ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 98 
 
 

(2013ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

3. ரானின் வீட்டில்

“ரான்!” என்று கூறி ஹாரி ஆசுவாசப் பெருமூச்சுவிட்டான். சன்னலருகே ஊர்ந்து சென்று, அதில் பொருத்தப்பட்டிருந்த கம்பிகளின் வழியாகப் பேசுவதற்கு ஏதுவாக, ஹாரி அந்த சன்னலின் கதவை மேலே தூக்கிவிட்டான். “ரான், உனக்கு எப்படி . அட, இது என்ன?”

தான் எதைப் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பது ஹாரியின் புத்திக்கு உறைத்ததும் அவன் வாயைப் பிளந்தான். நீல வண்ணத்தில் இருந்த ஒரு பழைய காரின் பின்னிருக்கையின் சன்னல் வழியாக ரான் தன் தலையை வெளியே நீட்டிக் கொண்டிருந்தான். அந்தக் கார் அந்தரத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் முன்னிருக்கைகளில் இருந்து ரானின் மூத்த இரட்டைச் சகோதரர்களான ஃபிரெட்டும் ஜார்ஜும் தங்கள் பற்கள் முழுவதையும் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“ஹாரி, நன்றாக இருக்கிறாயா?”

“இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று ரான் கேட்டான். “நீ ஏன் என் கடிதங்களுக்கு பதில் போடவில்லை? என்னுடன் வந்து தங்குமாறு நான் பன்னிரண்டு முறை உனக்கு எழுதியிருப்பேன். பிறகு, நீ மகுள்களுக்குத் தெரியும் விதத்தில் மந்திரவித்தையைப் பயன்படுத்தியதற்காக உனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக என் அப்பா தெரிவித்தார்.”

“அப்படிச் செய்தது நானல்ல . . . ஆமாம், உன் அப்பாவுக்கு இது எப்படித் தெரியும்?”

“அவர் மந்திரஜால அமைச்சகத்தில் வேலை பார்க்கிறார்,” என்று ரான் கூறினான். “பள்ளிக்கு வெளியே நாம் மந்திர வித்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்பது உனக்குத் தெரியும்தானே? -“

அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த அந்தக் காரின்மீது தன் கண்களை ஓட்டியபடி, ஹாரி, “நீ இப்படிக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது,” என்றான்.

“ஓ! இதுவா? இது கணக்கில் வராது. நாங்கள் இந்தக் காரை வெறுமனே இரவல் வாங்கியிருக்கிறோம். இது எங்கள் அப்பாவுடையது. நாங்கள் இதை மந்திரசக்தியால் உருவாக்கவில்லை. ஆனால், உடன் தங்கியிருக்கும் மகுள்களின் கண்களுக்கு முன்னால் மந்திர வித்தையைப் பயன்படுத்துவது என்பது…”

“நான் அதைச் செய்யவில்லை என்று ஏற்கனவே கூறினேன் இல்லையா? ஆனால் அதைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைக்கக் கொஞ்ச நேரம் ஆகும். ரான், இங்கு டர்ஸ்லீ தம்பதியினர் என்னை அடைத்து வைத்துள்ளனர் என்றும் நான் ஹாக்வார்ட்ஸுக்குத் திரும்பி வர என்னை அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஹாக்வார்ட்ஸில் உள்ளவர்களிடம் உன்னால் கூற முடியுமா? என்னால் மந்திர வித்தையைப் பயன்படுத்த முடியாது என்பது உனக்குத் தெரியும். அப்படிச் செய்தால் நான் மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக மந்திர வித்தையைப் பயன்படுத்திவிட்டேன் என்று மந்திரஜால அமைச்சகம் என்மீது பாய்ந்துவிடும். அதனால்.”

“ஹாரி, முதலில் உளறிக் கொண்டிருப்பதை நிறுத்து!” என்று ரான் கூறினான். “நாங்கள் இங்கு வந்ததே உன்னை எங்களுடன் கூட்டிச் செல்வதற்காகத்தான்.”

“ஆனால் என்னை வெளிக் கொண்டுவர நீயும் மந்திர வித்தையை பயன்படுத்தக்கூடாதே -“

“அதற்குத் தேவையில்லை,” என்று கூறிய ரான், தன் தலையை முன்னிருக்கையை நோக்கித் திருப்பிப் பெரிதாகப் புன்னகைத்தான். “நான் யாருடன் வந்திருக்கிறேன் என்பதை நீ மறந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது.”

ஃபிரெட் வீஸ்லீ ஹாரியை நோக்கி ஒரு கயிற்றின் முனையை எறிந்தவாறு, “இதை உன் சன்னல் கம்பிகளைச் சுற்றிக் கட்டு,” என்றான்.

“டர்ஸ்லீ குடும்பத்தினர் விழித்துவிட்டால் நான் காலி,” என்று கூறிவிட்டு, ஹாரி அக்கயிற்றின் ஒரு முனையை ஒரு கம்பியின்மீது இறுக்கிக் கட்டியதும் ஃபிரெட் தன் காரின் ஆக்ஸிலரேட்டரை அழுத்தத் துவங்கினான்.

“ஹாரி, கவலைப்படாதே,” என்று ஃபிரெட் கூறினான். “பின்னால் தள்ளி நின்று கொள்.”

ஹாரி பின்னால் நகர்ந்து சென்று ஹெட்விக்கின் அருகே நின்று கொண்டான். நடந்து கொண்டிருந்த விஷயம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்திருந்ததுபோல ஹெட்விக் அசைவின்றியும் அமைதியாகவும் நின்று கொண்டிருந்தது. கார் எஞ்சினின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, சத்தமும் கூடியது. திடீரென்று ஏதோ நொறுங்கியது போன்ற ஒரு சத்தத்துடன், சன்னலில் அடிக்கப்பட்டிருந்த கம்பிகள் ஒட்டுமொத்தமாக அதிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்தன. ஃபிரெட் தன் காரை நேரே மேலே ஓட்டினான். ஹாரி வேகமாக சன்னருகே ஓடி வந்து பார்த்தான். சன்னலின் கம்பிச்சட்டம் தரையிலிருந்து ஒருசில அடிகளுக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. மூச்சு வாங்கியபடியே ரான் அதைக் காருக்குள் இழுத்துக் கொண்டிருந்தான். பதற்றத்துடன் காதுகொடுத்துக் கேட்டான். டர்ஸ்லீ தம்பதியரின் படுக்கையறையிலிருந்து எந்தச் சத்தமும் எழவில்லை.

அந்தக் கம்பிச்சட்டம் காரின் பின்னிருக்கையைப் பாதுகாப்பாக அடைந்தவுடன், ஃபிரெட் காரைப் பின்னால் நகர்த்தி, அதை ஹாரியின் சன்னலுக்கு எவ்வளவு அருகாமையில் கொண்டுவர முடியுமோ அவ்வளவு அருகே கொண்டு வந்தான். “காரில் ஏறு,” என்று ரான் கூறினான்.

“ஆனால் என்னுடைய ஹாக்வார்ட்ஸ் சாமான்கள்? என் மந்திரக்கோல்? என் மந்திரத் துடப்பம்?”

“அவை எங்கே இருக்கின்றன?”

“மாடிப்படிக்கு கீழே இருக்கும் சிற்றறையில் அவை பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் என்னால் இந்த அறையைவிட்டு வெளியே போக முடியாது.”

“அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை,” என்று காரின் முன்னிருக்கையில் இருந்த ஜார்ஜ் கூறினான். “ஹாரி, நீ கொஞ்சம் விலகிக் கொள்.”

ஃபிரெட்டும் ஜார்ஜும் கவனமாகக் காரின் சன்னல் வழியாக வெளியேறி ஹாரியின் அறைக்குள் வந்தனர். ஜார்ஜ் ஒரு சாதாரணக் கொண்டை ஊசியைக் கையில் எடுத்து, அதை வைத்து ஹாரியின் அறைக் கதவில் இருந்த பூட்டைத் திறக்க முயன்றான். அவர்களிடம் இருந்த இது போன்ற திறமைகளைத் தன்னால் மெச்சாமல் இருக்க முடியாது என்று ஹாரி நினைத்துக் கொண்டான்.

“மகுள்களின் சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருப்பது வெட்டி வேலை என்று பல மந்திரவாதிகள் கருதுகின்றனர்,” என்று ஃபிரெட் கூறினான். “ஆனால் அவற்றைக் கற்று வைத்திருப்பது இக்கட்டான நேரங்களில் உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம் – அவற்றுக்கு வேகம் போதாது என்றாலும்கூட.”

‘கிளிக்’ என்று ஒரு சிறு சத்தம் கேட்டது. உடனே கதவு திறந்து கொண்டது.

“நாங்கள் போய் உன் டிரங்க் பெட்டியை எடுத்து வருகிறோம். நீ அதற்குள் உன் அறையிலிருந்து உனக்குத் தேவைப்படும் பொருட்களை எடுத்து ரானிடம் கொடு,” என்று ஜார்ஜ் கிசுகிசுத்தான்.

அந்த இரட்டையர் ஹாரியின் அறையைவிட்டு வெளியே இருட்டாக இருந்த பகுதிக்குள் நுழைந்தபோது, “மாடிப்படியின் கீழ்ப்படிக்கட்டில் பார்த்து இறங்குங்கள். அது ‘கிறீச்’ என்று சத்தம் போடும்,” என்று ஹாரி கிசுகிசுப்பாகக் கூறினான்.

ஹாரி தன் அறைக்குள் அங்குமிங்கும் வேகமாக ஓடித் தனக்குத் தேவைப்பட்டப் பொருட்களை எடுத்து ரானிடம் ஒவ்வொன்றாகக் கொடுத்தான். பின் தனது கனமான டிரங்க் பெட்டியைக் கஷ்டப்பட்டுத் தூக்கி வந்து கொண்டிருந்த ஃபிரெட்டுக்கும் ஜார்ஜுக்கும் அவன் கை கொடுத்து உதவினான். பெரியப்பா வெர்னன் இருமிய சத்தம் ஹாரிக்குக் கேட்டது.

ஒருவழியாக அவர்கள் மாடிப்படியை ஏறிக் கடந்தனர். பின் அப்பெட்டியை ஹாரியின் அறைக்குள் தூக்கிச் சென்று, சன்னலின்மீது அதை வைத்தனர். காரில் இருந்த ரானுடன் சேர்ந்து அப்பெட்டியைக் காருக்குள் இழுப்பதற்காக ஃபிரெட் மீண்டும் காருக்குள் நுழைந்தான். ஜார்ஜும் ஹாரியும் அதை அந்த அறைக்குள் இருந்து அங்குலம் அங்குலமாக வெளியே தள்ளினர். அப்பெட்டி சன்னல் வழியாக மெதுவாக வெளியே சென்று கொண்டிருந்தது.

பெரியப்பா வெர்னன் மீண்டும் ஒரு முறை இருமினார்.

காருக்குள் இருந்து அப்பெட்டியை இழுத்துக் கொண்டிருந்த ஃபிரெட், “இன்னும் கொஞ்சம் தள்ளுங்கள்,” என்று கூறினான். “ஒரே ஒரு முறை பலமாகத் தள்ளுங்கள்!”

ஹாரியும் ஜார்ஜும் அப்பெட்டியைத் தங்கள் தோள்களைக் கொண்டு பலமாகத் தள்ளினர். அது வழுக்கிக் கொண்டு சென்று காரின் பின்னிருக்கையில் விழுந்தது.

“சரி, நாம் கிளம்பலாம்,” என்று ஜார்ஜ் கிசுகிசுத்தான்.

ஹாரி சன்னலின்மீது ஏறிக் கொண்டிருந்தபோது அவனுக்குப் பின்னால் இருந்து பயங்கரமான கிறீச்சொலி ஒன்று எழுந்தது. அதைத் தொடர்ந்து பெரியப்பா வெர்னனின் இடிமுழக்கக் குரல் கேட்டது.

“அந்தப் பாழாய்ப் போன ஆந்தை!” என்று வெர்னன் டர்ஸ்லீ கத்தினார்.

“ஐயோ, நான் ஹெட்விக்கை மறந்தே போய்விட்டேன்!” என்று ஹாரி முணுமுணுத்தான்.

மாடிப்படிக்குக் கீழே இருந்த மின்விளக்குப் போடப்படும் சத்தம் கேட்ட அதே கணத்தில், ஹாரி தனது அறையின் குறுக்காகப் பாய்ந்தான். ஹெட்விக்கின் கூண்டைத் தாவி எடுத்துக் கொண்டு, சன்னலருகே விரைந்து சென்று அதை ரானிடம் கொடுத்தான். சன்னலின்மீது ஏற அவன் போராடிக் கொண்டிருந்தபோது, பெரியப்பா வெர்னன் அவனது அறைக் கதவில் மோதினார் பூட்டப்படாதிருந்த அக்கதவு டமாலென்று திறந்தது.

ஒரு கணம், பெரியப்பா வெர்னன், நிலைப்படியில் ஆணியடித்தாற்போல நின்று கொண்டிருந்தார். பின் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, எருதுபோல முக்காரமிட்டுக் கொண்டே ஹாரியை நோக்கிப் பாய்ந்து சென்று அவனது கணுக்காலைப் பிடித்துக் கொண்டார்.

ஹாரியின் கைகளைப் பிடித்துக் கொண்ட ரானும் ஃபிரெட்டும் ஜார்ஜும் அவனைத் தங்களால் முடிந்த அளவுக்கு பலமாகத் தங்கள் பக்கம் இழுக்கத் துவங்கினர்.

“பெட்டூனியா!” என்று வெர்னன் கர்ஜித்தார். “அவன் தப்பித்துக் கொண்டிருக்கிறான்! அவன் தப்பித்துக் கொண்டிருக்கிறான்!”

வீஸ்லீ சகோதரர்கள் முழுப் பலத்துடன் படுவேகமாக ஓர் இழுப்பு இழுத்தனர். ஹாரியின் கால் வெர்னனின் பிடியிலிருந்து நழுவியது. ஹாரி காருக்குள் வந்து காரின் கதவைச் சாத்தியவுடன், “ஃபிரெட், முடிந்த அளவு பலமாக ஆக்ஸிலரேட்டரை அழுத்து! என்று ரான் கத்தினான். கார் நிலாவை நோக்கிப் பறந்தது.

ஹாரியால் நம்பவே முடியவில்லை. அவன் இப்போது ஒரு சுதந்திரப் பறவை. காரின் கண்ணாடி சன்னலை அவன் கீழிறக்கினான். இரவுக் காற்று அவனது தலைமுடியை பலமாகத் தாக்கியது. அவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். பிரைவிட் தெருவில் இருந்த வீடுகளின் மொட்டைமாடிகள் சிறிதாகிக் கொண்டிருந்தன. பெரியப்பா வெர்னன், பெரியம்மா பெட்டூனியா, டட்லீ ஆகிய மூவரும் திறந்த வாய் மூடாமல், ஹாரியின் அறையின் சன்னலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தனர்.

“மீண்டும் அடுத்தக் கோடை விடுமுறையின்போது பார்க்கலாம் P என்று ஹாரி கத்தினான்.

வீஸ்லீ சகோதரர்கள் வயிறு குலுங்கச் சிரித்தனர். ஹாரி பின்னிருக்கையில் வசதியாக உட்கார்ந்து கொண்டு வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.

அவன் ரானிடம், “ஹெட்விக்கைத் திறந்துவிடு. அது நம் காருக்குப் பின்னால் பறந்து வரட்டும். அது தன் இறக்கையை விரித்து மாமாங்கம் இருக்கும்!” என்று கூறினான்.

ஜார்ஜ் தன்னிடமிருந்த கொண்டை கொடுத்தான். ஒருசில கணங்களுக்குப் பிறகு ஹெட்விக் ஆனந்தமாக ஊசியை ரானிடம் சன்னல் வழியாகப் பறந்து சென்று காரின் அருகே மிதந்து வந்தது. “ஹாரி, அப்புறம் கதை எப்படிப் போகிறது?” என்று ரான் பொறுமையிழந்து கேட்டான். “என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?”

டாபியைப் பற்றியும், அது தனக்குக் கொடுத்த எச்சரிக்கையைப் பற்றியும், கடைசியாகக் கேக் களேபரத்தைப் பற்றியும் ஹாரி அவர்களிடம் விலாவாரியாக எடுத்துரைத்தான். அவன் சொல்லி முடித்து வெகு நேரமாகியும் அங்கு ஓர் அதிர்ச்சி கலந்த மௌனம் நிலவியது.

கடைசியில் ஃபிரெட், “எங்கோ உதைக்கிறது,” என்றான்.

“ஆமாம், ஏதோ இடறுகிறது,” என்று ஜார்ஜும் ஒத்துக் கொண்டான். “இந்தச் சதித் திட்டத்தை யார் தீட்டியது என்பதை டாபி கூற மறுத்துவிட்டது, அப்படித்தானே?”

“டாபியால் கூற முடிந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை,” என்று ஹாரி கூறினான். “நான் ஏற்கனவே கூற முடிந்திருக்கும் கூறியிருந்ததுபோல, அது வாய் தவறி எதையாவது சொல்ல வந்தபோதெல்லாம் அது தன் தலையைச் சுவரின்மீது முட்டிக் கொண்டது.”

ஃபிரெட்டும் ஜார்ஜும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதை ஹாரி கவனித்தான்,

“அது என்னிடம் பொய் சொல்லியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று ஹாரி கேட்டான்,

“சரி, நான் அதை இப்படிப் பார்க்கிறேன். வீட்டில் வேலை செய்யும் எல்ஃபுகளுக்குச் சொந்தமாக ஒருசில மந்திரசக்திகள் உண்டு. அவை பொதுவாக ஆனால் அவற்றைத் தங்களுடைய எஜமானர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்துவதில்லை. நீ மீண்டும் வருவதைத் தடுக்கும் ஹாக்வார்ட்ஸு”க்கு நோக்கத்துடன்தான் டாபி அனுப்பப்பட்டதாக நான் கருதுகிறேன். யாரோ இதை விளையாட்டாகக் கருதியிருக்கிறார்கள். ஆமாம், நம் பள்ளியில் உன்மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டுள்ளவர்கள் யாராவது உன் நினைவுக்கு வருகிறார்களா?”

“ஆமாம்,” என்று ஹாரியும் ரானும் ஒருசேரக் குரல் கொடுத்தனர்.

“டிராகோ மால்ஃபாய்,” என்று ஹாரி கூறினான். “அவன் என்னை வெறுக்கிறான்.”

ஜார்ஜ் அவர்களை நோக்கித் திரும்பி, “டிராகோ மால்ஃபாயா?” என்று கேட்டான். “லூசியஸ் மால்ஃபாயின் பையனா?”

“அப்படித்தான் இருக்க வேண்டும். இது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான பெயர் இல்லையே?” என்று ஹாரி கூறினான். “ஏன் கேட்கிறாய்?”

“என் அப்பா அவரைப் பற்றிப் பேசி நான் கேட்டிருக்கிறேன்,” என்று ஜார்ஜ் கூறினான். “பெயர் சொல்லப்படக்கூடாதவனுக்குப் பெரும் ஆதரவாளராக இருந்தவர் அவர்.”

ஃபிரெட் தன் கழுத்தை வளைத்துத் திரும்பி ஹாரியைப் பார்த்து, “பெயர் சொல்லப்படக்கூடாதவன் மாயமாக மறைந்துவிட்டதும், லூசியஸ் மால்ஃபாய், தான் அதில் தீவிரமாக ஈடுபடவில்லை என்று கூறி நம் பக்கம் திரும்பி வந்துவிட்டார். அவரது கூற்று முழுக்க முழுக்க அபத்தமானது. பெயர் சொல்லப்படக்கூடாதவன் தன்னைச் சுற்றி அமைத்திருந்த நெருக்கமான ஆதரவாளர்களின் குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார் என்று என் அப்பா கருதுகிறார்,” என்று கூறினான்.

