அந்த ஒன்று…




கருணாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது. இண்டைக்கு ரித்தியுடன் கதைக்காமலே விட்டிருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது.
“ம்…இனி கழிவிரக்கப்பட்டு என்ன செய்வது…?”
“கருணா! வெறுமன முகநூலில உங்கட குடும்பப் படங்களையும் அங்க இங்க வக்கேசன் போனது எண்டு விளம்பரப் படுத்திர படங்களையும் போடாமல் உன்ற மச்சாள் போல உன்ற திறமையக் காட்டுர விடயங்களப் பதிவுசெய்தியெண்டால் உனக்கு ஒரு பெயர் நிலைக்கும் தானே.”
ராதிகா என்ற பெயரை ரித்தி என மாற்றிக்கொண்டு “இன்றைய நாள் நல்ல நாளாக அமைய ….” என்று முகநூலில் நாள்தோறும் அறிவுரையை அள்ளித் தெளிக்கும் ராதிகா இன்று கருணாவிற்கு, சிறப்பாக- நேர்முக வருணனையாகக் கொடுத்த அறிவுரையால் கருணா கடுப்பாகியிருந்தாள்.
கருணாவுக்கு மச்சாள் கலைமகளைச் சிறுவயதில் இருந்து பிடிக்காது. அவளோடு போட்டி போட்டு பல சமயங்களில் கருணாவே தோற்றத்தால் உண்டான கசப்பு ஐம்பது வயதைக் கடந்த நிலையிலும் அவள் உள்ளத்தை நிறைத்திருந்தது.
அப்படி என்ன தான் கலை முகநூலில் கிழித்திருக்கிறாள் என்று முகநூலில் கண்ணை மேயவிட்டாள் கருணா.
முகநூலில் கலைமகள் அழகிய ஓவியம் ஒன்றை வரைந்து பதிவிட்டிருந்தாள். அதற்கு பலரிடமிருந்தும் லைக்குகள் குவிந்திருந்தன.
கலைக்கும் கருணாவுக்கும் இப்படிச் சிறிய விடயங்களில் தான் போட்டி…உண்மையில் கலை, கருணாவைத் தனது போட்டியாளாக என்றும் நினைத்ததில்லை என்பது வேறு விடயம்.
கருணா ஒரே பிள்ளை.அதிலும் தாயில்லாததால் தகப்பனான கணபதிப் பிள்ளையால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்ட பிள்ளை. இதனாலோ என்னவோ சிறுவயதில் தனது அத்தை மகளான கலையை அவள் அப்பம்மாவோ(கலைக்கு அம்மம்மா) அல்லது கணபதிப் பிள்ளையோ கொஞ்சுவதைக்கூட அவளாள் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
உறவுக்குள் மட்டும்தான் கருணாவின் மனனிலை இப்படி என்று சொல்வதற்கில்லை.
பல சமயங்களில் எங்கோ முகம் தெரியாதவர்கள் ஏதாவது சாதித்தால் “பார்த்தீங்களே ! தமிழ்ப் பிள்ளை எப்பிடி இதச் செய்திருக்கு” என்று பிள்ளைகளிடம் பெருமைப் பட்டுக்கொள்வாள் கருணா . அதுவே தனது உறவினரோ அல்லது தனக்கு மிகவும் தெரிந்த ஒருவரோ ஏதாவது சாதித்தால் பாராட்ட மனம் வருவதில்லை .பொறாமை மெல்ல எட்டிப்பார்த்து ஒரு எரிச்சலான மனனிலைக்கு கருணா உள்ளாவாள்.
அவளது நண்பி சுபா(ஒரு காலத்தில் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவள்- கால் நூற்றாண்டின் பின் இவளைத்தேடிப் பிடித்து முகநூலில் நட்பைப் புதுப்பித்துக் கொண்டவள்.இலங்கையில் கல்லூரி ஒன்றில் ஆசிரியராய் இருப்பவள்.) எப்பொழுதும் போல இன்றும் தமிழ் சங்கத்தில் தான் கவிதை வாசித்ததையும் பொன்னாடை அணிவிக்கக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதையும் படங்களுடன் பதிவிட்டிருந்தாள்.
அவள் ஒரு தற்பெருமைக்காரி . மூச்சு விட்டால்கூட அதை விளம்பரப் படுத்தாமல் விடமாட்டாள். மனதுக்குள் சுபாவைக் கரித்துக் கொட்டினாள் கருணா.
இதுபத்தாது என்று இவளது பக்கத்துவீட்டில் முன்பு இருந்தவளும் இவளது உறவினளுமான(இவளைவிட இரண்டு வயதுமட்டுமே இளையவள்)சாந்தி போனகிழமை கனடா ,அமேரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்ததாக எழுதி அங்கு எடுத்த படங்களை பதிவிறக்கியிருந்தாள். மருத்துவர் ஒருவரை மணமுடித்த அவள் அவுஸ்ரேலியாவில் வங்கி ஒன்றில் வேலை செய்கிறாள்.
தனது அந்தஸ்தைக் காட்டி மற்றவர்களை எரிச்சல் படுத்துவதுதான் அவளது வேலை .இதுதான் அவள் பற்றிய கருணாவின் மனப் பதிவு…
இவளது பள்ளித்தோழி ஈஸ்வரி -கல்லூரிக் குரூப்பில் இருக்கிறாள்.- அவள் இணையத்தளம் ஒன்றில் சிலகதைகளைப் பதிவிட்டிருக்கிறாள்-. அதன் லிங்கை குரூப்பில் பகிர்வாள். அக்கதைகளைப் பற்றி யாரும் வாசித்து கருத்துக் கூறாவிட்டாலும் அவள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தன்னை யாரும் கதையாசிரியை என அங்கீகரிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தனது மனதில் உள்ளவற்றை கதையில் வடிப்பது தன் தர்மம் என்றும் ஏதோதோ எழுதுவாள்.அவளுக்கே தான் கதையாசிரியைதானா என்ற சந்தேகம் இருக்கு போல — கருணாவுக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
இவளது இன்னுமொரு தோழி வதனி இத்தாலியில் இருக்கிறாள்.அவளும் தனக்கென ஒரு வேலையைத் தேடிக்கொண்டாள். ஒன் லைனில் புடவை நகை வியாபாரம் . ஐம்பதைத் தாண்டிய போதும்- தானே ஒரு மொடல் போல ஆடை ஆபரணங்களில் யொளிக்கின்ற படங்களை முகநூலிலும் வற்சப் குரூப்பிலும் பதிவிடுவாள்..இளமை குன்றா அவள் தோற்றத்தில் கருணாவுக்கு எப்பொழுதும் பொறாமைதான்.தன் அழுக்காற்றை லைக் எதுவும் போடாது ஓரளவு தணிக்கப் பார்ப்பாள்.
இந்த நட்பு வரிசையில் இந்துமதி இலங்கைக் கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளர்… சுகந்தி கனடா வானொலி ஒன்றின் அறிவிப்பாளர்…காயத்திரி இங்கிலாந்தில் பிரபல நடன ஆசிரியை…சர்மிளா -சாதாரணதரம் வரை இவளோடு படித்தவள்.- யாழ் மருத்துவமனையில் வைத்தியராக இருக்கிறாள்.குமுதினி குடும்பத் தலைவியாக யாழ்ப்பாணத்தில் நீர்வேலியில் இருந்தாலும் வீடுத்தோட்டம் அமைத்து அதனால் வருவாயும் பெற்று வருகிறாள். அவளது தோட்டச் செய்கையின் சிறப்பை யூ ரியுப் சனல் ஒன்று வெளியிட்டு அவளைச் சிறப்பித்திருந்தது.
இப்படி அவள் தோழியர் யாவரும் ஏதோ ஒருவகையில் திறமையாளராக இருக்க… இன்னும் பல தோழியர் -கருணா பெண்கள் கல்லூரியில் மட்டுமே படித்தவள்- முகநூலிலோ கல்லூரிக் குரூப்பிலோ முகங் காட்ட வில்லை. அவர்களுக்கு என்னென்ன பிரச்சினையோ…? அவள் மட்டும் ….மன வெப்பியாரத்தை அவளால் தாங்க முடியவில்லை…
கருணாவின் தாய் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போதே காலமாகிவிட்டா.அதன் பின் கணபதிப்பிள்ளையின் ஒரே உலகமாக கருணாவே இருந்தாள். இதனால் சிறு பராயத்தில் இருந்தே விரும்பியனவெல்லாம் அவளுக்குக் கிடைத்தன.படிப்பதில் சிறிய ஆர்வம் இருந்ததால் க,பொ. உயர் தரம் வரை(வணிகத்துறையில்) படித்தாள். நடனம் சங்கீதம் எதிலும் நாட்டம் இருக்கவில்லை. அதேபோல் சமையல் தையல் எதிலும் அதிக திறமை அவளுக்கு இருக்கவில்லை. அல்லது அவற்றை அவள் வளர்த்துக்கொள்ள முனையவில்லையோ…?
