அவனும் சில வருடங்களும்
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 30
(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

அடுத்த கிழமை கலவரம் லண்டனில் பல இடங்களிலும் வெடித்தது.
இன ஒதுக்கலுக்கு எதிராகக் கறுப்பு இன இளைஞர்களின் எழுச்சியைக் கண்டு பிரித்தானிய அரசாங்கம் ஆட்டம் கண்டது.
பிரதம மந்திரி மார்க்கரெட் தச்சரின் மந்திரி சபையிலுள் ளோர் பலர் பண்டைக்கால பிரபுக்கள் பரம்பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
“அடிமைகளாக எங்களால் மேற்கிந்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பின்னர் கூலிகளாக பிரித்தானியா வுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் எங்களுக்கெதிராகப் போர் தொடுப்பதா”
மந்திரி சபை தனது போலிஸ் பட்டாளத்திற்கு அதி முக்கிய அதிகாரங்களைக் கொடுத்தது. அதன் எதிரொலியாய் லண்டனில் மட்டுமல்லாது இங்கிலாந்தில் பல பாகங்களிலும், பேர் மிங்காம், லிவர்பூல், லூட்டன் போன்ற பாகங்களிலும் கலவரம் வெடித்தது.
இலையுதிர் காலத்தில் மொட்டையாய் நிற்கும் மரங்கள் கலவரத்தில் பற்றியெரிந்த கட்டிடங்களின் பின்னணியில் பயங் கர எலும்புக் கூடுகளாகப் பிரமை தந்தன.
பிதிக்ஸ்ரன் நகரில் கோடிக்கணக்கான பெறுமதி பெற்ற கடைகள், கட்டிடங்கள், அரசாங்க ஸ்தாபனங்கள் கலவரத்தில் நாசமாயின. பிரபு கார்மன் என்பவரின் தலைமையில் அரசாங் கம் ஒரு விசாரணைக் கொமிஷனை நியமித்தது.
லண்டனில் நடக்கும் கலவரத்தின் எதிரொலி கல்லூரிகளி லும் பிரதிபலித்தது.
“இந்தக் கொடுமைகளைப் பார்த்து மனம் எரிகிறது.”
டெவீனா சொன்னாள்.
மைக்கல் வெடித்தான்.
“கறுப்பு நிற மக்கள் என்றால் காட்டு மிராண்டிகளாக நினைத்து நடத்தினால் எப்படி அவர்கள் தாங்குவார்கள்?”
“இலங்கையில் சிங்களவர் தமிழர்களை யடக்குகிறார்கள். உலகில் பல பாகங்களிலும் சாதி, மத அடிப்படையில் மனிதர்கள் அடக்கப்படுகிறார்கள். அடக்கப்பட்ட மனிதர்கள் எப்போதும் அடங்கியிருப்பதில்லை. எப்போதோ ஒரு நாள் சுதந்திரத்திற்காகப் போராடாமல் இருக்க மாட்டார்கள்.”
இவர்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த புவனா கேட்டாள். “அப்படி என்றால் இந்தியாவில் ஏன் கோடிக்கணக்கான மக்கள் வர்ணாஸ்ரமம் என்ற போர்வையில் மனிதத் தன்மையற்று நடத்தப்படுகிறார்கள். அவர்கள் எப்போது போராடுவார்கள்.”
அவள் கேள்வி பிலிப்புக்கு விசித்திரமாக இருந்திருக்க வேண்டும். புவனாவை ஆர்வத்துடன் பார்த்தான். “இங்கிலாந்தில் எப்படி மறைமுகமான சட்ட திட்டங்களால் கருப்பு நிற மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அதே போல் இந்தியாவில் பலதரப்பட்ட முன்னுக்குப் பின் முரணான தத்துவங்களால் மக்கள் மதவாதிகள் குழப்பி வைத்திருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் மகாத்மா காந்தி மனித நேயத்தின் மேன்மையை அஹிம்சா வாதியில் போதித்ததை உலகத்தின் பெரும்பகுதியைத் தனது ஆட்சியில் வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அதியுன்னத அதிகாரமே தலை வணங்கியது. அதே நேரத்தில் அந்த புனித உயிரைக் குடித்தவன் கடவுளின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் பிராமணியன் ஒருத்தனே. உலகத்தில் அடக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் அடக்கி வைக்க எந்த வித தந்திரத்தையும் பாவிக்க அதிகார வெறி கொண்டவர்கள் தயங்கப் போவதில்லை. மதத்தை ஒரு ஆயுதமாகப் பாவிப்பார்கள், மொழியை ஒரு கருவியாகப் பாவிப்பார்கள். நிறத்தை ஒரு அதிகார சின்னமாகப் பாவிப்பார்கள்.”
“அதையெல்லாம் பார்த்துக் கொண்டு மௌனமாக இருப் பது அப்படியான கொடுமையானவர்களுக்கு எங்கள் சம்மதத் தைக் கொடுப்பது என்பதாகும். ஒரு தனி மனிதனின் சுயமை நேர்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.”
டெவீனா உணர்ச்சியுடன் பேசினார்.
“அப்படியானால் உனது தகப்பனிடம் சொல்லி அவருடைய தேயிலைத் தோட்டங்களை எல்லாம் கென்யா மக்களிடம் ஒப்படைக்கச் சொல்” ஜேன் கோபத்துடன் கூறினாள்.
“இன்னும் இருநூறு வருடங்களில் உலகத்தில் வெள்ளையரின் தொகை பத்து வீதமாக மட்டுமே இருக்கும். இருந்தும் அவர்கள்தான் அதிகாரத்தை வைத்திருப்பார்கள். அமெரிக்கா தன்னால் முடிந்தவரை உலக நாடுகளில் குழப்பத்தையுண்டாக்கும். பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறும் நாடுகளைத் தன் கைப்பாவையாக வைத்துக் கொள்ளும். அமெரிக்காவின் தந்திரத்தில் ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் பெரிய சர்வாதிகள் தோன்றுவார்கள். அவர்களின் ஆட்சியில் சாதாரண மக்கள் முன்னேறப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் தலைவர்களின் குடும்பங்கள் மட்டும் குபேர வாழ்க்கை நடத்தும்.”
ராகவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அதிபர் ஜான் பேர்ன்ஸ்டைன் வந்து சேர்ந்தார்.
“என்ன அப்படியே சோர்ந்துபோய் இருக்கிறீர்கள்.”
“லண்டனில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்கள் மிகவும் துக்கமாக இருக்கிறது.”
ஸ்ரீவன் அலுப்புடன் கூறினான்.
அதிபர் பாசத்துடன் அந்த இளம் மாணவர் கூட்டத்தைப் பார்த்தார்.
”உங்கள் சிந்தனைகளின் தெளிவு உங்கள் சினிமா புரடக்ஸனில் தெரியட்டும். ஞாபகமிருக்கிறதா? போன கிழமை சினிமாவும் சமுதாய வளர்ச்சியும் என்ற தலைப்பில் நான் நடத்திய சொற்பொழிவு? ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்கிறேன். அமெரிக்காவிலுள்ள பிற்போக்கு வாதிகள் முற்போக்கு சிந்தனையுள்ளோரை சிறை பிடித்த போது சார்ளி சப்ளின் போன்ற சினிமாக்காரர் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்களா? அவர் ஹிட்லரைக் கிண்டலடித்து எடுத்த ‘த டிக்டேட்டர்’ பார்த்தீர்கள். சினிமாத் துறையில் ஒரு சிந்தனையாளரின் படம் எவ்வளவு தூரம் சமுதாயச் சீரழிவை அம்பலப்படுத்துகிறது என்பது தெரிகிறதா? உங்கள் சிந்தனைகளைச் சீர்படுத்துங்கள், சிந்தனையைச் செயல்படுத்துங்கள்.”
அன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
அவளாகச் சொல்லும்வரை தானாகக் கேட்டு அவள் கோபத்தைக் கூட்ட விருப்பமில்லாமல் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
மைதிலியைக் காணவில்லை. யாரோ சினேகிதி வீட்டுக் குப் போயிருக்கலாம். ரேடியோவைத் திருப்பிவிட்டான். லண் டனில் நடக்கும் கலவரங்கள் பற்றி சமுக அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
கீழே சத்தம் கேட்டது. கீதா குழந்தையுடன் வந்திருக்கி றாள் என்று தெரிந்தது. சத்தியா ஓடிவந்து மாமாவில் ஏறிக் கொண்டாள். “எப்படி பாலுமகேந்திரா” மகாலிங்கம் ராகவ னைக் கேட்டான்.
மகாலிங்கத்தின் கிண்டலைப் பொருட்படுத்தாமல் தனது தமக்கையுடன் பேசிக் கொண்டிருந்தான்.
கீதாவின் முகத்தில் புதுப் பொலிவு? என்னவாயிருக்கும்? மகாலிங்கம் ஒரு புதுக்கார் வாங்கியிருக்கலாம் அல்லது வீட்டில் இன்னொரு மாற்றம் செய்து கொண்டிருக்கலாம். ஏதோ ஒன்று செய்யாமல் மகாலிங்கத்தால் இருக்க முடியாது. அது வும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயம் தன்னை ஒரு பெரிய மனிதனாக மதிக்க வேண்டும் என்பதற்கான அளவுப் படிகளாக எதையும் செய்பவன் மகாலிங்கம்.
“என்ன முகத்தில் சந்திர சூரியரெல்லாம் பளிச்சிடுது” தமக்கையைச் சீண்டினான் ராகவன்.
மகாலிங்கம் திரும்பிப் பார்த்தான். “உமக்கு ஒரு மருமகன் பெற்றுத் தரப்போகிறாளாம்… எப்போது பெட்டை பெற்றுத் தரப் போகிறாய்.”
“அக்கா ரொம்ப சந்தோசம்” ராகவன் பாசத்துடன் தமக் கையைப் பார்த்தான். சத்தியாவுக்கு மூன்று வயதாகிறது. சத்தியாவுக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறந்தால் அவள் எவ்வளவு சந்தோசப்படுவாள்?
அந்த நேரம் ஆனந்தன் வந்து சேர்ந்தான். பேச்சு திசைமாறி யது. ஆனந்தன் இலங்கையில் தமிழ்ப் பேராளிகளுக்குள் நடக்கும் மோதல்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மகா லிங்கத்திடமிருந்து தப்பியோட நினைத்த ராகவனுக்கு ஆனந்த னின் வருகை சந்தோசமாக இருந்தது. இருவரும் வெளியில் நடந்தனர். குளிர் காற்றும் மழையும் உடலைச் சில்லிடப் பண்ணியது.
“இலங்கைச் சிங்கள ராணுவத்தை ஒன்றாகத் திரண்டு எதிர்ப்பதற்குப் பதிலாக இப்படி ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொண்டிருக்கிறார்களே” ராகவன் வேதனைப் பட்டான்.
“இது எந்த விடுதலைப் போராட்டத்திலும் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி. விடுதலைப் போராட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு சமுதாய விரோதிகளும், புல்லுரிவிகளும் மக்களைப் பல்வேறு விதங்களில் கொடுமைப் படுத்துவதைத் தவிர்க்க வேறு வழியில்லை.”
“தமிழனைத் தமிழன் கொன்று குவிப்பதுதான் அதற்கு வழியா”
“சமுதாயத் துரோகிகள் யாராயிருந்தாலும் அவர்களை யடையாளம் கண்டு தண்டனை கொடுப்பது மக்களின் விடுதலை போராட்டத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோரின் முக்கிய கடமை என்று நினைக்கிறேன்.”
“எங்களையே நாங்கள் அழித்துக் கொண்டால் எங்கள் மக்களின் விடிவு எப்படிப் பிறக்கும்.”
“எங்கள் மக்களின் விடுதலை எப்போது கிடைக்கும் என்று திகதி, நட்சத்திரம் பார்த்துச் சொல்வதா? எப்போது மக்களும் விடுதலை வீரர்களும் ஒன்றாகத் திரண்டு அநியாயத்தை எதிர்க்கிறார்களோ அப்போதுதான் விடுதலை வரும். மக்கள் ஒன்றிணையாத எந்த விடுதலைப் போராட்டமும் வெற்றியடையாது. மக்களின் உணர்வுகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களாக மட்டுமல்லாது, அறிவு பூர்வமாக ஒரு விடுதலையுணர்வாகப் பரிமாணம் எடுக்கும்வரை மக்கள் பார்வையாளர்களாகத்தானிருப்பார்கள். பங்களிப்பாளர்களாக மாறாதவரை போராட்டம் வெற்றியடையாது.”
ஆனந்தன் பேச்சில் தெளிவு நம்பிக்கை, பரிபூரணமாக எதிர்பார்ப்புத் தெரிந்தது.
“உமது படிப்பு எப்படிப் போகிறது” என்று கேட்ட ஆனந்தன் ராகவனையுற்றுப் பார்த்தான்.
“என்ன கேட்கப்போகிறாய்” ராகவன் நண்பனின் முகத் தையாராய்ந்தபடி கேட்டான்.
”அன்று நான் வீட்டுக்கு வந்தபோது நீ இருக்கவில்லை. அம்மா உன்னைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள்.”
ராகவன் மௌனமானான். பின்னர் பெருமூச்சு விட்டபடி வானத்தைப் பார்த்தான்.
குளிர்ந்த மேகக் கூட்டங்கள் மிகச் சோர்ந்த கிழவிபோல் மெல்லமாக ஊர்ந்து கொண்டிருந்தது. மேகக் கூட்டங்கள் நடுவே கண்ணடிக்கும் நட்சத்திரங்கள் நீலப்பட்டில் பதித்த வைரங்கற்போல் கண் சிமிட்டின.
இருவரும் ஹைரோட்டில் நடந்து கொண்டிருந்தார்கள். கிறீன் ஸ்ரீட் என்று சொல்லப்படும் அந்தப் பகுதி ஒரு நாளும் தூக்கம் காணாத பகுதி. துருக்கிய, சைப்ரஸ் வியாபாரிகளின் கடைகளால் நிறைந்த பகுதியது. எப்போதும் சந்தடியாயிருக்கும்.
“அம்மாக்கள் எப்போதும் எதையோ நினைத்துக் கொண்டு துன்பப்படுவார்கள், மற்றவர்களுக்காகத் துக்கப்படுவதில் சந்தோசம் காண்பவர்கள் அம்மாக்கள் என்று நினைக்கிறேன். ப்ராய்ட் சொல்வதுபோல் சந்தோசங்களைத் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதன் மூலம் அதாவது ‘மஸாக்கி ஷம்’ என்று சொல்வதன் மூலம் பெற்றுக் கொள்பவர்கள் அம்மாக்கள்.” ராகவன் அலுத்தபடி சொன்னான்.
“நீ நடுச் சாமத்தில் வெள்ளைக்காரப் பெண்ணுடன் வந்தது பற்றி மிகவும் துக்கப்பட்டாள்.”
“சும்மா துக்கப்படாவிட்டாலும் மகாலிங்கம் துக்கப்பட வைத்திருப்பான்.”
“எல்லாத் தாய் தகப்பனும் தங்கள் குழந்தைகள் தங்கள் கலாச்சாரத்துடன் சேர்ந்து நிற்பதைத் தான் விரும்புவார்கள்.”
“நான் அப்படி என்ன வித்தியாசமாகச் செய்து விட்டேன். காற்சட்டைக்குப் பதில் வேட்டியணியட்டுமா?”
“சும்மா எரிச்சல் படாதே”
“கலாச்சாரம் என்று சொல்கிறாயே அது என்ன? ஏதோ கட்டி வைத்த கோபுரமா சார்ந்து நிற்க? ஆனந்தன் கலாச்சாரம் ஒவ்வொரு வினாடியும் மாறுகிறது. மற்றக் கலாச்சாரத்துடன் சேர்கிறது. நேற்றைய சிந்தனைகளையும் இன்றயை சிந்தனைகளையும் ஒரே விதத்தில் எடைபோட முடியாது. மனித அனுபவங்கள் வித்தியாசமானவை. அனுபவங்கள் மனிதனின் சிந்தனையைத் தெளிவாக்குகிறது, அல்லது சில வேளைகளில் மாற்றமடையப் பண்ணுகிறது. அம்மா நினைப்பது போல் நான் நினைக்க முடியாது. அம்மா எதிர்பார்ப்பதுபோல் நான் வாழ முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சுயமான சிந்தனை யில் வழி நடத்தப்படுவதை மற்றவர்களுக்காக வாழ்வது என்று சொல்வது மிகவும் போலித்தனமான விடயம். சுய நலமில்லாத எந்த மனிதனும் உலகிலில்லை.”
“ஆவேசப்படாதே, அம்மா உனது நன்மையைத் தான் எதிர்பார்க்கிறாள்.”
ஆனந்தன் நண்பனின் முதுகிற் தட்டிக் கொடுத்தான்.
”நீ சினிமாப் படிப்புக்கு மட்டும் போகவில்லை. சினிமா உலகத்தில் நுழைந்திருக்கிறாய். மிகவும் மாயையான உலகம். போலி அனுபவங்களின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதே.”
ராகவனுக்கு ஆனந்தன் என்ன சொல்கிறான் என்று புரிந் தது. வீட்டுக்கு வந்தபோது அம்மாவையும் மைதிலியையும் தவிர யாருமில்லை.
மைதிலி அழுதிருக்க வேண்டும். முகம் சிவந்திருந்தது. அழுகையிலும் ஒரு நாகரீகம், அழுத பெண்ணின் சோகம் தெரியவில்லை. அழுகையிலும் மைதிலியின் பிடிவாதமான, அல்லது சுயமையான தோற்றம் பரிமளித்தது.
அத்தியாயம் – 8
“ஏன் எனக்கு இப்படித் தலையிடியை இருவரும் தருகிறீர்கள்.”
அம்மா விம்மினாள்.
என்ன செய்து விட்டம்? ராகவன் குழம்பி விட்டான். மைதிலி மௌன சித்திரமாக விருந்தாள்.
அம்மாவிடம் தர்க்கம் பண்ணுவதா அல்லது மைதிலி போல மௌனத்துடன் அம்மாவைச் சமாதானப்படுத்துவதா?
தன் அறைக்குள் போய்விட்டான். அடுத்த கிழமை நடக் கும் செமினாருக்குத் தேவையான நோட்சைப் படிக்க வேண்டியிருந்தது.
மனம் எதிலும் செல்லவில்லை.
அம்மாவை நினைக்கப் பரிதாபமாகவிருந்தது. சாதாரண வாழ்க்கையின் சாதாரண எதிர்பார்ப்புக்களுடன் வாழ்பவள் அம்மா. தனது மகன் டொக்டராகவோ, எஞ்சினியராகவோ வரவேண்டும் என்று எதிர்பார்த்திருப்பாள். இலங்கைத் தமிழரின் முக்கிய தொழில்கள் மெடிசின், எஞ்சியனரிங், சட்டத் துறை இப்போதெல்லாம் கொம்பியூட்டர் இதை விட்டு ராகவன் கமராவுடன் அல்லது அவளுக்கு எரிச்சல் தருவது அவனால் புரிந்து கொள்ள முடியும் விடயமாக இருந்தது.
அப்பா இருந்தால் அவனுக்கு ஆதரவு தந்திருப்பார் என்று தெரியும். அவனது பதினாறாவது வயதில் மலிவான கமராவை வாங்கிக் கொடுத்தவர். என்ன நினைத்துக் கொடுத்திருப்பார்? மகன் ஒரு காலத்தில் லண்டன் திரைப்படக் கல்லூரிக்குப் போவான் என்று நினைத்திருப்பாரா? அர்த்த ராத்திரியில் ஆங்கிலேயப் பெண்ணுடன் வந்து அம்மாவின் எரிச்சலை வாங்கிக் கட்டிக் கொள்வேன் என்று நினைத்திருப்பாரா?
நினைவுகள் புரண்டன.
அடுத்த சில கிழமைகள் இவர்களின் தயாரிப்பான வினி மண்டேலா பற்றி ஒரு சிறிய தயாரிப்பு வளர்ந்தது.
ஜேனின் முயற்சிக்கு எல்லோரும் சம்மதித்தார்கள். இந்த நூற்றாண்டின் மகத்தான ஒரு இனவிடுதலைத் தலைவனான மண்டேலா சிறையிலடைக்கப் பட்டபோது மண்டேலாவின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் வினிபிரட் மண்டேலாவின் சேவையை அகில உலகிலுமுள்ள பெண் விடுதலையாளர்கள் எப்படிப் போற்றுகிறார்கள் என்பதற்கு ஜேனின் இடைவிடாத முயற்சி சாட்சி சொன்னது.
பிலிப்புக்கு இம்மாதிரியான தயாரிப்புக்கள் வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். திரைப்படப் பட்டப் படிப்பு படிக்க வரமுதல் ஒரு பெரிய அட்வர்டைசிங் கொம்பனியில் வேலை செய்தவன்.
ஆண்களின் தசையாசைக்குத் தங்கள் உடம்பை அடகு வைக்கும் பல பெண்களின் அங்கங்களைப் படம் எடுத்தவ னுக்கு வினியின் விடுதலைப் பேச்சுக்கள் வித்தியாசமானவையாக இருந்திருக்க வேண்டும்.
மைக்கலும் ஸ்ரீவனும் தங்கள் மனம் நிறைந்த உழைப்பைக் கொட்டினார்கள்.
தயாரிப்பின் காட்சி முடிந்ததும் இவர்கள் குறூப் அதிபரா லும் மற்றவர்களாலும் மிகவும் பாராட்டப் பட்டது.
“மிகவும் அருமையான தயாரிப்பு” புவனா சந்தோசத்து டன் ஜேனையும் டெவீனாவையும் தழுவிக் கொண்டாள்.
“அடுத்த வருடம் நீயும் டெவீனாவும் எனது ஃபைனல் இயர் புரடக்ஸனுக்கு கமரா வேலை செய்வீர்களா” ஆவலுடன் கேட்டாள் புவனா.
ராகவனும் டெவீனாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன எனது படத்துக்கு வேலை செய்ய உங்களுக்கும் பிடிக்காதா”
“அப்படியில்லை, அது பெரிய சந்தோசமான விடயமென நினைக்கிறேன்” டெவீனா சந்தோசத்துடன் கூறினாள்.
”நீ என்ன சொல்கிறாய்?
புவனா ராகவனைக் கேட்டாள். “நான் உனது படத்திற்கு வேலை செய்யக் கொடுத்து வைத்தவன்” ராகவன் சந்தோசத்து டன் சொன்னான்.
அன்ரோனியோவின் சினேகிதன் மார்ட்டீனின் படத்திற் குத் தங்களை உதவியாளர்களாக அழைத்ததையும் சொன்னான் ராகவன்.
“அடேயப்பா, முதல் வருடத்திலேயே மிகவும் பிரபல மான சோடிகளாகிவிட்டீர்கள். ஆசீர்வாதங்கள்” புவனா தன் பாசத்தைக் காட்டிக் கொண்டாள்.
“ஆனால் ஒரு பிரச்சினை, மார்ட்டின் தனது தயாரிப்பை பரிஸ் நகரில் செய்வதாக யோசித்திருக்கிறான். அதுவும் நத்தார் விடுமுறையில் வைத்திருக்கிறான்.”
ராகவனின் குரலில் தயக்கம். “ஏன் நீ கிறிஸ்மஸ் பார்ட்டி வைத்துக் கூத்தாடப் போகிறாயா” புவனா குறும்பாகக் கேட்டாள்.
“ஓ நோ, எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. டெவீனாவின் தாய் தகப்பன் என்ன சொல்வார்களோ தெரியாது” ராகவன் தயக்கத்துடன் சொன்னான்.
‘என்னைப் பற்றி அக்கறைப் படுவதற்கு நன்றி. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தைத் தவறவிட்டால் ஒன்றும் தலை போய் விடாது. எவ்வளவு தூரம் எனது படிப்புக்குத் தேவையான அம்சங்களைப் படிக்க முடியுமோ அவ்வளவு தூரம் அனுபவங்களைப் பெறத்தெண்டிக்கிறேன்.”
