வெற்றி வேந்தன் !





முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் சிறந்த கல்விமான்; பல இலக்கியங்களையும் பயின்று தேர்ச்சி பெற்று விளங்கினான். நல்ல பண்புடைய பிள்ளைகள் இருவரையும் பெற்றிருந்தான். அம்மன்னனுக்கு வயதாக ஆரம்பித்தது.
அம்மன்னனது நாட்டில் வானுயுற உயர்ந்த மரங்களும், நீரோட்டம் மிகுந்த காட்டாறுகளும், துள்ளித் திரியும் புள்ளிமான்களும், கொல்லும் புலிகள் முதலிய கொடிய விலங்குகள் வாழும் காடுகளும் இருந்தன. அதனால் அவனது நாட்டு மக்கள் வேட்டைத் தொழிலில் சிறந்து விளங்கினர்.
அச்சிற்றரசன் நாளுக்கு நாள் தளர்ச்சி மிகுந்து முதுமை அடைந்து வந்தான். அதனால் அரசியல் காரியங்களைக் கவனிக்க முடியாத நிலைக்கு ஆளானான். அந்நிலையில் அவன் தனது ஆட்சிப் பொறுப்பை தன் புதல்வர்களிடம் ஒப்புவிக்க நினைத்தான்.
அக்காலத்தில் “அரசு பதவி மூத்தவர்க்கு உரியது’ என்னும் நடைமுறை இருந்து வந்தது. அதன் படி மன்னன், தனது ஆட்சிப் பொறுப்பைத் தன் மூத்த மகனிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
“நாட்டை ஆள்பவன் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது; பரந்த மனமும் உயர்ந்த எண்ணமும் உடையவனாகவும் இருத்தல் வேண்டும். வயதால் மூத்தவனாக மட்டும் இருந்தால் போதாது; அறிவால் முதிர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும்’ என்று எண்ணினான்.
ஒரு நாள் தன் புதல்வர் இருவரையும் அழைத்தான். மூத்தவன் இளையவன் ஆகிய இருவரும் வந்து தந்தையை பணிந்து வணங்கி நின்றனர்.
புதல்வர்களின் பணிவைக் கண்டு மகிழ்ந்த மன்னன், “”புதல்வர்களே! நாளை காலை நீங்கள் இருவரும் வேட்டைக்குச் செல்ல வேண்டும்; மாலை வெற்றியோடு திரும்பி வர வேண்டும். இது உங்கள் இருவருக்குமிடையே நடத்தப்படும் வீரப் போட்டி மட்டுமன்று; அறிவுப் போட்டியுமாகும். உங்களில் வெற்றி பெறுவோர், நாட்டை ஆளும் தகுதி பெறுவர்!” என்று கூறினான்.
தந்தையின் மொழி கேட்ட மைந்தர்கள் இருவரும் மனம் மகிழ்ந்தனர்.
மறுநாள் காலை-
மைந்தர்கள் இருவரில் இளையவன் வில்லும், அம்பும் ஏந்தி விரைந்து புறப்பட்டான்; மூத்தவன் வேல் ஒன்று மட்டும் ஏந்திய வண்ணம் புறப்பட்டான்.
வேட்டையாடப் புறப்பட்டுச் சென்ற வீரப் புதல்வர்கள் இருவரும் காட்டில் அலைந்து திருந்தனர். தங்கள் நோக்கத்தில் மிகவும் கவனம் கொண்டு செயல்பட்டனர். பிற்பகலும் வந்து சேர்ந்தது. கதிரவன் மேற்திசையில் இறங்கிக் கொண்டிருந்தான். மன்னன் தன் புதல்வர்களை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
இளைய மகன் ஏறு நடைபோட்டு வந்தான். அவனது இடது தோளில் வில்லும், அம்பும் இருந்தன; வலது கையிலே அம்பு பாய்ந்த முயல் இருந்தது.
“”வா மகனே! வெற்றியோடு வந்தாயா? வேட்டைப் பொருள் எங்கே?” என்று கேட்டான்.
அதற்கு இளையவன், “”தந்தையே! இதோ பாருங்கள்! வேட்டைக்காரனைக் கண்டு காட்டு முயல் நிற்குமா? நிலைக்குமா? நான் அதை விட்டு வைப்பேனா? ஒரே அம்பு, வைத்த குறி தவறாது பாய்ந்தது! இதோ முயல்!” என்று தன் வெற்றியை உற்சாகத்துடன் கூறினான்.
அதைக் கேட்ட மன்னன், “”மகிழ்ச்சி மகனே! உன் வெற்றியைப் பாராட்டுகிறேன். உன் அண்ணன் எங்கே?” என்று கேட்டான்.
மன்னன் அவ்வாறு கேட்ட போது, மூத்த மகன் தலை தாழ்த்தி வெறுங்கையுடன் வந்து சேர்ந்தான். அவனது வலது கையில் முனை முறிந்த வேல் மட்டுமே இருந்தது. அவன் முகத்திலே ஒருவித நாணம்; தெம்பு குறைந்த நடை; பார்வையிலே ஒரு வித வருத்தம் காணப்பட்டது.
மூத்த மகனது வருகையைக் கண்ட மன்னன், “”வா மகனே! வேட்டையாடி என்ன கொண்டு வந்தாய்? யானையா? புலியா? கொண்டு வந்த வேட்டைப் பொருள் யாது?” என்று கேட்டான்.
“”தந்தையே! இல்லை, நான் வேட்டைபொருள் எதுவும் கொண்டு வரவில்லை. வெறுங்கையுடனேயே வந்திருக்கிறேன். சிந்தை கலங்கிய நிலையில் வந்திருக்கிறேன். வேட்டையை விரும்பி காட்டிற்குச் சென்றேன். கொடிய யானை ஒன்றையாவது வேட்டையாடிக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றேன். களிறு ஒன்று மதம் கொண்டு வந்தது. வேலை உயர்த்தி வேகமாக அந்தக் களிற்றின் மீது வீசினேன். தந்தையே! தங்களிடம் நான் வேல் பயிற்சி பெறவில்லை; வேல் பாய்ந்தது. வேல் பாய்ந்த அந்த களிறு பிளிறியது; ஆனாலும் வேலினை விசிறி எறிந்து விட்டு தப்பிச் சென்றுவிட்டது. கறைபட்ட வேல் இதோ! கறைபட்ட வேலோடு மறக்குடிக்குக் களங்கம் தேடியவனாக நான் வந்து நிற்கிறேன். மன்னியுங்கள் தந்தையே!” என்று மனக் கலக்கத்துடன் கூறினான்.
மூத்த மகன் கூறியதை கேட்ட மன்னன், “”கவலை கொள்ள வேண்டாம் மகனே!” என்று ஆறுதல் கூறி, மூத்தவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.
அவ்வாறு தழுவி மகிழ்ந்த மன்னன், மூத்த மகனை நோக்கி, “”மகனே! யானை வேட்டைக்குச் செல்பவன் யானையைப் பெற்று வருதலும் உண்டு; சிறு பறவை வேட்டைக்குச் செல்பவன் வெறுங்கையோடு திரும்பி வருதலும் உண்டு! அது அவரவர் வினைப்பயன்.
“”மகனே! இதோ, உன் தம்பி முயல் வேட்டைக்குச் சென்றான்; வெற்றி நடைபோட்டு வந்திருக்கிறான். இதில் எனக்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை.
“”நீயோ யானை வேட்டைக்குச் சென்றாய். யானையும் எதிர்பட்டது. வேலையும் எறிந்தாய். நீ வெற்றி பெற வில்லையென்றாலும், என் உள்ளம் உன் வகையில் மகிழ்ச்சி கொள்கிறது.
“”மகனே! நீ உயர்ந்ததையே எண்ணினாய்! உயர்வான குறிக்கோளைக் கொண்டாய்! அதனால் உயர்ந்தவன் ஆனாய்! உன்னைப் பாராட்டுகிறேன்! உன் முயற்சியைப் போற்றுகிறேன்! நீயே வெற்றிக்குரியவன்! நீயே இந்நாட்டிற்குத் தலைவன்!” என்று பாராட்டி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான்.
மூத்த மகன் முடிசூட்டிக் கொண்டு மகிழ்ந்தான்; நாட்டை நலமுடன் ஆண்டான்.
– ஆகஸ்ட் 27,2010