மால்ஃபாய் குடும்பத்தைப் பற்றிய இப்படிப்பட்ட வதந்திகளை ஹாரி முன்பே கேள்விப்பட்டிருந்ததால் இது அவனை அவ்வளவாக ஆச்சரியப்படுத்தவில்லை. மால்ஃபாய் தன் நடவடிக்கைகள் மூலம், டட்லீ ஓர் அன்பான, அறிவார்ந்த, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற ஒருவன் என்பதுபோலத் தோன்றச் செய்துவிட்டான்.

“மால்ஃபாய் குடும்பத்தினரிடம் வீட்டு வேலை செய்யும் எல்ஃப் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று ஹாரி கூறினான்.

“யார் அதற்கு உரிமையாளர்களோ அவர்கள் கண்டிப்பாக மந்திரவாதிகளின் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். அதோடு அவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் இருக்க வேண்டும்.”

“வீட்டுத் துணிமணிகளை இஸ்திரி போட்டுத் தருவதற்கு வீட்டோடு ஒரு எல்ஃப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் அம்மா எப்போதும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்,” என்று ஜார்ஜ் கூறினான். “ஆனால் எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் பரணில் பதுங்கி இருக்கும் ஓர் உருப்படாத, வயதான, கோரைப் பல் ராட்சஸப் பேயும், எங்கள் தோட்டமெங்கும் வியாபித்திருக்கும் தோட்டப் பேய்களும்தான். பெரிய கோட்டைக் கொத்தளங்களுடன் வரும் மாளிகை வீடுகளில்தான் எல்ஃபுகள் இருக்கும். எங்கள் வீட்டில் உன்னால் அதைப் பார்க்க முடியாது …”

ஹாரி அமைதியாக இருந்தான். மால்ஃபாயிடம் எப்போதும் எல்லாவற்றிலும் சிறந்தவையே இருந்தன. அவனது குடும்பத்தாரிடம் மந்திர உலகத் தங்கத்திற்குப் பஞ்சமே இருக்கவில்லை. ஒரு பெரிய மாடமாளிகையில் பெருமிதத்துடன் மால்ஃபாய் நடந்து திரிந்து கொண்டிருந்ததை ஹாரியால் தன் மனக்கண்ணில் எளிதாகப் பார்க்க முடிந்தது. தன்னை ஹாக்வார்ட்ஸுக்கு வரவிடாமல் தடுக்கத் தன் வீட்டு எல்ஃபை அனுப்பத் துணியும் செயல், கச்சிதமாக மால்ஃபாய் செய்யத் துணியும் ஒரு செயல்போலவே தோன்றியது. டாபி கூறியதை உண்மை என்று தான் நம்பியது மடத்தனம்தானோ என்று ஹாரிக்கு ஒரு சந்தேகம் வந்தது.

“ஆனால் உன்னைக் கூட்டிச் செல்ல நாங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியே,” என்று ரான் கூறினான். “என்னுடைய கடிதம் ஒன்றுக்குக்கூட நீ பதில் அனுப்பாமல் இருந்தது உண்மையிலேயே எனக்குப் பெருங்கவலை அளிக்கத் துவங்கியது. நான் முதலில் அது எரோலின் தவறு என்றுதான் நினைத்தேன் -”

“எரோல்?”

“எங்களுடைய ஆந்தை. அது படுகிழமாகிவிட்டது. கடிதத்தைப் பட்டுவாடா செய்யும்போது அது மயங்கி விழுவது ஏற்கனவே நடந்திருக்கிறது. அதனால் நான் ஹெர்ம்ஸைக் கடன் வாங்க முயன்றேன் -”

“யாரை?”

“பெர்சி மாணவ அணித் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் என் அம்மாவும் அப்பாவும் அவனுக்காக வாங்கிக் கொடுத்த ஆந்தை அது,” என்று முன்னிருக்கையில் இருந்த ஃபிரெட் கூறினான்.

“ஆனால் பெர்சி அதை எனக்குத் தர மறுத்துவிட்டான்,” என்று ரான் கூறினான். “தனக்கு அது தேவை என்று கூறிவிட்டான்.”

“பெர்சி இக்கோடை விடுமுறை முழுவதும் கொஞ்சம் வினோதமாக நடந்து கொண்டு வருகிறான்,” என்று ஜார்ஜ் சிடுசிடுப்புடன் கூறினான். “அவன் ஏராளமான கடிதங்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறான். தன் அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டு நிறைய நேரத்தையும் செலவழித்து வருகிறான். . . ஒரு பேட்ஜுக்கு எவ்வளவு முறைதான் ஒருவனால் பாலிஷ் போட முடியும்? … . ஃபிரெட், நீ மேற்கு நோக்கி அதிகமாகப் போகிறாய்,” என்று ஜார்ஜ் டாஷ்போர்டில் இருந்த திசைகாட்டியைச் சுட்டிக்காட்டியபடியே கூறினான்.

“ஆமாம், உங்கள் அப்பாவிற்கு நீங்கள் இந்தக் காரை எடுத்து வந்திருப்பது தெரியுமா?” என்று ஹாரி, அவர்கள் என்ன பதில் கூறவிருந்தார்கள் என்பதை ஊகித்தவாறே கேட்டான்.

“இல்லை. அவருக்குத் தெரியாது,” என்று ரான் கூறினான். “அவருக்கு இன்றிரவு வேலை இருக்கிறது. வண்டியை நிறுத்தி வைக்கும் அறைக்குள் இதை நாம் அம்மாவிற்குத் தெரியாமல் கொண்டுபோய் நிறுத்திவிட்டால் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.”

“ஆமாம், மந்திரஜால அமைச்சகத்தில் உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்?” என்று ஹாரி கேட்டான்.

“இருப்பதிலேயே சுவாரசியமற்ற ஓர் அலுவலகத்தில் அவர் வேலை பார்க்கிறார்,” என்று ரான் கூறினான். “மகுள் கலைப்பொருட்களின் துஷ்பிரயோக அலுவலகம்தான் அது.”

“எந்த அலுவலகமென்று கூறினாய்?”

“மந்திரசக்தி ஏற்றப்பட்ட மகுள் பொருட்கள் தவறுதலாக மகுள்களின் கடைகளையோ அல்லது வீடுகளையோ சென்றடையாமல் பார்த்துக் கொள்ளும் அலுவலகம் அது. கடந்த வருடம் ஒரு வயதான மந்திரவாதினி இறந்து போனபோது, அவரது தேநீர்க் கோப்பைகள், கலைப்பொருட்களை விற்பனை செய்த ஒரு கடைக்குப் போய்விட்டன. அவற்றை வாங்கிய ஒரு மகுள் பெண்மணி அவற்றைத் தன் வீட்டிற்குக் கொண்டு சென்று, தன் விருந்தினர்களுக்கு அவற்றில் தேநீர் ஊற்றிக் கொடுக்க முயற்சித்தார். உடனே அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டது. அதனால் எங்கள் அப்பா தன் அலுவலகத்தில் பல வாரங்களாக இது குறித்துத் தன் மண்டையை உடைக்க வேண்டியதாயிற்று.”

“பிறகு என்ன நடந்தது?”

“அந்தத் தேநீர்க் கோப்பைகள் தாறுமாறாக அங்குமிங்கும் ஆடிக் குதிக்கத் துவங்கின. அவற்றில் படுசூடாக இருந்த தேநீர் அந்த அறையெங்கும் கொட்டியது. சர்க்கரைக் கட்டிகளை எடுக்கப் பயன்படுத்தும் சிறிய இடுக்கி ஒருவரின் மூக்கை இறுகப் பற்றிக் கொண்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தது. அப்போது எங்கள் அப்பா பைத்தியம் பிடித்தவர்போல நடந்து கொண்டார். அவரது அலுவலகத்தில் அவரும் ஒரு பழைய மந்திரவாதியான பெர்கின்ஸ் என்பவரும் மட்டும்தான் இருக்கின்றனர். அதனால், விஷயங்களை மூடி மறைக்க, மக்கள்மீது ஞாபக மறதி மந்திரத்தைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் அவர்கள் இருவரும்தான் ஈடுபட்டாக வேண்டும்”

“அப்படியானால் உங்கள் அப்பா.. இந்தக் கார்…”

ஃபிரெட் சிரித்தான். “ஆமாம். மகுள்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள்மீதும் எங்கள் அப்பா அதிக ஆர்வம் கொண்டவர். எங்கள் வீட்டிலுள்ள ‘கார் நிறுத்தும் இடம்’ முழுவதும் மகுள்கள் பயன்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது. அவர் அப்பொருட்களை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி, அவற்றில் மந்திரத்தை ஏற்றி, பின்னர் முன்பிருந்த மாதிரியே அவற்றைப் பொருத்திவிடுவார். அவர் எங்கள் வீட்டைச் சோதனையிட்டால், அவர் தன்னையே கைது செய்து கொள்ள நேரிடும். இது அம்மாவுக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்துவிடுகிறது.”

ஜார்ஜ் காரின் முன் கண்ணாடி வழியாகக் கீழே எட்டிப் பார்த்து, “அதுதான் முக்கியச் சாலை,” என்று கூறினான். “பத்து நிமிடங்களில் நாம் அங்கிருக்கலாம் … வானமும் வெளுத்துக் கொண்டிருக்கிறது.” கிழக்கில் லேசான இளஞ்சிவப்பு நிற வெளிச்சம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஃபிரெட் காரைப் படிபடியாகக் கீழே கொண்டுவந்து கொண்டிருந்தான். வயல்களும் மரங்களும் அடங்கிய நிலப்பகுதியை ஹாரியால் பார்க்க முடிந்தது.

“நாம் இப்போது எங்களுடைய கிராமத்திற்குச் சற்று வெளியே இருக்கிறோம்,” என்று ஜார்ஜ் கூறினான். “இதன் பெயர் ஆட்டரி செயின்ட் கேச்போல் . . .”

அந்தப் பறக்கும் கார் தொடர்ந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. பிரகாசமான சிவப்புச் சூரியனின் விளிம்பு மரங்களின் ஊடாகக் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது.

“தரையைத் தொடுகிறோம்!” என்று ஃபிரெட் கத்திய அதே தருணத்தில் ஒரு லேசான மோதலுடன் அவர்கள் தரையிறங்கினர். ஒரு சிறிய முற்றத்தில், சிதிலமடைந்த நிலையில் இருந்த ஒரு ‘கார் நிறுத்தும்’ இடத்தருகே அவர்கள் இறங்கியிருந்தனர். ஹாரி முதன்முறையாக ரானின் வீட்டைப் பார்த்தான்.

அது ஒரு காலத்தில் மிகப் பெரிய பன்றிக்கூடமாக இருந்திருக்கும் என்பதுபோலத் தோன்றியது. ஆனால் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூடுதலாகக் கட்டப்பட்ட அறைகளால் அதன் உயரம் அதிகரித்து, பல மாடிகள் உயரம் கொண்ட ஒரு கட்டிடமாக அது மாறியிருந்தது. மாயாஜாலம்தான் அதைக் கீழே விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹாரி நினைத்தான். சிவப்பு நிறத்தில் இருந்த அதன் கூரையின்மேல் நான்கைந்து புகைபோக்கிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. தரையில் நடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அதில் ‘த பர்ரோ’ என்று எழுதப்பட்டிருந்தது. முன்வாசல் கதவையொட்டி வெல்லிங்டன் காலணிகள் குவியலாகக் கிடந்தன. துருப்பிடித்தக் கொப்பரை ஒன்றும் அதனருகே கிடந்தது. நன்றாகத் தின்று கொழுத்திருந்த பழுப்பு நிறக் கோழிகள் அந்த முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

“இங்கு பெரிதாக ஒன்றும் கிடையாது,” என்று ரான் கூறினான்.

பிரைவிட் தெருவை நினைத்துக் கொண்ட ஹாரி, “இது அற்புதமாக இருக்கிறது,” என்று மகிழ்ச்சியாகக் கூறினான்.

அவர்கள் அனைவரும் காரில் இருந்து இறங்கினர்.

“நாம் இப்போது சத்தமில்லாமல் மாடிக்குச் செல்ல வேண்டும்,” என்று ஃபிரெட் கூறினான். “பின்னர் அம்மா நம்மைக் காலை உணவிற்காகக் கூப்பிடும்வரை காத்திருக்க வேண்டும். ரான், நீ அப்போது மாடிப்படிகளில் தாவிக் குதித்து வந்து, ‘அம்மா, நேற்றிரவு நம் வீட்டிற்கு யார் வந்தார்கள் என்று பாரேன்!’ என்று கத்த வேண்டும். அம்மாவும் ஹாரியைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைவார். நாம் காரை எடுத்துக் கொண்டு பறந்தோம் என்பது யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது.”

“சரி,” என்று ரான் கூறினான். “ஹாரி, வா, நான் என்னுடைய…”

ரானின் முகம் பச்சை நிறத்திற்கு மாறியது. அவனது கண்கள் அவர்களது வீட்டின்மீது நிலைகுத்தி நின்றன. மற்ற மூவரும் அத்திசை நோக்கித் திரும்பினர்.

வீஸ்லீ சகோதரர்களின் அம்மாவான மோலி அந்த முற்றத்தின் மறுமுனையிலிருந்து பீடுநடை போட்டு வந்து கொண்டிருந்தார். மேய்ந்து கொண்டிருந்த கோழிகள் திசைக்கொன்றாக ஓடின. அன்பான முகத்தையும், குள்ளமான, குண்டான உருவத்தையும் கொண்டிருந்த ஒரு பெண்மணியால் எப்படிக் கோரைப் பற்களுடன்கூடிய ஒரு புலியைப்போலக் காட்சியளிக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது.

“ஓ!” என்று ஃபிரெட் நடுங்கினான்.

“ஜயோ!” என்று ஜார்ஜ் அலறினான்.

மோலி அவர்கள் முன் வந்து நின்றார். தன் இடுப்பில் இரண்டு கைகளையும் தூக்கி வைத்துக் கொண்டு, குற்ற உணர்வு பொங்கி வழிந்து கொண்டிருந்த அந்த முகங்களை ஒவ்வொன்றாகத் தன் பார்வையால் அளந்தார். அவர் அணிந்திருந்த ஆடையின் பாக்கெட்டில் ஒரு மந்திரக்கோல் தன் தலையை நீட்டிக் கொண்டிருந்தது.

“அப்புறம்?” என்று அவர் கர்ஜித்தார்.

மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியதாகத் தான் நம்பிய ஒரு குரலில், ஜார்ஜ், “அம்மா, காலை வணக்கம்!” என்று கூறினான்.

கனத்த அமைதியுடன் இருந்த ஒரு குரலில், மோலி, “நான் எவ்வளவு தூரம் கவலைப்பட்டிருப்பேன் என்று உங்களுக்கு ஏதாவது அக்கறை இருக்கிறதா?” என்று கேட்டார்.

“அம்மா, மன்னித்துவிடுங்கள்! ஆனால் நாங்கள் இவனை -” மோலியின் பையன்கள் மூன்று பேரும் அவரைவிட உயரமாக வளர்ந்திருந்தனர். ஆனால் குமுறி வெடித்துக் கொண்டிருந்த அவரது கோபத்திற்கு முன்னால் அவர்கள் தலைகுனிந்து நின்றனர்.

“படுக்கைகள் காலியாக இருக்கின்றன…எந்தத் துண்டுச் சீட்டும் இல்லை… காரைக் காணவில்லை..அது எங்காவது மோதி இருக்கலாம்.. கவலையில் என் மனம் துடித்துக் கொண்டிருந்தது. உங்களுக்கு அம்மாவின் மேல் ஒரு துளியாவது அக்கறை இருக்கிறதா? . நான் உயிரோடு இருக்கும்வரை இது இனியொரு முறை நடக்கக்கூடாது .. அப்பா வரட்டும்! பில்லோ, சார்லியோ அல்லது பெர்சியோ ஒருபோதும் எங்களுக்கு இது போன்ற தொல்லைகளைக் கொடுத்ததில்லை…”

“கச்சிதமான பெர்சி!” என்று ஃபிரெட் முணுமுணுத்தான்.

ஃபிரெட்டின் நெஞ்சில் தன் கைகளை வைத்து, “உனக்கு வாய்தான் கிழிகிறது. நீ அவனிடமிருந்து கொஞ்சமாவது கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்!” என்று மோலி காட்டுக்கூச்சல் போட்டார். “நீ செத்துப் போயிருக்கக்கூடும், யார் கண்ணிலாவது பட்டிருக்கக்கூடும், அல்லது உன் அப்பாவுடைய வேலைக்கு உலை வைத்திருக்கக்கூடும்”.

அவரது வசைமழை தொடர்ந்து பல மணிநேரம் நீடித்துக் கொண்டிருந்ததுபோலத் தோன்றியது. மோலி அவர்களைத் திட்டித் தீர்த்ததும் அவருக்குத் தொண்டை கட்டிக் கொண்டது. பின்னர் அவர் ஹாரியை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார். ஹாரி உடனடியாகப் பின்வாங்கினான்.

“ஹாரி, உன்னைப் பார்த்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி,” என்று அவர் கூறினார். “உள்ளே வா, சாப்பிடலாம்.”

அவர் திரும்பி வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினார். ஹாரி ரானை நடுக்கத்துடன் ஒரக் கண்ணால் பார்த்தான். ரான் அவனை ஊக்குவிக்கும் விதமாகத் தலையை அசைத்ததும், ஹாரி ரானின் தாயாரைப் பின்தொடர்ந்து சென்றான்.

சமையலறை சிறியதாகவும் குறுகலாகவும் இருந்தது. அறையின் நடுவே, நன்றாகத் தேய்ந்து போயிருந்த ஒரு சாப்பாட்டு மேசையும் ஒருசில நாற்காலிகளும் இருந்தன. ஒரு நாற்காலியின் முனையோரமாக ஹாரி உட்கார்ந்து கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் அதற்கு முன்பு ஒருபோதும் ஒரு மந்திரவாதியின் வீட்டிற்குள் சென்றதில்லை.

அவனுக்கு எதிரே இருந்த சுவரில் இருந்த கடிகாரத்தில் ஒரே ஒரு முள்தான் இருந்தது. அதில் எண்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. அதன் ஓரங்களில், ‘தேநீர்த் தயாரிப்பிற்கான நேரம்,’ ‘கோழிகளுக்கு உணவளிப்பதற்கான நேரம், மற்றும் ‘நீ தாமதமாக வந்திருக்கிறாய்’ போன்ற வாசகங்கள் மாடச்சுவரில் மூன்று வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி எழுதப்பட்டிருந்தன. வைக்கப்பட்டிருந்தன. அவற்றில், ‘உங்கள் சீஸை வசியப்படுத்துங்கள்,’ ‘பேக்கிங்கில் மாயாஜாலம்’ மற்றும் ‘ஒரு நிமிட விருந்துகள் – இது ஒரு மாயாஜாலம்!’ போன்ற புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. பாத்திரங்கள் கழுவும் தொட்டிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பழைய காலத்து வானொலி ஒன்று, “அடுத்து வரவிருப்பது ‘மாயாஜால நேரம்’ அதில் உங்களை மகிழ்விக்க வருகிறார் பிரபல மந்திரவாதினிப் பாடலரசி செலஸ்டீனா வார்பெக்,” என்று அறிவித்தது ஹாரியின் காதுகளில் விழுந்தது.

மோலி தனக்குத் தானே பேசிக் கொண்டே காலை உணவைத் தாறுமாறாகத் தயாரித்துக் கொண்டிருந்தார். சாசேஜ்களை இருப்புச் சட்டியில் தூக்கி எறிந்து கொண்டே, தன் மகன்களை நோக்கி ஒரு கடுமையான பார்வையை வீசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது, “உங்கள் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை,” என்றோ, “இப்படி நடக்கும் என்று நான் ஒருபோதும் நம்பியதில்லை,” என்றோ புலம்பிக் கொண்டிருந்தார்.

ஹாரிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அவனைப் பார்த்து, “தம்பி, நான் உன்னைக் குற்றம் சொல்ல மாட்டேன்,” என்று அவர் கூறினார். அப்படியே ஹாரியின் தட்டில் ஏழெட்டு சாசேஜ்களைப் போட்டார். “நானும் ரானின் அப்பாவும் உன்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். வருகிற வெள்ளிக்கிழமைக்குள் நீ ரானின் கடிதங்களுக்கு பதில் போடாவிட்டால், நாங்களே வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு வரலாம் என்று நேற்று இரவுகூட நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.” இப்போது ஹாரியின் தட்டில் மூன்று வறுத்த முட்டைகளைப் போட்டவாறே, மேலும் தொடர்ந்து, “ஆனால் சட்டத்திற்குப் புறம்பான ஒரு காரை நாட்டின் பாதி தூரம் ஓட்டிக் கொண்டு சென்றதைப் பற்றி என்ன சொல்ல? யாராவது உங்களைப் பார்த்திருந்தால் என்னவாகியிருக்கும்?”

அவர் சர்வசாதாரணமாகத் தன் மந்திரக்கோலை எடுத்து, பாத்திரம் கழுவும் இடத்தை நோக்கிச் சொடுக்கினார். அங்கிருந்த பாத்திரங்கள் தம்மைத் தாமே கழுவிக் கொள்ளத் துவங்கின. அவை ஒன்றையொன்று லேசாக இடித்துக் கொண்ட ஒலி பின்னணி இசைபோல ஒலித்துக் கொண்டிருந்தது.

“அம்மா, நேற்று மேகமூட்டமாக இருந்தது,” என்று ஃபிரெட் கூறினான்.

“சாப்பிடும்போது நீ வாயை மூடிக் கொண்டிரு,” என்று மோலி வெடுக்கென்று கூறினார்.

“அம்மா, அவர்கள் ஹாரியைப் பட்டினி போட்டுள்ளனர்,” என்று ஜார்ஜ் கூறினான்.

மோலி ஹாரிக்கு ஒரு முழு ரொட்டியைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றின்மீது வெண்ணெயைத் தடவிக் கொண்டே, “நீயும் வாயை மூடு!” என்று ஜார்ஜைப் பார்த்துக் கூறினார். ஆனால் அது அவர் முன்பு கூறிய அளவுக்குக் காட்டமாக இருக்கவில்லை.

அக்கணத்தில், நீண்ட இரவு அங்கி ஒன்றை அணிந்திருந்த, செந்தலையுடன்கூடிய ஒரு சிறிய உருவம் சமையலறையில் தோன்றியதால் அவர்களது கவனம் சற்றுச் சிதறியது. அந்த உருவம் ‘வீல்’ என்று கத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.

ஓர் அடங்கிய குரலில், ரான், “ஜின்னி,” என்று ஹாரியிடம் கூறினான். “என் தங்கை. கோடை விடுமுறை முழுவதும் அவள் எப்போதும் உன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.”

“ஆமாம் ஹாரி, உன் கையெழுத்து வேண்டும் என்று அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்,” என்று பற்கள் தெரியச் சிரித்தபடி ஃபிரெட் கூறினான். ஆனால் அவனது கண்கள் அவனது அம்மாவின் கண்களைச் சந்தித்ததும், அவன் அதற்குப் பிறகு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.

அந்த நான்கு தட்டுகளும் காலியாகும்வரை அங்கு யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் தட்டுகள் காலியாவதற்குச் சொற்ப நேரமே பிடித்தது.

ஃபிரெட் கொட்டாவி விட்டபடியே, “எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது.” என்று கூறினான். அவன் ஒருவழியாகத் தன் கத்தியையும் முட்கரண்டியையும் கீழே வைத்துவிட்டு, “நான் தூங்கப் போகலாம் என்று நினைக்கிறேன் . . .” என்று கூறினான்.

“நீ தூங்கக்கூடாது,” என்று மோலி கண்டிப்பாகக் கூறினார். “இரவு முழுவதும் கண்விழித்தது உன் தவறு. தோட்டத்தில் மறுபடியும் தோட்டப் பேய்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. நீ அவற்றை ஒழிக்கும் வேலையில் இறங்கு.”

“அம்மா, ஆனால் -”

மோலி ரானையும் ஜார்ஜையும் பார்த்து, “ஏய், நீங்கள் இரண்டு பேரும் ஃபிரெட்டோடு சேர்ந்து கொள்ளுங்கள்,” என்று கூறினார். பின் அவர் ஹாரியின் பக்கம் திரும்பி, “தம்பி, நீ போய்ப் படுத்துத் தூங்கு! அந்தப் பாழாய்ப் போன பறக்கும் காரில் உன்னைக் கூட்டி வர வேண்டும் என்று நீ அவர்களைக் கேட்கவில்லை” என்றார்.

சுத்தமாகத் தூக்கம் வராத நிலையில் இருந்த ஹாரி, வேகவேகமாக, “நானும் ரானுக்கு உதவுகிறேன். நான் ஒருபோதும் தோட்டப் பேய்களை விரட்டியடித்ததில்லை,” என்று கூறினான்.

“நீயாக முன்வந்து உதவ முனைவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சுவாரசியமான வேலை இல்லை,” என்று மோலி கூறினார். “இது குறித்து லாக்ஹார்ட் என்ன கூறுகிறார் என்று இப்போது நாம் பார்க்கலாம்.”

பின் அவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் இருந்து ஒரு கனமான புத்தகத்தை எடுத்தார். ஜார்ஜ் முனகினான். “தோட்டப் பேய்களை எப்படி விரட்டியடிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று அவன் கூறினான்.

மோலி தன் கையில் எந்தப் புத்தகத்தை வைத்திருந்தார் என்று ஹாரி எட்டிப் பார்த்தான். ‘வீடுகளில் இருக்கும் தொல்லை தரும் பூச்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கான கில்டராய் லாக்ஹார்ட்டின் கையேடு’ என்று பொன்னெழுத்துக்களில் அதில் பொறிக்கப்பட்டு இருந்தது. பிரகாசமான நீலநிறக் கண்களுடனும், சுருளான தங்கநிறத் தலைமுடியுடனும் மிக அழகாகத் தோற்றமளித்த ஒரு மந்திரவாதி அதன் அட்டையில் இடம்பெற்றிருந்தார். மந்திர உலகில் வழக்கமாக நடைபெறுவதுபோல அதிலிருந்த படமும் இயங்கிக் கொண்டிருந்தது. அது கில்டராய் லாக்ஹார்ட்டாக இருக்க வேண்டும் என்று ஹாரி ஊகித்தான். அவர் அவர்கள் அனைவரையும் பார்த்து விஷமத்தனமாகக் கண்சிமிட்டிக் கொண்டிருந்தார். மோலி அவரைப் பார்த்துப் பிரகாசமாகப் புன்னகைத்தார்.

“ஒ! அவர் அற்புதமானவர்,” என்று மோலி கூறினார். “வீட்டுப் பூச்சிகள் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இது ஓர்அருமையான புத்தகம் . . .”

“அம்மாவுக்கு அவர்மீது ஒரு கண் உண்டு,” என்று ஃபிரெட் கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தான்.

மோலி தன் கன்னம் சிவக்க, “முட்டாள்தனமாகப் பேசாதே!” என்று கூறினார். “சரி, உங்களுக்கு லாக்ஹார்ட்டைவிட அதிகமாகத் தெரியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் வெளியே போய் வேலையை விரைவாகச் செய்து முடியுங்கள். நான் வெளியே வந்து சோதிக்கும்போது என் கண்ணில் ஒரு தோட்டப் பேய் தென்பட்டால்கூட நீங்கள் தொலைந்தீர்கள். என்ன, புரிகிறதா?”

சோம்பல் முறித்தவாறும் கொட்டாவி விட்டவாறும் வீஸ்லீ கும்பல் ஹாரி பின்தொடர வெளியே சென்றது. அத்தோட்டம் மிகப் பெரியதாக இருந்தது. ஹாரியின் கண்ணோட்டத்தில் ஒரு தோட்டம் எந்த அளவில் இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அது பெரியதாக இருந்தது. டர்ஸ்லீ தம்பதியினர் இத்தோட்டத்தை விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அதில் ஏகப்பட்டக் களைகள் இருந்தன, புற்கள் வெட்டப்படாமல் இருந்தன. வேலிச் சுவரோரமாக பெரிய முடிச்சுகளுடன்கூடிய மரங்கள் இருந்தன. ஹாரி அதுவரை ஒருபோதும் பார்த்திராத பல தாவரங்கள் அங்கு நிரம்பி வழிந்தன. தவளைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பெரிய பச்சை நிறக் குளம் ஒன்றும் அங்கு இருந்தது.

அவர்கள் அந்தப் புல்தரையைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, ஹாரி ரானிடம், “மகுள்களின் தோட்டத்தில் கூடத் தோட்டப் பேய்கள் உண்டு என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“மகுள்கள் தோட்டப் பேய்கள் என்று கருதுபவற்றை நான் பார்த்திருக்கிறேன்,” என்று பதிலளித்த ரான், ஒரு புதர்ச்செடி அருகே கீழே குனிந்தான். “மீன் பிடிப்பதற்கான தூண்டில்களைக் கைகளில் பிடித்தபடி இருக்கும் குள்ளமான, குண்டான கிறிஸ்துமஸ் தாத்தாக்களைப்போல . .

திடீரென்று அங்கு பலமாக எதுவோ ஆட்டப்பட்டச் சத்தம் கேட்டது. அந்தப் புதர்ச்செடி குலுங்கி ஆடியது. ரான் நிமிர்ந்தான். “இதுதான் தோட்டப் பேய்!” என்று அவன் சுரத்தின்றிக் கூறினான்.

“என்னை விட்டுவிடு! என்னை விட்டுவிடு!” என்று அந்தத் தோட்டப் பேய் கீச்சிட்டது.

அது கண்டிப்பாகக் கிறிஸ்துமஸ் தாத்தாவைப்போல இருக்கவில்லை என்பது நிஜம். அது சிறியதாக, வழுவழுப்பாக இருந்தது. அதன் தலை அப்படியே ஓர் உருளைக்கிழங்குபோல உருண்டையாகவும் வழுக்கையாகவும் இருந்தது. அது தன்னுடைய உறுதியான சிறிய கால்களைக் கொண்டு ரானை எட்டி உதைக்க முயன்றபோது, ரான் அதன் கணுக்கால்களைப் பிடித்து அதைத் தலைகீழாகத் தொங்கவிட்டான்.

“ஹாரி, நீ செய்ய வேண்டியது இதுதான்,” என்று அவன் கூறினான். அவன் அந்தத் தோட்டப் பேயைத் தன் தலைக்கு மேலாகத் தூக்கிப் பிடித்து (‘என்னை விட்டுவிடு!’ என்று அது கத்தியது) வேகமாக வட்டமாகச் சுழற்றினான். ஹாரியின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியைப் பார்த்த ரான், “இது இவற்றைக் காயப்படுத்தாது. நீ சுழற்றும் வேகத்தில் அவற்றிற்குத் தலைச்சுற்றல் ஏற்படும் என்பதால், மீண்டும் தமது பதுங்குக் குழிகளுக்குத் திரும்பி வர அவற்றுக்கு வழி தெரியாமல் போய்விடும்,” என்று தெரிவித்தான்.

அந்தத் தோட்டப் பேயின் கணுக்காலைப் பற்றியிருந்த தன் பிடியை அவன் திடீரென்று விட்டுவிட்டான். அது வானத்தில் இருபது அடிகள் பறந்து வேலிக்கு வெளியே இருந்த மைதானத்தில் போய் விழுந்தது.

“அற்ப தூரம்,” என்று ஃபிரெட் கூறினான். “என்னால் தொலை தூரத்தில் இருக்கும் அந்தக் குச்சிவரை எறிய முடியும்.”

அத்தோட்டப் பேய்கள்மீது இரக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதை ஹாரி விரைவில் கண்டு கொண்டான். புதரோரம் தான் முதன்முதலாகக் கண்டுபிடித்த ஒரு தோட்டப் பேயைத் தூக்கி எறிய அவன் முடிவு செய்தான். ஆனால். அவனது பலவீனத்தைக் கண்டுகொண்ட அந்தத் தோட்டப் பேய், தனது கூர்மையான பற்களால் ஹாரியின் கைகளை நன்றாகப் பதம் பார்த்துவிட்டது. அதை உதறுவதற்குள் ஹாரிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. பின் அதை அவன் சுழற்றி எறிந்தான்.

“வாவ்! ஹாரி – அது ஐம்பதடி தூரம் இருக்கும்.”

வெகு விரைவில், அந்த வானம், பறந்து கொண்டிருந்த தோட்டப் பேய்களால் நிறைந்தது.

ஜார்ஜ் ஐந்தாறு தோட்டப் பேய்களை ஒன்றாகப் பிடித்து எறிந்தவாறே, “ஹாரி, பார்த்தாயா? அவை ஒன்றும் அவ்வளவு புத்திக்கூர்மை கொண்டவை அல்ல,” என்று கூறினான். “நாம் அவற்றை ஒழித்துக்கட்டப் புறப்பட்டுவிட்டோம் என்பது தெரிந்த உடனேயே அவை கூட்டமாக வெளியே வந்து வேடிக்கைப் பார்க்கும். எப்படி நம்மிடம் இருந்து தப்பிப்பது என்பதை இந்நேரத்திற்குள் அவை கற்றுக் கொண்டிருக்கும் என்று நீ நினைக்கிறாய், இல்லையா?”

விரைவில் அவை ஒரு கூட்டமாகத் தம்முடைய தோள்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு நீண்ட வரிசையில் வெளியே செல்லத் துவங்கின.

அவை வேலியின் மறுபுறம் இருந்த மைதானத்தைச் சென்றடைந்ததை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, ரான், “அவை விரைவில் மீண்டும் திரும்பி வந்துவிடும்,” என்று கூறினான். அவற்றிற்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும். அப்பா அவற்றிடம் கடுமையாக நடந்து கொள்வதில்லை. அவையும் குடும்ப உறுப்பினர்கள் என்று அவர் நினைக்கிறார்

அக்கணத்தில் முன்வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது.

“அவர் வந்துவிட்டார்,” என்று ஜார்ஜ் கத்தினான். “அப்பா வீட்டுக்கு வந்துவிட்டார்!”

அவர்கள் தோட்டத்தின் ஊடாக ஓடி வீட்டிற்குள் சென்றனர்.

ஆர்தர் வீஸ்லீ சமையலறை நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அவர் தனது மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டிருந்தார். அவரது கண்கள் மூடியிருந்தன. ஒல்லியாக இருந்த அவரது தலை வழுக்கையாக இருந்தது. கொஞ்சநஞ்சம் இருந்த முடியும் அவரது குழந்தைகளின் முடியைப்போலச் சிவப்பு நிறத்தில் இருந்தது. பச்சை நிறத்தில் இருந்த நீண்ட அங்கி ஒன்றை அவர் அணிந்திருந்தார். அது பயணத்தால் கசங்கியும் அழுக்காகவும் இருந்தது.

“எப்படிப்பட்ட ஓர் இரவு,” என்று அவர் முணுமுணுத்தார். அவரது கைகள் தேநீர்க் கோப்பையைத் துழாவிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி உட்கார்ந்தார்கள். “ஒன்பது திடீர்ச் சோதனைகள்! ஒன்பது! நான் அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்தபோது அந்தக் கிழம் முன்டுங்கஸ் ஃபிளெட்சர் என்மீது மந்திரம் ஒன்றை ஏவிவிட்டது . . .”

ஆர்தர் தனது தேநீர்க் கோப்பையில் இருந்து ஒரு பெரிய மடக்குத் தேநீரைக் குடித்துவிட்டுப் பெருமூச்செறிந்தார்.

“ஏதாவது கிடைத்ததா?” என்று ஃபிரெட் ஆவலுடன் கேட்டான்.

“எனக்குக் கிடைத்ததெல்லாம் சுருங்கிக் கொண்டிருந்த ஒருசில திறவுகோல்களும், கடிக்கும் ஒரு கெண்டியும் மட்டும்தான்,” என்று கூறி அவர் கொட்டாவி விட்டார். “ஒருசில பயங்கரமான விஷயங்களும் அங்கிருந்தன, ஆனால் அவை என் அலுவலகத்தைச் சார்ந்தவை அல்ல. மிகமிக வினோதமான முயலினம் ஒன்றைப் பற்றிய விசாரணைக்காக மோர்ட்லேக் அழைத்துச் செல்லப்பட்டார். நல்லவேளை, அவ்விஷயம், ‘பரிசோதனை நிலையில் இருக்கும் மந்திர தந்திரங்களுக்கான குழு’வின் பொறுப்பில் உள்ளது. . .”

“ஆமாம், சுருங்கும் திறவுகோல்களை எதற்காக ஒருவர் தயாரிக்க வேண்டும்?” என்று ஜார்ஜ் கேட்டான்.

“மகுள்களைக் கவர்வதற்காக,” என்று கூறி அவர் மீண்டும் பெருமூச்செறிந்தார். “சுருங்கிக் கொண்டே இருக்கும் ஒரு திறவுகோலை அவர்களிடம் விற்றுவிட்டால், அது கடைசியில் மிகவும் சுருங்கிப் போய்க் காணாமல் போய்விடும். அவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு அத்திறவுகோல் கிடைக்காது..பிரச்சனை என்னவென்றால் இதில் யார்மீதும் குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில் சுருங்கிக் கொண்டிருக்கும் ஒரு திறவுகோல் தன்னிடம் இருக்கிறது என்று எந்தவொரு மகுளும் ஒப்புக் கொள்ள மாட்டார். தனது திறவுகோல் தொடர்ந்து தொலைந்து போய்க் கொண்டிருப்பதாகத்தான் அவர் கூறிக் கொண்டிருப்பார். கடவுள் அவர்களைக் காப்பாற்றுவாராக! மாயாஜாலங்கள் அவர்கள் கண்முன்னே நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்தால்கூட அவர்கள் அதை உதாசீனப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் நம்மவர்கள் மந்திர வித்தையை எவ்வளவு தூரம் எடுத்துச் செல்வார்கள் என்பதை நீங்கள் அறிந்தால், அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள் -“

“கார்களை இதற்கு உதாரணமாகக் கூறலாமா?”

