ஸத்யாநந்தர்






ராமாயண காலத்தில், தண்ட காரண்யத்திலே ஸத்யாநந்தர் என்றொரு ரிஷி இருந்தார். அவர் ஒரு சமயம், வட திசைக்கு மீண்டு மிதிலையில் ஜனகனுடைய சபைக்கு வந்தார். அப்போது அவ்விருவருக்கும் பின்வரும் சம்பாஷணை நடைபெற்றது :
ஜனக மஹாராஜா கேட்கிறான்:
“தண்டகாரண்யத்தில், ஹே, ஸத்யாநந்த மஹரிஷியே, தண்டகாரண்யத்தில் முக்கியமான குடிகள் எவர்?”
ஸத்யாநந்தர் சொல்கிறார்: “ராட்சஸர்களும், பிசாசுகளும், குரங்குகளும்.”
ஜனகன்:- “இவர்களுக்குள்ளே பரஸ்பர சம்பந்தங்கள் எப்படி?”
ஸத்யாநந்தர்: “எப்போதும் சண்டை. குரங்குகள் ஒன்றையொன்று கொல்லுகின்றன. குரங்குகளை ராட்சஸர் கொல்லுகிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் பிசாசுகள் கொல்லுகின்றன. அது தண்டகாரண்யமன்று, வதாரண்யம்.”
ஜனகன்:- “அந்தப் பிசாசுகளைக் கொல்ல ஒரு வழி இல்லையா?”
ஸத்யாநந்தர்:- “அதற்காகத்தான் ரிஷிகளில் பலர் அங்கு குடியேறி வாழ்கிறோம்”
ஜனகன்:- “அத்தனை பிசாசுகளையும் கொன்று விட்டீர்களா?”
ஸத்யாதந்தர் :- “இல்லை, கோடியில் ஒரு பங்கு கூடக் கொல்லவில்லை. எங்கள் வேலை அங்கு நடப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.”
ஜனகன் :- “ஏன்?”
ஸத்யாநந்தர்:- “எங்களை ராட்சஸர் கொல்லுகிறார்கள்.”
ஜனகன்:- “பிசாசுகளைக் கொல்லும் வழியுணர்ந்த நீங்கள், ராட்சஸர்களைக் கொல்ல வழியில லையா?”
ஸத்யாநந்தர்:- “‘இல்லை.”
ஜனகன்:- “எதனாலோ ?”
ஸத்யாநந்தர்:- “பிசாசுகளை மத்திரத்தால் கொல்லலாம். ராட்சஸரைக் கொல்ல வில்லும், அம்புகளும், வாளும் வேண்டும். ரிஷிகளாகிய எங்களிடம் மந்திர பலந்தான் இருக்கிறது. ஆயுத பலமில்லை.”
ஜனகன் :- “அங்கே சமாதானமும், நியாயமும் ஏற்பட வேண்டுமே! கடைசியாக இதற்கு விமோசனம்தான் எப்படி?”
ஸத்யாநந்தர்:- “உங்களுடைய மாப்பிள்ளையாகும் ராமனைக் கொண்டு ராட்சஸரைக் கொல்விப்பதாக உத்தேசித்திருக்கிறோம்.”
ஜனகன்:- “அத்தனை கோடி ராட்சஸரையும் கொல்ல ராமன் ஒருவனாலே முடியுமா?”
ஸத்யாநந்தர்:- “ராமனும், லஷ்மணனும் சேர்ந்தால் முடியும்.”
ஜனகன்:- “தசரதன் ராமனை ஒருக்காலும் இந்த யுத்தத்தில் புக இடங்கொடுக்க மாட்டான்.”
ஸத்யாதந்தர்:- “கைகேயி மூலமாகக் காரியத்தை முடிக்கப் போகிறோம்.”
“அதெப்படி?” என்று ஜனகன் கேட்டான்.
ஸத்யாநந்தர் சொல்லுகிறார்:”ராமன் காட்டுக்குப் போகும்படி கைகேயி வரம் கேட்பாள். தசரதன் கொடுப்பான்.”
ஜனகன்:- “ஆமாம் ஸத்யா நந்தரே! எல்லா ஜீவர்களும் பரப்ரஹ்ம ஸ்வரூபமென்று நீங்கள் வேதங்களெழுதி எங்களையெல்லாம் மயக்கிவிட்டு, இப்போது ராட்சஸர்களைக் கொல்ல வழி தேடுகிறீர்களே’ இது அநியாய மன்றோ’ ராட்சஸரும் பரப்ரஹ்ம ஸ்வரூபந்தானே? அவர்களும் ஆத்மாவைத் தவிர பின்னமன்றே? அவர்களைக் கொல்லும் பொருட்டு நீங்கள் கொடிய சூழ்ச்சிகள் செய்கிறீர்களே! இது வேத விரோதமான காரியமன்றோ, பாவிகளே” என்றான்.
அப்பொழுது ஸத்யாதந்தர்:”உம்முடைய மாப்பிள்ளைக்கு ப்ராண ஹானி நேராமல் பார்த்துக் கொள்வோம்” என்றார்.
அப்போது ஜனகன்:- “நான் ராமனுடைய உயிருக்கஞ்சி இங்ஙனம் பேசவில்லை. நான் வேதாத்தி. யார் இருந்தாலும், செத்தாலும் எனக்கு ஒன்றுபோலவேதான். எரிகிற மிதிலையில் எனக்கொன்றும் நஷ்டமில்லை. (மிதிலாயாம் ப்ரதீப்தயாம் நமே கிஞ்சித் ப்ரகஹ்யகே) என்ற என்னுடைய வசனத்தை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்றான்.
இது கேட்டு ஸத்யாநந்தர்:”ஆனால் சீதையை ராவணன் கொண்டு போய், இலங்கையிலே சிறைப்படுத்தி வைப்பான். அதினின்றும் சீதை மிகவும் துயரப்படுவாள்” என்றார். உடனே “ஹா ஹா” என்று சொல்லி ஜனக மஹாராஜா மூர்ச்சை போட்டு விழுந்து விட்டான். பக்கத்திலிருந்த பரிசாரகர் அவனுக்கு சைத்யோ பீசாரங்கள் செய்து எழுப்பினார்கள்.
“உம்முடைய வேதாந்தம் மூர்ச்சை போட்டு விழுந்ததே” என்று கூறி ஸத்யாநந்தர் நகைத்தார்.
“அதற்கென்ன சூழ்ச்சி செய்யப் போகிறீர்கள்?” என்று ஜனகன் கேட்டான்.
“எதற்கு?”
“சீதையை ராவணன் அபகரிக்கும்படி செய்ய?” என்று ஜனகன் கேட்டான்.
“சூர்ப்பனகை, அதாவது ராவணனுடைய தங்கை. அவளை வசப்படுத்தி வைத்திருக்கிறோம். அவள் மூலமாக தடைபெறும்” என்று ஸத்யாநந்தர் சொன்னார்.
“சீதை ராமனுடன் காட்டுக்குப் போகாமல் நான் தடுத்து விட்டால் நீர் என்ன செய்வீர்?” என்று ஜனகன் கேட்டான்.
“உம்மால் தடுக்க முடியாது” என்று ஸத்யாதந்தர் சொன்னார்.
“உமக்கெப்படி தெரியும்?” என்று ஜனகன் கேட்டான்.
“எனக்குத் தெரியும்” என்றார் ஸத்யாநந்தர்.
“எப்படி?” என்று ஜனகன் மறுபடியும் கேட்டான்.
“விதியினுடைய பலம் பெரிது” என்று ஸத்யாநந்தர் சொன்னார்.
“விதியின் செயலை நீர் எங்ஙனம் எதிர்பார்த்து உறுதி கூறத் தலைப்பட்டீர்?” என்று கேட்டு ஜனகன் சிரித்தான்.
“நாங்கள்தான் விதி” என்று ஸத்யாநந்தர் சொன்னார்.
“நீங்களென்றால் யார்?” என்றான் ஜனகன்.
ஸத்யாநந்தர்:- “ரிஷிகள்”
இதைக் கேட்டவுடனே ஜனகனுக்கு ரோமாஞ்சிதம் ஏற்பட்டது.
“விதிபோன்ற பலம் உங்களுக்கு எங்கனம் உண்டாயிற்று?” என்று கேட்டான்.
“தவத்தால்”என்று ஸத்யாநந்தர் சொன்னார்.
“தவப்பயனாகி விளைந்த சக்தியை லோகோபகாரமாக உபயோகப்படுத்தக் கூடாதா? லோக தாசத்திலா உபயோகப்படுத்த வேண்டும்?” என்று ஜனகன் கேட்டான்.
அப்போது ஸத்யாநந்தர் சொல்லுகிறார்:- “ஜனகா, நீ சொல்லுகிற தர்மம் கிருத யுகத்திலே கூட நடக்கவில்லை. அசுரரும், பிசாசரும், மனுஷ்யரும், ராட்சஸரும் சமமாகவும், சகோதரம் போலவும் நடந்து வந்த காலம் இதுவரை எப்போதுமில்லை. இனி வரப்போவதுமில்லை. எல்லா உயிரும் ப்ரஹ்ம ஸ்வரூபமென்றும், ஆதலால் பரஸ்பரம் வதை செய்வது பாபமென்றும் சொல்லுகிறாயே? இந்த விதி மனிதருக்குள்ளே கூட இன்னும் ஸ்திரமாக ஏற்படவில்லையே. மனிதருக்குள் போர் நடப்பது நிற்கவில்லையே. க்ஷத்திரியர் பரஸ்பர வதையைத்தானே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பரசுராமன் பிராம்மணனாக இருந்தும் க்ஷத்திரியரை அழித்தாரோ? மனிதருக்குள்ளே போரை நிறுத்திய பின்னரன்றோ ராட்சஸரின் மேல் இரக்கம் செலுத்த வேண்டும்?” என்றார்.
“அப்படியிருக்க, நீங்கள் மனிதரைர் சீர்திருத்துவதை விட்டுப் பிசாசுகளையும், ராட்சஸரையும் அழிக்கப் புறப்பட்டது விநோத மன்றோ?” என்று ஜனகன் கேட்டான்.
“நாங்களே விதி” என்றார் ஸத்யாநத்தர்.
அப்போது ஜனகன் சொல்லுகிறான்:- “நீங்கள் இந்த சமயத்தில் வாதியாக இருக்கிறீர்கள். நாளை உங்களுடைய அதிகாரம் இந்த தேசத்தில் அழிந்து போய் விடும். ‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ கொல்லாமையே தர்மங்கள் எல்லா வற்றிலும் சிறந்தது. இது வேதத்தின் முக்கிய தர்மம். இந்த தர்மத்தைக் கூறுவதனாலேதான் அதற்கு வேதம் என்று பெயரும் உண்டாயிற்று. எல்லா உயிரும் பரமாத்மம் என்று வேதம் சொல்லுகிறது. இங்ஙனம் கூறியபடியாலேதான் அதற்கு வேதம் என்ற பெயருண்டாயிற்று. இல்லாவிட்டால் அது வெறும் கட்டுக் கதையாய் விடும். இந்த உண்மை நிலை நிறுத்தப்பட்டால் அன்றி, மனுஷ்ய நாகரிகத்துக்கு உறுதி ஏற்படாது. ஜீவலோகத்தில் சந்தோஷம் இராது. உயிர்களைத் தின்று உயிர் வாழாது, பிற உயிரை ஹிம்ஸை செய்வோருக்கு இவ்வுலகில் சந்தோவுமில்லை. மனதாலும், வாக்காலும், செய்கையாலும் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்துவதே ஆனந்தத்துக்கு வழி. எல்லா உயிர்களும் சமம்.”
அப்போது ஸத்யாநந்தர் சொல்கிறார்:
“போதும், போதும்; நிறுத்து. நிறுத்து. இந்த மாதிரி ப்ரசங்கமெல்லாம் மிதிலாபுரியில், அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு விஸ்தாரமாகப் பண்ணலாம். தண்டகாரண்யத்துப் பிசாசுகளிடமும், ராட்சஸரிடமும் உம்முடைய கொள்கைகளைச் சொன்னால் அவர்கள் அங்கீகரிப்பார்களா? எங்களுக்கு ப்ரயாண ஹானி அதிகப்படும்” என்றார்.
“அஹிம்சை நியாயமென்பதை வேத ரிஷியாகிய நீரே அங்கீகரிக்க வில்லையே! பிறகன்றோ தண்ட காரண்யத்துப் பிசாசுகளைப் பற்றி யோசிக்கப் போக வேண்டும்” என்று சொல்லி ஜனகன் பெருமூச்சு விட்டான்.
ஸத்யாநந்தர் தலையைக் கவிழ்ந்து கொண்டு எழுந்து வெளியே போய் விட்டார். அப்பொழுது ஜனகனுக்குப் பக்கத்திலிருந்த யாக்ஞவல்க்ய மஹரிஷி ஜனகனை நோக்கி, “நீ இந்த விஷயத்தில் ஏதேனும் தலையிட உத்தேசித்திருக்கிறாயா? ராமனைக் காட்டுக்குப் போகாமல் தடுக்கலாமென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
அதற்கு ஜனகன் :- “இல்லை. என் முயற்சி பலிக்காது. தசரதன் பெண்டாட்டி சொல் கேட்பது நிச்சயம்; அதை என்னால் தடுக்க முடியாது. அவள் ரிஷிகளுக்குக் கீழ்ப்பட்டுத்தான் நடப்பாள். அதை என்னால் தடுக்க முடியாது. ராமன் தசரதனுடைய கட்டளையை மீற மாட்டான். சீதை ராமனுடன் காட்டுக்கும் போவாள். அதை என்னால் தடுக்க முடியாது. சீதை சிறைப்பட்டழுவதில் எனக்கொரு கஷ்டமுமில்லை. நான் ஜீவன் முக்தன். உலகத்தார் எல்லோரும் ஜீவன் முக்தியடையும் வரை நம்மை அண்டினோருக்கு நல்லதைச் சொல்வதும், மற்றபடி சுத்த சாட்சியாய் உலகத்தில் நடப்பதையெல்லாம் நாடகம் போலெண்ணி பார்த்திருப்பதும் என் வழி” என்று சொல்லி நகைத்தான்.
22.3.1919-ல் சுதேசமித்திரன் அனுபந்தத்தில் வெளிவந்த பாரதியாரின் இந்தச் சிறுகதையைக் கண்டெடுத்து உதவிய பெ.சு. மணி அவர்களுக்கு நன்றி. புதிதாகக் கண்டெடுக்கப் பெற்ற பாரதி புதையலில் இதுவும் ஒன்று. நூலாக்கம் பெற்ற கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதியில் பின்னிட்டு வெளியிடப்பட்டது.
– பிப்ரவரி 1995