வுட்ஹவுஸ் புக் ஷாப் நாட்கள்




மார்கழி பனியில் எழும் வெண்ணிற புகை காற்றில் அலைந்து கொண்டு இருந்தது. ஊரே ஒன்று கூடி சுகமாக தூங்கி கொண்டு இருந்தது. ஓய்வு எடுக்க ஞாயிற்று கிழமைகள் உதவியாக இருக்கிறது. சிலருக்கு கிடைக்கும் வரம். இந்த புதிய நிறுவனத்தில் இப்போது தான் வேலைக்கு சேர்ந்தேன். வேலை ஒன்றும் பெரிதாக இல்லை. நான் எங்கு வேலைக்கு சென்றாலும் மூன்று மாதங்களில் நம்மை கண்டு கொண்டு முடிக்க முடியாத வேலைகளை பட்டியலிட்டு நம்மிடம் கொடுத்து சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பார்கள். இங்கும் அப்படியே கொடுத்தார்கள். உடனே வேலையை முடித்து கொடுத்தேன்.

படிப்பு முடித்தவுடன் ஒரு மாத காலம் ஊர் சுற்றி விட்டு நண்பன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ஒன்றும் நமக்கு தீனி போடும் வேலையில்லை. வேறு வேலை கிடைக்காததால் இந்த வேலை. திடிரென்று என்னுடைய அம்மாவிற்கு உடல் நலம் சரி இல்லை என்று செய்தி வந்தது. இது தான் சாக்கு என்று ஊருக்கு சென்றேன் . என் நண்பன் அப்போது என்னை பார்த்து சிரித்தான். அதன் பொருள் எங்கள் இருவருக்கும் மட்டும் தான் தெரியும். வாய்ப்புகள் வரும்போது நாம் விட்டு விட்டதை பிடித்து கொள்ள வேண்டும்.
என் அம்மா பழைய படி உடல் நலம் பெற்றார். மீண்டும் இயந்திரம் போல் ஆனார் நிறுத்தாமல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.
என் சொந்த ஊரிலேயே தங்கி விட்டேன். சொந்த ஊரில் இருப்பது ஒரு சுகம். ஏதாவது ஒரு வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன். இந்த வேலைக்கே ஐம்பதுக்கு மேல் போட்டியாளர்கள். இதில் சிபாரிசு வேறு. ஏற்கனவே அந்த கல்லூரிக்கு ஒரு வேலை முடிக்க பெறாமல் இருந்தது. நான் பெரிதும் மதிக்கும் பேராசிரியரின் அன்பான வேண்டுகோளை தட்ட முடியாமல் அந்த வேலையை ஏற்று முடித்து கொடுத்தேன். அவர்களுடைய பாடத்திட்டத்தை தொகுத்து கொடுத்தேன்.
அவர்களுக்கு பெரிய ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி. இந்த புராஜக்ட் தான் எனக்கு சிபாரிசு என்று அப்போது எனக்கு தெரியாது. அவர்களுக்கு இன்னும்
முடிக்கப்படாத வேலைகள் இருந்ததால் என்னை வேலைக்கு சேர்த்து கொண்டார்கள்.
நன்றாக சென்றது ஒரு வருடம் எனக்கே ஆச்சரியம். திடீரென்று சில கசப்பான பிரச்சனைகள். அந்த வேலையை விட்டு விட்டேன். நமக்கு அடுத்த வேலை காத்திருந்தது.
இந்த நேரத்தில் தான் எனக்கு புத்தக வாசிப்பு தொடங்கியது.
சிறு வயதில் எங்கள் பக்கத்து வீட்டில் ஏதேச்சையாக ஒரு புத்தகம் கிடைத்தது. முதல் பக்கத்தில் முதல் பரிசு பேச்சு போட்டிக்கு என்று இருந்தது. அந்த வீட்டின் இரண்டாவது அக்கா தான் பெற்றிருக்கும். அவள் தான் அழகும் அன்பும் மிகுந்தவள். ஆயிரம் தகவல்கள் அள்ளி வீசுவாள்.