மோலி அங்கு தோன்றினார். அடுப்பில் வாட்டும் கம்பி ஒன்று அவரது கையில் இருந்தது. அதை அவர் ஒரு வாள்போல நீட்டிப் பிடித்திருந்தார். ஆர்தரின் கண்கள் சடாரென்று விரியத் திறந்து கொண்டன. அவர் குற்ற மனப்பான்மையுடன் தன் மனைவியைப் பார்த்தார்,

“மோலி, நீ ஏன் திடீரென்று கார்களைப் பற்றிப் பேசுகிறாய்?” சுட்டெரிக்கும் கண்களுடன் மோலி, “ஆர்தர், நான் ஒரு குறிப்பிட்டக் காரைப் பற்றி பேசுகிறேன்,” என்று கூறினார். “ஒரு மந்திரவாதி ஒரு துருப்பிடித்தக் காரை வாங்கி, அது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்பதற்காக அதை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றிப் பார்க்கப் போவதாகத் தன் மனைவியிடம் கூறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் அதைத் தன் மந்திரசக்தி மூலம் பறக்க வைப்பதுதான் அவரது நோக்கமாக இருந்திருக்கிறது.” ஆர்தர் iஸ்லீ திருதிருவென முழித்தார்.

“அன்பே, அவர் அப்படிச் செய்திருந்தால் அதில் சட்ட மீறல்கள் எதுவும் இருந்திருக்காது என்று நீ நம்பலாம் … ஆனால் உண்மையை அவர் தன் மனைவியிடம் கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . . . சட்டத்தில் ஓர் ஓட்டை இருக்கிறது . . . அந்தக் காரால் பறக்க முடியும் என்றாலும், பறப்பதற்கு அவர் அதை உபயோகிக்காமல் இருக்கும்வரை -”

“ஆர்தர், நீங்கள் அந்தச் சட்ட விதியை எழுதியபோது அப்படிப்பட்ட ஓர் ஓட்டை இருக்குமாறு பார்த்துக் கொண்டீர்கள்!” என்று மோலி கத்தினார். “மகுள்களின் குப்பைகளைக் கொண்டுவந்து உங்களுடைய கார் நிறுத்துமிடத்தில் வைத்து நோண்டிக் கொண்டிருக்கலாம் என்பதற்காக நீங்கள் அப்படிச் செய்திருக்கிறீர்கள். உங்களுக்காக ஒரு தகவல் – நீங்கள் பறக்க உபயோகிக்கத் திட்டமிடாமல் இருந்த அந்தக் காரில்தான் இன்று காலை ஹாரி இங்கு வந்து இறங்கினான்!”

“ஹாரியா, எந்த ஹாரி?” என்று ஆர்தர் கேட்டார்.

அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கு ஹாரியைப் பார்த்ததும் அவர் துள்ளினார்.

“அடக் கடவுளே! இது ஹாரி பாட்டரா? உன்னைச் சந்தித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி! ரான் உன்னைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறான் -“

“நேற்றிரவு உங்களுடைய பையன்கள் அந்தக் காரில் பறந்து சென்று ஹாரியை அதில் கூட்டி வந்துள்ளனர்!” என்று மோலி இரைந்தார். ‘அதைப் பற்றி இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?”

“உண்மையிலேயே அப்படிச் செய்தீர்களா?” என்று ஆர்தர் தன் மகன்களிடம் ஆர்வமாகக் கேட்டார். “அது சரியாகப் பறந்ததா? நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் -” அவர் தடுமாறினார். மோலியின் கண்கள் அனலைக் கக்கிக் கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “பசங்களா, அது தவறு, பெருந்தவறு . . .” என்று இழுத்தார்.

மோலி காட்டுத் தவளைபோலக் கத்தத் துவங்கியதைக் கண்ட ரான், ஹாரியிடம், “இனி இது அவர்கள் பாடு. நாம் இதிலிருந்து கழன்று கொள்ளலாம்,” என்று முணுமுணுத்தான். “வா, நான் உனக்கு என் படுக்கையறையைக் காட்டுகிறேன்.”

அவர்கள் சமையலறையைவிட்டு வெளியேறி ஒரு குறுகிய தாழ்வாரத்தின் வழியாகச் சென்று, தாறுமாறாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மாடிப்படியில் ஏறினர். அது அந்த வீட்டின் ஊடாக வளைந்து நெளிந்து சென்றது. மூன்றாவது மாடியில் ஓர் அறைக் கதவு திறந்திருந்தது. அது வேகமாக மூடிக் கொள்வதற்குள் தன்னை வெறித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடிப் பழுப்பு நிறக் கண்களை ஹாரி கண்டான்.

“அது ஜின்னி,” என்று ரான் கூறினான். “அவள் இவ்வளவு வெட்கப்பட்டு நான் இதுவரை பார்த்ததில்லை. பொதுவாக அவள் தன் அறைக் கதவை மூடுவதில்லை -”

அறைக்குள்

அவர்கள் மேலும் இரண்டு மாடிகள் ஏறி, வண்ணப்பூச்சு உரிந்து கொண்டிருந்த ஒரு கதவை அடைந்தனர். அதில் ‘ரொனால்டின் அறை’ என்று எழுதப்பட்டிருந்த ஒரு பலகை மாட்டப்பட்டிருந்தது.

ஹாரி அந்த நுழைந்தான். சரிவாக வடிவமைக்கப்பட்டிருந்த கூரைச் சுவர் அவனது தலையைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஹாரி ஓர் உலைக்குள் நுழைந்ததுபோலச் சூடாக உணர்ந்தான். படுக்கை விரிப்புகள், சுவர்கள், கூரைச் சுவர் ஆகியவை உட்பட, அந்த அறையில் இருந்த அனைத்துமே பளிச்சென்ற ஆரஞ்சு நிறத்தில் இருந்தன. அந்த அறையில் இருந்த அழுக்கான வால்பேப்பரின் ஒவ்வோர் அங்குலத்தையும் மறைப்பதற்காக, ஆரஞ்சு அங்கிகள் அணிந்திருந்த, கைகளில் மந்திரத் துடப்பங்களை வைத்திருந்த ஏழு மந்திரவாதிகள் மற்றும் மந்திரவாதினிகளின் படங்களை ரான் எல்லா இடங்களிலும் ஒட்டியிருந்தான் என்பதை ஹாரி உடனடியாகப் புரிந்து கொண்டான். அந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் உற்சாகமாகத் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தனர்.

“இவர்கள் உன்னுடைய குவிடிச் குழுவினரா?” என்று ஹாரி கேட்டான்.

கட்டிலின்மீது கிடந்த ஆரஞ்சு நிறப் படுக்கை விரிப்பை ஹாரிக்குச் சுட்டிக்காட்டி, ரான், “ஆமாம்! சட்லி கேனன்ஸ்!” என்று கூறினான். அந்தப் படுக்கை விரிப்பில் ‘ச.கே’ என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. அதோடு, வேகமாகப் பறந்து கொண்டிருந்த ஒரு பீரங்கிக் குண்டின் படமும் அதில் வரையப்பட்டிருந்தது. “லீக் போட்டிகளில் இவர்கள் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.”

ரானின் பள்ளிக்கூட வசியப் புத்தகங்கள் ஒரு மூலையில் தாறுமாறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதையடுத்து, நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன. அவை எல்லாவற்றிலும் ‘த அட்வென்சர்ஸ் ஆஃப் மார்ட்டின் மிக்ஸ், த மேட் மகுள்’ கதை இடம்பெற்றிருந்தது. சன்னல் மாடத்தில் தவளை முட்டைகளால் நிறைந்திருந்த ஒரு மீன் தொட்டியின் மேல் ரானின் மந்திரக்கோல் கிடந்தது. அதற்கு அருகில், அறைக்குள் வந்து கொண்டிருந்த சூரிய ஒளியில் ரானின் செல்ல எலி ஸ்கேபர்ஸ் சோம்பலாகப் படுத்துக் கொண்டிருந்தது.

தரையில் கிடந்த, தானாகவே கலைத்துக் கொள்ளும் சீட்டுக்கட்டுகளைத் தாண்டிச் சென்ற ஹாரி, அந்த அறையில் இருந்த சிறிய சன்னலின் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். வெகுகீழே இருந்த தோட்டத்தில், தோட்டப் பேய்களின் கும்பல் ஒன்று அவர்களது வேலிப் புதர்கள் வழியாக அணிவகுத்துத் திருட்டுத்தனமாக மீண்டும் உட்புகுந்து கொண்டிருந்தன. பின் ஹாரி ரானைத் திரும்பிப் பார்த்தபோது, தனது அபிப்பிராயத்தை எதிர்பார்த்துப் பதற்றத்துடன் ரான் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான்.

“இந்த அறை கொஞ்சம் சிறியதுதான்,” என்று ரான் இழுத்தான். “உன் அறைபோல இது இல்லைதான். மேலே பரணில் வசித்து வரும் கோரைப் பல் ராட்சஸப் பேய்க்கு நேர்க் கீழே நான் இருக்கிறேன். அது எப்போதும் குழாய்களைத் தட்டிச் சத்தம் ஏற்படுத்திக் கொண்டும் முனகிக் கொண்டும் இருக்கும்.”

ஆனால் ஹாரி வாயெல்லாம் பல்லாக, “நான் இதுவரை நுழைந்துள்ளதிலேயே மிகச் சிறந்த வீடு இதுதான்,” என்று கூறினான்.

ரானின் காதுகள் சிவந்தன.

4. புத்தக வெளியீட்டு விழா

ரானின் வீட்டில் நிலவி வந்த வாழ்க்கைமுறை, பிரைவிட் தெருவில் டர்ஸ்லீ வீட்டில் நிலவிய வாழ்க்கைமுறையிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. எல்லாம் ஒழுங்குடனும் நேர்த்தியுடனும் இருந்ததை டர்ஸ்லீ தம்பதியினர் விரும்பினர். வீஸ்லீ குடும்பத்தினரின் வீட்டில் எதிர்பாராதவையும் வினோதமானவையும் நீக்கமற நிறைந்திருந்தன. சமையலறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் ஹாரி முதன்முறையாகப் பார்த்தபோது, அது, “ஏய்! கழிசடை! உன் சட்டையைக் காற்சட்டைக்குள் செருகிக் கொள்!” என்று கத்தியபோது அவன் அதிர்ச்சி அடைந்தான். வீடு கொஞ்சம் அமைதி அடைந்திருந்தால், பரணில் இருந்த கோரைப் பல் ராட்சஸப் பேய் ஊளையிட்டது அல்லது குழாய்களைத் தூக்கிக் கீழே போட்டு பலத்தச் சத்தத்தை உண்டு பண்ணியது. ஃபிரெட் மற்றும் ஜார்ஜின் படுக்கையறையிலிருந்து வந்த வெடிச் சத்தங்கள் எந்தவிதமான சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ரானின் வீட்டில் ஹாரிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது பேசும் கண்ணாடியோ, சத்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்த கோரைப் பல் ராட்சஸப் பேயோ அல்ல. மாறாக, அங்கிருந்த அனைவரும் தன்னை விரும்பினர் என்பதுதான் அவனைப் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

மோலி அவனது காலுறைகள் இருந்த நிலைமையைப் பற்றி அலுத்துக் கொண்டார். அவன் சாப்பிட உட்கார்ந்த ஒவ்வொரு தடவையும் அவர் அவனுக்கு நான்கு முறை பரிமாறினார். இரவு உணவின்போது ஹாரி தன்னருகே உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று ஆர்தர் விரும்பினார். ஏனெனில் மகுள்களின் அஞ்சல் சேவை எப்படி இயங்கியது என்பதைப் பற்றியும், மின்சார பிளக் எப்படி வேலை செய்தது என்பதைப் பற்றியும் அவனைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள அது அவருக்கு வசதியாக இருந்தது.

எடுத்துக்காட்டாக, தொலைபேசி எவ்வாறு இயங்கியது என்பதைப் பற்றி ஹாரி விலாவாரியாக எடுத்துரைத்தபோது, “பிரமாதம்!” என்று அவர் உற்சாகமாகக் கூச்சலிட்டுவிட்டு, “மகுள்கள் மாயாஜாலங்கள் இல்லாமலேயே வாழ்க்கை நடத்த எத்தனை வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளார்கள். அவர்கள் சாமர்த்தியசாலிகள்தான்!” என்று பிரமித்தார்.

ரானின் வீட்டிற்கு வந்த ஒரு வாரம் கழித்து, ஹாக்வார்ட்ஸில் இருந்து ஹாரிக்குத் தகவல் வந்தது. ஹாரியும் ரானும் காலை உணவிற்காகச் சமையலறைக்குள் நுழைந்தபோது ஆர்தரும் மோலியும் கண்டனர். ஹாரியைப் பார்த்த அடுத்தக் கணத்தில் ஜின்னி தனது ஜின்னியும் அங்கிருந்த மேசையில் ஏற்கனவே அமர்ந்திருந்ததைக் கஞ்சிக் கோப்பையைத் தவறுதலாகக் கீழே தள்ளிவிட்டாள். அது பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது. ஹாரி அவள் இருந்த அறைக்குள் நுழைந்தபோதெல்லாம் ஏதாவது ஒன்றைக் கை தவறவிடுவதை அவள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். கீழே விழுந்து கிடந்த கோப்பையை எடுப்பதற்காக அவள் மேசைக்கு அடியில் குனிந்தாள். அவள் நிமிர்ந்தபோது அவளது முகம் அந்திச் சூரியனைப்போலச் சிவந்திருந்தது. அதைக் கவனிக்காததுபோலக் காட்டிக் கொண்ட ஹாரி, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மோலி கொடுத்த ரொட்டியை வாங்கிக் கொண்டான்.

“பள்ளியில் இருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன,” என்று கூறிய மோலி, ஹாரியிடமும் ரானிடம், ஒரே மாதிரித் தோன்றிய இரண்டு கடிதங்களைக் கொடுத்தார். மஞ்சள் நிறத் தோல் காகிதத்தால் உருவாக்கப்பட்டிருந்த அந்த அஞ்சலுறைகளில் பச்சை நிற மையினால் அவர்களது முகவரி எழுதப்பட்டிருந்தது. “ஹாரி, நீ இங்கு இருப்பது டம்பிள்டோருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அவரது பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது போலும்!” என்று கூறிய ரான், இரவு அணிந்திருந்த அதே பைஜாமாவுடன் ஃபிரெட்டும் ஜார்ஜும் அங்கு ஆடி அசைந்து வந்தபோது, “உங்களுக்கும் கடிதங்கள் வந்திருக்கின்றன,” என்று அவர்களிடம் கூறினான்.

அவர்கள் அனைவரும் தங்கள் கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்ததால் சிறிது நேரத்திற்கு அங்கு அமைதி நிலவியது. வழக்கம்போல, செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று ‘கிங்ஸ் கிராஸ்’ ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஹாக்வார்ட்ஸ் எக்ஸ்பிரஸை ஹாரி பிடித்தாக வேண்டும் என்று அவனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. வரும் வருடத்திற்கு அவனுக்குத் தேவைப்பட்டப் புத்தகங்களின் பட்டியலும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் வருட மாணவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்கள்:

மிரான்டா கோஷாக் எழுதிய ‘அடிப்படை மாய மந்திரப் புத்தகம்’ (இரண்டாம் வருடம்)

கில்டராய் லாக்ஹார்ட் எழுதிய ‘பன்ஷி மோகினிப் பிசாசிடம் இருந்து விடுதலை’

கில்டராய் லாக்ஹார்ட் எழுதிய ‘கோரைப் பல் ராட்சஸப் பேய்க்குச் சாவு மணி அடித்தல்’

கில்டராய் லாக்ஷஹார்ட் எழுதிய ‘யட்சினிப் பிசாசுகளுடன் ஓர் உல்லாசப் பயணம்’

கில்டராய் லாக்ஹார்ட் எழுதிய ‘அரக்கப் பேயுடன் ஒரு பிரயாணம்’

கில்டராய் லாக்ஹார்ட் எழுதிய ‘ரத்தக் காட்டேரியுடன் ஒரு கடற்பயணம்’

கில்டராய் லாக்ஹார்ட் எழுதிய ‘ஓநாய் மனிதர்களுடன் ஓர் உலா’ கில்டராய் லாக்ஹார்ட் எழுதிய ‘பனி அரக்கனுடன் ஒரு வருடம்’

தன்னுடைய பட்டியலைப் படித்துப் பார்த்த ஃபிரெட், ஹாரியின் பட்டியலை எட்டிப் பார்த்தான்.

“லாக்ஹார்ட்டின் அனைத்துப் புத்தகங்களும் வாங்கப்பட வேண்டும் என்று உனக்கும் எழுதப்பட்டுள்ளதா?” என்று அவன் ஹாரியிடம் கேட்டான். “தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு’ என்ற பாடத்தை எடுக்கவிருக்கின்ற புதிய ஆசிரியர் லாக்ஹார்ட்டின் ரசிகராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் கண்டிப்பாக ஒரு மந்திரவாதினியாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் பந்தயம் கட்டத் தயார்.”

அக்கட்டத்தில் ஃபிரெட் தன் தாயாரின் கண்களை நோக்கினான். உடனே தன் தட்டில் இருந்த உணவில் கவனம் செலுத்தத் துவங்கினான்.

ஜார்ஜ் தன் பெற்றோரை ஒரு கணம் பார்த்துவிட்டு, “அவை எல்லாவற்றையும் ஒருசேர வாங்க வேண்டும் என்றால் விலை படுபயங்கரமாக இருக்கும்,” என்று கூறினான். “லாக்ஹார்ட்டின் புத்தகங்களின் விலை பொதுவாகவே அதிகம்தான் . . .”

“கவலைப்படாதீர்கள், எப்படியும் சமாளித்துவிடலாம்,” என்று மோலி தெரிவித்தார். ஆனால் அவரது முகத்தில் கவலை ரேகைகள் ஓடத் துவங்கியிருந்தன. “ஜின்னிக்கு இந்த வருடப் படிப்பிற்கு, பிறர் பயன்படுத்திய புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.”

“ஓ, நீ இந்த வருடம் ஹாக்வார்ட்ஸில் சேரப் போகிறாயா?” என்று ஹாரி ஜின்னியைப் பார்த்துக் கேட்டான்.

அவள் அதை ஆமோதித்துத் தலையை அசைத்தாள். அவளது முகத்தில் மின்னிய வெட்கச் சிவப்பு அவளது தலையின் செம்பட்டை நிறத்தைத் தூக்கியடித்தது. பரிமாறப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெண்ணெய்ப் பதார்த்தம் ஒன்றில் அவள் தனது முழங்கையைத் தவறுதலாக விட்டுவிட்டாள். அதிர்ஷ்டவசமாக, இதை ஹாரியைத் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. ஏனெனில் சரியாக அச்சமயத்தில்தான் அவளது மூத்த அண்ணன் பெர்சி உள்ளே புறப்படத் தயாராக நுழைந்தான். அவன் ஏற்கனவே உடையணிந்திருந்தான். மாணவ அணித் தலைவன் பதக்கம் அவனது மேற்சட்டையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

“எல்லோருக்கும் காலை வணக்கம்!” என்று அவன் கூறினான். “இன்றைய நாள் மிக அருமையாக இருக்கிறது.”

அங்கு மீதமிருந்த ஒரே நாற்காலியில் அவன் அமர்ந்தான். ஆனால் அடுத்தக் கணமே துள்ளி எழுந்தான். அவனுக்கு அடியில் சாம்பல் வண்ண இறகுகளால் ஆன துடைப்பான் ஒன்று இருந்தது ஹாரி அப்படித்தான் நினைத்தான் – அது மூச்சுவிடத் துவங்கியவரை!

ரான், “எரோல்!” என்று கத்தினான். பேச்சு மூச்சின்றிக் கிடந்த அந்த ஆந்தையைப் பெர்சியிடம் இருந்து வாங்கி, அதன் சிறகின் அடியிலிருந்து அவன் ஒரு கடிதத்தை எடுத்தான். “ஆஹா! ஒருவழியாக நாங்கள் டர்ஸ்லீ கும்பலிடம் இருந்து உன்னை மீட்டெடுக்க முயலப் இந்த ஆந்தை ஹெர்மயனியிடமிருந்து பதிலை வாங்கி வந்துவிட்டது. போவதாக அவளுக்கு எழுதியிருந்தேன்.”

