய் போன்ற பெரிய நகரங்க ளில் வாழும் ஏழைகளுக்கு மூலாதாரமான வாழ்க்கை வசதி களே கிடையாது. அவர்களுக்கு இந்தியச் சினிமாப் படம் ஒரு பொழுது போக்காக மட்டுமல்ல ஒரு கொஞ்ச நேரம் குளிர் காற்று நிறைந்த தியேட்டர்களில் இருக்கவும் உதவி செய்கிறது. சினிமாத்துறையை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அத்துடன் சமய, சாதி, வர்க்கம்,பெண்ணடி மைத் தனம் என்று ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து கிடக்கும் சமுதாய அமைப்பில் புரட்சிப் படங்கள் எதிர்பார்க்க முடியாது”
“நீ இந்தியா போய் வந்தபின் மிகவும் மாறி விட்டாய்” ராகவன் வியப்புடன் கூறினான்.
“மேலை நாட்டில் வாழ்ந்து கொண்டு மேலைநாட்டுச் சிந்தனைகளினாற் தாக்கப்பட்டு வாழும் எங்களுக்கு இந்தியா வில் இன்னும் வலிமையாயிருக்கும் பழைய கொள்ளைகளின் தாக்கத்தைப் புரிய முடியாது. பூஜை போட்டுப் படம் எடுத்து, நல்ல நேரம் பார்த்து படம் வெளியிட்டு அதிர்ஷ்டமான நடிகைகளை அமர்த்திப் படம் எடுத்து இந்தியத் திரையுலகம் இன்னும் மேற்கு நாட்டில் வாழும் நாம் கற்பனை செய்ய முடியாத ‘பழம்’ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை மாற்ற நினைப்பது மலையை அசைப்பது போலாகும்”
”சத்யயித்ரே, சியாம் பெனகால், மிரான் சென்; அவர்களில் சென் போன்றோரின் சிந்தனை வித்தியாசமாக இருக்கிறதே” அவன் தலையைச் சொரிந்து கொண்டான்.
“ஆமாம் இந்தியத் திரைப்படத்தைத் தயாரிப்பவர்களில் பலர் சத்யயித்ரே போல் புத்தி ஜீவிகள் இல்லை. சத்யயித்ரேக்கு பிரன்சிய மேதை என்று சொல்லப்படும் றெனோவின் உறவு கிடைத்தது ஒரு திருப்பம் என்று நினைக்கிறேன்”
புவனா இந்தியத் திரைப்படத்தைப் பற்றி மேலும் விளக்கி கக் கொண்டிருந்தாள்.
“படிப்பு முடிந்து விட்டது என்ன செய்யப் போகிறாய்” ராகவன் கேட்டான். லண்டனில் கறுப்பு மாணவர்கள் திரைப்படப் பட்டப் படிப்பின் படும் கஷ்டங்களை அவன் அறிவான்.
“தெரியாது. ஒரு சில வருடங்கள் உலகம் சுற்றிப் பார்க்கலாம் என்றிருக்கிறேன். றிச்சார்ட்டும் சம்பந்தித்திருக்கிறான். உழைப்பு, குடும்பம் என்ற பொறுப்புக்கள் வந்தால் இளம் வயதில் பார்க்க ஆசைப்பட்ட பலவற்றைப் பார்க்க முடியாமற் போகும்”
“எங்கே போவதாக உத்தேசம்’
“இந்தியாவை முடியுமானால் ஆறுமாதம் தரிசிக்கப் போகிறோம். அதன் பின் றிச்சார்ட்டின் தமக்கை அவுஸ்திரோ லியாவில் இருக்கிறார். அவளைப் பார்க்கப் போகிறோம்”
“இலங்கையில் தற்போது அமைதி கொஞ்சம் இருப்பதால் ஆனந்தன் என்ற நண்பனும் எனது தமக்கை குடும்பத்தினரும் இலங்கை போய் விட்டார்கள்”
“நீ எப்போது போகிறாய்”தான் செய்து கொண்டிருந்த வடையை எண்ணெயிற் போட்டபடி கேட்டாள்.
“தெரியாது. படிப்பு முடியட்டும்”
“நான் போவதானால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் போவேன். கல்லூரித் தொடர்புடன் உறவு முடிந்து விட்டதாக நினைக்காமல் எட்டிப்பார்”
“நீ உதவி செய்யாவிட்டால் என் ஸ்கிரிப்ட் உருப்படியா காது. ஜனவரிக்கு முதல் ஸ்கிரிப்ட் எழுத உதவி செய்”
“கட்டாயம், நீ எனக்குச் செய்த உதவியை மறக்க முடியுமா”.
அவள் பாசத்துடன் அவனின் தலையைத் தடவி விட்டான்.
கீதாவும் குழந்தைகளும் அடிக்கடி வராத வீடு சூனியமாக இருந்தது.கீதா குடும்பத்தினர் மகாலிங்கத்தின் தாய் தகப்பனைப் பார்க்க யாழ்ப்பாணம் போய்விட்டனர்.
ஆனந்தன் யாழ்ப்பாணத்திலிருந்து கடிதம் எழுதியிருந்தான்.
“இலங்கையில் தமிழர் அநியாயமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். பட்டினி போடப்படுகிறார்கள் என்ற செய்திகளால் அனுதாபப்பட்ட தமிழ் மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் கடைசியாக அமைதிப்படை என்ற பெயரில் ஒரு லட்சம் சிப்பாய்களை இராணுவ ஆயுதங்களுடன் அனுப்பியிருக்கிறார்கள். அமைதிப் படையா ஆள வந்த படையா என்று தெரியாமல் மக்கள் திணறுகிறார்கள். இவர்கள் யாருக்கு உதவி செய்ய வந்தார்கள் என்பது புதிராக இருக்கிறது”
என்ற விதத்தில் எழுதியிருந்தான் ஆனந்தன்.
“எத்தனையோ ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் இறங்கியதும் ஏன் மூலைக்கு மூலை இப்படி இந்திய இராணுவ வாகனங்கள் நிற்கின்றன என்று பயமாக இருக்கிறது”.
கீதா அம்மாவிற்கு எழுதிய கடைசிக் கடிதம் அது.
ஸ்காட்லாந்தில் டெவீனாவின் தாயின் நிலை பாரதூரமாக இருப்பதாக டெவீனா போன் பண்ணினாள். தகப்பன் அமெரிக்காவிலிருந்து உடனடியாக வருவதாகவும் தான் அடுத்த நாள் போவதாகவும் சொன்னாள்.
அவள் போன் பண்ணியது அக்டோபர் மாதம் ஆறாம் திகதி பின்னேரம். அன்று தான் இந்திரா பாரிஸ் திரும்பினாள். மைதிலியுடன் மிக நெருங்கிப் பழகி மைதிலியைக் கொஞ்சம் சந்தோசமாக வைத்திருந்த இந்திராவில் ராகவன் மிகவும் நன்றியாக இருந்தான்.
டெவீனாவின் டெலிபோன் கோல் வந்ததை இந்திராதான் எடுத்தாள்.
“உங்களுக்குத்தான்” மேலேயிருந்து இறங்கி வந்த ராகவனிடம் போனைக் கொடுத்தாள். கொடுத்த போது அவள் பார்வையிற் தெரிந்த கோரத்தை அவனால் தாங்க முடிய வில்லை.
டோவர் துறைமுகத்திற்கு அவளை கொண்டுபோய்க் கப்பல் ஏற்ற கணேசும் கமலாவும் வந்திருந்தனர்.
இந்திரா “வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்ட போது ராகவன் டெவீனாவைப் பார்க்கப் போக அவசரப் பட்டுக் கொண்டிருந்தான்.
டெவீனா அடுத்த நாள் ஸ்காட்லாந்து போகிறாள் என்றும் தாயின் நிலையைப் பார்த்து எவ்வளவு நாள் தங்கமுடியுமோ அவ்வளவு நாள் தங்கப் போவதாகவும் சொன்னாள்.
இந்திராவை வாயிற்படி வரை வந்து வழியனுப்பிய தாய் அவள் போனதும் மகனைப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.
“உனக்கு இப்படியான லெட்சுமியான பெண் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கா” அம்மாவின் கண்களில் நீர்.
– தொடரும்…
– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