உயர்தரம் படித்து முடித்த நிலையில் 1987ஆம் ஆண்டு அவளும் கணபதிப்பிள்ளையும் யாழ் போர்ச் சூழ்நிலையினால் கொழும்புக்கு இடம் பெயர்ந்தனர்.அப்பொழுது அவள் தங்கியிருந்த தொடர்மாடிக் கட்டடத்தில் நாலைந்து பெண்கள் திருமணமாகி வெளிநாடு செல்லுவதற்காகக் காத்திருந்தனர்.அவர்களோடு பழகும் வாய்ப்பு கருணாவுக்குக் கிடைத்தது.அப்பொழுதுதான் அவள் மனதில் வெளிநாடு செல்லும் ஆசையும் துளிர்விட்டது.
கணபதிப்பிள்ளைக்கோ தன் ஒரே மகளைப் பிரிந்து வாழ்வது நினைத்துப்பார்க்க முடியாததாய் இருந்தது. அவர் உள்ளூரிலேயே படித்த நல்ல உத்தியோகத்தில் இருக்கும் மாப்பிள்ளையை தன்மகளுக்குக் கட்டிவைக்க விரும்பினார். அதற்கான பணபலமும் அவரிடம் இருந்தது.ஆனால் கருணாவின் கனவு வேறொன்றாய் இருக்கும் போது அவரால் என்னதான் செய்ய முடியும்..’?
கருணாவின் ஆசைப்படி ஜேர்மனி மாப்பிள்ளையான தயானந்தன் அவள் கணவனானான்.
திருமணமாகி ஒருவருடத்தின்பின் ஜேர்மனி வந்தாள் கருணா . தயானந்தன் ‘பிரேமன்’ நகரில் பாண்கடை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். அதி காலை மூன்றுமணிக்கு வேலைக்குக் கிளம்பிப் போய் மதியம் பன்னிரண்டு மணியளவில் வேலையால் திரும்புவான். இந்த நேர ஒழுங்கோ அல்லது தயாவின் வேலையோ கருணாவுக்கு முதலில் பிடிக்கவில்லைத்தான். ஆனால் காலகதியில் எல்லாம் பழகிப்போயின. ஒருவகையில் அது அவளுக்கு வசதியாகவும் இருந்தது.
தயானந்தன் வீட்டு வேலை உட்பட அனைத்திலும் கை கொடுத்தான். கருணா வேலைக்குப் போகவேண்டிய அவசியமிருக்கவில்லை.தயாவும் அவளும் வேலைக்குச் சென்றால் அதிக வருவாய் வரும் தான். ஆனால் வரிப்பணமும் அதிகம் கட்ட வேண்டிவரும். இதனால் கருணா வீட்டிலிருந்து பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது மேல் எனத் தயா சொல்லிவிட்டான்.அதோடு பெண்கள் சிறு சிறு வேலைகளுக்கு செல்வது யேர்மன் தமிழரிடையே மரியாதையில்லையாம்…தயாவின் கருத்து இது… .கருணாவுக்கும் வீட்டு வேலையுடன் வெளியில் வேலைக்குப் போய் வருவது சுமையாக இருக்கும் என்பதால் தயாவின் கருத்தை மனப்பூர்வமாக் ஏறுக்கொண்டாள். பிள்ளைகளோடு கணபதிப்பிள்ளையும் தமது இறுதிக்காலத்தில் ஜேர்மனிக்கு வந்து மகளுடன் தங்கியதால் பொழுது போவதொன்றும் கருணாவுக்குக் கடினமாகவில்லை.
ஆனால் ஏழுவருடங்களின் முன் கணபதிப்பிள்ளை இறந்து போனார். கருணாவின் மூத்த இரு பெண்களும் திருமணம் செய்து மூத்த மகள் பவித்திரா லண்டனுக்கும் இரண்டாவது மகள் ஆதிரா பேர்லினுக்கும் போய்விட்டார்கள். போன வருடம் மார்ச மாதத்தில் மூன்றாவது மகன் கபிலனும் பல்கலைக்கழகக் கல்விக்காக அமேரிக்கா போய்விட முதல் முதல் தனிமையை உணரலானாள் கருணா.
தயானந்தன் துணை இருந்தாலும் அவரும் வேலைக்குச் சென்றுகொண்டிருந்ததால் தனிமையில் பெரும் பொழுதைக் கழிக்கும் நிர்ப்பந்தம் கருணாவுக்கு.
அப்பொழுதுதான் முக நூல் ,வற்சப் முதலிய சமுக ஊடகங்களில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தத் தொடங்கியிருந்தாள் கருணா . அவளது பழைய நண்பிகள் பலரது தொடர்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் மக்ழ்ச்சியாகவும் சுவாரசியமானதாகவும் இருந்தது என்னவோ உண்மைதான். விடுப்பூகத்தோடு நண்பிகள் தமது தற்போதய வாழ்க்கை போக்குகள் பற்றி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். உண்மையில் கண்ணுக்குத் தெரியாத தராசில் தங்கள் தங்கள் தகுதியை -சேற்றஸ்சை -நிறைகளை -அளந்துகொண்டார்கள். தமது வாழ்கைக் குறைபாடுகளை மறைப்பதில் கவனமாக இருந்தார்கள்.
இந்த விடுப்பூக்கம் (curiosity ) ஒருகட்டத்துக்கு மேல் குறைந்தபின்…
கருணா தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கியபோது….மன உளைச்சல்தான் மிஞ்சிநிற்கிறது.
தனது அடிப்படைத்தேவைகள் யாவும் பூரணமாகக் நிறைவேறிவிட்டன என்றும் பிள்ளைகளின் பொறுப்புக்கள் யாவும் முடிந்து விட்டன என்றும் திருப்திபட்டுக்கொள்ளத்தான் கருணா விரும்புகிறாள்.
இந்த உலகில் எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் அவனும் ஒருநாள் மறைந்துதான் போவான். அவன் நினைவுகளும் ஒருநாள் அழிந்து தான் போகும். அதற்குள் மனிதர்கள் எத்தனை நாடகம் ஆடுகிறார்கள் .தன் உண்மை வடிவத்தை அல்ல…
தான் விரும்புவது போன்ற பிம்மத்தை மற்றவர்களுக்கு காட்டுவதில் தான் எத்தனை அக்கறை…
அத்தகைய ஒரு ஆட்டத்தைத் தானும் ஆடவேண்டுமா என்ற கேள்வி அவளிடத்தில் தோன்றும்.
கடல் கரை மணலில் ஒன்று தன் அடையளத்துக்காய் விண்ணப்பித்ததாய் அவளுள் ஏதோ ஒரு நினைப்பு…
இந்த ஞானம் சிறிது நேரம் தான்…..
மனம் ஒரு குரங்காயிற்றே…
உணவு, உடை போல மனிதனுக்கு அடையாளம் கூட ஒரு தேவைதானோ..? நவீன ஜனநாயக உலகில் -அதிலும் சமூக ஊடகங்களின் ஆதிக்கத்துக்குள் தன்னை இழந்துவிட்ட உலகில், மனிதர் தம் தம் தகுதிக்கேற்ப தமக்கான அடையாளங்களைத் தேடிக்கொள்ள விரும்புகிறார்கள்….
தம்முள் எழும் வெற்றிடத்தை ஏதோ ஒருவகையில் இட்டு நிரப்பும் முயற்சி அது…அதற்கு கருணா மட்டும் விதிவிலக்கா என்ன…?
கருணாவின் மனம் எதோ ஒன்றுக்கு இன்னும் ஏங்கும்…நானும் சமூகத்தில் -வேண்டாம் நண்பிகள் மட்டத்திலாவது கணிப்புக்கு உரியவளாக…
ஏதோ ஒன்றைச்செய்து தனது அடையாளத்தை -இருப்பை நிறுவக்கூடியவளாக…
அவள் மனம் இடையறாது தன்னை நிறுவுவதற்கான அந்த ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறது…
வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க... |