அவன் எரோலைத் தூக்கிச் சென்று பின்வாசல் கதவுக்கு அருகே இருந்த ஒரு மாடத்தில் நிற்க வைக்க முயன்றான். ஆனால் அது உடனேயே சரிந்து விழுந்தது. அதனால் பாத்திரம் கழுவும் இடத்தருகே அதை மெதுவாக வைத்துவிட்டு, ரான், “ஐயோ பாவம்!” என்று முனகினான். பின் அவன் ஹெர்மயனியின் கடிதத்தைப் பிரித்து, வாய்விட்டுச் சத்தமாகப் படிக்கத் துவங்கினான்.

அன்புள்ள ரானுக்கும் ஹாரிக்கும் (நீ அங்கிருக்கும் பட்சத்தில்),

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்திருக்கும் என்றும், ஹாரியும் நன்றாக இருப்பான் என்றும் நான் நம்புகிறேன். அதோடு, அவனைக் காப்பாற்றும் முயற்சியில் சட்டத்திற்குப் புறம்பாக நீ எதையும் செய்திருக்க மாட்டாய் என்றும் நான் நம்ப விழைகிறேன். ஏனெனில் அது ஹாரியையும் பிரச்சனைக்குள் மாட்டிவிட்டுவிடும். நான் வெகுவாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஹாரி நன்றாக இருக்கிறான் என்றால் உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவாயா? ஆனால் நீ வேறு ஓர் ஆந்தையை அனுப்பினால் நல்லது. ஏனெனில் இன்னும் ஒரு முறை இதே ஆந்தையை நீ பயன்படுத்தினால், அது பரலோகம் சென்றுவிடும்.

நான் பள்ளி வேலைகளில் மூழ்கியிருக்கிறேன் – “எப்படி அவளால் இப்படி இருக்க முடிகிறது? நாம் விடுமுறையில் இருக்கிறோம்!” என்று ரான் கத்தினான் – நாங்கள் அடுத்த புதன்கிழமை என்னுடைய புதுப் புத்தகங்களை வாங்குவதற்காக லண்டனுக்குப் போகப் போகிறோம். நாம் டயகான் சந்தில் சந்திக்கலாமா?

அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எனக்குத் தகவல் அனுப்பு.

அன்புடன்,
ஹெர்மயனி

சாப்பாட்டு மேசையில் இருந்தவற்றை அப்புறப்படுத்திக் கொண்டே, மோலி, “ரொம்பவும் வசதியாகப் போய்விட்டது. நாமும் அதே புதன்கிழமை அங்கு போய் உங்களுக்குத் தேவையானவற்றை வாங்கி வரலாம்,” என்று கூறினார். “ஆமாம், நீங்களெல்லாம் இன்று என்ன செய்யப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?”

ஹாரி, ரான், ஃபிரெட், ஜார்ஜ் ஆகிய நால்வரும் அருகிலிருந்த குன்று ஒன்றில் வீஸ்லீ குடும்பத்தினருக்குச் சொந்தமாக இருந்த, குதிரைகளை மேய்க்கும் தோட்டம் ஒன்றிற்குச் செல்ல முடிவு செய்திருந்தனர். அத்தோட்டத்தைச் சுற்றி இருந்த மரங்கள், கீழே இருந்த கிராமத்தின் பார்வையிலிருந்து அதை மறைத்ததால், அவர்கள் மிக உயரமாகப் பறக்காதவரை, அங்கு அவர்களால் குவிடிச் விளையாட்டுப் பயிற்சியை மேற்கொள் முடியும். ஆனால் அவர்களால் நிஜமான குவிடிச் பந்தை உபயோகிக்க முடியாது. ஏனெனில் அது பறந்து சென்று கிராமத்திற்குப் போய்விட்டால், அதை மூடி மறைப்பது கடினமாகிவிடும். அதனால் அவர்கள் அதற்குப் பதிலாக, ஒருவருக்கு ஒருவர் எறிந்து விளையாடுவதற்கு ஆப்பிள்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இருப்பதிலேயே மிகச் சிறந்த மந்திரத் துடப்பமான ஹாரியின் நிம்பஸ் 2000ஐ அவர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டனர். ரானின் மிகப் பழைய ‘ஷூட்டிங் ஸ்டார்’ மந்திரத் துடப்பம், சமயங்களில் அங்கு திரிந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சிகள்கூட அதை முந்திச் செல்லும் வேகத்தில் பறக்கும் நிலைமையில்தான் இருந்தது.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, தங்கள் தோள்களில் மந்திரத் துடப்பங்களைச் சுமந்தபடி அவர்கள் அக்குன்றை நோக்கி நடையைக் கட்டினர். தங்களுடன் வர விருப்பமா என்று பெர்சியிடம் அவர்கள் கேட்டனர். ஆனால் தான் வேறு வேலையில் மும்முரமாக இருந்ததால் தன்னால் வர இயலாது என்று அவன் கூறிவிட்டான். சாப்பாட்டு நேரங்களில் மட்டும்தான் ஹாரி பெர்சியைப் பார்த்தான். மற்ற நேரங்களில் பெர்சி தனது அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.

ஃபிரெட் தன் முகத்தைச் சுளித்தவாறே, “அவன் என்ன செய்கிறான் என்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்,” என்று கூறினான். “நீ வருவதற்கு முந்தைய தினம்தான் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. ஐந்தாம் வருட இறுதித் தேர்வில் அவன் பன்னிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளான். ஆனால் அது குறித்து அவன் துளிகூடத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.”

ஹாரியின் முகத்தில் தோன்றிய ஆச்சரிய ரேகைகளைக் கண்ட ஜார்ஜ், “அத்தேர்வில் தேறுவதே கடினம். அதிலும் பன்னிரண்டு பாடங்களில்! பில்லும் இதேபோலப் பன்னிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றான். நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், இவனும் ஒரு பள்ளித் தலைவனாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், என்னால் அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினான்.

வீஸ்லீ சகோதரர்களில் பில்தான் மூத்தவன். அவனுக்கு அடுத்தவன் சார்லி. அவர்கள் இருவரும் ஏற்கனவே ஹாக்வார்ட்ஸில் படிப்பை முடித்துவிட்டிருந்தனர். ஹாரி அவர்களை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றாலும், சார்லி ருமேனியாவில் டிராகன்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தான் என்பதையும், பில் எகிப்தில் மந்திரவாதிகளின் வங்கியான கிரிங்காட்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் என்பதையும் அறிந்திருந்தான்.

ஜார்ஜ் சிறிது நேரம் கழித்து, “அம்மாவும் அப்பாவும் எங்கள் எல்லாருடைய பள்ளிக் கட்டணத்தையும் எவ்வாறு கட்டப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று கூறினான். “லாக்ஹார்ட் புத்தகங்கள் மட்டுமே ஐந்து பிரதிகள் வாங்க வேண்டியுள்ளது. அதோடு, ஜின்னிக்கு அங்கிகள், மந்திரக்கோல் போன்றவற்றையும் வாங்க வேண்டும் . . .”

ஹாரி ஒன்றுமே கூறவில்லை. அவன் கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தான். அவனது பெற்றோர்கள் அவனுக்கு விட்டுச் சென்ற ஒரு பெரிய புதையல் லண்டனில் பூமிக்குக் கீழே இருந்த கிரிங்காட்ஸ் வங்கியின் பாதாளப் பெட்டகத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. அங்கு இருந்த பணம் மந்திரவாதிகளின் உலகில் மட்டுமே செல்லுபடியாகும் என்பது உண்மைதான். கேல்லியன்கள், சிக்கிள்கள், மற்றும் நுட்டுகளை மகுள்களின் கடைகளில் உபயோகிக்க முடியாது. அவன் தன்னுடைய கிரிங்காட்ஸ் வங்கிக் கணக்கைப் பற்றி டர்ஸ்லீ குடும்பத்தினரிடம் வாயைத் திறந்ததே கிடையாது. ஏனெனில், மாயாஜால உலகின் மந்திர தந்திரங்கள் குறித்து அவர்கள் பெரும் கிலி கொண்டிருந்தபோதிலும், தனது பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக இருந்த தங்க நாணயங்கள்மீது அவர்களுக்கு எந்த பயமும் இருக்காது என்று ஹாரி நினைத்தான்.


அடுத்து வந்த புதன்கிழமையன்று மோலி அவர்கள் அனைவரையும் அதிகாலையிலேயே எழுப்பிவிட்டார். அவர்கள் ஆளுக்கு அரை டஜன் இறைச்சி சான்ட்விச்சுகளை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, தங்கள் மேலங்கிகளைப் போட்டுக் கொண்டிருந்தபோது, மோலி சமையலறை மாடத்தில் இருந்த ஒரு பூந்தொட்டியை எடுத்து அதனுள்ளே உற்றுப் பார்த்தார்.

“ஆர்தர், நம்மிடம் மிகக் குறைவாகவே உள்ளது,” என்று கூறி மோலி பெருமூச்செறிந்தார். “நாம் இன்று இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டும்… சரி, முதலிடம் விருந்தாளிக்குத்தான்! ஹாரி, முதலில் நீதான்!”

மோலி ஹாரியிடம் அந்தப் பூந்தொட்டியை நீட்டினார். அவர்கள் அனைவரும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை ஹாரி கண்டான்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ஹாரி தட்டுத்தடுமாறிக் கேட்டான்.

“அவன் இதற்கு முன்பு ஒருபோதும் ஃபுளூ பொடியை உபயோகித்துப் பயணம் செய்ததில்லை,” என்று ரான் திடீரென்று கூறினான். “மன்னித்துக் கொள், ஹாரி. எனக்கு மறந்துவிட்டது.”

“என்ன, நீ ஒருபோதும் இப்படிப் பயணித்ததில்லையா?” என்று மோலி கேட்டார். “அப்படியானால், கடந்த வருடம் உன் பள்ளிக்கு வேண்டிய பொருட்களை வாங்க நீ எப்படி டயகான் சந்திற்குச் சென்றாய்?”

“நான் பாதாள ரயில் பாதை வழியாகச் சென்றேன்”

“உண்மையாகவா?” என்று ஆர்தர் ஆர்வமாகக் கேட்டார். “அங்கு தானியங்கிப் படிக்கட்டுகள் இருந்தனவா? எப்படி நீ-”

“ஆர்தர், இப்போது ஆரம்பிக்காதீர்கள்,” என்று மோலி தன் கணவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார். “ஹாரி, படுவேகமாகச் செல்வதற்கு ஃபுளூ பொடி உதவும். ஆனால், நீ இதை இதற்கு முன்பு ஒருபோதும் உபயோகித்து இருக்கவில்லை என்றால் –”

“அவன் சமாளித்துக் கொள்வான்,” என்று ஃபிரெட் கூறினான். “ஹாரி, முதலில் நாங்கள் என்ன செய்கிறோம் என்று கவனி.”

அவன் அந்தப் பூந்தொட்டியில் இருந்த பளபளப்பான பொடியிலிருந்து ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து, குளிர்காய உபயோகிக்கும் கணப்படுப்பை நோக்கி நடந்து சென்று, அப்பொடியை அந்த அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பினுள் வீசினான்.

கர்ஜனையுடன் அந்தத் தீநாக்கு ஒரு மரகதப் பச்சை நிறத்திற்கு மாறி, ஃபிரெட்டைவிட உயரமாக உயர்ந்தது. ஃபிரெட் நேராக அந்த நெருப்பினுள் நுழைந்து, “டயகான் சந்து!” என்று கத்தினான். உடனே அவன் மாயமாக மறைந்து போனான்.

ஜார்ஜ் அந்தப் பூந்தொட்டியினுள் தன் கையை விட்டுக் கொண்டிருந்தபோது, மோலி ஹாரியைப் பார்த்து, “நீ தெளிவாகப் பேச வேண்டும்,” என்று கூறினார். “நீ சரியான கணப்படுப்பிலிருந்து வெளியே வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் . . .”

“என்ன கூறினீர்கள், சரியான கணப்படுப்பா?” என்று ஹாரி படபடப்புடன் கேட்டான். அப்போது தீநாக்கு ஓர் உறுமலுடன் மேலுயர்ந்து ஜார்ஜைக் கபளீகரம் செய்தது.

“வெளியே வருவதற்கு நீ தேர்ந்தெடுப்பதற்கு ஏகபட்டக் கணப்படுப்புகள் இருக்கின்றன. நீ தெளிவாக உச்சரித்தால் ஒன்றும் பிரச்சனையில்லை -”

தானும் ஒரு சிட்டிகை ஃபுளூ பொடியை எடுத்துக் கொண்ட ஆர்தர், “மோலி, அவனுக்கு ஒன்றும் ஆகாது! நீ அதிகமாக அலட்டிக் கொள்ளாதே,” என்று கூறினார்.

“அவன் ஒருவேளை வழி தவறிவிட்டான் என்றால், அவனுடைய பெரியம்மாவிற்கும் பெரியப்பாவிற்கும் யார் பதில் சொல்வது ?”

“அவர்கள் துளிகூடக் கவலைப்பட மாட்டார்கள்,” என்று ஹாரி அவருக்கு உறுதியளித்தான். “நான் ஒரு கணப்படுப்பில் காணாமல் போய்விட்டேன் என்று அறிந்தால், அது என்னவோர் அபாரமான பொய் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.”

“அப்படியானால் சரி! ஆர்தருக்கு அடுத்து நீ போ,” என்று மோலி கூறினார். “நெருப்பிற்குள் நுழைந்ததும், நீ எங்கே போக வேண்டும் என்று கூறு-“

“உன் முழங்கைகளை ஒடுக்கி வைத்துக் கொள்,” என்று ரான் அறிவுரை கூறினான்.

“நீ உன் கண்களை மூடிக் கொள்ள வேண்டும்,” என்று மோலி தெரிவித்தார். “அந்தக் கரி -”

“பதற்றப்பட்டுவிடாதே,” என்று ரான் கூறினான். “இல்லையென்றால் நீ தவறான கணப்பில் போய் விழுந்து விடுவாய் -”

“அதே சமயம், பதறிப் போய் அவசரமாகவும் வெளியே வந்துவிடாதே. ஃபிரெட்டும் ஜார்ஜும் உன் பார்வையில் படும்வரை காத்திரு.”

ஹாரி இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கக் கடுமையாக முயன்று கொண்டே, ஒரு சிட்டிகை ஃபுளூ பொடியைக் கையில் எடுத்துக் கொண்டு கணப்படுப்பை நோக்கி நடந்தான். ஒரு முறை ஆழமாக மூச்சிழுத்துவிட்டு, தன் கையில் இருந்த பொடியை, எரிந்து கொண்டிருந்த நெருப்பின்மீது தூவினான். பின் அதனுள் நுழைந்தான். இளஞ்சூடான காற்று தன்மீது அடித்ததுபோல அவன் உணர்ந்தான். அவன் தனது வாயைத் திறந்தவுடன் சூடான சாம்பல் எக்கச்சக்கமாக அவனது வாய்க்குள் போனது.

“ட-ய-கான் சந்து,” என்று அவன் இருமிக் கொண்டே கூறினான்.

ஒரு மாபெரும் குழிக்குள் உறிஞ்சப்பட்டதுபோல அவன் உணர்ந்தான். அவன் வேகவேகமாகச் சுழன்று கொண்டிருந்ததுபோலவும் தோன்றியது . . அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த பேரிரைச்சல் அவனது காதுகளைச் செவிடாக்கிவிடும்போல இருந்தது . . . அவன் தன் கண்களைத் திறந்து வைத்துக் கொள்ள முயன்றான். ஆனால் சுழன்றடித்துக் கொண்டிருந்த பச்சை நிற ஜுவாலைகள் அவனுக்குக் குமட்டலை ஏற்படுத்தின . அவனது முழங்கையை எதுவோ இடித்தது. அவன் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். ஆனாலும் சுழற்சி நிற்கவேயில்லை . . ஆனால் இப்போது குளிரான கரங்கள் அவனது முகத்தில் அறைந்து கொண்டிருந்ததுபோல இருந்தது. அவன் தன் மூக்குக்கண்ணாடி வழியாகக் கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தான் . . . ஏகப்பட்டக் கணப்படுப்புகள் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது அவனுக்கு மங்கலாகத் தெரிந்தது. அவற்றுக்கு அப்பால் பல அறைகளும் தெரிந்தன… காலையில் அவன் சாப்பிட்டிருந்த இறைச்சி சான்ட்விச்சுகள் வயிற்றுக்குள் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன… அவன் தன் கண்களை மூடிக் கொண்டு, இது முடிந்து போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். உடனடியாக அவன் ஒரு குளிரான கல்லின்மீது முகம் குப்புறக் கீழே விழுந்தான். தனது மூக்குக்கண்ணாடி உடைந்து நொறுங்கியதை அவன் உணர்ந்தான்.

ஏகப்பட்டச் சிராய்ப்புகளுடனும் உடல் முழுக்கக் கரியுடனும் உடைந்து போயிருந்த தன் தலைச்சுற்றலுடனும், மூக்குக்கண்ணாடியைத் தன் கண்களுக்கு நேராகப் பிடித்தபடி, ஹாரி தட்டுத் தடுமாறி எழுந்து நின்றான். அவன் தன்னந்தனியாக இருந்தான். தான் எங்கிருந்தோம் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. தான் ஒரு குளிரான கணப்படுப்பினுள் நின்று கொண்டிருந்தது மட்டும்தான் அவனுக்குத் தெரிந்தது. அது மங்கலான ஒளியுடன் இருந்த ஒரு மந்திரஜாலக் கடைபோல அவனுக்குத் தோன்றியது – ஆனால் அங்கிருந்த எதுவும் ஹாக்வார்ட்ஸ் பள்ளிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்பே இருக்கவில்லை.

அவனுக்கு அருகில் இருந்த ஒரு கண்ணாடிப் பெட்டியில், வாடி வதங்கிப் போயிருந்த ஒரு கை, ஒரு சிறு மெத்தையில் வைக்கப்பட்டிருந்தது. ரத்தம் தோய்ந்திருந்த ஒரு சீட்டுக் கட்டும், முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கண்ணாடிக் கண்ணும் அதனருகே இருந்தன. கொடூரமாகக் காட்சியளித்த முகமூடிகள் சுவர்களிலிருந்து வெறித்துக் கொண்டிருந்தன; ஒரு மேடைமீது பலதரப்பட்ட மனித எலும்புகள் கிடந்தன; துருப்பிடித்தக் கூரான உபகரணங்கள் உத்தரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தன. அதைவிட மோசமான விஷயம், தூசு படிந்திருந்த அக்கடையின் கண்ணாடி சன்னல் வழியாக அவன் பார்த்தபோது வெளியே தெரிந்த சந்து கண்டிப்பாக டயகான் சந்து அல்ல.

அவன் அங்கிருந்து எவ்வளவு விரைவாக வெளியேறினானோ, அவனுக்கு அவ்வளவு நல்லது. தான் அந்தக் கணப்படுப்பின் தரையில் வந்து விழுந்தபோது அடிபட்டத் தனது மூக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்த எரிச்சலைப் பொறுத்துக் கொண்டு, ஹாரி வேகமாகவும் சத்தமில்லாமலும் வாசற்கதவை நோக்கி விரைந்தான். ஆனால் அவன் பாதி தூரம் சென்றடைவதற்குள் அந்தக் கண்ணாடியின் மறுபுறம் இரண்டு பேர் தோன்றினர். உடைந்த மூக்குக்கண்ணாடியுடனும், தலைமுதல் பாதம் வரை கரியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்த கோலத்துடனும், வழி தெரியாமல் ஹாரி தவித்துக் கொண்டிருந்தபோது, அவன் கண்டிப்பாகச் சந்திக்க விரும்பாத ஒருவன் அவர்களில் இருந்தான். டிராகோ மால்ஃபாய்தான் அவன்.

ஹாரி வேகமாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். தனது இடதுபுறத்தில் கருப்பு நிறத்தில் ஒரு பெரிய அலமாரி இருந்ததை அவன் கவனித்தான் அவன் படுவேகமாக அதற்குள் பாய்ந்து, வெளியே என்ன நடந்தது என்பதைப் பார்ப்பதற்கு வசதியாக ஒரு சிறு இடைவெளியை மட்டும் விட்டுவிட்டு, அதன் கதவைச் சாத்திக் கொண்டான். ஒருசில கணங்களுக்குப் பிறகு, வாசற்கதவில் தொங்கவிடப்பட்டு இருந்த மணி ஒலித்தது; மால்ஃபாய் உள்ளே நுழைந்தான்,

அவனுடன் வந்தது அவனது அப்பாவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அவரது முகம் நீண்டு வெளுத்துப் போயிருந்தது; அவரது கண்கள் மால்ஃபாயின் உயிரற்ற, சாம்பல் நிறக் கண்களை அப்படியே ஒத்திருந்தன.

மால்ஃபாயின் அப்பா அந்தக் கடையின் குறுக்காக நடந்து சென்று, அங்கு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஈடுபாடின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு அங்கிருந்த கல்லாவின்மீதிருந்த மணியை அழுத்தினார். பின் தன் மகனிடம் திரும்பி, “டிராகோ, இங்கிருக்கும் எந்தப் பொருளையும் தொடாதே!” என்று எச்சரித்தார்.

அங்கிருந்த கண்ணாடிக் கண்ணை அணுகிய மால்ஃபாய், “நீங்கள் இங்கு எனக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் என்று நான் நினைத்தேன்,” என்று கூறினான்.

அந்தக் கல்லாவில் தன் விரல்களால் தாளமிட்டபடியே, “நான் உனக்கு ஒரு பந்தயத் துடப்பம் வாங்கிக் கொடுக்கிறேன் என்றுதான் கூறியிருந்தேன்,” என்று மால்ஃபாயின் அப்பா கூறினார்.

“நான் குவிடிச் விளையாட்டு அணியில் இடம்பெறாமல் இருக்கும்போது அதனால் என்ன பிரயோஜனம்?” என்று மால்ஃபாய் கேட்டான். அவன் பொருமிக் கொண்டும் மோசமான மனநிலையிலும் இருந்தான். “கடந்த வருடம் ஹாரி பாட்டருக்கு நிம்பஸ் 2000 மந்திரத் துடப்பம் கிடைத்தது. அவன் கிரிஃபின்டார் அணியில் விளையாடுவதற்கு ஏதுவாக டம்பிள்டோர் அவனுக்குச் சிறப்பு அனுமதி கொடுத்திருந்தார். அவன் அந்த அளவுக்குச் சிறப்பாக விளையாடுகிறவனும் அல்ல. அவன் பிரபலமாக இருந்ததுதான் அவனுக்கு அந்த அனுமதி கிடைத்ததற்குக் காரணம் . . அவனும் அவனது நெற்றியில் இருந்த ஓர் உருப்படாத தழும்பும்

மண்டையோடுகளால் நிறைந்திருந்த ஓர் அலமாரியை ஆராய்வதற்காக மால்ஃபாய் குனிந்தான்.

“அவன் புத்திசாலி, அற்புதமானவன் என்று எல்லோரும் நினைக்கின்றனர் … விசித்திரமான நெற்றித் தழும்புடனும் அவனது மந்திரத் துடப்பத்துடனும் ஹாரி . . “

மால்ஃபாயின் அப்பா மால்ஃபாய்மீது ஒரு சுட்டெரிக்கும் பார்வையை வீசியவாறே, “இதை நீ ஏற்கனவே ஓராயிரம் தடவை என்னிடம் புலம்பிவிட்டாய்,” என்று கூறினார். “நான் உனக்கு இதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் – குறிப்பாக, வோல்டமார்ட்டை மறையச் செய்துவிட்ட ஒரு கதாநாயகனாக நமது மக்கள் ஹாரி பாட்டரைப் பார்க்கும்போது, நீ அவனிடம் முறைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு புத்திசாலித்தனமான காரியமாக எனக்குப் படவில்லை – ஓ, போர்ஜின் !”

எண்ணெய் வடிந்து கொண்டிருந்த தலைமுடியைத் தன் முகத்தின் மீதிருந்து விலக்கியவாறே, கூன் விழுந்த முதுகுடன் காணப்பட்ட ஒரு நபர் அந்தக் கல்லாப்பெட்டியின் பின்புறம் தோன்றினார்.

“லூசியஸ் மால்ஃபாய் அவர்களே, உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்,” என்று போர்ஜின் கூறினார். அவரது குரலும் அவரது தலைமுடியைப்போலவே வழுவழுப்பாக இருந்தது. “கூடவே மகனையும் கூட்டி வந்திருக்கிறீர்களா? பிரமாதம்! உங்களுக்கு என்னால் எவ்வாறு உதவ முடியும்? மிகவும் மலிவான விலையில் இன்றுதான் நம் கடையில் வந்து இறங்கியுள்ள ஒன்றை நான் உங்களுக்குக் காட்டியாக வேண்டும்”

“இன்று நான் வாங்குவதற்காக வரவில்லை,” என்று மால்ஃபாயின் அப்பா கூறினார். “விற்பதற்காக வந்திருக்கிறேன்.”

“விற்பதற்காகவா?” என்று கேட்ட போர்ஜினின் புன்னகை கொஞ்சம் மங்கியது.

“மந்திரஜால அமைச்சகம் தடாலடிச் சோதனைகள் நடத்தி வருகின்றது என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல,” என்று மால்ஃபாயின் அப்பா கூறினார். தனது உட்சட்டைப் பாக்கெட்டிலிருந்து தோல் காகிதம் ஒன்றை எடுத்து, அதை போர்ஜின் படிப்பதற்கு வசதியாக விரித்தவாறே, “ஒருவேளை மந்திரஜால அமைச்சகம் என் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்த வந்தால், என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒருசில பொருட்களை அவர்கள் கண்டுபிடிக்கக்கூடும்” என்று கூறினார்.

போர்ஜின் தன் மூக்குக்கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு அதில் இடம்பெற்றிருந்த பட்டியலைப் படித்தார்.

“சார், மந்திரஜால அமைச்சகம் கண்டிப்பாக உங்கள்மீது கை வைக்கத் துணியும் என்று நான் நினைக்கவில்லை.”

“அவர்கள் இன்னும் என் வீட்டிற்கு வரவில்லை. மால்ஃபாய் என்ற என் குடும்பப் பெயர் இன்றும் மதிக்கப்படுகிறது என்பது உண்மைதான் என்றாலும், மந்திரஜால அமைச்சகத்தின் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு புதிய மகுள்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று பலமாக ஒரு வதந்தி நிலவுகிறது – சந்தேகத்திற்கு இடமில்லாமல் மகுள்களை நேசிக்கின்ற, சொறி முகத்திற்குச் சொந்தக்காரரான அந்த ஆர்தர் iஸ்லீ என்ற முட்டாள்தான் இதன் பின்னணியில் இருக்க வேண்டும்”

ஹாரிக்குக் கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது.

“இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் நஞ்சுகளில் சில, சோதனை நடத்தப்பட்டால் எனக்குச் சிக்கல் ஏற்படுத்தக்கூடும்”

“சார், எனக்குப் புரிகிறது,” என்று போர்ஜின் கூறினார். “நான் இதைப் பார்க்கலாமா?”

அவர்களது உரையாடலை இடைமறித்து, அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த வாடி வதங்கிப் போயிருந்த கையைக் சுட்டிக்காட்டியவாறே, மால்ஃபாய், “நான் அதை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டான்.

“ஓ, அதுவா? அதற்குப் ‘புகழின் கை’ என்று பெயர்,” என்று தெரிவித்த போர்ஜின், மால்ஃபாயின் அப்பா காட்டிக் கொண்டிருந்த பட்டியலை அப்படியே போட்டுவிட்டு, மால்ஃபாயை நோக்கி விரைந்தார். “அதனுள் ஒரு மெழுகுவர்த்தியைச் செருகினால், அது அதைப் பிடித்திருப்பவருக்கு மட்டும் வெளிச்சம் தரும்! திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் சிறந்த நண்பன் இது சார், உங்கள் பையனுக்கு நல்ல ரசனை இருக்கிறது.”

“என் பையன் திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும்விட மேலானவனாக வருவான் என்று நான் நம்புகிறேன்,” என்று மால்ஃபாயின் அப்பா கடுமையாகக் கூறினார். போர்ஜின் அவசர அவசரமாக, “மன்னித்துக் கொள்ளுங்கள்! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை -” என்றார்.

“அவனது பள்ளி மதிப்பெண்கள் அதிகரிக்காவிட்டால், அவன் இதற்குத்தான் சரிப்பட்டு வருவான் என்று நான் நினைக்கிறேன்,” என்று இன்னும் தனது கடுமை மாறாத குரலில் அவர் கூறினார்.

அது என் தவறல்ல,” என்று மால்ஃபாய் பதிலுக்குச் சீறினான். “ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுகின்றனர். அந்த ஹெர்மயனி கிரேஞ்சர் -”

“மந்திரவாதிக் குடும்பத்தைச் சேராத ஒரு பெண்பிள்ளை ஒவ்வொரு தேர்விலும் உன்னை முந்தியிருப்பது உனக்கு அவமானமாக இல்லையா?” என்று மால்ஃபாயின் அப்பா வெடித்தார்.

மால்ஃபாய் கோபத்தாலும் அவமானத்தாலும் கூசிக்குறுகி நின்றதைப் பார்த்து மகிழ்ந்த ஹாரி, “அப்படிப் போடு!” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

“எல்லா இடங்களிலும் இப்போது இப்படித்தான் நடக்கிறது” என்று போர்ஜின் தன் குழைச்சலான குரலில் கூறினார். “மந்திரவாதிகளின் பரம்பரைக்கு மதிப்புக் குறைந்து கொண்டே வருகிறது

மால்ஃபாயின் அப்பா தன் நீண்ட மூக்குச் சிவக்க, “நான் அதைப் பொறுத்துக் கொள்வதில்லை,” என்று கூறினார்.

போர்ஜின் ஒரு பெரிய சலாம் போட்டுக் கொண்டே, “சார், நானும் அப்படித்தான்,” என்று கூறினார்.

“அப்படியானால் நாம் இப்போது என்னுடைய பட்டியலுக்கு வரலாமா?” என்று மால்ஃபாயின் அப்பா கேட்டார். “நான் கொஞ்சம் அவசரத்தில் இருக்கிறேன். போர்ஜின், எனக்கு வேறு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது.”

அவர்கள் பேரம் பேசுவதில் ஈடுபட்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்வையிட்டுக் கொண்டே வந்த மால்ஃபாய், தன் மறைவிடத்தை நெருங்கிக் கொண்டிருந்ததை ஹாரி படபடப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட தூக்குக்கயிறு ஒன்றை மால்ஃபாய் ஆய்வு செய்து கொண்டிருந்தான். பின்னர் வைடூரியக் கற்களால் செய்யப்பட்டிருந்த நெக்லஸ் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பு அட்டையில், ‘எச்சரிக்கை: தொடாதீர்கள். சபிக்கப்பட்டது – இது இதுவரை பத்தொன்பது மகுள்களின் உயிரைப் பலி வாங்கியுள்ளது’ என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து ஏளனப் புன்னகை ஒன்றை அவன் தன் உதடுகளில் படரவிட்டான்.

பின்னர் மால்ஃபாய் அங்கிருந்து திரும்பி, தனக்கு எதிரே இருந்த அலமாரியைப் பார்த்தான். நேராக அதை நோக்கி நடந்து வந்து அதன் கைப்பிடியை நோக்கி அவன் தன் கையை நீட்டினான் . . .

அப்போது கல்லாவின் அருகே நின்று கொண்டிருந்த மால்ஃபாயின் அப்பா, “டிராகோ, வேலை முடிந்துவிட்டது. வா, கிளம்பலாம்,” என்று கூறினார்.

மால்ஃபாய் அங்கிருந்து விலகியதும், ஹாரி தன் நெற்றி வியர்வையைத் தன் சட்டைக் கையில் துடைத்துக் கொண்டான்.

“போர்ஜின், இன்றைய தினம் உங்களுக்கு ஒரு சிறப்பான நாளாக அமைய வாழ்த்துக்கள்! பொருட்களை வந்து பெற்றுக் கொள்ள நான் நாளை உங்களை என்னுடைய மாளிகையில் எதிர்பார்க்கிறேன்.”

வாயிற்கதவு மூடிய அக்கணத்திலேயே, போர்ஜின் தனது குழைச்சலான பேச்சைக் கைவிட்டார்.

“லூசியஸ் மால்ஃபாய் அவர்களே, உங்களுக்கும் இன்றைய தினம் மிகச் சிறப்பாக இருக்க என் வாழ்த்துக்கள்! நாட்டில் உலவும் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் உங்கள் மாளிகையில் பாதியளவுகூட என்னிடம் இருக்கும் பொருட்களில் விற்றிருக்கவில்லை

பிறகு, போர்ஜின் தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு பின்வாசற்கதவு வழியாக வெளியேறினார். அவர் ஒருவேளை மறுபடியும் திரும்பி வந்துவிடக்கூடும் என்று பயந்த ஹாரி, மேலும் ஒரு நிமிடம் காத்திருந்துவிட்டு, பின்னர் தன்னால் முடிந்த மட்டும் சத்தமில்லாமல் அந்த அலமாரியைவிட்டு வெளியே வந்து, அங்கிருந்த கண்ணாடிப் பெட்டியைக் கடந்து அந்தக் கடையைவிட்டு வெளியேறினான்.

உடைந்து போயிருந்த தனது மூக்குக்கண்ணாடியைத் தன் முகத்திற்கு நேராகப் பிடித்தபடி அவன் சுற்றுமுற்றும் பார்த்தான்.

அவன் வெளியே வந்திருந்த அச்சந்து தீய மந்திரசக்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த கடைகளை மட்டுமே உள்ளடக்கி இருந்ததைப்போலத் தோன்றியது. அவன் தற்போது வெளியே வந்திருந்த போர்ஜின் & பர்க்ஸ்’ கடைதான் அங்கு இருந்ததிலேயே பெரிய கடைபோலத் தோன்றியது. அதற்கு எதிரே இருந்த கடையின் சன்னலில், சுருங்க வைக்கப்பட்டிருந்த தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதற்கு இரண்டு கடைகள் தள்ளி இருந்த ஒரு கடையில், ஒரு பெரிய கூண்டில், உயிரோடு இருந்த பிரம்மாண்டமான கருப்புச் சிலந்திகள் வைக்கப்பட்டிருந்தன. அலங்கோலமாகத் தோற்றமளித்த இரண்டு மந்திரவாதிகள் ஒரு வாயிற்கதவின் நிழலில் நின்று கொண்டு ஹாரியைச் சுட்டிக்காட்டித் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். வெலவெலத்துப் போன ஹாரி தன் மூக்குக்கண்ணாடியை முடிந்த மட்டும் நேராக வைத்துக் கொண்டு, அங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று தன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.

நச்சு மெழுகுவர்த்திகளை விற்றுக் கொண்டிருந்த ஒரு கடைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழைய மர அறிவிப்புப் பலகை, அவன் ‘நாக்டர்ன்’ சந்தில் இருந்ததை அறிவித்தது. ஆனால் அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. எனெனில் அவன் அந்த இடத்தைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. வீஸ்லீ குடும்பத்தினரின் கணப்படுப்பு நெருப்பில் தான் நுழைந்தபோது, தன் வாயில் ஏராளமாகச் சாம்பல் புகுந்துவிட்டிருந்ததால், டயகான் சந்தின் பெயரைத் தான் சரியாக உச்சரித்திருக்காமல் போயிருக்கக்கூடும் என்று அவன் சந்தேகித்தான். அமைதியாக இருக்க முயற்சித்துக் கொண்டே, அடுத்து என்ன செய்யலாம் என்று அவன் யோசித்தான்.

“என்ன தம்பி, வழி தவறிவிட்டாயா?” என்று ஒரு குரல் அவனது காதுகளுக்கு அருகே கேட்டதும் அவன் துள்ளிக் குதித்தான்.

அவன் முன்னால் மிக வயதான ஒரு மந்திரவாதினி நின்று கொண்டிருந்தாள். அவள் வைத்திருந்த ஒரு தாம்பாளத்தில் இருந்தவை முழுமையான மனிதக் கை நகங்கள்போலத் தோன்றின. அவள் ஹாரியை வஞ்ச நோக்குடன் பார்த்தாள். பாசி படிந்திருந்த அவளது பற்கள் இளித்தன. ஹாரி பயந்து பின்வாங்கினான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. கேட்டதற்கு நன்றி,” என்று அவன் கூறினான். “நான் வந்து -“

“ஹாரி! நீ இங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?” ஹாரியின் இதயம் துள்ளிக் குதித்தது. அது அந்த மந்திரவாதினியையும் திடுக்கிடச் செய்தது. ஒரு குத்துக் கை நகங்கள் அவளது காலடியில் விழுந்து சிதறின. அப்போது, மிகப் பெரிய உருவத்தைக் கொண்டிருந்த, ஹாக்வார்ட்ஸ் கோட்டைப் பாதுகாவலரான ஹாக்ரிட், தனது கரடுமுரடான முகத்தின் முக்கால் பகுதியை மறைக்கும் விதத்தில் வளர்ந்திருந்த தன் தாடிக்குள் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தன் கருவண்டுக் கண்கள் பிரகாசமாக மினுமினுக்கத் தங்களை நோக்கி அசைந்து வந்ததைப் பார்த்த அந்த மந்திரவாதினி தனக்குத் தானே முனகிக் கொண்டாள்.

“ஹாக்ரிட்,” என்று ஹாரி நிம்மதியுடன் கூக்குரலிட்டான். “நான் வழி தவறிவிட்டேன் … ஃபுளூ பொடி.”

ஹாக்ரிட் ஹாரியின் பின்கழுத்தைத் தன் கையால் பிடித்துத் தூக்கித் தன்னை நோக்கி இழுத்தார். இந்தக் களேபரேத்தில் அந்த மந்திரவாதினியின் கையில் இருந்த தாம்பாளம் எகிறியது. அவளது கிறீச்சென்ற கத்தல், வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்த அந்தச் சந்து நெடுகிலும் அவர்களைத் தொடர்ந்து வந்தது. அவர்கள் பிரகாசமான சூரிய வெளிச்சத்திற்குள் வந்ததும் தூரத்தில் பளிங்கு வெள்ளை நிறத்தில் இருந்த, அவனுக்குப் பரிச்சயமான ஒரு கட்டிடம் ஹாரியின் கண்முன் தோன்றியது. அது கிரிங்காட்ஸ் வங்கி, ஹாக்ரிட் அவனை நேராக டயகான் சந்திற்குள் அழைத்து வந்துவிட்டிருந்தார்.

“நீ என்ன இப்படி அலங்கோலமாக இருக்கிறாய்?” என்று கரகரத்தக் குரலில் கூறிய ஹாக்ரிட், அவன்மீது படிந்திருந்த சாம்பலைத் தட்டினார். அவர் தட்டிய வேகத்தில் ‘அப்போத்தக்கரி’ கடைக்கு வெளியே இருந்த, துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்த டிராகன் எரு இருந்த பீப்பாய்களின் மேல் போய் ஹாரி விழவிருந்தான். “ஹாரி, போயும் போயும் நாக்டர்ன் சந்தில் போய் அலைந்து கொண்டிருந்தாயே! எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அது ஒரு பயங்கரமான இடம் – அந்த இடத்தில் வைத்து உன்னை யாரும் பார்க்காமல் இருப்பது உனக்கு நல்லது -”

மீண்டும் அவன்மீது படிந்திருந்த சாம்பலைத் தட்ட எத்தனித்த ஹாக்ரிட்டின் கையில் சிக்காமல் குனிந்து கொண்ட ஹாரி, “எனக்கும் அது புரிந்துவிட்டது,” என்று கூறினான். “நான் வழி தவறிவிட்டேன் என்று ஏற்கனவே கூறினேன் இல்லையா? அது போகட்டும், நீங்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

“நான் ‘மாமிசம் தின்னும் நத்தை விரட்டி’யை வாங்குவதற்காக வந்தேன்,” என்று ஹாக்ரிட் முனகினார். “அவை நம் பள்ளிக்கூடத்தின் முட்டைக்கோஸ் தோட்டங்களை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. ஆமாம், நீ தனியாகவா வந்தாய்?”

“நான் வீஸ்லீ குடும்பத்தினருடன் தங்கியிருக்கிறேன். ஆனால் நாங்கள் எப்படியோ பிரிந்துவிட்டோம்,” என்று ஹாரி விவரித்தான். “நான் போய் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

அவர்கள் இருவரும் சேர்ந்து அந்தத் தெருவில் நடந்தனர்.

“நீ ஏன் என் கடிதங்களுக்கு ஒருபோதும் பதிலே போடவில்லை?” என்று ஹாக்ரிட் கேட்டார். ஹாரி அவருடன் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான் (ஹாக்ரிட் தன் பெரிய கால்களால் ஓர் எட்டு வைத்தால், ஹாரி அதற்கு ஈடு கொடுத்து நடக்க மூன்று எட்டுகள் எடுத்து வைக்க வேண்டி இருந்தது). டாபி மற்றும் டர்ஸ்லி குடும்பத்தைப் பற்றிய எல்லாவற்றையும் ஹாரி ஹாக்ரிட்டிடம் எடுத்துரைத்தான்.

“மடத்தனமான மகுள்கள்!” என்று ஹாக்ரிட் உறுமினார். “எனக்கு மட்டும் இது தெரிந்திருந்தால்…”

“ஹாரி, ஹாரி, இங்கே பார்!”

ஹாரி அண்ணாந்து பார்த்தான். கிரிங்காட்ஸ் வங்கிக்கு இட்டுச் சென்ற படிக்கட்டுகளின் உச்சியில் ஹெர்மயனி நின்று கொண்டிருந்தாள். புதர்போல வளர்ந்திருந்த தனது கூந்தல் காற்றில் பறக்க, அவள் அவர்களை நோக்கிப் படிகளில் வேகமாக இறங்கி ஓடி வந்தாள்.

“ஆமாம், உன் கண்ணாடிக்கு என்ன ஆயிற்று? ஹலோ ஹாக்ரிட்… உங்கள் இரண்டு பேரையும் மீண்டும் ஒருசேரப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது . . . ஹாரி, நீ கிரிங்காட்ஸ் வங்கிக்குள் வரப் போகிறாயா?”

“முதலில் நான் வீஸ்லீ குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று ஹாரி கூறினான்.

“அதற்கு நீ அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்காது,” என்று கூறிய ஹாக்ரிட், வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார்.

ஹாரியும் ஹெர்மயனியும் தங்களைச் சுற்றிப் பார்த்தனர். கூட்டமாக இருந்த அத்தெருவிலிருந்து ரான், ஃபிரெட், ஜார்ஜ், பெர்சி, ஆர்தர் ஆகியோர் அவர்களை நோக்கி அம்பெனப் பாய்ந்து ஓடி வந்து கொண்டிருந்தனர்.

“ஹாரி,” என்றழைத்த ஆர்தருக்கு மூச்சு வாங்கியது. “நீ ஒரே ஒரு கணப்படுப்பு மட்டுமே தள்ளிச் சென்றிருப்பாய் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம் . . .” வியர்வையில் பளபளத்துக் கொண்டிருந்த தன் வழுக்கைத் தலையைத் துடைத்தவாறே, அவர், “மோலிதான் கவலையில் கலங்கிப் போயிருக்கிறாள் அவள் இப்போது வந்துவிடுவாள்,” என்று கூறினார்.

“நீ எங்கே வெளியே வந்தாய்?” என்று ரான் கேட்டான். “நாக்டர்ன் சந்து,” என்று ஹாக்ரிட் கவலையுடன் கூறினார். ஃபிரெட்டும் ஜார்ஜும் “அபாரம்!” என்று ஒருசேரக் கத்தினர். “நாங்கள் ஒருபோதும் அங்கு அனுமதிக்கப்பட்டது இல்லை,” என்று ரான் பொறாமையுடன் கூறினான்.

மோலி பாய்ந்து ஓடி வந்து கொண்டிருந்தார். அவரது ஒரு கையில் அவரது கைப்பை வேகமாக ஆடிக் கொண்டிருந்தது. மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டு ஜின்னி தொங்கிக் கொண்டிருந்தாள்.

“ஓ, ஹாரி – நீ எங்காவது தொலைந்து போயிருக்கக்கூடும்”

மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கியபடியே அவர் தன் பைக்குள்ளிருந்து ஒரு துணியை வெளியே எடுத்து, ஹாக்ரிட்டின் துடைத்தலுக்குத் தப்பியிருந்த அவனது சாம்பலைத் துடைத்தார்.

ஆர்தர் ஹாரியின் மூக்குக்கண்ணாடியை எடுத்து அதன்மீது தன் மந்திரக்கோலால் ஒரு சிறு தட்டுத் தட்டி அவனிடம் திருப்பிக் கொடுத்தார். அது புத்தம் புதியதுபோல ஆகியிருந்தது.

“சரி, எனக்கு வேறு வேலை இருக்கிறது, நான் வருகிறேன்,” என்று ஹாக்ரிட் கூறினார். அவரது கரங்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்த மோலி, “நாக்டர்ன் சந்து! நல்ல வேளை ஹாக்ரிட், நீங்கள் மட்டும் ஹாரியைக் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்!” என்று கூறினார். “சரி, நாம் ஹாக்வார்ட்ஸில் சந்திக்கலாம்!” என்று அவர்கள் அனைவரையும் பார்த்துக் கூறிவிட்டு, ஹாக்ரிட் திரும்பி நடந்தார். கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த அத்தெருவில் அவரது தோள்களும் தலையும் எல்லோரையும்விட உயரமாகத் தெரிந்தன.

அவர்கள் அனைவரும் கிரிங்காட்ஸ் வங்கியின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தபோது, ஹாரி ரானிடமும் ஹெர்மயனியிடமும், “போர்ஜின் & பர்க்ஸ் கடையில் நான் யாரைப் பார்த்தேன் தெரியுமா?” என்று கேட்டான். “மால்ஃபாயையும் அவனது அப்பாவையும்”

அவனுக்குப் பின்னால் இருந்த ஆர்தர் டக்கென்று, “லூசியஸ் மால்ஃபாய் அங்கு ஏதாவது வாங்கினாரா?” என்று கேட்டார். “இல்லை. அவர் விற்றுக் கொண்டிருந்தார்.”

“அப்படியானால் கவலை அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்,” என்று ஆர்தர் வீஸ்லீ குரூரத் திருப்தியுடன் கூறினார். “எதிலாவது லூசியஸ் மால்ஃபாய் என்னிடம் மாட்டிக் கொண்டால் நன்றாக இருக்கும் . . .”

அந்த வங்கியின் வாசலில் இருந்த விசித்திரக்குள்ளன் அவர்களுக்கு வணக்கம் கூறி அவர்களை உள்ளே அனுமதித்தபோது, “ஆர்தர், நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது,” என்று மோலி கூறினார். “அக்குடும்பம் வம்பு தும்புகளுக்குப் பேர் போனது. தேவையில்லாமல் அகலக் கால் வைத்துவிடாதீர்கள்.”

“அப்படியானால், அவர்களைச் சரிக்குச் சமானமாக எதிர்த்து நிற்கக்கூடியவனாக என்னை நீ கருதவில்லை, அப்படித்தானே?” என்று ஆர்தர் எரிச்சலுடன் கேட்டார். அப்போது அவர்கள் நுழைந்திருந்த பளிங்கால் ஆன பிரம்மாண்டமான அறையில் இருந்த நீண்ட கவுன்டருக்கு அருகே, ஹெர்மயனியின் பெற்றோர், ஹெர்மயனியால் தங்களிடம் அறிமுகப்படுத்தப்படுவதற்காகப் பதற்றத்துடன் காத்திருந்ததைப் பார்த்த ஆர்தரின் கவனம் தடைப்பட்டது.

ஆர்தர் ஹெர்மயனியின் பெற்றோரைப் பார்த்து, “ஓ, நீங்கள் மகுள்கள் என்பது எனக்கு மறந்துவிட்டது!” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். “அப்படியானால், நாம் இதைக் கொண்டாட வேண்டும். இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஓ, மகுள்களின் பணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?” ஹெர்மயனியின் தந்தையின் கையிலிருந்த ஒரு பத்துப் பவுன்டு நோட்டை ஆர்தர் ஆரவாரத்துடன் சுட்டிக்காட்டி, “மோலி, இதைப் பார்!” என்று கூறினார்.

வேறு ஒரு விசித்திரக்குள்ளன் வீஸ்லீ குடும்பத்தினரையும் பெட்டகங்களுக்குக் கூட்டிச் செல்வதற்காக அங்கு வந்தபோது, ரான் ஹாரியையும் அவர்களுடைய பாதாள அறைப் பாதுகாப்புப் ஹெர்மயனியிடம், “சிறிது நேரத்தில் உன்னை மீண்டும் இங்கேயே சந்திக்கிறேன்,” என்று கூறினான்.

வங்கியினுள் பூமிக்குக் கீழே இருந்த சுரங்கப் பாதையில் போடப்பட்டிருந்த குட்டி ரயில் தண்டவாளங்களில் விசித்திரக்குள்ளர்கள் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த சிறிய வண்டிகளில் வீஸ்லீ குடும்பத்தினரும் ஹாரியும் ஏறிக் கொண்டனர். தாங்கள் வீஸ்லீ குடும்பத்தினரின் பாதுகாப்புப் பெட்டகத்தைத் தலைதெறிக்கும் வேகத்தில் சென்றடைந்த பயணத்தை ஹாரி வெகுவாக ரசித்தான். ஆனால் வீஸ்லீ குடும்பத்தினரின் பாதுகாப்புப் பெட்டகம் திறக்கப்பட்டவுடன், அவன் நாக்டர்ன் சந்தில் அடைந்ததைவிட அதிக அதிர்ச்சி அடைந்தான். அங்கு ஒரு சிறு குவியல் வெள்ளி சிக்கிள் நாணயங்களும் ஒரே ஒரு தங்க கேல்லியன் நாணயமும் மட்டுமே இருந்தன. மோலி உள்ளே நுழைந்து அங்கிருந்த நாணயங்கள் அனைத்தையும் துடைத்தெடுத்துத் தன் பையில் போட்டுக் கொண்டபோது மனமுடைந்து போனார். ஆனால் அவர்கள் அனைவரும் ஹாரியின் பெட்டகத்திற்குச் சென்றபோது ஹாரி மிகவும் சங்கடமாக உணர்ந்தான். அவன் அவசர அவசரமாக அங்கிருந்த நாணங்களில் சிலவற்றைத் தன் தோல் பையில் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தபோது, அந்த நாணயக் குவியல்களை அவர்களது பார்வையில் இருந்து மறைக்க முயற்சித்தான்.

வங்கியைவிட்டு வெளியே வந்ததும் அவர்கள் ஆளுக்கொரு திசையாகச் சென்றனர். பெர்சி தனக்கு ஒரு புதிய இறகுப் பேனா வேண்டும் என்று முனகிக் கொண்டே சென்றான். ஃபிரெட்டும் ஜார்ஜும் தங்களுடைய ஹாக்வார்ட்ஸ் நண்பனான லீ ஜோர்டன் அங்கு இருந்ததைக் கண்டனர். மோலியும் ஜின்னியும் பழைய அங்கிகளை விற்பனை செய்த கடைக்குச் செல்லவிருந்தனர். ஹெர்மயனியின் குடும்பத்தினரை ‘த லீக்கி கால்ட்ரன்’ மதுவகத்திற்கு அழைத்துச் செல்வதில் ஆர்தர் குறியாக இருந்தார்.

மோலி எல்லோரையும் பார்த்து, “உங்களுடைய பள்ளிப் பாடப் புத்தகங்களை வாங்குவதற்காக நாம் இன்னும் ஒரு மணி நேரத்தில் ‘ஃப்ளரிஷ் & பிளாட்ஸ்’ கடையில் சந்திக்கலாம்,” என்று கூறிவிட்டு, ஜின்னியுடன் நடையைக் கட்டினார். ஃபிரெட்டும் ஜார்ஜும் அங்கிருந்து அகன்று கொண்டிருந்தபோது, மோலி, “யாரும் எக்காரணம் கொண்டும் நாக்டர்ன் சந்திற்குள் அடியெடுத்து வைக்கக்கூடாது,” என்று சத்தமாகக் கூறினார்.

கற்கள் பதிக்கப்பட்டிருந்த, நீண்டு வளைந்து சென்ற அத்தெருவில், ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் காலாற நடந்து சென்றனர். ஹாரியின் பையில் தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கல நாணயங்கள், ‘எங்களைச் செலவு செய்’ என்று கூறி ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்ததால் அவன் தங்கள் மூவருக்கும் மூன்று பெரிய ஸ்டிராபெர்ரி ஐஸ்கிரீம்களை வாங்கினான். அவர்கள் மூவரும் சத்தமாகத் தங்கள் ஐஸ்கிரீம்களை உறிஞ்சிக் கொண்டே அத்தெருவில் இருந்த பிரமிக்க வைக்கும் கடைகளின் சன்னல்களை வேடிக்கை பார்த்தபடி நடந்தனர். தோல் காகிதங்களும் பேனா மையும் வாங்குவதற்காக அடுத்திருந்த ஒரு கடைக்கு ஹெர்மயனி ஹாரியையும் ரானையும் இழுத்துக் கொண்டு செல்லும்வரை, ‘குவாலிட்டி குவிடிச் சப்ளைஸ்’ என்ற கடையின் சன்னலில் தெரிந்த ‘சட்லி கேனன்’ அங்கிகளை ரான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘காம்போல் & ஜேப்ஸ்’ கடையில் ‘ஃபிலிபஸ்டர்’ வாணவெடிகளை வாங்கி அடுக்கிக் கொண்டிருந்த ஃபிரெட், ஜார்ஜ், மற்றும் லீ ஜோர்டனை அவர்கள் சந்தித்தனர். உடைந்து போயிருந்த மந்திரக்கோல்கள், ஒழுங்காக நிற்க மறுத்தப் பித்தளை எடைக் கருவிகள், மாயத் திரவங்களின் கறைகளால் அலங்கோலப்படுத்தப்பட்டு இருந்த அங்கிகள் போன்ற உருப்படாத பொருட்களை விற்ற ஒரு காயலான் கடையில் அவர்கள் பெர்சியைச் சந்தித்தனர். அங்கு, முற்றிலும் சுவாரசியமற்று இருந்த, ‘பெரும் சக்தியை வசப்படுத்திய மாணவ அணித் தலைவர்கள்’ என்ற சிறிய புத்தகத்திற்குள் அவன் மூழ்கிப் போயிருந்தான்.

பெர்சி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பின்னட்டையில் எழுதப்பட்டிருந்த ‘ஹாக்வார்ட்ஸ் மாணவ அணித் தலைவர்களும் அவர்கள் பின்னாளில் பார்த்த வேலைகளும்’ என்ற வார்த்தைகளை ரான் உரக்கப் படித்தான். “இது படுசுவாரசியமாக இருக்கிறதே!”

“இங்கிருந்து உடனே போய்விடு,” என்று பெர்சி ரானைப் பார்த்துக் கத்தினான்.

பெர்சி அந்தப் புத்தகத்தைப் படிக்கட்டும் என்று விட்டுவிட்டு ரான் அங்கிருந்து அகன்றபோது, அவன் ஹாரியிடமும் ஹெர்மயனியிடமும், “பெர்சி தன் வருங்காலம் குறித்துப் பெரிதாகக் கனவு கண்டு கொண்டிருக்கிறான். அதற்கான திட்டமும் அவன் கைவசம் இருக்கிறது அவன் மந்திரஜால அமைச்சராக ஆக விரும்புகிறான் . . .” என்று தெரிவித்தான்.

ஒருமணி நேரம் கழித்து அவர்கள் ‘ஃப்ௗரிஷ் & பிளாட்ஸ்’ புத்தகக் கடையை அடைந்தனர். ஆனால் அவர்கள் மட்டும் அந்தப் புத்தகக் கடைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் அங்கு சென்றபோது அக்கடைக்குள் நுழைய ஒரு பெரிய கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அவர்களுக்குப் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதற்கான காரணத்தை அக்கடையின் மேல் சன்னலில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய விளம்பரத் திரைச்சீலை பறையறிவித்துக் கொண்டிருந்தது:

இன்று மதியம் 12.30 மணியிலிருந்து
மாலை 4.30 மணி வரை

கில்டராய் லாக்ஹார்ட்

தனது சுயசரிதையான ‘மாயாஜாலமான நான்’ புத்தகத்தில் கையெழுத்து இட்டுத் தருவார்

“நிஜமாகவே நம்மால் அவரை நேரில் பார்க்க முடியுமா?” என்று ஹெர்மயனி கீச்சிட்டாள். “இந்த வருடம் நமக்குத் தேவையான புத்தகங்களில் பெரும்பாலானவற்றை அவர்தான் எழுதியிருக்கிறார்.”

அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மோலியின் வயதையொத்த மந்திரவாதினிகளே. கடை வாசலில் நின்று கொண்டிருந்த மக்களின் தொல்லைக்கு ஆளாகியிருந்த ஒரு மந்திரவாதினிச் சிப்பந்தி, “பெண்மணிகளே அமைதியாக இருங்கள் தயவு செய்து தள்ளாதீர்கள் … புத்தகங்கள் ஜாக்கிரதை!” என்று கூறிக் கொண்டிருந்தார்.

ஹாரி, ரான், ஹெர்மயனி ஆகிய மூவரும் நெருக்கியடித்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். கில்டராய் லாக்ஹார்ட் தன் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த கடையின் பின்பகுதிவரை வால்போல ஒரு பெரிய வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஹாரியும் ஹெர்மயனியும் ரானும் ‘பன்ஷி மோகினிப் பிசாசிடம் இருந்து விடுதலை’ என்ற புத்தகத்தின் பிரதியை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு, வரிசையில் தங்கள் குடும்பத்தினர் நின்று கொண்டிருந்த இடத்தில் புகுந்து கொண்டனர்.

“நல்ல வேளை, நீங்களும் வந்துவிட்டீர்கள்,” என்று மோலி அவர்களைப் பார்த்துக் கூறினார். அவருக்கு மூச்சிறைத்துக் கொண்டிருந்தது. அவர் தன் தலைமுடியைத் தொடர்ந்து கோதிவிட்டுக் கொண்டே இருந்தார். “இன்னும் ஒருசில நிமிடங்களில் கில்டராயை நாம் பார்த்துவிடலாம்.”

விரைவில் கில்டராய் லாக்ஹார்ட் பார்வையில் பட்டார். தனது புகைப்படங்கள் சூழ்ந்த ஒரு மேசையில் அவர் அமர்ந்திருந்தார். அப்புகைப்படங்களில் இருந்த அவரது முகங்கள் கூட்டத்தினரை நோக்கித் தமது முத்துப் பற்களைக் காட்டிக் கவர்ச்சியாக புன்னகைத்துக் கொண்டும் கண் சிமிட்டிக் கொண்டும் இருந்தன. அவர் தனது கண்களின் அதே நீல நிறத்தில் ஓர் அங்கியை அணிந்திருந்தார். தனது சுருண்ட தலைமுடியின்மீது மந்திரவாதிகளின் கூம்புத் தொப்பி ஒன்றை நளினமான ஒரு கோணத்தில் அவர் அணிந்திருந்தார்.

ஒரு குள்ளமான, எரிச்சலூட்டும் தோற்றத்துடன் இருந்த ஒரு நபர், தன் கையில் ஒரு பெரிய கருப்புநிறக் கேமராவுடன் அங்குமிங்கும் ஓடியாடிப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அக்கேமராவின் ஃபிளாஷ் கண்களைக் குருடாக்கும் விதத்தில் ஒளியை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை ஃபிளாஷ் அடிக்கப்பட்டபோதும் அது ஊதா நிறப் புகையை உமிழ்ந்தது.

நல்ல கோணம் ஒன்றிற்காக முயன்று கொண்டிருந்த அப்புகைப்படக்காரர், “இங்கிருந்து நகர்ந்து கொள்,” என்று ரானிடம் எரிந்து விழுந்தார். “நான் ‘த டெய்லி புராஃபெட்’ பத்திரிகைக்காகப் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.”

அவர் தன் காலில் மிதித்திருந்த இடத்தைத் தடவிவிட்டுக் கொண்டே, ரான், “பயங்கர அலட்டல்!” என்று முனகினான்.

அவன் கூறியது கில்டராய் லாக்ஹார்ட்டின் காதுகளிலும் விழுந்தது. அவர் நிமிர்ந்து ரானைப் பார்த்தார். பின் ரானின் பக்கத்தில் இருந்த ஹாரியின்மீது அவரது பார்வை நிலை கொண்டது. உடனே அவர் தன் இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்தார். “இது உண்மையிலேயே ஹாரி பாட்டரா?” என்று உற்சாகமாகக் கத்தினார்.

கூட்டம் ஆரவாரத்துடன் முணுமுணுத்துக் கொண்டே வழிவிட்டது. லாக்ஹார்ட் முன்னே பாய்ந்து வந்து ஹாரியின் கையைப் பிடித்து அவனை முன்னால் இழுத்துச் சென்றார். கூட்டம் பலமாகக் கை தட்டியது. லாக்ஹார்ட் புகைப்படக்காரருக்காக ஹாரியின் கையைப் பிடித்துக் குலுக்கியபோது, ஹாரியின் முகம் ஃபிளாஷின் வெளிச்சத்தில் வெளிறிப் போனது. அந்தப் புகைப்படக்காரரோ கண்மூடித்தனமாகப் புகைப்படம் மேல் புகைப்படமாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். அவரது கேமராவில் இருந்து வந்த ஊதா நிறப் புகை வீஸ்லீ குடும்பத்தினரை அப்படியே மூடியது.

லாக்ஹார்ட் தன் முத்துப் பற்களை நன்றாகக் காட்டிக் கொண்டே, “ஹாரி, உன் அசத்தலான புன்னகையை அள்ளி வீசு,” என்று கூறினார். “நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பத்திரிகைகள் முகப்புப் பக்கத்தில் போடப் போட்டிப் போடும்.”

அவர் ஒருவழியாக அவனை விடுவித்தபோது, ஹாரியின் கைவிரல்கள் மரத்துப் போயிருந்தன. அவன் வீஸ்லீ குடும்பத்தினர் இருந்த இடத்தை நோக்கிப் பக்கவாட்டில் நகர முயன்றபோது, லாக்ஹார்ட் தனது கையை ஹாரியின் தோள்களைச் சுற்றிப் போட்டுக் கொண்டு அவனை இறுக்கமாகத் தன் பக்கம் அணைத்துக் கொண்டார்.

கூட்டத்தினர் அமைதி காக்க வேண்டும் என்று உணர்த்தும் விதத்தில் தன் கையை அசைத்துக் கொண்டே, லாக்ஹார்ட, “சீமாட்டிகளே, சீமான்களே,” என்று சத்தமாகத் துவக்கினார். “என்னவோர் அற்புதமான கணம் இது! ஒரு சிறிய அறிவிப்பை வெளியிடுவதற்கான கச்சிதமான வேளை இதுதான். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு நான் நீண்ட நாட்களாகக் காத்து வந்திருக்கிறேன்.”

“இந்த இளம்புயல் ஹாரி இந்த ‘ஃப்ளரிஷ் & பிளாட்ஸ்’ புத்தகக் கடைக்குள் நுழைந்தபோது அவன் என் சுயசரிதையை வாங்க மட்டுமே வந்தான் – நான் அவனுக்கு அதன் ஒரு பிரதியை இலவசமாக அளிப்பதில் பேருவகை கொள்கிறேன்” — கூட்டம் மறுபடியும் கைதட்டியது. லாக்ஹார்ட் ஹாரியை ஓர் ஆட்டு ஆட்டினார். அவனது மூக்குக்கண்ணாடி நழுவி அவனது மூக்கு நுனிக்கு வந்தது. பின் அவர் தொடர்ந்தார்: “ஆனால் வெகு விரைவில், ‘மாயாஜாலமான நான்’ என்ற எனது புத்தகத்தைவிட இன்னும் அதிகமானவற்றைத் தான் பெறவிருக்கிறோம் என்பது அவனுக்கு தெரியாது. அவனும் அவனது பள்ளித் தோழர்களும் மாயாஜாலமான என்னை நிஜமாகவே பெறவிருக்கின்றனர். ஆமாம், சீமாட்டிகளே, சீமான்களே! வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து, ஹாக்வார்ட்ஸ் மந்திர தந்திர மாயாஜாலப் பள்ளியில் ‘தீய மந்திர சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பு’ என்ற பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் பேராசிரியராக நான் சேரவிருக்கிறேன் என்பதை நான் இங்கு உங்களுக்கு மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

கூட்டம் கரகோஷித்தது, கைதட்டி ஆர்ப்பரித்தது. லாக்ஹார்ட் தான் எழுதியிருந்த எல்லாப் புத்தகங்களின் பிரதிகளையும் ஹாரிக்குப் பரிசளித்தார். அவன் அதைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு, மேடை வெளிச்சத்தில் இருந்து வெளியேறி ஒருவழியாக அந்த அறையின் ஒரு மூலையைச் சென்றடைந்தான். அங்கு ஜின்னி தனது புதிய கொப்பரையுடன் நின்று கொண்டிருந்தாள்.

ஹாரி தன் கையிலிருந்த புத்தகங்களை அவளிடமிருந்த கொப்பரைக்குள் கொட்டியவாறு, “நீ இவற்றை வைத்துக் கொள்,” என்று முணுமுணுத்தான். “நான் என்னுடைய புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன்

அவனது பேச்சை இடைமறித்து, “நீ அதை வெகுவாக விரும்பினாய், இல்லையா ஹாரி?” என்று ஹாரிக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. அது யாருடைய குரல் என்று ஹாரியால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் நிமிர்ந்து பார்த்தபோது அவனுக்கு வெகு அருகே டிராகோ மால்ஃபாய் நின்று கொண்டிருந்தான். அவனது முகத்தில் வழக்கமான ஏளனப் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

“ஹாரி பாட்டர் எங்கு போனாலும் அவனுக்கு முன்னால் அவனது புகழ் அங்கு போய் நின்று கொண்டிருக்கிறது!” என்று மால்ஃபாய் கூறினான். “பத்திரிகை முகப்புச் செய்தியில் இடம்பெறாமல் அவனால் ஒரு புத்தகக் கடைக்குக்கூடப் போக முடியாது.”

“அவனைத் தேவையில்லாமல் சீண்டாதே. அவனுக்கு இதெல்லாம் தேவையே இல்லை,” என்று ஜின்னி கூறினாள். ஹாரியின் முன்னிலையில் அவள் வாய் திறந்தது அதுதான் முதல் தடவை. அவள் மால்ஃபாயை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹாரி பாட்டர், உனக்கு ஒரு தோழி கிடைத்துவிட்டாளா?” என்று மால்ஃபாய் நீட்டி முழக்கிப் பேசினான். ஜின்னியின் முகம் குங்குமமாய்ச் சிவந்தது. அப்போது ரானும் ஹெர்மயனியும் லாக்ஹார்ட்டின் புத்தக மூட்டைகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு அக்கூட்டத்தில் கஷ்டப்பட்டு வழியேற்படுத்திக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தனர்.

ரான் தன் செருப்பின் அடியில் ஒட்டியிருந்த ஏதோ ஓர் அருவருப்பான பொருளைப் பார்ப்பதுபோல மால்ஃபாயைப் பார்த்து, “ஓ, நீயா?” என்று கேட்டான். “இங்கு ஹாரியைப் பார்த்தது உனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது, இல்லையா?”

“ரான், உன்னை ஒரு கடைக்குள் பார்த்ததைவிட இது ஒன்றும் அதிர்ச்சியாக இல்லை,” என்று மால்ஃபாய் பதிலடி கொடுத்தான். “இவ்வளவு புத்தகங்களை வாங்கியிருக்கிறாயே? உன் பெற்றோர் இதற்காக ஒரு மாதம் பட்டினி கிடக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

ஜின்னியின் முகம் அளவுக்கு ரானின் முகமும் சிவந்தது. அவனும் தன் புத்தகங்களை ஜின்னியின் கொப்பரைக்குள் போட்டுவிட்டு, மால்ஃபாயை நோக்கி அடியெடுத்து வைத்தான். ஆனால் ஹாரியும் ஹெர்மயனியும் அவனது சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டனர்.

அப்போது, ஃபிரெட் மற்றும் ஜார்ஜ் சகிதமாகக் கஷ்டப்பட்டு அங்கு வந்து சேர்ந்த ஆர்தர், “ரான், இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இங்கு நின்றால் பைத்தியம் பிடித்துவிடும்போல இருக்கிறது. நாம் வெளியே போகலாம்,” என்று கூறினார்.

“ஆகா! சாட்சாத் ஆர்தர் வீஸ்லீ!”

அது லூசியஸ் மால்ஃபாய். அவர் தன் ஒரு கையை மால்ஃபாயின் தோளின்மீது வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அவரது முகத்தில் மால்ஃபாயின் முகத்தில் இருந்த அதே பரிகாசப் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

“ஓ… லூசியஸா?” என்று ஆர்தர் விட்டேத்தியாக வினவினார்.

“மந்திரஜால அமைச்சகத்தில் நீங்கள் கலக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேனே!” என்று லூசியஸ் மால்ஃபாய் கூறினார். “எங்கு பார்த்தாலும் அதிரடிச் சோதனைகள் ஆமாம், இதற்கெல்லாம் உங்களுக்குக் கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்களா?”

லூசியஸ் மால்ஃபாய் ஜின்னியின் கொப்பரைக்குள் கையைவிட்டு அங்கிருந்த பளபளப்பான பல புத்தகங்களுக்கு நடுவே இருந்த, நைந்து போன ஒரு பழைய ‘உருவ மாற்றம் குறித்த ஆரம்பக் கையேடு’ புத்தகப் பிரதியை உருவி எடுத்தார்.

“இதைப் பார்த்தால், உங்களுக்குக் கூடுதலாக ஒன்றும் கிடைப்பதுபோலத் தெரியவில்லையே,” என்று லூசியஸ் கூறினார். “அப்படி இருக்கும்போது, எதற்காக மந்திரவாதிச் சமூகத்திற்கே களங்கம் ஏற்படுத்தும் வேலைகளில் நீங்கள் இறங்க வேண்டும்?”

ஆர்தரின் முகம் ரான், ஜின்னி ஆகிய இருவரையும்விட மோசமாகச் சிவந்தது.

“லூசியஸ், ஒரு மந்திரவாதிக்கு எது களங்கம் விளைவிக்கிறது என்பது குறித்து எங்களுக்கு வேறு ஓர் அளவுகோல் உள்ளது,” என்று ஆர்தர் கூறினார்.

அவர்கள் இருவரையும் பார்த்து நெளிந்து கொண்டிருந்த ஹெர்மயனி கிரேஞ்சரின் பெற்றோரைத் தனது வெளிறிய கண்களால் நோட்டம் விட்ட லூசியஸ் மால்ஃபாய், “ஆர்தர், உங்கள் அளவுகோல் எது என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் யாருடன் நட்புப் இதைவிடக் கீழாக பாராட்டுகிறீர்கள் என்பதைப் பார்த்தால் உங்களால் போக முடியாது என்று நான் முன்பு நினைத்து இருந்தேன் -” என்று ஆரம்பித்தார்.

ஜின்னியின் கொப்பரை அவளது கைகளில் இருந்து எகிறியது. ஆர்தர் லூசியஸ் மால்ஃபாயின்மீது பாய்ந்து அவரை ஒரு புத்தக அலமாரியின்மீது தள்ளினார். மிகக் கனமான ஒரு டஜன் மந்திரஜாலப் புத்தகங்கள் அவர்கள் எல்லோர்மீதும் இடியென இறங்கின. ஃபிரெட்டும் ஜார்ஜும், “அப்பா, அவரை ஒருகை பார்த்துவிடுங்கள்!” என்று இரைந்தனர். மோலி, “வேண்டாம் ஆர்தர், வேண்டாம்,” என்று கீச்சிட்டார். கூட்டம் பதற்றப்பட்டுப் பின்னால் சாய்ந்ததில் மேலும் பல புத்தக அலமாரிகள் சரிந்தன. “சீமான்களே, தயவு செய்து தயவுசெய்து!” என்று கடை ஊழியர் கத்திக் கொண்டிருந்தார். பிறகு எல்லாவற்றையும்விட அதிகச் சத்தமாக, “சீமான்களே, விலகுங்கள்!” என்று ஒரு குரல் கூறியது.

இறைந்து கிடந்த அப்புத்தகக் கடலைத் தாண்டிச் சிரமப்பட்டு ஹாக்ரிட் அங்கு வந்து கொண்டிருந்தார். ஒரே கணத்தில் அவர் ஆர்தரையும் லூசியஸையும் இழுத்துப் பிடித்து விலக்கினார். ஆர்தரின் கிழிந்து போயிருந்தது. ‘தேரைமலங்கள் குறித்தக் கலைக்களஞ்சியம்’ என்ற புத்தகம் லூசியஸ் மால்ஃபாயின் கண்களைத் தாக்கியிருந்தது. அவரது கையில் இன்னும் ஜின்னியின் பழைய புத்தகம் இருந்தது. அவர் அதை அவளது கைகளில் திணித்தார். அவரது கண்களில் குரோதம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

“இந்தா பெண்ணே, இதைப் பிடித்துக் கொள்! உன் தகப்பனால் இதைவிடச் சிறப்பான ஒன்றை வாங்கிக் கொடுக்க முடியாது – ஹாக்ரிட்டின் இரும்புப் பிடியிலிருந்து திமிறித் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் பின்தொடருமாறு டிராகோ மால்ஃபாய்க்குச் சைகை செய்துவிட்டு, லூசியஸ் அந்த இடத்தைக் காலி செய்தார்.

ஆர்தரைத் தரையிலிருந்து தூக்கியவாறே, ஹாக்ரிட், “ஆர்தர். நீங்கள் அவரை உதாசீனம் செய்திருக்க வேண்டும்,” என்று கூறினார். ஆர்தர் தன் அங்கியைச் சரி செய்து கொண்டார். ஹாக்ரிட் மேலும் தொடர்ந்தார்: “கேடு கெட்டக் குடும்பம். அந்த ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். அவர்கள் பேசுவதை நீங்கள் காதுகொடுத்துக் கேட்கும் அளவுக்கு அவர்கள் தகுதி உடையவர்கள் கிடையாது. அவர்கள் உடலில் சாக்கடை ரத்தம் ஓடுகிறது. வாருங்கள், நாம் முதலில் இங்கிருந்து வெளியே போகலாம்.”

அக்கடை ஊழியர் அவர்களைத் தடுத்து நிறுத்த விரும்பியதுபோலக் காணப்பட்டார். ஆனால் அவர் ஹாக்ரிட்டின் இடுப்புவரைகூட வரவில்லை என்பதால் தன் நினைப்பை மாற்றிக் கொண்டதுபோலத் தோன்றியது. அவர்கள் அனைவரும் தெருவில் இறங்கி விரைந்தனர். ஹெர்மயனியின் பெற்றோர் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர். மோலி கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார்.

“நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்லதொரு முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறீர்கள் … பொது இடங்களில் எப்படிக் கைகலப்பில் ஈடுபடலாம் என்பதை விளக்கியிருக்கிறீர்கள் கில்டராய் லாக்ஷஹார்ட் நம்மைப் பற்றி என்ன நினைத்து இருப்பார் . . .”

“உண்மையில் அவருக்குப் பரம சந்தோஷம்,” என்று ஃபிரெட் கூறினான். “நாம் வெளியேறிக் கொண்டிருந்தபோது அவர் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? இந்தக் கைகலப்பைப் பத்திரிகைச் செய்தியில் சேர்க்க முடியுமா என்று அவர் அந்த புகைப்படக்காரரைக் கேட்டுக் கொண்டிருந்தார் – எல்லாமே இலவச விளம்பரம்தான்!”

ஆனால் அவர்கள் சுரத்தேயின்றி ‘த லீக்கி கால்ட்ரனை’ வந்தடைந்தனர். அங்கிருந்து ஹாரியும் வீஸ்லீ குடும்பத்தினரும் தாங்கள் வாங்கியிருந்த அத்தனைச் சாமான்களுடன் தங்களது வீட்டை வந்தடைய ஃபுளூ பொடி அவர்களுக்கு உதவியது. ஹெர்மயனியின் குடும்பத்தினர் அந்த மதுவகத்தின் மறுபக்கத்தில் இருந்த மகுள் தெருவிலிருந்து பேருந்து பிடித்துச் செல்வதற்காக அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டனர். பேருந்து நிறுத்தங்கள் எவ்வாறு இயங்கின என்று அவர்களிடம் கேட்க ஆர்தர் எத்தனித்தபோது, மோலி பார்த்தப் பார்வையைக் கண்டதும் பாதியிலேயே தன் வாயை மூடிக் கொண்டார்.

ஹாரி ஃபுளூ பொடியைக் கையில் எடுப்பதற்கு முன்பு, முன்ஜாக்கிரதையாகத் தன் மூக்குக்கண்ணாடியைக் கழற்றித் தன் பையில் வைத்துக் கொண்டான். அது கண்டிப்பாக அவனுக்குப் பிடித்தப் பயண முறை அல்ல.

– தொடரும்…

– ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மூலம்: ஜே.கே.ரோலிங், தமிழில்: பி.எஸ்.வி.குமாரசாமி, முதற் பதிப்பு: 2013, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *