வேகம்





(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வில் வளைவாய்த் தண்டவாளம் நெளிகிற இடங்களில் இடப்பக்கம் நீல என்ஜினும் வலப்புறம் ‘காட்’ பெட்டியுமாய், முழு ரயிலுமே தரிசனந் தருகிறது.

எதிர்க்காற்றில் அலை எறியும் பச்சை வயல்கள், பாசியும், அல்லியும் படர்ந்து மறைத்த குளங்கள், ரயிலைக் கண்டதும் முகத்தைத் திருப்பி முதுகைக் காட்டிக்கொண்டு குளிக்கிற பெண்கள் இந்தக் காட்சிகளெல்லாம் அப் போதே மறைந்தாயிற்று. மணி, மூன்றுக்குமேல். இலைகளைப் பூவாக்கிக் காட்டும் ‘முஸண்டா’ச் செடிகள், இந்தப் பக்க. மெல்லாம் பற்றை பிடித்துப் போயிருக்கின்றன. அடியில் நாயுருவியும், இன்னும் ஏதோ பெயர் தெரியாத பரட்டைச் செடிகளும்.
விடாப்பிடியாய், ஒரே சீராய், ஒன்றையொன்று துரத்துகிற ரயில் பெட்டிகளின் நிழல்கள். மேட்டில் ஏறி, பள்ளத்தில் வழிகிற நிழல்கள்….
படாரென்று கதவு வந்து முதுகில் மோதியது. கந்தசாமி திடுக்கிட்டுத் திரும்பினான்.
“மச்சான், இப்பிடி நாங்கள் இருக்கிறது, சரியான ஆபத்தடாப்பா…. தற்செயலாய்த் தவறி விழுந்தா, அந்திரட். டிக்கு எலும்பு கூட எடுக்கேலாது!….”
ரயில் போட்ட சத்தத்தை மீறி, இது கந்தசாமியின் காதில் விழ வேண்டியிருந்ததால், வரதராஜா சத்தம் போட்டுச் சொன்னான்.
“இந்தக் கதவே எங்களை அடிச்சு விழுத்தும் போலை கிடக்கு….”
இத்தனை நீள ரயிலில், இருப்பதற்கு இரண்டு இடங் கிடைக்காமல், ‘கொம்பாட்மென்’ ரின் இந்த வாசலில் இருவரும் குந்திக் கொண்டிருந்தார்கள் – படிகளிற் காலைப் போட்டு, கைப்பிடிக் கம்பிகளில் கைகளைச் சுற்றிப் பிடித்து, ஆளை ஆள் இடித்து நெருக்கியபடி.
‘புஃபே’க்குக் கூடப் போகப் பயமாயிருக்கிறது. போனால், இந்த இடமும் போய்விடும்.
வேகம், எப்போதுமே, ஓர் உற்சாகத்தை ஏற்படுத்து கிறதுதான் – கரியும் புழுதியுமாய் முகத்தில் மோதி, நீண்ட தலைமயிரைப் பின்னுக்குப் பறக்கச் செய்கிற அந்த வேகமான காற்று, மனதின் சோர்வு கவலையெல்லாவற்றையுங்கூட அடித்துச் செல்வதைப் போல.
“மச்சான், நல்லா உலாஞ்சுது.. கவனமா இருந்து கொள்….” என்றான் வரதராஜா மீண்டும். இந்த வேகத்தால் ஏற்படுகிற உலாஞ்சல் உண்மையிலேயே, அவனுக்குப் பயத்தைக் கொடுத்தது.
“அந்தப் பெட்டையளைப் பாரடா….!” என்றான் கந்தசாமி.
ஓலை வேய்ந்த ஒரு வீட்டின் விறாந்தையில், வெள்ளை அரைச் சுவருக்குப் பின்னால் நின்ற இரண்டு மூன்று இளம் பெண்கள், இந்த ரயிலுக்குத்தான் -ஆனால், இன்னொரு பெட்டியை நோக்கிக் கையசைத்துக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
“வெங்காயங்கள்….” என்றான் வரதராஜா.
அந்த வீடு ஏதோ ஒரு சிற்றூரின் தொடக்கம் அல்லது, முடிவு-போலிருக்கிறது. அதைத் தாண்டியதும், ஒரு புளிய மரம். கந்தசாமி கம்பியைப் பிடித்திருந்த கையைக் கவனவாகத் தளர்த்தி, கைலேஞ்சியை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான்.
புளிய மரத்தை அண்டி, மீண்டும் தெல்லுத் தெல்லாக வீடுகள். கல்வீடு, மண்வீடு, ஓலைவீடு, ஓட்டுவீடு – எல்லாமே சின்னதாக.
இருந்தாற்போல் வண்டியின் வேகம் குறைய ஆரம் பித்தது. அரைக்கரைவாசி மரங்கள் வட்டுச் சரிந்து பட்டுப் போய்க் கொண்டிருக்கிற ஒரு இளந்தென்னந்தோப்பின் அந்தப்பக்கம், தண்டவாளத்திற்குச் சமாந்திரமாய்த் தெரிந்த தார்றோட்டில், வேகங்குறைகிற இந்த ரயிலை முந்துவதா முடியாது? என்பதுபோல், பழைய கார் ஒன்று அநாவசிய பதட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
ரயில் பெட்டி ஜன்னல்களூடே முளைக்கிற முகங்கள். மெல்லமாக இந்த வண்டி நகர்கிற தண்டவாளத்தின் பக்கத்தில், இதற்கு வழிவிட்டு விலகி, அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்கிற கூலியாட்கள் தெரிகிறார்கள். கைகளில் மண்வெட்டி, பிக்கான், சவள்.
“ஏதோ தண்டவாளம் றிப்பெயர் போல இருக்கு…. அதுதான் இவ்வளவு மெதுவாகப் போகுது….”
“இன்னும் எவ்வளவு தூரத்துக்கு இப்பிடி ஊரப் போகுதோ?….”
சலித்தபடி, கந்தசாமி முன்னால் வளைந்து, என்ஜின் பக்கம் எட்டிப் பார்த்தான். வலதுகால் செருப்பு, நழுவுவது போலிருந்தது. படியோடு சேர்த்துக் காலால் அழுத்திப் பிடிக்க முயலும்போதே, அந்த ஸ்லிப்பர் வழுக்கி விழுந்து விட்டது!
தண்டவாள மேட்டின் சரிவில் விழுந்த செருப்பு, உருண்டு கீழே போனது. கையிலிருந்த மண்வெட்டியைப் போட்டுவிட்டு ஒரு தொழிலாளி ஓடிவந்தான்.
“அல்லண்ட மாத்தயா!….” செருப்பைத் தூக்கி, இவர்களிடம் வீசினான். செருப்பு சரியாகப் பறந்து வந்து,. அடுத்த பெட்டியில் மோதித் தெறித்து, மீண்டும் ஒரு ஆமணக்கஞ்செடியின் அடியில் போய் விழுந்தது. அந்த. மனிதன், ஆமணக்கிடம் ஓடிவந்தான்.
“மச்சான், ரயில் ‘ஸ்பீட்’ எடுக்குது….” என்றான் வரதராஜா.
“ச்சாய்க்!….” என்ற கந்தசாமி, சடாரென்று இடது கால் செருப்பைக் கழற்றி, அந்த காட்டாமணக்கஞ் செடியை நோக்கி, பலங்கொண்ட மட்டும் வீசி எறிந்தான்.
– கணையாழி, பிப்ரவரி 1977.
– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.