அரச கட்டளை!






(பழையகதை புதிய பாடல்)
பசியால் வாடித் தவித்தவானம்
பாவம் பிச்சைக் காரனவன்
வசதி இல்லாக் காரணத்தால்
வாடி வதங்கித் தவித்தானாம்!
பசியால் வாடித் தவித்தவனோ
பாதை வழியில் போகையிலே
ருசிக்கும் உணவின் வாசத்தை
நுகர்ந்தான் உணவக ஓரத்தில்
வாசம் பிடித்த வறியவனை
வளைத்துப் பிடித்த உணவகத்தான்
காசு கொடுயென கேட்டவனை
காலை மாலை நச்சரித்தான்.
ஏழை பிச்சைக் காரனவன்
எதுவும் உண்ண வில்லைநான்
எதற்கு காசு தரவேணும்?!
என்றே கேட்டு அழுதானாம்.
‘உண்ண வில்லை! என்றாலும்
உணவின் வாசம் நுகர்ந்தாய்நீ’!
உணவின் விலையில் ஒருபாதி
உடனே தாவெனக் கேட்டானாம்!
பிச்சைக் காரன் மறுத்திடவே
பிடித்து மன்னன் முன்நிறுத்தி
வழக்கைச் சொல்லி வாதிட்டான்
வறியவன் மீது முறையிட்டான்!
பார்த்த மன்னன் ஏழைக்குப்
பரிவு காட்ட விரும்பினனாம்
‘ஊர்க்குத் திரும்பிப் போநீயும்,
உன்காசு கொடுப்பேன்!’ நானென்றான்!
ஏழை போனதும் அம்மன்னன்
இருக்கும் சேவகன் தனையழைத்து
மாலையிலிருந்த பொற்காசை
மண்ணில் விசிறி எறியவிட்டு
‘வாசம் பிடித்த உணவுக்கு
வழங்கி விட்டேன் பொற்காசு!
எடுத்துச் செல்லென!’ அவனிடத்து
எடுத்துச் சொன்னான் மன்னவனும்.
உணவகக் காரன் பூரித்தான்
ஓடி எடுக்க அவன்விரைந்தான்
தடுத்து மன்னன் அவனிடத்து
தனது தீர்ப்பாய் இதுசொன்னான்:
‘உணவின் வாசம் நுகர்ந்ததற்கு
காசு கேட்டாய் கருணையின்றி,
காசு விழுந்த ஓசைதான்
நுகர்ந்த வாசனை விலையென்றான்!
கருணை இல்லாக் கயவனுக்கு
கடவுள் தந்த தண்டனையாம்!
அன்பு இல்லா அவனுக்கு
அரசன் இட்ட கட்டளையாம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |