அப்புச்சியூர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 3,663 
 
 

பள்ளி விடுமுறையில் என் தாயின் பெற்றோரைப்பார்க்க தாயுடன் கிராமத்துக்கு போவதுண்டு. இடுப்பில் கோவணமும், தலையில் துண்டு வேட்டியால் உருமாளையும் கட்டிக்கொண்டு வயல் சேற்றில் எருதுகளைப்பூட்டி உழுது கொண்டிருப்பார் அப்புச்சி. 

அம்முச்சி அவருக்கு கம்பு கூல் மோரூத்தி பாத்திரத்தில் கொடுக்க, வயலுக்குள்ளிருந்தபடியே வாங்கி குடித்து ஏப்பம் விடுபவர், ஒரு கணேஷ்பீடியை பற்ற வைத்து புகை விட்டபடி “ஹை, ஹை” எனக்கூறி எருதுகளை சாட்டைவாரில் அடித்தவாறு ஓட்டுவார்.

“தங்கோ ராசுக்கண்ணு இந்தா தொறப்புக்குச்சி. சாளைக்குப்போயி பொடக்காலில மொடாவுல தண்ணி வெச்சிருக்கறேன், காலக்கழுவிட்டு தடுக்கு கதவத்தொடந்து சாளைக்குள்ள போயி அட்டாலில மக்கிரி குப்பறக்கமுத்தி வெச்சிருப்பேன் எடுத்துட்டு வா. கருக்கருவாள்ல அறுத்துப்போட்ட இந்த சோளக்கருத வாசல்ல காயப்போட எடுத்துட்டு போகோணும். போறபோது இந்த ஆட்டுக்குட்டியப்புடிச்சிட்டு போயி திண்ணக்கால்ல கட்டிப்போடு…” அம்முச்சி சொன்னது நகரத்திலிருந்து போயிருந்த பத்து சிறுவனான எனக்கு ஒரு சில வார்த்தைகள் தவிர மற்றவை புரியாததால் மறுபடியும் கேட்டு கொடுக்கும் வேலையை செய்வேன்.

“அந்தக்காலத்துல என்ற அப்பாறையன் வால்கவுறு எடுத்து நொகத்துல ஒரு பக்கம், பறில ஒரு பக்கம் கட்டி எருதுகளப்பூட்டி கவளை ஓட்டுனாருன்னு வெச்சுக்கோ இப்போ ஓடற மோட்டார் தண்ணீய விட வேகமா வாய்க்கால் நெறைஞ்சு போகும் பாரு…. ஒரு பொழுதுக்குள்ள ஒரு அனப்ப என்ற அப்பத்தாக்காரி என்னைய இடுப்புல கட்டிப்போட்டுட்டே தண்ணிய ஆம்பளையாட்ட தைரியமா மம்முட்டிய எடுத்து மடைதிருப்பி கட்டிப்போடுவான்னா பாத்துக்குவே. அன்னைக்கெல்லாம் அஞ்சு கொழைந்தை, பத்துக்கொழந்தைகள பெத்துப்போட்டு வளத்தீம்போட்டாங்க. இன்னைக்கு ஒரு கொழந்தைக்கே முடியாம சோம்பிக்கெடக்கறாங்க பொம்பளைக….” புரியாத என்னிடம் எதற்காக சம வயது உள்ளவர்களிடம் பேசுவதை போல் அம்முச்சி பேசினாள் என்பது ஐம்பது வயதான இப்போதும் எனக்கு புரியவில்லை.

சனிக்கிழமை நாளில் அருகில் உள்ள நகரத்தில் கூடும் சந்தைக்கு காட்டில் விளைந்த காய்கறிகளை மூட்டையாகக்கட்டி அப்புச்சி எடுத்துச்செல்லும் போது நானும் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொள்வேன்.

அப்புச்சி கஞ்சத்தனமானவரும் கூட. வண்டியில் போகும் போது மாடு போடும் சாணத்தைக்கூட சேமித்து வண்டியில் வைத்து, காட்டில் கொண்டு போய் உரமாவதற்காக போட்டு விடுவார். 

சந்தையில் தேர் மிட்டாய், குருவி பிஸ்கட், தேங்காய் பண், கடலை பொரி வாங்கித்தருவார். சந்தையில் விற்கும் தேங்காய் பாலுக்கு நான் அடிமை.

“டேய் ராசுக்கண்ணு மாட்டப்புடிச்சு காட்டுக்குள்ள பில்உள்ளபக்கமா பாத்து மொளக்குச்சி அடிச்சு கட்டிப்போட்டு வா” என்பார். 

கொம்பு கூர்மையாக உள்ள மாடு பாய்ந்து குத்திப்போடும் எனும் பயம் வயிற்றைக்கலக்கும். இருந்தும் தைரியமாக பிடித்து கட்டி விடுவேன்.

“இதுக்குத்தான் பையன ஊருக்கு கூட்டீட்டு வாரதில்லைன்னு சொல்லறது” அம்மா கோபமாக அப்புச்சியிடம் பேசினாள்.

“ஏ… இப்ப என்னத்தாய்ப்போச்சுன்னு சலிச்சுக்கறே தொளசி? நீ கறக்காத மாடா, மேய்காத ஆடா. அவனும் பழக்குட்டுமெடு. டவுன்ல படிச்சு சோக்கா வாழ்ந்து போட்டாலும் பெனசிலும், ஏடும் சோறு போட்டுருமாக்கு….தலையச்சுத்தி வாயில தாம்போடோணும். ஏட்டுச்சொறைக்காய் கூட்டுக்காகாதுன்னு தெரியாமையா சொன்னாங்க” அப்புச்சி பேச, பேச அம்மா மௌனமானாள்.

அப்போது வடை சுட்டு கொண்டு வந்த அம்முச்சி கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்த அப்புச்சிக்கும், எனக்கும், அம்மாவுக்கும் மூன்று தட்டில் வடை வைத்து சாப்பிடக்கொடுத்தாள்.

” இதபாரு தொளசி பையனக்கொண்டு வந்து கண்ணுல காட்டுனதும் கூட்டீட்டு போற வேலைய ஒன்னி மேல வெச்சுக்காத. பள்ளிக்கொடம் போகாத நாள்ல அவனெங்ககிட்டத்தா இருப்பான்” என கூறி என்னைத்தூக்கி மடியில் உட்காரவைத்துக்கொண்ட அம்முச்சியை அம்மாவை விட எனக்கு பிடித்திருந்ததால் நானும் தலையாட்டினேன்.

மறுமுறை விடுமுறையில் அப்புச்சியூருக்கு சென்ற போது ஒரு நோட்டும், பேனாவும் எடுத்துச்சென்றேன். அவர்கள் பேசும் கிராமத்து பேச்சு அவர்களோடு அழிந்து விடக்கூடாது என நினைத்ததால் ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு பாயில் படுக்கப்போகும் நேரத்தில் அரிக்கேன் விளக்கை பக்கத்தில் வைத்துக்கொண்டு அம்முச்சியிடம் வட்டார வழக்கு மொழியை கேட்டு எழுதினேன்.

தொறப்புக்குச்சி, பொடக்காலி, அண்ணாங்கால், கொடாப்பு, உருவாஞ்சுருக்கு, பால் பீய்ச்சுதல்,

தயிர் சிலுப்புதல், அட்டாலி , சால்பரி,

மக்கிரி, கொத்து, மொளக்குச்சி

சாளை, கடவுப்படல், தடுக்கு, தட்டக்கூடை

வால்கவுறு, கவலை(ளை)யோட்டுதல்,

தரம்பு கட்டுதல், கொடுவாள், கருக்கருவாள்,

களத்துமேடு, பாம்பேரி, பெருக்கான்,

முட்டுவழி, தொக்கடா, வெள்ளதாரை,

தரம்புகட்டை, ஒண்டுகவை,மொகரப்பூட்டு,

மரக்கால், தும்மி, சாடு, குடுதாழி, ராக்கூடை, வாக்கூடை, தார்க்கோல்,

மொளக்குச்சி, நாச்சோறு,ஒதுக்குபடல்.

பொங்கச் சருவம், தூக்குப் போசி, சப்பாரம்,

மாடகுழி ( விளக்கு ஏற்றுமிடம்),

கடவு( நுழைவு வாயில்), ரஸ்தா ( பாதை),

கொறங்காடு, அம்புளி ( சோளத்தை இடித்து ஊற வைத்து செக்குல ஆட்டி இரவு புளிக்க வைத்து காலையில் காச்சப்படும் கூழ்),

ஆணம் (கொழம்பு ), கற சோறு, மொசல் ( முயல்), வைக்கப்பில் (வைக்கோல்)

சோளத்தட்டு (தீவனம்)மொளவு (கறிக்குழம்புக்கு சேர்க்கும் மசாலா),

மொறம், மக்கரி, தலமாறு (ஏரு திரும்பும் முனை).