அவள் இப்போது அமெரிக்காவில் டாக்டர். அவளுக்கு எடுபிடி வேலைக்காவது சென்று இருக்கலாம். எப்போதும் அழைத்து கொண்டே இருப்பாள்.
அந்த புத்தகம் சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) மகாத்மா எழுதியது. நான் படித்த முதல் புத்தகம் உண்மையிலேயே.
இப்போது கேட்டாலும் சொல்வேன்.
காந்தியின் அன்னை வானத்தை பார்த்து கொண்டே இருப்பாள் விரதத்தை முடிப்பதற்கு.
பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய துணை எழுத்து புத்தகம் என் வாசிப்பின் தொடக்கம் . என் நண்பன் போட்ட பெரிய வெளிச்சம்.
என்ன தான் இருக்குனு படித்தேன்.
அது பல வாசல்களை திறந்து விட்டது. பிசாசு போல் அவருடைய எல்லா புத்தகங்களையும் படித்தேன்.
புத்தக கடையின் துவக்க விழா அழைப்பிதழ் என் நண்பன் ஒருவன் மூலமாக எனக்கு வந்தது.
என் அம்மா கொடுத்தாள். சமூக அந்தஸ்துக்காக சில அமைப்புகளில் இருக்கிறேன். அவர்கள் நடத்தும் கூட்டம் என்று எண்ணி பத்திரிக்கையை அனைத்து சலிப்புகளையும் வீசுவது போல் எரிந்தேன். அது புத்தகம் போல் அமைதியாக இருக்கையில் படுத்துக் கொண்டது.
நான் மறந்து விடுவேன் என்று நண்பன் பீட்டர் குறுஞ்செய்தி அனுப்பினான். அன்று அங்கு சென்றேன்.
அந்த காம்ப்ளக்ஸின் மூன்றாவது தளத்தில் இருந்தது. ஒரே கூட்டம், கிருஷ்ணா என்று ஒருவர் அழைத்தார். திரும்பி பார்த்தேன் ஒரே இன்ப அதிர்ச்சி.
சுவாமிநாதன் சார், உங்க கடையா சார். ஆமா என் பையன் தான் ஆரம்பிக்க சொல்லி பணம் கொடுத்தான்.
ஆங்கில வகுப்பு எடுத்துட்டு இருந்தீங்க
நீங்க கொடுத்த மொழியை வைத்து தான் வண்டிய ஓட்டுறேன்.
சும்மா சொல்லாத, உன்னைய பார்த்தது மகிழ்ச்சி. தெரிந்தவரை பார்த்தால் கூடுதல் மகிழ்ச்சி
உங்களிடம் படிக்கும் போது நீங்க படித்த புத்தகம் பற்றி கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கும். உங்க பையன் எவ்வளவு பக்கம் புத்தகமாக இருந்தாலும் ஒரே மூச்சில் படித்து விடுவார் என்று சொல்லுவீங்க. ஆனா புத்தகக்கடை ஆரம்பிப்பீங்கனு நினைக்கல. நான் இப்ப தான் கொஞ்சம் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். உங்க பையன் எங்க சார்.
அவன் அமெரிக்காவுல இருக்கான். கூப்பிட்டா வந்துட்டு போவான்.
மகிழ்ச்சி சார்.
ஒரு ஆங்கில புத்தகம் கொடுத்தார். சின்ன புக்கு பேங்க் பாஸ்புக் மாதிரி இருந்தது விலை அதிகம்.
‘எ சைனிங்’ ஜான் ஃபோஸே என்று பெயர் போட்டு இருந்தது.
எல்லோரும் என் கைகளை பார்த்தார்கள். நான் அந்த புத்தகத்தை படித்தது போல் உணர்ந்தேன்.
புத்தக கடை கொஞ்சம் பெரிய கடை. மின் விளக்குகளால் ஜொலித்தது. ஏதோ ஐஸ்கிரீம் கடைக்குள் இருப்பது போல் இருந்தது. வட்ட வடிவ டேபிள்கள் போட்டு இருந்தார். இப்போதே சில பேர் புத்தகத்தை உட்கார்ந்து பார்த்து படித்து வாங்கி கொண்டு இருந்தார்கள்.
விதவிதமான புத்தக வாசிப்பு பற்றிய பொன் மொழிகள் சுவரில் பாடிக் கொண்டு இருந்தது. பல வண்ணங்களில் புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. நான் படித்த ஒரு சில தமிழ் புத்தகங்கள் என்னை எட்டி பார்த்து வெட்கப்பட்டது.
அப்போது தான் அவளை பார்த்தேன் மாம்பழ நிறத்தில் இருந்தாள். கருப்பு வெள்ளை சுடிதாரில் புதிதாக வந்த இளம் கலெக்டர் போல் மிடுக்குடன் இருந்தாள். அவ்வளவு கூட்டத்திலும் விளக்குகள் அவளை நோக்கி தான் பார்த்து சிரித்து கொண்டு இருந்தது. அவள் ஒரு ஆங்கில புத்தகத்தை பார்த்து கொண்டு இருந்தாள். சுவாமி சார் அந்த புத்தகத்தை பற்றி விவரித்து கொண்டு இருந்தார். அவள் விழிகள் கவனித்து கொண்டு இருந்தது.
சட்டென்று யாரோ தோளில் தட்டியது போல் இருந்தது. என்ன புத்தக கடைக்கெல்லாம் வருவியா கிருஷ்ணா என்றது ஒரு குரல்.
என்னுடைய ஆங்கில துறை பேராசிரியர் ராமன் சார். நான் மூன்றாம் ஆண்டு முடிக்கும் போது அவரும் ஓய்வு பெற்று விட்டார். அவர் பல கதைகள் கூறுவார். அவற்றில் ஒரு சம்பவம் மட்டும் இன்றும் ஞாபகம் உள்ளது. அந்த நேரத்தில் ஒரு கற்பழிப்பு சம்பவம் நடந்தது. அதை வைத்து மிக ஆவேசமாக கூறினார் வகுப்பில். இந்த மாதிரி பன்ற கம்முநாட்டி எல்லாம் குஞ்சிலே சுடனும் என்றார். ஒரு முறை நான் அவருக்கு குட்மார்னிங் சொல்லவில்லை என்று கோபித்து கொண்டார். கைய தூக்கனும் தலைய சாய்க்கனும் உடம்ப வளைக்கனும் அப்பரம் குட் மார்னிங் சார் என்று கத்தனும். நமக்கு இதெல்லாம் வராது. இந்த பிரச்சனை காரணமாக அவருடன் நல்ல பழக்கம் ஆனது.
ராமன் சார் நலமா
நல்லா இருக்கேன்
என்ன புத்தகம் படிப்பியா
கொஞ்சம் படிப்பேன்
என் பெண்ணும் நிறைய படிப்பா
புத்தகங்கள் கிடைக்கலைனா எங்கள படுத்து வா
நல்ல வேலை இலக்கிய புத்தக கடை வந்து விட்டது. எனக்கு பிரச்சனை தீர்ந்து விட்டது
இனிமே வந்துட்டே இருக்கனும்.
இது சிந்து என் பொண்ணு
இது கிருஷ்ணா என் மாணவன்
சிரிக்காமல் தலையாட்டி விட்டு சென்றாள் செல்லும் போது
நான் கீழ நிக்கிறேன் வாங்க சீக்கிரம் என்றாள்.
அவ அப்படித்தான்
நீ தப்பா எடுத்துக்காத
குதிப்பா நான் வரேன்
ஒரு நாள் வீட்டிற்கு வா பேசலாம் என்றார்.
நானும் அவள் அழகில் இருந்து விடுபட முடியாமல். அவளை நினைத்து கொண்டே என் அன்றாட வேலைகளில் மூழ்கி போனேன். இந்தனை வருடத்தில் படிக்கும் போதும் வேலையிலும் சிலரை பார்ப்பேன் பேசுவேன் அத்தோடு சரி யார் மீதும் பெரிய விருப்பம் கிடையாது ஆனால் இவளை பார்த்ததிலிருந்து ஏதோ செய்கிறது.
இது என்ன வம்பு, சார் பொண்ணு அவர் என்ன நினைப்பார். வேண்டும் என்று மனம் செல்கிறது வேண்டாம் என்றும் சொல்கிறது.
முடிவில் அறிவு பேசியது. நல்லா போயிட்டு இருக்கிறது. புத்தகம் நிறையா படி நல்ல புத்தக கடை இருக்கு படி ஊர் சுற்று பயணம் போ அறிவ பெருக்கிக்கோ. இதெல்லாம் படிக்கிற வயசுல பண்றது. இப்ப வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க பிரச்சனை வேண்டாம்.
அப்படியே போனாலும் அந்த பொண்ண பார்த்தா சிட்டில படிச்ச பொண்ணு மாதிரி இருக்கு. நிறைய புத்தகம் படிக்கும் போல அதுவும் ஆங்கில புத்தகம் அசிங்க படாத
நானே என்னை சமாதானம் பண்ணிக் கொண்டேன். முடிஞ்சா பார்க்கலாம். நினைத்து கொண்டு இருக்கலாம்.
மனம் சமாதானம் கூறியது. சார் தான் வா ஒருநாள் என்றாரே போய் பாரு என்றது.
வேண்டாம் சாரே தப்பாக எடுத்துப் பார். என்ன ஒரு பேச்சுக்கு சொன்னா வந்துட்டானே என்று நினைத்தால் பல எண்ணங்கள் ஓடியது.
பீட்டர் அழைத்தான் அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்
ரா.அகில்மாறன் வருகிறார் நிகழ்ச்சிக்கு நீயும் வரியா என்றான்.
வேண்டாம் நிகழ்ச்சில எழுத்தாளரை கடைசியா பேச சொல்லிட்டு முன்னாடி வேடிக்கை மனிதர்கள் பேசுவார்கள். நாம தடுக்க முடியாது. வேண்டாம்.
அவர தனியா சந்திக்கனும் கேட்டு பாரு அப்பரம் நம்ம வுட்ஹவுஸ் புக் ஷாப்பிற்கு எப்படியாவது கூட்டிட்டு போகனும்.
என்ன செலவானாலும் பரவாயில்லை பீட்டர். டீவி லைவ் வரனும். நம்ம ஊர்ல இப்படி ஒரு புக்ஸாப் இருக்கு அதற்கு பெரிய எழுத்தாளர் வந்திருக்கிறார் என்று காட்டனும்.
சுவாமி சார் சந்தோஷப்படுவார்.
கண்டிப்பா ரெடி பண்ணலாம்
ஒரு நாள் மாலை நிலவு சூரியன் உதிக்கும் இடத்தில் நின்று கொண்டு இலைகளில் மறைந்து ஒளி வீசியது. இதை பார்த்தவுடன் சிந்து ஞாபகம் வந்தது. உடனே புக் ஷாப் சென்றேன். கூட்டம் அதிகமாக இல்லை ஒரு பத்து பேர் இருந்தார்கள்.
சுவாமி சார் என்னை பார்த்து விட்டு
கிருஷ்ணா பாத்துட்டு இரு
வரேன்
சரி சார்
புத்தகங்களை பார்த்து கொண்டு இருந்தேன்
சிந்து இருந்தாள்
உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. நான் புத்தகங்களின் நிறங்களையும் அதன் வடிவமைப்பையும் பார்த்து கொண்டு இருந்தேன்.
சுவாமி சார் அழைத்து அவளிடம் அறிமுகப்படுத்தினார்.
இப்போது தான் சிரித்தாள்
ஹாய்
இவன் கிருஷ்ணா
தெரியும்
நீங்க ஒரு புத்தகம் பற்றி கேட்டிங்க
இவன்ட்ட ஒரு காப்பி கூட இருக்கு. படிச்சிருப்பான்
அடுத்த வாரம் தான் வரும்
வேணும்னா இவன்ட்ட வாங்கி தரேன்
படிங்க
நான் வந்தவுடன் வாங்கி படிச்சிக்குறேன்
No problem
சுவாமி சார் யாரோ கூப்பிட
எனக்கு வழிவிட்டு நகர்ந்தார்.
இப்போது தான் என்னை பார்த்தாள்
நேருக்கு நேராக
அந்த புத்தகம் ஜப்பான் இலக்கிய நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பு
நீங்க படிச்சிட்டிங்களா
படிச்சிட்டேன், போன வாரம் தான் முடித்தேன்.
என்ன லவ் ஸ்டோரியா
அப்படி சொல்ல முடியாது ஆனா லவ் ஸ்டோரி வரும். அந்த பொண்ண விட்டுட்டு போய்டுவான். அவங்க அம்மா இறந்துடுவாங்க . அவ அநாதையா ஆயிடுவா
ரொம்பா சோகமா இருக்குமா
இல்ல அதுக்கு அப்பரம் பக்கத்து வீட்டுல உதவி செய்வாங்க. அன்பு பாசம் மற்றும் ஜென் மாதிரி வரும். நல்ல நாவல். மனத்திற்கு நெருக்கமா இருக்கும். நாம் படிக்கும் போதே ஒரு பெரிய அமைதி கொடுக்கும் ஆழ்கடலில் அமர்ந்து இருப்பது போலே
உங்களுக்கு மிகவும் பிடிக்கும்
எப்படி தெரியும்
எனக்கு புடிச்சிருக்கு அதனால எல்லோருக்கும் புடிக்கும்
என்ன சொல்றீங்க
நீங்க படிங்க நான் கொண்டு வந்து தரேன்
இல்ல பரவாயில்ல
நான் வாங்கி படிச்சிக்குறேன்
thank you
புது புக்கு ஏதாவது படிச்சா சொல்லுங்க
ok bye பார்க்கலாம்
என்று சென்று விட்டாள்.
பீட்டர் அழைத்தான்
எழுத்தாளர் எல்லாவற்றுக்கும் சரி சொல்லி விட்டார்.
உனக்கு எப்படி நன்றி சொல்லுரரதுனே தெரியல ரொம்ப நன்றி
பரவா இல்ல
சூரியன் சில நேரங்களில் ஒளியையும் மழையையும் மேகங்களையும் சேர்த்து கொண்டு வரும். மயக்கம் கலந்த கனவா இருக்கும்.
ராமன் சார் அழைத்தார்.
சார் வணக்கம்
எங்க இருக்க
என் பொண்ணு பேசணும்னு சொல்றா தரேன் பேசு.
நான் பறந்து கொண்டு இருந்தேன்
Sorry
if you don’t mine
எல்லா புக்கும் படிச்சிட்டேன்
அந்த புக்கு கிடைக்குமா
கண்டிப்பா
நான் உங்க வீட்டு வழியா தான் ஒரு வேலையா போவேன்
வந்து தரேன்
இல்ல
நீங்க புக் ஷாப் புல கொடுங்க வாங்கிக்கறேன்
இல்ல பரவாயில்ல
நான் வரேன்
பீட்டர் அழைத்தான். நிகழ்ச்சி இன்னும் அரைமணி நேரத்தில் முடிந்து விடும் எழுத்தாளரை பார்க்கலாம் என்றான்.
நான் வண்டி அனுப்புறேன். நீ அவர புக் ஷாப்புக்கு அழைச்சிட்டு வா.
சரி
நான் பல கனவுகளுடன் அவள் வீட்டிற்கு சென்றேன். ராமன் சார் ஒரு வித புன்னகையோடு என்னை அழைத்தார்.
சிந்து இரண்டு நாளா உன்னைய பத்தி தான் பேசுனா அவளுக்கு உன்னைய பிடிச்சிருக்கு போல என்றார்.
வாங்க என்று என் கைகளை பார்த்தாள்
புத்தகத்தை கொடுத்தேன்
Thank you
உள்ள வாங்க
இல்ல நான் புறப்படனும்
வேலை இருக்கு
இல்ல
உடனே போலாம் என்றாள்.
காபி கொடுத்தாள், அவள் போலவே அழகு ஒரு மணத்தை வைத்து கொண்டு மணம் வீசியது.
வீட்டை சுற்றி காட்டினாள், அவள் நூலகத்தை காட்டினாள்.
அவள் ஒரு புத்தகம் கொடுத்தாள்
அவளை போலவே ஒளி வீசியது. அட்டையில் ஜன்னலில் மஞ்சள் ஒளி வீசும் ஒரு புத்தக கடையின் படம் போட்டு இருந்தது.
Thank you
பார்க்கலாம் என்றாள்.
நான் கனவில் மிதந்து கொண்டு இருந்தேன். நான் புத்தக கடைக்கு செல்லும் போது அப்போது தான் உள்ளே நுழைந்தார் எழுத்தாளர். பீட்டர் அறிமுகப்படுத்தினான்.
ஒரே கூட்டம் டீவி லைவ் ஆரம்பம் ஆனது. சுற்றி பார்த்தார். அவருடைய கண்களின் ஒளி கூடிக் கொண்டே இருந்தது. The Days of Abandonment Novel by Elena Ferrante புத்தகத்தை பார்த்து விட்டு நான் பல நாள் தேடிய புத்தகம் இங்கு உள்ளது. நான் நினைத்து கூட பார்க்க வில்லை இந்த ஊருல இப்படி ஒரு கடை இருக்கும் அங்க இந்த புத்தகம் இருக்கும் என்று கனவு கூட காண முடியாது. அவர் எழுதிய புதிய நாவல் பற்றி கூறினார். வாசகர்கள் புத்தகத்தில் அவர் கையெழுத்து பெற்று கொண்டனர்.
ஒரு சில முக்கியமான புத்தகங்கள் வாங்கினார்.
வாசகர் கேள்விக்கு பதில் கூறினார்.
உங்களுக்கு எது நம்பிக்கை தருது
நம் முன்னோடிகள், இப்ப எழுதி கொண்டிருப்பவர்கள். அப்பறம் நான் நின்று கொண்டு இருக்கும் இந்த புக்ஸாப். புத்தக திருவிழாவில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. இது போன்ற கடை அதை தொடர்ந்து நடக்கும் வாசகர்களின் கலந்துரையாடல்கள் பெரிய நம்பிக்கை.
புதிதாக எழுதுபவர்கள் எப்படி எழுதுவது?
தொடர்ந்து வாசிக்கனும் முக்கியமாக முன்னோடிகள். தினமும் எழுதனும். எல்லாத்தையும் எழுதனும். ஜார்ஜ் ஆர்வெல் சொல்வது போல் நமக்கு எது உண்மை என்று படுகிறதோ அதை நிமிர்வுடன் எழுதனும்.
என்னிடம் விடைபெறும் போது சொன்னார்.
இது கடைசி நாவல் என்ற எண்ணத்தில் இருந்தேன். இனிமேல் எழுத வேண்டாம் யாருக்காக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.
இந்த வுட்ஹவுஸ் புக் ஷாப் என் எண்ணத்தை மாற்றி விட்டது.
உங்க எல்லோருக்கும் தான் நன்றி சொல்லணும்.
மீண்டும் அவசியம் பார்க்கலாம் என்றார்.
இது போன்ற கதைகளுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் வாழ்த்துக்கள் பல