“நீ ஒரு வித்தியாசமான இங்கிலிஸ் பெண், எத்தனையோ பேர் எப்போது கிறிஸ்மஸ் என்று காத்திருக்கிறார்கள். நீ என்றால் உனது அருமையான ஹொலிடேயைப் படப்பிடிப் பில் செலவழிக்கப் போகிறேன் என்கிறாய். படப்பிடிப்பைத் தவிர வேறேதும் காரணங்கள் உள்ளதா?” புவனாவின் குரலில் குறும்பு, சாடையாக ராகவனைப் பார்த்தாள்.
“அப்படி ஒன்றுமில்லை” டெவீனா சட்டென்று சொன்னாள்.
“பாரிசுக்கா போகிறாய்”
மைக்கல் வாயைப் பிழந்தான்.
“இங்கே பார் மைக்கல், கஞ்சா போட்டுக் கொண்டாயா னால் உனது கற்பனை தாறுமாறாப் போகும். தயவு செய்து ஏதும் அநாவசியக் கேலிப் பேச்சுக்கள் வேண்டாம்.”
ராகவன் மைக்கலின் வழக்கமான கிண்டள் சிரிப்பைக் கண்டதும் மேற்கண்டவாறு சொன்னான்.
“என்ன பாரிசுக்கா போகிறான்.” அம்மா வியப்புடன் கேட்டாள்.
“அம்மா அவனுக்கு இருபத்தைந்து வயதுக்கு மேலாகி விட்டது. ஏன் இன்னும் முந்தானையில் முடிந்து வைக்கப் பார்க்கிறீர்கள்?’
அம்மாவைப் பார்க்காமலே மைதிலி முணு முணுத்தாள். ‘பொன்னம்பலம் மாமா வீட்டுக்கு ஒருதரம் போய் எட்டிப்பார். போன் பண்ணிப் பார்த்துவிட்டுப் போ.”அம்மா வின் குரலில் கட்டளை.
பாரிசில் எவ்வளவு தூரம் பிஸியாய் இருப்பான் என்று தெரியாது.மார்ட்டினும், அன்ரோனியாவும் என்னென்ன திட் டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனாலும் அம்மாவின் கட்டளையை மீற முடியவில்லை. அத்துடன் பொன்னம்பலம் மாமா குடும்பத்தைப் பார்க்க அவனுக்கு ஆவலுமிருந்தது.
மாமாவின் இரு பெண் குழந்தைகளும் இப்போது மிகவும் மாறியிருப்பார்கள்.
அவர்களை கடைசியாக இந்தியாவில் வைத்து இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்தான்.
அம்மாவின் தகப்பன் இந்தியாவுக்கு வந்திருந்து தன் மகளை லண்டனிலிருந்து வரவழைத்திருந்தார். அப்போது 83ம் ஆண்டு தமிழர்க்கெதிராக நடந்த இனக் கலவரத்திலிருந்து தப்பி பொன்னம்பலம் மாமா குடும்பம் இந்தியா வந்திருந்தது. ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் போவதாக முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
பிறந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட ஆயிரக் கணக் கான தமிழர்களில் இவர்களில் குடும்பமும் ஒன்று.
பதினேழு வயதுப் பெண்ணாக சல்வார் கமிஸ் போட்டி ருந்த இந்திரா இப்போது பாரிஸ் பட்டணத்தில் ஜூன்ஸ் டீ சேர்ட்டுப் போட்டிருப்பாளா?
அம்மா மாமா குடும்பத்திற்குச் சில அன்பளிப்புக்கள் வாங்கிக் கொடுத்தாள். இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக் குக் கப்பலில் போவது என்று முடிவு செய்தான். மாணவர்க ளுக்குக் கிடைக்கும் உதவிப் பணத்தில் அனாவசியமாகச் செலவழிக்க விரும்பவில்லை. டெவீனா தான் பிளேனில் வருவதாகச் சொன்னாள்.
பாரிஸில் கார்டிநோட் ரெயில்வே ஸ்ரேசனிற் சந்திப்பதாக அன்ரோனி சொல்லியிருந்தான்.
விக்டோரியா ஸ்ரேசனிலிருந்து டோலர் துறைமுகம் போகும்போது மனதில் எத்தனையோ யோசனைகள். தங்கை மைதிலியின் முகத்தில் கொஞ்ச நாட்களாக ஏன் இவ்வளவு சோகம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த வருடம் படிப்பு முடியப் போகிறது. அம்மா சந்தோசப்படு வாள் என்று நினைத்ததும் முகத்தில் தன்னையறியாமல் புன்மு றுவல் தவழ்ந்தது.
”என்ன இது? மூன்று வருடப் படிப்பு முடியத்தான் பைத்தியம் பிடிக்கும் என்று நினைத்தேன். இப்போதே தன் பாட்டுக்குச் சிரிக்கத் தொடங்கிவிட்டாயே”
டெவீனா மூட்டை முடிச்சுக்களுடன் வந்து கொண்டிருந் தாள். நல்ல வேளையாக ராகவன் இருந்த இருக்கைக்கு முன்னால் ஒரு வெற்றிடம் காலியாயிருந்தது. உட்கார்ந்தாள்.
“என்னவென்று இந்த ரெயினில் நான் போகிறேன் என்று தெரியும்.”
“நீ அன்ரோனிக்கு போன் பண்ணியபோது நான் உன் னோடு இருந்தது தெரியாது. காலையில் பாரிஸ் ஸ்ரேசனில் சந்திக்கச் சொன்னாயே.ஞாபகமில்லையா?”
“ஆ சரி நீ ஏன் பிளேனில் போகவில்லை.”
“அன்ரோனியோவோக்கு ஏன் வீண் சிரமம் கொடுப்பான் என்று யோசித்தேன். பிளேன் எடுப்பதானால் நாளைக்குக் காலையிற்தான் எடுக்க வேணும். என்னை எயார்போட்டுக்கு வந்து சந்திப்பதும் உன்னை ரெயில்வே ஸ்ரேசனில் வந்து சந்திப்பதும் அன்ரோனியோவுக்குச் சிரமமாயிருக்காதா.”
இந்தப் பெண் எப்போதும் மற்றவர்களின் சுக துக்கங்க ளையே முதன்மைப் படுத்திப் பார்க்கிறாளே? ராகவன் தன் ஆச்சரியத்தைத் தனக்குள் அடக்கி விட்டான்.
“அத்தோடு கப்பலில் நீ தனியாகப் பிரயாணம் செய்யா மல் நான் பேச்சுத் துணையாக இருக்கலாம் என்று யோசித் தேன். பிடிக்காவிட்டால் நீ மௌனம் சாதிக்கலாம். நான் சுருண்டு படுத்துக் கொள்கிறேன். படுக்கை வசதிகளையும் அள்ளிக் கொண்டுதான் வருகிறேன். அன்ரோனியோ எங்களுக் குத் தங்குமிடம் எங்கே பார்த்திருக்கிறானோ தெரியாது. வசதி யான இடமில்லையில்லாவிட்டால் எங்கள் படுக்கைகளையே பாவிக்கலாமே”
ராகவன் ஒரு கொஞ்ச நேரம் அவளையே பார்த்தான். எத்தனை கவனமாக இந்தப் பெண் எதையும் யோசித்துச் செய்கிறாள்? “என்ன அப்படிப் பார்க்கிறாய்.”
”உன்னையிப்படி வளர்த்த அம்மா மிகவும் கெட்டிக்காரி யாக இருக்கவேணும்.”
சட்டென்று டெவீனாவின் முகத்தில் ஒரு மாற்றம் யாரோ பறித்தெடுத்தாற்போல அவளின் பளிச்சென்ற சிரிப்பு மறைந்தது.
முகத்தைத் திருப்பி ஜன்னலால் உலகத்தைப் பார்த்தாள். “அதோ பார், டோவர் துறைமுகம் தெரிகிறது.” பேச்சை மாற்றுகிறாள் என்று தெரிந்தது.
ஜன்னலால் பார்த்தான். இரவு ஒன்பது மணி லைட் வெளிச்சத்தில் துறைமுகம் ஆரவாரமாகத் தெரிந்தது.
“பாரிசுக்குப் போயிருக்கிறாயா”
இல்லை என்று தலையாட்டினான்.
“எனது தாய்க்குப் பாரிஸ் பிடிக்கும். நான் அவளுடன் அடிக்கடி போயிருக்கிறேன் உலகத்தின் அழகான நகரங்களில் ஒன்று பாரிஸ் என்று உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். காதலர்களின் தேவலோகம் என்று அம்மா சொல்வாள்.”
அவள் சாதாரணமாகத்தான் சொன்னாலும் அவள் அவ னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு சொன்ன விதம் அவனுக்குத் தர்ம சங்கடத்தை யுண்டாக்கியது. பார்வையை ஜன்னலுக்கப் பால் துரத்தி விட்டான்.
”அன்ரோனியோ ஸ்கிரிப்ட் தந்தானா”
ராகவன் இல்லை என்று தலையாட்டினான்.
“என்ன இது? நாங்கள் நத்தார்க் கொண்டாட்டங்களையும் தியாகம் செய்து விட்டு, எங்கள் பணத்தைச் செலவழித்து பாரிசுக்குப் போகிறோம். மார்ட்டினும் அன்ரோனியோவும் என்ன நினைத்துக் கொண்டார்களாம், ஸ்கிரிப்ட் பார்க்காமல் என்னவென்று கமரா வேலை செய்வதாம்.”
டெவீனா முணுமுணுத்தாள். ரெயின் நின்றது. சாமான்க ளைத் தூக்கிக் கொண்டார்கள்.
இமிக்ரேஸன் ஆபிஸர் ராகவனின் டொக்குமென்ட்சைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
“ஸ்ருடன்ஸ் கார்ட் கொண்டு வந்தாயா”
அவனுக்குத் தன்னுடைய தவறு புரிந்தது.
“நாங்கள் லண்டன் பிலிம் கொலிஜ்ஜிலிருந்து வருகி றோம், இதோ என்னுடைய கார்ட், என்னுடைய போய் பிரண்ட் தன்னுடைய கார்ட்டைக் கொண்டு வர மறந்து விட்டார். பிளீஸ் மன்னித்து விடுங்கள்.”
இமிக்ரேஸன் ஆபிஸர் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். பின்னர் ஒரு நட்டுச் சிரிப்புடன் “ஹாவ் எ நைஸ் ரைம் இன் பரிஸ்” என்று சொல்லி அனுப்பினார்.
அத்தியாயம் – 9
கப்பல் நடுக்கடலில் போய்க் கொண்டிருந்தது. இங்கி லாந்துத் துறைமுகம் கண்களிலிருந்து மறைந்து விட்டது. அடுத்த கரையில் பிரான்சு நாட்டின் வெளிச்சங்கள் தெரியத் தொடங்கவில்லை.
டெவீனா கப்பலின் மேற்தட்டில் நின்றபடி இருளில் பிளந்து கொண்டோடும் கப்பலின் விளிம்பைப் பிடித்தபடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தால்.
அங்குமிங்கும் சில சோடிகள் தங்களையணைத்து முத்த மிட்டுக் கொண்டிருந்தார்கள்.
கையில் இரண்டு கோக் கான்களுடன் மேலே வந்து சேர்ந்தான் ராகவன்.
அவள் ஆழ்ந்த நினைவில் தன்னையே பறிகொடுத்திருந்தாள். இவன் வந்ததை கவனிக்கவில்லை.
“இந்தக் குளிரில் காப்பி சாப்பிட்டிருக்கலாம்” அவன் அவள் கைகளில் கோக் கொடுத்தான்.
“எந்த உலகத்தைப் பிடிக்கும் யோசனை.”
“போனகிழமை பார்த்த சத்தியத்ரேயின் ‘பதர் பாஞ்சாலி’ படம் ஏதோ ஞாபகம் வந்தது.”
“இங்கு குடித்துக் கும்மாளமிடும் இந்தக் கூட்டத்தைக் கண்டதும் இந்திய ஏழைக் குழந்தைகள் ஞாபகம் வந்ததா”
“இல்லை…இந்தியாவில் இப்படி வறுமை ஏன் இருக்கிறது என்று யோசித்தேன்.”
“இந்தியாவில் நீ இங்கிலாந்தில் பார்க்காத செல்வந்தர்களு மிருக்கிறார்கள். இந்தியாவின் சமுதாய அமைப்பில் எப்போதும் சத்யத்ரே காட்டிய வறுமையை விடக் கூடிய வறுமை இருந்து கொண்டேயிருக்கும்.”
“இங்கிலாந்திலுள்ளதுபோல் அரசாங்கப் பணம் கிடைக்காதா மக்களுக்கு.”
ராகவன் தன்னையறியாமல் சிரித்து விட்டான் “என்ன சிரிக்கிறாய்.”
“இந்தியாவில் மட்டுமல்ல பெரும்பாலான வளரும் நாடுகளில் அரசியற் தலைவர்களுக்குக் குடிமக்களின் நல்வாழ்க்கையில் அக்கறையில்லை. தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் குபேர வாழ்க்கை வாழ மக்கள் பெயரில் செல்வத்தைச் சுருட்டிக் கொள்கிறார்கள். இந்தக் கொள்ளைக்காரர்கள் பாராளுமன்ற முறை என்ற கேலிக் கூத்தின் மூலம் மக்கள் வாக்கை எடுக்கிறார்கள்.”
டெவீனா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்? உனது அப்பா கென்யா நாட்டில் பெரிய தேயிலைத் தோட்ட முதலாளி என்று சொன்னாய். உனது தகப்பன் தனது வியாபார விடயமாக எத்தனை ஆபிரிக்க மந்திரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தாயா.”
அவள் மறுமொழி சொல்லவில்லை. முகத்தில் உலகத்து வறுமைக்கெல்லாம் வெட்கப்படும் சோகம் கவிழ்ந்து கிடந்தது.
“டெவீனா, உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தலைவர்கள் என்று இருப்பவர்களுக்கு மக்களின் நலத்தில் அக்கறை கிடையாது.”
“மக்கள் தங்கள் உரிமைகளுக்குப் போராட மாட்டார்களா.”
அவன் விரக்தியுடன் சிரித்தான்.
”ஏன் சிரிக்கிறாய், கொடுமைக்காரர்கள் அழிக்கப் படுவார்கள் என்றுதானே நியதி இருக்கிறது.”
“இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் ஒன்று பட்டுப் போராட முடியாத வகையில் சமயமும் சாதியமைப்புக்களும் மிகவும் கொடூரமான முறையில் மக்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.”
“இந்து சமயம் தர்மத்தின் அடிப்படையில் உண்டானதில்லையா” அவள் குளிருக்கு ஒரு போர்வையை எடுத்து மூடிக் கொண்டாள்.
”குளிராயிருக்கிறது கீழே போவமா”
“வேண்டாம்.”
“ஏன்”
”நத்தார்க் கொண்டாட்டங்களில் எல்லாரும் குடித்துக் கும்மாளமிட்டு மோதியடிக்கிறார்கள். அதை விட இவ்விடமிருப்பது சந்தோசமாக இருக்கிறது.”
“நீ வித்தியாசமான பெண்”
“நீயும்தான். எனக்குத் தெரிந்த ஆண்களில் நீ மிகவும் வித்தியாசமானவன் ராகவன்”.
எப்படியான வித்தியாசம் என்று கேட்க நினைத்தவன் வாயெடுக்க முதல் அவள் பேசத் தொடங்கினாள்.
“சொல்லேன், மற்றவர்களுக்கு உதவி செய் என்று உனது இந்து சமயம் சொல்லவில்லையா.”
“டெவீனா சமயம் சொல்வது வேறு, சமுதாய அமைப்பின் நடைமுறைகள் வேறு.”
“அப்படியானால்…” அவள் மாணவி போல் ராகவனைக் கேட்டாள்.
“இந்து சமயம் வர்ணாஸ்ரமம் பற்றிச் சொல்கிறது. அதன் படி தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் கடவுளால் தண்டிக்கப் பட்டவர்கள். அதாவது முற்பிறப்பில் செய்த பாவங்களால் தாழ்த்தப்பட்டவர்களாகப் படைக்கப் பட்டார்களாம். இவர்கள் பெரும்பாலோர் மிகவும் ஏழைகள். இந்தியாவில் மூன்றி லொரு மக்கள் இப்படியான துன்ப நிலையில் வாழும் ஏழைகள். இவர்களை வசதிபடைத்த உயர்ந்த சாதியினர் தீண்டாச் சாதியினராக நடத்துகிறார்கள்.”
அவள் கொஞ்ச நேரம் மௌனமாக விருந்தாள். “இன்னொருதரம் வேறு உலகத்துக்குப் போய் விட்டாயே, இப்போது என்ன யோசிக்கிறாய்.”
ராகவன் விளையாட்டுத் தனமாக அவள் கூந்தலை யிழுத்தான்.
“உனக்கு வெட்கமாயில்லையா”
டெவீனாவின் முகத்தில் கோபம். அவன் திடுக்கிட்டுப் போனான். “ஐயம் சாரி டெவீனா” ராகவன் அவமானத்தால் குன்றிப் போனான்.
“நீ ஒரு இந்து என்று சொல்லிக் கொள்ள உனக்கு வெட்கமாயில்லையா”
அவள் சீறினாள்.
ராகவன் இன்னுமொருதரம் குழம்பி விட்டான். “நான் உன்னைத் தொட்டதற்கு மன்னித்து விடு”
“அட சும்மா போய்யா, நீ என்னைத் தொட்டதற்கு நான் ஒன்றும் குதிக்கவில்லை. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தீண்டத் தகாததாகச் சொல்கிறதென்றால் அப்படிச் சொல்கிற ஒரு மதம் அதர்மமானது.”
அவள் இன்னும் சீறிக் கொண்டிருந்தாள்.
“ஓ யெஸ், நீ ஏன் இந்தியாவுக்குப் போகக் கூடாது? புத்தரும் காந்தியும் சொல்லியும் கேட்காத உண்மைகளை நீ சொல்லியா யாரும் கேட்கப் போகிறார்கள்.” அவன் பெரு மூச்சு விட்டான்.
“சினிமா ஒரு பலம் வாய்ந்த சக்தி என்று அதிபர் சொன்னாரே… சமுதாய மாற்றத்தை உண்டாக்கும் படங்களை இந்தியாவில் யாரும் எடுப்பதில்லையா”
“எடுத்தால் ஓடாது.”
“ஏன்”
”இந்தியாவில் சினிமா வியாபாரத்தின் அடிப்படையில் நடக்கும் பெரிய தொழில்.”