அங்கராக்கு , தொவயல் (கல்லத் தொவயல்), சும்மாடு, கரித்துணி,

ஊரப்பானை, சருவம், அண்ணாக்கவுரு,

மங்கிலியம், தட்டம், கவுட்டி, கவ்வை கோலு (குச்சி), அணப்பு, பொலி, சலதாரை,

பொறக்கடை, பட்டியாளு நேரம், கோழி கூப்புட, பொழுதோட, வெடியால, 

பழையசோத்து நேரம், இரணிய நேரம்

சைனம், மொதபஸ், கடைசி வண்டி, 

பெளசரு (கார்), சவ்வாரி,நொங்குவண்டி, 

பல்லுக்குச்சி, ஊறத்தண்ணி, புழுதண்ணி.

மத்துக்குச்சி, மத்துக்கோல், தெரட்டி, மொறச்சீரு, குச்சு, ஒலக்கை, ஒரலு, மேவரம், கெழவரம், தெக்கால, வடக்கால,

பக்காபடி, முத்திரைப்படி, வள்ளம், ஒலக்கு,

தூத்துக்கூடை, வெதப்பொட்டி, வெஞ்சனம்,

மேத்திண்ணை, திண்டு, நட்டடுப்புச் சாம்பல், இட்டாலி, முக்கிட்டாலி,

சீடை கட்டுறது, எறவுத் தண்ணி, கோடாலி கொண்டை, பின் கொசுவம், அடுக்கு,

ஆப்பை, உரி, கொட்டம், தொண்டுப்பட்டி,

மொடகாடு, வாரிக்குழி, ஒரம்பு, கடையோடறது, பொறவு, அக்கட்டால போ,

அங்கிட்டு, இங்கிட்டு, காத்தாட மேம்போக்கு.

சாடு கவை, ஒண்டுக்கட்டை,

கம்பரக்கத்தி, சீவக்கட்டை, மேத்திண்ணை,

எரவானம்(தாவாரம்), ரக்கிலி(கீரை),

கொக்கிச் சல்லை, ஒட்டுக் கூடை, 

கன்னித் தும்பு, தலை கயிறு, வடம், 

வால் கயிறு, பாதாள சோதி, தார்க்கறுது,

மயிறு கோதி, கோனூசி, அஸ்க்கா, சாதா,

பாம்பேரி, கொடுவாப் பூன், தாம்புக் கன்னி.

கொட்டாப்புடி, மஞ்சி, அவினி, கருக்காம்பட்டை, பனங்கறுக்கு, தொரட்டி, 

தேங்காத் தொட்டி, நாச்சோத்துக் கும்பம்,

உரிக்காக் கொடி, கத்தக்கொடி, முஷ்டக் கொடி, தாதரா, பன்னை, குமுட்டி, தொய்யல்,

ஒருக்கட்டத் தொய்யல், தாருமுள், தார்க்கருது, மயிருகோதி,மேத்திண்ணை,

எரவாரம்.

தேகுசா, பொங்கச் சருவம், சால்பானை,

படிக்கம், ஆரீக்கல், ஒல்லு, ஒலக்கை,செக்கு,

கொக்கிச்சல்லை, தொண்டுப்பட்டி,

கெடாக் குட்டி, பிறவக் குட்டி, காளைக்கன்னு, கெடாரிக் கன்னு, தொறப்பு, நாதாங்கி.

குச்சூடு, மச்சூடு, தொட்டிகட்டு , தலவாசல்,

தட்டுக்காரம், தாட்சான், ஈட்டாக்குட்டி, ஒலுப்பட்டி, சொரப்புரடை, தூரி,

கூட்டாஞ்சோறு, ராட்டை, ஒடக்கா, கூட்டுச்சாறு, பனங்கா, துலுக்கானி சோளம், கொரங்கு பொகீளை, பக்காப்படி,

பட்டணரவை, வேப்பெண்ணை கலயம்,

கும்பா, சாவக்குஞ்சு, வெடைகுஞ்சு,

தொலவு, அத்துவானம்.

அன்று நான் அம்முச்சியிடம் கேட்டு எழுதி வைத்த சொற்களுக்கு அப்போது விளக்கம் கேட்டு எழுதாமல் விட்டு விட்டேன். நாற்பது ஆண்டுகளுக்கு பின் இப்போது விளங்கவில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தத்தை எனது மகன் கூகுளில் தேடினான். கிடைக்கவில்லை. வயதானவர்களைத்தேடி வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் நான் எழுதி வைத்திருந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஐம்பது வயதிலும் அப்புச்சியூருக்கு மகனுடன் போய் கொண்டிருக்கிறேன்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *