வீழ்ச்சி




(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
யன்னல் கம்பிகளுக்கூடே தெரியும் காட்சி வகைப்படுத்திக் கூறமுடியாத ஓர் பரவச உணர்ச்சியைக் கிளப்புகிறது. உயர்ந்து வளைந்து நிற்கிறது ஓர் தென்னை. பின்னால் சில கமுகுகள். இன்னும் வேறு சில பெயர் தெரியாத மரங்கள். முன்னால் மஞ்சள் பூக்களோடு ஊசி இலைகள். பச்சை நிறத்தில் அப்படி என்ன இருக்கிறது மனதைக் கிளறுவதற்கு? யன்னல் கம்பிகளுக்கூடாய் மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தெரிகிறது.
காலையில் நித்திரை விட்டெழுந்து அப்படியே சுவரோடு சாய்ந்தவாறே படுக்கையில் உட்கார்ந்த வண்ணம் அந்தக் காட்சியை அவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நினைவுகளற்ற நிலை. நெஞ்சுக்குள் ஏதோ கிளறப்படும் ஓர் பரவச உணர்ச்சி மட்டும் நிற்கிறது.
தலை நீட்டிநிற்கும் தென்னை மரத்தின் உச்சிக்கு அப்பால் யன்னலின் மேல்விளிம்பு போடும் எல்லை வரை நீலவானம் மெல்லப் பரவிய சூரிய ஒளியில் விரிந்து தெரிகிறது. அங்கும் சலனமற்ற நிலை. அவனது அகத்தின் பிரமாண்டமான பிம்பம்போல் அதில் ஒரு பொட்டு முகில் கூட்டங்கூட இல்லை. பச்சை மரங்களில் அவன் கண்ட அந்தப் பரவச உணர்ச்சிக்குரிய காரணம் இப்போதான் அவனுக்கு விளங்குகிறது. ஆமா, அவற்றுக்குப் பின்னாலுள்ள அந்த நீலவெளிதான் காரணம். இல்லாவிட்டால் அவை வெறும் மரங்களாகத்தான் தெரிந்திருக்கும். பின்னாலுள்ள அழகு வெளியின் பிணைப்பற்ற வெறும் சின்ன மரங்கள். அவற்றால் மட்டும் அவனுடைய அகத்துக்குள் அந்தப் பரவச உணர்ச்சியைப் பிறப்பிக்க முடியாது.

அவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் அதே வேளையில் அடுத்த அறையில் முடுக்கி விடப்பட்ட வானொலியும் அலறத் தொடங்குகிறது. அது அவனோடு போட்டி போடுகிறதா? ஆரம்பத்தில் அதைப்பற்றி அவன் கொஞ்சங்கூடக் கவலைப்படவில்லை. அவனுக்கும் அவனுடைய நிலைக்கும் தொடர்பற்ற ஏதோ ஓர் தூரத்துச் சத்தம் போல் தான் அது கேட்கிறது. ஒருவேளை அந்த உணர்வுகூடக் கொஞ்சம் தாமதித்துத்தான் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பின்னர் அது மெல்ல மெல்லக் கூடிக் கொண்டே வந்து தன்னை வலுக்காட்டயமாக அவனுக்குள் திணிக்கிறது. அதை எதிர்க்க முடியாமல் வலுவிழந்துபோன காதுகளும் அந்த ஆக்கிரமிப்பை இறுதியில் ஏற்றுக்கொள்ளவேதான் செய்கின்றன.
“வடவியட்னாமில் அமெரிக்க விமானங்கள் புதியதோர் தாக்குதலை நடத்தியிருக்கின்றன. ஐம்பதுக்கதிகமான வியட்கொங் வீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஐந்து பாலங்களும் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஓர் அமெரிக்க ராணுவ அதிகாரி கருத்துத் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்தி கூறுகிறது…”
புதிதாக வந்த எரிச்சலோடு அவன் அதை உலுப்பிவிட முயல்கிறான். உலுப்பிவிட்டுத் திரும்பவும் பழைய பரவசக் கிளறலில் அவனது மனம் தன்னை இழந்துவிட முயல்கிறது. அவன் திரும்பவும் வெளியே பார்க்கிறான்.
யன்னலுக்கூடாய் நீலவெளி முன்பைப் போலவே விரிந்து கிடக்கிறது. ஆனால் எப்படியோ அங்கு முன்பு படர்ந்திருந்த சூரிய ஒளி திடீரென்று மங்கத் தொடங்குவது போன்ற ஓர் உணர்வு. வெறும் பிரமையா? இல்லை, அது உண்மைதான். அவன் நிச்சயப்படுத்திக் கொள்கிறான். மங்கிய ஒளியோடு மரங்கள்கூட ஆடத் தொடங்குகின்றன. கூடவே குளிர்காற்று. மழை வரப்போகிறதா? முந்தின சலனமற்ற மௌனம் பிறப்பித்த பரவசம் இப்போ கரைவது போன்ற அறிகுறி. அதற்குப் பதிலாக நெஞ்சில் ஓர் மெல்லிய இனந்தெரியாத வேதனைதான் கசியத் தொடங்குகிறது.
“மரண அறிவித்தல்”
அவன் திடுக்கிடுகிறான். அதே வானொலியின் அறிவிப்பு. இல்லை, அலறல். அந்த நேரத்தில் அது அவனுக்கு அப்படித்தான் படுகிறது. அப்போதுள்ள நிலையில் அடுத்த அறை வானொலியை அவன் சுக்குநூறாக நொருக்கிவிடக்கூடத் தயார். ஆனால் முடியவில்லை. அதன் மரணச்செய்தி தொடர்ந்து கேட்கவே செய்கிறது. அதக்கூட அவனால் தடுக்க முடியவில்லை.
“இளைப்பாறிய முத்துத்தம்பி பொன்னையா காலமானார் ….”
வானொலி தொடர்கிறது.
“தங்கம்மாவின் அருமைக் கணவரும் களுத்துறை சீ. ரீ. பி. அலுவலகத்தில் வேலை பார்க்கும் முத்துக்குமாரரின் தகப்பனாரும் நியூசிட்டி கொம்பனியின் மனேஜர் விஸ்வநாதனின் தமையனாரும், கிங்ஸ்வுட் ஆசிரியர் பேரின்பநாயகம், ஹோலிபமிலி கொன்வென்ட் ஆசிரியை செல்வி பொன்னையா ஆகியோரின் பாட்டனாருமான இளைப்பாறிய முத்துத்தம்பி பொன்னையா காலமானார். மரணச்சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொட்டாஞ்சேனை மைதானத்தில் நடைபெறும். உறவினரும் நண்பர்களும் இதை ஏற்றுக்கொள்ளவும். மீண்டுமொருமுறை வாசிக்கிறேன். இளைப்பாறிய முத்துத்தம்பி பொன்னையா காலமானார் ….”
காதுகள் அவற்றைக் கேட்டு வாங்கிக் கருத்தில் பதிய வைக்க அவனுடைய மனதில் பலவகை உணர்வுகள் ஊற்றெடுக்கின்றன. பலவகையான கற்பனைகள் உருவாகின்றன. இளைப்பாறிய பொன்னையரின் உருவத்தை அவனது மனம் படம் பிடிக்க முயல்கிறது. வழுக்கைத் தலை. வீட்டு விறாந்தையில் ஈசிச் செயாரில் மூக்கிலோர் கண்ணாடியுடன் அவர் சாய்ந்து கிடக்கிறார். பக்கத்தில் ஓர் பத்திரிகை கிடக்கிறது. இல்லை, ஈசிச்செயாரில் சாய்ந்துகொண்டு அதைத்தான் அவர் வாசித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் அவருக்கு அறிவூட்டும் ஒரே ஒரு சாதனம். அவர் கண்ட உலகம், பிரபஞ்சம் எல்லாமே அதன் பக்கங்களுக்குள்ளேதான். இப்போ அதுவும் அடங்கி விட்டது. ஈசிச்செயாரில் அவர் இனி இருக்க மாட்டார். இப்போ அவரைச்சுற்றி அவருடைய இளைப்பாறாத மக்களும் பேரன்மாரும் சுற்றத்தாரும் அழுத முகங்களோடு காட்சியளிப்பார்கள். அல்லது ஒருவேளை அருகு வீட்டு வானொலியிலே, தாங்கள் கொடுத்த மரணச்செய்தி சரியாக வருகிறதா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ? அது சரியாகவே வந்ததினால் பெரிய சாதனையொன்றைச் செய்துவிட்டதுபோல் திருப்தியோடு தலையாட்டிக் கொள்கிறார்களோ? இருக்கலாம் என்றே அவனுக்குப் படுகிறது. இளைப்பாறிப் பின்னர் இறந்தும்விட்ட பொன்னையரின் உலகம் பத்திரிகைதான் என்றால் இளைப்பாறாத அவருடைய இப்போதைய சந்ததியாரின் உலகம் வானொலியும் சினிமாவுந்தானே? இனிவரும் சந்ததிக்கு டெலிவிசனாக இருக்கலாம். ஆனால் இப்போதைய சந்ததிக்கு சினிமாவும் வானொலியுந்தான். ஆமாம் அவர்களும் இப்போ வானொலியில் அந்த மரணச் செய்தியைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். கேட்டுத் திருப்தியோடு தலையாட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். “கொட்டாஞ்சேனை மைதானத்தில் நடைபெறும்…”
“இரண்டாவது மரணச்செய்தி. சுந்தரமூர்த்தி கனகரத்தினம் காலமானார். அரசாஙக மொழி அலுவலகத்தில் வேலை பார்த்த சுந்தரமூர்த்தி காலமானார்”
அதற்கு மேலும் அவனால் அதைக் கேட்கமுடியவில்லை. கேட்க விரும்பவில்லை. அவை மரணச் செய்திகளா? பதவி பட்டங்களின் விளம்பரங்களா? அவன் திரும்பவும் யன்னலூடாக வெளியே வெளியே சென்றிருந்த பார்வையோடு மனதையும் திருப்ப முயல்கிறான். ஆனால் அடுத்த அறைக்குள்ளிருந்து வரும் அறையிலிருந்து தப்புவது இப்போ அத்தனை இலேசானதாகத் தெரியவில்லை. “சீ. ரீ. ஓ வில் வேலை பார்க்கும் மிஸ் சிவகாமியின் தந்தையும் யாழ்ப்பாணம்…” யன்னலூடாகக் குளிர் காற்று வீசுகிறது. நீலவெளியில் வரவரக் கருமை படர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கருமையின் மூலக் காரணமாக அடிவானத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து தெரிகிறது கார்மேகத் திரள். அதிலிருந்து அங்குமிங்குமாய் ஊடுருவிச் செல்லும் முன்னணிப் படைகள்போல் தென்னைமர உச்சிவரை சில கிளைமேகங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. “உறவினர்களும் நண்பர்களும் இதை ஏற்றுக்கொள்ளவும். மீண்டுமொருமுறை வாசிக்கிறேன். சுந்தரமூர்த்தி கனகரத்தினம் காலமானார்.” முன்னால் தெரியும் மரங்கள் எல்லையற்று விரிந்து கிடந்த பழைய நீலவெளியின் பின்னணியிலிருந்து கார்மேகத்தால் பிரிக்கப்பட்டுப் பழைய அமைதியை இழந்து, பிரிவினையினால் வந்த வேதனையைத் தாங்கமுடியாமல் தவிப்பனபோல் குளிர் காற்றில் அங்குமிங்குமாக அசைந்து கொண்டிருக்கின்றன. அவனால் தொடர்ந்து அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. யன்னலூடாகக் குளிர் காற்று முன்பைவிட வேகமாக வீசுகிறது. பழைய பரவசத்தின் நினைவுகூட இப்போ அவனுக்கு இல்லை. இப்போ அவனுக்கும் ஏதோ வேதனையாகத்தான் இருக்கிறது. “உறவினர்களும் நண்பர்களும் இதை ஏற்றுக் கொள்ளவும்..”