“சத்யத்ரேயின் படம் அப்படியில்லையே”
“அவர் அந்தப் படம் எடுக்க மிகவும் கஷ்டப்பட்டார். படம் உலகத்தில் பல பரிசுகளைப் பெற்றது. ஆனால் இந்தியாவில் அவர்களைத் திட்டினார்கள்.”
“அந்த மேதையைத் திட்டினார்களா” அவள் முகத்தில் சோகம்.
பாவம் டெவீனா குழம்பிவிட்டாள். அவள் அகராதியில் உலகம் களங்கமற்றது.
“இந்திய சைக்கோலஜியை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. இந்து சமயத்தைப் போல், ஆயிரக் கணக்கான கடவுள்கள் போல், நூற்றுக் கணக்கான சாதிப் பிரிவுகள் போல் இந்திய மனிதத்தின் சிந்தனையும் மிகவும் சிக்கலானது.”
டெவீனா அவனிடம் நெருங்கி வந்தாள். அவனது இரு கைகளையும் இறுகிப் பற்றிக் கொண்டாள்.
“ராகவன், இந்த இரவை என்னால் மறக்க முடியாது”. குரலில் குழந்தைத் தனம்.
“ஏன் இந்தக் குளிரில் என்னை வைத்து இந்து சமயத்தைப் பற்றிக் கேள்வி கேட்டதற்காகவா”
அவன் அவள் பிடித்திருந்த கைகளை விடாமல் கேட் டான். இந்த நேரம் மைக்கல் பக்கத்திலிருந்தால் என்ன சொல்வான் என்று ஒரு சில வினாடிகள் யோசித்தான்.
அவளை அப்படியே அள்ளி எடுத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது. அவளின் நெருக்கம் அந்த இரவின் தனிமையில் அவன் உடலில் உஷ்ணத்தைப் பரப்பியது. “ராகவன், மூன்று வருடம் படித்து முடிய நீ என்ன பண்ணுவாய்.”
“முடிந்தால் ஒரு பிலிம் புரொடியூசராக இருக்க விரும்புகி றேன்.” அவன் தெளிவாகச் சொன்னான்.
“அது மட்டும் கூடாது… சாதி சமயக் கொடுமைகளுக்கு எதிராகப் படம் எடுப்பாயா” அவன் அவளின் அப்பாவித்தனமான ஆசையைக் கேட்டுப் பரிதாபப் பட்டான். எவ்வளவு நம்பிக்கையானவள் இவள்?
இந்தியாவில் பிறந்த எத்தனையோ மகான்களால் செய்ய முடியாத வேலையை இவன் செய்வானென்று எதிர்பார்க்கிறார்களே?
“சத்யத்ரே மாதிரி எத்தனையோ பேர் பிறந்தாலும் இந்தியாவை மாற்ற முடியாது டெவீனா”
“சத்தியத்ரே என்னவென்று வித்தியாசமான படங்களை எடுத்தார்?”
”அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலை வித்தியாசமானது. லண்டனில் 1950ஆம் ஆண்டுகளில் இருந்தபோது நியோறியலி சட் (Neo-realist) படங்களில் ஆர்வம் கொண்டார். அத்துடன் அவர்க்கு பிரான்ஸ் நாட்டின் முக்கிய டைரக்டர்களில் ஒருத்தரான ஜுன் றெனோ என்பவரின் தொடர்பும் கிடைத்தது. ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்த சூழ்நிலை, நல்ல யதார்த்தமான சினிமா சூழ்நிலையை லண்டனிற் கண்டது, அந்தக் காலத்தில் உலகத்தின் முக்கிய டைரக்டர்களில் ஒருத்தரான றேனோ (Jean Renoir) யைச் சந்தித்தது எல்லாம் காரணங்களாக இருக்கலாம்.”
“தமிழ் டைரக்டர்களில் சமுதாய சிந்தனையுள்ள வர்களில்லையே”
“ஓரிருவர் இருக்கிறார்கள், பாலச்சந்தரின் படங்கள் சமுதாய சிந்தனையைத் தூண்டுபவை. அத்துடன் பாலு மகேந்திராவின் படங்கள் மூன்றாம்தர தமிழ்ப் படங்களுக்கு அப்பாற்பட்டவை. அழகிய கலை ஓவியத்தைப் பார்க்கும் உணர்வைத் தூண்டும் படங்கள். லண்டனுக்குப் போனதும் ஒரு சில படம் பார்ப்போம். சிறிலங்கன் டைரக்டர் ஜேம்ஸ் லெஸ்டர் பீரிஸின் படங்கள், ஒரு சில மலையாளப் படங்கள் எல்லாம் நீ பார்க்கலாம்.”
”ராகவன், ரொம்பவும் நன்றி. நான் பிளேனில் போயிருந் தால் இவ்வளவும் நான் தெரிந்திருக்க முடியுமா?”
அவள் எவ்வளவு கபடமற்ற பெண், குழந்தை மாதிரிச் சந்தோசத்திற் கூவினாள்.
”அது சரி இமிக்ரேஸன் ஆபிஸரிடம் நான் உன்னுடைய போய் பிரண்ட் என்று சொன்னாயே. ஏன் அப்படிச் சொன்னாய்”
“அவன் தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல, வீடு வாசல்களில் நத்தார் பண்டிகையைக் கொண்டாடாமல் பரிஸ் நகரத்துக்குப் போகிறவர்கள் யார் என்ற நினைக்கிறாய்.”
அவன் அங்குமிங்கும் பார்த்தான். பெரும்பாலானவர்கள் காதல் நகரமான பரிசுக்குப் போகிறவர்கள்.
“நான் அப்படிச் சொல்லியிருக்காவிட்டால் அவன் உன்னை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். பல ஆபிஸர்கள் இனவாதிகள். உன்னை எனது போய் பிரண்ட் என்று சொன்னதும் என்ன நமுட்டுச் சிரிப்பு பார்த்தாயா.”
“நாங்கள் சத்யத்ரே பற்றிப் பேசியதை அவன் அறிவானா” ராகவன் சிரித்தான்.
“இல்லை, நாங்கள் காமசூத்ரா பற்றிக் கருத்தரங்கம் வைப்பதாக அவன் நினைத்திருக்கலாம்.”
– தொடரும்…
– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
