அன்னையின் அருமை





(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்புக்குரிய சுஜாதா,
அன்புக்கு இணையான சக்தி வேறு எதற்குமே இல்லை. பகைவர்களுக்கும் அருள் செய்வதே நன்மையாகும். இந்த மூன்றெழுத்தின் சக்தி மூவுலகையும் ஆளும். நாம் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டு மென்று பேசுகிறோம். பறவை, மிருகம் முதலிய எல்லா உயிர்களிடமும் அன்பைக் காட்டிக் கடவுளின் அன்புக்குப் பாத்திரமாக நினைக்கிறோமல்லவா?

இந்த அன்பின் அருமையை மாணவிகள், சின்னப் பெண்கள் இன்னும் ஆழமாக உணர வேண்டுமெனக் கருதுகிறேன். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் பாடுகிறர்கள், படிக்கிறார்கள். திருமணத்துக்கு ஏற்றபடி வளர்கிறார்களென்று பார்த்துச் சந்தோஷப் படுகிறோம். அவர்கள் பெற்றேர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள், எவ்வளவு செலவு செய்திருப்பார்களென்று தான் முதலில் நினைத்துப் பார்க்க வேண்டும், தாய் தன் பெண்களுக்கு அவசரம் அவசரமாகச் சமைத்துப் போட்டு உடல் நலனைக் கவனித்து, தலை வாரி அழகுபடுத்திக் கல்லூரிக்கும், பள்ளிக்கும் அனுப்புகிறாள், தாய்க்குச் சிரமம் தாங்காமல் வியர்க்கிறது. ஆனால் அந்தக் களைப்பில் தன் மகள் பெருமையைக் கண்டு பூரிப்படைகிறாள், அதே சமயம் தந்தை விதம் விதமான ஆறு கெஜம்புடவைகளை வாங்கிக்கொடுத்து, படிக்க வைத்து, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து, ஓடி ஆடி அலைந்து மாப்பிள்ளை தேடும் சிரமம் எளிதன்று. காலம் மாறினாலும் கல்யாணச் செலவு குறையவில்லை.
பெற்றோர்கள் தங்கள் கடமையைத்தானே செய்கிறார்கள் எனப் பெண்கள் நினைக்கலாம். இந்த உலகில் கடமைகளை எல்லோராலும் நிறைவேற்ற முடியாது. அது சிரம சாத்தியமானது, எனவே பெண்கள் தாய் தந்தையரிடம் பரிபூர்ண அன்பு செய்வது பெற்றேர்களுக்கு அளிக்கும் உண்மையான ஆனந்தமாகும்.
முன்னேறிய நாடுகளில் குழந்தைகளை வெளியூர்களில் படிக்கவும், வளரவும் அனுப்பி விடுகிறர்கள். அதனால் குழந்தைகள் தாங்களே தங்களைக் கவனித்துக் கொள்ளவும், பொறுப்பாக இருக்கவும் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் வருஷக்கணக்காக இப்படியே இருந்து குழந்தைகளுக்குப் பெற்றோர்களிடம் அன்பு குறைந்து, பெற்றோர்களுக்குக் குழந்தை அன்பு குறைவதைக் கண்டார்கள். வாழ்க்கை வறண்டு தோன்றுவதுடன் அநேக துன்பங்களும் நேரிடுகின்றன. எனவே இப்பொழுது அவ்வழக்கத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.
வீட்டில் பண்டிகை தினம் வருகிறது. தாய் ஓடி ஆடி வேலை செய்கிறள். பெண்களை வேலை ஏவும் தாய்மார்களும் உண்டு. குழந்தை புருஷன் வீட்டுக்குப் போய்ச் செய்யட்டும். இங்கு கஷ்டப்படுவானேன் என நினைப்பவர்களும் உண்டு. இரண்டாவதாகச் சொன்ன தாயைப் போன்றவர்களிடம் பெண்களை அன்னைக்கு வலுவில் உதவி செய்யப் பழக்கிக் கொள்வது சரியாகும். வீட்டில் என்ன நடக்கிறது என்று கூட அறியாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு புஸ்தகமும் கையுமாக இருந்து விட்டால் அந்தப் பெண் இலட்சியப் பெண்ணாக மாட்டாள். பிறகு கணவன் வீட்டுக்குப் போனதும் பெரியவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற நல்ல வழக்கமும், எளிதாக வராது. சில கசப்பான அநுபவங்களுக்குப் பிறகு வரலாம். நம் குடும்பத்தில் சில தெய்வ நம்பிக்கைகள் இருக்கும். அதைப் பெண்கள் அலட்சியம் செய்யக் கூடாது. அவைகளை வீட்டிலுள்ளவர்களிடம் சரிவர அறிந்து கொள்ளலாம். மிகச் சில பெண்கள் தங்கள் சொந்தக் குரலை மாற்றிக் கொண்டு போவதும் நன்றாக இல்லை. அது தான் நாகரிகமென்று தவறாக நினைக்கிறார்கள். அது தவறு.
ஒரு பெண்ணுக்குக் தாய் குருவைப் போன்றவள், தெய்வத்தைப் போன்றவள். பெண்களுடைய பிற்கால வாழ்க்கை ஆனந்தமாக வளம் பெற, நந்தவனமாகப் பூத்துக் குலுங்கத் தாய் வார்க்கும் அன்புதான் தண்ணீராகும். இப்படி இன்றியமையாத தாயை இயற்கை நியதியால் இழந்த குழந்தைகளை நினைத்து நம்மைப் போன்ற பெண் மனம் வருந்துகிறது. பெண்கள் தங்கள் அருமை அன்னையின் அருமையை உணர்ந்து கொள்ள வேண்டுமல்லவா?
இப்படிக்கு,
பூமாதேவி
– 1957-05-05, தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.
![]() |
ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க... |