இருக்கையை விட்டிறங்கி காரணமற்று அறைக்குள் அங்குமிங்குமாக அவன் நடக்கத் தொடங்கின்றான். வெளியே வண்டிச் சில்லுகள் தெருவில் போட்டிபோட்டுக் கடகடக்கின்றன. பள்ளி மாணவிகள் போகிறார்கள். நடந்து சென்ற அவன், அடுத்த யன்னலோரமாக நிற்கிறான். அவனிருந்த அறையின் அடுத்த கண் அதுதான். முன்னால் முச்சந்தி கிளைவிட்டுப் பிரிந்து கிடக்கிறது. பள்ளி மாணவிகளை ஏற்றிச் செல்லும் சின்ன மாட்டு வண்டிகள் சதங்கைச் சத்தத்துடன் தார் றோட்டில் கடகடத்து ஓடிக் கொண்டிருக்கின்றன. பின்னால் போகும் வண்டியில் சென்ற ஒருத்தி அவனைப் பார்த்து விடுகிறாள். அவனும் பார்க்கிறான். ஒருகணத்துக்குள் அவளின் முழு உருவத்தையும் அவனுடைய கண்கள் எடைபோட்டு விடுகின்றன. புத்தகக் கட்டைத் தாங்கியவாறு வெள்ளைக் கவுணின் கீழ்விளிம்புக்கு வெளியே மடக்குப் பட்டவாறே தலைநீட்டிய முழங்கால்கள், அவனுடைய யூகத்துக்கு விட்டுக்கொடுக்கும் அவற்றின் மேற்பரப்பு. பச்சைக் கழுத்தணியின் வீழ்ச்சிக்கு இருபக்கமும் கரை எழுப்பும் குரும்பெட்டிப் பொம்மல்கள். குறுஞ்சிரிப்புத் தவழும் முகம்… இல்லை, இதழ் விரித்தே அவள் சிரித்து விடுகிறாள். அவனும் சிரிக்கிறான். புதியதோர் உணர்ச்சி அவன் உடலில் பாய்கிறது. ஏதோ ஒன்றின் தேவை அரிப்பாக மாறுகிறது. வண்டி மறையும்வரை பஸ்டில் (Bastille) சிறையன்னலில் பார்த்து நிற்கும் சாடைப்போல் (Sade) யன்னலோடேயே அவன் ஒட்டிக்கொண்டு நிற்கிறான்.
எவ்வளவு நேரம் அவன் அப்படி நின்றானோ அவனுக்கே தெரியாது. வானொலியின் அலறல்தான் திரும்பவும் அவனைத் தட்டிவிடுகிறது.
“நேரம் ஏழு முப்பத்தியொன்று. தேர்ந்த இசை.”
திடுக்கிட்டவன்போல் அவன் திரும்புகிறான். நெஞ்சில் திடீரென்று பழைய வேதனை பாய்கிறது. வண்டியில் கண்ட சிரித்த முகக்காட்சி அவ்வளவு தடுத்ததாகத் தெரியவில்லை. முடுக்கிவிட்ட யந்திரம்போல் அதற்குப்பின் அவன் அசுர வேகத்தில் இயங்கத் தொடங்குகிறான்.
நேரம் சரியா? மேசையில் கிடந்த கைக்கடிகாரத்தை அவசரமாகத் திருகித் திருத்திக் கொள்கிறான். இன்னும் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு அரை மணித்தியாலம் இருக்கிறது. அவன் கணித்துக் கொள்கிறான். அதற்குள் எத்தனையோ சடங்குகள் செய்து தீர்க்கப்படவேண்டும். ஆனால் அதற்குப் பிறகுதான் நிம்மதி வந்துவிடுமா? மனதில் புதியதோர் கசப்பு பழைய வேதனையோடு கலக்கிறது. போகும்வாக்கில் சுவரில் தொங்கிய கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் முகத்தைப் பார்த்துக் கொள்கிறான். எப்படியோ நான்கு நாட்களாக அவன் கடத்திவந்த ஒன்று இன்று கட்டாயச் சடங்காகப் பயமுறுத்துகிறது. ஓர் வருத்தக்காரனின் தோற்றம். அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் அடுத்தவர்கள் கவலைப்படுவார்கள், காரணங்கூடக் கேட்பார்கள். ஓ, இந்த அடுத்தவர்களும் அவர்களுடைய அபிப்பிராயங்களும்! யார் கவலைப்பட்டார்கள்? ஆனால் அதேசமயம் பற்பசையோடும் பிறஷ்ஷோடும் துவாயோடும் சவர்க்காரப் பெட்டியோடும் சவரக் கருவிகளையும் அவன் காவிச் செல்லத் தவறவில்லை. பாத்ரூம். ஆனால் அதற்குள் இன்னோர் சடங்கு. மலக்கூடம். முதல் சடங்குகளை முடித்துக்கொண்டு முகச்சவரம் செய்ய முயன்ற போதுதான் அதற்குரிய கண்ணாடியைக் கொண்டு வரவில்லை என்பது தெரிய வருகிறது. திரும்பவும் அறைக்கு ஓர் ஓட்டம். திரும்பி வரும்போது பாத்ரூமில் இன்னொருவர்! அவர் வெளியே வரும்வரைக்கும் ஒற்றைக்காலை மாற்றி மாற்றி வெளியே அவன் அவசரத் தவம் செய்கிறான். பின்னர் சவரம் செய்ய ஒருபடியாகச் சந்தர்ப்பம் கிடைத்த போதுதான் பிளேட் பழசாகிவிட்டது தெரியவருகிறது. ஆனால் புதிது வாங்க இனி எங்கே நேரம்? அங்குமிங்கும் விழும் இரத்தக் கீறல்க்ளையும் பொருட்படுத்தாது அவன் அதைக்கொண்டே சமாளிக்கிறான். கழுவும் போது முகம் எரிகிறது. அவன் கவலைப்படவில்லை. இந்த ‘அரை வட்ட’ வாழ்க்கையில் முழு உயிரே போகிறபோது இரத்தம் போனால் என்ன? முகம் எரிந்தால் என்ன?
அறைக்குள் திரும்பி வரும்போது மேசையில் கிடந்த கைக்கடிகாரம் நேரம் ஏழு ஐம்பத்திரெண்டு என்று காட்டுகிறது. இன்னும் எட்டு நிமிடங்களுக்குள் அங்கே பள்ளிக்கூடத் தலைமையாசிரியரின் மேசைக்குமுன்னால் கிடக்கும் புத்தகத்தில் சிவப்புக்கோடு கீறப்பட்டுவிடும். வழக்கம்போல் இன்றும் அவன் அதற்குக் கீழேதான் கையெழுத்திடப் போகிறான். அந்தத் தலையாசிரியர் வழக்கம் போல் தலையாட்டிக் கொண்டு இன்றும் சிரிக்கத்தான் போகிறார். அந்தச் சிரிப்புத்தான் அவனுக்குப் பிடிக்காது. Let him go to hell; let the fellow go and –
அவசர அவசரமாக அவன் காற்சட்டையை மாட்டிக்கொள்கிறான். நல்லகாலம் அவன் சப்பாத்துப் போடுவதில்லை. செருப்பு. ஆனால் வெளியே மழை பெய்கிறதா?
யன்னலுக்கு வெளியே சென்ற பார்வை இருண்டு கறுத்துவிட்ட மேகத்தையும் பெய்யத்தொடங்கி விட்ட மழைத் தூறலையுமே சந்திக்கின்றது.
சினத்தோடு அவன் செருப்பை விட்டுவிட்டுச் சப்பாத்தையே மாட்டிக்கொள்கிறான். மாட்டிவிட்டு காலைச் சாப்பாடு-தேநீர் என்ற பெயரில் நாயர் அனுப்பியிருந்த கர்மக் கடனைப் பெயருக்கு அவசர அவசரமாக வாய்க்குள் போட்டுக் கொள்கிறான். போட்டுக்கொள்ளும்போதே அன்றைய டைம் டேபிளையும் புரட்டுகிறான்.
செவ்வாய்க்கிழமை 8-00 – 8-45 சரித்திரம் எஸ். எஸ். ஸி. 8-45 – 9-30 பூமிசாஸ்திரம் எஸ். எஸ். ஸி. 9-30 – 10-15 குடியியல் …
ஓய்வான பாடம் அன்று ஒன்றுமே இல்லை!
மனக்கசப்போடு கையைக் கழுவிவிட்டு புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு அவன் பள்ளிக்கூடம் புறப்படுகிறான். வெளியே வானம் இருண்டு கிடக்கிறது. குளிர் காற்றோடு மழை சீறியடித்துப் பெய்கிறது. போவதா வேண்டாமா? போகாமல் விட்டால்தான் என்ன வந்துவிட்டது?
அந்த வாழ்க்கைக்கும் அதன் சின்னங்களான டைம்டேபிளும் சிவப்புக்கோடும் பிரதிபலிக்கும் அந்த அதிகார அமைப்புக்கும் எதிராக அவன் செய்யக்கூடிய ஒரே ஒரு புரட்சி அப்படி அடிக்கடி பிந்திப்போவதும் இடைக்கிடை காரணமற்றுப் போகாமல் விடுவதுந்தான். இன்று அப்படிப் போகாமல் விட்டால் என்ன? ஆனால் மனம் அதைக் கணித்துக் கொண்ட அதே சமயம் உடல் அறைக்குள்ளிலிருந்து ஓர் சின்னக் குடையை எடுத்து விரித்துக் கொண்டு மழையில் ஒடுங்கி நடுங்கியவாறு வெளியே புறப்படுகிறது. அவனுடைய சிந்தனைகளின் பலவீனத்தை அவனே உணராமலில்லை. வேதனையோடும் ஆத்திரத்தோடும் வேறு வழியின்றித் தனக்குள்ளேயே திட்டிக்கொண்டு அவன் நடக்கின்றான்.
போகும்போது சந்தியடிச் சின்னக்கடையில் சினிமாப் பாட்டுக் கேட்கிறது.
நடையா, இது நடையா?
நாடகமன்றோ நடக்குது?
இடையா, இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது
வெள்ளிக்கண்ணு மீனா வீதிவலம் போனா
தையத்தக்க தையத்தக்க ஹைய்ய்ய்.
அது இலங்கை வானொலியின் திரை இசை. அதாவது திரை அலறல். ஆனால் இந்தமுறை அவனுக்கு வானொலியில் வந்த பழைய ஆத்திரம் இருக்கவில்லை. மாறாக அந்தப் பாட்டோடு சேர்த்து ஏனோ சிறிது நேரத்துக்கு முன் வண்டியில் போன அந்தப் பள்ளிக்கூட மாணவியின் தோற்றந்தான் அவனுக்குச் சுவையோடு நினைவுக்கு வருகிறது. அந்தப்பாடலுக்கும் அவளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை என்பது அவனுக்கே தெரியாமலில்லை. இருந்தாலும் அவளைப்பற்றித்தான் அது கூறுகிறது என்று நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. அந்த நினைவு அதுவரை அவனது மனதில் நிரம்பிய கசப்பை கொஞ்சம் கரைக்க உதவுகிறது. அதை வேண்டுமென்றே அவன் வலிந்து இன்னும் விருத்திசெய்ய முயல்கிறான்.
வண்டியில் அந்த மாணவி போகிறாள். சிரித்த முகம், பச்சைக் கழுத்தணி, சட்டைப் பொம்மல்கள், நீட்டி மடித்துள்ள முழங்கால்களும் அவற்றின் மேற்பரப்பும்…. இது நடையா? இது நடையா? ஒரு நாடகமல்லோ நடக்குது, இடையா இடையா…..
திடீரென்று அவனுக்கோர் சிகரட் தேவைப்படுகிறது. மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. Bristol. Filter tipped. Virginia blended Cigarette.
அருகிலிருக்கும் சிகரட் கடையை நோக்கி அவன் அவசரமாகத் திரும்புகிறான். வெள்ளிக் கண்ணு மீனா வீதிவலம் போனா தையத்தக்க தையத்தக்க ஹைய்ய்ய்… அங்கும் அது கேட்கிறது. அதை ரசித்து அனுபவித்துக்கொண்டே அவன் அணுகுகின்றான். எதிரே ஏற்கனவே அழுக்கடைந்துவிட்டிருந்த அவனது காற்சட்டையில் இன்னும் சேற்றை வாரி இறைக்கும் நோக்கத்துடன் இருண்டுவிட்ட வானத்தின் இடிமுழக்கத்துக்கு ஏற்ப இரைச்சலோடு ஓர் கறுத்தக் கார் பிசாசுபோல் ஓடிவருகிறது.
– புதுயுகம் பிறக்கிறது, முதற் பதிப்பு: டிசம்பர் 1965, அரசு வெளியீடு, கொழும்பு